May 5, 2012

பெரிய சந்திரனை இன்று இரவு காணலாம்

Share Subscribe
பௌர்ணமி சந்திரன் வழக்கத்தை விட சற்றே பெரிதாக அல்லது சிறிதாக இருக்கிறதா என நாம் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் உற்றுக் கவனிப்பதில்லை. ஆனால் இன்று (மே 5 ஆம் தேதி) இரவு பௌர்ணமி சந்திரன் சற்றே பெரிய வட்டமாகத் தெரியும். வழக்கத்தை விட சந்திரன் நமக்கு சிறிது அருகாமையில் இருப்பதே அதற்குக் காரணம்.

சந்திரன் பூமியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சந்திரனின் சுற்றுப்பாதை கச்சிதமான வட்டமாக இல்லை. கொஞ்சம் நீள்வட்டமாக உள்ளது. இதன் விளைவாக சந்திரன் ஒரு சமயம் பூமிக்கு அருகில் உள்ளது. வேறு சில சமயங்களில் பூமிக்கு அப்பால் உள்ளது. இந்த நிலைகளை அண்மை நிலை (Perigee) என்றும் தொலைவு நிலை (Apogee) என்றும் கூறுவர்.

1. சந்திரன் தொலைவு நிலை
2. சந்திரன் அண்மை நிலை.
3. பூமி
சந்திரன் அண்மை நிலையில் இருக்கும் போது கொஞ்சம் பெரிதாகவே தெரியும். இன்று இரவு சந்திரனைப் பாருங்கள். இன்றைய பௌர்ணமி சந்திரன் வழக்கத்தை விட 14 சதவிகிதம் பெரிதாகத் தெரியும். வழக்கத்தை விட 30 சதவிகிதம் பிரகாசமாகக் காணப்ப்டும். 13 மாதங்களுக்கு ஒரு முறை சந்திரன் இவ்விதம் பூமிக்கு அருகாமையில் வருகிறது. ஆகவே இது பெரிய அதிசயமல்ல.

சந்திரன் கிழக்கு வானில் உதித்த உடனே பார்க்காமல், சற்று நேரம் கழித்துப் பார்ப்பது நல்லது. ஏனெனில் அடிவானத்து சந்திரன் எப்போதுமே பெரிதாகத் தெரியும். இன்றைய பௌர்ணமி சந்திரன் சற்றே பெரிதாக்த் தெரியும் என்பதால் அடிவானத்து சந்திரன நன்றாகவே பெரிதாகத் தெரியும். அடிவானில் இருக்கும் போது சந்திரன் அல்லது சூரியன் பெரியதாகத் தெரிவது ஏன் என்பதற்கு இதுவரை எந்த நிபுணராலும் சரியான விளக்கம் அளிக்க இயலவில்லை.

இடது புறம்: இன்றைய தினம் அண்மை நிலையில்
 சந்திரன் இந்த அளவுக்குப் பெரிதாகத் தெரியும்
வலது புறம்: தொலைவு நிலையில் சந்திரன்
இந்த அளவுக்குச் சிறியதாகத் தெரியும்.
சந்திரன் பூமியை சற்றே நீள் வட்டப் பாதையில் சுற்றுவதாகச் சொன்னோம். அண்மை நிலையின் போது சந்திரனுக்கும் பூமிக்கு உள்ள தூரம் 3,56,375 கிலோ மீட்டர். தொலைவு நிலையின் போது சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 4,06,770 கிலோ மீட்டர். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர். இந்த ஆண்டில் சந்திரன் நவம்பர் 28 ஆம் தேதி பௌர்ணமியன்று தொலைவு நிலையில் இருக்கும். அப்போது அது வழக்கத்தை விடச் சிறிதாக இருக்கும்.

இன்றைய பௌர்ணமியை சித்ரா பௌர்ணமி என்பார்கள். ஆனால் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று சந்திரன் அண்மை நிலையில் இருப்பதாக நினைத்து விடக்கூடாது.

சந்திரன் பூமிக்கு சற்றே அருகில் இருப்பதால் ஏதேனும் விளைவுகள் உண்டா? சந்திரனுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. கடல்களில் அலையேற்றம் ஏற்படுவதற்கு சந்திரன் காரணம். ஆகவே இன்று கடல்களில் அலையேற்றம் சற்று அதிக அளவில் காணப்படலாம்.

6 comments:

Admin said...

நல்ல தகவல் நண்பரே..

Admin said...

ஐயா..நிச்சயம் உங்களை பதிவுகளை இனி தொடர்ந்து வாசிப்பேன்..இன்று தான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.எனக்கு பிடித்தமானது அறிவியல்.. வலைப்பூவின் பெயரே அறிவியல்புரம்..சிறப்பு

Ashok said...

intha chance enaku kidaika villai...eanentral yesterday engal ooril mazhai peithathu... parava illai adutha 13 mathangalil parthu viduven.. thanks sir.

என்.ராமதுரை / N.Ramadurai said...

அசோக்:
கவலை வேண்டாம். அடுத்த் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி இதே போன்று பெரிய சந்திரன் தெரியும். நீங்கள் அன்றைய தினம் காணலாம்

Ashok said...

Thanks sir...

Ashok said...

Thanks sir

Post a Comment