Sep 22, 2014

மங்கள்யான் வெற்றி உறுதி: எஞ்சின் சோதனையில் நல்ல சேதி

Share Subscribe
இந்தியாவின் மங்கள்யான் வருகிற புதன்கிழமை 24 ஆம் தேதி காலை செவ்வாய் கிரகத்தை அடைந்து அக்கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்கும் என்பது அனேகமாக உறுதியாகி விட்டது.

மங்கள்யான் விண்கலத்தில் இடம் பெற்றுள்ள LAM  எஞ்சின்  திட்டமிட்டபடி செயல்படுமா என்ற ஐயம் இருந்தது. ஆனால் திங்களன்று மதியம் அந்த எஞ்சினை நான்கு வினாடி நேரம் செயல்படுத்தி சோதித்த போது அந்த எஞ்சின் நன்கு செயல்பட்டது.  எனவே புதன்கிழமையன்றும் அது அவ்விதமே நன்கு செயல்படும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் மங்கள்யான்
உள்ளபடி மங்கள்யான் மணிக்கு சுமார் 80 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதன் வேகம் கணிசமாகக் குறைக்கப்பட்டால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயை சுற்ற ஆரம்பிக்கும். விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க விண்கலத்தில் உள்ள எஞ்சின் புதன்கிழமை காலை சுமார் 7-17 மணிக்கு சுமார் 23 நிமிஷ நேரம் இயக்கப்படும்.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதிக்குப் பிறகு இந்த எஞ்சினை இயக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. ஆகவே 300 நாள் இடைவெளிக்குப் பிறகு அது ஒழுங்காக செயல்படுமா என்பதில் சிறிது சந்தேகம் இருந்தது.

அந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் நோக்கில் தான் அந்த எஞ்சின் திங்களன்று ( 22 ஆம் தேதி) நான்கு வினாடி இயக்கப்பட்டது. அப்போது அது நன்கு செயல்பட்டது. ஆகவே புதன்கிழமையன்றும் அந்த எஞ்சின் திட்டமிட்டபடி நன்கு செயல்படும் என்பது உறுதியாகி விட்டது. அந்த அளவில் மங்கள்யான் திட்டத்தின் வெற்றி உறுதியாக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லலாம்.

மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியதன் நோக்கமே அது செவ்வாயை சுற்ற வேண்டும் என்பதாகும்.

இதற்கிடையே அமெரிக்காவின் மாவென் (MAVEN--Mars Atmosphere and Volatile Evolution spacecraft) விண்கலம் இந்திய நேரப்படி இன்று காலை செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடிக்கு உள்ளாகி செவ்வாய் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்தது. செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கெனவே வெற்றிகரமாக பல விண்கலங்களை அனுப்பியுள்ள அமெரிக்காவுக்கு இது மேலும் ஒரு வெற்றியாகும்.
அமெரிக்காவின் நாஸா அனுப்பியுள்ள மாவென் விண்கலம்
இந்தியாவின் மங்கள்யான் 2013 நவம்பர் 5 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் மாவென் அதே ஆண்டு அதே மாதம் 18 ஆம் தேதி செலுத்தப்பட்டது. இப்பின்னணியில் மாவென் திட்டம் ஆவலுடன் கவனிக்கப்பட்டது.

7 comments:

Ganesh said...

ஐயா, மகத்தான சாதனை. இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். நமக்கு பிறகு அனுப்பிய அமெரிக்க விண்கலம் நமது விண்கலத்திற்கு முன்னரே எப்படி செவ்வாயை சென்று சேர்ந்தது?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Ganesh
நியாயமான கேள்வி. மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்டது என்றாலும் அது டிசம்பர் முதல் தேதியன்று தான் செவ்வாயை நோக்கிப் பயண்ம் மேற்கொண்டது. இந்தியாவின் pslv ராக்கெட்டுக்குப் போதுமான திறன் கிடையாது. எனவே மங்கள்யான் விண்கலம் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்படி செய்வதற்காக அது பல தடவை பூமியை சுற்றிக் கொண்டிருந்தது. இந்த உத்திக்கு Gravity Assist என்று பெயர்.
ஆனால் நாஸாவின் மாவென் விண்கலத்தை அனுப்பியது சக்திமிக்க ராக்கெட் ஆகும். ஆகவே அது தரையிலிருந்து கிளம்பி உயரே சென்றதும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தைப் பெற்றதாக இருந்தது. ஆகவே அது நேரடியாக செவ்வாய்க்கு கிளம்பியது.
மங்கள்யான் நவம்பர் 5 ஆம் தேதி உயரே சென்றாலும் அது செவ்வாயை நோக்கிக் கிளம்பிய தேதி டிசம்பர் முதல் தேதியாகும். புரிந்திருக்கும் என நம்புகிறேன்.(பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு கிரகத்துக்கு செல்வதானால் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் தேவை).

Ganesh said...

விளக்கத்திற்கு நன்றி. இதனை உங்களுடைய வேறொரு கட்டுரையில் படித்திருக்கிறேன். பொருத்தி பார்க்க தவறி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Anonymous said...

ஐயா வணக்கம்

மங்கள்யானின் முதல் செவ்வாய் புகைப்படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்

ஐயா செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியுரியாசிட்டி ரோவர் தற்போது செயல்படுகிறதா அதை மங்கள்யான் படம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
மங்கள்யான் அனுப்பும் செவ்வாய் போட்டோ இன்றோ நாளையோ கிடைக்கலாம்.
நாஸாவின் கியூரியாசிடி இன்னும் செயலில் இருக்கிறது. சுமார் 360 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிற மங்கள்யான் எடுக்கும் படத்தில் கியூரியாசிடி சிறிய புள்ளியாகத் தான் தெரியும் என்று தோன்றுகிறது.

Unknown said...

ஐயா. (பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு கிரகத்துக்கு செல்வதானால் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் தேவை). என்று சொல்லி இருக்கிறீர்கள் . பூமியின் ஈர்ப்புவிசை எத்தனை கிலோமீட்டர் தூரம் வரை இருக்கும். ஆனால் நமது சாதாரண விமானங்கள் மற்றும் சக்திவாய்ந்த போர் விமானங்கள் பூமியின் ஈர்ப்பு. விசையை. மீறி பறந்து கொண்டு தானே இருக்கிறது. அவைகளால் பூமியை விட்டு செல்ல முடியாதா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Ramesh Paramasivam
பூமியின் ஈர்ப்பு விசைக்கு எல்லை கிடையாது. சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரன் பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது. போகப் போகக் குறையும். ஆனால் ஈர்ப்பு விசை இதற்கு மேல் இல்லை என நிர்ணயிக்க முடியாது.
சாதாரண விமானங்கள், போர் விமானங்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவையே. ஒரு நிமிஷம் இயங்காமல் இருந்தால் அவை பூமியில் வந்து விழுந்து விடும்.
நீங்கள் கல்லை எறிகிறீர்கள். வேகம் இருக்கும் வரை சிறிது தூரம் இருக்கிறது. பிறகு விழுந்து விடுகிறது. விமானங்களின் வேகம் அவை கீழே விழாமல் இருக்க உதவுகின்றன.
விமானங்கள் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செங்குத்தாகச் சென்றால் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு விடும்.
ஆனால் விமான எஞ்சின்களால் விண்வெளியில் செயல்பட முடியாது. ஏனெனில ஆக்சிஜன் தேவை. ராக்கெட்டில் எரிபொருளை மட்டுமன்றி ஆக்சிஜனை அளிக்கிற பொருளையும் வைக்கிறார்கள்

Post a Comment