Sep 9, 2014

ஊருக்கு வெளியே வந்து விழுந்த விண்கல்

Share Subscribe
மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் கடந்த ஞாயிறு அன்று இரவு  11 மணி வாக்கில்  ( 7 ஆம் தேதி) ஒரு விண்கல் வந்து விழுந்துள்ளது. தலைநகரான மனாகுவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் அந்த விண்கல் விழுந்துள்ளது.

விண்கல் விழுந்த இடத்தில் 12 மீட்டர் அகலமும் 5 மீட்டர் ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தைச் சுற்றி போலீசார் இப்போது தடுப்புகளை அமைத்துள்ளனர்.
விண்கல் விழுந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளம்
வானிலிருந்து விழுந்த வேகத்தில் அந்த விண்கல் அப்பள்ளத்துக்குள் புதைந்து கிடக்கிறதா என்று நிபுணர்கள் ஆராய்வார்கள். அதன் சிதறல்கள் பள்ளத்தைச் சுற்றிக் கிடக்கின்றனவா என்றும் ஆராய்வார்கள்.

நள்ளிரவுக்கு சற்று முன்னர் பெரிய குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. நிலம் அதிர்ந்தது என்று சுற்றுவட்டார மக்கள் கூறினர். ஏதோ எரிந்தது போன்ற நாற்றம் அடித்தது என்றும் அவர்கள் கூறினர். அந்த வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளும் உணரப்பட்டன.

நல்ல வேளையாக அது அருகே உள்ள மனாகுவா நகருக்குள்ளாக விழவில்லை. மனாகுவாவின் மக்கள் தொகை சுமார் 12 லட்சம். இந்த விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் பூகம்பத்தைப் பதிவு செய்வதற்காக உள்ள கருவியிலும் பதிவாகியுள்ளன.

நிகராகுவாவில் விழுந்த விண்கல்லானது அதே நாளன்று பூமியைக் கடந்து சென்ற அஸ்டிராய்ட் ஒன்றின் உடைந்து துண்டு தானா என்று கேள்வி எழுந்துள்ளது.  சுமார் 20 மீட்டர் நீளம் கொண்ட  அந்த அஸ்டிராய்ட்  அன்றைய தினம் பூமியிலிருந்து சுமார்  34 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து சென்றது.

அஸ்டிராய்ட் என்பது ஒரு குன்று சைஸ் கொண்டதாகவும் இருக்கலாம்.  சிறியதும் பெரியதுமாக எண்ணற்ற அஸ்டிராய்டுகள் உள்ளன. இவற்றில் பலவும் சூரியனைச் சுற்றுகின்றன. அப்படியான அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்வதுண்டு.
செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு அஸ்டிராய்ட் ஒன்று பூமியைக் கடந்து சென்றது.
அது கடந்து சென்ற பாதையைக் காட்டும் படம் Credit NASA/JPL/Caltec
இது ஒரு புறம் இருக்க, கூழாங்கல் சைஸ் அல்லது அதை விடவும் சிறிய  கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த வண்ணம் உள்ளன. அப்படி அவை காற்று மண்டலம் வழியே பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கீழ் நோக்கி இறங்கும் போது மிகுந்த அளவுக்கு சூடேறித் தீப்பிடித்து வானில் நடுவழியிலேயே அழிந்து போகலாம். கடைசியில் நுண்ணிய சாம்பல் தான் மிஞ்சும்.

சில பெரிய கற்கள் அவ்விதம் அழிந்து போகாமல் முழுதாகப் பூமியில் வந்து விழும். நிகராகுவாவில் வந்து விழுந்த விண்கல் அப்படிப்பட்டதாக இருக்கலாம்.

ஆனால் நிகராகுவாவில் விழுந்தது பெரிய பாறாங்கல் என்று சொல்லத்தக்க விண்கல் என்று வைத்துக்கொண்டால அது  தீப்பிடித்து தரையை நோக்கி இறங்கும்  போது வானில் பிரகாசமான ஒளிக்கீற்று தெரிந்திருக்க வேண்டும். இரவு நேரம் என்பதால் யார் கண்ணிலாவது ஒளிக்கீற்று பட்டிருக்க வேண்டும். அப்படி ஒளிக்கீற்று தென்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.


6 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல பதிவு .தெரியாத விசயங்ககளை பகிரும்போது ஒருவித அனுமானம் அவசியம் .அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்

Anonymous said...

நல்ல பதிவு - வழக்கம்போலவே.
மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையில் நிலைகொள்ளவிருக்கும் இந்தப் பொழுதில் ஒரு சிறப்புக்கட்டுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
நன்றி

Anonymous said...

ஐயா வணக்கம்

விண்வெளியில் எங்கோ செல்லும் விண்கல்லை பூமியின் ஈர்ப்பு விசை இழுக்கிறது என்றால் பூமியின் ஈர்ப்பு விசை எவ்வளவு தொலைவிற்கு இருக்கும். பூமியின் ஈர்ப்பு விசையால் தான் நிலவு பூமியை சுற்றுகிறது அப்படியிருக்க ஒருவேளை எதிர்வரும் காலத்தில் நிலவு அளவுள்ள ஒரு அஸ்டிராய்ட் பூமியை நோக்கி வரும்போது பூமியின் ஈர்ப்பு பிடியில் சிக்கி பூமியை சுற்றத் தொடங்குமா அல்லது பூமியில் விழுந்து விடுமா ? ஐயா இது ஒரு அதீதமான கற்பனைக் கேள்விதான் இருந்தாலும் தங்களிடம் கேட்டால் என்னுடைய ஐயம தீரும் என்பதால் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
எல்லாவற்றிலும் வேகம் தான் கண்க்கு. பூமியைக் கடந்து செல்கின்ற ஓர் அஸ்டிராய்ட் நல்ல வேகம் கொண்டதாக இருக்குமானால் அது பூமியின் பிடியில் சிக்காது. சொல்லப்போனால் பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோள் உகந்த வேகம் கொண்டதாக இருப்பதால் தான் பூமியில் விழாமல் பூமியைச் சுற்றுகிறது. பூமி தகுந்த வேகம் பெற்றிருப்பதால் தான் அது சூரியனில் போய் விழவில்லை.
அஸ்டிராய்ட் ஒன்று பூமியின் பிடியில் சிக்கி பூமியைச் சுற்ற வேண்டுமானால் அதன் வேகம் மிகவும் குறைய வேண்டும்.
அஸ்டிராய்ட் அல்லது விண்கல் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்து பூமியில் விழுவதாக இருந்தால் அது குறிப்பிட்ட கோணத்தில் காற்று மண்டலத்தில் நுழைவதாக இருக்க வேண்டும். இப்படி பல அம்சங்கள் உள்ளன.
உங்களுக்கு ஐயம் ஏற்படுகிற்து என்பது உங்கள் சிந்தனையைக் காட்டுகிறது. கற்பனையானதாக இருந்தாலும் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் தயக்கமின்றிக் கேட்கலாம்.

Anonymous said...

ஐயா வணக்கம்

தங்களின் தெளிவான எளிமையான விளக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி.

வெங்கடேஷ்

Artskingson said...

Sir vanil nam evalavu uyarathirku sendral puviyin sularchiyil irunthu vidu paduvom

Post a Comment