Jan 19, 2015

எவரெஸ்ட் சிகரத்துக்கு மேலே பறக்கும் தலைப்பட்டை வாத்துகள்

Share Subscribe
தலைப்பட்டை வாத்துக்கள் (Bar-headed Geese) இமயமலைக்கு வடக்கே உள்ள திபெத், கஜாகஸ்தான், ரஷியாவின் சைபீரியா, மங்கோலியா ஆகிய இடங்களிலிருந்து இந்தியாவுக்கு வந்து செல்பவை. தமிழத்திலும் இவற்றைக் காணலாம். இவற்றின் அறிவியல் பெயர் Anser Indicus  என்பதாகும்.

இப்பறவைகள் கோடைக்காலத்தில் இமயமலைக்கு அப்பால் உள்ள இடங்களில் வாழ்பவை. குளிர்காலம் வந்து விட்டால் தரையும் நீர் நிலைகளும்  பனிக்கட்டியால் மூடப்படும் போது அப்பறவைகள் அப்பிராந்தியங்களிலிருந்து தெற்கு நோக்கிக் கிளம்பி விடும். அங்கிருந்து வருவதானாலும் சரி, கோடையில் திரும்பிச் செல்வதானாலும் சரி இப்பறவைகள் மிக நீண்ட  இமயமலையைக் கடந்தாக வேண்டும்.
தலையில் உள்ள பட்டைகள் காரணமாக இவற்றுக்கு இப்பெயர்
படங்கள்: நன்றி விக்கிபிடியா
இமயமலையோ உலகிலேயே மிக உயரமான மலையாகும். எனவே இப்பறவைகள் இமயமலையில் ஆங்காங்குள்ள கணவாய்கள் வழியே தெற்கு நோக்கிப் பறந்து வருவதாகவே நீண்டகாலம் கருதப்பட்டது.

பின்னர் இவை இமயமலையின் பல உயர்ந்த சிகரங்களுக்கு மேலாகப் பறந்து வரலாம் என்ற கருத்தும் நிலவியது. ஆனால் இப்போது இவை உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்துக்கு (8848 மீட்டர் அதாவது 29,029 அடி)  மேலாகவும் பறந்து வருவதாகக் கண்டறியப்பட்டுளளது. உலகில்  மிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட பறவைகளில் இவையும் ஒன்று எனலாம்.

மனிதன் 3000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சிகரத்தை ஒரே மூச்சில் ஏற முயன்றால்  “ உயர்மலை நோய்” ஏற்படலாம். எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுபவர்கள்  குறிப்பிட்ட உயரம் வரை ஏறிவிட்டுப் பிறகு முகாம் அமைக்கின்றனர். இரவில் அங்கு தங்காமல் கீழ் முகாமுக்கு வந்து உறங்குவர்
தலைப்பட்டை வாத்து
சில நூறு மீட்டர் ஏறிவிட்டு கீழ் முகாமுக்கு வந்து உறங்குவது என கட்டம் கட்டமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைவர். உடல் பழக வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கின்றனர். தவிர,7600 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைப் பகுதியானது “ மரண மண்டலம்” என குறிப்பிடப்படுகிறது.

ஆனால் தலைப்பட்டை வாத்துகள் ஏழு அல்லது எட்டு மணி நேரத்தில் இமயமலைப் பிராந்தியத்தைக் கடந்து செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வானில் உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறையும். காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவும் குறையும். சுமார் 8000 மீட்டர் உயரத்தில் காற்றில் அடங்கிய ஆக்சிஜன் அளவானது தரை மட்டத்தில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எனினும் தலைப்பட்டை வாத்துகள் சர்வசாதாரணமாக அந்த உயரத்தில் பறந்து செல்கின்றன. அதுவும் சிறகடித்துச் செல்கின்றன. இவை பின்புறத்திலிருந்து வீசும் காற்றைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.  மாறாக அக்காற்று வீசுவது நின்றதும் தான் இமயமலை மீதான பயணத்தை ,மேற்கொள்கின்றன,

1953  ஆண்டில் எவரெஸ்ட் சிகரம் மீது  முதல் முதலில் ஏறிச் சாதனை படைத்த டென்சிங், ஹில்லேரி ஆகியோரின் குழுவில் இடம் பெற்றிருந்த  பிரபல மலையேற்ற நிபுணர் வாலஸ் ஜார்ஜ் லோவ் ஒரு சமயம் கூறுகையில் எவரெஸ்ட் மீதாக  தலைப்பட்டை வாத்து பறந்து சென்றதைத் தாம் கண்டதாகக் குறிப்பிட்டார்

நீண்டதூரம் பறந்து செல்லும் பறவைகளில் சிலவற்றை ஆராய்ச்சியாளர்கள் பிடித்து அவற்றின் கால்களில் அல்லது கழுத்துகளில் அடையாள அட்டை அல்லது தகவல் கருவிகளைப் பொருத்துவது உண்டு. இதன் மூலம் அப்பறவைகள்  எங்கெல்லாம் செல்கின்றன, எவ்வளவு உயரத்தில் பறக்கின்றன போன்ற பல தகவல்களைப் பெற முடியும்.

பறவை பறக்கும் வேகம், அதன் இதயத் துடிப்பு, உடல் வெப்பம் போன்ற தகவல்களையும் இவ்விதம் சேகரிக்க முடியும்.

தலைப்பட்டை வாத்துகள் மிக உயரத்தில் பறக்கும் போது நிறைய சக்தி செல்வாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.  அதுவும் பல மணி நேரம் ஓயாது சிறகடித்துச் செல்லும் போது நிறையவே சக்தி செலவாகும்.
கூத்தங்குளத்தில் தலைப்பட்டை வாத்துகள்
பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் உள்ள பாங்கோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்க்ள் ஏழு தலைப்பட்டை வாத்துகளிடம் இவ்விதக் கருவிகளைப் பொருத்தி   நிறைய ஆராய்ச்சி செய்துள்ளனர். தவிர, பழக்கப்பட்ட வாத்துகளை காற்றுச் சுரங்கம் வழியே பறக்கவிட்டும் பரிசோதிக்கின்றனர்.

இப்பறவைகள் பொதுவில் இரவில் பறப்பதையே விரும்புகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

தலைப்பட்டை வாத்துகளின் அலாதித் திறமை காரணமாக பல்வேறு நிபுணர்களும் கடந்த பல ஆண்டுகளாகவே அவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.

இமயமலைக்கு அப்பாலிருந்து இடம் பெயரும் இப்பறவைகள் குளிர் காலத்தில்  இந்தியாவில் பல மானிலங்களிலும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூத்தங்குளத்தில்   129 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பறவை சரணாலயத்தில் இவை பொதுவில் காணப்படுகின்றன. ஒரு சமயம் பறவை ஒன்றின் கழுத்தில் இருந்த அடையாளப் பட்டையை வைத்து ஆராய்ந்த போது அது மங்கோலியாவிலிருந்து வந்ததாகும் என்று தெரிய வந்தது. ,தமிழகத்திலிருந்து மங்கோலியா சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

3 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அவைகள் திசைகளை கண்டறியும் சாகசம் அற்புதமான இயறகையின் கொடை .

Salahudeen said...

நன்றி ஐயா .கால நிலை மாறும் பொழுது பறவைகள் இடம் மாறி தப்பித்து கொள்கின்றன.அங்கு வாழும் மற்ற உயிரினங்களின் நிலை என்ன மேலும் கடந்த ஆண்டுதான் உலகின் வெப்பமான ஆண்டு தான் உலகின் வெப்பமான ஆண்டு என்று ஒரு கட்டுரை படித்தேன்.இதை பற்றி நேரம் இருந்தால் ஒரு பதிவு எழுதுங்கள் ஐயா.

ABUBAKKAR K M said...

அய்யா வணக்கம்.
மிக்க பயனள்ள் தகவல்.நன்றி.
திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு தகவல்.
வரும் ஜனவரி 24, 25 & 26 ஆகிய மூன்று நாட்களில்
" 2015-ம் ஆண்டிற்கான நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு "
நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 21.01.2015 (புதன் கிழமை)-க்குள்
ஒருங்கினைப்பாளர்
அகத்தியமலை சமுதாயம்சார்ந்த இயற்கை பாதுகாப்பு மையம் , மணிமுத்தாறு
( மொபைல் எண் ; 9488063750 )க்கு தங்களது பெயரை பதிவு செய்துகள்ளலாம்
(தினமணி நாழிதழ் 18.1. 2015 பக்கம் 4 )

<> கே.எம்.அபுபக்கர்

Post a Comment