May 22, 2015

மிகத் தொலைவில் உள்ள அண்டம்

Share Subscribe
பூமியிலிருந்து  சுமார் 1300 ஒளியாண்டு தொலைவில் உள்ள ஓர் அண்டம் (galaxy) இப்போது கண்டுபிடிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. 1300 ஒளியாண்டு தொலைவு என்பது ரொம்ப ரொம்ப தூரம். ஏனெனில் ஒரு ஒளியாண்டு என்பதே மிகவும் தூரம்.(விளக்கம் கீழே காண்க)

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அண்டத்துக்கு EGS-zs-8-1  என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வருகின்ற ஹப்புள் டெலஸ்கோப் மூலம் இந்த அண்டம் படமாக்கப்பட்டுள்ளது.( கீழே படம் காண்க) மிகத் தொலைவில் உள்ள காரணத்தால் இந்த அளவுக்கு மேல் தெளிவாகத் தெரியாது.

மங்கலான நீல நிற உருண்டையாகத் தெரிந்தாலும் இதில் கோடானு கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.

 ஓர் அண்டம்  என்பது  நமது சூரியன் மாதிரி கோடானு கோடி  நட்சத்திரங்கள் அடங்கியதாகும். (சூரியன் ஒரு நட்சத்திரமே)  நமது சூரியனும் பூமி உட்பட கிரகங்களும் ஆகாய கங்கை (Milky Way) எனப்படும் அண்டத்தில் உள்ளன. நமது அண்டத்தில் சுமார் 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

நமது அண்டமாக இருந்தாலும் சரி, வேறு அண்டமாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்கள் அடை போல அருகருகே இருப்பது கிடையாது. ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொரு நட்சத்திரத்துக்கும் நடுவே பெரும் இடைவெளி உண்டு. நமது சூரியனுக்கு 'மிக அருகில்' என்று சொல்லத்தக்க நட்சத்திரம் சுமார் 4.24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் பெயர் பிராக்சிமா செண்டாரி.(Proxima Centauri).

செவ்வாய் கிரகத்துக்கு செல்வதே கேள்விக்குறியாக இருக்கின்ற பின்னணியில்  40  லட்சம் கோடி  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிராக்சிமா செண்டாரி நட்சத்திரம் உள்ள வட்டாரத்துக்குச் செல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

 இது ஒரு புறம் இருக்க, நமது ஆகாய கங்கை தனியாக இல்லை. ஆகாய கங்கை இருக்கும் வட்டாரத்தில் 54 அண்டங்கள் உள்ளன. இவற்றில் ஆகாய கங்கையும் ஆண்ட்ரோமீடா( Andromeda) எனப்படும் அண்டமும் தான் பெரியவை. மற்றவை சிறியவை.
படத்தில் காணப்படுவது ஆண்ட்ரோமீடா அண்டம். இது 23 லட்சம் ஒளியாண்டு
தொலைவில் உள்ளது. இதை இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கலாம்.
மங்கலான சிறிய திட்டு போலத் தென்படும். ஆனாலும் இந்த அண்டத்தில்
கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
அண்ட வெளியில்  ஆங்காங்கு இவ்விதம் அண்டங்கள் உள்ளன. நமது பிரபஞ்சத்தில் (Universe) கோடானு கோடி அண்டங்கள் உள்ளன. எல்லா அண்டங்களும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம்.

நீங்கள் நிலவற்ற நாளில் இரவு வானைக் காணும் போது தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் நமது ஆகாய கங்கை  அண்டத்தைச் சேர்ந்தவையே. பிற அண்டங்கள் மிகவும் தொலைவில் இருப்பதால் அவற்றில் உள்ள நட்சத்திரங்கள் தனித்தனியாகத் தெரியாது. சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் பிற அண்டங்கள் வெறும் ஒளி மொத்தையாகத் தான் தெரியும்.

அண்டங்களில் எதுவும் நிலையாக இருப்பதில்லை. எல்லாமே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரிய அண்டமாக உருவாவது உண்டு. சில அண்டங்கள்  அருகே உள்ள அண்டங்களை விழுங்குவதும் உண்டு. நமது ஆகாய கங்கையானது அருகே இருந்த ஓர் அண்டத்தைக் கவர்ந்து விழுங்கி விட்டதாகக் கருதப்படுகிறது.
 இது   NGC 6744  எனப்படும் அண்டத்தின் படம். பல கோடி கிலோ மீட்டர்
தொலைவுக்கு அப்பால் இருந்து பார்த்தால் நமது ஆகாய கங்கை அண்டம்
இது போன்று தெரியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்
இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஆகாய கங்கை அண்டமும் ஆண்ட்ரோமீடா அண்டமும் ஒன்றோடு ஒன்று இணைந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அண்டவெளி சமாச்சாரம் எல்லாமே தலை சுற்ற வைக்கின்ற அளவுக்கு மிகப் பிரும்மாண்டமானவை.

 ஒளியாண்டு தொலைவு விளக்கம்: ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. இந்த அடிப்படையில் ஒளி ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும். ஒரு நாளில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் என்று கணக்கிடலாம். ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி  கிலோ மீட்டர் தொலைவு ஆகும். இந்த எண்ணை 1300 ஆல் பெருக்கினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அண்டம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறியலாம்.