Sep 29, 2015

இஸ்ரோ செலுத்திய பறக்கும் டெலஸ்கோப்

Share Subscribe
வானில் உள்ள விதவிதமான நட்சத்திரங்களை ஆராய்ந்து தகவல் சேகரிப்பதற்காக இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) அஸ்ட்ரோசாட் (Astrosat) என்னும் பெயர் கொண்ட விசேஷ செயற்கைக்கோள் ஒன்றை 28 ஆம் தேதியன்று ராக்கெட் மூலம் உயரே செலுத்தியுள்ளது. இதை பறக்கும் டெலஸ்கோப் என்று வருணிக்கலாம்.

ஏனெனில் இது செயற்கைக்கோள் போல பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற அதே நேரத்தில் விண்வெளியை நோக்கியபடி நட்சத்திரங்களை ஆராயும். பூமியில் அதாவது தரையில் அமைந்த டெலஸ்கோப்புகள் மூலம் கண்டறிய முடியாத விஷயங்களைக் கண்டறிவது அதன் நோக்கமாகும்.

இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் எண்ணற்ற டெலஸ்கோப்புகள் ஏற்கெனவே உள்ளன. இவை மூலம் கடந்த காலத்தில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன.  எனினும் இவற்றினால் அறிய முடியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.
அஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்
பகல் நேரமாக இருந்தால் சூரியனிலிருந்து ஒளி வருகிறது. இரவு நேரமாக இருந்தால் நட்சத்திரங்களிலிருந்து ஒளி வருகிறது., அந்த ஒளியை நம்மால் காண முடிகிறது. ஆனால் சூரியன் ஆகட்டும் நட்சத்திரங்கள் ஆகட்டும் அவற்றிலிருந்து ஒளி மட்டுமன்றி வேறு வகைக் கதிர்களும் வருகின்றன.

 பலரும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் மின்காந்த அலைகள் (Electromagnetic Waves) பற்றிப் படித்திருப்பார்கள். அலை நீளங்களைப் பொருத்து மின்காந்த அலைகள் பல வகைப்பட்டவை. இந்த அலைகளில் ஒளியும் ஒன்று. எக்ஸ்ரே கதிர்கள், காமா கதிர் எனப்படுபவையும் இந்த மின்காந்த அலைகள் குடும்பத்தைச் சேர்ந்தவையே.

புற ஊதாக் கதிர் (அல்ட்ரா வயலட்) அகச் சிவப்பு கதிர் (இன்பரா ரெட்) ஆகியவையும். இந்த வகையைச் சேர்ந்தவைவானொலி ஒலிபரப்புக்குப் பயன்படுத்தப்படுகின்ற ரேடியோ அலைகளும் இந்தக் குடும்பத்தில் அடங்கும்..
சோதிக்கப்பட்ட கட்டத்தில் அஸ்ட்ரோசாட் 
இந்த விதவிதமான அலைகளில் ஒளி அலைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியும். மற்ற வகை அலைகளை நாம் கண்ணால் பார்க்க முடியாது. இது ஒரு புறம் இருக்க,, நட்சத்திரங்களிலிருந்தும் இதர வான் பொருட்களிலிருந்தும் இந்த அத்தனை வகையான கதிர்களும் (அலைகளும் என்றும் கூறலாம்) வெளிப்படுகின்றன. அவற்றையும் ஆராய்ந்தாக வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன, விசேஷ வகைக் கருவிகளைக் கொண்டு அந்தக் கதிர்களை ஆராயலாமே என்று கேட்கலாம். அதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.

பூமியைச் சுற்றி அமைந்த காற்று மண்டலமானது நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற காமா கதிர்களையும் எக்ஸ் கதிர்களையும் தடுத்து நிறுத்தி விடுகிறது. காற்று மண்டலமானது ஒளி அலைகளை அனுமதிக்கிறது. ரேடியோ அலைகளை அனுமதிக்கிறது. சிலவகை புற ஊதாக் கதிர்களையும், அகச் சிவப்புக் கதிர்களையும் ஓரளவுக்கு அனுமதிக்கிறது

அந்த அளவில் உலகின் பல நாடுகளிலும் உள்ள டெலஸ்கோப்புகள் ஒளி அலைகளையும் ரேடியோ அலைகளையும் தான் ஆராய்கின்றன. பலவும் இரவு நேரங்களில் நட்சத்திர ஒளியை ஆராய்கின்றன


வேறு வகை டெலஸ்கோப்புகள் நட்சத்திரங்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை இரவு பகல் என எல்லா நேரங்களிலும் ஆராய்பவையாக உள்ளன. அவற்றுக்கு ரேடியோ டெலஸ்கோப் (Radio Telescope) என்று பெயர். இவை மிக அகன்ற ஆன்டென்னாக்களைக் கொண்டவை. இவற்றை தொலைநோக்கி என்று கூற முடியாது. இவை எதையும் காண்பதில்லை. நமது காதுகள் எவ்விதம் ஒலி அலைகளை சேகரிக்கின்றனவோ அவ்விதம் அவை ரேடியோ அலைகளை சேகரிப்பவை. வேண்டுமானால் இவற்றை தொலைக் கேட்பிகள் என்று வருணிக்கலாம்.

ரேடியோ டெலஸ்கோப்
இந்த நிலையில் நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் எக்ஸ் கதிர்களையும் இதர வகைக் கதிர்களையும் ஆராய வேண்டுமானால் காற்று மண்டலத்தைத் தாண்டி உயரே சென்றாக வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். பல மிலியன் டிகிரி வெப்பத்தைக் கொண்ட நட்சத்திரங்கள் எக்ஸ்கதிர்களை வெளிவிடுகின்றன. சூரியனும் தான். 1963 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு ராக்கெட்டைச் செலுத்தி அதில் இருந்த கருவிகள் மூலம் சூரியனின் எக்ஸ் கதிர்களை ஆராய்ந்தனர்

பின்னர் 1978 ஆம் ஆண்டில் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுகிற எக்ஸ் கதிர்களை ஆராய ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.
இவ்விதமாக அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையில் எக்ஸ் கதிர் வானவியல் என தனிப்பிரிவு தொடங்கியது. பின்னர் வேறு பிரிவுகளும் தோன்றின. நாஸா உயரே செலுத்தியுள்ள சந்திரா டெலஸ்கோப்பானது நட்சத்திரங்களின் எக்ஸ் கதிர்களை கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பெயரைத் தாங்கிய இந்த பறக்கும் டெலஸ்கோப் சுருக்கமாக சந்திரா டெலஸ்கோப் என்று அழைக்கப்படுகிறது.
ஹப்புள் பறக்கும் டெலஸ்கோப்
கடந்த பல ஆண்டுகளில் இவ்விதமாக பல பறக்கும் டெலஸ்கோப்புகள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஹப்புள் டெலஸ்கோப்பும் அடங்கும். இது சுமார் 560 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றி வருகிறது. 11 டன் எடை கொண்ட இந்த டெலஸ்கோப் 1990 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது. காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய தூசு வானை ஆராய்வதற்குப் பெரிய தொல்லையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தான் ஹப்புள் செலுத்தப்பட்டது

ஹப்புள் கடந்த பல ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
ஹப்புள் டெலஸ்கோப்பில் புற ஊதாக் கதிர்களையும் அகச் சிவப்புக் கதிர்களையும் வெளியிடுகின்ற வான் பொருட்களை ஆராயவும் வசதிகளும் உள்ளன.

நாஸா பின்னர் நட்சத்திரங்களும் அண்டங்களும் வெளியிடுகின்ற அல்ட்ரா வயலட் கதிர்களைக் கிரகித்துப் படம் எடுப்பதற்காக 2003 ஆம் ஆண்டில் GALEX என்னும் பறக்கும் டெலஸ்கோப் ஒன்றை உயரே செலுத்தியது. இது 2012 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு அல்ட்ரா வயலட் கதிர்களில் எடுக்கப்பட்ட பல படங்களை அனுப்பியது.

கோடானு கோடி தொலைவில் உள்ள நட்சத்திரங்களில் பலவும் சூரியனைப் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம். அவற்றைப் பூமியில் இருந்தபடி கண்டுபிடிப்பது இயலாத காரியம். எனவே நாஸா இதற்கென ஸ்பிட்சர் என்னும் டெலஸ்கோப்பைச் செலுத்தியது. இது 2003 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது

இந்த டெலஸ்கோப் எங்கோ உள்ள நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இது அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடும் வான் பொருட்களைக் கண்டறிவதற்கானது.   இது முதல் கட்டப் பணியை முடித்துக் கொண்டு இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது.

இப்போது இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்புக்கு வருவோம். இது காமா கதிர், எக்ஸ் கதிர், அகச் சிவப்புக் கதிர், புற ஊதாக் கதிர்  ஆகியவற்றை வெளியிடுகின்ற அனைத்தையும் கிரகித்து ஆராயும் திறன் கொண்ட டெலஸ்கோப் ஆகும். அதற்கான கருவிகள் இந்த பறக்கும் டெலஸ்கோப்பில் இடம் பெற்றுள்ளன. இதையே வேறு விதமாகச் சொல்வதானால் இந்த டெலஸ்கோப் நியூட்ரான் நட்சத்திரங்கள், பல்சார்கள் எனப்படும் நட்சத்திரங்கள், வெள்ளைக் குள்ளன்கள் எனப்படும் நட்சத்திரங்கள், கருந்துளைகள், மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற அண்டங்களின் மையங்கள் முதலியவற்றை ஆராயும்.
இடது புறம் உள்ள படம் மெசியர் 81 அண்டம். தரையில் அமைந்த டெலஸ்கோப் மூலம் எடுத்தது.
வலது புறம் உள்ள படம் அதே அண்டம் நாஸாவின் பறக்கும் டெலஸ்கோப் (GALEX) மூலம்
அல்ட்ரா வயலட் கதிர்கள் மூலம் எடுக்கப்பட்டது. படம் தெளிவாக உள்ளதைக் கவனிக்கவும்.
இந்த ஆராய்ச்சிகள் அல்லாமல் தரையில் அமைந்த டெலஸ்கோப்புகளுடனும் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியா இவ்வித ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது இது முதல் தடவை அல்ல.

  நட்சத்திரங்கள் வெளிவிடும் எக்ஸ் கதிர்களை ஆராய ஆரம்ப காலத்தில் பல நாடுகளும் பலூன்களையும் ராக்கெட்டுகளையும் பயன்படுத்தியது போல இந்தியாவும் அவ்விதம் செய்துள்ளது. தவிர, 1996 ஆம் ஆண்டில் இந்தியா செலுத்திய .ஆர்.எஸ் பி-3 என்னும் செயற்கைக்கோளில் எக்ஸ் கதிர் பதிவு கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.

இப்போது செலுத்தப்படும் அஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பில் கனடாவின் நிபுணர்களும், இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக் கழக நிபுணர்களும் உருவாக்கிய கருவிகளும் இடம் பெற்றுள்ளன. அஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பை நாஸா ஏற்கெனவே செலுத்திய ஹப்புள், சந்திரா டெலஸ்கோப், ஸ்பிட்சர் டெலஸ்கோப் ஆகியவற்றுடன் ஒப்பிட முடியாது  .

நாஸாவின் டெலஸ்கோப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி பணிக்கானவை. அதிக எடை கொண்டவை. அதிக நுட்பம் கொண்டவை. மாறாக அஸ்ட்ரோசாட் பல பணிகளையும் உள்ளடக்கியது என்ற வகையில் தனித் தன்மை கொண்டது

அஸ்டிரோசாட் பறக்கும் டெலஸ்கோப் 1650 கிலோ எடை கொண்டது. இது 650 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி மேற்கிலிருந்து கிழக்காக பூமியைச் சுற்றி வரும். இது பல சாதனைகளைப் படைத்துள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும்.

(இக்கட்டுரையானது 28 ஆம் தேதியிட்ட தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியானது. சில கூடுதல் தகவல்களுடனும் படங்களுடனும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது)