Nov 12, 2015

ராக்கெட்டின் பகுதி இலங்கை அருகே கடலில் விழும்

Share Subscribe
எப்போதோ உயரே செலுத்தப்பட்ட ஒரு  ராக்கெட்டின் பகுதி வெள்ளிக்கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே கடலில் விழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  ஒரு வேளை இது விண்கலம் ஒன்றின் பகுதியாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடலில் விழப்போகும் அப்பகுதி    இரண்டு மீட்டர் நீளம் (சுமார் 7 அடி) கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் எடை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.  இரண்டு டன் அளவுக்கும் இருக்கலாம்.
ராக்கெட் துண்டின் சுற்றுப்பாதை.(சிவந்த நிறம்) Credits: Data - Bill Gray/Project Pluto, Image - Celestia
இது எந்த நாடு செலுத்திய ராக்கெட்டின் பகுதி என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. சந்திரனை நோக்கி செலுத்தப்பட்ட ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம். ஏனெனில் இது பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்துள்ளது. அதன் பாதை சந்திரனின் சுற்றுப்பாதையையும் தாண்டி அமைந்துள்ளது.

 கடந்த 5 ஆம் தேதி இது பூமியிலிருந்து சுமார் 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அங்கிருந்து பூமியை நோக்கி வருகின்ற அது 13 ஆம் தேதி பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும்.

பின்னர் அது கீழ் நோக்கி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும். அப்போது அது  மிகுந்த சூடேறி தீப்பற்றும்.  அதன் விளைவாக அது வானிலேயே எரிந்து அழிந்து விடலாம்.  அப்படி அது  நடுவானிலேயே அழிந்து விட்டால் சாம்பல் தான் கீழே வந்து விழும்.
ராக்கெட் துண்டு  நடுவானில் அழியாமல் போனால் கடலில் எங்கு விழும் என்பது
 பச்சை வட்டம் வடிவில் காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் இலங்கை அரசு முன்னெச்சரிக்கையாக அந்த கடல் பகுதியில் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது.  அப்பகுதியில் வானில் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் செலுத்தப்படும் பல வகையான செயற்கைக்கோள்கள் செயலிழந்த பிறகு கடைசியில் மெல்ல கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். காற்று மண்டலத்தில் நுழையும் போது மிகுந்த சூடேறி தீப்பிடித்து அனேகமாக முற்றிலுமாக எரிந்து போகும். செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ராக்கெட்டுகள் ஒவ்வொரு கட்டத்திலும் கழன்று கீழ் நோக்கி இறங்கும். அவையும் இப்படி தீப்பிடித்து அழிகின்றன.

ஆனாலும் விண்வெளியில் ராக்கெட்டுகளின் துண்டுப் பகுதிகள், செயலிழந்த செயற்கைக்கோள்களின் ப்குதிகள் என  லட்சக் கணக்கில்   இருக்கின்றன. அவை பூமியைத் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

 பூமிக்கு மேலே கால்பந்தை விட பெரிய சைஸில் உள்ள துண்டுகள் சுமார் 20 ஆயிரம் இருக்கலாம். கோலிக்குண்டு சைஸில் சுமார் 5 லட்சம் துண்டுகள் இருக்கலாம். அதை விடச் சிறியவை சுமார் 10 கோடி இருக்கலாம். இவை அனைத்துமே பூமியைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளன.

இப்போது பூமியை நோக்கி இறங்க இருக்கும் துண்டுக்கு WT 1190F என்று பெயர்  வைக்கப்பட்டுள்ள்து. உயரே இருக்கும் போதே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து கவனிக்கப்பட்டு, இந்தத் தேதியில் இந்த நேரத்தில் இந்த இடத்தில் கீழே விழும் என்று முதல் முறையாகக் கணிக்கப்ப ராக்கெட் துண்டு இதுவேயாகும்.

இலங்கைக்குத் தெற்கே கடல் பகுதியில் நாளை காலை 11-50  மணிக்கு இது விழ்லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச வானவியல் சங்கமும் ஐக்கிய அரபு குடியரசின் விண்வெளி அமைப்பும் சேர்ந்து ஒரு விமானத்தை அமர்த்திக் கொண்டு அந்த ராக்கெட் துண்டு கீழே விழுவதைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளன.

Latest Update

எதிர்பார்த்தபடி அந்த ராக்கெட்  துண்டு இன்று முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே காற்று மண்டலத்தில் நுழைந்த போது தீப்பிடித்து அழிந்தது. கீழே படம்
தீப்பிடித்து எரிந்தபடி கீழே பாயும் ராக்கெட் துண்டு