Pages

Feb 17, 2012

அமாசியா என்ற சூப்பர் கண்டம்


20 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் கண்டங்கள் எவ்விதமாக அமைந்து இருக்கும்? கீழே உள்ள படம் அதைத்தான் காட்டுகிறது.



இடது புறம் தென் அமெரிக்கக் கண்டம் தலை கீழாகத் தொங்குகிற்து. அதை அடுத்து இருப்பது வட அமெரிக்கா. அத்துடன் ஆசியாவும் ஐரோப்பாவும் சேர்ந்து காணப்படுகின்றன. வலது புறத்தில் அடியில் இருப்பது ஆப்பிரிக்கா -  உற்றுக் கவனித்தால் அதை அடையாளம் காண முடியும்.

வலது மூலையில் இந்தியா இருப்பதைப் பார்க்கலாம். இப்போது ஆசியாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்தியா தனித் தீவு/துணைக் கண்டமாகக் காட்சி அளிக்கிறது. எல்லாமே வட துருவத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.

உலகின் ஐந்து பெரிய கண்டங்கள் இப்படத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி     சூப்பர் கண்டமாகத் திகழ்கின்றன. என்றோ ஏற்படப் போகின்ற இந்த சூப்பர் கண்டத்துக்கு சூட்டப்பட்ட பெயர் தான் அமாசியா (Amasia).


உலகின் கண்டங்கள் இப்போது அமைந்துள்ள விதம்
எதிர்காலத்தில் இப்படி நிகழுமா? கண்டங்கள் இடம் பெயருமா? கண்டங்கள் ஒன்றோடு ஒன்று சேர முடியுமா என்றெல்லாம் கேட்கலாம். கடந்த காலத்தில் உலகின் கண்டங்கள் இப்படி இடம் பெயர்ந்துள்ளன. இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. இப்போதும் சரி, கண்டங்கள் ஓராண்டுக்கு ஒரு செண்டி மீட்டர், இரண்டு செண்டி மீட்டர் எனற வேகத்தில் வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. உதாரணமாக இந்தியத் துணைக் கண்டம் வடகிழக்கு திசை நோக்கி ஓராண்டுக்கு ஐந்து செண்டி மீட்டர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வட அமெரிக்கக் கண்டம் மேற்கு நோக்கியும் ஆப்பிரிக்கா கிழக்கு நோக்கியும் இப்போது நகர்ந்து கொண்டிருப்பதால் அட்லாண்டிக் கடலின் அகலம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக லண்டனுக்கும் நியூயார்க் நகருக்கும் இடையிலான தூரம் கொஞ்சங்கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
கடந்த காலத்தில் அவ்வப்போது சூப்பர் கண்டங்கள் இருந்தன என்ற காரணத்தால் எதிர்காலத்திலும் சூப்பர் கண்டங்கள் தோன்ற நிச்சயம் வாய்ப்பு உள்ளது.

சுமார் 180 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நுனா (Nuna) என்ற சூப்பர் கண்டம் இருந்தது. 110 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சூப்பர் கண்டத்தின் பெயர் ரோடினியா (Rodiniya). 30 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா (Pangae)  என்ற சூப்பர் கண்டம் இருந்தது.

சூப்பர் கண்டம் தோன்றியது என்றால் அது நிலையாக அப்படியே நீடிப்பதில்லை. சில காலம் கழித்து கண்டங்கள் விலகுகின்றன. கண்டங்கள் ஒன்று சேருவதும் பின்னர் விலகுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளது.

கடந்த காலத்தில் சூப்பர் கண்டங்கள் எவ்விதம் உருவாகின, பின்னர் எந்தப் பாணியில் அவை கலைந்தன என்பன பற்றிய தகவல்களை வைத்து அமெரிக்க யேல் பல்கலைக்கழக(Yale) விஞ்ஞானிகள் எதிர்கால் சூப்பர் கண்டம் எவ்விதமாக எப்போது அமையலாம் என்பதை கம்ப்யூட்டர் மாடல்கள் மூலம் கணித்துள்ளனர்.

சூப்பர் கண்டம் உருவாவதற்கு மூன்று வழிகள் உள்ளன. பூமியின் மேற்புறத்தில் ஒரு மையத்திலிருந்து விலகிப் போன கண்டங்கள் மறுபடி அதே மையத்தை நோக்கி வந்து ஒன்று சேருதல். இரண்டாவது வழி வேறு விதமானது. விலகிய கணடங்கள் மேலும் மேலும் பின நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். பூமி உருண்டை என்பதால் இக்கண்டங்கள் அனைத்தும் பூமியின் மறு புறத்தில் ஒன்றாகக் குவிந்து சூப்பர் கண்டம் உருவாகும். மூன்றாவது முறையில் விலகிச் செல்லும் கண்டங்கள் வட புறமாக அல்லது தென் புறமாக ஒதுங்கிப் போய் சூப்பர் கண்டம் உருவாகும்.  கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள படத்தில் இவ்விதமாக உருவாகின்ற சூப்பர் கண்டம் காட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சூப்பர் கண்டம் உருவாகுமா என்பது பற்றி 1990 களில் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் ஹாப்மன் (Paul  Hoffman) தான் முதன் முதலில் சிந்திக்கத் தொடங்கினார். அவர் தான் எதிர்கால சூப்பர் கண்டத்துக்கு அமாசியா என்று பெயர் வைத்தவர்.

வெவ்வேறு கால கட்டங்களில் கண்டங்களின்
 இடப்பெயர்ச்சியை விளக்கும் படங்கள் 
இப்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் டேவிட் இவான் ஆய்வுகளை நடத்திப் புதிய சூப்பர் கண்டம் மேலே குறிப்பிட்ட மூன்றாவது வழியில் தான் உருவாகும் என்று கூறியுள்ளார்.

சூப்பர் கண்டம் ஒரு புறம் இருக்க,  கடந்த காலத்தில் மினி சூப்பர் கண்டங்களும் இருந்துள்ளன. சில கண்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மினி சூப்பர் கண்டமாக விளங்குகின்ற அதே நேரத்தில் மீதிக் கண்டங்கள் ஒன்று சேர்ந்து இன்னொரு மினி சூப்பர் கண்டமாக இருந்தன. கோண்டுவானா(Gondwana), லாராசியா(Laurasia) ஆகியவை இவ்விதமான மினி சூப்பர் கண்டங்களாகும். கோண்டுவானாவில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்கள் அடங்கியிருந்தன. லாராசியாவில் மீதிக் கண்டங்கள் அடங்கியிருந்தன.

இந்த இரு மினி சூப்பர் கண்டங்களும் ஒன்று சேர்ந்த போது தான் பாஞ்சியா(Pangea) சூப்பர் கண்டம் தோன்றியது. பின்னர் பாஞ்சியா உடைந்தது. அதைத் தொடர்ந்து மறுபடி கோண்ட்வானா தோன்றியது. கோண்ட்வானா 18 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்தது. அப்போது இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது. சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டம் ஆசிய கண்டத்தின் தென் பகுதியுடன் வந்து இணைந்து கொண்டது. அந்த சமயத்தில் தான் இமயமலை தோன்றியது.

வடக்கே நகர்ந்த இந்தியா 
கண்டங்கள் இடம் பெயருவதால் அவற்றின் விளிம்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்கின்றன.அல்லது புடைத்துக் கொள்கின்றன. அல்லது ஒன்றின் விளிம்பு மற்றதன் விளிம்புக்கு அடியில் புதைகிறது. இவற்றின் விளைவாகவே பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமியும் தோன்றுகின்றன.

கண்டங்கள் நிச்சயம் கடலில் மிதப்பவை அல்ல. கண்டம் நகரும்போது அதைச் சுற்றியுள்ள கடலும் சேர்ந்து நகருகிறது. கண்டங்கள் எப்படி நகருகின்றன, ஏன் நகருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள மிக நீண்ட காலம் ஆகியது. அது ஒரு நீண்ட கதை.

12 comments:

  1. அருமை. அப்போ நியூசி இந்தக் குளிரில் இருந்து தப்பிக்கும்போல இருக்கே!!!!!!

    சூரியன் இப்போ இருக்கும் நிலையில் இருக்குமா?

    ReplyDelete
  2. great you are . now a days, i am regular reader to your articles.Simple and super.

    ReplyDelete
  3. துளசி கோபால்,
    இந்த மாற்றங்கள் எல்லாம் பூமியின் மேற்புறத்தில் மட்டுமே.சூரியன் இருக்கும் தூரத்தில் மாற்றம் இராது. ஆனால் பருவ நிலைமைகள் நிச்சயம் மாறும்.

    ReplyDelete
  4. அப்ப லெமூரியாவும் இதைப் போல ஒரு மினி சூப்பர் கண்டமா இருந்ததா?

    ReplyDelete
  5. ஸ்ரீதர் நாராயணன்
    லெமூரியா என்ற கண்டம் இருந்ததாக் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளவில்லை.கடந்த பல கோடி ஆண்டுகளில் கடல்கள்(டெத்திஸ் கடல் உட்பட) மறைந்துள்ளன. ஆனால் எந்தக் கண்டமும் ம்றைந்து விடவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

    ReplyDelete
  6. very useful information

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  8. Very useful one. Keep it up.

    ReplyDelete
  9. தங்களது எழுத்துக்கள் , மக்களிடம் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதுகிறேன் . மிக்க நன்றி !

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  11. Sir why dont you explain about Lemuria. I am very much intrested to read about it in tamil.

    ReplyDelete
  12. சிவஞானம் கோபி
    லெமூரியா என்ற ஒரு கண்டம் இருந்ததாக ஒரு கருத்து உண்டு. அதே போல அட்லாண்டிஸ் என்ற கண்டம் இருந்ததாக மேற்கத்திய நாடுகளில் ஒரு கருத்து உண்டு. ஆனால் இவற்றுக்கு அறிவியல் அடிப்படையில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்ல முடியாது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கண்டங்கள் கிட்ட்த்தட்ட அப்படியே தான் உள்ளன. என்றும் அவற்றில் எதுவும் அழிந்து விட வில்லை என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.அதே நேரத்தில் கண்டங்களின் விளிப்புகள் ஓரமாக உள்ள இடங்கள் கடலில் மூழ்குவதும் பின்னர் வெளியே வருவதுமாக உள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    ReplyDelete