Pages

Feb 29, 2012

சில்லுகள் போர்த்திய பூமி

சிதறுகாய் போடுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தரையில் ஓங்கி வீசப்பட்ட தேங்காய் உடைந்து பெரியதும் சிறியதுமான சில்லுகளாகச் சிதறும். இச்சில்லுகள் அனைத்தையும் சேகரித்து மிகக் கவனமாக ஒன்றோடு ஒன்று பொருத்தினால் முழுத் தேங்காய் கிடைக்கும். இப்போது அத்தேங்காய பல சில்லுகளால் ஆனதாக இருக்கும். பூமியின் மேற்புறம் இப்படியான பல சில்லுகளால் ஆனதே.

பூமியின் மீது அமைந்த பிரதான சில்லுகளும்
அவை நகரும் திசைகளும் (அம்புக்குறி)
இந்த சில்லுகள் மீது தான் கண்டங்களும் கடல்களும் அமைந்துள்ளன. இந்த சில்லுகளை ஆங்கிலத்தில் Plates என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில் சில்லுகள் தான் நகருகின்றன. சில்லுகள் நகரும் போது கண்டங்களும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் சேர்ந்து நகருகின்றன.

இதுவே சில்லுப் பெயர்ச்சி இயல் (Plate Tectonics) எனப்படுகிறது. மேலே உள்ள படத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றிலும் கடல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா நகரும் போது அதைச் சுற்றியுள்ள கடலகளும் சேர்ந்து நகரும். இந்தியச் சில்லு நகரும் போது இந்தியத் துணைக் கண்டமும், அத்துடன் அதைச் சுற்றியுள்ள கடல்களும் சேர்ந்து நகரும்.

கடந்த 2003 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட கணக்குப்படி பூமியில் மொத்தம் 52 சில்லுகள் உள்ளன. இவற்றில் 14 சில்லுகள் பெரியவை (மேலே படம் காண்க),  மற்றவை சிறியவை. பெரிய சில்லுகளில் பசிபிக் சில்லு, யுரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, தென் அமெரிக்க சில்லு, ஆப்பிரிக்க சில்லு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சில்லு என்பது உண்மையில் பிரும்மாண்டமானது. ஒரு சில்லு சில ஆயிரம் கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாக இருக்கலாம். இவற்றின் பருமன் மேலிருந்து கீழ் வரை 15 அல்லது 200 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.அதாவது சில்லுகள் வடிவில் பெரியவை.

உதாரணமாக இந்தியச் சில்லுவின் தடிமன் சுமார் 150 கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் இதன் விளிம்பில் அமைந்துள்ள இமயமலை வெறும் கல் துண்டு போன்றதே. இமயமலையின் - எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 9 கிலோ மீட்டருக்கும் குறைவு.

சில்லுகள் அனைத்துமே நகருகின்றன. இவற்றை 1. விலகும் சில்லுகள் 2. புதையும் (செருகும்) சில்லுகள் 3. உரசும் சில்லுகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உதாரணமாக அமெரிக்காவின் மேற்குக் கரையில் பசிபிக் சில்லுவும் வட அமெரிக்க சில்லுவும் எதிரும் புதிருமாக உரசிச் செல்கின்றன. இதன் விளைவாகவே கலிபோர்னியா பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. எப்போதாவது கடும் பூகம்பம் நிகழ்கிறது.

அமெரிக்காவின் மேற்குக் கரையில் இரு சில்லுகள்
உரசிச் செல்கின்றன. அம்புக் குறிகளைக் கவனிக்கவும்.
இச்சில்லுப் பகுதி உலகிலேயே விரிவாக ஆராயப்பட்டதாகும். எதிர்காலத்தில் சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய கலிபோர்னியா சில்லு தனியே பிரிந்து தீவு போலாகி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

விலகும் சில்லுகளுக்கு முக்கிய உதாரணம் அட்லாண்டிக் கடலின் நடுவே  சில்லுகளாகும். இவை எதிர் எதிர் திசையில் நகருகின்றன. பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே யூரேசிய சில்லும், வட அமெரிக்க சில்லும் எதிர் எதிரான திசையில் விலகுகின்றன. நடுக்கோட்டுக்குத் தெற்கே ஆப்பிரிக்க சில்லும் தென் அமெரிக்க சில்லும் இதே போல எதிர் எதிரான திசைகளில் விலகுகின்றன. இது கடலடியில் நிகழ்வதால் நம்மால் காண இயலாது.

இடது புறம் உள்ளது வட அமெரிக்க சில்லு.
வலது புறம் ஐரோப்பிய சில்லு.
ஆனால் ஐஸ்லாந்தில் நிலப் பகுதியில் சில்லுப் பெயர்ச்சியை - அதன் அடையாளத்தை நேரில் காண முடியும். ஐஸ்லாந்தில் ஓரிடத்தில் நகரும் இரு சில்லுகளுக்கு இடையே நீங்கள் நடந்து செல்லலாம். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது.

செருகும் சில்லுகள் இருக்குமிடத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் இமயமலைக்குச் சென்றால் போதும்.அங்கு யுரேசிய சில்லுக்கு அடியில் இந்தியச் சில்லு செருகுவதாக உள்ளது. இதன் விளைவாகவே இமயமலை தோன்றியது.

இங்கு நிலப் பகுதியாக் உள்ள சில்லு இதே போல நிலப் பகுதியாக உள்ள வேறு சில்லுக்கு அடியில் செருகுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவுடன் ஒட்டிக்கொண்டிருந்த இந்தியத் துணைக் கண்டம் மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லுவின் தென் பகுதியில் ஒட்டிக்கொண்டது. அதற்கு முன்னர் இந்திய துணைக்கண்ட சில்லுவில் இமயமலை கிடையாது. இந்திய துணைக்கண்ட சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் செருக ஆரம்பித்த பின்னரே இமயமலை தோன்றியது. கீழே படம் காண்க.

இமயமலை தோன்றிய விதம்
நிலப் பகுதியில் மட்டுமன்றி கடல்களுக்கு அடியிலும் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போகலாம். இந்தியாவுக்குக் கிழக்கே அந்தமான் தீவுகளுக்கு அப்பால் கடலுக்கு அடியில் யுரேசிய சில்லுவின் ஒரு பகுதியான பர்மா சில்லு உள்ளது. இந்த பர்மா சில்லுக்கு அடியில் இந்தியச் சில்லு புதைகிறது. பல சமயங்களிலும் இந்தியச் சில்லுவையும் ஆஸ்திரேலிய சில்லுவையும் சேர்த்து இந்திய- ஆஸ்திரேலிய சில்லு என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியச் சில்லு பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது
இந்தோனேசியத் தீவுகள் பகுதியில் ஆஸ்திரேலிய சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. தவிர, அங்கு பசிபிக் சில்லுவும் யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது.

ஜப்பானுக்குக் கிழக்கே பிலிப்பைன் சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. பசிபிக் சில்லு வட அமெரிக்க சில்லுக்கு அடியில் புதைகிறது.

இப்படியான சில்லுப் பெயர்ச்சிகளால் தான் கண்டங்கள் இடம் பெயருகின்றன. ஒட்டிக்கொண்டிருந்த கண்டங்கள் விலகும் போது புதிதாகக் கடலகள் தோன்றுகின்றன. விலகியிருந்த கண்டங்கள் ஒன்று சேரும் போது அவற்றின் இடையில் இருந்த கடல்கள் மறைந்து போகின்றன.

ஆனால் உரசும் சில்லுகளாலும் புதையும் சில்லுகளாலும் பூமியின் மேற்பரப்பில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு அவ்வப்போது கடும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. இதை அடுத்த பதிவில் காண்போம்.

9 comments:

  1. இந்தச் சில்லுகள் ஆடுஆடுன்னு ஆடிக்கிட்டே இருக்கு எங்க ஊரில். 2010 வருசம் செப்டம்பர் 4 ஆம்தேதி ஆரம்பிச்ச ஆட்டம் இன்னிக்குவரை நிறுத்தவே இல்லை. நடுவில் அப்பப்ப பெருசு பெருசா ஆடி கட்டிடங்கள் இடிஞ்சு தீப்பத்தி 185உயிர்கள் பலி. பத்தாயிரம் வீடுகள் வசிக்கமுடியாத நிலை. ஒரு லட்சம் வீடுகளில் எதாவது பழுது.

    லிக்யூஃபிகேஷன் என்று நிலத்தடி நீர் பொங்கி வழிஞ்சு நிலமெல்லாம் நிலைச்சு நிற்க வழி இல்லை.

    இதுவரை நாலுமுறை பெரிய நிலநடுக்கம். பத்தாயிரத்துச்சொச்சம் ஆஃப்டர்ஷாக்ஸ்:(

    இந்த ஆட்டம் இன்னும் 30 வருசத்துக்கு இருக்குமுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க!!!!!

    ReplyDelete
  2. துளசி கோபால்
    நீங்கள் நியூசிலந்தில் இருப்பதாகத் தெரிகிறது. நியூசிலந்து தீவுகளுக்கு ‘ஆடும் தீவுகள்’ Shaky Isles' என்ற பெயரும் உண்டு. நியூசிலந்து நாடு ஆஸ்திரேலிய சில்லு, பசிபிக் சில்லு ஆகிய இரண்டின் மீதும் அமர்ந்ததாக உள்ளது.ஆஸ்திரேலிய சில்லு தென்கிழக்கு நோக்கி நகருகிறது. பசிபிக் சில்லு மேற்கே இருந்து ஆஸ்திரேலிய சில்லுக்கு அடியில் புதைகிறது. ஆகவே தான் நியூசிலந்தில் நில நடுக்கம் மட்டுமன்றி (குறிப்பாக வட பகுதியில்) நிறைய எரிமலைகளும் உள்ளன.

    ReplyDelete
  3. ஆமாங்க. நான் நியூஸியின் நிலநடுக்கப் புகழ் ஊரான கிறைஸ்ட்சர்ச் நகரில் இருக்கேன் கடந்த 24 வருசங்களாக.

    அழிவுகளைப் பார்த்து எங்க ஊரே நொந்துப் போய்க்கிடக்கு:(

    ReplyDelete
  4. ராமதுரை அவர்களே.. பூமியின் ப்ளேட்சை மிக அழகாக சில்லுகள் மூலம் விளக்கியிருக்கிறீர்கள். தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்கும் அடிபப்டை கற்பித்தல் முரையைக் கையாளுகிறீர்கள். மகிழ்ச்சி. உங்கள் கட்டுரைகளைத்தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கிறேன். தினமணியில் பெ.நா.அப்புசாமி தொடங்கிய மரபை நீங்கள் அருமையாகக் காப்பாற்றிவருகிறீர்கள். அன்புடன் ஞாநி. (முன்னாள் தினமணி இதழாசிரியன்)

    ReplyDelete
  5. ஞானி அவர்களே
    தங்களது பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி.பெ நா அப்புசாமி அவர்களும் அவருக்கு முன் பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை அவர்களும் தமிழில் அறிவியலை அளிப்பதில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். அப்புசாமியும் ஜெ.பி மாணிக்கமும் சேர்ந்து எழுதிய ‘வானொலியும் ஒளிபரப்பும் ‘ என்ற நூலை நான் 1947 ஆம் ஆண்டில் பள்ளி மாணவனாக இருந்தபோது படித்தது நினைவில் இருக்கிறது.
    தங்களைப் போன்றவர்கள் எழுதும் பாராட்டுரை மேலும் ஊக்குதலை அளிப்பதாக உள்ளது.

    ReplyDelete
  6. nandri.............!

    ReplyDelete
  7. Hi,
    The above article is really very nice.
    I read all your posts. When i was going through this post i got a doubt. I wish to share with you.
    Any updates on Atlantis and Lemuria ??

    ReplyDelete
  8. அட்லாண்டிஸ், லெமூரியா ஆகிய கண்டங்கள் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

    ReplyDelete