Pages

Mar 22, 2012

வென்றவர் ஐன்ஸ்டைன்

ஒளியின் வேகத்தை எதனாலும் மிஞ்ச முடியாது என 1905 ஆம் ஆண்டில் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை தப்பாக இருக்குமோ என்று அண்மையில் ஐயம் கிளம்பியது. நியூட்ரினோ (Neutrino) என்னும் அணுத் துகள் தொடர்பாக ஐரோப்பாவில் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட பல பரிசோதனைகள் இவ்வித ஐயத்தை ஏற்படுத்தின. ஏனெனில் நியூட்ரினோ துகள் ஒளியை விட அதிக வேகத்தில் செல்வதாக அந்த பரிசோதனைகள் காட்டின. கடந்த டிசம்பரில் மறுபடி நடந்த பரிசோதனைகளும் அதே முடிவைக் காட்டின.

செப்டம்பர் 2011: நியூட்ரினோ பற்றி
பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி
கடைசியில் ’ஜெயிக்கப்போவது யாரு?’ என்ற கேள்விக்குறியோடு இந்த மாத மத்தியில் மறுபடி நடந்த பரிசோதனைகளில் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சவில்லை என்பது தெரிய வந்தது. ஐன்ஸடைனின் கொள்கை தான் இறுதியில் ஜெயித்தது.

ஐன்ஸ்டைனின் கொள்கை மீது இததனை காலம் இலலாமல் திடீரென சந்தேகம் வந்தது ஏன்? நியூட்ரினோ என்பது என்ன?

நியூட்ரினோ என்பது மிகச் சிறிய அணுத் துகள். அண்மைக் காலம் வரை நிறைய பேருக்கு அப்படி ஒரு துகள் இருக்கிறது என்பதே தெரியாது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூட்ரினோ ஒளி வேகத்தை மிஞ்சி விட்டதாக செய்தி வெளியாகிய போது அது உலகப் பிரசித்தி பெற்றது.

பள்ளியில் இயற்பியல் பாடத்தில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் ஆகியவை பற்றிப் படித்தது பலருக்கும் நினைவிருக்கும். அணுவுக்குள் இடம் பெற்றுள்ள நியூட்ரான் (Neutron) வேறு, நியூட்ரினோ வேறு.

நியூரினோ துகள்கள் சூரியனில் அணுச்சேர்க்கையின் (Nuclear Fusion) போது உண்டாகின்றன (பிற நட்சத்திரங்களிலும் இது நடக்கிறது). சூரியனிலிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை -- நமது உடலையும் -- துளைத்துக் கொண்டு ம்றுபுறம் வெளிப்பட்டு விண்வெளியை நோக்கிப் போய்க் கொண்டே இருக்கின்றன. எந்த சக்தியாலும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அடுத்தடுத்து ஐம்பது பூமிகளை வைத்தாலும் இவை அனைத்தையும் ஊடுருவிச் சென்று விடும்.

எலக்ட்ரான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ என மூன்று வகை உண்டு. எலக்ட்ரான் நியூட்ரினோவுக்கு சோலார் நியூட்ரினோ என்ற பெயரும் உண்டு (Electron/Solar, Tau, Muon). சூரியனில் நடக்கின்ற அணுச்சேர்க்கையின் விளைவாக சூரியனிலிருந்து இவ்வளவு சோலார் நியூட்ரினோக்கள் வர வேண்டும் என நிபுணர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.

ஆனால் அதை விடக் குறைவான நியூட்ரினோக்களே வந்து சேருகின்றன என்பதைப் பரிசோதனைகள் காட்டின. மீதி சோலார் நியூட்ரினோக்கள் எங்கே போயின என்ற கேள்வி எழுந்தது. சூரியனில் அணுச்சேர்க்கை நடைபெறுவது பற்றிய கொள்கையே தவறாக இருக்குமோ என விஞ்ஞானிகள் கவலை கொண்டனர்.

காணாமல் போகும் நியூட்ரினோக்கள் பற்றிய பிரச்சினை விஞ்ஞானிகளை சுமார் 30 ஆண்டுக்காலம் திண்டாட வைத்தது. கடைசியில் 2001 ஆம் ஆண்டில் கனடாவில் நடந்த ஒரு பரிசோதனையின் போது தான் சோலார் நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகிற வழியில் -- பச்சை சட்டையைக் கழற்றி விட்டு மஞ்சள் நிற சட்டையைப் போட்டுக் கொள்வது போல -- வேறு நியூட்ரினோக்களாக மாறுகின்றன என்பது தெரிய வந்தது. எல்லா நியூட்ரினோக்களையும் கூட்டிப் பார்த்தால் கணக்கு சரியாக இருந்தது.

பெரிய ஆராய்ச்சிக்கூடத்தில் மனிதனாலும் நியூட்ரினோக்களை உண்டாக்க முடியும். ஐரோப்பாவில் ஜெனீவா நகருக்கு அருகே CERN  எனப்படும் உலகப் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி அமைப்பானது பாதாளத்தில் பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவி பல வகையான ஆராய்ச்சிகளைப் பல ஆண்டுக்காலமாக நடத்தி வருகிறது.

ஜெனீவாவில் பாதாளத்தில் அமைந்த
CERN ஆராய்ச்சிக்கூடத்தின் ஒரு பகுதி
அந்த ஆராய்ச்சிக்கூட நிபுணர்கள் நியூட்ரினோக்களை உண்டாக்கி அவற்றை பாதாளம் வழியே -- நிலத்துக்கு அடியில் பாறைகள் வழியே -- இத்தாலியில் உள்ள வேறு ஓர் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்புவதில் ஈடுபட்டனர். பூமியைத் துளைத்துச் செல்லும் நியூட்ரினோக்களுக்கு நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே இத்தாலியின் ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்வதில் பிரச்சினை இருக்கவில்லை.எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் போகின்ற வழியில் வேறு நியூட்ரினோக்களாக மாறுவது பற்றி மேலும் அறிவதே இதன் நோக்கமாகும்.

இவை எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதை அறிவது ஆராய்ச்சியின் பிரதான நோக்கம் இல்லை என்றாலும் நியூட்ரினோக்களின் வேகத்தைக் கண்டறிவதற்கு மிக நுணுக்கமான கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இந்த ஆராய்ச்சிகளின் போது தான் நியூட்ரினோக்கள் -- ஐன்ஸ்டைனின் கொள்கையை மீறி -- ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகக் கருவிகள் காட்டின. முதலில் நிபுணர்கள் இதை நம்பவில்லை. பல நூறு தடவை பரிசோதனைகளை நடத்திப் பார்த்தனர். நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சுவதாக எல்லாப் பரிசோதனைகளும் காட்டவே தான் கடைசியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நியூட்ரினோக்கள் பற்றிய இத் தகவலை வெளியிட்டனர்.

ஐன்ஸ்டைன்: தப்புக்கு வாய்ப்பில்லை
ஐன்ஸ்டைனின் கொள்கை தவறாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தில் கடந்த டிசம்பரில் வேறு வகையில் பரிசோதனைகளை நடத்திய போதும் நியூட்ரினோக்கள் ஐன்ஸடைனின் கொள்கை தப்பு என்பது போல செயல்பட்டன. அதாவது நியூட்ரினோக்களின் வேகத்தை அளந்த கருவிகள் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை விட அதிக வேகத்தில் செல்வதாகவே காட்டின.

கடைசியில் இந்த மாதம் மறுபடி பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதை வேறு குழுவினர் நடத்தினர். நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தில் தான் செல்கின்றன. அவை ஒளி வேகத்தை மிஞ்சவில்லை என்று இப்போதைய பரிசோதனைகள் காட்டியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை ஆராய்ச்சிக்கூட சார்பில் டாக்டர் செண்ட்ரோ மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்டார். "இது விஷயத்தில் எனக்கு ஆரம்ப முதலே சந்தேகம் இருந்து வந்தது" என்றார் அவர்.

நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சுவதாக முந்தைய பரிசோதனைகள் காட்டியதற்கு கருவிகளில் இருந்த கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ஒளி வேகத்தை எதுவும் மிஞ்ச முடியாது என ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை சரியானதே என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது. ஐன்ஸ்டைனா கொக்கா?

பிரச்சினை தீர்ந்து விட்டாலும் வருகிற மாதங்களில் நியூட்ரினோக்களின் வேகத்தை அளக்க அமெரிக்காவிலும், ஜப்பானிலும் இதே மாதிரி பரிசோதனைகள் நடத்தப்படலாம்.

எல்லாம் சரி, ஒளியின் வேகம் என்ன? ஒளியானது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் (முப்பது கோடி மீட்டர்) வேகத்தில் செல்கிறது. சரியாகச் சொன்னால் வினாடிக்கு 29,97,92,458 மீட்டர்.

கொசுறு: தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் சுமார் ரூ 1300 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

23 comments:

  1. Really very nice & informative article.

    Sir, One question on below news,
    கொசுறு: தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் சுமார் ரூ 1300 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

    Is there any causes to environment due to this research centre?

    ReplyDelete
  2. very interesting article in tamil, indeed.
    vv

    ReplyDelete
  3. அங்கு ஒரு பெரிய குன்றைக் குடைந்து அதற்குள்ளாகத் தான் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்பட இருக்கிறது. இது ஒரு மலைக்கு வழியே சுரங்க ரயில்பாதை அமைப்பதற்கு ஒப்பானது. நிறையப் பாறைகளை வெட்ட வேண்டும். நிறைய தூசு கிளம்பும்.கூடிய வரையில் சுற்றுப்புறத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என திட்ட அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அந்த வட்டார மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் திட்டம் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நியூட்ரினோக்களால் பாதிப்பு எதுவும் இராது. தினமும் நம் உடல் வழியே எண்ணற்ற நியூட்ரினோக்கள் நுழைந்து மறுபுறம் சென்று கொண்டிருக்கின்றன. நியூட்ரினோவினால் பாதிப்பு இராது என்பதற்கு இதுவே அத்தாட்சி.
    ஆனால் முல்லைப் பெரியாறு விஷயத்தில் பீதி கிளப்பி வருகின்ற அதே தரப்பினர் இப்போது நியூட்ரினோ திட்டத்தால் ‘ஆபத்து’ விளையும் என்ற விஷமப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

    ReplyDelete
  4. Thank you very much sir for the explanation. Your way of explanation is very simple and interesting.
    -Siva (Sorry, I forgot to mention my name in previous post)

    ReplyDelete
  5. அறிவியல் பூர்வமான விஷயத்தை மிக அழகாக எளிதாக புரியும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள்.. இந்த நியூட்ரினோ திட்டத்துக்கும் எதிர்ப்பு இருக்குமோ?

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  6. கவிதை காதலன்
    முதலில் நியூட்ரினோ திட்டத்தை நீலகிரியில் அமைப்பதாக இருந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான ஆட்சேபம் காரணமாக தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.உங்கள் கேள்வியைப் பொருத்த வரையில் மேலே நான் அளித்துள்ள பதிலைக் காணவும். நியூட்ரினோ திட்டத்தையும் ஒரு கூடங்குளமாக மாற்ற முயற்சி நடந்தால் வியப்பில்லை

    ReplyDelete
  7. wow wow....very nice and clear explanation..thank you

    ReplyDelete
  8. சார், 1300 கோடி அந்நிய முதலீடா இல்லை இந்தியாவின் செலவா கொஞ்சம் சொல்லுங்களேன் .

    by Raj

    ReplyDelete
  9. ராஜ்:
    இதில் அன்னிய முதலீடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் லாப அம்சம் எதுவும் கிடையாது. ஆகவே அன்னிய முதலீடுக்கு வாய்ப்பு இல்லை. இப்படியான திட்டத்தை தானே நிறுவிக்கொள்ள இந்தியாவிட்ம் தொழில் நுட்பத் திறன் உள்ளது.

    ReplyDelete
  10. அருமையான விளக்கங்கள் சார். தேனி மாவட்டத்தில் அமைய இருக்கும் ஆய்வகமும் CERN-ல் இருப்பது போன்ற பாதாள பாதையை கொண்டிருக்குமா?

    ReplyDelete
  11. எனக்கென்னமோ, முதல் ரெண்டு ஆராய்ச்சி முடிவும் தேவை இல்லாத குழப்பத்தை உண்டுபண்ணுமோ ன்ற politics-நாலதான் இப்போதைக்கு அடக்கி வாசிக்கிராங்களோன்ன தோணுது ப்பா

    ReplyDelete
  12. பன்னிக்குட்டி டி. ராமசாமி:
    ஒரு பெரிய குன்றுக்குள் நுழைவதற்கு சுரங்கப்பாதை வெட்டுவர். பிறகு குன்றின் உட்புறத்தில் கூடாரம் வடிவில் பாறைகள வெட்டி எடுப்பர்.அந்த இடத்தில் ஆராய்ச்சிக் கருவிகளை அமைப்பார்கள்.

    ReplyDelete
  13. விஜயன்
    விஞ்ஞானிகள் எதையும் தேவையில்லாம்ல் மூடி மறைப்பது கிடையாது.இப்போது கூறப்பட்டுள்ள முடிவுகள் சரியானவையாகத் தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  14. Sir the government started this kind of project? How it is useful to people)

    ReplyDelete
  15. Sir y the govt started this project and how it is useful to us?

    ReplyDelete
  16. கொசுறு: தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் சுமார் ரூ 1300 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன
    அய்யா இதனால் நமக்கு என்ன பயன் இதை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியுமா அப்படி தயாரித்தல் அது அணு மின்சாரத்தை விட பாதுகப்பனதா தங்களுக்கு நேரம் கிடைத்தால் விளக்கவும்.

    ReplyDelete
  17. ராஜ்கமல்/சலாஹுதீன்:
    கிரகாம் பெல் டெலிபோனை உருவாக்கிய போது மாடியிலிருந்து கீழே உள்ளவருடன் தான் பேச முடிந்தது.பலரும் அப்போது இக்கருவியால் என்ன பயன் என்று கேட்டார்கள்.
    எந்த ஓர அடிப்படை ஆராய்ச்சியிலும் உடனடியாக அதனால் பயன் இருக்க வாய்ப்பில்லை.
    யார் கண்டார்கள்? நீங்கள் சொல்வது மாதிரியில் எதிர்காலத்தில் நியூட்ரினோ மூலம் ஒரு வேளை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியலாம்.
    ஆனால் ஆராய்ச்சிகள் செய்தால் தான அப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியும்.

    ReplyDelete
  18. அணுவை உடைத்தாலே இவ்ளோ பிரச்னை இருக்கும்போது அதைவிட சிறியதை உடைத்தாலோ/சேர்த்தாலோ எவ்ளோ பிரச்னை வருமோ?

    ReplyDelete
  19. ஏன் நாட்டின் வேறு இடங்களே இல்லையா, நீலகிரி, தேனி இடங்களைத் தவிர?

    நம்மிடம் இருப்பது தேனிப் பகுதியைச் சார்ந்த பருமைக் காடுகள் மட்டும்தான்.

    இதனையும் அழிக்க வந்துவிட்டார்களா?

    ReplyDelete
  20. ராஜரத்தினம்:
    கெட்டியான முழுப் பாறையிலான குன்று தேவை. அவ்விதக் குன்று நீலகரியில் உள்ளது. அடுத்து தேனியிலும் உள்ளது. ஆகவே தான் தேனி பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இங்கு காடு அழிப்பு இராது. குன்றைக் குடைந்து உள்ளே பெரிய கூடாரம் மாதிரியில் அரங்கு அமைத்து அங்கு தான் ஆராய்ச்சிக் கருவிகள் நிறுவப்படும். குன்றுக்கு வெளியே சாலை அமைப்பு தவிர வேறு பெரிய பணி எதுவும் இராது.
    நியூட்ரினோ ஆராய்ச்சி அணு ஆராய்ச்சி போன்றது அல்ல. அணுக்களை உடைகக முடியும், மாற்ற முடியும். நியூட்ரினோவைப் பிடித்து ஒரு இடத்தில் இருக்கும்படி செய்ய முடியாது. நியூட்ரினோக்கள் எதிலும் சிக்காமல் ஓடுபவை. மிஞ்சிப் போனால் அவற்றின் தன்மைகளை ஆராய முடியும். அவ்வளவுதான்

    ReplyDelete
  21. Ayya thagavalukku mikka nanri... nano technolgy patriya virivana vilakkangal neram irunthal vilakkavum...

    ReplyDelete
  22. பன்னிக்குட்டி ராமசாமி:
    தேனி அருகே அமையும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் பாதாளத்தில் அமைந்திராது.குன்றுக்குள் அமைந்திருக்கும்.CERN அடிப்படையில் துகள்களை மோத வைத்து அதன் விளைவுகள ஆராய்கின்ற ஆராய்ச்சிக்கூடமாகும். ஆக்வே தான் அது பாதாளத்தில் அமைந்துள்ளது. எனினும் இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்ப்ட்ட பிறகு CERN ஆராய்ச்சிக்குடத்திலிருந்து தேனிக்கு நியூட்ரினோக்கள் அனுப்பப்ப்டலாம்.

    ReplyDelete
  23. Kasali
    சூரியனிலும் நட்சத்திரங்களிலும் அணுச்சேர்க்கை (ஒளிச் சேர்க்கை அல்ல) நடைபெறும் போது நியூட்ரினோக்கள் இயற்கையாகத் தோன்றுகின்றன.இவற்றைச் செயறகியாகவும் உண்டாக்க முடியும். அணுத் துகள்களை மோத விடும் ஆராய்ச்சிக்கூடங்களில் ஓர் இலக்கை நோக்கி புரோட்டான்களைச் செலுத்தும் போது பல அணுத் துகள்கள் தோன்றும்.காந்தங்களைப் பயன்படுத்தி அத் துகள்களை வேறு புறம் திருப்ப முடியும். இவ்வித்மாகச் செய்யும் போது நியூட்ரினோக்கள் கிடைக்கும்.

    ReplyDelete