Pages

Apr 16, 2012

மிதக்கும் பனி மலைகள்

உருகிய நிலையில் இருக்கும் இரும்புக் குழம்பில் ஒரு இரும்புக் கட்டியைப் போட்டால் அது மூழ்கி விடும். உருகிய நிலையில் உள்ள வெள்ளிக் குழம்பில் ஒரு வெள்ளிக் கட்டியைப் போட்டாலும் அது மூழ்கி விடும். அதாவது திரவ வடிவில் உள்ள ஒரு பொருளில் திட வடிவிலான அதே பொருளைப் போட்டால் மூழ்கி விடும். திட வடிவில் அடர்த்தி அதிகம் என்பதே அதற்குக் காரணம்.

ஐஸ் கட்டி இதற்கு விதி விலக்கு. தண்ணீரில் ஐஸ் கட்டியைப் போட்டால் ஐஸ் கட்டி மிதக்கும். திட வடிவிலான தண்ணீரின் --- ஐஸ் கட்டியின் -- அடர்த்தி குறைவு என்பது அதற்குக் காரணம். தண்ணீரின் இந்த விசேஷக் குணம் காரணமாக ஒரு பிரபல கப்பல் கடலில் மூழ்கியது. அக்கப்பலின் பெயர் டைடானிக்.

டைடானிக் கப்பல்.
கட்டி முடிக்கப்பட்டு அமெரிக்கா கிளம்புவதற்கு முன்.
டைடானிக் என்ற பெயர் பலருக்கும் நன்கு பரிச்சயமானது. டைடானிக் கப்பல் மூழ்கியதை பின்னணியாக வைத்து ஹாலிவுட் சினிமாப் படம் வெளிவந்துள்ளது. அது தமிழிலும் ட்ப் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. டைடானிக் பற்றி நிறைய புத்தகங்களும் வந்துள்ளன.

டைடானிக் கப்பல் கடலில் மூழ்கிய தேதி ஏப்ரல்14 1912. அக்கப்பல் மூழ்கி நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட்ன. இதைக் குறிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியன்று உலகில் பல இடங்க்ளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டைடானிக் கட்டி முடிக்கப்பட்ட போது அது மூழ்க வாய்ப்பில்லாத கப்பல் என வர்ணிக்கப்பட்டது. எந்த ஒரு கப்பலானாலும் உயிர் காப்புப் படகுகள் பக்கவாட்டில் இணைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும். கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்டு அது மூழ்க ஆரம்பித்தால் பயணிகளும் மாலுமிகளும் இப்படகுகளில் ஏறிக் கொண்டு உயிர் தப்புவர். மூழ்காத கப்பல் என்று கருதப்பட்டதால் டைடானிக் கப்பலில் குறைவான உயிர் காப்புப் படகுகளே எடுத்துச் செல்லப்பட்டன.

ஆர்டிக் வட்டாரத்தில் மிதக்கும் பனி மலை
டைடானிக் மூழ்கிய தினத்தன்று இரவு சுமார் 11 மணி வாக்கில் ’ஐயோ மிதக்கும் பனி மலை” என்று சில மாலுமிகள் அலறினர். மிதக்கும் பனி மலை என்பது ஒரு கப்பலுக்கு எமன் மாதிரி. மிதக்கும் பனி மலை மீது கப்பல் மோதினால் அதோகதி தான். ஆகவே கப்பலை திசை திருப்ப முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. மிதக்கும் பனி மலை (Iceberg)  கப்பலின் வலது புறத்தில் மோதி கப்பலில் பெரும் ஓட்டைகளை உண்டாக்கியது. சுமார் 700 பேர் படகுகளில் தப்பினர், 1500 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஒரு தம்ளர் தண்ணீரில் ஐஸ் கட்டித் துண்டுகளைப் போட்டால் மிதப்பதைப் போலவே பிரம்மாண்டமான பனிப்பாளங்கள் கடல் நீரில் மிதக்கக்கூடியவை. இவற்றைத் தான் மிதக்கும் பனி மலைகள் என்கிறார்கள். மிதக்கும் பனி மலை ஒன்று பல நூறு மீட்டர் நீள அகலம் கொண்டதாக பல அடுக்கு மாடிக் கட்டடம் அளவுக்கு உயரம் கொண்டதாக இருக்க முடியும்.

இப்படியான பிரம்மாண்டமான பனி மலை கடல் நீரில் மிதக்கும் போது அதன் பெரும் பகுதி நீருக்குள் அமிழ்ந்திருக்கும். சிறு பகுதி மட்டும் நீருக்கு வெளியே தெரியும். இதை வைத்துத் தான் the tip of the iceberg  என்ற சொற்றொடர் உருவாகியது.

மிதக்கும் பனி மலையின் பெரும் பகுதி
நீருக்குள் அமிழ்ந்திருப்பதைக் காண்க
தென் துருவ அண்டார்டிக் பகுதியிலும் வட துருவ ஆர்டிக் பகுதியிலும் ஏராளமான அளவுக்கு கெட்டியான உறை பனி உள்ளது. வட துருவம் அருகே உள்ள கிரீன்லாந்து கிட்டத்தட்ட உறைந்து போன பனிக்கட்டியால் மூடப்பட்டதாகும். தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டம் இதே போல பனிக்கட்டியால் மூடப்பட்ட கண்டமாகும். கிரீன்லாந்து அண்டார்டிகா ஆகிய இரு இடங்களிலும் ஆண்டு தோறும் மேலும் மேலும் பனிக்கட்டி சேரும் போது விளிம்புப் பகுதிகளின் அடிப்புறத்தில் உள்ள பனிக்கட்டிகள் பிதுக்கப்பட்டு கடலில் விழும்.

அண்டார்டிக் வட்டாரத்து மிதக்கும் பனி மலை
இப்படிக் கடலில் விழும் பனிக்கட்டிகள் மிதக்க ஆரம்பிக்கும். காற்று காரணமாகவும், கடல் பகுதியில் உள்ள நீரோட்டம் காரணமாகவும் இந்த மிதக்கும் பனிமலைகள் அங்கிருந்து டூர் கிளம்ப ஆரம்பிக்கும். வட துருவப் பகுதியில் தோன்றும் பனி மலைகள் தெற்கு நோக்கி மிதந்து வரும். அதே போல அண்டார்டிகாவில் தோன்றும் பனி மலைகள் வடக்கு நோக்கி பயணிக்கும். இந்த இரு பகுதிகளிலும் கடல் நீரே ஐஸ் கட்டி அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே அவை உடனே உருகி விடுவதில்லை. கிரீன்லாந்திலிருந்து தெற்கு நோக்கி வரும் மிதக்கும் பனி மலைகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி வரும் போது சூரியனின் வெப்பம் பட்டு உருக ஆரம்பிக்கும்.

கனடாவின் கிழக்குக் கரைக்கு அப்பால், மிதக்கும் பனி மலைகளின் நடமாட்டம் நிறையவே உண்டு. அட்லாண்டிக் கடலின் இப்பகுதியானது கப்பல் போக்குவரத்து நிறைந்தது. அமெரிக்கக் கண்டத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே செல்லும் கப்பல்கள் இந்த வழியாகத் தான் செல்கின்றன.டைடானிக் கப்பல் இங்கிலாந்திலிருந்து கிளமபி அமெரிக்கா வந்து கொண்டிருந்த போது தான் மிதக்கும் பனி மலை மீது மோதி கடலில் மூழ்கியது.

சுவர் மீது புல்டோசர் மோதினால் சுவர் இடியும். அதே புல்டோசர் ஒரு பெரிய பாறை மீது மோதினால் புல்டோசர் சேதமடையும். கப்பலும் மிதக்கும் பனி மலையும் மோதினால் கப்பல் தான் மூழ்கும். டைடானிக் மூழ்கிய சம்பவம் அப்போது உலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து பனி மலைகள் நடமாட்டம் பற்றி கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான ஏற்பாடு உருவாகியது.

டைடானிக் மூழ்கிய காலத்தில் ராடார் கண்டுபிடிக்கப்படவில்லை. தொலைவில் மிதக்கும் பனி மலைகள் வருவதை ராடார் மூலம் கண்டுபிடித்து விட முடியும். இப்போது எல்லாக் கப்பல்களிலும் ராடார்கள் உண்டு.

இப்போது மிதக்கும் பனி மலைகள் நடமாடும் பகுதிகளை விமான மூலம் கண்காணிக்கின்றனர். செயற்கைக்கோள்கள் மூலமும் கண்காணிக்கின்றனர்.
வட அட்லாண்டிக் கடலிலும் சரி, அண்டார்டிகாவை அடுத்த கடல் பகுதியிலும் சரி, மிதக்கும் பனி மலைகளின் நடமாட்டம் இப்போது குறைந்து விடவில்லை. கப்பல்களை எச்சரிக்கின்ற ஏற்பாடு உள்ளதால் டைடானிக் கப்பலுக்கு நேர்ந்தது போன்ற விபத்து நடைபெற இப்போது வாய்ப்பு இல்லை.

இரு பனி மலைகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் ஒரு கப்பல்
அப்படியும் கூட அபூர்வமாக சிறிய கப்பலகள் மீது மிதக்கும் பனி மலைகள் மோதும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. அண்டார்டிகா பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கான சுமார் 100 பயணிகளுடன் சென்ற ஒரு சுற்றுலா பயணிக் கப்பல் 2007 ஆம் ஆண்டில் தென் அமெரிக்காவுக்குத் தெற்கே அண்டார்டிகா அருகில் மிதக்கும் பனி மலை மீது மோதியது. அக்கபபலில் இருந்த மீட்புப் படகுகளில் ஏறிக்கொண்டு அனைவரும் உயிர் தப்பினர். இது மாதிரி ஓரிரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மிதக்கும் பனி மலை என்பது உப்பு இல்லாத சுத்தமான தண்ணீராகும். எனவே அண்டார்டிகாவிலிருந்து பெரிய பெரிய மிதக்கும் பனி மலைகளை இழுந்து வர முடிந்தால் பல கோடி லிட்டர் குடி நீர் கிடைக்கும். சவூதி அரேபியா ஒரு கட்டத்தில் இது பற்றி ஆராய்ந்தது. மிதக்கும் பனி மலைகளில் அடங்கிய தண்ணீர் எளிதில் உருகி விடாமல் பார்த்துக் கொள்வதற்கான் ஏற்பாடுகளும் ஆராயப்பட்டன. ஆனால் இது நடைமுறை சாத்தியமல்ல என்று தெரிய வந்த போது இத்திட்டம் கைவிடப்பட்டது. மிதக்கும் பனி மலைகள் பூமியின் நடுக்கோட்டை (Equator) நோக்கி வருகையில் வெயில் பட்டு முற்றிலுமாக உருகிவிடும். ஆகவே தான் உலகில் கப்பல்கள் நடமாடும் பெரும்பாலான பகுதிகளில் மிதக்கும் பனி மலைகள் காணப்ப்டுவதில்லை.

ஐஸ் கட்டி ஏன் நீரில் மிதக்கிறது என்பது பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். தண்ணீரானது மேலும் மேலும் குளிர்ச்சியாகித் திட வடிவைப் பெறும் போது முதலில் சுருங்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது சுருங்குவதற்குப் பதில் விரிவடைகிறது. அப்படி விரிவடையும் போது அடர்த்தி குறைவதால் மிதக்கிறது.

9 comments:

  1. அறிவுப் பசிக்கு தீனி போட்ட நல்ல பதிவு

    ReplyDelete
  2. பல நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி அய்யா

    ReplyDelete
  3. மிதக்கும் பனிமலையில், நான்கில் ஒரு பங்குதான் நீருக்கு வெளியே தெரியும். இந்த உண்மையை டைடானிக் கப்பலின் மாலுமிகள் உணராமல், வெளியே தெரிந்த சிறு பாகத்தை வைத்து, இவ்வளவு பெரிய கப்பல் மோதும் போது பனிப்பாறை தூள் தூளாக சிதறிவிடும் என தவறாக கணித்துவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. தகவலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. அறிவியல்பூர்வமான செய்திகளை எளிமையாக தரும் தங்களுக்கு மிக நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.

    ReplyDelete
  5. வழக்கம் போல் அருமையான தகவல்கள் அடங்கிய கட்டுரை சார். நன்றி!

    ReplyDelete
  6. Thank you so much sir for sharing your valuable thoughts on iceberg.
    -Siva

    ReplyDelete
  7. photos arumayKa ullathu..athai pola unkalathu katturaum

    ReplyDelete
  8. ithai pontra innum pala thakalvalkali pera kathu kondu irukindran.

    ReplyDelete