Pages

Apr 27, 2012

இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ரிசாட்-1

இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் பெயர் ரிசாட்- 1 என்பதாகும்(RISAT-1). இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்(PSLV) மூலம் உயரே வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

முதலில் ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும். உலகில் எந்த நாடும் தங்களிடம் வேவு செயற்கைக்கோள் இருப்பதாக அல்லது வேவு செயற்கைக்கோளை செலுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொள்வதில்லை.

இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தும்
பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுகின்றன.
அந்த வகையில் ரிசாட்-1 செயற்கைக்கோளை இந்திய அரசு தொலையுணர்வு செயற்கைக்கோள் என்றே வர்ணிக்கிற்து. குறிப்பாக பயிர் விளைச்சலை, அதுவும் நெல் விளைச்சலை, மதிப்பிட இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மீடியா இந்த செயற்கைக்கோளை வேவு செயற்கைக்கோள் என்றே வர்ணிக்கின்றன.

இந்தியா கடந்த பல ஆண்டுகளில் பல தொலையுணர்வு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தியுள்ளது. இவை அனைத்தும் பூமியை வடக்கு தெற்காகச் சுற்றுபவை. உயரே இப்போது இந்தியாவின் 11 தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறான திறன் கொண்ட காமிராக்களைப் பயன்ப்டுத்தி உயரே இருந்து படங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்விதப் படங்களை வெவ்வேறு பணிகளுக்கு இந்தியா பயன்படுத்தி வருகிறது.

கார்ட்டோசாட் 2 இந்தியாவின் தொலையுணர்வு
செயற்கைக்கோள்களில் ஒன்றாகும் (CARTOSAT-2).
இது அந்த செயற்கைக்கோள் எடுத்த படம்.
தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தும் வடக்கிலிருந்து தெற்காகப் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 90 நிமிஷம் ஆகும். இப்படி சுற்றுகையில் அந்த செயற்கைக்கோள் இந்தியாவைப் படம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த செயற்கைக்கோள் ஒரு தடவை சுற்றி முடித்து விட்டு அடுத்த ரவுண்ட் வருவதற்குள் அந்த செயற்கைக்கோளுக்கு கீழே அமைந்த நிலப் பிராந்தியம் இந்தியாவாக இருக்க வேண்டுமென்பதில்லை.

இந்தியாவின் ரிசோர்சாட் 1 செயற்கைக்கோள் (Resourcesat-1).
இதுவும் ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோளாகும்.
பூமி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதை மறந்து விடக்கூடாது. ஆகவே அந்த செயறகைக்கோள் மூன்றாவது அல்லது நான்காவது ரவுண்ட் சுற்றும் போது செயற்கைக்கோளின் கீழே இருப்பது ஆப்பிரிக்க கண்டமாகவும் இருக்கலாம். அட்லாண்டிக் கடலாகவும் இருக்கலாம். அமெரிக்காவாகவும் இருக்கலாம்.

வேறு விதமாகச் சொல்வதானால் இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் உலகில் எல்லா நாடுகள் மீதும் பறந்து படங்களை எடுக்கின்றன. பிற நாடுகள் கேட்டால் அவற்றின் மீதாகப் பறக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை இந்தியா உரிய கட்டண அடிப்படையில் அவற்றுக்கு விற்கிறது.

இப்படியாக இந்தியா இப்படங்களை விற்பனை செய்து வருவதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கிறது. தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் இந்தியா முன்னணியில் உள்ள நாடு என்றும் கூறலாம். இவ்விதம் உயரே இருந்து எடுக்கும் படங்களை நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த இயலும். எனினும் இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தையும் வேவு செயற்கைக்கோள்கள் என்று வர்ணிக்க முடியாது.

இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் சில குறைபாடுகள் உண்டு. பூமியில் பகலாக இருக்கும் பகுதிகளை மட்டுமே இவற்றினால் படம் எடுக்க இயலும். இரவில் படங்களை எடுக்க இயலாது. தவிர, மேக மூட்டமாக இருந்தால், மழை பெய்தால் தெளிவான படங்கள் கிடைக்காது.

ரிசாட் 2 செயற்கைக்கோள்.
ஆனால் செயற்கைக்கோளில் Synthetic Aperture Radar எனப்படும் மிக நவீன கருவியைப் பொருத்தினால் அது மைக்ரோ வேவ் எனப்படும் அலைகளைக் கீழே அனுப்பி எதிரொலித்து வரும் அலைகளைக் கொண்டு படம் எடுக்கும். இந்த் முறையின் மூலம் இரவிலும் பூமியின் பல்வேறு பகுதிகளை படம் எடுக்க முடியும். மேக மூட்டம் அல்லது பனி மூட்டம் இருந்தாலும் படம் எடுக்கலாம்

நிலத்தில் ராணுவ டாங்கிகள் அல்லது விமானங்கள் மீது இலை தழைகளைப் போட்டு மறைத்திருந்தாலும் அவற்றை ஊடுருவிப் படம் எடுக்க முடியும். சுருங்க்ச் சொன்னால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை அவசியமானால் பிற பகுதிகளை வானிலிருந்து கண்காணிக்கும் திறன் இந்த வகை செயற்கைக்கோளுக்கு உண்டு.

ரிசாட் 1 உய்ரே செலுத்தப்படுகிறது.
படம்: நன்றி ISRO
இவ்விதத் திறனுள்ள செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுள்ளது. ராடார் மூலம் படம் எடுப்பதால் இவ்வகை செயற்கைக்கோளுக்கு Radar Imaging Satellite என்று பெயர். இதன் சுருக்கமே Risat. இந்தியா உருவாக்கி வந்த இவ்வித ராடார் செயற்கைக்கோளுக்கு ரிசாட் 1 என்றும் பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் படகுகள் மூலம் மும்பையில் வந்திறங்கி கடற்க்ரை ஓரமாக அமைந்த தாஜ் ஓட்டலில் நுழைந்து பலரைக் கொன்றது நினைவிருக்கலாம். வானிலிருந்து இந்தியாவின் கரைகளைக் கண்காணிக்க ரிசாட் 1 செயற்கைக்கோளைத் தயாரித்து முடிக்க மேலும் சில காலம் ஆகும் என்பதால் இஸ்ரேலிடமிருந்து அவசர அடிப்படையில் ரிசாட்  வகை செயற்கைக்கோள் ஒன்று வாங்கப்பட்டு அது 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்திய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது.
இந்தியா சொந்தமாக உருவாக்கிய
ரிசாட் 1 செயற்கைகோள்
இந்தியா உருவாக்கும் கண்காணிப்பு செயற்கைக்கோளுக்கு ஏற்கெனவே ரிசாட் -1 என்று பெயர் வைக்கப்பட்ட காரணத்தால் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு செயறகைக்கோளுக்கு ரிசாட் -2 என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக ரிசாட் -2 முந்திக்கொள்ள ரிசாட்-1 இப்போது தான் உயரே செலுத்தப்படது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

ரிசாட் 1 செயற்கைக்கோள் மூலம் பல்வகையான அளவுகளில் படம் எடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் படம் எடுக்க முடியும். இந்தியாவின் வடமேற்கு எல்லைகளில் உள்ள பள்ளததாக்குகளில் ஆக்கிரமிப்பாளர் நடமாட்டம் இருந்தால் ரிசாட் 1 படங்கள் அதைக் காட்டிக் கொடுத்து விடும். இந்தியாவைச் சுற்றியுள்ள் கடல்களில் சந்தேகப்படும் வகையில் கப்பல்கள், படகுகள் நடமாடினால் கண்டுபிடித்து விடலாம். ஓரளவில் சப்மரீன்களின் நடமாட்டத்தையும் கண்டுபிடித்து விட முடியும்.

ரிசாட் வகை செயற்கைக்கோள்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டும் இருந்தால் போதாது. ஆகவே வருகிற நாட்களில் மேலும் பல ரிசாட் வகை செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவது நிச்சயம்.

வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவும் ரஷியாவும் நீண்ட காலமாக பல்வேறு வகையான செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த இரு நாடுகளிலும் ராணுவத் துறையினர் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே தனி செயற்கைக்கோள்கள் உள்ளன.

அமெரிக்காவில் இப்போது வேவு செயற்கைக்கோள்களை செலுத்தி அவற்றை இயக்குவதற்குத் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அந்த செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களை விற்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அப்படங்களை விற்கலாகாது என அமெரிக்க அரசு தடுக்க முடியும்.

இந்தியாவில் ராணுவத் துறையினர் தங்கள் பயன்பாட்டுக்கென தனி செயற்கைக்கோள்கள் வேண்டும் என கடந்த சில காலமாகக் கோரி வருகின்றனர்.

4 comments:

  1. எளிய நடையில் தெளிவாக எழுதப்பட்ட அழகிய பதிவு...பாராட்டுக்கள் சார்..

    நன்றி.

    ReplyDelete
  2. செயற்கைக்கோள் சுற்றுப்பாதை பற்றி தெளிவாக விளக்கயுல்லிர்கள் நன்றி மற்றும் பாராட்டுக்கள் அய்யா.அதில் பயன்படுத்தப்படும் C மற்றும் X அலைவரிசை பற்றி விளக்கவும்.கடந்த பதிவில் Asteroid பற்றி எழுதி இருந்திர்கள் நேரம் கிடைத்தால் Asteroid Mining பற்றி எழுதவும் தமிழில் அறிவியல் பதிவுகள் எழுதுபவர்கள் மிகவும் குறைவு உங்கள் இந்த தன்னலம் அற்ற சேவை அணைத்து தமிழர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.

    ReplyDelete
  3. Really great article.

    ReplyDelete
  4. miga nalla pathivu.
    -By ubaid

    ReplyDelete