Pages

Sep 13, 2012

கரப்பான் பூச்சிகளைக் கட்டி மேய்க்க விஞ்ஞானிகள் திட்டம்

கரப்பான் பூச்சிகளைக் கண்டால் யாருக்குமே ஆகாது. ஆனால் விஞ்ஞானிகள் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட முக்கிய பணிகளுக்கு கரப்பான் பூச்சிகளைப் பயன்ப்டுத்த விரும்புகின்றனர். ஆகவே கரப்பான் பூச்சிகளை வைத்து சில ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

 இரவில் நீங்கள் கரப்பான் பூச்சியைக் காண நேரிட்டு அதை அடித்துக் கொல்ல முயன்றால் அது மிக வேகமாக ஓடி எங்கேனும் இடுக்கில் ஒளிந்து கொள்ளும். எந்த சிறிய இடுக்கானாலும் அது புகுந்து கொள்ளும். கரப்பான் பூச்சியின் இத் திறன் விஞ்ஞானிகளுக்குத் தேவையில்லை. தாஙகள் விரும்புகின்ற இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் செல்லும்படி செய்வதே விஞ்ஞானிகளின் நோக்கம்.
கரப்பான் பூச்சியின் முதுகில் ஒரு ’மூட்டை’கரப்பான் பூச்சியின் சைஸ் தெரிவதற்காக அருகே ஒரு காசு வைக்கப்பட்டுள்ளது.
ரிமோட் க்ண்ட்ரோல் மூலம் பொம்மை காரை இயக்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது மாதிரியில் கரப்பான் பூச்சிகளை இயக்குவதற்கு அவர்கள் வழி செய்துள்ளனர். இதற்கென நிஜ கரப்பான் பூச்சிகளின் முதுகில் அவர்கள் நுண்ணிய கருவிகளைப் பொருத்தினர். இவை வயர்லஸ் மின்னணுக் கருவிகளாகும்.

கரப்பான் பூச்சிக்கு இரு ’ மீசைகள்’ இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை உணர் உறுப்புகள் (Antennae)   முன்புறத்தில் தடை ஏதேனும் உள்ளதா என்பதை கரப்பான் பூச்சி இந்த  உணர் உறுப்புகள் மூலம் அறிந்து கொள்ளும்.

இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன. பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும். நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்க முயலும் போது அது இந்த உணர் உறுப்புகளை வைத்துத் தான் கண்டு கொள்கிறது
இறக்கை இல்லாத மடகாஸ்கர் கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியின் முதுகில் பொருத்தியுள்ள மின்னணுக் கருவிகள் விஞ்ஞானிகள் விரும்புகின்ற வகையில் இந்த உணர் இரு உண்ர் உறுப்புகளும் செயல்படும்படி செய்கின்றன.

விஞ்ஞானிகள் கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் உள்ள உணர் கருவியைத் தூண்டி விட்ட போது கரப்பான் பூச்சியானது பின்புறத்திலிருந்து நிஜமாக ஏதோ தன்னைத் துரத்துவது போல நினைத்து முன்னே வேகமாக ஓடியது.விஞ்ஞானிகள் கரப்பான் பூச்சியின் முகப் பகுதியில் உள்ள உணர் கருவிகளைத் தூண்டி விட்ட போது அது வேறு புறம் திரும்பி விஞ்ஞானிகள் திட்ட்மிட்ட திசை நோக்கி ஓட முற்பட்டது.
க்ரப்பான் பூச்சியின் பின்புறமுள்ள் உனர் உறுப்புகள்
இவ்விதமாக விஞ்ஞானிகள் விரும்பிய பாதையில் கரப்பான் பூச்சி ஓடும்படி செய்ய முடிந்தது. கரப்பான் பூச்சிகளை இப்படி ஆட்டுவிக்கும் திட்டத்தின் நோக்கம் என்ன?

பூகம்பம் அல்லது ஏதோ விபத்து காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழும் போது இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கிக் கொள்கின்றனர். கனத்த கான்கிரீட் பாளங்களுக்கு அடியில் சிக்குகின்ற அவர்களால் வெளியே வர முடிவதில்லை. மீட்புப் ப்டையினரால் நெருங்க முடியாத இடங்களை எதிர்ப்பட நேரிடுகிறது.

இவ்விதமான நிலையில் முதுகில் கருவிகள் பொருத்தப்பட்ட கரப்பான் பூச்சிகள் உதவும் என்று கருதப்படுகிறது. இடிபாடுகளுக்கு அடியில் ஏதோ ஒரு மூலையில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்டால் அந்த இடங்களை நோக்கி க்ரப்பான் பூச்சிகள் செல்லும்படி செய்யலாம். கரப்பான் பூச்சி எந்த இடுக்கிலும் நுழைந்து செல்லும் என்பதால் இந்த வேலைக்கு அவை உகந்தவை.

 கரப்பான் பூச்சிகளின் முதுகில் உள்ள கருவிகளில் நுண்ணிய கேமராவும் உண்டு என்பதால் குறிப்பிட்ட இடத்தில்  யாரேனும் சிக்கிக் கொண்டிருக்கிருக்கிறார்களா என்று கணடறிய முடியும் ஏனெனில் இக்கேமரா அனுப்பும் ப்டங்களை மீட்புக் குழுவினர் வைததுள்ள கருவிகளில் காண முடியும்.. இடிபாடுகளுக்கு இடையே உள்ள இடுக்குகளில் நுழைந்து செல்லும் கரப்பான் பூச்சிகள் மூலம் கிடைக்கின்ற தகவலை வைத்து எந்த இடத்தில் மீட்பு வேலையை மேற்கொள்ள வேண்டும் என்று எளிதில் தீர்மானிக்க முடியும்.

கரப்பான் பூச்சிகளில் எவ்வளவோ வகைகள் உள்ளன. விஞ்ஞானிகள் தங்கள் திட்டத்துக்கு Madagascar Hissing cockroach எனப்படும் வகையான கரப்பான் பூச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்குப் பறக்கும் திறன் கிடையாது என்பது அதற்குக் காரணம். ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இவற்றுக்கு அப்பெயர். இவை சுவாச உறுப்புகள் வழியே காற்றை வெளியேற்றி புஸ் என்று சத்தம் எழுப்ப்க்கூடியவை.

இந்த வகை கரப்பான் பூச்சிகளை வைத்து நடத்தப்பட்ட பூர்வாங்க சோதனைகளில் இவற்றை வளைந்த பாதையில் செல்லும்படி செய்வதில் வெற்றி கிட்டியுள்ளது. கரப்பான் பூச்சி எப்படிச் செல்கிறது என்பதைக் காண கீழே கிளிக் செய்யவும்.




கரப்பான் பூச்சியின் முதுகில் உள்ள கருவிகளின் எடையை சற்று குறைத்தாக வேண்டும் என்று இச்சோதனைகளுக்குப் பிறகு விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.


அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாகாண பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளன. இடிபாடுகளின் அடியில் ஒருவர் சிக்கியுள்ளது போன்ற நிலைமையை உண்டாக்கி அவர் இருக்குமிட்த்துக்கு கரப்பான் பூச்சிகளை வெற்றிகரமாக அனுப்ப முடிகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டியுள்ளது.  இப்படியான சோதனைகளின் பிறகே ‘கரப்பான்பூச்சி படை ‘யை ஏற்படுத்த முடியும்.

விஞ்ஞானிகள்  நினைத்தால் மிக நுண்ணிய கருவிகளைக் கொண்டு செயற்கைக் கரப்பான் பூச்சிகளை உணடாக்கி விட முடியும். ஆனால் அதில் நிறைய சிக்கலை எதிர்ப்பட வேண்டியிருக்கும். செலவும் அதிகம். ஆகவே நிஜ கரப்பான் பூச்சிகளையே பயன்படுத்த முற்பட்டுள்ளனர்.


3 comments:

  1. Dear Sir,

    இவர்கள் முக்கியமாக எதிரிகளை வேவு பார்க தான் இந்த ஆய்வை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது sir..

    மனிதர்களை காப்பாற்ற என்பது சும்மா தான்..

    ReplyDelete
  2. Mallam tamilselvan,
    எல்லாவற்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியல்ல.வேவு பார்ப்பதற்கு என்றால் இப்படியான் ஆராய்ச்சி விஷ்யத்தை வெளியே விடாமல் செய்திருப்பார்கள்

    ReplyDelete
  3. அருமையான, அரிய தகவல்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete