Pages

Oct 18, 2012

39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். . . . .

பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரியர் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் கீழே குதித்த காட்சி உலகம் முழுவதிலும் டிவியில் காட்டப்பட்டது.

அவர் வானில் அவ்வளவு உயரத்திலிருந்து  கீழே குதித்தது சாதனை தான். ஆனால் அதை விட  அந்த அளவு உயரத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தார் என்பதே பெரிய  சாதனை   விசேஷமாகத்  தயாரிக்கப்பட்ட விண்வெளி உடையை அவர் அணிந்திருந்தார் என்பதால் பிழைத்தார்.
உயரே கிளம்ப பலூன் ஆயத்தமாகிறது
அப்படியின்றி பலூனுக்கு அடியில் இணைக்கப்பட்ட  பெரிய பிரம்புக் கூடையில் உட்கார்ந்தபடி சென்றிருந்தால் 39 கிலோ மீட்டர் உயரத்தை எட்டுவதற்கு முன்னரே அவர்  ‘ மேல் லோகத்துக்கு ‘ போய்ச் சேர்ந்திருப்பார். அது ஏன்?

1862 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளைஷர், ஹென்றி காக்ஸ்வெல் ஆகிய இருவரும்  ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் இணைக்கப்பட்ட வாய் திறந்த பெரிய பிரம்புக் கூடைக்குள் அமர்ந்தபடி  உயரே கிளம்பினர்.அப்போதெல்லாம் உயரே செல்வதற்கு இந்த முறையே  பின்பற்றப்பட்டது. 11 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும் இருவரும் கடும் குளிரால் நடுங்கினர். அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 11 டிகிரி.

அந்த இருவருக்கும் கைகால்கள் உணர்விழந்தன. கண் இருண்டது. நினைவு தடுமாற ஆரம்பித்தது. கிளைஷர் நினைவிழந்து விட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக உணர்ந்த காக்ஸ்வெல் கைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் பற்களால் ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார்.
39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க  ரெடி
உடனே பலூன் தொடர்ந்து  மேலே செல்வதற்குப் பதில் கீழே இறங்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக இருவரும் உயிர் பிழைத்தனர. அவர்கள் சென்ற உயரம் 11,887 மீட்டர்  காற்று மண்டல நிலைமைகள் பற்றி அவ்வளவாக அறியப்படாத காலத்தில் அவர்கள் இவ்வாறு உயரே சென்றனர்.

வானில் உயரே செல்லச் செல்ல காற்று அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். என்னதான் சுவாசித்தாலும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

ஒரு ஸ்பூன் மருந்தை அரைத் தம்ளர் தண்ணீருடன் சேர்த்து அருந்தினால் மருந்து உடலில் சேரும். அப்படியின்றி ஒரு ஸ்பூன் மருந்தை அண்டா தண்ணீரில் சேர்த்து அதிலிருந்து அரைத் தம்ளர் தண்ணீரை எடுத்து அருந்தினால் உடலில் மருந்து சேர வாய்ப்பே இல்லை.

அது மாதிரியில் அடர்த்தி குறைந்த காற்றை என்னதான் முழுக்க உள்ளே இழுத்து சுவாசித்தாலும் உடலுக்குக் கிடைக்கின்ற ஆக்சிஜன் மிக அற்ப அளவில் தான் இருக்கும்.  இதல்லாமல உயரே செல்லச் செல்ல பல ஆபத்துகள் உண்டு.
பலூனிலிருந்து கீழே குதிக்கிறார்
ஆகவே தான் நகரங்களுக்கு இடையில்,--- கண்டங்களுக்கு இடையில்   சுமார் 40,00 ஆயிரம் அடி (சுமார் 12 கிலோ மீட்டர் ) உயரத்தில் பறக்கின்ற பயணி விமானங்களில் பயணிகள் பிரச்சினையின்றி சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்..

தவிர, ஏதோ அவசர நிலைமை ஏற்பட்டால் பயணிகள் சுவாசிப்பதற்கென விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஆக்சிஜன் அளிக்கும் கருவி உள்ளது.  இந்த விமானங்கள் ஒரு வகையில் காற்று அடைத்த ’பலூன்களே ’ ’விமானத்தின் வெளிப்புற சுவர்களில் ஓட்டை விழுந்தால் விமானத்தில் உள்ள அனைவரும் வெளியே தூக்கி எறியப்படுவர்.

சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத நிலையில் சுமார் 9100 மீட்டர் உயரத்தில் ஒருவர் ஒரு நிமிஷ நேரம் இருந்தால்  நினைவு போய் விடும். 15 ஆயிரம் மீட்டர் உயரத்தில 15 வினாடியில் நினைவு இழப்பார்.
கீழ் நோக்கிப் பயணம்
வானில் 19.2 கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலே சென்றால் உடலில் உள்ள திரவங்கள் ஆவியாக ஆரம்பிக்கும். உடலில் உள்ள ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும். உடல் பயங்கரமாக வீங்கும். மொததத்தில் மரணம் நிச்சய்ம்.

ஆகவே தான் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு  அடுக்குகளாக அமைந்த விண்வெளிக் காப்பு உடையை (Space suit) அணிந்திருந்தவராக உயரே சென்றார்.

 அடுக்கடுக்கான இந்த ஆடைகள் அவருக்குத் தகுந்த காற்றழுத்தத்தை அளித்தன. வெளியே நிலவிய குளிர் தாக்காமல் தடுத்தன. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பு அளித்தன. இவ்விதமாக இந்த உடை அவரைப் பல வகைகளிலும் பாதுகாத்தது.

அவர் பலூன் மூலம் உயரே செல்லும் போதும்  பின்னர் கீழே குதிக்கும் போதும் அவரது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க அவரது உடலில் பல உணர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவரது உடையில் கம்ப்யூட்டர் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன.காமிராவும் பொருத்தப்பட்டிருந்தது.
பாராசூட் தரையைத் தொடுவதற்கு முன்
அவர் இவ்வித விசேஷ உடையை அணிந்திருந்தாலும் பலூன் உயரே சென்ற போது அவர்  பலூனின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கூட்டுக்குள் தான் இருந்தார். பலூன் உயரே கிளம்புவதற்கு முன்னர் ஒரு நிபுணர் கூறுகையில் பெலிக்ஸ் 16 வித ஆபத்துகளை எதிர்ப்படுபவராக உயரே செல்கிறார் என்றார்.

பெலிக்ஸ் பாம்கார்ட்னர்  பலூனில் உயரே கிளம்பு முன்னர்  விசேஷ உணவை அருந்த வேண்டியிருந்தது. வயிறு, குடல் என உடலில் எங்கும் வாயுவே இருக்கக்கூடாது என்பதற்காக விசேஷ உணவு. உயரே கிளம்பும் நேரம் வரை சுமார் 2 மணி நேரம் அவர் சுத்த ஆக்சிஜனை சுவாசிக்கும்படி செய்யப்பட்டார்.

ரத்தத்தில் சிறிது கூட நைடரஜன் வாயு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ( நாம் சாதாரணமாக சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் 78 சதவிகிதம் உள்ளது. ஆக்சிஜன் 21 சதவிகிதம் உள்ள்து)

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 9-30 மணிக்கு பெலிக்ஸ் பாம்கார்ட்னரை சுமந்தபடி ஹீலியம் வாயு நிரப்பப்ப்டட பலூன் உயரே கிளம்பியது.  ஹீலியம் வாயு காற்றை விட லேசானது என்பதால் அது மேலே செல்லத் தொடங்கியது.

பலூன் 1,28,000 அடி உயரத்தை ( 39 கிலோ மீட்டர் ) எட்டுவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. அந்த உய்ரத்தை எட்டியதும் பெலிக்ஸ் தனது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கீழ் நோக்கிக் குதித்தார்.
அப்பாடி, வந்தாச்சு
மிக உயரத்திலிருந்து குதிப்பதிலும் ஆபத்துகள் உண்டு. தொடர்ந்து கரணம் அடித்தப்டி விழக்கூடாது. அப்படி ஏற்பட்டால் நினைவு போய் விடும். கண்கள், மூளை, இதயம் ஆகியவை பாதிக்கப்படும்.

 சில வினாடிகள் கரணம் அடித்தபடி விழுந்து கொண்டிருந்த பெலிக்ஸ் நல்ல வேளையாக சுதாரித்துக் கொண்டார். முறைப்படி அதாவது தலை கீழ் நோக்கி இருக்க, கைகள் உடலோடு ஒட்டியிருக்க -- ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் குளத்தில் குதிக்கின்ற  நீச்சல் வீரர்களின்  பாணியில்--- கீழ் நோக்கி இறங்கலானார். அவர் நான்கு நிமிஷம் 20 வினாடி நேரம் வான் வழியே தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் கீழ் நோக்கி மணிக்கு 1340 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தார். இது ஒலி வேகத்தைக் காட்டிலும் அதிகம். இவ்வளவு வேகத்தை மனித உடல் தாங்குமா என்ற கேள்வி இருந்தது. நல்லவேளையாக பெலிக்ஸுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வானில் இந்த அளவு வேகத்தில் ’ப்யணம்’ செய்த முதல் நபர் அவர் தான்.

தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட் திட்டமிட்டபடி  விரிந்தது. பின்னர் அவர் பொத்தென்று தரையில் வந்து குதித்தார்.உயரே இருந்து கீழே வந்து சேர 10 நிமிஷங்களே ஆகின.

உலகில் வானில் மிக உயரத்திலிருந்து குதித்த சாதனை, அதி வேகமாகப் பாய்ந்த சாதனை. பலூன் மூலம் மிக உயரத்துக்குச் சென்ற சாதனை என அவர் மூன்று சாதனைகளைப் படைத்தவரானார்.

பெலிக்ஸ் 16 வயதிலேயே பாராசூட்டிலிருந்து குதிப்பதில் பயிற்சி பெற ஆரம்பித்தவர். மிக உயர்ந்த கட்டடங்கள் மிக உயர்ந்த பாலங்கள் ஆகியவற்றிலிருந்து குதித்து சாதனை படைத்தவர். அவருக்கு அதே வேலை.

.எனினும் மிக உயரத்திலிருந்து குதிக்க விசேஷ விண்வெளிக் காப்பு உடை அணிய வேண்டும் என்ற நிலைமை வந்த போது அதை அணிவதற்கு  பெலிக்ஸ் தயங்கினார். சிறு இடத்துக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அவரிடம் பயம் தோன்றியது. இதை Claustrophobia  என்று கூறுவர். மனோதத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்ற பிறகே அவருக்கு இந்த பயம் நீங்கியது.

அதன் பிறகு தான் அவர் வானில் 21 கிலோ மீட்டர், 29 கிலோ மீட்டர்  என  மிக உய்ரத்திலிருந்து குதிப்பதில் அனுபவம் பெற்றார். அதன் முத்தாய்ப்பாகவே இப்போது 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதித்துள்ளார்.

 ஒருவர் ஒரு சாதனை படைத்தால் அதை மிஞ்ச மற்றவர்கள்  முனைவது உண்டு. ஆனால் பெலிக்ஸின் சாதனையை மற்றவர் பின்பற்றுவது எளிதல்ல. ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனுக்கு ஆன செலவே இரண்டரை லட்சம் டாலர்.அவர் அணிந்திருந்த விசேஷ உடைக்கு ஆன செல்வும் மிக அதிகம். மொத்தத்தில் பல கோடி டாலர் செலவாகியிருக்கும். செலவு கணக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
சாதித்து விட்டேன், வெற்றி, வெற்றி
பெலிக்ஸ் ப்த்திரமாக உயரே சென்று விட்டுத் திரும்புவதற்கு அவருக்கு பக்கபலமாக 100  பேர் அடங்கிய குழு செயல்பட்டது. அதில் எஞ்சினியர்கள், மருத்துவ் நிபுணர்கள் முத்லானோர் அடங்குவர்.

இது பெலிக்ஸின் தனிப்பட்ட முயற்சி அல்ல.இது உலகின் பல நாடுகளிலும்  Red Bull  எனப்படும்  எனர்ஜி பானத்தை விற்கும் பிரும்மாண்டமான ஆஸ்திரிய  நிறுவனம் தனது பானத்துக்கு விளம்பரம் செய்வதற்காகக் கையாண்ட  ஏற்பாடே.

ஆனாலும் நாஸா விஞ்ஞானிகள் இதில் அக்கறை காட்டினர். உடலியல் தொடர்பான ஆராய்ச்சி நிபுணர்கள் பெலிக்ஸ் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களில் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.

பெலிக்ஸின் அனுப்வம் எதிர்காலத்தில் தகுந்த விண்வெளி உடையை உருவாக்கவும் அவசர நிலைமைகளில் விண்வெளி வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவற்கும் மேலும் சிறப்பான பலூன்களை உருவாக்கவும்  உதவும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது முற்றிலும் விளம்பர ஸ்டண்ட அல்ல.

காற்று மண்டல நிலைமைகளும் பெலிக்ஸ் போன்றோரின் அனுபவ்மும் காட்டுவது இது தான். அடிப்படையில் மனிதன் ஒரு நில வாழ் உயிரினம்.


23 comments:

  1. தங்கள் பதிவில் "சுமார் 40,00 ஆயிரம் (சுமார் 12 கிலோ மீட்டர் ) உயரத்தில் " .... அடி என்பது விடப்பட்டுள்ளது

    ReplyDelete
  2. Awesome in depth article..

    ReplyDelete
  3. Anonymous
    பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.விடப்பட்டு விட்ட ’அடி’ என்ற சொல் தகுந்த இடத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.

    ReplyDelete
  4. சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் புவி ஈர்ப்பு விசை காரணமாக கீழே விழுகிறோம். அப்படியானால் காற்றிலேயே மிதக்க எவ்வளவு உயரம் போக வேண்டும் அய்யா

    ReplyDelete
  5. Leslie
    நீங்கள் கருதுகின்றபடி காற்றில் மிதக்க வாய்ப்பு இல்லை.சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கின்ற செயற்கைக்கோள்களும் பூமியில் விழாமல் இருக்க, குறிப்பிட்ட வேகத்தில் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. பூமியில் வந்து விழாமல் இருக்க பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே சம ஈர்ப்புப் புள்ளி இருக்கிறது.அது பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டரில் உள்ளது. அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் பூமியில் அல்லது சந்திரனில் விழாமல் விண்வெளியில் -- அங்கு காற்று கிடையாது -- மிதந்து கொண்டிருக்கலாம்.

    ReplyDelete
  6. அந்த பலூன் என்ன ஆனது ? திரும்பி வந்ததா ? அல்லது மேலே சென்று விட்டதா ?

    ReplyDelete
  7. Angoor
    அந்த பலூன் அழிக்கப்பட்டு விட்டது.கீழிருந்து சிக்னலை அனுப்பி அதை அழியும்படி செய்து விட்ட்னர்

    ReplyDelete
  8. அற்புதமான பதிவு. சிறு பிள்ளைகளுக்கு விளக்குவதைப் போல இருந்தது. நன்றி.

    ReplyDelete
  9. will this balloon cause any problem if we have left it....

    ReplyDelete
  10. Anonymous
    மேலே போகிற எதுவும் கீழே வந்தாக வேண்டும். அந்த பலூன் தானாகக் கீழே இறங்குகையில் பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானத்தின் ஜெட் எஞ்சினால் உள்ளே உறிஞ்சப்பட்டால் விமானத்துக்கு ஆபத்து. இப்படியான காரணததால் தான் பலூன் அழிக்கப்பட்டது.

    ReplyDelete
  11. Excellent Sir. Very informative. I am regular reader of your blog. The main thing is: You are explanation is very simple and easily understandable

    ReplyDelete
  12. Normally the flight how far from the earth they can go?

    ReplyDelete
  13. So Inside flight, Do they fill oxygen for breathing? or Where do we get the oxgen from?

    ReplyDelete
  14. Suri
    நகரங்கள், நாடுகள் இடையே பறக்கும் விமானங்கள் பொதுவில் 40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அந்த உயரத்தில் மழை, புயல் ஆகியவற்றை எதிர்ப்படும் பிரச்சினை இராது. தவிர, அந்த உய்ரத்தில் பறப்பதால் எரிபொருள் செலவு குறைவாக இருக்கும்
    .
    விமானத்துக்குள் இருக்கின்ற காற்றழுத்தம் வெளியே இருப்பதை விட அதிகமாக இருக்கும். ஆனால் விமானத்துக்குள் இருக்கின்ற காற்றழுத்தம் த்ரை மட்டத்தில் இருக்கின்ற அளவுக்கு இராது. சாதரரணமாக 8000 அடி உய்ரமுள்ள மலைப் பகுதியில் இருக்கின்ற அளவுக்கு காற்றழுத்தம் விமானத்துக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.விமானத்துக்குள் இருப்பது சாதாரணக் காற்று தான். ஆகவே அந்த அளவுக்கு அக்காற்றில் ஆக்சிஜன் இருக்கும். ஆனால் த்ரை மட்டத்தில் இருக்கின்ற அளவுக்கு இருக்காது
    .
    போர் விமானங்கள் 80,000 அடி உயரம் வரை செல்லக்கூடிய்வை. ஆனால் தங்களது போர் விமானம் எந்த உயரம் வரை செல்ல்க்கூடியவை என்பதை எந்த நாடும் வெளியே சொல்வதில்லை. போர் விமானத்தை ஓட்டுகின்ற விமானி தகுந்த காற்றழுத்தத்தில் சுவாசிப்பதற்கு உதவியாக விசேஷ முக மூடி அணிந்திருப்பார்

    ReplyDelete
  15. சார்!
    இந்த ஒலி வேகம் ரொம்ப குழப்புதே! ஒளிவேகம் 2 லட்சம் கிலோமீட்டர்னு படிச்சேன்! அதை விட அதிகமா யாராலும் போக முடியாது! ஆனா நீங்க 1930கிமீ ஒளி வேகம்னு சொல்றீங்க! அப்ப ஒலி ஒளி வேகம் ரெண்டும் வேறயா!

    ReplyDelete
  16. ராஜரத்தினம்
    ஒளி வேகம் மிக பயங்கரமானது. ஒலி வேகம் அப்படியல்ல.ஒளி விண்வெளியிலும் செல்லும். காற்று இல்லாத இடத்தில் ஒலி செல்லாது. இருவர் விண்வெளியில் மிதப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்காது.

    ஒளியின் வேகம் மணிக்கு சுமார் 108 கோடி கிலோ மீட்டர்

    ஒலியின் வேகம் மணிக்கு சுமார் 1230 கிலோ மீட்டர்.

    இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் தோன்றுகின்றன ஆனால் மின்னல் தோன்றி சில வினாடிகள் கழித்தே இடி முழக்கம் கேட்கிற்து. காரணம் உங்களுக்குப் புரியும்

    ReplyDelete
  17. sir, in your first paragraph itself you are saying that this is lively telecasted for all the people around world...But, unfortunately poeple like me we were not knowing this earlier that an adventure like this is going to happen..Is there any special Channel or media which tells us this in advance and telecast us lively...pls share it if you know. As usual, your explanation was as good as the record :) thanks for this...

    ReplyDelete
  18. Sreenivasan
    அப்படி சேனல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பெலிக்ஸ் கீழே குதித்த காட்சி யூடியூப்பில் இருக்கலாம்.

    ReplyDelete
  19. மீண்டும் ஒரு சந்தேகம் . மேலே சுமார் பத்து பேர் சிறிய விமானத்தில் இருந்து குதித்து வட்டமாக பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் . அது எவ்வளவு உயரம் ? அது எப்படி சாத்தியம் ? அவர்கள் லேசில் கீழே வருவதில்லையே ஏன் ?

    ReplyDelete
  20. Leslie
    இதெல்லாம் சுமார் ஒரு கிலோ மீட்டர் அல்லது மூன்று கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கின்ற சாகச விளையாட்டு. இதற்கு மிகுந்த பயிற்சி தேவை. விமாந்த்திலிருந்து குதித்த் சில வினாடிகளுக்கு அவர்கள் அந்தரத்தில் மிதந்தவர்களாகக் கீழே இறங்கிக் கொண்டிருப்பர். அப்போது கைகோர்த்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட உயரம் வரை கீழே இறங்கியதும் பாராசூட் விரியும். மெல்லத் தரை இறங்குவர்.எல்லோராலும் இதில் ஈடுபட முடியாது. இதற்குக் கட்டுப்பாடுகளும் உள்ளன. அபூர்வமாக உயிரிழப்பும் ஏற்பட்டது உண்டு.

    ReplyDelete
  21. எளிமையான விளக்கம்.அருமை அய்யா.

    ReplyDelete
  22. அருமையான எளிமையான விளக்கம். நன்றி ஐயா!

    ReplyDelete
  23. ஐயா வணக்கம், பூமியின் சுழற்சியில் விமானத்தின் வேகம் மாறுபடும்

    ReplyDelete