Pages

Jun 12, 2015

அதென்ன வெள்ளைப் புள்ளி? நாஸா போடும் புதிர்

நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் விண்கலம் செரீஸ் (Ceres) என்னும் குட்டிக் கோளை   தொலைவிலிருந்து படம் எடுத்த போது இரண்டு வெள்ளைப் புள்ளிகள் தெரிந்தன. விண்கலம் மேலும் நெருங்கிய போது குட்டிக் கோளில் இரண்டல்ல, ஏராளமான வெள்ளைப் புள்ளிகள் தெரியலாயின. இவை என்ன என்பது ஒரு புதிராக உள்ளது.
செரீஸ் குட்டிக் கோள். சுமார்  13,600 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து
 2015 மே முதல் வாரம் எடுக்கப்பட்ட படம். இரு வெள்ளைப் புள்ளிகளை கவனிக்கவும்.
அதே வெள்ளிப் புள்ளிகள். 4,400 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து
2015 ஜூன் 10 ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.
நாஸா புதிதாக எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு இவை என்னவாக இருக்கலாம் என்று நீங்கள் ஊகித்துச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளது.

இவை செரீஸ் குட்டிக் கோளில் உள்ள ஆழமான பள்ளங்களில் நீண்டகாலமாக இருந்து வரும் ஐஸ் கட்டிகளா?    ஒரு வேளை இவை உப்புப் படிவுகளா? எரிமலைகளின் வாய்களா? வெந்நீர் ஊற்றுகளா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றா?

மிக உயரத்திலிருந்து செங்குத்தாகக் கீழே பார்க்கும் போது இவை சூரிய ஒளி பட்டு இந்த அளவில் தான் தெரியும்.
ஒப்புநோக்கும் படம்.  வலது புறம் பூமி.
இடது புறம் மேலே சந்திரன், கீழே செரீஸ்
டான் விண்கலம் அந்த குட்டிக் கோளை மேலும் நெருங்கி ஆராய இருக்கிறது. அப்போது ஏதாவது துப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.

செரீஸ் குட்டிக் கோள் அஸ்டிராய்ட்  வகையைச் சேர்ந்தது. சூரியனிலிருந்து சுமார் 41 கோடி கிலோ மீட்டரில் அமைந்தபடி அது (பூமியைப் போலவே) சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் நாலரை ஆண்டுகள் ஆகின்றன.

பெரும்பாலான அஸ்டிராய்டுகள் ஒழுங்கற்ற உருவம் கொண்டவையாக இருக்கும். ஆனால் செரீஸ் அப்படியின்றி உருண்டையாக உள்ளது. அதன் குறுக்களவு சுமார் 960 கிலோ மீட்டர் (பூமி சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர்) செரீஸ் சந்திரனை விடவும் சிறியது.

இத்தாலிய விஞ்ஞானி பியாஸி  1801 ஆம் ஆண்டில் செரீஸ் குட்டிக் கோளைக் கண்டுபிடித்தார். அப்போதிலிருந்து தொடர்ந்து அது டெலஸ்கோப்புகள் மூலம் ஆராயப்பட்டு வருகிறது.

நாஸா 2007 ஆம் ஆண்டில் டான் விண்கலத்தை செலுத்தியது. அது முதலில் வெஸ்டா (Vesta)  என்னும்  அஸ்டிராய்டை நெருங்கி ஆராய்ந்தது. சுமார் 14 மாத காலம் வெஸ்டாவை சுற்றிச் சுற்றி வந்து பல படங்களையும் தகவல்களையும் அனுப்பியது.
டான் விண்கலம். அத்துடன் வெஸ்டா. இது ஓவியர்
தீட்டிய படம்.
பின்னர் டான் விண்கலம் அங்கிருந்து கிளம்பி செரீஸ் குட்டிக் கோளை அடைந்து இப்போது அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. முதலில் டான் விண்கலம் சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி சுற்றி வந்தது. அடுத்து இப்போது 4,400 கிலோ மீட்டர உயரத்தில் இருந்தபடி சுற்றுகிறது.

 பிறகு 1470 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபடி ஆராயும். இறுதியில் 375 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்க ஆரம்பிக்கும். இவ்விதம் அது செரீஸை மிகக் குறைந்த உயரத்தில் இருந்தபடி ஆராயும் போது வெள்ளைப் புள்ளிகள் பற்றிய மர்மம் துலங்கி விடலாம் என்று கருதப்படுகிறது.


7 comments:

  1. விண்வெளி என்றும் வியப்புக்குரியது!

    ReplyDelete
  2. // ஐஸ் கட்டிகளா? ஒரு வேளை இவை உப்புப் படிவுகளா? எரிமலைகளின் வாய்களா? வெந்நீர் ஊற்றுகளா? //

    ஐஸ் கட்டிகளில் சூரிய ஒளிபட்டு அவ்வளவு தூரத்தில் இவ்வளவு பிரகாசமாக மின்னுமா? டான் விண்கலத்தில் ஸ்பெக்ட்ரோமீட்டர்கர் இல்லையா? இருப்பின், அதை வைத்து புள்ளிகளில் உள்ள ரசாயனப்பொருட்களை அறியலாமே?

    எரிமலையோ வேகும் ரசாயனக்குழம்போ மட்டுமே இப்படி ஒரு ஒளியை வீசமுடியும் என்பது என் அனுமானம். Reflection (பிரதிபிம்பம்? எதிரொளி?) இவ்வளவு பிரகாசமாக இருக்காது என்கிறேன்.

    ReplyDelete
  3. thanks for good information sir

    ReplyDelete
  4. சார், வெஸ்டாவில் என்ன புதிதாகக் கண்டுபிடித்தார்கள்?
    சரவணன்

    ReplyDelete
  5. சரவணன்
    வெஸ்டா அஸ்டிராய்டின் மையப் பகுதி இரும்பினால் ஆனது என்று கண்டுபிடித்தனர்.அந்த அஸ்டிராய்டில் எவரெஸ்டை விட உயரமான சிகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
    வெஸ்டாவில் பல பிரும்மாண்டமான பள்ளங்கள் இருப்பது படமாக்கப்பட்டது
    . வெஸ்டா எவ்விதப் பொருட்களால் ஆனது என்பதும் கண்டறியப்பட்டது,அறிவியல் ரீதியில் நுட்பமான பல விஷயங்களும் கண்டறியப்பட்டன

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி ஐயா,

    வெஸ்டாவைப்போல் இதனது மைய்யப்பகுதியும் இரும்பினால் ஆனதா?

    அவ்வாறெனில் மையப்பகுதில் இருந்து வெளித்தள்ளப்படும் இரும்புக் குழம்பு (imagine LAVA) பாரிய படிமங்களாகி அவற்றில் சூரியஒளி பட்டுத் தெறிக்கும் போதே இந்த பிரகாசம் தோன்றலாம் என நினைக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  7. A . Carunairuban
    பதிலளிக்கத் தாமதம் ஆனதற்கு மன்னிக்கவும். அந்த வெள்ளைப் புள்ளிகள் ஒளியைப் பிரதிபலிக்கின்றவை. சுயமான ஒளியைக் கொண்டவை அல்ல என்று நிபுணர்கள் இப்போது கருத்து தெரிவித்துள்ளனர். வருகிற நாட்களில் இந்த மர்மம் வெளிப்பட்டு விடும்.

    ReplyDelete