![]() |
| எல்லன் ஸ்டோபன் |
சூரிய மண்டல்த்தில் செவ்வாய் கிரகத்திலும் வியாழன், சனி போன்ற கிரகங்களைச் சுற்றுகின்ற துணைக்கோள்களிலும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற பூமி மாதிரி கிரகங்களிலும் உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளதா என்று தேடுவதில் நாஸா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உயிரின வாழ்க்கைக்கு தண்ணீர் மிக முக்கியம். அண்மைக் காலமாக நடத்தப்பட்ட ஆராய்வுகளில் வியாழன் கிரகத்தைச் சுற்றும் கானிமீட் எனப்படும் துணைக்கோளில் உறைந்த தரைப் பகுதிக்கு அடியில் சுமார் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் கடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களில் இன்னொன்றான யூரோப்பாவிலும் சனி கிரகத்தைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளிலும் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது.
செவ்வாய் கிரகத்திலும் சரி, உறைந்து போன பனிக்கட்டி வடிவில் நிறையவே தண்ணீர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வானில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற கிரகங்கள் மேலும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வியாழன் மாதிரியில் உள்ள பெரிய கிரகங்கள் நிறையவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி மாதிரியான கிரகங்கள் தான் எளிதில் சிக்குவதாக இல்லை.
விண்வெளியில் எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிவோம். மேலும் புதிய கிரகங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் அறிவோம் என்றும் எல்லன் ஸ்டோபன் கூறினார். விண்வெளியில் இதுவரை உயிரின வாய்ப்புள்ள 5000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
