![]() |
| ஜூன் 23 ஆம் தேதி இரவு 7-30 மணி வாக்கில் மேற்கு வானில் வியாழனும் வெள்ளியும் இவ்விதமாகத் தெரியும். வியாழன் சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.(Stellarium/NR) |
வானில் வெறும் கண்ணால் பார்த்தால் அதிகப் பிரகாசத்துடன் தெரிவது வெள்ளி கிரகமே. வியாழன் அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.
வருகிற 23 ஆம் தேதிக்குப் பிறகு இந்த இரு கிரகங்களும் மேலும் நெருக்கமாகத் தெரியும். ஜூன் 29 ஆம் தேதியன்றும் ஜூன் 30 ஆம் தேதியன்றும் அனேகமாக இந்த இரண்டும் சேர்ந்து ஒரே புள்ளியாகத் தெரியும். அதாவது வெள்ளி கிரகத்துக்கு நேர் பின்னால் வியாழன் அமைந்ததாகி விடும். இது ஒருவரின் பின்னால் இன்னொருவர் நிற்பது போன்றது.
ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டும் தனித்தனியே தெரிய ஆரம்பிக்கும்.. அதுவரை வியாழன் மேலேயும் வெள்ளி கீழேயும் இருந்த நிலைமை மாறி வெள்ளி கிரகம் சற்று மேலேயும் வியாழன் சற்று கீழாகவும் தெரியும். வானில் வெள்ளி கிரகம் தனது சுற்றுப்பாதையில் வேகமாக நகருவது இதற்கு முக்கிய காரணமாகும்.
![]() |
| மேற்கு வானில் ஜூலை முதல் வாரத்தில் சுமார் 7-30 மணி வாக்கில் வியாழனும் வெள்ளியும் இவ்விதம் தெரியும். வெள்ளி கிரகம் சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.( Stellarium/NR) |
சூரியனை வியாழன் ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ராசியிலும் வியாழன் ஓராண்டு இருக்கும். வியாழன் இப்படி வானில் நகர்ந்து வருவதையே குருப் பெயர்ச்சி (வியாழன் கிரகத்துக்கு குரு என்ற பெயரும் உண்டு) என்கிறார்கள்.
வெள்ளியை விட வியாழன் கிரகம் குறுக்களவில் 11 மடங்கு பெரியது. எனினும் வெள்ளி ஒப்புநோக்குகையில் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக பிரகாசத்துடன் தெரிகிறது.
வியாழன், வெள்ளி ஆகிய இந்த இரண்டு கிரகங்களுக்கும் சுய ஒளி கிடையாது. அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் அவை நமக்குத் தெரிகின்றன.


