Pages

Feb 2, 2012

அண்டார்டிகாவில் 8 மாத ’சிறைவாசம்’

அண்டார்டிகாவில் உள்ள அந்த இடத்தின் பெயர் கன்கார்டியா. அது ஓர் ஆராய்ச்சிக்கூடம். அண்டார்டிகாவில் இந்தியா உட்பட பல நாடுகளின் ஆராய்ச்சிக்கூடங்கள் உள்ளன என்றாலும் பெரும்பாலானவை இக்கண்டத்தின் கரை ஓரமாக அமைந்துள்ளன.

பகலாக இருக்கும் காலத்தில் கன்கார்டியா ஆராய்ச்சிக்கூடம்
இதற்கு மாறாக பிரான்ஸ்-இத்தாலி ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து அமைத்துள்ள கன்கார்டியா ஆராய்ச்சிக்கூடம்(Concordia) உள்ளே தள்ளி அமைந்துள்ளது. பிற ஆராய்ச்சிகூடங்களிலிருந்து இது சுமார் 1000 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி அமைந்துள்ளது. தவிர, இது 3200 மீட்டர் உயரமுள்ள இடத்தில் அமைந்துள்ளது. ஆகவே கோடை என சொல்லப்படும் காலத்தில் இங்கு குளிர் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ். குளிர் காலத்தில் மைனஸ் 84 டிகிரி செல்சியஸ்.

இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்பவர் பிப்ரவரி கடைசிக்குள் போய்ச் சேர்ந்தாக வேண்டும். ஏனெனில் மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் வரை அந்த இடத்துக்கு யாரும் செல்ல முடியாது. அங்கிருந்து வெளியே வரவும் முடியாது. கடும் குளிர் காரணமாகப் பயணம் சாத்தியமில்லை. ஆகவே அந்த எட்டு மாத காலம் ’சிறைவாசம்‘ போன்றதே. தவிர, அந்த எட்டு மாதங்களில் நான்கு மாதம் தொடர்ந்து ஓயாத இரவு.

காரிருளில் கன்கார்டியா
இந்த ஆராய்ச்சிக்கூடத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 14 நிபுணர்கள் தங்கிப் பணியாற்றுகின்றனர். அடைபட்டுக் கிடக்கின்ற எட்டு மாத காலத்தில் இவர்களின் மனப்போக்கு எப்படி இருக்கும், உடல்நிலை எந்த அளவில் இருக்கும், இவர்களின் தூக்க முறை, செயல்படும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து பதிவு செய்வதற்கென இப்போது பிரிட்டிஷ் டாக்டர் போய்ச் சேர்ந்துள்ளார்.

டாக்டரின் பெயர் அலெக்சாண்டர் குமார். விபரீதமான பருவ நிலைமைகளில் வசிப்பவர்களை ஆராய்வதில் அவர் நல்ல அனுபவம் பெற்றவர். அவரும் கன்கார்டியா ஆராய்ச்சிக்கூடத்தை ‘சிறைச்சாலை’ என்றே வருணித்தார். டாக்டர் குமார் இங்கு ஓராண்டுக் காலம் தங்கியிருப்பார்.

இரவாக உள்ள காலத்தில் வெளியே வந்தால் அணியும் உடை
கன்கார்டியா நல்ல உயரத்தில் அமைந்துள்ளதால் இங்கு காற்று அழுத்தம் மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கும். ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வெளியே வந்து பணியாற்றுவதானால் கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியாக வேண்டும்.

ஆராய்ச்சிக்கூடத்துடன் தொடர்பு கொள்வதற்கென ரேடியோ கருவி கையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்று பாட்டரியை உடைக்குள் பத்திரமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். விசேஷ டார்ச் லைட், மற்றும் மாற்று பாட்டரி இருக்க வேண்டும். விண்வெளி வீரர் அணிவது போன்று சுவாசக் கருவியுடன் கூடிய விசேஷ முகமூடி அணிந்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விசேஷ உடையை அணிந்திருக்க வேண்டும்.

கன்கார்டியாவுக்கு வெளியே ஒரு விஞ்ஞானி
ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானிகள் ஒரே இருளாக இருக்கும் குளிர் காலத்தில் வெளியே வந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வட்டாரத்துக்குள்ளாக சில பணிகளைப் புரிவர். பனிக்கட்டி சாம்பிள்களை சேகரிப்பதும் அதில் அடங்கும். அந்த கும்மிருட்டில் வழிதவறி காணாமல் போனால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆகவே தான் கடும் கட்டுப்பாடுகள்.

இந்த ஆராய்ச்சிக்கூடத்தைச் சுற்றி உள்ள நிலைமைகள் செவ்வாய் கிரகத்தில் இருக்கக்கூடிய நிலைமைகளை ஒத்தவை என்று கூறப்படுகிறது. ஆகவே தான் மிகப் பொருத்தமாக கன்கார்டியா குறித்த சில பணிகள் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கீழ் நடைபெறுகின்றன.

கன்கார்டியாவிலிருந்து பார்த்தால்
 வானில் ஆகாய கங்கை (MilkyWay)
கன்கார்டியாவில் குறைந்தது நான்கு மாதம் தொடர்ந்து இரவாக இருப்பதால் இங்கு வான்வியல் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. உலகில் பிற இடங்களில் பகல் வேளை ஆராய்ச்சியில் குறுக்கிடும். இங்கு அந்தப் பிரச்சினை இல்லை. தவிர, இங்கு காற்று மண்டலத்தில் நுண்ணிய தூசு இராது என்பதால் வான் காட்சிகளை நன்கு படமாக்க முடியும். உதாரணமாக ஆகாய கங்கையை (Milky Way) வானில் தெளிவாகக் காண முடியும்.

14 comments:

  1. நல்ல பதிவு.

    இங்கே எங்கள் நாட்டுக்கான ஆராய்ச்சிக்கூடம் ஸ்காட் பேஸ் (McMurdo Station, Scott Base) என்ற இடத்தில் இருக்கு.

    அங்கே பொருட்கள் சப்ளை செய்ய வருசத்தில் ஆறேழு முறை (கோடையில் மட்டும்) நம்ம ஊரில் (Christchurch)இருந்துதான் தனி விமானம் போகும் அதற்கான தனிப்பகுதி எங்கூர் ஏர்ப்போர்ட்லேயே இருக்கு.

    ReplyDelete
  2. Useful information. First time I read your blog , I learned lot of things.Thank you Sir.
    -Sasikumar

    ReplyDelete
  3. சிறைச்சாலை என்றாலும் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு தயாராவதற்கே சில ஆண்டுகள் தேவையாக இருக்கும்.

    ReplyDelete
  4. மிகவும் ரிஸ்க்கான வேலை தான். கோடையில் அங்கே போக என்ன போக்குவரத்து சாதனம் உபயோகிக்கப்படுகிறது?

    ReplyDelete
  5. SIV
    ஒரு வழி ஆஸ்திரேலியாவுக்குத் தெற்கே டாஸ்மேனியா தீவில் உள்ள ஹோபார்ட் நகருக்குச் சென்று அங்கிருந்து விசேஷக் கப்பல் மூலம் அண்டார்டிகாவின் கரை ஓரமுள்ள நகருக்குச் செல்வது. பின்னர் அங்கிருந்து விமான மூலம் 5 மணி நேரம் பயணம் செய்தால் கன்கார்டியாவைச் சென்றடையலாம்.கோடை காலத்தில் மட்டுமே இது சாத்தியம்.

    ReplyDelete
  6. பணம் கொடுப்பவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது போல இங்கும் சுற்றுலா ஆரம்பிக்கலாம். ரிஸ்க் மற்றும் செலவு குறைவுதானே.

    சரவணன்

    ReplyDelete
  7. சரவணன்
    கடந்த பல ஆண்டுகளாக அண்டார்டிக் பிராந்தியத்துக்கு ப்ல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.இவர்களைக் கப்பல் மூலமும் விமான மூலமும் அழைத்துச் செல்வதில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.எனினும் இவ்வித சுற்றுலாவினால் அண்டார்டிகாவின் தூய்மை கெட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளப்படுகிறது.சுற்றுலாப் பயணிகள் மீது பல க்ட்டுப்பாடுகள் உள்ளன.

    ReplyDelete
  8. ஆகாய கங்கையை கடலுக்கு அடியில் காண முடியுமா? எவ்வாறு அய்யா? மேலே தண்ணீர் இருக்குமே. அதையும் தாண்டி நம்மால் வானத்தை பார்க்க முடியுமா? மேலே பார்த்தல் இருட்டா தானே இருக்கும். வெறும் கண்களால் பார்க்க முடியுமா? சற்று விளக்கமாக கூறுங்கள் அய்யா. மன்னிக்கவும் உங்கள் பதிவை இபோளுதுதான் படிக்கறேன். ஆனால் இனி தொடர்ந்து படிக்க போகிறேன்

    ReplyDelete
  9. suki
    அண்டார்டிகா கெட்டியாகிப் போன பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். அங்கு ஆராய்ச்சிகூடங்கள் உள்ளன. நடமாடுவதற்கான விசேஷ வாகனங்களும் உள்ளன. ஆகவே கடலுக்கு அடியிலிருந்து பார்க்கும் பிரச்சினைக்கே இடமில்லை.

    ReplyDelete
  10. sir appadina continiousa 8 months pagal ah irukkuma...?

    ReplyDelete
  11. Anonymous
    அண்டார்டிகாவில் செப்டம்பர் மூன்றாம் வாரம் தொடங்கி மார்ச் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து பகலாக இருக்கும். மீதி ஆறு மாதம் தொடர்ந்து இரவாக இருக்கும்.

    ReplyDelete
  12. சூரியன் அஸ்தமனத்தின் போது அண்டார்டிக்கவில் என்ன நிறமாக தெரியும்

    ReplyDelete