Pages

Feb 12, 2012

செவ்வாயிலிருந்து வந்து விழுந்த கல்

வானிலிருந்து ஒரு கல் வந்து விழுகிறது. அது செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து விழுந்த கல் தானா என்று கண்டுபிடிக்க வழி இருக்கிறது.

இந்த விண்கல்லுக்குள் மிக நுண்ணிய கண்ணாடி உருண்டை மாதிரியில் துணுக்குகள் இருக்கும். இந்த நுண்ணிய உருண்டைகளுக்குள் நுண்ணிய அளவில் வாயுக்கள் இருக்கும். மேற்கூறிய துணுக்குகளை சூடு படுத்தினால் வாயுக்கள் வெளிப்படும். மிக நுட்பமான கருவிகளை வைத்து ஆராய்ந்தால் அந்த வாயுக்களை வைத்து கல் செவ்வாயிலிருந்து வந்ததா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பூமியின் காற்று மண்டலத்தில் அடங்கிய வாயுக்களின் கல்வை ஒரு மாதிரியாக இருக்கும். செவ்வாய் காற்றின் வாயுக்கலவை வேறு மாதிரியாக இருக்கும். வெள்ளி கிரகத்தில் அடங்கிய காற்றின் வாயுக்கலவை இன்னொரு விதமாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்டுள்ள பல ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயின் காற்றை ஆராய்ந்து விரிவான தகவல்களை அனுப்பியுள்ளன. ஆகவே பூமியில் வந்து விழுந்த விண்கல்லில் அடங்கிய காற்று சாம்பிளை ஆராயும் போது அக்கல் செவ்வாயிலிருந்து வந்ததுதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் மொராக்கோவில்
 வந்து விழுந்த செவ்வாய் கல்
கடந்த ஆண்டு ஜூலையில் மொராக்கோ(Morocco) நாட்டில் வந்து விழுந்த விண்கற்கள் செவ்வாயிலிருந்து தான் வந்தவை என்பதை சில வாரங்களுக்கு முன்னர் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விண்வெளியிலிருந்து வந்து விழும் கற்கள் விண்கற்கள் (Meteorites) என்று குறிப்பிடப்படுகின்றன. நம் கண் முன்பாக வானிலிருந்து விண்கல் வந்து விழுவது என்பது மிக அபூர்வம்.  செவ்வாய் கிரகத்திலிருந்து விண்கல் மொராக்கோவில் வந்து விழுந்த இடம் பொதுவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்றாலும் அது விழுந்ததை அந்த வட்டாரத்தில் இருக்க நேர்ந்த நாடோடிகள் நேரில் கண்டனர்.

அது விழுந்த போது இரவு இரண்டு மணி. அதை நேரில் கண்டவர்கள் சொன்னது “வானில் முதலில் மஞ்சள் நிறத்தில் பிரகாசமான ஒளி தெரிந்தது. பிறகு அது பச்சை நிற ஒளியாக மாறியது. அந்த வட்டாரம் முழுவதும் ஒரே வெளிச்சமாகியது. வானிலிருந்து இறங்கிய பொருள் இரண்டாக உடைந்தது. அப்போது பயங்கர இடி முழக்கம் போன்ற சத்தம் ஏற்பட்டது”.

மொராக்கோவில் விழுந்த விண்கல்லின்
ஒரு துண்டு (படம்: Laurence Garvie)
அந்த வட்டாரத்தில் விழுந்த விண்கற்களின் மொத்த எடை ஏழு கிலோ. அவற்றில் பெரியதாக இருந்த கல்லின் எடை ஒரு கிலோ. அவை ஜூலையில் வந்து விழுந்தன என்றாலும் டிசம்பரில் தான் அங்கிருந்து சேகரிக்கப்பட்டன.

விண்கற்களுக்கு விலை உண்டு. உலகில் பல செல்வந்தர்களும் நல்ல விலை கொடுத்து இவற்றை வாங்கி சேகரிக்கின்றனர். இவற்றை வாங்கி விற்கின்ற டீலர்களும் பலர் உள்ளனர். சாதாரண விண்கல்லுக்கே நல்ல விலை உண்டு.

செவ்வாயிலிருந்து வந்து விழுந்த விண்கல் என்றால் ரேட் அதிகம். தங்கம் போல, இவை ஒரு கிராம் இவ்வளவு டாலர் என்ற விலையில் விற்கப்படுகின்றன. செவ்வாயிலிருந்து மொராக்கோவில் வந்து விழுந்த விண்கல்லுக்கு ஒரு கிராம் 500 டாலர் முதல் 1000 டாலர் வீதம் விலை (ரூ24,500 முதல் 49,000 வரை) கொடுக்கப் பலரும் தயாராக இருந்தனர் (2012 பிப்ரவரி 11 ஆம் தேதியன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 2629 ஆக இருந்தது).

இந்தியாவில் வந்து விழுந்த
ஷெர்கோட்டி விண்கல்
செவ்வாய் கற்களின் விலை மிக அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை பல ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளன என்றாலும் செவ்வாய் கிரகத்திலிருந்து இதுவரை சாம்பிளாக கற்கள் எதுவும் எடுத்து வரப்படவில்லை. செவ்வாய்க்கு இதுவரை மனிதன் சென்றதில்லை. மனிதனை அனுப்பி அங்கிருந்து கற்களை எடுத்து வருவதென்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

சர்வதேச விண்கல் ஆராய்ச்சி மற்றும் கிரக அறிவியல் சொசைடியைச் சேர்ந்த நிபுணர்களும், அமெரிக்க நாஸா விஞ்ஞானிகளும் மொராக்கோவில் விழுந்த விண்கற்களை ஆராய்ந்து அவை செவ்வாயிலிருந்து வந்தவையே என கடந்த மாத மத்தியில் உறுதிப்படுத்தினர். விண்கற்களுக்குப் பெயர் வைப்பது வழக்கம். அதன்படி மொராக்கோவில் விழுந்த கற்களுக்கு Tissint என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட
செவ்வாய் கல் ALH  84001
அமெரிக்காவில் குறைந்தபட்சம் நான்கு பல்கலைக்கழகங்கள் மொராக்கோவில் விழுந்த கற்களின் சாம்பிள்களைப் பெற்றுள்ளன. நிபுணர்கள் இக்கற்களை விரிவாக ஆராய்வர்.

இதற்கு முன்னர் 1962 ஆம் ஆண்டில் நைஜீரியாவில் செவ்வாய்க் கல் வந்து விழுந்தது. இந்தியாவில் பிகார் மானிலத்தில் உள்ள ஷெர்கோட்டி என்னுமிடத்தில் 1865 ஆம் ஆண்டில் இதே போல செவ்வாய்க் கல் வந்து விழுந்தது. அதன் எடை 5 கிலோ. அதற்கு ஷெர்கோட்டி கல் என்று பெயர் வைத்தனர். 1984 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் செவ்வாய் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ALH 84001.

நமக்குத் தெரிந்து செவ்வாயிலிருந்து கல் ஒன்று பூமியில் வந்து விழுவது ஐந்தாவது தடவையாகும்.

செவ்வாயிலிருந்து கற்கள் பூமியில் எவ்விதம் வந்து விழுகின்றன என்று கேட்கலாம். செவ்வாயின் தரையிலிருந்து கற்கள் எதுவும் இறக்கை முளைத்துக் கிளம்பி விடுவதில்லை. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியிலிருந்து பெரிய விண்கல் ஒன்று அல்லது பல கற்கள் செவ்வாயின் தரையில் பயங்கர வேகத்தில் மோதியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்படியான மோதலின் போது செவ்வாயின் தரையில் பாறைகள் தூள் தூளாகி உயரே தூக்கயடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  செவவாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியிலிருந்தே விடுபடக்கூடிய அளவுக்கு இவை அதி வேகத்தில் உயரே தூக்கியடிக்கப்பட்டால் அக்கற்கள் விண்வெளியில் பல கோடி காலம் சஞ்சரித்து உகந்த சூழ்நிலைகளில் பூமியில் வந்து விழுகின்றன. உதாரணமாக ஷெர்கோட்டி செவ்வாய்க் கல் செவவாய் கிரகத்திலிருந்து சுமார் 17 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியிருக்க வேண்டும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

மொராக்கோவில் விழுந்த செவ்வாய்க் கல்லின் ஒரு கிலோ சாம்பிள் லண்டன் இயற்கை வரலாற்று மியூசியத்துக்கு பெயர் தெரிவிக்க விரும்பாத அன்பர் ஒருவர் அன்பளிப்பாக அண்மையில் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தின் நிபுணர்கள் இக்கல்லை விரிவாக ஆராய உள்ளனர்.

7 comments:

  1. நல்ல அலசல் ஐயா, இந்தக் கற்களை வைத்து நடந்த ஆராய்ச்சியில் ஏதேனும் குறிப்பிடத்தக்க தகவல்கள் உள்ளனவா?

    ReplyDelete
  2. இக்கற்களைத் தனியாருக்குத் தரக் கூடாது. விஞ்ஞான ஆய்வுக்கும், அருங்காட்சியகத்தில் வைப்பதற்கும் மட்டுமே பயன் படுத்த வேண்டும். இவை முழு உலக மக்களின் சொத்து. குறைந்த பட்சம் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரின் சொத்து. தனியாருக்கு இவற்றைத் தரக்கூடாது.
    சரவணன்

    ReplyDelete
  3. Good one. Can u write the same kind of details for the STARS.Some one told me that , star lights , took around 100+ years to reach the earth and what we are seeing is that much OLD.

    Karvind79

    ReplyDelete
  4. ராமசாமி,
    செவ்வாயிலிருந்து மட்டுமன்றி விண்வெளியிலிருந்து விழுகின்ற ப்ல்வேறான கற்களையும் விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்ந்து வருகின்றனர்
    சொல்லப்போனால் பூமியின் வயதைக் கணக்கிட்டுக் கூறிய பிரபல நிபுணர் கிளேர் பேட்டர்சன் அதற்கு விண்வெளியிலிருந்து வந்து விழுந்த ஒரு கல்லின் சாம்பிளைத் தான் பயன்படுத்தினார்..

    ReplyDelete
  5. சரவணன்
    வானிலிருந்து வ்ந்து விழுந்த அதிசயக் கல் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் ஒவ்வொரு விதமாக உள்ளது. ஆகவே தான் இவற்றை வாங்கி விற்க டீலர்கள் மேலை நாடுகளில் உள்ளனர்.
    கற்கள் கிடக்கட்டும். பிற நாடுகளிலிருந்து திருடி விற்கப்பட்ட அரிய கலைப் பொக்கிஷங்களை வாங்கி தங்கள் மியூசியங்களில் வைத்துக் கொண்டு அவற்றின் மீது உரிமை கொண்டாடுபவர்களை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  6. Karvidn 79
    அது உண்மைதான். சில நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ஒளி நமக்கு வந்து சேர 600 அல்லது 700 ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் பார்க்கின்ற நேரத்தில் அந்த நட்சத்திரம் அந்த இடத்தில் தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    ReplyDelete
  7. ஒரு கல் நமக்கு கிடைச்சா life ல செட் டில் ஆயிடலாம்

    ReplyDelete