Mar 24, 2012

மேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்

Share Subscribe
சுக்கிரனின் பார்வை இருந்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று ஜோசியர்கள் கூறுவார்கள். அப்படியானால், நீங்கள் வருகிற நாட்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானைக் காண வேண்டும். மேற்கே தெரிகிற சுக்கிரன் கிரகத்தின் - அதாவது வெள்ளி(Venus) கிரகத்தின் - பார்வை உங்கள் மீது படும். ஜோசிய சாஸ்திரத்தில் வெள்ளி கிரகத்தின் பெயர் சுக்கிரன்.

மேற்கு வானை நீங்கள் தொடர்ந்து உற்று நோக்கினால் குரு பார்வையும் உங்கள் மீது விழும். இதன் மூலம் ஒரு வேளை குரு பலனும் கிடைக்கலாம். வியாழன்(Jupiter) கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் குரு என்று பெயர்.

சுருங்கச் சொன்னால் சூரிய மண்டலத்தின் இரு கிரகங்களை - அதாவது வெள்ளி, வியாழன் ஆகிய இரு கிரகங்களை - ஒரே சமயத்தில் வானில் வெறும் கண்ணால் காண்பதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த இரண்டில் வெள்ளி தான் அதிகப் பிரகாசம் கொண்டது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வியாழனைக் காட்டிலும் வெள்ளி நமக்கு அருகாமையில் உள்ளது. இரண்டாவதாக வெள்ளி கிரகத்தைப் போர்த்துள்ள மேகங்கள் சூரிய ஒளியை நன்கு பிரதிபலிப்பவை.

பலரும் தங்களை அறியாமலேயே வானில் பல தடவை வெள்ளி கிரகத்தைப் பார்த்திருக்கலாம். அதனுடைய பிரகாசம் காரணமாகப் பலரும் அதை நட்சத்திரம் என்றே கருதியிருப்பர். அக்கிரகத்துக்கு வெள்ளி என்று பெயர் ஏற்பட்டதற்கு அதன் பிரகாசமே காரணம்.

2012 மார்ச் 13 ஆம் தேதி. மேற்கு வானில் வெள்ளி, வியாழன்
கிரகங்கள் தென்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
நன்றி: விக்கிபிடியா
மேற்கு வானில் அல்லது கிழக்கு வானில் இரண்டு அல்லது மூன்று கிரகங்களைக் காண்பது அப்படி ஒன்றும் அதிசயமல்ல. அந்த அளவில் இப்போது மேற்கே வெள்ளியும் வியாழனும் தெரிகின்றன. வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியன்று நீங்கள் இரவு ஏழு மணி வாக்கில் மேற்கு நோக்கி நின்று கழுத்தை சற்றே உயர்த்தினால் இந்த் இரண்டையும் காணலாம். மேற்புறம் பிரகாசமாகத் தெரிவது வெள்ளி. அதற்கு சற்று கீழே இடது புறத்தில் தெரிவது வியாழன்.

மார்ச் 24-25 தேதி இரவு 7 மணி.
மேற்கு நோக்கி நின்று கழுத்தை ச்ற்றே உயர்த்தினால்
வெள்ளி, வியாழன் கிரகங்களைக் காணலாம்.
(வரைபடம்)
கிரகங்களில் எதற்குமே சொந்த ஒளி கிடையாது. சூரிய ஒளி அவற்றின் மீது படும் போது அந்த ஒளியை அவை பிரதிபலிக்கின்றன. சிறுவர்கள் திறந்த வெளியில் வெயிலில் நின்று கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளியை வீட்டுக்குள்ளாகத் திருப்பி விளையாடுவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடிக்கு சுய ஒளி இல்லை என்பது போலவே கிரகங்களுக்கும் சுய ஒளி கிடையாது,

பூமி உட்பட எல்லா கிரகங்களும் சூரியனை வெவ்வேறு வேகத்த்தில் சுற்றி வருகின்றன. இக்காரணத்தால் இவை வானில் வெவ்வேறு இடங்க்ளில் தென்படும். வசதியைக் கருதி நாம் வானை 12 ராசிகளாகப் பிரித்துள்ளோம். ஆகவே ஒவ்வொரு கிரகமும் பல சமயங்களிலும் வெவ்வேறு ராசியில் இருக்கும். எல்லா கிரகங்களுமே தினமும் வானில் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நிலவு போலத் தெரிவது பூமியே.சந்திரனின் வானில் பூமி இவ்விதமாகத் தான் தெரியும். இது சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் எடுத்த படம். .இது மாதிரித் தான் கிரகங்கள் நமது வானில் (வடிவில் சிறியதாகத்) தெரிகின்றன
நாம் வெறும் கண்ணால் வெள்ளி(Venus), வியாழன்(Jupiter), செவ்வாய்(Mars), சனி(Saturn), புதன்(Mercury) ஆகிய ஐந்து கிரகங்களை மட்டுமே காண இயலும் (நன்றாகக் கண்ணுக்குத் தெரியும் வரிசைப்படி). வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியன்று நீங்கள் இரவு பத்து மணி அளவில் கிழக்குத் திசையில் வானை நோக்கினால் செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரங்களையும் பார்க்கலாம். அடிவானத்துக்கு சற்று மேலே சனி கிரகம் சற்றே மங்கலாகத் தெரியும். செவ்வாய் கிரகம் கிட்டத்தட்ட தலைக்கு மேலே சிவந்த நிறத்தில் காணப்படும்.

மார்ச் 24-25 தேதி இரவு 10 மணி.
கிழக்கு அடிவானத்துக்கு சற்று மேலே சனி கிரகம்.
கிட்டத்தட்ட தலைக்கு மேலே செவ்வாய் கிரகம்.
(வரைபடம்)
அதாவது ஒரே நாள் இரவில் மேற்கே இரு கிரகங்களையும் கிழக்கே இரண்டு கிரகங்களையும் பார்க்கின்ற வாய்ப்பு இப்போது உள்ளது. மேலே சொன்ன பட்டியலிலிருந்து விட்டுப் போனது புதன் கிரகம் மட்டுமே.

புதனைக் காண்பது என்பது மிக அரிது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதே அதற்குக் காரணம். புதன் கிரகம் சூரியன் அஸ்தமித்த பிறகு மேற்குத் திசையில் அடிவானில் சிறிது நேரமே தெரியும். அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கே அடிவானில் சிறிது நேரம் தெரியும். வருகிற 30 ஆம் தேதி வாக்கில் விடியற்காலையில் சூரிய உதயத்துக்கு சற்று முன்னதாக கிழக்கு வானில் புதன் தென்படலாம். அடிவானில் எப்போதும் மேகங்கள் இருக்கும் என்பதாலும் புதன் மிக மிக மங்கலாக இருக்கும் என்பதாலும் அது உங்கள் கண்ணில் படாமல் போனால் வியப்பில்லை.

டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஒரு பிரபல வானவியல் விஞ்ஞானி தமது மரணப் படுக்கையில் ”புதன் கிரகத்தை கடைசி வரை கண்ணால் பார்க்காமலே சாகிறேன்” என்று வருந்தினார்.

பொன் கிடைத்தாலும் புதன் (வானில்) கிடைக்காது என்ற பழமொழி ஏற்பட்டது ஏன் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.