இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும். விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள் அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள்.
மகாராஷ்டிர மானிலத்தில் ஜைதாப்பூரில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள அணுமின் நிலையம் பற்றி ஒரு சமயம் ஆங்கில டிவி செய்தி சேனல் ஒன்று இப்படி பீதி கிளப்பும் தலைப்புடன் செய்தி வெளியிட்டது. (தமிழ் டிவி சேனல்கள் ஒரு போதும் இப்படிச் செய்தது கிடையாது).
ரஷியா இப்போது மேற்கொண்டுள்ள மிதக்கும் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை. ரஷியா இப்போது மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அணுமின் நிலையங்கள் ரஷியாவுக்கு வடக்கே பனிக்கட்டியால் மூடப்பட்ட கடலில் கரையோரமாக நிறுத்தப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபடும்.இந்த மின்சாரம் கரையோரமாக உள்ள இடங்களுக்கு அளிக்கப்படும்.
![]() |
| ரஷிய மிதக்கும் அணுமின் நிலையத்தின் மாடல் image: SevMashZevod |
இதே பாணியில் தான் ரஷியா மிதக்கும் அணுமின் நிலையங்கள் உருவாக்கி வருகிற்து.. 2015 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஏழு மிதக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டி முடிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.
இந்த அணுமின் நிலையம் பெரிய மிதவை மீது அமைந்திருக்கும். ஆகவே இதைத் தேவையான இடத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதில் தலா 70 மெகாவாட் மின்சாரத்தைத் உற்பத்தி செய்கின்ற இரு அணு உலைகள் இருக்கும். தேவையானால் மின் உற்பத்திக்குப் பதில் கடல் நீரைக் குடி நீராக மாற்றுவதற்கும் இந்த அணு உலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.
ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது. பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
ரஷிய நிறுவனம் தயாரிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையங்களை வாங்கிக் கொள்வதில் சீனா, இந்தோனேசியா, மலேசியா, அர்ஜெண்டினா உட்பட 15 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
