Thursday, May 23

நம்மை அழைக்கும் புதன் வியாழன் வெள்ளி

சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழன், மிக்ச் சிறிய கிரகமான புதன், பூமி சைஸில் உள்ள வெள்ளி ( சுக்கிரன்) ஆகிய மூன்று கிரகங்களையும் மேற்கு வானில் அருகருகே காண்கின்ற வாய்ப்பு இப்போது கிட்டியுள்ளது.
மே 26 ஆம் தேதியன்று மேற்குத் திசையில் அடிவானத்துக்கு சற்று மேலே
வியாழன், வெள்ளி, புதன் ஆகிய மூன்றும் இவ்விதமாகக் காட்சி த்ரும் நன்றி: நாஸா
குறிப்பாக மே 26 ஆம் தேதி சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கே நோக்கினால் இந்த மூன்று கிரகங்களையும் அடிவானத்துக்கு சற்று மேலே காணலாம். முக்கோணத்தின் மூன்று புள்ளிகள் போல இவை தெரியும்.

இந்த மூன்றில் மிகப் பிரகாசமானது தான் வெள்ளி.(Venus) அதன் அருகே பிரகாசம் குறைந்ததாகத் தெரிவது வியாழன்.(Jupiter) இந்த இரண்டு கிரகங்களையும் எளிதில் வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

இந்த இரண்டுக்கும் அருகே  மிக மங்கலான் புள்ளியாகத் தெரிவது புதன் கிரகம். ( Mercury).பொதுவில் புதன் கிரகம் கண்ணில் தென்படுவது அபூர்வம். மிக மங்கலாக இருப்பதே அதற்குக் காரணம்.எனினும் கூர்ந்து கவனித்தால் தெரியும். பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் புதனை நன்கு காண முடியும்.ஆனால் வெள்ளியையும் வியாழனையும் பார்க்க பைனார்குலர்ஸ் தேவையில்லை.

மே 26 ஆம் தேதிக்கு முன்னர் அல்லது பின்னர் இந்த மூன்றையும் காண முடியாதா என்று கேட்கலாம். வியாழனையும் வெள்ளியையும் காண இயலும். வானில் புதன் விரைவில் நகருவதாகும். ஆகவே பிற நாட்களில் அது இடம் தள்ளிக் காணப்படும்
மேலே உளள படம் மேற்படி தேதியில் கிரகங்கள் எங்கெங்கே உள்ளன் என்பதைக் காட்டுவதாகும். இதில் J என்பது வியாழன். SE என்பது செவ்வாய். Vஎன்பது வெள்ளி. M என்பது புதன். E என்பது பூமி.. நடுவில் உள்ள S என்பது சூரியன்.
மேற்கு வானில்  மூன்று கிரகங்களும் அருகருகே தென்பட்டாலும் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் இருப்பவை.

 இந்த மூன்று கிரகங்களில் வியாழன் பூமியிலிருந்து சுமார் 90 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி சுமார் 25 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் புதன் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன
.
நீங்கள் உங்கள் வீட்டு ஜன்னல் வழியே பார்வையைச் செலுத்துகிறீர்கள். அப்போது உங்கள் வீட்டைக் கடந்து ஒரு சைக்கிள் மெதுவாகச் செல்கிறது. அதற்கு அப்பால்  தெரிகிற சாலையில் ஒரு மாட்டு வண்டி செல்கிறது. அதைத் தாண்டி தொலைவில் ஒரு லாரி மெதுவாகச் செல்கிறது. நீங்கள் பார்க்கின்ற நேரத்தில் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் தெரிகின்றன. புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்றும் வானில் நமக்கு இப்படியாகத் தான் தெரிகின்றன.
வியாழனுடன் ஒப்பிட்டால் பூமி, வெள்ளி, புதன் ஆகிய கிரகங்கள் எவ்வளவு சிறியவை
என்பதை இந்த வரைபடம் விளக்குகிறது.
ஜன்னல் வழியே பார்க்கும் போது சைக்கிள், மாட்டு வண்டி, லாரி ஆகியவை வெவ்வேறு தொலைவில் உள்ளதை நம்மால் அறிய முடிகிறது.ஆனால் வானத்தில் தெரிகின்ற மூன்று ஒளிப்புள்ளிகளாகத் தெரிகிற மூன்று கிரகங்களில்  எது எந்த தூரத்தில் உள்ளது எனபது நமக்குப் புலப்படுவதில்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் எல்லாமே சூரியனைச் சுற்றி வ்ருகின்றன.தத்தம் சுற்றுபபாதையில் வெவ்வேறு வேகத்தில் சுற்றும் கிரகங்கள் அபூர்வமாக   ஒன்றன் பின் ஒன்றாக அமையும் போது வானில் அவை ஒரே பகுதியில் ஒன்று கூடி நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.