Oct 29, 2014

ஆகாயத்திலிருந்து குதித்தவர்

Share Subscribe
”அப்படியென்ன, அவர் ஆகாசத்திலிருந்து குதிச்சவரா? “ என்று கேட்பதுண்டு. இப்போது ஒருவர் உண்மையிலேயே ஆகாயத்திலிருந்து - அதாவது 41 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். இவ்விதம் உயரே இருந்து குதிப்பது skydiving  என்று குறிப்பிடப்படுகிறது.

கூகுள் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியும். கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆலன் யுஸ்டாஸ் (Alan Eustace) (வயது57 ) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானி.

கீழே குதித்தது சரி, அவர் எப்படி அவ்வளவு உயரத்துக்குச் சென்றார்? ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட  ஒரு பிரும்மாண்டமான பலூனின் அடிப்புறத்தில் அவர் இணைக்கப்பட்டிருந்தார். ஹீலியம் வாயுவானது காற்றை விட லேசானது. ஆகவே பலூன் தானாகவே மேலே மேலே சென்று கொண்டே இருக்கும்.

வானில் மிக உயரத்திலிருந்து கீழே பார்த்தால் எல்லாமே பிரமிப்பூட்டுவதாக இருக்கும். பரவச உணர்வு ஏற்படும். ஆனால் 11 கிலோ மீட்டர் உயரத்துக்குப் போனால் குளிர் மைனஸ் 11 டிகிரி அளவுக்கு இருக்கலாம். சுவாசிக்கப் போதுமான காற்று கிடைக்காது.  மயக்கம் வரும். விரைவில் மரணம் ஏற்படும்.
விசேஷ காப்பு உடையில் அந்தரத்தில் யுஸ்டாஸ்
அந்த அளவில் வானில் மிக உயரத்துக்குச் செல்வது என்பது ஆபத்தான பயணமே. ஆகவே தான் யுஸ்டாஸ் விண்வெளி வீரர் அணிவது போன்ற விசேஷ காப்பு உடையை அணிந்திருந்தார். சுவாசிப்பதற்கான காற்றை அளிப்பது, கடும் குளிர் தாக்காமல் தடுப்பது உட்பட அந்த காப்பு உடையில் எல்லா வசதிகளும் இருந்தன.

பலூன் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் என்னுமிடத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு உயரே கிளம்பியது. சுமார் 2 மணி 7 நிமிஷங்களுக்குப் பிறகு  பலூன் 1,35,890 அடி ( 41,420 மீட்டர்)  உயரத்தை எட்டியது.
ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனின் நுனியில் யுஸ்டாஸ்( Courtesy:Paragon Space Development Corporation)
                                              
 இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலக சாதனை படைத்த பெலிக்ஸ் பாம் கார்ட்னர் எட்டிய உயரத்தை விட சுமார் இரண்டு கிலோ மீட்டர் அதிகம்.
யுஸ்டாஸ் தமது அனுபவம் பற்றிப் பின்னர் கூறுகையில் " அற்புதமான அனுபவம். அங்கிருந்து பார்த்த போது வானம் காரிருளாக இருந்தது. கீழே காற்று மண்டல அடுக்குகள் தெரிந்தன ” என்றார்.

சாதனை படைக்கும் உயரத்துக்குச் சென்றதும் அவர் பலூனிலிருந்து  தம்மைத் துண்டித்துக் கொண்டார். பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவாக அவர் கீழ் நோக்கி விழலானார். உயரே தூக்கிப் போட்ட கல் எப்படி பூமியை நோக்கி விழுமோ அது போல அவர் கீழ் நோக்கி வேகமாக விழலானார்.
சுவாசக் கருவி அணிந்தவராக தலைக் கவசத்துக்குள் யுஸ்டாஸ்
சுமார் நாலரை நிமிஷம் அவர் இப்படி கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மணிக்கு 1321 கிலோ மீட்டர் வேகத்தில் விழுந்து கொண்டிருந்தார். உண்மையில் இது பயங்கர வேகமே.

தரையிலிருந்து சுமார் 5400 மீட்டர் உயரத்தில் பாரசூட் விரிந்து கொண்டது. அதன் பிறகு அவர் கீழ் நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைந்தது. அவர் வானை நோக்கிக் கிளம்பிய இடத்திலிருந்து சுமார் 113 கிலோ மீட்டர் தள்ளி ஓரிடத்தில் மெல்லத் தரை இறங்கினார்.

யுஸ்டாஸ் வானிலிருந்து குதிப்பது இது முதல் தடவை அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு முன்னரே நல்ல பயிற்சி உண்டு. தவிர, அவருக்கு விமானங்களை ஓட்டும் அனுபவமும் உண்டு.
பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் கட்டத்தில்
 யுஸ்டாஸ்  (courtesy; Paragon Space Development Corporation)
சுமார் 34 மாத காலம் தொடர்ந்து நடந்து வந்த ஏற்பாடுகளின் பலனாகவே யுஸ்டாஸினால் உலக சாதனை படைக்க முடிந்தது. இதில் அவருக்கு உதவிகளையும் ஏற்பாடுகளும் செய்வதில் ஒரு பெரிய படையே செயல்பட்டது.

முன்னர் 2012 ஆம் ஆண்டில் பாம் கார்ட்னர் சாதனை நிகழ்த்திய போது பிரபல மென்பான நிறுவனம் முன்னின்று எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் யுஸ்டாஸ் தமது சொந்த ஏற்பாட்டின் மூலமே தமது முயற்சியை மேற்கொண்டார்.

இதற்கு முன்னர் 2012 அக்டோபரில் பாம் கார்ட்னர் நிகழ்த்திய சாதனை பற்றிய விவரம் காண்க: 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால்....  Oct 28, 2014

மாடுகளே தேவையில்லை: வருகுது செயற்கைப் பால்

Share Subscribe
மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட  பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகிய மூவர் அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும்  என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பெருமாள் காந்தி
ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து  பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில்  சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரையான் பாண்டியா
செயறகைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும். அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷா தத்தார்
செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட  கொலஸ்ட்ராலும் இராது.

செயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி
இந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில் உள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில் நுட்பப் படிப்பு படித்தவர்களே.

இவர்கள் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரையான் பாண்டியா CEO. பெருமாள் காந்தி தலைமை தொழில் நுட்ப அதிகாரி. இஷா தலைமை கல்ச்சர் அதிகாரி.

இவர்களது திட்டம் வெற்றி பெறுமானால் செயற்கைப் பாலானது பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக இருக்கும். மருந்து ஆலைகள் மாதிரியில் உயர்ந்த தரத்திலான தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் தொகை பெருத்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் செயற்கைப் பாலைத்தான் பயன்படுத்துபவர்களாக இருப்பர் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செயற்கைப் பால் இப்போது எப்படி சாத்தியமாகியது என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இதற்கு முயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.


Oct 25, 2014

"செத்துப் போன” இருதயம் வாழ்வு கொடுத்தது

Share Subscribe
செயலிழந்து போன இருதயத்தை உயிர்ப்பித்து அதனை ஒரு நோயாளிக்குப் பொருத்தி வாழ்வு கொடுத்துள்ளனர் டாக்டர்கள். ஆஸ்திரேலியாவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்படியான இருதயம் பொருத்தப்பட்டவரான மிஷேல் கிரிபிலாஸ் என்னும் 57 வயதான பெண்மணி பிறவியிலேயே இருதயக் கோளாறு கொண்டவர்.  “இப்போது 10 வயது குறைந்து விட்டது போல உணருகிறேன்” என்று அவர் சொன்னார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு மாற்று இருதய ஆபரேஷன் நடந்தது.

ஆபரேஷனுக்குப் பிறகு அவர் தினமும் 3 கிலோ மீட்டர் நடக்கிறார். 100 முதல் 120 படி ஏறுகிறார்.

இடதுபுறம் சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர் குமுத் திதாள்.
வலதுபுறம் புது இருதயம் பெற்ற மிஷேல் கிரிபிலாஸ்.
இவர் போலவே மேலும் இரண்டு பேர் ‘செத்துப் போன “ இருதயம் பொருத்தப்பட்டு நன்றாக இருக்கிறார்கள்.

சாலை விபத்து போன்றவற்றில் தலையில் அடிபட்டு சாகின்றவர்களின் இருதயம் எடுக்கப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படுவது உண்டு. இருதயத் துடிப்புடன் உள்ள இருதயம் அப்படியே எடுக்கப்பட்டு உடனுக்குடன்  ஒரு நோயாளிக்குப் பொருத்தப்படும். இது வழக்கமாக நடப்பது தான்.

ஆனால் ஒருவர் செத்துப் போய் இருபது நிமிஷங்கள் ஆன பிறகு அதை எடுத்து  ஒரு மெஷினில் வைத்து செயல்பட வைத்துப் பிறகு ஒரு நோயாளிக்குப் பயன்படுத்துவது  உலகில் இப்போது தான் முதல் தடவையாக நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள செயிண்ட் வின்செண்ட் ஆஸ்பத்திரி நிபுணர்கள் தான் இதை சாதித்துள்ளனர். இது ஏதோ திடீரென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல.

இருதயப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இருதயம்
செயலிழந்த இருதயத்தை எப்படி ஒரு நோயாளிக்குப் பொருத்துவது என்பது குறித்து அவர்கள் 20 ஆண்டுகளாகவே ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட திரவத்தைப் பயன்படுத்துகின்றனர். இதை உருவாக்கவே 12 ஆண்டுகள் ஆகின.

இந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி      “ இருதயப் பெட்டி” என்னும் யந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இறந்து போனவரிடமிருந்து எடுக்கப்பட்ட செயலற்ற இருதயம் இப்பெட்டியில் வைக்கப்படுகிறது.


இப்பெட்டியில் இருக்கும் போது தகுந்த வெப்பம் அளிக்கப்படுகிறது. இருதயம் மறுபடி துடிக்கும்படி செய்யப்படுகிறது. நிபுணர்கள் உருவாக்கிய விசேஷ திரவம் ஊசி மூலம் இருதயத்துக்குள் செலுத்தப்படுகிறது. இத் திரவம் இந்த இருதயம் செயல்படாது இருந்த நிமிஷங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளை அகற்றுகிறது. சுமார் நான்கு மணி நேரம் இருதயம் இந்தப் பெட்டிக்குள்ளாக இருந்தபடி செயல்படுகிறது. அதன் பின்னரே தேவையான நோயாளிக்குப் பொருத்தப்படுகிறது.

சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உருவாக்கியுள்ள முறையின் மூலம் இதுவரை மூன்று பேர் புது இருதயம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்னும் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை.

செத்துப்போனவரின் உடலிலிருந்து எவ்வளவு நேரத்துக்குள்ளாக இருதயத்தை வெளியே எடுக்க வேண்டும் என்பது இன்னும் தெரியவரவில்லை. 30 நிமிஷத்துக்குப் பிறகும் எடுக்க முடியும் என்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

வெளியே எடுக்கப்படும் இருதயத்தைப் பாதுகாப்பதில் வருகிற ஆண்டுகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்று டாக்டர்  குமுத் திதாள் கூறினார். நேபாளத்தைச் சேர்ந்த அவர் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்.

சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உருவாக்கிய முறையை உலகில் வேறிடங்களிலும் பயன்படுத்துகிற நிலைமை உருவானால் ஏராளமான நோயாளிகள் பயன்பெறும் நிலைமை உருவாகும்.

Oct 24, 2014

சந்திரனுக்கு கிளம்பிய சீன விண்கலம்: 9 நாளில் பூமிக்குத் திரும்பும்

Share Subscribe
சீனா தனது சக்திமிக்க ராக்கெட் மூலம் சந்திரனை நோக்கி ஒரு விண்கலத்தைச் செலுத்தியுள்ளது. இந்த ஆளில்லாத விண்கலம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று உயரே கிளம்பியது.

இந்த விண்கலம் சந்திரனை அடைந்து சந்திரனை  வட்டமடித்து விட்டு பூமியை நோக்கித் திரும்பும். பின்னர் அதன் ஓரு பகுதி சீனாவில் குறிப்பிட்ட இடத்தில் வந்து இறங்கும்.

சந்திரனுக்குப் போய் அங்கு எதுவும் செய்யாமல் பூமிக்குத் திரும்புவானேன் என்று கேட்கலாம். உண்மையில் இந்த விண்கலம் பரிசோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திரனை நோக்கி சீனாவின் விண்கலம்
 உயரே கிளம்புகிறது. Credit: Xinhua 
சந்திரனில் போய் இறங்கி அங்கிருந்து மண்ணையும் கல்லையும் அள்ளிக் கொண்டு வரும் வகையில் சீனா 2017 ஆம் ஆண்டில் ஒரு நவீன விண்கலத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒத்திகையாகவே இப்போதைய  விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த  விண்கலத்தின் பெயர் சாங்யி - 5 T1 (Chang'e) என்பதாகும்.

மேலும் விளக்கமாகக் கூறுவதானால் சந்திரனுக்கு அனுப்பப்படுகின்ற விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்புவதை உறுதிப்படுத்திக் கொள்வதே இப்போதைய திட்டத்தின் நோக்கமாகும்,

சந்திரனில் இறங்குகின்ற விண்கலத்தை அங்கிருந்து  மறுபடி மேலே கிளம்பும்படி செய்வதில் உள்ள பிரச்சினையை விட சந்திரனிலிருந்து அதி வேகத்தில் பூமிக்குத் திரும்புகின்ற ஆளில்லா விண்கலத்தை பத்திரமாகக் கீழே இறங்குபடி செய்வதில் தான் பிரச்சினை அதிகம்.

சந்திரனை சுற்றி விட்டு
பூமிக்குத் திரும்ப இருக்கும் விண்கலப் பகுதி
Credit: China Space.com
இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்த பின்னணியில் சீனா தனது விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியுள்ளது. எனினும்  எங்களாலும் சாதிக்க முடியும் என்ற தோரணையில் சீனா இந்த விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியுள்ளதாகக் கூற முடியாது.

ஏனெனில் சீனா கடந்த 2007 ஆம் ஆண்டில் சாங்யி - 1 விண்கலத்தையும் 2010 ஆம் ஆண்டில் சாங்யி -2 விண்கலத்தையும் சந்திரனுக்கு அனுப்பியது. பின்னர் 2013ஆம் ஆண்டில் சீனா அனுப்பிய சாங்யி -3 விண்கலம் சந்திரனின் தரையில் இறங்கி நடமாடியது.

சந்திரனுக்கு ரஷியா 1970 ஆம் ஆண்டில் அனுப்பிய
ஆளில்லா லுனா -16 விண்கலம்
ரஷியா ( அப்போதைய சோவியத் யூனியன்) 1970  ஆம் ஆண்டில் அனுப்பிய ஆளில்லா லூனா -16 விண்கலம் சந்திரனில் இறங்கி கல்லையும் மண்ணையும்  எடுத்து வந்து சாதனை புரிந்தது. ரஷியாவின்  லூனா -20 விண்கலம் 1972 ஆம் ஆண்டிலும் லூனா -24 விண்கலம் 1976 ஆம் ஆண்டிலும் இதே சாதனையைப் புரிந்தன.

அமெரிக்கா 1969 முதல் 1972 வரை ஆறு தடவை சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்பி சந்திரனிலிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வரச் செய்தது.

Oct 22, 2014

ஒரு மேகத்துக்கு தனி அந்தஸ்து

Share Subscribe
இந்த மேகம் தனி வகையானது என்றும்,
இதை மேகங்களின்  அட்லஸ் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,
ஒருவர் விடாது போராடி வருகிறார்.
 நீங்கள் அவ்வப்போது வானைக் கவனித்து வந்தால் பல விதமான மேகங்கள் தென்படும். மேகங்களில் பல வகைகள் உண்டு. அவை அமைந்திருக்கின்ற உயரம், தோன்றும் விதம், அவற்றின் அமைப்பு என பல அம்சங்களைப் பொருத்து நிபுணர்கள் அவற்றை வகைப்படுத்தியுள்ளனர்.

 நிபுணர்களின் கணக்குப்படி மேகங்களில்  90 க்கும் அதிகமான வகைகள் உள்ளன.  எது எந்த வகை மேகம் என்று சுலபத்தில் அறிந்து கொள்ளும் வகையில் சர்வதேச வானிலை  அமைப்பு (World Meteorological Organization) பல வகையான மேகங்களின் படங்கள் அடங்கிய அட்லஸை (International Cloud Atlas) வெளியிட்டு வருகிறது.


இப்போது ஒருவர் தான் கூறுகின்ற மேகத்தை அந்த அட்லஸில் தனி வகை மேகமாகக் குறிப்பிட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகிறார்.  அவர் பெயர் காவின் பிரிடோர் பின்னி என்பதாகும் (Gavin Pretor Pinney).  அவர் குறிப்பிடுகின்ற மேகம் ஒன்றும் உலகில்  இதுவரை வானில் காணப்படாத மேகம் அல்ல. ஏற்கெனவே அறியப்பட்டது தான்.

ஆனால்   அதைத் தனி வகையாகக் குறிப்பிட வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாகும்.  அந்த மேகத்தின் பெயர்  அண்டுலாடஸ் அஸ்பெராட்டஸ் என்பதாகும் (Undulatus Asperatus). இது அவராக வைத்த பெயர். கொந்தளிக்கும் மேகம் என்பது அதன் அர்த்தம்.

பல்வேறு மேகங்களுக்கும் லத்தின மொழியில் பெயர் வைப்பது தான் வழக்கம். ஆகவே பிரிடோர் பின்னி லத்தீன மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் அந்த மேகத்துக்கு அப்பெயரை வைத்தார்.

பின்னி வானிலை நிபுணர் அல்ல. அவர் ஓர் எழுத்தாளர். கிராபிக் டிசைனர். ஒரு சமயம் அவர் மேகங்களை கவனிக்கலானார். நீங்கள் வானை நோக்கினால் மேகங்கள் ஆலமரம் மாதிரி, காளை மாடு மாதிரி, சிங்கம் மாதிரி எல்லாம் சிறிது நேரம் தோற்றமளிக்கும். அவர் இப்படியாக பல வித உருவங்களிலான மேகங்களின் புகைப்படங்களை  சேகரிக்கலானார்.

விரைவிலேயே உலகில் அவர் போலவே பலரும் மேகங்களின் உருவங்களைப் படம் எடுத்து அவருக்கு அனுப்பலாயினர். அவர் அமைத்த மேக ரசிகர் சங்கத்தில் இன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.


 மேகங்களின் விசித்திர உருவங்கள் மீது பின்னி ஆர்வம் காட்டியதுடன் நில்லாமல் ஒரு படி மேலே போய் மேகங்களின் வகைகள் மீதும் கவனம் செலுத்தனார். அந்த வகையில் தான் அவர்  அண்டுலாட்டஸ் அஸ்பெராட்டஸ் மேகத்தை ஆராயலானார். பலரும் அவருக்கு அந்த வகை மேகத்தின் படங்களை அனுப்பினர்.

இது சாதாரண அண்டுலாட்டஸ் மேகம் போன்றது அல்ல என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே தான் சர்வதேச வானிலை சங்கத்துக்கு இது பற்றி எழுதினார்.


உலகில் மேகங்களை வகைப்படுத்துவதில் சர்வதேச வானிலை அமைப்பு  தான் அதாரிடி. அந்த சங்கம் ஐ.  நா. அமைப்பின் ஓர் அங்கமாகும். அது நீண்டகாலமாக மேகங்களை வகைப்படுத்தி அவற்றின் படங்கள் அடங்கிய அட்லஸை வெளியிட்டு வருகிறது.  கடைசி பதிப்பு 1987 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  கடந்த 60 ஆண்டுகளில் அந்த அட்லஸில் புது வகை மேகம் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பின்னிக்கு தாம் கூறுகின்ற  மேகம் அந்த அட்லஸில் தனி வகையாக இடம் பெற வேண்டும் என்று ஆசை. பின்னியின் முயற்சியால் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழக மாணவர் அந்த குறிப்பிட்ட மேகம் பற்றி ஆராய்ச்சி நடத்தி ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேகங்களின் அட்லஸின் அடுத்த பதிப்பு விரைவில் தயாரிக்கப்படலாம். அதில் பின்னி கூறுகின்ற மேகம் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அட்ல்ஸ் தயாரிப்பு தொடர்பான அதிகாரி ஒருவர் கூறுகையில் பின்னி தெரிவித்துள்ள  மேகம் ஒரு வேளை இடம் பெறலாம் என்றார்.


ஆனால் இது பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு வேளை அட்லஸில் அந்த மேகம் சேர்க்கப்படுமானால் அதற்கு பின்னி வைத்த பெயருக்குப் பதில் வேறு (லத்தீன) பெயர் வைக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

அட்லஸில் அது இடம் பெற்றால் போதும். நீங்கள் என்ன பெயர் வைத்தாலும் சரி என்கிறார் பின்னி.

அட்லஸில் அந்த மேகம் இடம் பெறுவதால் பின்னிக்கு என்ன லாபம்? ஒரு லாபமும் இல்லை. தான் குறிப்பிட்ட மேகம் தனி அந்தஸ்து பெற்று விட்டது என்ற திருப்தி தான்.

Oct 21, 2014

அமெரிக்க ராணுவத்தின் மர்ம விண்வெளி விமானம்

Share Subscribe
அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் ஒன்று  22 மாத காலம் பூமியைச் சுற்றி விட்டு இப்போது பத்திரமாகத் தரை இறங்கியுள்ளது. இத்தனை காலம் அது விண்வெளியில் என்ன செய்தது என்பது தான் மிக மர்மமாக உள்ளது.ராணுவத் துறை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த விஷயம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இது ஆளில்லாத விமானம். ஆனால் அதில் “ஆராய்ச்சிக்கான” நுட்பமான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2012 டிசம்பர் 11 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்ட இந்த விமானம் இம்மாதம் 17ஆம் தேதி பூமிக்குத் திரும்பியது.

பூமியை  சுற்றிச் சுற்றி வந்தது என்ற முறையில் இதனை செயற்கைக்கோள் என்று தான் கூற வேண்டும். ஆனால் வடிவமைப்பில் இது விமானம் போன்று இருப்பதால்,அத்துடன் விண்வெளியில் இயங்கியதால் இதனை விண்வெளி விமானம் எனலாம்.
அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம்
இந்த விண்வெளி விமானம் அமெரிக்க ராக்கெட் ஒன்றுடன் இணைக்கப்பட்டு செங்குத்தாக உயரே செலுத்தப்பட்டது. உயரே சென்று 22 மாத காலம் செயல்பட்ட பிறகு அது பூமியை நோக்கி இறங்கியது.

பூமியை நோக்கி காற்று மண்டலம் வழியே எது இறங்கினாலும் அது பயங்கரமான அளவுக்கு சூடேறி தீப்பற்றும். விண்வெளி விமானம் தீப்பற்றி அழிந்து விடக்கூடாது என்பதற்காக அதன் வெளிப்புறத்தில் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும் ஓடுகள்  பதிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் நாஸா 1983 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திய ஷட்டில் (Space Shuttle) எனப்படும் ( விமானம் போல் வடிவமைப்பு கொண்டது)  வாகனங்களிலும் இதே போல வெப்பத் தடுப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஷட்டில்: ஷட்டில் வாகனம் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். இது உண்மையில் பிரும்மாண்டமான வாகனம். ஷட்டில் செங்குத்தாக உயரே கிளம்பியது. இதன் இரு புறங்களிலும் இரு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ஷட்டில் வாகனமே ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டதாக இருந்தது. இந்த எஞ்சினுக்கு திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் அளிப்பதற்காக ஷட்டிலுடன் ராட்சத எரிபொருள் டாங்கி பொருத்தப்பட்டிருந்தது.

செலவு அதிகம். நினைத்த நேரத்தில் தயார்படுத்த முடியாத நிலை. எரிபொருள் டாங்கியின் மீது பூசப்பட்ட நுரை பொருள் பிய்த்துக் கொண்டு ஷ்ட்டிலைத் தாக்கி அதன் விளைவாக  ஷட்டிலின் காப்பு ஓடுகள் பெயர்ந்து போனதால் ஏற்பட்ட பிரச்சினை. இப்படியான காரணங்களால் ஷட்டில் போன்ற வாகனத்தை மறுபடி தயாரிப்பதில்லை என நாஸா முடிவு செய்தது.

 நாஸா பயன்படுத்திய ஷட்டில் வாகனம்.
பழுப்பு நிறத்தில் காணப்படுவது எரிபொருள் டாங்கி  
அமெரிக்க ராணுவத்தின் இப்போதைய விண்வெளி விமானம் முந்தைய ஷட்டில் வாகனம் போலவே கிளைடர் பாணியில் விண்வெளித் தளத்தில் வந்து இறங்கியது.

இங்கே சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் சீகாகஸ் என்னுமிடத்தில் சில நாட்களுக்கு முன்னர் வானிலிருந்து அதிசயப் பொருள் ஒன்று அதி வேகத்தில் கீழே வந்து விழுந்தது.

அது ஐந்து அங்குல நீள அகலம் கொண்டதாக தடிமனாக இருந்தது. அது ஒரு வித ஓடு என்பது தெரிந்தது. அந்த ஓடு மூன்று அடுக்கு கொண்டதாக இருந்தது.
அடிப்புறத்தில் ரப்பர் மாதிரியிலான பொருள். நடு அடுக்கு உலோகத்தால் ஆனது. மேற்புற அடுக்கு மண் போன்ற பொருளால் ஆனது.

நாஸா விளக்கமளிக்கையில் இது என்றோ ஓய்வு பெற்றுவிட்ட ஷட்டில் வாகனத்தின் ஓடு அல்ல என்று கூறி விட்டது. அனேகமாக இது அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானத்தில் பொருத்தப்பட்டு பின்னர் தனியே கழன்று வானிலிருந்து விழுந்த ஓடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் ஒரு புறம் இருக்க, இந்தியாவும் ஒரு வகை விண்வெளி விமானத்தைத் தயாரிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதன் சுருக்கமான பெயர் அவதார்(Avatar).இப்பெயரானது Aerobic Vehicle for hypersonic  Aerospace Transportation  என்பதன் சுருக்கமாகும்.

 விண்வெளி விமானம் என்று சொல்லத்தக்க அவதார் வாகனம் விமானம் போன்று விமான நிலைய ஓடுபாதையிலிருந்து உயரே கிளம்பும். இந்த விமானத்தில் ஹைட்ரஜன் திரவ எரிபொருள் இருக்கும். அவதார் உயரே கிளம்பியதும் காற்றுமண்டலத்திலிருந்து காற்றை உறிஞ்சும். அக்காற்றிலிருந்து ஆக்சிஜன் வாயுவைத் தனியே பிரித்து அந்த வாயுவை திரவ ஆக்சிஜனாக மாற்றிக் கொள்ளும்.
அவதார் விண்வெளி விமானத்தின் மாடல்
குறிப்பிட்ட உயரம் சென்றதும் அவதார் வாகனம் ஒரு ராக்கெட் போல செயல்பட்டு திரவ ஹைட்ரஜனையும் திரவ ஆக்சிஜனையும் சேர்த்து எரித்து சுமார் 250 அல்லது 300 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்து ஒரு  செயற்கைக்கோளை அதி வேகத்தில் செலுத்தும். சுமார் ஒரு டன் எடை கொண்ட செயற்கைக்கோளை அது செலுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த வேலை முடிந்ததும் அது கீழ் நோக்கி இறங்கி விமான நிலையத்தில் விமானம் போன்று இறங்கும். செயற்கைகோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தைத் திரும்பத் திரும்ப 100 தடவை செலுத்த இயலும் என்று கருதப்படுகிறது. அவதார் விண்வெளி விமானத்தின் வெளிப்புறத்திலும் வெப்பத் தடுப்பு ஓடுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

அவதார் விண்வெளி விமானம் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை 25 டன் அளவில் இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை சுமார் 300 டன்.

செயற்கைக்கோள் ஒன்றை  உயரே செலுத்துவதற்கு ராக்கெட்டைப் பயன்படுத்தும் போது அந்த ராக்கெட் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. ஒவ்வொரு தடவையும் பெரும் செலவில் ராக்கெட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆகவே செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கு நிறைய செலவாகிறது.

ஆனால் செயற்கைக்கோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தை திரும்பத் திரும்பப் பயன்படுத்த முடியும் என்பதால் செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கு ஆகும் செலவு கணிசமாகக் குறையும். எனினும் அவதார் உருவாக்கப்பட்டு பயனுக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.


Oct 18, 2014

செவ்வாயை நோக்கிப் பாய்ந்து வரும் வால் நட்சத்திரம்

Share Subscribe
வால் நட்சத்திரம் ஒன்று செவ்வாய் கிரகத்தை நோக்கி மணிக்கு 2 லட்சத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது செவ்வாய் கிரகத்தின் மீது மோதாது. அக்டோபர் 19 ஆம் தேதி இரவு வாக்கில் அது செவ்வாய் கிரகத்தை “மிக அருகில்” கடந்து செல்லும்.
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம். அதை சுற்றிப்
புள்ளிகளாகக் காணப்படுபவை நட்சத்திரங்கள் 
செவ்வாய் கிரகத்தை இப்போது சுற்றிக்கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் உட்பட ஐந்து விண்கலங்களுக்கும்  வால் நட்சத்திரத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வால் நட்சத்திரத்தின் பெயர்  சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில்  சைடிங் ஸ்பிரிங் என்னுமிடத்தில்  உள்ள வான் ஆராய்ச்சிக்கூடம் கடந்த ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டல எல்லையில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 15 லட்சம் கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சூரிய மண்டலத்தைச் சுற்றி  வட்ட வடிவில் ஊர்ட் முகில் ( Oort Cloud) என்ற பகுதி உள்ளது. அங்கு எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் உள்ளன. இப்போதைய வால் நட்சத்திரம் அந்த ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று வருவது மிக அபூர்வமானதாகும். சைடிங் ஸ்பிரிங் வால்  நட்சத்திரம் அங்கிருந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் அதன் வேகம் மிகக் குறைவாக இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரிக்கும்.

அந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி இப்போது வந்து கொண்டிருக்கிறது.  அது வருகின்ற பாதையில் செவ்வாய் கிரகம் இருக்க நேரிட்டதால் அது செவ்வாயைக் கடக்கிறது. அது செவ்வாய் கிரகத்தைக் கடக்கும் போது  செவ்வாய் கிரகத்துக்கும் வால் நட்சத்திரத்துக்கும் இடையே  ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும்.
அம்புக் குறி கொண்டது தான் வால் நட்சத்திரத்தின் பாதை
ஆரஞ்சு நிறத்தில் உள்ள புள்ளி தான் செவ்வாய் கிரகம்.
விஞ்ஞானிகளின் கணக்கில் இது “ மிக அருகாமை” ஆகும்.  இதுவரை எந்த ஒரு வால் நட்சத்திரமும்  பூமிக்கு இவ்வளவு அருகில் கடந்து சென்றது கிடையாது.

இந்த வால் நட்சத்திரத்தின் வருகை காரணமாக மங்கள்யான் உட்பட செவ்வாயை சுற்றும் ஐந்து விண்கலங்களும் பத்திரமாக “ஒண்டிக் கொண்டுள்ளன”. வால் நட்சத்திரம் இவற்றின் மீது நேரடியாக மோதுகின்ற வாய்ப்பே இல்லை.

ஆனால் சாலையில் ஒரு குப்பை லாரி வேகமாகச் சென்றால் பெரும் புழுதி கிளம்புவது போல ஒரு வால் நட்சத்திரம் சென்றால் அதிலிருந்து நுண்ணிய துகள்களும் தூசும் வெளிப்படும்.  இதுவே வால்  நட்சத்திரத்தின் வால் ஆகும்.

வால் நட்சத்திரம் பயங்கர வேகத்தில் செல்வதால் நுண்ணிய துகள்களும் கிட்டத்தட்ட அதே வேகத்தைப் பெற்றிருக்கும். எனவே இவை தாக்கினால் விண்கலங்களில் உள்ள நுட்பமான கருவிகள் சேதமடைய வாய்ப்பு உண்டு.

வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது சுமார் 20 நிமிஷ நேரத்துக்கு மட்டுமே விண்கலங்களுக்கு ஆபத்து வாய்ப்பு உண்டு. ஆகவே அந்த 20 நிமிஷ நேரம் இந்த விண்கலங்கள் செவ்வாயின் மறுபுறத்தில்-- துகள்கள் தாக்கும் வாய்ப்பு இராது என்பதால்-- இருக்கும்படி   மூன்று விண்கலங்களுக்குப் பொறுப்பான நாஸா, நான்காவது விண்கலத்துக்குப் பொறுப்பான ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஐந்தாவதான மங்கள்யானுக்குப் பொறுப்பான இஸ்ரோ ஆகியவை தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

அதே நேரத்தில் பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி இந்த விண்கலங்கள் சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.

இந்த வால் நட்சத்திரம் இன்னும் சில தினங்களில் சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பிச் செல்லும்.

விஞ்ஞானிகள் வால் நட்சத்திரத்தை ஆராய்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம் உண்டு. சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டல்ம் தோன்றிய போது தான் பூமி உட்பட கிரகங்கள் தோன்றின. அப்போது மிச்ச மீதியான பொருட்கள் ஓரத்தில் ஒதுங்கின.  அவை தான் வால் நட்சத்திரங்கள்.

கடந்த பல கோடி ஆண்டுகளில் வால் நட்சத்திரங்கள் பெரும் மாறுதலுக்கு உட்படாதவை.  ஆகவே அவற்றை ஆராய்ந்தால் சூரிய மண்டலத் தோற்றம் பற்றிப் புதிதாகப் பல தகவல்களை அறிந்து கொள்ள் இயலும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அப்படி ஒன்றும் வடிவில் பெரியது அல்ல.  அதன் குறுக்களவு சுமார் 800 மீட்டர். ஆனால் அதைச் சுற்றி அமைந்த வாயுப் மூட்டம்  மிகப் பெரியது. அதன் வால் என்பது அதை விடவும் பெரியது என்பதுடன் மிக நீண்டது.

Update: வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து சென்ற பின்னர் இந்தியாவின் மங்கள்யான், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ், அமெரிக்க  நாஸாவின் மூன்று விண்கலங்கள் ஆகியவை எந்த பாதிப்புக்கும் உட்படாமல் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் நட்சத்திரம் பற்றி இவை சேகரித்த தகவல்கள் சில நாட்களுக்குப் பிறகு தெரிய வரும்.

Oct 1, 2014

நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அறிவியல்புரம்

Share Subscribe
அறிவியல்புரம் வலைப் பதிவு தொடங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகி இப்போது நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

இந்த மூன்று ஆண்டுகளில் சீரான வளர்ச்சி கண்டுள்ளது. படிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது. முற்றிலும் அறிவியல் தொடர்பான வலைப்பதிவுக்கு ஓரளவில் இது சாதனையே.

உலகெங்கிலும் சுமார் 40 நாடுகளில் அறிவியல்புரத்துக்கு வாசகர்கள் உள்ளனர் என்பது பெருமை தருகின்ற விஷயம். அவர்கள் அனைவரும் தமிழர்கள், அறிவியலில் ஆர்வம் கொண்டவர்கள். இது மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாகும். வருகிற ஆண்டுகளில் இந்த வலைப்பதிவு மேலும் ஆதரவைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

- ராமதுரை