Jan 29, 2015

புயலின் மையத்தில் தோன்றிய மின்னல்

Share Subscribe
புயலின் சீற்றத்தையும் கொடுமையையும் நாம் அறிவோம். ஆனால் புயலின் மையம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் பார்க்க இயலாது.

ஆனால் புயலை சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து படம் எடுக்க முடியும். சர்வதேச விண்வெளி நிலையம்(International Space Station) எனப்படும் செயற்கைக்கோள் அந்த அளவு உயரத்திலிருந்து பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து புயலைப் படம் பிடிக்க முடியும். புயலின் உயரம் மிஞ்சிப் போனால் 18 கிலோ மீட்டர் தான். ஆகவே மேலிருந்தபடி புயலைப் படம் பிடிப்பது கஷ்டமான விஷயமல்ல.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அவ்வளவு உயரத்திலிருந்து இப்போது ஒரு புயலைப் படம் பிடித்து அனுப்பியுள்ளனர்.  இவ்விதம் புயலைப் படம் பிடிப்பது என்பது புதிது அல்ல.

புயலின் மையம் அருகே மின்னல். அந்த மின்னலின் விளைவாக
புயலின் மையம் ஒளிர்ந்து காணப்படுகிறது.உற்றுப்பார்த்தால் புயலின் சுழற்சி தெரியும்.
 படம். நன்றி NASA/Christoforetti
கடந்த பல ஆண்டுகளில் இந்துமாக்கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல் ஆகியவற்றில் தோன்றிய பல புயல்கள் விண்வெளியிலிருந்து படம் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் செயற்கைக்கோள்கள் இப்படியான படங்களை பல தடவை அனுப்பியுள்ளன.

ஆனால் புயலின் மையத்தில் மின்னல் ஏற்பட்ட அந்த கணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பது தான் இப்போது எடுக்கப்பட்டுள்ள படத்தின் தனிச் சிறப்பாகும்.

பொதுவில் புயலின் போது மின்னல்கள் தோன்றுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியே மின்னல் தோன்றினாலும் புயலின் வெளி விளிம்புகளில் மின்னல் தோன்றலாம் என்றும் புயலின் மையத்தில் மின்னல் தோன்றுவது மிக அபூர்வம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேற்படி புயல் இந்துமாக்கடலில் எங்கே இருந்தது
என்பதை சிவப்பு நிற அம்புக் குறி காட்டுகிறது.
ஆப்பிரிக்கா அருகே  மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே இந்துமாக் கடலில்  ”பான்சி” என்ற புயல் ஜனவரி 13 ஆம் தேதி  இவ்விதம் படமெடுக்கப்பட்டுள்ளது. புயலின் மையம் அருகே மின்னல் தோன்றுவதைப் மேலே உள்ள முதல் படம்  காட்டுகிறது.
அதே புயலின் வேறு ஒரு தோற்றம்.
ஐரோப்பிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த பெண் விண்வெளி வீரரான சமந்தா கிறிஸ்டோஃபொரெட்டி இந்தப் படத்தை எடுத்து அனுப்பினார். அவர் இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.


இத்தாலியைச் சேர்ந்த சமந்தா (வயது 37) விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் தடவையாகும். அந்த முதல் தடவையிலேயே அவர் முத்திரை பதித்துள்ளார்.

Jan 24, 2015

சீரீஸ் என்றொரு குட்டிக் கிரகத்தை நோக்கி விண்கலம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையில் இருக்க வேண்டிய ஒரு கிரகத்தைக் காணோம் என்று சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன் வானவியல் விஞ்ஞானி   ஒருவர் கூறினார். உடனே பல விஞ்ஞானிகள் “ வான் போலீஸ்” என்ற குழுவை அமைத்து டெலஸ்கோப்புகள் மூலம் வானில் தேட ஆரம்பித்தனர்.

அச்சமயத்தில் இக்குழுவில் சேராத பியாஸி என்ற இத்தாலிய விஞ்ஞானி ஒரு ’குட்டிக் கிரக’ த்தைக் கண்டுபிடித்தார். அது தான் சீரீஸ்(Ceres)எனப்படும் அஸ்டிராய்ட்  ஆகும். “காணாமல் போன” கிரகம் அதுவாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தனர். பின்னர் தான் எண்ணற்ற அஸ்டிராய்டுகளில் அதுவும் ஒன்று என்பது தெரிய வந்தது.

  ஒரு கிரகம் இருந்திருக்குமானால் அதற்கென ஒரு சுற்றுப்பாதை இருந்திருக்கும். விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்த போது மேற்படி சுற்றுப்பாதையில் ஒன்றல்ல, பல லட்சம் துண்டுப் பாறைகள் பறந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
புள்ளி புள்ளியாக உள்ளவை அஸ்டிராய்டுகள். இவை செவ்வாயின் (Mars) மற்றும் வியாழனின் (Jupiter) சுற்றுப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளன.
 கிரிப் பிரதட்சிணம் செய்யும் பக்தர்களைப் போல இவை அனைத்தும் ஒழுங்காக சூரியனை சுற்றி வருகின்றன. இவை செல்லும் பாதையானது அஸ்டிராய்ட் வட்டாரம் (Asteroid Belt)  என்று அழைக்கப்படுகின்றது.

 அஸ்டிராய்டுகளில் உள்ள பெரிய துண்டு தான் சீரீஸ். அதன் குறுக்களவு வெறும் 950 கிலோ மீட்டர். அது சந்திரனையும் விடச் சிறியது.
வலது புறம் பூமி. இடது மேல் சந்திரன். இடது கீழ் சீரீஸ்
இப்போது அந்த சீரீஸை நோக்கி அமெரிக்க விண்கலம் டான் (Dawn) சென்று கொண்டிருக்கிறது. அது வருகிற மார்ச் மாதம்  6 ஆம் தேதி சீரீஸ் குட்டிக் கிரகத்தை நெருங்கி அதைச் சுற்ற ஆரம்பிக்கும்.

முதலில் 5000 கிலோ மீட்டர் உய்ரத்தில் இருந்தபடி சுற்றும். பிறகு கீழாக 1300 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி சுற்றும். பிறகு மேலும் நெருங்கி 700 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பறந்து கொண்டிருக்கும்.
சீரீஸ் படம். டான் விண்கலம் 12 லட்சம் கிலோ மீட்டரிலிருந்து எடுத்தது
சீரீஸ் அஸ்டிராய்ட்  சூரியனிலிருந்து சுமார் 41 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.( இத்துடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

டான் விண்கலம் கடந்த 2007 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது. அது முதலில் வெஸ்டா (Vesta) எனப்படும் வேறு ஒரு அஸ்டிராய்டை  நெருங்கிச் சென்று ஆராய்ந்தது. அதை முடித்துக் கொண்டு டான் இப்போது சீரீஸை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சீரீஸில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு அடியில் ஒருவேளை தண்ணீர் இருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
 நாஸாவின் டான் விண்கலம்
அஸ்டிராய்டுகளை ஆராய்வதன் மூலம் சூரிய மண்டலத் தோற்றம் பற்றி மேலும் தகவல்களை அறிய முடியலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Jan 19, 2015

எவரெஸ்ட் சிகரத்துக்கு மேலே பறக்கும் தலைப்பட்டை வாத்துகள்

Share Subscribe
தலைப்பட்டை வாத்துக்கள் (Bar-headed Geese) இமயமலைக்கு வடக்கே உள்ள திபெத், கஜாகஸ்தான், ரஷியாவின் சைபீரியா, மங்கோலியா ஆகிய இடங்களிலிருந்து இந்தியாவுக்கு வந்து செல்பவை. தமிழத்திலும் இவற்றைக் காணலாம். இவற்றின் அறிவியல் பெயர் Anser Indicus  என்பதாகும்.

இப்பறவைகள் கோடைக்காலத்தில் இமயமலைக்கு அப்பால் உள்ள இடங்களில் வாழ்பவை. குளிர்காலம் வந்து விட்டால் தரையும் நீர் நிலைகளும்  பனிக்கட்டியால் மூடப்படும் போது அப்பறவைகள் அப்பிராந்தியங்களிலிருந்து தெற்கு நோக்கிக் கிளம்பி விடும். அங்கிருந்து வருவதானாலும் சரி, கோடையில் திரும்பிச் செல்வதானாலும் சரி இப்பறவைகள் மிக நீண்ட  இமயமலையைக் கடந்தாக வேண்டும்.
தலையில் உள்ள பட்டைகள் காரணமாக இவற்றுக்கு இப்பெயர்
படங்கள்: நன்றி விக்கிபிடியா
இமயமலையோ உலகிலேயே மிக உயரமான மலையாகும். எனவே இப்பறவைகள் இமயமலையில் ஆங்காங்குள்ள கணவாய்கள் வழியே தெற்கு நோக்கிப் பறந்து வருவதாகவே நீண்டகாலம் கருதப்பட்டது.

பின்னர் இவை இமயமலையின் பல உயர்ந்த சிகரங்களுக்கு மேலாகப் பறந்து வரலாம் என்ற கருத்தும் நிலவியது. ஆனால் இப்போது இவை உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்துக்கு (8848 மீட்டர் அதாவது 29,029 அடி)  மேலாகவும் பறந்து வருவதாகக் கண்டறியப்பட்டுளளது. உலகில்  மிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட பறவைகளில் இவையும் ஒன்று எனலாம்.

மனிதன் 3000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சிகரத்தை ஒரே மூச்சில் ஏற முயன்றால்  “ உயர்மலை நோய்” ஏற்படலாம். எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுபவர்கள்  குறிப்பிட்ட உயரம் வரை ஏறிவிட்டுப் பிறகு முகாம் அமைக்கின்றனர். இரவில் அங்கு தங்காமல் கீழ் முகாமுக்கு வந்து உறங்குவர்
தலைப்பட்டை வாத்து
சில நூறு மீட்டர் ஏறிவிட்டு கீழ் முகாமுக்கு வந்து உறங்குவது என கட்டம் கட்டமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைவர். உடல் பழக வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கின்றனர். தவிர,7600 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைப் பகுதியானது “ மரண மண்டலம்” என குறிப்பிடப்படுகிறது.

ஆனால் தலைப்பட்டை வாத்துகள் ஏழு அல்லது எட்டு மணி நேரத்தில் இமயமலைப் பிராந்தியத்தைக் கடந்து செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வானில் உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறையும். காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவும் குறையும். சுமார் 8000 மீட்டர் உயரத்தில் காற்றில் அடங்கிய ஆக்சிஜன் அளவானது தரை மட்டத்தில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எனினும் தலைப்பட்டை வாத்துகள் சர்வசாதாரணமாக அந்த உயரத்தில் பறந்து செல்கின்றன. அதுவும் சிறகடித்துச் செல்கின்றன. இவை பின்புறத்திலிருந்து வீசும் காற்றைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.  மாறாக அக்காற்று வீசுவது நின்றதும் தான் இமயமலை மீதான பயணத்தை ,மேற்கொள்கின்றன,

1953  ஆண்டில் எவரெஸ்ட் சிகரம் மீது  முதல் முதலில் ஏறிச் சாதனை படைத்த டென்சிங், ஹில்லேரி ஆகியோரின் குழுவில் இடம் பெற்றிருந்த  பிரபல மலையேற்ற நிபுணர் வாலஸ் ஜார்ஜ் லோவ் ஒரு சமயம் கூறுகையில் எவரெஸ்ட் மீதாக  தலைப்பட்டை வாத்து பறந்து சென்றதைத் தாம் கண்டதாகக் குறிப்பிட்டார்

நீண்டதூரம் பறந்து செல்லும் பறவைகளில் சிலவற்றை ஆராய்ச்சியாளர்கள் பிடித்து அவற்றின் கால்களில் அல்லது கழுத்துகளில் அடையாள அட்டை அல்லது தகவல் கருவிகளைப் பொருத்துவது உண்டு. இதன் மூலம் அப்பறவைகள்  எங்கெல்லாம் செல்கின்றன, எவ்வளவு உயரத்தில் பறக்கின்றன போன்ற பல தகவல்களைப் பெற முடியும்.

பறவை பறக்கும் வேகம், அதன் இதயத் துடிப்பு, உடல் வெப்பம் போன்ற தகவல்களையும் இவ்விதம் சேகரிக்க முடியும்.

தலைப்பட்டை வாத்துகள் மிக உயரத்தில் பறக்கும் போது நிறைய சக்தி செல்வாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.  அதுவும் பல மணி நேரம் ஓயாது சிறகடித்துச் செல்லும் போது நிறையவே சக்தி செலவாகும்.
கூத்தங்குளத்தில் தலைப்பட்டை வாத்துகள்
பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் உள்ள பாங்கோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்க்ள் ஏழு தலைப்பட்டை வாத்துகளிடம் இவ்விதக் கருவிகளைப் பொருத்தி   நிறைய ஆராய்ச்சி செய்துள்ளனர். தவிர, பழக்கப்பட்ட வாத்துகளை காற்றுச் சுரங்கம் வழியே பறக்கவிட்டும் பரிசோதிக்கின்றனர்.

இப்பறவைகள் பொதுவில் இரவில் பறப்பதையே விரும்புகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

தலைப்பட்டை வாத்துகளின் அலாதித் திறமை காரணமாக பல்வேறு நிபுணர்களும் கடந்த பல ஆண்டுகளாகவே அவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.

இமயமலைக்கு அப்பாலிருந்து இடம் பெயரும் இப்பறவைகள் குளிர் காலத்தில்  இந்தியாவில் பல மானிலங்களிலும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூத்தங்குளத்தில்   129 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பறவை சரணாலயத்தில் இவை பொதுவில் காணப்படுகின்றன. ஒரு சமயம் பறவை ஒன்றின் கழுத்தில் இருந்த அடையாளப் பட்டையை வைத்து ஆராய்ந்த போது அது மங்கோலியாவிலிருந்து வந்ததாகும் என்று தெரிய வந்தது. ,தமிழகத்திலிருந்து மங்கோலியா சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Jan 16, 2015

பூமியைக் கடந்து செல்லும் விண்கல்

Share Subscribe
சுமார்  680  மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல் (Asteroid) ஒன்று ஜனவரி 26 ஆம் தேதியன்று பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது. இந்த விண்கல்லினால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு எதுவும் இல்லை.

2004 BL 86  என்னும் பெயரிடப்பட்ட அந்த விண்கல் பூமியைக் கடந்து செல்லும் போது பூமிக்கும் அதற்கும் உள்ள தூரம் 12 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இது சந்திரனுக்கு உள்ள தூரத்தைப் போல மூன்று மடங்காகும். இந்த விண்கல் பூமியின் சுற்றுப்பாதையைக் குறுக்காகக் கடந்து செல்லும். இது 2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

விண்வெளி அளவுகோலின்படி அந்த விண்கல் பூமியை “அருகாமையில்” கடந்து செல்வதாகக் கூறலாம். அடுத்த 12 ஆண்டுகளுக்கு வேறு எந்த விண்கல்லும் இந்த அளவுக்கு அருகில் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BL 86 விண்கல்லின் சுற்றுப்பாதையைக் காட்டும் படம். ஜனவரி 19 ஆம் தேதி
விண்கல் எங்கே இருக்கும் என்பது படத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
படம் நன்றி NASA/JPL-Caltec

சூரியனைச் சுற்றுகின்ற பூமிக்குத் தனிப்பாதை உள்ளது போலவே  எல்லா விண்கற்களுக்கும் தனித்தனி சுற்றுப்பாதை உண்டு. அவையும் சூரியனைச் சுற்றிச் செல்பவை தான். ஆனால் விண்கற்களின் சுற்றுப்பாதை ஏறுமாறாக இருப்பது உண்டு. அதனால் தான் ஏதாவது ஒரு விண்கல் இவ்விதம் பூமியைக் கடந்து செல்கின்றது.

பூமியை நெருங்கிக் கடந்து செல்கின்ற விண்கற்கள்  மிக நிறையவே உண்டு. இவற்றில்  100 மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்ட அத்துடன்  15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்கின்ற விண்கற்கள்
“ ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்ட விண்கற்கள்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை பூமியில் வந்து மோத வாய்ப்பில்லை தான். ஆனாலும் நிபுணர்கள் இவற்றின் மீது கண் வைத்து கவனித்து வருகிறார்கள். இதற்கென்றே தனிக் குழுக்கள் உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரையிலான கணக்குப்படி இவ்வகையான 1533 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வருகிற 26 ஆம் தேதி BL 86 விண்கல்  பூமியை அதி வேகத்தில் கடந்து செல்லும் போது அமெரிக்காவில் கோல்ட்ஸ்டோன் என்னுமிடத்தில் உள்ள பெரிய ரேடியோ டெலஸ்கோப்பும், மற்றும் போர்ட்டோரிகோவில் அரசிபோ என்னுமிடத்தில் உள்ள மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப்பும் மைக்ரோ அலைகளை அந்த விண்கல் மீது செலுத்தி அதனை ஆராய்ந்து தகவல்களை சேகரிக்க நாஸா ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு விண்கல் பூமியைக் கடந்து செல்வது என்பது அப்படி ஒன்றும் அபூர்வமானதல்ல. அவ்வப்போது பல விண்கற்கள் இவ்விதம் கடந்து செல்கின்றன. .ஜனவரி 12 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 6 விண்கற்கள் பூமியைக் கடந்து செல்ல இருக்கின்றன.

 அவற்றில் ஒரு கிலோ மீட்டர் அல்லது அதற்கு அதிகமான குறுக்களவு கொண்ட  விண்கற்களும் அடங்கும். பெரும்பாலானவை பூமியை மிகத் தொலைவில்  கடந்து செல்லும்.

 .

Jan 13, 2015

சூரியனைச் சுற்றி அற்புத அரை வளையங்கள்

Share Subscribe
பகலில் சூரியனைச் சுற்றி அல்லது இரவில் முழு நிலவைச் சுற்றி வளையம் காட்சி அளிப்பதைப் பலரும் எப்போதாவது ஒரு முறை பார்த்திருக்கலாம். இது வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆனால் அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் சூரிய உதயத்தின் போது தென்பட்ட காட்சி உண்மையில் மிக அபூர்வமானதே. கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும்.

தலைப்பில் இவற்றை ’வானவில்’ என்று குறிப்பிடாமல் ’அரை வளையங்கள்’ என்று குறிப்பிட்டதற்குக் காரணம் உண்டு. கீழே உள்ள படத்தில் இவை வானவில் போன்று காட்சி அளிக்கின்றன. ஆனால் அவை வானவில் அல்ல.

வானவில் என்பது காலையில் அல்லது மாலையில் சூரியன் இருக்கின்ற திசைக்கு நேர் எதிரே மழைத்தூறல் இருந்தால் மட்டுமே தோன்றுவது. அதாவது சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் தான் வானவில் தோன்றும். ஆகவே தான் அரை வளையங்கள் என்று வருணிக்கப்பட்டுள்ளது.

சூரியனைச் சுற்றி  வானவில் மாதிரியில் பல அரை வளையங்கள் அமைந்துள்ளன.
2015 ஜனவரி 9 ஆம் தேதி  அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாநிலத்தில்
எடுக்கப்பட்ட படம். நன்றி : Earthsky, Joshua Thomas.
இப்படத்தை எடுத்தவர் ஜோஷுவா தாமஸ். டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அமெரிக்க வானிலை சர்வீஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

முதலில் ஒரு விளக்கம். பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் சூரியனை அல்லது சந்திரனைச் சுற்றிக் காணப்படும் வளையமானது நமது காற்று மண்டலத்துக்குள் உள்ள நிலைமைகள் காரணமாக ஏற்படுவதாகும். எனவே ஒருவர் காற்று மண்டலத்துக்கு மேலே போய் சூரியனைப் பார்ப்பதாக வைத்துக் கொண்டால் இவ்விதக் காட்சி தெரியாது.

2013 மே 14 ஆம் தேதி அமெரிக்காவில்
நியூ ஜெர்சி மாநிலத்தில் எடுக்கப்பட்ட படம்.
படம் நன்றி  Earthsky, Stacey Baker-Bruno
காற்று மண்டலத்தின் உயர் அடுக்கில், அதாவது சுமார் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் உயரத்தில், மிக மெல்லிய மேகங்கள் அமைந்திருக்கும். இந்த மேகங்களில் நுண்ணிய ஐஸ் படிகங்கள் இருக்கும்.

அவ்வித மேகங்களுக்கு மேலே சூரியன் இருக்கும் சமயத்தில் இந்த மேகங்கள் ஊடே வரும் சூரிய ஒளியை பல லட்சம் ஐஸ் படிகங்கள் சிதறச் செய்கின்றன. அத்துடன் சூரிய ஒளியை பிரதிபலிக்கவும் செய்கின்றன.

இவ்வித நிலைமைகளில் தான் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுகிறது. இதில் ஒரு முக்கிய அம்சமும் உள்ளது. நீங்கள் அந்த ஒளி வட்டத்தைக் காணும் அதே சமயத்தில் 10 மீட்டர் தொலைவில் வேறு ஒருவர் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.

அவரது பார்வையில் தென்படும்  ஒளி வட்டத்தை வேறு ஐஸ் படிகங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும்.

2012 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவில் மிசவுரி மாகாணத்தில்
சந்திரனைச் சுற்றித் தெரிந்த ஒளி வட்டம்.
படம்: நன்றி Earthsky, Danny Brocer Jensen
தவிர, ஒளி வட்டத்தின் உட்புறத்தில் சிவப்பு நிறம் சற்று அழுத்தமாகக் காணப்படும். வட்டத்தின் வெளிப்புறத்தில் நீல நிறம் வெளிறிக் காணப்படும்.

இரவில் சந்திரனின் ஒளி மங்கலானது என்பதால் ஒளி வட்டம் மங்கலாகவே தென்படும்.

Jan 11, 2015

காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

Share Subscribe
நாம் 2014 ஆம் ஆண்டைக் கடந்து  2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். பூமியானது தனது பாதையில்  சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம்.

இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள். லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம்.  உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199  நாட்களை எடுத்துக் கொள்கிறது.

சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங்களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக்கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் (Galaxy)  மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில்  10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.(சூரியனும் ஒரு நட்சத்திரமே).

 நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டம்.
ஓவியர் வரைந்தது  (மேலிருந்து பார்த்தால்).
இப்படத்தில் அம்பு குறியிடப்பட்ட இடத்தில் சூரியன் உள்ளது.
படம்: நன்றி, விக்கிபிடியா
மாட்டு வண்டிச் சக்கரம் ஒன்றைத் தரையில் படுக்க வைத்து மேலிருந்தபடி பார்த்தால் எப்படி இருக்கும்? நமது அண்டம் கிட்டத்தட்ட அந்த மாதிரியில் இருக்கிறது.  நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது.  அண்டத்துக்கு மையப் பகுதி உள்ளது. இந்த மையப் பகுதியை சூரியன் தனது பரிவாரங்களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது. சூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கூறலாம்.

சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் ”காஸ்மிக் ஆண்டு” (Cosmic Year) என்கிறார்கள். சூரியன் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அண்டத்தின் மையத்தை சூரியன் இதுவரை சுமார் 20 தடவை சுற்றி முடித்துள்ளது.