இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள். லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199 நாட்களை எடுத்துக் கொள்கிறது.
சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங்களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக்கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் (Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.
ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.(சூரியனும் ஒரு நட்சத்திரமே).
நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.
![]() |
ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டம். ஓவியர் வரைந்தது (மேலிருந்து பார்த்தால்). இப்படத்தில் அம்பு குறியிடப்பட்ட இடத்தில் சூரியன் உள்ளது. படம்: நன்றி, விக்கிபிடியா |
சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் ”காஸ்மிக் ஆண்டு” (Cosmic Year) என்கிறார்கள். சூரியன் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அண்டத்தின் மையத்தை சூரியன் இதுவரை சுமார் 20 தடவை சுற்றி முடித்துள்ளது.