Aug 31, 2014

பாலைவனத்தில் கற்கள் நகரும் மர்மம் என்ன?

Share Subscribe
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ஓரிடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது. அவை இடம் பெயரும் மர்மத்துக்கு இப்போது விடை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாறைகள் இவ்விதம் இடம் பெயரும் இடத்தின் பெயர் ரேஸ்டிராக் பிளாயா என்பதாகும். இது மரணப் பள்ளத்தாக்கு எனப்படும் பாலைவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பெயர் தான் ரேஸ்டிராக்கே தவிர இங்கு ரேஸ் எதுவும் நடப்பதில்லை.
ரேஸ்டிராக் பிளாயா பகுதி. ஒரே சம தரையாக
அமைந்துள்ளதைக் கவனிக்கவும்
அதை ஒரு பாலைவனம் என்றும் சொல்லலாம். ஆனால் மணல் கிடையாது. என்றோ வற்றிப்போன ஏரியின் படுகை என்றும் வருணிக்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை செடி கொடி கிடையாது. புல் பூண்டு கிடையாது. விலங்குகளும் இல்லை. மனித நடமாட்டமும் கிடையாது.

ஆனால் இங்குமங்குமாக சிறிய பாறைகள் கிடக்கின்றன. வெடிப்பு விட்ட  தரையில் அந்தப் பாறைகள் சட்டென்று கண்ணில் புலப்படும். பல பாறைகளின் எடை சுமார் 13 கிலோ. 300 கிலோ எடை கொண்ட பாறைகளும் உண்டு.
பல பாறைகள் நகர்ந்துள்ளதால் ஏற்பட்ட தடங்கள்
வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்.
ஓரிடத்தில் கிடக்கின்ற பாறை பின்னர் பார்த்தால் இடம் மாறியிருக்கும். அந்தப் பாறை நகர்ந்து சென்ற தடம் தெரியும். இவை “கால் முளைத்த” பாறைகள்.ஒன்றல்ல பல  பாறைகள் நகர்ந்து சென்ற தடம் தெளிவாகத் தெரிகிறது. தடத்தை வைத்துச் சொல்வதானால் சில பாறைகள் 1500 அடி அளவுக்கு நகர்ந்துள்ளன.

அந்தப் பாறைகளை யார் நகர்த்தியிருப்பார்கள்? காற்றில் உருண்டு சென்றிருந்தால் இப்போது தெரிகின்ற தடம் ஏற்பட வாய்ப்பில்லை. யாராவது கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றால் மட்டுமே பாறை நகர்ந்து சென்ற தடம் ஏற்பட முடியும்.
ஒரு பாறை எவ்வளவு தூரம் நகர்ந்து வந்துள்ளது என்பதைக் கவனிக்கவும்.
அப்படி யாரேனும் இழுத்துச் சென்றிருந்தால் அவரது காலடித் தடமும் மண்ணில் பதிவாகியிருக்கும். ஆகவே பாறைகள் தானாகத் தான் நகர்ந்து சென்றிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒன்று அவற்றை நகரச் செய்திருக்க வேண்டும்.

1900 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மர்மம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்துள்ளன. எதிலும் மர்மத்தைக் காண விரும்புகிறவர்களோ இது வேற்றுலகவாசியின் வேலையாக இருக்கலாம் என்று கூறினர்.
ஒரே நேர்கோட்டில் நகர்ந்து வந்துள்ள பாறை
ஆனால் இந்தப் பாறைகள் நகருவதை கடந்த காலத்தில் யாருமே நேரில் கண்டதில்லை. காமிராவிலும் இது பதிவாகியது இல்லை.

இந்த நிலையில் தான் நிபுணர் ஜேம்ஸ் நாரிஸ்  அங்கு தானியங்கி காமிராவைப் பொருத்தி விட்டு வந்தார். அது விட்டு விட்டு அவ்வப்போது படம் எடுக்கின்ற காமிராவாகும்.

அந்த காமிரா சரியாக செயல்படுகிறதா என்று சோதிக்க அண்மையில் அவர் ரேஸ்டிராக் பிளாயாவுக்குச் சென்றார். அவருடன் ரிச்சர்ட்  நாரிஸும் சென்றார்.

அங்கு அவர்கள் ஒன்றல்ல சுமார் 60 பாறைகள் தாமாக நகர்வதைக் கண்ணால் கண்டனர். அவை நகர்ந்த போது லேசான சத்தமும் கேட்டது.பாறைகளை நகர்த்தியது வேறு எதுவுமல்ல. நீரில் மிதக்கின்ற பனிக்கட்டி வில்லைகள்தான். தண்ணீர் எங்கிருந்து வந்தது?

பாறைகள் எப்படி நகருகின்றன என்பதை பின்னர் ஜேம்ஸ் நாரிஸ் விவரித்தார்.

ஜோடியாக நகர்ந்து வந்துள்ள பாறைகள்
பாறைகள் நகருவதில் பெரிய மர்மம் எதுவுமில்லை. அந்த இடத்தில் மழை என்பது அபூர்வம். வருஷத்தில் இரண்டு அங்குலம் மழை பெய்தால் உண்டு. குளிர் காலத்தில் இப்படி மழை பெய்தால் களிமண் பூமி என்பதால் இரண்டு மூன்று செண்டிமீட்டர் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கும்.

அது கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே தேங்கும் தண்ணீரின் மேற்புறம் உறைந்து போகும். உறைந்த பனிக்கட்டி சில்லு சில்லுகளாக நீரில் மிதக்கும்.  தேங்கும் தண்ணீர் குறைவு என்பதால் பாறைகளின் மேற்புறம் தண்ணீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

அந்தப் பகுதியில் குளிர்காலத்தில் தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும். இதன் விளைவாக மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் பாறைகள் மீது மோதும். இவை மெல்லியவை தான். ஆனால் கெட்டியானவை.

தேங்கும் தண்ணீர் காரணமாக நீருக்கடியில் உள்ள களிமண் தரை சறுக்கிச் செல்வதற்கு உகந்த அளவில் இருக்கும்.  கடும் காற்று பனிக்கட்டி சில்லுகளைத் தாக்கும் போது அவை பாறை மீது மோத பாறைகள் சறுக்கியபடி நகருகின்றன. காற்று விட்டுவிட்டு அடிக்கும் போது ஒவ்வொரு தடவையும் பனிக்கட்டி சில்லுகள் மோதும் போது பாறை சில மில்லி மீட்டர் நகரலாம்.

பின்னர் வெயில் காரணமாக தண்ணீர் ஆவியாகி விடும். பாறைகள் நகர்ந்த இடம் காய்ந்து தெளிவான தடமாகத் தெரியும்.

 குளிர்காலமாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் இருக்கவேண்டும்.கடும் காற்று வீச வேண்டும். இப்படியாக பல நிலைமைகளும் ஒன்று சேரும் போது தான் பாறைகள் நகருகின்றன.

இந்தப் பகுதியானது  சிறிது கூட மேடுபள்ளம் இன்றி நூல் பிடித்தது போல சமதரையாக இருப்பதும் பாறைகள் நகருவதற்குக் காரணமாக உள்ளது.

 பாறைகள் நகரும் சூழ்னிலைகள் உண்டானாலும் அந்தத் தடவை மிகச் சிறிது தூரமே நகரலாம். வேறு சில சமயங்களில் அதிக தூரம் நகரலாம். அல்லது  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாறைகள் அதே இடத்தில் காணப்படலாம். ஆகவே பாறைகள் இடம் பெயருவது என்றோ எப்போதோ நடைபெறுவதாக இருக்கிறது.. ஆகவேதான் இது யார் கண்ணிலும் படாமல் இதுவரை மர்மமாக இருந்து வந்துள்ளது.

Aug 30, 2014

மங்கள்யான் எங்கே இருக்கு?

Share Subscribe
இந்திய விண்வெளி அமைப்பு செலுத்திய மங்கள்யான் விண்கலம் இன்னும் சுமார் மூன்று வாரங்களில் செவ்வாய் (Mars) கிரகத்துக்குப் போய்ச் சேர இருக்கிறது. 90 சதவிகிதப் பயணத்தை முடித்துள்ள மங்கள்யான் இன்னும் சில லட்சம்  கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது.

மங்கள்யானைப் பொருத்த வரையில் அடுத்த முக்கிய நடவடிக்கை அதன் வேகத்தைக் குறைப்பதாகும். அப்படி வேகத்தைக் குறைத்தால் தான் அந்த விண்கலம் செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பிக்கும். மங்கள்யான் இப்போது மணிக்கு சுமார் 80,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.  இது மணிக்கு சுமார் 6,000 கிலோ மீட்டராகக் குறைக்கப்பட்டாக வேண்டும்.
மங்கள்யான் செவ்வாயை  (MARS)  நெருங்க 33 நாட்கள் இருந்த போது
 வரையப்பட்ட படம். MOM  என்பது மங்கள்யானைக் குறிப்பதாகும். மங்கள்யான் ஓரம்கட்டி செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கியுள்ளதைக் கவனிக்கவும். (படம் நன்றி ISRO)
வேகத்தைக் குறைக்கும் நோக்கில் மங்கள்யானில் உள்ள பிரதான எஞ்சின் இயக்கப்படும். அப்போது அந்த விண்கலம்   நேர் எதிராகத் திரும்பி, அதுவரை சென்று கொண்டிருந்த   திசையை நோக்கி நெருப்பைப் பீச்சும். இதன் விளைவாக வேகம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குக் குறையும். இது மிக முக்கியமான நடவடிக்கை ஆகும்.

விண்கலத்தில் உள்ள பிரதான எஞ்சின் சுமார் 300 நாட்கள் செயல்படாமல் இருந்ததாகும். மங்கள்யான் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாயை நெருங்கிய பின்னர் இங்கிருந்து ஆணை பிறப்பித்தால் அந்த ஆணையின் சிக்னல்கள் போய்ச் சேரவே சுமார் 10 நிமிஷம் ஆகும். எனவே சில நாட்கள் முன்கூட்டியே ஆணை பிறப்பிக்கப்படும். அது கம்ப்யூட்டரில் பதிவாகி   உரிய நேரத்தில் எஞ்சினை இயக்க கம்ப்யூட்டரே ஆணை பிறப்பிக்கும்.

எஞ்சினுடன் இணைந்த  டாங்கிகள் ஒன்றில் திரவ எரிபொருளும் மற்றொன்றில் ஆக்சிஜன் அடங்கிய பொருளும் இருக்கும். பிசகு ஏற்பட்டு எஞ்சின் இயங்காமல் போவதற்கு சிறிது கூட வாய்ப்பில்லை என்று இஸ்ரோ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மங்கள்யான் வளைந்த பாதையில் சென்றுள்ளதைக் கவனிக்கவும். MOI  என்பது
செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் மங்கள்யான் சிக்குவதைக் குறிப்பதாகும்.( படம்:ISRO)
ஒரு வேளை.. ...செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்காமல் போனால் விண்கலம் சூரியனைச் சுற்ற ஆரம்பித்து பல காலம் சூரியனை சுற்றிக்கொண்டிருக்கும். இதற்கு முன்னர் சில அமெரிக்க, ரஷிய விண்கலங்களுக்கு இவ்வித கதி நேர்ந்துள்ளது.

ஆனால் அதற்குப் பிறகு இது விஷயத்தில்தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல.   2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்புவதில் வெற்றி கண்ட இஸ்ரோவுக்கு இதில் அனுபவம் உள்ளது. சந்திரனை நெருங்கிய பின்னர் சந்திரயானின் வேகத்தை நன்கு குறைத்ததன் பலனாகவே  சந்திரயான் விண்கலம் சந்திரனின் பிடியில் சிக்கியது.

ஆகவே மங்கள்யானை செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்வதில் பிரச்சினை இராது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள்  நம்புவதற்கு இடம் இருக்கிறது.

அடிப்பிரச்சினை இது தான். நெடுஞ்சாலையில் கார் அல்லது லாரி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள கட்டிட வாசலில் வண்டி போய் நிற்க வேண்டும்.

சற்று தொலைவிலிருந்தே ஓரம் கட்ட ஆரம்பித்து வண்டியின் வேகத்தைக் குறைத்தால் தான் கட்டிட வாசலில் வண்டியை கொண்டு  போய் நிறுத்த முடியும். ஆனால் வண்டியின் வேகத்தைக் குறைக்காமலே இருந்தால் வண்டி தொடர்ந்து நெடுஞ்சாலையில் தான் போய்க் கொண்டிருக்கும். செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவது என்பது கிட்டத்தட்ட இது மாதிரி தான்.

மங்கள்யான் கடந்த ஆண்டு நவம்பர் கடைசியில் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டுக் கிளம்பியது. அது ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு தானாக மிதந்து செல்வது போல சூரியனின் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டதாகி சூரியனை சுற்ற முற்பட்டது. அந்தக் கட்டத்தில் எஞ்சின் இயக்கம் எதுவும் இருக்கவில்லை.

ஆனால் செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கும் வகையில் விண்கலத்தை ஓரம் கட்ட அவ்வப்போது சிறிய பீச்சு கருவிகளை இயக்கினர். விண்கலத்தின் பாதையை சிறிதளவுக்கு மாற்றுவதற்கு இந்த பீச்சு கருவிகளே போதும். இப்போது மங்கள்யான் மிக நன்றாகவே செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கி விட்டது.

மங்கள்யான் செவ்வாயை எவ்விதம் சுற்றி வரும் என்பதை
இப்படம் விளக்குகிறது. ( படம்: நாஸா)
மங்கள்யான் செவ்வாயின் பிடியில் சிக்கிய பிறகு செவ்வாய் கிரகத்தை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும்.  நீள்வட்டப் பாதை என்பதால் ஒரு சமயம் அது செவ்வாயின் தரையிலிருந்து 366  முதல் 500 கிலோ மீட்டர் உயரத்திலும் இன்னொரு சமயம் 88 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும்.

ஒரு விண்கலம் செவ்வாயை எட்டிய பின் செவ்வாயில் தரை இறங்குவது என்பது மேலும் சிக்கலான விஷயமாகும்.  மங்கள்யானை செவ்வாயின் தரையில் இறக்கும் திட்டம் எதுவும் கிடையாது.

Aug 27, 2014

எட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்யும் விண்கலம்

Share Subscribe
 நாஸா அனுப்பிய ஒரு விண்கலம் எட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. 2006  ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) எனப்படும் அந்த விண்கலம் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது. அது ஒன்றும் ஆமை வேகத்தில் செல்லவில்லை. மணிக்கு சுமார் 65 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது

அது இன்னும் சுமார் ஓர் ஆண்டு பயணம் செய்தாக வேண்டும். அது போய்ச் சேர வேண்டிய இடம் புளூட்டோ.  புளூட்டோ சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது.
 நியூஹொரைசன்ஸ் விண்கலம் நெப்டியூனின் சுற்றுப்பாதையை
கடந்துள்ளதை இப்படம் காட்டுகிறது.
ஆளில்லா விண்கலமான நியூஹொரைசன்ஸ் இப்போது நெப்டியூன் என்னும் கிரகத்தின் சுற்றுப்பாதையைக் கடந்து சென்றுள்ளது. அந்த அளவில் அது 440 கோடி கிலோ மீட்டர்  தூரத்தைக் கடந்து சென்றுள்ளது.  இன்னும் சுமார் 37 கோடி கிலோ மீட்டர்  பயணத்துக்குப் பிறகு நியூஹொரைசன்ஸ் அடுத்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி  புளூட்டோவை சென்றடையும்.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில்
புளூட்டோதான் மிகச் சிறியது.
சூரிய மண்டலத்தில் புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டால் ஒன்பது கிரகங்கள் உள்ளன. நாஸா முன்னர் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை  நெருங்கிச் சென்று படங்களைப் பிடித்து அனுப்பின. அந்த கிரகங்களைப் பற்றிய தகவல்களையும் அனுப்பின. புளூட்டோ ஒன்று தான் பாக்கியாக இருந்தது.  சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புளூட்டோ தான் மிகச் சிறியது.

அண்மைக் காலம் வரை புளூட்டோ ஒரு கிரகமாகக் கருதப்பட்டது. இப்போது அது குட்டிக் கிரகம் என ”பதவி இறக்கம்” செய்யப்பட்டுள்ளது.

சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் புளூட்டோ பற்றி விரிவாக அறிந்து கொள்ள இயலவில்லை. ஆகவே புளூட்டோ பற்றி நியூஹொரைசன்ஸ் தெரிவிக்கக்கூடிய தகவல்களை அறிய விஞ்ஞானிகள் மிக ஆவலாக இருக்கின்றனர்.

நியூஹொரைசன்ஸ் விண்கலத்தில் உள்ள பெரும்பாலான கருவிகள் இப்போது “ உறக்க நிலையில்” வைக்கப்பட்டுள்ளன. அதாவது அவை செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புளூட்டோவை நெருங்கும் சமயத்தில்  அவை செயல்படுத்தப்படும்.

விண்கலத்தில் உள்ள கருவிகள் செயல்படுவதற்கு மின்சாரம் தேவை. இதைக் கருத்தில் கொண்டு அணுசக்தி பாட்டரி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டரியில் புளூட்டோனியம்-238 என்னும் அணுசக்திப் பொருள் 10 கிலோ அளவுக்கு  உள்ளது. ( புளூட்டோனியம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு புளூட்டோவின் பெயர் அதற்கு வைக்கப்பட்டது)

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை ஆராய்ந்த பின்னர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். புளூட்டோவுக்கும் மிக அப்பால் வால் நட்சத்திரங்கள் அடங்கிய குய்பெர் வட்டாரத்துக்கும் அந்த விண்கலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் வியாழன் கிரகத்துக்கும் அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட பயனீர்-1 பயனீர்-2, வாயேஜர் -1, வாயேஜர் -2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் கோடானு கோடி கிலோமீட்ட்ர் தொலைவைத் தாண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. 

Aug 25, 2014

சந்திரனின் மறுபுறம் எப்படி இருக்கும்?

Share Subscribe
வலைப்பதிவு வாசகர் ஒருவர் சந்திரனின் மறுபுறம் எப்படி இருக்கும் என்று கேட்டிருந்தார். உண்மையில் சந்திரனின் மறுபுறம் வித்தியாசமாகத்தான் உள்ளதாகப் படங்கள் காட்டுகின்றன.

பூமி தனது அச்சில் சுழல்கிறது. பூமி ஒரு தடவை சுற்றி முடித்தால் அதை ஒரு நாள் என்கிறோம்.  சந்திரனும் தனது அச்சில் சுழல்கிறது. ஆனால் சந்திரனில் பகல் என்பது சுமார் 14 நாள். இரவு என்பது சுமார் 14 நாள். பூமியுடன் ஒப்பிட்டால் சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்கிறது.

சந்திரன் தனது அச்சில் சுழன்றாலும் எப்போதும் சந்திரனின் ஒரு புறத்தைத் தான் நாம் காண்கிறோம். சந்திரனின் மறுபுறத்தைக் காண முடிவதில்லை.

 வீட்டில் குளோப் இருந்தால் அல்லது ஏதாவது உருண்டையான பொருள் இருந்தால் அதை லேசாக சுழலும்படி செய்யுங்கள். அது ஒரு தடவை சுற்றி முடிக்கும் போது அந்த உருண்டையின் எல்லாப் புறங்களையும் நம்மால் பார்த்து விட முடியும்.
சந்திரன் தனது அச்சில் சுழலும் விதம் 1. முதல் நிலை பௌர்ணமி 2 . கால் சுற்று. 3 .அரை சுற்று. அமாவாசை. 4. முக்கால் சுற்று. மறுபடி சந்திரன் முதல் நிலைக்கு  வந்து சேரும் போது   தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடித்து பழையபடி அதே முகத்தை பூமிக்குக் காட்டுகிறது. (படம்:NR)
ஆனால் சந்திரன்  தனது அச்சில் சுழன்றாலும் அதன் ஒரு புறத்தைத் தான் நம்மால் காண முடிகிற்து. இதற்கு  பூமி தான் காரணம்.

 சந்திரனை விட பூமி வடிவில் பெரியது. ஆகவே பூமிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் விளைவாக பூமியானது சந்திரன் தனது அச்சில் வேகமாக சுழல முடியாதபடி தடுத்து வருகிறது.

 ஒரு கார் நான்கு அடிக்கு ஒரு தடவை பிரேக் போட்டபடி சென்றால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியில் சந்திரன் பிரேக் போட்டபடி தனது அச்சில் சுழல்கிறது. இந்த நிலையில் சந்திரன் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க 27.322 நாட்கள் ஆகின்றன. சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கும் அதே போல 27.322 நாட்கள் ஆகின்றன. ஆகவே சந்திரன் எப்போதும் தனது ஒரு புறத்தை மட்டும் காட்டுவதாகிறது.

சோவியத் யூனியன் 1959 ஆம் ஆண்டில் செலுத்திய லூனா-3  விண்கலம் சந்திரனை சுற்றிய போது சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்து அனுப்பியது. சந்திரனை சுற்றிய முதல் விண்கலம்  அதுவேயாகும். அதன் பின்னர் சந்திரனுக்கு அமெரிக்கா அனுப்பிய விண்வெளி வீரர்கள் சந்திரனின் மறுபுற்த்தைப் படம் எடுத்தனர்.அமெரிக்காவின் வேறு விண்கலங்களும் சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்து அனுப்பின.

 நம்மால் காண முடியாத
சந்திரனின் மறுபுறம்
சந்திரன் வழக்கமாகக்
காட்டும் முகம்
சந்திரனின் மறுபுறம் உண்மையில் வித்தியாசமாகத்தான் உள்ளது. இடது புறத்தில் உள்ள படத்தைக் கவனித்தால் கருமையான திட்டுகள் அதிகம் காணப்படும். வலது புறம் உள்ள படத்தில் அதாவது சந்திரனின் மறுபுறத்தில் கருமைத் திட்டுகள் அனேகமாக இல்லை.

கருமைத் திட்டுப் பகுதிகள் ஓரளவில் சமதரைகள். சந்திரனில் வட்ட வடிவப் பள்ளங்கள் நிறையவே உள்ளன. இவை ஏதோ ஒரு காலத்தில் விண்கற்கள் தாக்கியதால் ஏற்பட்டவை. சந்திரனின் முன்புறத்தை விட சந்திரனின் பின் புறத்தில் வட்ட வடிவப் பள்ளங்கள் அதிகமாக உள்ளன.

சந்திரனின் மறுபுறத்தில் விண்வெளியை ஆராய்வதற்கென பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை நிறுவினால் அது சிறப்பாக செயல்படும் என்று வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பூமியில் உள்ள பல எலக்ட்ரானிக் கருவிகள் வெளிப்படுத்தும் சிக்னல்களின்  இடையூறு அதற்கு இராது என்று அவர்கள் கூறுகின்றனர்.

சந்திரன் பூமிக்குத்தான் தனது மறுபுறத்தைக் காட்டுவதில்லையே தவிர, சூரியனுக்கு தனது இரு புறங்களையும் காட்டுகிறது. அமாவாசையன்று சந்திரனின் ( நாம் காணாத ) மறுபுறம்  சூரியனை நோக்கியபடி அமைந்திருக்கும்.

அமெரிக்காவுக்கும்  சோவியத் யூனியனுக்கும்  இடையே  கடும்  விரோதம் நிலவிய  காலத்தில்  சந்திரனின்  மறுபுறத்தில்  ரகசியமாக  அணுகுண்டுகளை  வெடித்து  சோதனை  நடத்துவது  பற்றி   அமெரிக்காவில் சிந்திக்கப்பட்டது .  பூமியில்  அணுகுண்டு வெடித்து  சோதனை  நடத்தினால் கண்டுபிடித்துவிட முடியும் என்ற காரணத்தால் இவ்விதம் சிந்திக்கப்பட்டது . ஆனால் நல்ல வேளையாக அந்த எண்ணம்  கைவிடப்பட்டது.

Aug 22, 2014

ஓர் எரிமலை மிரட்டுகிறது

Share Subscribe
அட்லஸ் புத்தகத்தில் ஐஸ்லாந்து நாட்டைத் தேடிக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். அட்லாண்டிக் கடலின் வட கோடியில் அதாவது ஐரோப்பாவுக்கு வட மேற்கே  உள்ள சிறிய தீவு நாடு தான் ஐஸ்லாந்து.

பெயருக்கு ஏற்றபடி ஐஸ்லாந்தில்  நிறைய ஐஸ் உண்டு. எங்கு பார்த்தாலும் உறைபனிக்கட்டி தென்படும். அந்த ஐஸ்கட்டி நாட்டில் தான் நிறைய நெருப்பும் இருக்கிறது. அது தான் எரிமலைகள். அந்த சின்ன நாட்டில் 20 எரிமலைகள் உள்ளன.
படத்தில் மேலே வலது மூலையில் ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ளது தான் ஐஸ்லாந்து
இப்போது ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை மிரட்டி வருகிறது. அதாவது அந்த எரிமலை வட்டாரத்தில் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அந்த எரிமலை நெருப்பையும் எரிமலைச் சாம்பலையும் கக்க ஆரம்பிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது  ஐரோப்பிய நாடுகளில் விமான சர்வீசுகளை நடத்தும் நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் பல நாட்களுக்கு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நாடுகள் (சிவப்பு நிறத்தில்) ஓரளவு பாதிக்கப்பட்ட நாடுகள் ( ஆரஞ்சு நிறத்தில்)
ஐஸ்லாந்து (பச்சை நிறத்தில்)
ஏனெனில் எரிமலையிலிருந்து வெளிப்படும் எரிமலைச் சாம்பல் வானில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புக்குப் பரவும். இது வானில் பறக்கும் விமானங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும்.

இப்போது மிரட்டி வரும்  எரிமலையின் பெயர் பர்டார்புங்கா. எரிமலைப் பிராந்தியத்தில் பொதுவில்  நில நடுக்கங்களும் உண்டு. கடந்த 16 ஆம் தேதி சனிக்கிழமையிலிருந்து திங்கள் காலை வரை 2600 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. திங்கள் காலையில் கடும் பூகம்பம் நிகழ்ந்தது.

பர்டார்புங்கா எரிமலை ஐஸ்லாந்தின் வடமேற்குப் புறத்தில் உறைபனி படிந்த இடத்தில் உள்ளது.1910 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் அது  மிரட்டுகிறது.
பர்டார்புங்கா எரிமலை வாய் இந்த உறைபனிக்கு அடியில் உள்ளது.
எரிமலை வாயின் அகலம் 10 கிலோ மீட்டர்.
வானில் எரிமலைப் புகையின் ஊடே விமானத்தைச் செலுத்திச் செல்வது ஆபத்து. முதலாவதாக விமானத்தை ஓட்டிச் செல்பவருக்கு எதிரே என்ன இருக்கிறது என்பது தெரியாது. விமானியின் முன்புறமுள்ள கண்ணாடி மீது சாம்பல் படிந்து விடும். இதனால் விமான நிலையத்தில் இறங்குவதிலும் பிரச்சினை ஏற்படும். இரண்டாவதாக எரிமலைப் புகையில் அடங்கிய சாம்பல் விமானத்தின் மற்ற வெளிப்புறப் பகுதிகளில் படிந்து பிரச்சினையை உண்டாக்கும்.

மூன்றாவது பிரச்சினைதான் ஆபத்தானது. எரிமலைச் சாம்பலில் அடங்கிய துகள்கள் விமான எஞ்சினுக்குள் புகுந்த பின் உருகி விமான எஞ்சின் பகுதிகள் மீது படியும். இது கண்ணாடியை உருக்கி எஞ்சின் பகுதிகள் மீது ஊற்றியது போன்ற விளைவை உண்டாக்கும். இதன் விளைவாக  விமான எஞ்சின்கள் சிறிது நேரம்  தற்காலிகமாக செயல்படாமல் போகும்.

 1982 ஆம் ஆண்டில் கோலாலம்பூரிலிருந்து நியூசீலந்து சென்று கொண்டிருந்த ஒரு விமானம் எரிமலைப் புகையில் சிக்கிக் கொண்ட போது  நான்கு எஞ்சின்களும் சிறிது  நேரம் செயல்படாமல் போயின. நல்ல வேளையாக அவை மீண்டும் செயல்படத் தொடங்கி அது பத்திரமாக இந்தோனேசியாவின் ஜாகர்த்தா விமான நிலையத்தில் இறங்கியது. எனினும் விமானத்தை பழுது பார்க்கப் பெரும் செலவு ஏற்பட்டது.

1989 டிசம்பரில் டோக்கியோவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு விமானத்தில் நான்கு எஞ்சின்களும் எரிமலைச் சாம்பலின் விளைவாக சிறிது நேரம் செயல்படாது போயின

இந்த மாதிரி சம்பவங்களுக்குப் பிறகு உலகில் ஏதாவது ஒரு பகுதிக்கு மேலே வானில் எரிமலை சாம்பல்  இருக்குமானால் அது பற்றி எல்லா விமானங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஏற்பாடு அமலுக்கு வந்தது.
2010  ஆண்டில் விமானப் போக்குவரத்துக்குப் பெரும் பிரச்சினையை
ஏற்படுத்திய எரிமலை
ஐஸ்லாந்தில் 2010 ஆம் ஆண்டில் Eyjafjallajokull என்னும் வாயில் நுழையாத பெயரைக் கொண்ட எரிமலை பெரும் புகையைக் கக்கிய போது  ஐரோப்பிய நாடுகள் இடையே இயங்குகிற மற்றும் அவ்வழியே இயங்குகிற பல ஆயிரம் விமான சர்வீசுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது என்பதுடன்  விமான நிறுவனங்களுக்குப் பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது.

இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஐரோப்பிய வட்டார விமானப் போக்குவரத்துக்குப் பொறுப்பான யூரோகண்ட்ரோல் நிறுவன அதிகாரி கூறுகையில் எரிமலைச் சாம்பல் பிரச்சினையை எதிர்கொள்ள தாங்கள் முன்னைவிட ஆயத்த நிலையில் இருப்பதாகச் சொன்னார். புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆண்டு தோறும் எரிமலைச் சாம்பல் சமாளிப்பு ஒத்திகைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பர்டார்புங்கா எரிமலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஐஸ்லாந்தில் பல எரிமலைகள் இருப்பது ஏன்? அது தனிக் கதை.

Aug 20, 2014

வானில் இரண்டு சந்திரன்கள் : வெறும் கட்டுக்கதை

Share Subscribe
உலகில் அவ்வப்போது இணைய தளம் மூலம் புருடாக்கள் கிளம்புவது வழக்கமாகி விட்டது. அவற்றில் ஒன்று   “வானில் இரட்டை சந்திரன்கள்” பற்றிய புருடாவாகும்.

எல்லோருக்கும் வானவியல் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் தான் பலரும் இப்படியான செய்தியை நம்ப முற்படுகிறார்கள்

என்றைக்குமே வானில் ஒரு சந்திரனைத் தான் காண முடியும். இரண்டாவது சந்திரன் தென்பட ஒரு போதும் வாய்ப்பு கிடையாது.

ஆனால் வருகிற 27 ஆம் தேதி இரவு சந்திரனும் அத்துடன் செவ்வாய் கிரகமும் வானில் இரண்டு முழு நிலவு போலக் காட்சி அளிக்கும் என்று  யாரோ கிளப்பிவிட்ட வதந்தியைப் பலரும் நம்பக்கூடும்.
இது இணைய தளங்களில் உலவும் படம். யாரோ வானில் இரண்டு சந்திரன்கள்
தெரிவது போல போலியாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.. பூமி உள்ளளவும் இது போன்று தெரிய சிறிதும் வாய்ப்பு கிடையாது. நன்றி: earthsky.org
சந்திரன் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது செவ்வாய் வெள்ளி, வியாழன் போன்ற கிரகங்களைக் காட்டிலும் அது பூமிக்கு அருகில் உள்ளது. ஆகவே அந்த வகையில் அது இரவு வானில் பெரியதாகத் தெரிகிறது.

செவ்வாய் விஷயம் வேறு. அது பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது எப்போதுமே வானில் சிவந்த நிறத்தில் ஒரு புள்ளியாகத் தான் தெரியும். சில சமயங்களில் சற்று பெரிய ஒளிப் புள்ளியாகத் தெரியும். ஆனால் அது  பௌர்ணமி நிலவு சைஸுக்குத் தெரிய பூமி உள்ளளவும் செவ்வாய் உள்ளளவும் வாய்ப்பே கிடையாது. 

ஆகவே இரவு வானில் சந்திரனும் செவ்வாயும்  இரண்டு பௌர்ணமி நிலவு போலத் தெரியும் என்று கூறுவது பொய். அப்படிக் கூறுவதற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லை.

ஆகஸ்ட்  27 ஆம் தேதி நீங்கள் இரவு வானை தாராளமாகக் காணலாம். அந்த வகையிலாவது வான் காட்சியை ஒருவர் காண்கிறார் என்றால் அது வரவேற்கத் தக்கதே.ஏனெனில் இப்போதெல்லாம் யாருக்கும் வான் காட்சியைக் காண நேரம் கிடைப்பதில்லை.

இங்கே இன்னொன்றையும் கூறியாக வேண்டும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி சந்திரன் கூடமுழு நிலவு சைஸுக்கு தெரியாது .  சொல்லப்போனால் அன்று இரவு சந்திரனை பார்ப்பதும் கடினமே.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 8 மணி வாக்கில் மேற்கு வானில் செவ்வாய் கிரகமும்
சனி கிரகமும் இவ்விதமாகத் தான் தெரியும்.படம்:Stellarium
வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி அமாவாசை. அந்த அளவில் 27 ஆம் தேதி என்பது  இரண்டாம் பிறை. மேற்கு வானில் இரண்டாம் பிறை சந்திரனைக் காண்பது மிக அரிது. மூன்றாம் பிறைச் சந்திரனைக்  காண்பது என்பதே அபூர்வம். எல்லோருக்கும் நான்காம் பிறை சந்திரன் தான் எளிதில் கண்ணில் படும்.

27 ஆம் தேதியன்று மாலையில் இரண்டாம் பிறைச் சந்திரன்  சிறிது நேரம் மிக மெல்லியக் கீற்று போல தென்பட்டு விட்டு மாலை 6 மணி 57 நிமிஷத்துக்கு மேற்கு வானில் அஸ்தமித்து விடும். ஆகவே அதற்குப் பிறகு மேற்கு வானில் சந்திரன் தெரியாது.

நீங்கள் இரவு 8 மணி வாக்கில் மேற்கு வானைக் கவனித்தால் செவ்வாய் கிரகமும் அதன் அருகே சனி கிரகமும் தெரியும். செவ்வாய் சிறிய ஒளிப்புள்ளியாக சிவந்த நிறத்தில் தெரியும்.

இணைய தள வதந்திகளை நம்பி இரண்டு முழு நிலவுகளைக் காணலாம் என்ற நினைப்பில் மேற்கு வானைக் காண்பவர்கள் ஏமாந்து போனாலும் செவ்வாய், சனி ஆகிய இரு கிரகங்களைப் பார்த்தோம் என்று திருப்தி அடையலாம்.

அன்றைய தினம் இரவு 8 மணி வாக்கில் மேற்கு வானைக் காணும் போது செவ்வாய் கிரகம் சுமார் 20 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும். சனி கிரகம் 152 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.

இறுதியாகக் கூறுவதானால் 27 ஆம் தேதியன்று இரண்டு சந்திரன்கள் அல்ல ஒருசந்திரன் கூடத் தெரிய வாய்ப்பில்லை.

  

Aug 16, 2014

கிழக்கு வானில் அருகருகே வியாழன் வெள்ளி

Share Subscribe
வானில் வியாழன் கிரகத்தையும் (Jupiter) வெள்ளி (Venus)கிரகத்தையும் அருகருகே காண்பது அப்படி ஒன்றும் அதிசயமல்ல என்றாலும்  இப்போது  அதாவது ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணி வாக்கில் கிழக்கு வானில் இந்த இரண்டையும் அருகருகே காணலாம்.

வெள்ளி வியாழன் இரண்டுமே மற்ற கிரகங்களைக் காட்டிலும் பிரகாசமானவை என்பதால் இக்காட்சி ரம்மியமாக இருக்கும். சென்னையில் மற்றும் தமிழகத்தில் சூரிய உதயம் சுமார் 5-45 மணிக்கு இருக்கும் (சென்னையில் காலை 5-54 மணி ) என்பதால்  5 மணிக்கே எழுந்து பார்ப்பது நல்லது.

படத்தில் கீழே இருப்பது வெள்ளி. மேலே இருப்பது வியாழன்.
படம்; stellarium
வியாழன், வெள்ளி ஆகிய இரண்டில் வெள்ளி தான் அதிக பிரகாசத்துடன் இருக்கும்.

நம் பார்வையில் இரு கிரகங்களும் அருகருகே தோன்றினாலும் இரண்டும் வெவ்வேறு தொலைவில் உள்ளன, வெள்ளி கிரகம் 24 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள்து. வியாழன் கிரகமோ 93 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சூரிய மண்டலத்தில் வெள்ளி கிரகம் இரண்டாவது வட்டத்தில் இருந்தபடி சூரியனை சுற்றுகிறது.. வியாழன் கிரகம் ஐந்தாவது வட்டத்தில் இருந்தபடி சூரியனை சுற்றுகிறது.

இந்த இரண்டு கிரகங்களூக்கும் மேலே தேய் பிறைச் சந்திரனைக் காணலாம்.

Aug 14, 2014

கிழக்கு வானில் திருவாதிரை

Share Subscribe
சிரமத்தைப் பார்க்காமல் விடியற்காலையில் சீக்கிரமாக எழுந்தால் காலை 5 மணி வாக்கில் கிழக்கு வானில் திருவாதிரை நட்சத்திரத்தைக் காணலாம்.அத்துடன் வானில் தெரிகின்ற நட்சத்திரங்களிலேயே மிகவும் பிரகாசமாக உள்ள நட்சத்திரத்தையும் காணலாம்.

கீழே உள்ள படத்தில் இடது புற மேல் மூலையில் இருப்பது தான் திருவாதிரை நட்சத்திரம். ஆங்கிலத்தில் இது Betelguese  என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 643 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ( ஓர் ஒளியாண்டு தொலைவு என்பது சுமார் 9 லட்சம் கோடி கிலோ மீட்டர்.) அந்த அளவில் சுமார் 643 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாதிரையிலிருந்து கிளம்பிய ஒளியைத்  தான் நாம் இன்று காண்கிறோம்.  நாம் பாரக்கின்ற நேரத்தில் திருவாதிரை நட்சத்திரம் அங்கு இருக்கிற்தா என்று சொல்ல முடியாது.

திருவாதிரை நட்சத்திரம் சற்று சிவந்த நிறத்தில் காணப்படும். ஆகவே நீங்கள் அதை கவனிக்காமல் இருக்க முடியாது. வானவியல் நிபுணர்கள் திருவாதிரை நட்சத்திரத்துக்கு பெரிய செம்பூதம் (Super Redgiant)  என்று பெயரிட்டுள்ளனர்.

 நட்சத்திரங்களுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதுமை என்றெல்லாம் பல கட்டங்கள் உண்டு. திருவாதிரை இப்போது தனது வளர்ச்சிக் கட்டத்தில் மிகவும் உப்பி பூதாகார வடிவைப் பெற்றுள்ளது. அதனால் தான் அதற்கு செம்பூதம் என்று பெயர்.

இவ்விதம் வடிவில் பெருத்துள்ளதால் அதன் வெளிப்புறம் சிவந்த நிறத்தைப் பெற்றுள்ளது. உண்மையில் திருவாதிரை மிக மிகப் பெரியது.திருவாதிரை நட்சத்திரத்துக்குள் 160 கோடி சூரியன்களைப் போட்டு அடைக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.


காலை 5 மணிவாக்கில் கிழக்கு வானம் இவ்விதமாகக் காட்சி அளிக்கும். இப்படத்தின்
 இடது புற மேல் மூலையில் இருப்பது திருவாதிரை.
கீழே காணப்படுவது சிரியஸ் நட்சத்திரம். படம்:Stellarium

திருவாதிரை நட்சத்திரம் என்றாவது ஒரு நாள் வெடித்து விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திருவாதிரை நட்சத்திரத்தின் வயது சூரியனின் வயதை விடக் குறைவு தான். ஆனால் நட்சத்திரங்களைப் பொருத்த வரையில் மிக பிரும்மாண்டமான நட்சத்திரத்தின் ஆயுள் குறைவு.

படத்தில் கீழ்ப்புறத்தில் உள்ள சிரியஸ் (Sirius)   நட்சத்திரம் வானில் நாம் காணும் நட்சத்திரங்களிலேயே மிகப் பிரகாசமானது. சம்ஸ்கிருதத்தில் இதற்கு லுப்தகம் என்று பெயர். இது சுமார் 9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பெரிய நட்சத்திரங்கள் பல  உள்ளன. ஒப்பு நோக்குகையில் அது அண்மையில் இருப்பதால் மற்ற நட்சத்திரங்களை விடப் பிரகாசமாகத் தெரிகிறது.

Aug 10, 2014

வானிலிருந்து கரியமிலவாயுக் கணக்கெடுப்பு

Share Subscribe
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் கார்பன் டையாக்சைட் வாயு (கரியமில வாயு, carbon dioxide) காற்று மண்டலத்தில் கலந்து வருகிறது. உலகிலுள்ள சுமார் 700 கோடிப் பேரும் ஓயாத துருத்தி போல சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர். விலங்குகளும் சுவாசிக்கின்றன. தாவரங்களும் தான்

எதை எரித்தாலும் கார்பன் டையாக்சைட் வாயு காற்றில் கலக்கிறது. கார், லாரி, ரயில் எஞ்சின், விமானம், கப்பல் என எண்ணற்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல், விசேஷ வகை கெரசின், எரிவாயு என ஏதாவது ஒரு வகை எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் வாயு தேவை. ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு எரியும் போது கார்பன் டையாக்சைட் தோன்றுகிறது.

வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும் மின்சாரம் தேவை. நிலக்கரியை எரித்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். நிலக்கரியை (அல்லது பழுப்பு நிலக்கரியை) எரிக்கும் போதும் கார்பன் டையாக்சைட் உற்பத்தியாகிறது.

கார்பன் டையாக்சைட் பற்றிய எந்த சமாச்சாரமாக இருந்தாலும் பத்திரிகைகளிலும் டிவிக்களிலும் கரிய புகையைக் கக்கும் ஆலைகளின் புகைப்போக்கிகளின் படத்தைப் போடுவார்கள். புகை வேறு. கார்பன் டையாக்சைட் வேறு. புகை கண்ணுக்குத் தெரியும். கார்பன் டையாக்சைட் கண்ணுக்குத் தெரியாது. அதற்கு நிறம் கிடையாது. சிறிது கூட புகை இல்லாமல் ஏராளமான கார்பன் டையாக்சைட் வாயுவை கக்கும் ஆலைகள் நிறையவே உண்டு.
அமெரிக்கா செலுத்தியுள்ள செயற்கைக்கோள்
காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகரித்துக் கொண்டே போனால் பல விபரீதங்கள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பூமியின் சராசரி வெப்பம் உயரும். அதனால் தென், வட துருவப் பகுதிகளில் உள்ள ஏராளமான பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்து கடல் மட்டம் உயரும். இதனால் கடலோரமாக உள்ள நகரங்களுக்கு ஆபத்து ஏற்படும். உலகில் பருவ நிலை மாறும். பயிர் விளைச்சல் பாதிக்கப்படும். இப்படியாக அவர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்

இந்த நிலையில் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் வாயுவை அதிகம் கலக்க விடுவது யார் என்பது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. உள்ளபடி சீனா தான் அதிக அளவில் கார்பன் டையாக்சைட் வாயுவை  கலக்க விடுகிறது. அமெரிக்கா அடுத்த இடத்தை வகிக்கிறது. ஐரோப்பிய யூனியன் முன்றாவது இடத்தையும் இந்தியா நான்காவது இடத்தையும் வகிக்கின்றன.

இப்பின்னணியில் உலகின் எந்தப் பகுதியிலிருந்து காற்று மண்டலத்தில் அதிக அளவில் கார்பன் டையாக்சைட் கலக்கிறது என்று துல்லியமாகக் கண்டறிவதற்காக அமெரிக்கா ஒரு செயற்கைக்கோளை உயரே செலுத்தியுள்ளது.
ஜப்பான் செலுத்தியுள்ள செயற்கைக்கோள்
ஜூலை முதல் வாரத்தில் உயரே செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளானது பூமியை வடக்கு தெற்காகச் சுற்றியபடி பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் எங்கெங்கு கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகமாக உள்ளது என்பதை அளவிட்டறியும். எங்கு கார்பன் டையாக்சைட் வாயு  நிறைய கிரகிக்கப்படுகிறது என்பதையும் அளவிடும். ஜப்பான் இதற்கு முன்னரே இப்படியான ஆய்வுக்கென வானில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்தியது. ஆனால் அமெரிக்க செயற்கைக்கோள் அதை விடத் துல்லியமாகக் கணக்கெடுக்கும் திறன் கொண்டது.

காற்று மண்டலத்தில் சேரும் கார்பன் டையாக்சைட் அனைத்தும் நிரந்தரமாகக் காற்று மண்டலத்தில் தங்கி விடுவதில்லை. பாதி அளவு தான் காற்று மண்டலத்தில் தங்குகிறது. மீதிப் பாதியில் பாதி கடலில் கலந்து விடுகிறது. மீதிப் பாதி தாவரங்களால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது.

பகல் நேரங்களில் தாவரங்கள் காற்றில் அடங்கிய கார்பன் டையாக்சைடை கிரகித்துக் கொள்கின்றன. தாவரங்கள் என்பதில் காடுகள் இதர நிலப் பகுதியில் உள்ள மரம் செடி கொடிகள், புற்கள் ஆகியனவும் அடங்கும்
.
தாவரங்களால் கிரகித்துக் கொள்ளப்படும் கார்பன் டையாக்சைட் வாயுவின் அளவு ஆண்டுக்கு ஆண்டு வித்தியாசப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? தாவரங்கள் கார்பன் டையாக்சைட் வாயுவைக் கிரகித்துக் கொள்வதற்கு வரம்பு ஏதேனும் இருக்குமா என்று அறிவது அமெரிக்க செயற்கைக்கோள் மூலமான ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.

காற்று மண்டலத்தில் சேரும் கார்பன் டையாக்சைட் வாயுவில் பாதி காற்று மண்டலத்தில் தங்குவதாகக் குறிப்பிட்டோம். கி.பி 1750 ஆம் ஆண்டு வாக்கில் உலகில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகரிக்கத் தொடங்கியது.

பின்னர் உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம், வாகனப் பெருக்கம், பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் விளைவாக கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகரிக்கலாயிற்று. இப்போது இது ஆண்டுக்கு 4,000 கோடி டன்னாக உள்ளது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக நாடுகளின் தலைவர்கள் பல தடவை கூடிப் பேசியுள்ளனர். சில திட்டங்களும் வகுக்கப்பட்டன. சர்வதேச ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியது. ஆனால் அவற்றின் அமல் திருப்திகரமான அளவில் இல்லை. இதற்குக் காரணம் உண்டு. அமெரிக்காவிலிருந்து வெளிப்படும் கார்பன் டையாக்சைட் சேர்மானத்தைக் குறைப்பது என்றால் அமெரிக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டும். இது அமெரிக்க மக்களின் பல ஆடம்பர மற்றும் சொகுசு வசதிகளைப் பாதிப்பதாக அமையும். ஆகவே அமெரிக்க அரசு மேற்படி சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்கத்  தயாராக இல்லை.

சொல்லப்போனால் கார்பன் டையாக்சைட் சேர்மானத்தால் பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதாகச் சொல்வதை அமெரிக்காவில் ஒரு சில தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர். இக்கருத்துக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாகச் சொல்ல முடியாது என்று வாதிக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கார்பன் டையாக்சைட் வாயு என்பது நச்சு வாயு அல்ல. நாம் வெளிவிடும் மூச்சில் கார்பன் டையாக்சைட் உள்ளது. நாம் சோடா குடிக்கும் போது நம் வயிற்றுக்குள் கார்பன் டையாக்சைட் வாயு செல்கிறது. சோடாவை உடைத்தால் அதிலிருந்து பொங்கி வருவது கார்பன் டையாக்சைட் வாயுவே. சோடா உட்பட பல குளிர் பானங்களிலும் மெனக்கெட்டு கார்பன் டையாக்சைட் வாயுவைக் கலக்கிறார்கள். சூடான காப்பி அல்லது டீயை மேலும் கீழுமாக நன்கு ஆற்றும் போதும் சிறிதளவு காற்று (கார்பன் டையாக்சைட்) கலக்கிறது.

 கார்பன் டையாக்சைட் வாயு பன்னெடுங் காலமாக நன்மை செய்து வருகிறது. சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் முழுவதும் அப்படியே விண்வெளிக்குப் போய் விடுவதாக வைத்துக் கொண்டால் விரைவில் பூமியானது ஒரேயடியாகக் குளிர்ந்து சுமார் 50 ஆண்டுகளில் உயிரினம் அனைத்தும் செத்து மடிந்து பூமி முழுவதும் உறைபனி மூடியதாகி விடும்

காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயுவும் இன்னும் சில வாயுக்களும் உயரே ஒரு படலம் போல செயல்பட்டு பூமியின் வெப்பம் அனைத்தும் விண்வெளிக்குச் சென்று விடாதபடி தடுத்து பூமியில் உயிரின வாழ்க்கையை சாத்தியமாக்கியுள்ளன.

ஆனால் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் வாயு மேலும் மேலும்  சேருவதன் விளைவாக பூமியின் சராசரி வெப்பம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  நாம் ஏற்கெனவே ஆபத்து அளவை எட்டிவிட்டோமா என்பதை அறிய நாஸாவின் செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவல்கள் உதவும்.