Jul 29, 2013

இந்தியாவின் சொந்த ‘ஜி.பி.எஸ்’ திட்டம்

Share Subscribe

அதென்ன ஜி.பி.எஸ் (GPS) என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24 செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது.  இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே ஜி. பி.எஸ் (Global Positioning System) என குறிப்பிடப்படுகிறது.  மேற்கொண்டு ஜி.பி.எஸ் பற்றி  விளக்க முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும். 
பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிற அமெரிக்க ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் (சிவந்த புள்ளிகள்0
 இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகில் பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் போதும். இவற்றின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வது தான் முக்கியம்.

 தமிழகத்தில் உள்ள ஒரு லாரி நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்த ஒரு நேரத்திலும் இவை இந்தியாவில் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதை லாரி நிறுவனத் தலைமையகத்தில் ஒரு திரையில் புள்ளிகள் வடிவில் காண முடியும். இதற்கு ஜி.பி. எஸ் செயற்கைக்கோள்கள் உதவும். சென்னை போன்ற ஒரு பெரு நகரில் ஓடுகின்ற பஸ்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதையும்  இதே போலக் க்ண்டறிய முடியும். 
காருக்குள் டிரைவர் சீட் எதிரே மேப் காட்டும் திரை
ஹைதராபாத் நகருக்கு ஒருவர் காரில் செல்கிறார். அவரது காரில் ஜி.பி.எஸ் தொடர்பு வசதிகள் உள்ளன. ஹைதராபாத்தின் விரிவான மேப்பைக் காட்டும் சில்லு ஒன்றை அவர் காரில் உள்ள கருவியில் செலுத்துகிறார். அவர் ஹைதராபாத்தில் வழி தெரியாமல்  அலைய வேண்டியதில்லை. காரில் உள்ள திரையில் தெரியும் மேப்பைப் பயன்படுத்தி எந்த இடத்துக்கும்  செல்ல முடியும். பாகப் பிரிவினையா? நிலங்களை சரியாகப் பங்கிட்டளிக்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும்.

   மலைப் பாதையில் நடந்து செல்கின்ற ஒருவர் வழி தவறிவிட்டால் அவர் தம்மிடமுள்ள்ள ஜி.பி.எஸ் கருவி மூலம் தாம் இருக்கின்ற இடத்தை அறிந்து கொள்ள இயலும். பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் இடுப்பில் ஜி.பி.எஸ் தொடரபுக் கருவியை செருகி விட்டால் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள இயலும். ஒரு நாயின் கழுத்தில் ஜி.பி எஸ் கருவி இருந்தால் அந்த நாய் தொலைந்து போனாலும் கண்டுபிடித்து விடலாம். ஜி.பி எஸ் செயற்கைக்கோள்களுக்கு இப்படி எவ்வளவோ பயன்கள் உள்ளன்.
   .  
  ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களுக்கு வேறு முக்கியமான பயன்பாடும் உண்டு. போர்க் காலத்தில் எதிரிகளின் நிலைகளைக் குறி பார்த்துத் தாக்கவும் அவை உதவும். சொல்லப் போனால் அமெரிக்க ராணுவம் போர்க் காரியத்துக்காகத் தான் ஜி.பி.எஸ் ஏற்பாட்டை உருவாக்கியது.

இராக் மீது அமெரிக்கா நடத்திய போரின் போது அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இராக் அருகே உள்ள கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு போர்க் கப்பலிலிருந்து செலுத்தப்பட்ட குரூயிஸ் ஏவுகணை ஒன்று இராக்கின் தலைநகரான பாக்தாத் நகரில் இராக்கிய உள்துறைக் கட்டடத்தை மட்டும் குறி பார்த்துத் தாக்கி நிர்மூலம் செய்தது. ஏவுகணைக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்? ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்கள் இதற்கு உதவின. சரி, அமெரிக்க ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்களுக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்.?
டம்மி வெடிகுண்டு ஒன்றுக்குள்
GPS வழி செலுத்தும் கருவியைப் பொருத்துகிறார்கள்.
 தேசப் படங்களைக் காட்டும் அட்லஸ் புத்தகத்தில் எந்த ஒரு தேசத்தின் படமாக இருந்தாலும் அதில் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் கோடுகள் போடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். வடக்கு தெற்காக உள்ளவை தீர்க்க ரேகைகள் (Longitude). கிழக்கு மேற்காக உள்ளவை அட்ச ரேகைகள் (Latitude)

.  . இக்கோடுகள் மேப்புகளில் உள்ளனவே தவிர பூமி மீது இப்படிக் கோடுகள் கிடையாது. எனினும் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாக அறிய  இக்கோடுகள் உதவியாக உள்ளன.
 காந்தி நகரில் மூன்றாவது பிரதான சாலையும் ஐந்தாவ்து குறுக்குத் தெருவும் சந்திக்கின்ற இடத்தின் முனையில் உள்ள பெட்டிக் கடை என்று அடையாளம் கூறுகிறோம். அட்சரேகையும் தீர்க்க ரேகையும் இப்படித் தான் இந்த இரண்டு ரேகைகளும் (கோடுகள்) சந்திக்கிற ஓர் இடத்தை அவை குறிக்கின்றன.
பூமியின் மீதாக அட்ச ரேகைகள், மற்றும்  தீர்க்க ரேகைகள் உள்ளதாக நாம் வைத்துக் கொண்டுள்ளோம். பல முக்கிய பணிகளுக்கு இவை உதவுகின்றன
  உதாரணமாக தமிழகத்தில் உள்ள  உடுமலைப்பேட்டை 10.36 (வடக்கு) அட்சரேகையும் 77.17 (கிழக்கு) தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. உடுமலைப்பேட்டைக்கு சற்று வடக்கே உள்ள ஒரு கிராமத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாக இருக்கும். மிகத் துல்லியமாகக் கணக்கிட்டால் அக்கிராமத்தின் பஜார் தெருவில் உள்ள பாத்திரக்கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் ஒரு விதமாகவும் பாத்திரக் கடைக்கு இரண்டு கடை தள்ளி அமைந்த ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாகவும் இருக்கும்
.
 அக்கிராமத்தின் மிகத் துல்லியமான மேப்புகள் இருந்தால்  பாத்திரக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் மிகச் சரியாகக் கண்டறிய முடியும்.

  பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற விசேஷ வகை செயற்கைக்கோள்கள் மூலம் பூமியின் எந்தப் பகுதியையும் மேலிருந்தபடி படம் பிடித்து மிகத் துல்லியமான மேப்புகளைத் தயாரித்து விட முடியும்.
பாக்தாத் நகரின் மிகத் துல்லியமான மேப்புகள் அமெரிக்காவிடம் இருந்த காரணத்தால் தான் அமெரிக்க குரூயிஸ் ஏவுகணையால் குறிப்பிட்ட கட்டடத்தை மட்டும் தாக்கி அழிக்க முடிந்தது. இப்படியான ஏவுகணைகளின் கம்ப்யூட்டர்களில் மேப்புகள் தகுந்த வடிவில் இடம் பெறும். குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் குறிப்பிட்ட அட்சரேகையும் சந்திக்கிற இடத்தைத் தாக்கும் வகையில் ஏவுகணையில் ஆணை இடம் பெற்றிருக்கும். அது இடத்தைக் குறி தவறாமல் தாக்குவதற்கு ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஓயாது அனுப்பும் சிக்னல்கள் உதவுகின்றன். இந்த செயற்கைக்கோள்களிலிருந்து வெறும் சிக்னல்களும் துல்லியமான நேரமும் தொடர்ந்து வெளிப்பட்டிருக்கும். இவை தான் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன
இராக் மீதான் போரின் போது அமெரிக்கப் போர்க் கப்பலிலிருந்து
சீறிக் கிளம்பும் குரூயிஸ் ஏவுகணை
 மேலே சொல்லப்பட்ட விவரத்திலிருந்து மிகத் துல்லியமான மேப்புகள் மிகவும் முக்கியமானவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அமெரிககாவிடம் இப்படியான மேப்புகளைத் தயாரிப்பதற்கான செயற்கைக்கோள்கள் உள்ளன என்ப்து குறிப்பிடத்தக்கது.
மேப்புகள் துல்லிய்மாக இல்லாவிடில் பிரச்சினைதான். ஒரு சமயம் கோசாவா போரின் போது அமெரிக்கா செலுத்திய ஏவுகணை தவறுதலாக சீனத் தூத்ரகக் க்ட்டடத்தைத் தாக்கியது. பழைய மேப்பைப் பயன்படுத்தியதால் இப்படி தவறு ஏற்பட்டதாக சீனாவிடம் அமெரிக்க விளக்கம் அளித்ததால் விஷயம் பெரிதாகவில்லை
.
இந்தியாவிடமும் இத்தகைய செயற்கைக்கோள்கள் உள்ளன. இந்தியா 2005 ஆம் ஆண்டில் மேப்புகளைத் தயாரிப்பதற்கென கார்ட்டோசாட்-1 செயற்கைக்கோளை ஏவியது. அதைத் தொடர்ந்து மேலும் இவ்வகையான மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. மேலும் துல்லியமான மேப்புகளைத் தயாரிக்க 2014 ஆம் ஆண்டில் ஐந்தாவது கார்ட்டோசாட் செலுத்தப்பட இருக்கிறது. இவை உலகில் எந்த ஓர் பகுதியையும் படம் பிடித்து மேப் தயாரிக்க வல்லவை.
இந்தியாவின் கார்ட்டோசாட் செயற்கைக்கோள்.
இது பூமியை வடக்கு-தெற்காகச் சுற்றி வந்தபடி படங்களை எடுப்பதாகும்
 இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவின் ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களின் சிக்னல்களை உலகில் எந்த ஒரு நாடும் பயன்படுத்தலாம். தகுந்த தொடர்புக் கருவிகளைக் கொண்டு இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பயன்பாடுகளை மேற்கொள்ளலாம்
.
ஆனால் ஒன்று. ஜி.பி.எஸ் ஏற்பாடு முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். அமெரிக்கா நினைத்தால் உலகில் குறிப்பிடட பிராந்தியத்தில் சிக்னல்கள் கிடைக்காதப்டி செய்ய முடியும். அல்லது தவறான சிக்ன்லகள் கிடைக்குமாறு செய்ய முடியும். இராக் போரின் போது அமெரிக்கா இவ்விதம் செய்தது.

 ஆகவே தான் ரஷியா பல செயற்கைக்கோள்களைச் செலுத்தி இப்போது சொந்தமாக ஜி.பி.எஸ் மாதிரியிலான ஏற்பாட்டை செய்து கொண்டுள்ளது. அதன் பெயர் கிளோனாஸ். சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனிய்ன் ஆகியவையும் இப்ப்டி சொந்த ‘ஜி.பி.எஸ் “ ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவும் இதே போல சொந்த ஏற்பாட்டைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளது. அதன் முதல்படியாகத் தான் இதற்கான முதலாவது செயற்கைக்கோள் ஜூலை முதல் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து  உயரே செலுத்தப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒன்று வீதம் மொத்தம் ஏழு செயறகைக்கோள்கள் உயரே செலுத்தப்படும். இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் போலவே செயல்படும்.

 ஆனால் இதில் முக்கிய வித்தியாசம் உண்டு. அமெரிக்காவின் ஜி.பி.எஸ் ஏற்பாடு உலகம் தழுவியதாகும். ரஷியா, சீனா ஆகியவற்றின் ஜி.பி.எஸ் மாதிரியான ஏற்பாடுகளும் இதே போல உலகம் தழுவியவை.
ஆனால் இந்தியாவின் சொந்த “ஜி.பி.எஸ்மாதிரியான ஏற்பாடு பிராந்திய அளவிலானது. அதாவது இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம். தவிர இந்திய எல்லையிலிருந்து சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள பிராந்தியத்தில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். அதன்படி சவூதி அரேபியாவின் ஒரு பகுதி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், மேற்காசிய நாடுகள், நேபாளம், மத்திய ஆசிய நாடுகள், சீனாவின் கணிசமான பகுதி, மியான்மார் மலேசியா, பல தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்
.
     அமெரிக்க ஜி.பி.எஸ் மாதிரியில் இந்தியா மேற்கொண்டுள்ள திட்டமானது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான ஏழு செயற்கைக்கோள்களும் அமெரிக்க ஜி.பி.எஸ் போலவே  மக்கள் பயன்பாட்டுக்கென ஒரு வித சிக்னல்களை அனுப்பும். தவிர, ராணுவ காரியத்துக்கென வேறு வித சிக்னல்களை அனுப்பும். இந்தியா அந்த வகையில்  எதிரி நாட்டின் ராணுவ இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்குவதற்குத் திறன் பெற்றதாகி விடும்.

   கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா ஏற்கெனவே மிகத் துல்லியமான மேப்புகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தியாவிடம் பிரம்மோஸ், நிர்பய போன்ற திறன் மிக்க குரூஸ் ரக ஏவுகணைகள் உள்ளன்..   ஜி.பி.எஸ் மாதிரியிலான செயற்கைக்கோள்கள் தான் பாக்கியாக இருந்தது. 2016 வாக்கில் இந்த ஏழு செயற்கைக்கோள்களும் செயல்படத் தொடங்கியதும் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான திறனைப் பெற்றதாகி விடும்.

  மக்களுக்கான பயனபாட்டைப் பொருத்தவரையில் இந்தியா மேற்படி ஏழு செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி படைத்த தகுந்த கருவிகளை விரைவில் உருவாக்கும்.. அப்போது பொது மக்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் நிறுவனங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர் பலன் பெறுவர்
  .
 எதிரி நாட்டுடன் ஒரு போர் மூண்டால் இந்தியாவின் இந்த் ஏழு செயற்கைக்கோள்களும் எதிரியின் முதுகெலும்பை முறிப்பதில் முக்கிய பங்காற்றும்.  அதே நேரத்தில் இவை மக்களின் பல்வேறு உபயோகங்களுக்கென புரட்சிகரமான புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துபவையாகவும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் இத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

 (என்னுடைய இக்கட்டுரை ஜூலை 17 ஆம் தேதி தினமணி நாளிதழில் வெளியானதாகும். இப்போது இணைய தள்த்தில இடம் பெற்றுள்ள் அதே கட்டுரையில் படங்கள் கூடுதல் அம்சம்)    

Jul 28, 2013

சனி கிரகத்திலிருந்து பார்த்தால் பூமி எப்படித் தெரியும்?

Share Subscribe

ஸ்மைல் பிளீஸ்’

 உலகிலேயே அது தான் மிகப் பெரிய குரூப் போட்டோவாக இருக்க வேண்டும்.

நாஸா விஞ்ஞானிகள் ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி   உலகில் பல்வேறு நாடுகளிலும் பல நகரங்களில் ஜூலை 19 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் வெளியே வந்து திறந்தவெளியில் ஒன்று கூடி நின்று குரூப் போட்டோவுக்காக புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டனர்.

 பல லட்சம் மக்கள்  குறிப்பிட்ட நேரத்தில்  இவ்விதம் திறந்த வெளியில் கூடி நின்று கொண்டு வானத்தைப் பார்த்தபடிசிறிது நேரம் அசையாமல் நின்ற்னா.

அது ஏன் வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டும்.?

 ஏனெனில்  படம் பிடிக்கிற கேமிரா   சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனி கிரகத்துக்கு அருகே காசினி என்னும் பெயர் கொண்ட விண்கலத்தில் தான் இருந்தது.

காசினி விண்கலத்தின் கேமிராவில் இந்த பல லட்சம் மக்களின் முகம் விழுந்திருக்குமா? உள்ளபடி நாஸா விஞ்ஞானிகள் செய்த ஏற்பாட்டின்படி அந்த விண்கலம் பூமியைத் தான் படம் பிடித்தது. அவ்விதம் எடுக்கப்பட்ட படத்தில் பூமியே வெறும் புள்ளியாகத்தான் தெரிகிறது. பூமியின் கண்டங்கள் கடல்கள் எதுவுமே தெரியவில்லை.

அப்படியானால் உலகின் பல பகுதிகளிலும் பல லட்சம் மக்கள் கூடி நின்று போஸ் கொடுத்தது ஏன்?

பல கோடி கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பூமியைப் படம் பிடிக்கச் செய்வது என்பது மிகக் கடினமான அபூர்வமான பணியாகும். ஆகவே தான் காசினி எடுக்கும் போட்டோவில் தங்கள் முகம் விழாது என்பது தெரிந்தும் பல லட்சம் மக்கள் நாஸாவின் அப்பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

காசினி விண்கலத்தில் உள்ள கேமிரா ஜூலை 19 ஆம் தேதி பூமியைப்  படம் எடுத்தது.அது எடுத்த படங்களை நிபுணர்கள் சீராக்கும் பணி முடிய சில நாட்கள் ஆகின.அதன் பிறகு இப்போது தான் அப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன


மேலே  உள்ள  படத்தில்  சனி கிரக உருண்டையின் ஒரு பகுதி தெரிகிறது. சனி கிரகத்தின் வளையங்களும் தெரிகின்றன். படத்தின் கீழ்ப் பகுதியில் சிறிய அம்புக்குறிக்கு மேலே சிறிய புள்ளியாகத் தெரிவது தான் பூமி.

பூமியின் கண்டங்கள், கடல்கள், நீண்ட மலைத் தொடர்கள், நாஸா கேட்டுக் கொண்டதால் திறந்த வெளியில் நின்று குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பல லட்சம் பேர்  என எல்லாமே இந்த சிறிய புள்ளியில் அடக்கம்.

 மேலே உள்ள படத்தைக் கூர்ந்து கவனித்தால் இரண்டு புள்ளிகள் தெரியும். இடது புறத்தில் உள்ளது பூமி. வலது புறத்தில் மங்கலாக இருப்பது சந்திரன். இதுவும் காசினி எடுத்த ப்டமே.

நாஸா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இத்தாலிய விண்வெளி அமைப்பு ஆகியன சேர்ந்து 1977 ஆம் ஆண்டில் காசினி என்று பெயரிடப்பட்ட  விண்கலத்தை சனி கிரகத்தை நோக்கிச் செலுத்தின. இந்த விண்கலம் 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை நெருங்கி ஆராயத் தொடங்கியது.படங்களை எடுத்து அனுப்பியது. காசினியில் உள்ள கேமிரா இது வரை  பல ஆயிரம் படங்களை அனுப்பியுள்ளது.  சனி கிரகம், அக்கிரகத்தைச் சுற்றுகின்ற 62 சந்திரன்கள் ஆகியவற்றின் விதவிதமான படங்கள்  முதலியன அவற்றில் அடங்கும்.

காசினி பூமியைப் படம் பிடித்து அனுப்புவது இது முதல் தடவை அல்ல. 2006 ஆம் ஆண்டில் காசினி எடுத்து அனுப்பிய படத்தை மேலே காணலாம். படத்தில் வலது ஓரமாக உற்றுப் பார்த்தால் மிகச் சிறிய புள்ளியாகத் தெரிவது தான் பூமி. ஆனால் அப்போது  யாரும் வானை நோக்கி நின்று  குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவில்லை.

ஆனால் இந்தத் தடவை நாஸாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டாக்டர் கரோலின் போர்க்கோ  ஐடியா பண்ணி  வானவியல் சமாச்சாரத்தில் மக்களின் ஈடுபாட்டை வளர்க்கக் கருதி  பல லட்சம் மக்கள் ஆங்காங்கு திரண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி செய்தார்.

கண்ணுக்கே தெரியாத காசினி விண்கலம்  வானில் இருப்பதாகக் கருதப்பட்ட இடத்தை நோக்கி கையை ஆட்டி போஸ் கொடுக்கும் அமெரிக்க மக்கள்

எனினும் அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் மட்டும் மக்களால்   குறைந்த பட்சம் சனி கிரகத்தைக் காண முடிந்தது

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரண்டு நின்ற கூட்டம்
 சனி கிரகம் அருகே காசினி விண்கலம் இருக்கின்ற தொலைவிலிருந்து பார்த்தாலே பூமியானது கடுகை விடச் சிறியதாகத் தெரிகிறது. காசினி விண்கலம்  சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சனி கிரகத்தையும் தாண்டி சூரிய மண்டலத்தின் எல்லையிலிருந்து அதாவது 1450 கோடி கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்த்தால் பூமி சுத்தமாகத் தெரியாது. சூரியனோ மங்கலான ஒரு நட்ச்த்திரமாகத் தெரியும்.( சூரியன் ஒரு நட்சத்திரமே).

இதையே வேறு விதமாகக் காண்போம். நிலவற்ற இரவில் வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள்  நமக்கு சிறிய சிறிய ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. இந்த நட்சத்திரங்களில் பலவற்றுக்குப் பூமி போன்ற கிரகங்கள் இருக்கலாம். பெரிய டெலஸ்கோப் கொண்டு பார்த்தாலும் அந்த கிரகங்கள் தெரிவதில்லை.

விண்வெளி என்பது பிரும்மாண்டமானது. விஸ்தாரமானது. நீங்கள்   2000 கோடி கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்கலத்தில்  இருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்தத் திசையில் நோக்கினாலும் எண்ணற்ற ஒளிப்புள்ளிகள் தெரியும்.விண்வெளியானது எல்லையற்றது. பகல் இரவு என்பது கிடையாது. ,நிரந்தமான காரிருள் கப்பியது. வாட்டும் கடும் குளிர் நிலவுவது. உயிரற்றது.

மாறாக, ஒளியும் வெப்பமும் உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசிய்மானவை. ஆகவே தான் நாம் “ ஆண்டவனே,  இருளை அகற்றி ஒளியை அளிப்பாயாக ” என்று பிரார்த்திக்கிறோம்.

Jul 20, 2013

உத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு

Share Subscribe

உத்தரகண்ட் மானிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட விபரீதத்துக்கு ‘இமாலய சுனாமிஎன்று யார் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. உடனே டெலிவிஷன் சேனல்களும் பத்திரிகைகளும் விவரம் தெரியாமல் கெட்டியாக அப்பெயரைப் பற்றிக் கொண்டன. இப்பெயரை வைத்தவர் அதி கெட்டிக்காரராக இருக்க வேண்டும். ஏனெனில் இப்பெய்ரானது இப்போது நிகழ்ந்துள்ள துய்ரம் சுனாமியைப் போல தடுக்க, முடியாத தவிர்க்க முடியாத இயற்கை விபரீதம் என்கின்ற பொருளைத் தருகிறது.. அத்தனை துயரங்களுக்கும் இயற்கை மீது பழி போடுகிறது. இது கொஞ்சமும் உண்மையல்ல.
கடும் சேதத்துக்குள்ளான கேதார்நாத் கோயில்
 சொல்லப்போனால் கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வந்துள்ள காடு அழிப்பு, 90 சதவிகிதத்துக்கும் மேலாக மலைப் பிரதேசமாக உள்ள உத்தரகண்டில் ஏற்பட்டு வருகிற  நில்ச்சரிவு, நில அரிப்பு போன்ற ஆபத்துகளைக் கண்டு கொள்ளாமை, ஆண்டு தோறும் உத்த்ரகண்டில் உள்ள யாத்திரைத் தலங்களுக்கு வருகின்ற ஆயிரம் ஆயிரம் பயணிகளின் பாதுகாப்பு பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்ளாமை,  பெருமழை, வெள்ளம் ஆகியவை பற்றி முன்னெச்சரிக்கை அளிக்க்த் தகுந்த ஏற்பாடு இல்லாமை போன்று தொடர்ந்து இருந்து வந்துள்ள  பல நிலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இமாலயத் தவறு என்று சொல்கிற அளவுக்கு உருவெடுத்ததன் விளைவாகத் தான் இப்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளது எனலாம். எனவே இமாலயத் தவறை இமாலய சுனாமி என்ற வருணனை மூலம் மூடி மறைக்க முடியாது.
  மழை வெள்ளத்தால் மலைச் சாலைகளில் வழி நெடுக உடைப்பு ஏற்பட்டு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள்  ஊர் திரும்ப வழியின்றி மலைகளில் ஆங்காங்கு சோறு த்ண்ணீர் இன்றிக் குளிரில் தவித்தனர் என்பது தான் உத்தரகண்ட் மானிலத்தில் ஏற்பட்ட பிரதான பிரச்சினையாகும். இவர்களை மீட்கப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.
உத்தரகண்டின் மலைப் பிரதேசங்களில் உள்ள பத்ரினாத், கேதார்னாத்,  கங்கோத்ரி, யமுனோத்ரி என பல புனிதத் தலங்கள் உள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரோ ஆண்டுதோறும் பக்தர்கள் குறிப்பிட்ட சீசனில் தங்கள் பொறுப்பில் உயிருக்குத் துணிந்து மலைக் காடுகள் வழியே நடந்தே சென்று வந்தனர்.
பின்னர் மலைச் சரிவுகளில் பாதைகள் போடப்பட்டன. இப்போது இவர்களை அழைத்துச் செல்ல பஸ் சர்வீசுகள் உள்ளன. பஸ்களை அமர்த்திக் கொண்டு செல்பவர்களும் உண்டு. கோஷ்டியாக வேன்களில் செல்பவர் உண்டு. சொந்தக் கார்களில் அல்லது வாடகைக் கார்களில் செல்பவர்கள் பலர். இப்படியாக செல்பவர்களை அவர்கள் சொந்தப் பொறுப்பில் செல்வதாகச் சொல்ல முடியாது. ஆயிரமாயிரம் பக்தர்களின் வருகையானது பெரிய சுற்றுலாத் தொழிலாக மாறி விட்டது. இவர்களுக்கு வழி நெடுக டீ காபி விற்பவர்கள், ஊதுவத்தி விற்பவர்கள், பலகாரம் விற்பவர்கள் என உள்ளூர் வாசிகளான பல ஆயிரம் பேருக்கு வருமானம் கிடைக்கிறது. இவர்கள் அனைவரின் பாதுகாப்பு விஷயத்தில் மானில அரசுக்குப் பொறுப்பு உள்ளது
 நதிகளின் க்ரை ஓரமாக அமைந்த எண்ணற்ற வீடுகள் நாசமாகின
. இதுவரை இல்லாத பெரு மழை பெய்தது தான் விபரீதத்துக்கான காரண்ம் என்கிறார்கள்.அப்படி ஒன்றுமில்லை. இதற்கு முன்னரும் இந்த மாதிரி மழை பெய்துள்ளது. ஆனால் அப்போது யாத்திரை சீசன் இல்லை என்பதால் பிரச்சினை இப்போதைப் போல விசுவரூபம் எடுக்கவில்லை.
வானிலைத் துறையினர் முன்கூட்டி எச்சரிக்கை விடுத்திருந்தால் யாத்திரீகர்களை  ஏற்றிச் சென்ற பஸ், கார் போன்றவை மேலே சென்றிராது. யாத்திரிகர்கள் மேலே மாட்டிக் கொள்கின்ற பிரச்சினை தவிர்க்கப்பட்டிருக்கும். வானிலைத் துறையினரோ எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் விபரீதம் நிகழ்ந்த பிறகு அதே வானிலைத் துறையினர் எங்கெல்லாம் அதிக மழை பொழியும் என்று விவரமாக அறிக்கை விடுத்தனர்.
 இந்தியாவில் வானிலைத் துறை இன்னமும் போன நூற்றாண்டில் தான் இருக்கிறது. அவர்களது அறிவிப்புகளில் நம்பகத்தன்மை மிகவும் குறைவுதான். தவிர, “ தென் மாவட்டங்களில் அங்குமிங்குமாக மழை இருக்கலாம்என்பது போன்ற அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை. திருனெல்வேலியில் மழை இருக்குமா, தூத்துக்குடியில் மழை பெய்யுமா, தென்காசியில் மழை பொழியுமா என்ற விவரங்கள் தான் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க முடியும்.
உத்தரகண்டில் கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அப்படியான நிலையில் நிலச்சரிவும் நில அரிப்பும் அதிகமாகத் தான் இருக்க முடியும்.
 மலைகளில் காடுகள் இருந்தால் நல்ல மழை பொழியும் என்பார்கள். அதே சமயம் அந்த காடுகள் தான் மழை வெள்ள aaaaஆபத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை சற்று விளக்க வேண்டும்.
  ஓடுகள் வேயப்பட்ட ஒரு வீட்டின் கூரையில் நின்றபடி ஓடுகள் மீது இரண்டு வாளித் தண்ணீரை ஊற்றினால் அத்தனை தண்ணீரும் சில வினாடிகளில் கீழே தரையில் வந்து விழும். ஆனால் அந்த வீட்டின் ஓடுகள் மீது நிறைய பழைய சாக்குகளைப் போட்டு வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது தண்ணீரை ஊற்றினால் தண்ணீரில் பெரும் பகுதியை பழைய சாக்குகள் உறிஞ்சிக் கொள்ளும்.கீழே வந்து விழும் தண்ணீரின் அளவு குறைவாகவே இருக்கும்.
மலைப் பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகள் இது போலவே  மழை நீரின் கணிசமான பகுதியை தம்மிடம் இருத்தி வைத்துக் கொள்கின்றன. வெள்ள ஆபத்தையும் குறைக்கின்றன. நில அரிப்பைக் குறைக்கின்றன. காடுகள் அதாவது தாவரங்களே இல்லாமல் வெறும் மண்ணாக இருக்கின்ற மலைச் சரிவில் மழை பெய்யுமானால் பெரிய மழைத் துளிகள் மண்ணைக் கரைத்துக் கொண்டு கீழ் நோக்கி வெள்ளமாக வேகமாகப் பாயும்.
 அதே மலைச் சரிவில் அடர்ந்த காடுகள் உள்ளதாக வைத்துக் கொள்வோம். மிக உயர்ந்த மரங்களின் இலைகள் மீது மழைத் துளிகள் விழும் போது மழைத் துளிகளின் வேகம் குறைக்கப்படுகிறது. இலைகள் மீது விழும் துளிகள் வேகம் குறைந்தவையாக கீழே உள்ள கிளைகளின் இலைகள் மீது விழும். பெரிய மழைத் துளிகள் பல சிறு துளிகளாகக் கீழே தரையில் விழும். காடுகளில் தரை முழுவதிலும் இலைக் குப்பைகள் நிறைய இருக்கும். மரங்களின் இலைகள் வழியாகக் கீழே வந்து விழும் மழைத் தண்ணீர் வேகமாக ஓட விடாமல் இலைக் குப்பைகள் தடுக்கின்றன. இதன் விளைவாக மழை நீரானது நிதானமாக மண்ணுக்குள் இறங்க வழி ஏற்படுகிறது.
இப்படி உள்ளே இறங்கும் நீரானது பாறை இடுக்குகளில் போய் தங்க வழி ஏற்படுகிறது. இத் தண்ணீர் தான் பின்னர் மலைகளில் சுனையாக அமைகிறது.
  நில அரிப்பு காரணமாக சாலைகள் சேதமடைந்தன. பல ஆயிரம் பேர் ஆங்காங்கு மாட்டிக் கொண்டு திண்டாடியதற்கு சாலைகள் சேதமடைந்ததே காரணம்
மலைச் சரிவில் காடுகள் இருக்குமானால் மரங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் இலைகளில் கணிசமான நீர் தேக்கி வைத்துக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டோம். உங்களுக்கு இது குறித்து சந்தேகமாக இருக்குமானால் நீங்கள் வசிக்கும் பகுதியில் மழை ஓய்ந்த பின்னர் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு யாரையாவது விட்டு கிளைகளை ஆட்டச் சொல்லுங்கள். இலைகளிலிருந்து விழும் மழைத் தண்ணீர் காரணமாகத் தொப்பலாக நனைந்து விடுவீர்கள்
 தாவரங்களின் வேர்களும் நீரை ஈர்த்து வைத்துக் கொள்கின்றன. அது மட்டுமல்லாமல் இந்த வேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்பவை. மலைச் சரிவுகளில் உள்ள தாவரங்களின் வேர்கள் நிலச்சரிவு, மண்ணரிப்பு ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வீடு கட்டும் போது மாடிக்குத் தளம் அமைக்க குறுக்கும் நெடுக்குமாகக் கம்பிகளை அமைத்து அவற்றின் மீது கான்கிரீட்டைக் கொட்டுகின்றனர். இக்கம்பிகளின் பலத்தில் தான் கான்கிரீட் நிற்கிறது. மலைச் சரிவுகளில் உள்ள மரங்களின் வேர்கள் இப்படியான கம்பிகள் போன்றவை. மலைச் சரிவு ஒன்றில் பெரிய வேர்களிலிருந்து சல்லி வேர் உட்பட எண்ணற்ற வேர்கள் ஊடுருவி நிற்கின்றன. இந்த வேர்களே எளிதில் நிலச் சரிவு, மண்ணரிப்பு நேராமல் தடுக்கின்றன ஆனால் பெரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டால்   மண் அரிப்பின் விளைவாக சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. நிலச் சரிவின் விளைவாகவும் சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. உத்தரகண்டில் இது தான் நிகழ்ந்தது.
உத்தரகண்ட் மானிலத்தில் அடுக்கடுக்கான மலைகள் உள்ளன. இவற்றின் நடுவே அமைந்த பள்ளத்தாக்குகளில் பல சிறு நதிகள் ஓடுகின்றன. அண்மையில் பெய்த பெரு மழையில் போது இவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நதிக்கரையில் அமைந்த வீடுகள், பல மாடிக் கட்டடங்கள் வாகனங்கள் ஆகியவை சரிந்து நதியில் விழுந்ததை தொலைக்காட்சிகளில் காண முடிந்தது. மண்ணரிப்பு எவ்வளவு பயங்கரமானது என்பதை இவை தத்ரூபமாகக் காட்டின. அதே சமயம் நில ஆக்கிரமிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் அவை காட்டின.
உத்தரகண்டில் அலகநந்தா நதி மீது கட்டப்பட்டுள்ள அணை. மின்சார உற்பத்திக்காக இப்படி பல அணைகள் கட்டப்பட்டுள்ளன
உத்தரகண்ட் இயற்கை ஆபத்து அதிகம் உள்ள மலைப் பிரதேசமாகும். இந்த ஆபத்துகளைத் தவிர்க்க எவ்விதமான நடவடிக்கைகள் தேவை என்பது குறித்து நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளில் அவ்வப்போது அறிக்கைகளை அளித்துள்ளனர். ஆனால் உத்தரகண்ட் மானிலத்தை ஆண்டு வந்துள்ள அரசுகள் இவற்றைத் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளன . இது போதாதென இம்மானிலத்தில்  இப்போது சுரங்க வேலைத் திட்டங்கள, அணைகளைக் கட்டி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் மின்சாரத் திட்டங்கள்  என பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் காடுகளை அழிக்க இவை வகை செய்துள்ளன. சுண்டைக்காய் திட்டத்துக்கு பல ஆட்சேபங்களை எழுப்பும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் எப்படி மேற்படி திட்டங்களுக்கு அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை. உத்தரகண்ட் மானிலத்தில் அவ்வப்போது பூகம்பம் ஏற்படுவது உண்டு என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். 1999 ல் ஏற்பட்ட பூகம்பத்தின் போது சுமார் 100 பேர் உயிரிழந்தனர். ஆகவே அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் உத்தரகண்ட்  மானிலத்துக்குப் பொருந்தாத திட்டங்களை மேற்கொள்வது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
உத்தரகண்ட் மானிலத்தின் முக்கிய பலம் சுற்றுலாத் தொழிலாகும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத உறுதியான சாலைகளை அமைப்பது போன்று இத்தொழில் தொடர்பான வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் தொழில் மூலம் மானிலத்தின் வருவாயைப்   பெருக்குவது தான் புத்திசாலித்தனமாக வழியாக இருக்கும்..

( என்னுடைய இக்கட்டுரை ஜூன் 29 ஆம் தேதி  தினமணி  நாளிதழில் வெளியானதாகும் )