Apr 30, 2013

பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?

Share Subscribe
 நீங்களும் நானும் திறந்த வெளியில் ஏதோ ஓரிடத்தில் நிற்கிறோம்.அங்கிருந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் பனிக்கட்டியால் மூடப்பட்ட வட துருவத்துக்குப் போய்ச் சேருவோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் உறைந்த பனிக்கட்டிப் பிரதேசமான தென் துருவத்துக்குப் போய்ச் சேருவோம்.

மாறாக நாம் நிற்கிற இடத்திலிருந்து பெருச்சாளி பள்ளம் தோண்டுவதைப் போல பள்ளம் தோண்டியபடி பூமியின் மையத்தை நோக்கி நேர் கீழாகப் போவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.  

சில கிலோ மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே வெப்பம் தகிக்கும். அந்த வெப்பத்தில் நாம் வெந்து போய் விடுவோம்.

 உலகில் மிக ஆழமான தங்கச் சுரங்கங்களில் பாறையை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும்.தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள டாவ் டோனா தங்கச் சுரங்கம் தான் உலகின் மிக ஆழமான சுரங்கமாகும்.அதன் ஆழம் 3.9 கிலோ மீட்டர்

பூமியானது பல அடுக்குகளால் ஆனது.Core என்பது பூமியின் மையத்தைக் குறிக்கிறது.
அச்சுரங்கத்தில் பாறைகளின் வெப்பம் 60 டிகிரி செல்சியஸ். சுரங்கத்தில் அந்த இடத்தில் வெப்ப நிலை 55 டிகிரி செல்சியஸ். அவ்வித வெப்ப நிலையில் தொழிலாளர்களால் பணியாற்ற இயலாது எனபதால் மேலிருந்து குழாய்கள் மூலம் தொடர்ந்து உடைந்த  ஐஸ் கட்டிகளை அனுப்பி வெப்பதைக் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்கிறார்கள்.சுமார்  நான்கு கிலோ மீட்டர் ஆழத்திலேயே இந்த கதி.

பூமியின் மையம் என்பது தரை மட்டத்திலிருந்து 6,371 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது. ஆகவே பூமியின் மையத்தில் வெப்பம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள ஆராய்ச்சிக்கூடம் ESRF
பூமியின் மையத்தில் வெப்பம் 5,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் சில பரிசோத்னைகள் மூலம் இபோது புதிதாகக் கணக்கிட்டதில் இது 6,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகிட்டத்தட்ட சூரியனின் மேற்புறத்தில் உள்ள வெப்பத்துக்குச் சமமானது.

பூமியின் மையம் இரும்பால் ஆனது. ஆனால் அந்த வெப்ப நிலையிலும் அது குழம்பாக இல்லாமல் படிக வடிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பூமியின் மையம் இந்த அளவுக்கு வெப்பமாக இருப்பதற்குக் குறைந்தது மூன்று காரணங்கள் உண்டு.பூமி தோன்றிய போது மையத்தில் இருந்த வெப்பம் அவ்வளவாகக் குறையவில்லை. இரண்டாவதாக பூமியின் மையம் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. எந்த அளவுக்கு அழுத்தம் உள்ளதோ அந்த அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும். பூமியின் மையத்தில் உள்ள அழுத்தமானது தரை மட்டத்தில் உள்ளதைப் போல பத்து லட்சம் மடங்காக உள்ளது.

பூமியில் மேலும் மேலும் ஆழத்தில் யுரேனியம், பொட்டாசியம் தோரியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் அதிகமாக உள்ளன.இந்த கதிரியக்க உலோகங்கள் இயற்கையாக சிதைவுக்கு உள்ளாகின்றன. அப்போது வெப்பம் தோன்றும். பூமியின் மையம் பயங்க்ர வெப்பத்தில் உள்ளதற்கு இதுவும் காரணம்.

 பூகம்பங்க்ள் ஏற்படும் போது தோன்றும் அலைகள் பூமியின் பல்வேறு அடுக்குகளின் தடிமன், அடர்த்தி ஆகியவை பற்றித் தெரிவிக்கின்றன.ஆனால் பூமியின் மையத்தில் உள்ள வெப்பம் பற்றி அவை தெரிவிப்பதில்லை.

ஆகவே  பூமியின் மையத்தில் உள்ள வெப்பம் எந்த  அளவில் இருக்கலாம் என்று அறிய நவீன ஆராய்ச்சிகூடங்களில் சோதனைகளை நடத்தலாம் இதற்கான சோதனை பிரான்ஸ் நாட்டில் கிரெனோபிள் என்னுமிடத்தில் உள்ள European Synchrotron Radiation Facility (ESRF) என்னும் ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்பட்டது. இது பல ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து நிறுவியதாகும்.இங்கு மிகுந்த ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்கும் வசதிகள் உள்ளன்
மிகுந்த அழுத்தத்தை உண்டாக்கும் சிறிய கருவி
.பூமியின் மையத்தில் இருக்கின்ற அளவுக்கு செயற்கையாக அழுத்தத்தை  உண்டாக்குவதற்கென விசேஷக் கருவி உள்ளது.உள்ளங்கையில் வைத்துக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு அது சிறியது.Diamond Anvil Cell  என்பது அதன் பெயர்.அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.

இக்கருவியில் எதிர் எதிராக வைர ஊசிகள் உண்டு. இந்த இரு வைர  ஊசிகளின் நுனிகளுக்கு  நடுவே உள்ள நுண்ணிய இடைவெளியில் நுண்ணிய உலோகப் பொருளை வைக்கலாம். பூமியின் மையத்தில் இரும்பு உள்ளது என்பதால் மிக நுண்ணிய இரும்புத் துணுக்கை வைத்தார்கள். பின்னர் அந்த இரும்புத் துணுக்கு மீது பயங்கரமான அழுத்தத்தைப் பிரயோகித்தனர்.
பரிசோதனைகள் நடந்த ஆராய்ச்சிக்கூடப் பகுதி
அதே சமயத்தில் லேசர் கருவி மூலம் இரும்புத் துணுக்கின் வெபபத்தை அதிகரித்துக் கொண்டே போயினர். அப்படியான சோதனையின் போது கடும் எக்ஸ் கதிர்களை கொண்டு இரும்புத் துணுக்கைத் தாக்கினர்.இதன் பலனாக இரும்பு அணுக்கள் பல விளைவுகளைக் காட்டின. இபபரிசோதனைகளின் போது வெவ்வேறு கட்டங்களில் அழுத்தம் அதிகரிக்கப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது. அதே போல வெப்ப அளவும் அவ்வப்போது மாற்றப்பட்டது.

இப்படியான நுணுக்கமான சோதனைகள் மூலமே பூமியின் மையத்தில் வெப்பம் எந்த அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது.

பூமியின் உட்புறம் பற்றி ஆராய்கிற  நிபுணர்கள், பூமியின் காந்தப் புலம் பற்றி ஆராயும் நிபுணர்கள், பூகம்பங்களை ஆராயும் நிபுணர்கள் என பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு பூமியின் மையத்தில் இருக்கக்கூடிய வெப்பம்  பற்றிய தகவல் தேவைப்படுகிறது.அந்த நோக்கில் தான் இந்த ஆராய்ச்சி நடத்த்டப்பட்டது.


Apr 28, 2013

பயங்கரவாதிகள் எளிதில் வெடிகுண்டு தயாரிப்பதைத் தடுக்க புது கண்டுபிடிப்பு

Share Subscribe
அம்மோனியம் நைட்ரேட். இது விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படுகிற உரங்களில் ஒன்று.

 பயங்கரவாதிகளைப் பொருத்தவரையில் இந்த  உரம் தான் வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப் பொருள்.இந்த உரத்தைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளைத் தயாரித்து அந்த் வெடிகுண்டுகளைப் பொது இடங்களில் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வைப்பது தான் பயங்கரவாதிகள் கையாளும் முறையாகும்.

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் மும்பை, ஹைதராபாத். தில்லி, ஜெய்ப்பூர், வாராணசி,பெங்களூர் என பல இடங்களிலும் பயங்க்ரவாதிகள் வைத்த  இவ்வித வெடிகுண்டுகள் மூலம் எண்ணற்றவர்கள் உயிரிழந்துள்ளனர். அண்மையில் பெங்களூரில் வெடித்த வெடிகுண்டு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டே என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் உலகில் 123 நாடுகளில் பயங்க்ரவாதிகள்  இவ்விதமான 17 ஆயிரம் வெடிகுண்டுகளைப் யன்படுத்தியுள்ளனர்.ஆப்கனிஸ்தானில் பயங்கரவாதிகள் சர்வ சாதாரணமாக இவ்வித வெடிகுண்டுகளைத் தயாரித்துப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

 இதன் விளைவாக அந்த நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் உர விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலுm வீரியமிக்க அம்மோனியம் நைட்ரேட் உரங்கள் விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 1995 ஆண்டில் ஒகலஹாமா நகரில் இப்படியான வெடிகுண்டு வெடித்ததில் 168 பேர் உயிரிழந்தனர்.2006 ஆம் ஆண்டில் மும்பை நகரில் ப்ல புற நகர் ரயில் வண்டிகளில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 200 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
2006 ஆண்டு மும்மையில் வெடிகுண்டு விளைவாக உருக்குலைந்த ரயில் பெட்டி
அம்மோனியன் நைட்ரேட் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் Improvised Explosive Devices  (IED) என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த உரத்தை எளிதில் வாங்க முடிகிறது என்பதால் பயங்கரவாதிகள் ரகசிய ஒளிவிடங்களில் அல்லது வீடுகளில் ரகசியமாக் இந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்க் முடிகிறது.

 அம்மோனியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தி இனி வெடிகுண்டு தயாரிக்க முடியாதபடி தடுக்க இப்போது அமெரிக்க நிபுணர் ஒருவர் வழி கண்டுபிடித்துள்ளார். அதாவது அம்மோனியம் நைட்ரேட் உரத்துக்குப் பதில் மாற்றான உரத்தைத் தயாரிக்க முடியும் என்ற் அவர் நிரூபித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சாண்டியா நேஷனல் லாபரட்டரீஸ் நிறுவனத்தின் எஞ்சினியர் கெவின் பிளெமிங்   இப்புதிய  உரத்தை உருவாக்கியுள்ளனர்.அம்மோனியம் நைட்ரேட்டுடன் அயர்ன் சல்பேட் என்னும் பொருளைச் சேர்த்தால் அப்பொருள் ஆபத்தற்றதாகி விடுகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளனர்.அதே நிறுவனத்தின் பெண் எஞ்சினியர்  விக்கி சாவேஸ் இதைப் பரிசோதித்து இது அவ்விதமானதே என உறுதிப்படுத்தியுள்ளார்.
பெண் எஞ்சினியர் விக்கி சாவேஸ், புதிய உரம் கண்டுபிடித்த பிளெமிங் Credit: Randy Montoya 
 தங்களது இக்கண்டுபிடிப்புக்கு பேடண்ட உரிமை கோரப்போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.அதாவது உலகில் எண்ணற்றவர்கள் இந்த வெடிகுண்டுகளுக்குப் பலியாவதைத் தவிர்க்கக் கருதி யார் வேண்டுமானாலும் இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி ஆபத்தற்ற உரத்தைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தங்களது கண்டுபிடிப்பின் மூலம் தயாரிக்கப்படுகிற உரம் எந்த விதத்திலும் தரம் குறைந்தது அல்ல. சொல்லப்போனால் அதில் கூடுதலாக இரும்புச் சத்து இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தவிர, இப்புது வகை உரத்தைத் தயாரிக்க கூடுதல் செலவு இராது என்றும் கூறியுள்ளனர்.

இனி அடுத்ததாக உர ஆலைகள் இப்புதிய முறைக்கு மாறியாக வேண்டும். புதிய வகை உரம் நல்ல பலன் தரக்கூடியதே என களப் பரிசோதனைகள் மூலம் விவசாயிகளை ஏற்கச் செய்ய வேண்டும்.

Apr 27, 2013

சூரியன் அஸ்தமித்த பின் கிழக்கே சனி கிரகத்தைக் காணலாம்

Share Subscribe
சனி கிரகத்தை வானில் எளிதில் அடையாளம் கண்டுபிடித்துக் காண்பதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. சூரியன் அஸ்தமித்த சற்று நேரத்துக்குப் பிறகு கிழக்குத் திசையில் நோக்கினால் சனி கிரகத்தைக் காணலாம். சனி கிரகம் சிறிய ஒளிப்புள்ளியாகத் தெரியும்.

ஏப்ரல் மாதக் கடைசியில் தொடங்கி மே மாதக் கடைசி வரை சனி கிரகத்தை இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

சனி கிரகமானது இப்போது சூரியனுக்கு நேர் எதிரே உள்ளது.ஆகவே தான் சூரியன் அஸ்தமிக்கும் போது கிழக்கு வானில் சனி கிரகம் உதிக்கிறது. இதையே வேறு விதமாகச் சொன்னால் சூரியன் - பூமி - சனி ஆகிய மூன்றும் அந்த வரிசையில் நேர்கோட்டில் அமைந்துள்ளன. இது ஒன்றும் அதிசயமானது அல்ல.
ஏப்ரல் 28 ஆம் தேதி சூரியன், பூமி, சனி ஆகியவை நேர்கோட்டில் இருக்கும்
ஆண்டுதோறும்  ஒரு முறை  இந்த மூன்றும் மேற்கூறிய வரிசையில் அமைகின்றன். சூரியனை  சனி கிரகம் ஒரு த்டவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. பூமியோ சூரியனை ஓராண்டில் சுற்றி முடித்து விடுகிறது. ஆகவே ஆண்டு தோறும் பூமியானது ஏதாவது ஒரு தேதியில் சூரியனுக்கும் சனிக் கிரகத்துக்கும் நடுவே அமைகிறது

கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 3 ஆம் தேதி பூமி நடுவே அமைய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தன.2012 ஆம் ஆண்டில் இது ஏப்ரல் 15 ஆம் தேதி நிகழ்ந்தது இந்த ஆண்டில் ஏப்ரல் 28 ஆம் தேதி நிகழ்கிறது. அடுத்த ஆண்டில் மே 10 ஆம் தேதி நிகழும்.
டெலஸ்கோப் மூலம் பார்த்தால் சனி இப்போது இவ்விதம் தெரியும்
பிற சமயங்களில் உள்ளதை விட சனி கிரகம் இப்போது பூமிக்கு அருகே அதாவது 132 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.பூமியை விட சனி பல மடங்கு பெரியது என்றாலும் மிகத் தொலைவில் உள்ள காரணத்தாலேயே அது சிறிய ஒளிப்புள்ளியாகக் காட்சி அளிக்கிறது.

சனி கிரகத்துக்கு அற்புதமான வளையங்கள் உண்டு.ஆனால் குறைந்தது சிறிய டெலஸ்கோப் மூலம் பார்த்தால் தான் சனி கிரகத்தின் வளையங்கள் தெரியும்
வாயேஜர் 2 விண்கலம் 1980 ஆம் ஆண்டில் எடுத்து அனுப்பிய  படம்
வருகிற சில  நாட்களில் இரவு சுமார் 8 மணிக்கு கிழக்கு திசையில்பார்த்தால் சனிக் கிரகம்  நன்றாகவே தெரியும். அதற்கு சற்று மேலே சித்திரை (Spica)  நட்சத்திரம் தென்படும்.

சனி கிரகத்தைக் காணும் போது உங்கள் பார்வை சனி கிரகத்தின் மீது படுகின்ற அதே நேரத்தில் சனியின் பார்வை உங்கள் மீது பட்டு கெட்டது நடந்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை. நீங்கள் சனி கிரகத்தைப் பார்க்காமல் இருந்தாலும் சரி, சனியில் பார்வை பூமியில் உள்ள 710 கோடி மக்கள் மீதும் எப்போதும் விழுந்து கொண்டிருந்து தான் இருக்கிறது.

சனி கிரகம் வானில் இப்போது துலா ராசியில் உள்ளது.காண்க: சனிப் பெயர்ச்சி என்பது என்ன?


Apr 25, 2013

பாக்டீரியாவிலிருந்து டீசல் எண்ணெய்:: விஞ்ஞானிகள் வெற்றி

Share Subscribe
ஒரு வகை பாக்டீரியாவிலிருந்து டீசல் எண்ணெயைத் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் பரீட்சார்த்த அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்விதம் புது வழியில் தயாரிக்கப்பட்ட செயற்கை டீசலுக்கும் வழக்கமாக பெட்ரோலிய குரூட் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் டீசலுக்கும் இடையே வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது என்ற அளவில் செயற்கை  டீசல் உள்ளது.தவிர, இப்புது வகை டீசலானது கார் லாரி ஆகியவற்றின் எஞ்சின்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ. கோலி பாக்டீரியா
இ. கோலி (E Coli)  என்னும்   பாக்டீரியா உள்ளது.இந்த பாக்டீரியாவில் பல வகைகள் உள்ளன். இவற்றில் குறிப்பிட்ட வகை பாக்டீரியா  நமது அனைவர் உடலிலும் பெருங்குடலில் பெரும் எண்ணிக்கையில் உள்ளது. இது K2 என்னும் வைட்டமினைத் தயாரிக்க உதவுகிறது.

அதே சமயத்தில் தீங்கு வகை விளைக்கும் இ.கோலி பாக்டீரியாவும் உள்ளது. இது குடி நீர் அல்லது உணவு மூலம் உடலுக்குள் சென்றால் வயிற்றுப் போக்கு போன்ற கோளாறை உண்டாக்கும்

ஆராய்ச்சிக்கூடங்களிலும் இ.கோலி வகை பாக்டீரியாவை வளர்க்க முடியும். இந்த  பாக்டீரியாவில் மரபணு மாற்றம் செய்வதன் மூலம் செயற்கை டீசல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எக்சீட்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்க்ள் இச்சாதனையைப் புரிந்துள்ளன்ர்.

ஆனால் இப்போதையக் கட்டத்தில் அவர்களால் 200 லிட்டர் இ.கோலி பாக்டீரியாவிலிருந்து ஒரு ஸ்பூன் டீசலைத் தான் தயாரிக்க முடிந்துள்ளது.முதலில் இந்த அளவு கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். பின்னர் செயற்கை டீச்லைத் தயாரிக்க செலவு கட்டுபடியாகுமா என்பது தெரிய வர வேண்டும்.இந்த இரு கட்டங்களையும் தாண்டிய பிறகு தான் பெரிய தொழிற்சாலை அமைத்து பாக்டீரியா மூலம் பெரிய அளவில் டீசல் தயாரிப்பது சாத்தியமாகும். இதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம்.

டீசல் அல்லது பெட்ரோலுக்கு மாற்றாக எரிபொருளைத் தயாரிக்கும் திட்டம்   நீண்ட நாட்களாக இருந்து வருவது தான். அதாவது சில வகைத் தாவரங்கள் அல்லது  செடிகளின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை டீசலுடன் கலந்து பயன்படுத்துவது என்பது இவற்றில் ஒன்றாகும். உதாரணமாக ஜட்ரோபா  எனப்படும் காட்டாமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை டீசலுடன் குறிப்பிட்ட அளவுக்குச் சேர்ந்து பயன்படுத்துகின்றனர்.
காட்டாமணக்கு 
இந்தியாவின் ரயில்வே துறையினர் ஏற்கெனவே இதில் முன்னோடியாக  உள்ளனர். தமிழகத்தில் குறைந்த தூரம் ஓடுகின்ற சில  ரயில் வண்டிகளின் டீசல் எஞ்சினில் காட்டாமணக்கு எண்ணெய் சேர்க்கப்பட்ட   டீசல பயன்படுத்தப்படுகிறது

கனடாவிலும் ஜெர்மனியிலும் எத்தியோப்பிய வகைக்  கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை டீசலுடன் சேர்த்துப் ப்யன்படுத்துகின்றன்.இவ்விதமான எண்ணெய்கள் உயிரி-எரிபொருள் (Bio-fuel) எனப்படுகின்றன.

கனடாவில் 2012 அக்டோபரில் 15 பேர் ஏறிச் செல்லக்கூடிய விமானம் ஒன்று முற்றிலும் கடுகு எண்ணெயில் இயங்கி சாதனை படைத்தது.

ஆனால் இந்த ஏற்பாடுகளில் உயிரி எரிபொருட்களைத் தரும் தாவரங்களைப் பயிரிட ஏராளமான நிலம் தேவை. உணவுத் தானியங்களையும் காய்கறிகளையும் அளிக்கின்ற விவசாய நிலங்கள் உயிரி எரிபொருள் உற்பத்திக்குத் திருப்பப்படுகிற ஆபத்து உள்ளது.

இத்துடன் ஒப்பிட்டால் பாக்டீரியாவிலிருந்து டீசல் தயாரிக்கும் ஏற்பாட்டில் இவ்விதப் பிரச்சினை கிடையாது என்பது மிகவும் சாதகமான அம்சமாகும்.


Apr 23, 2013

மூஞ்சூறும் பல்லிகளும் விண்வெளிக்குப் பயணம்

Share Subscribe
மூஞ்சூறு, சுண்டெலி,பல்லி, நத்தை மீன் முதலியவை ஒரு விண்கலத்தில் வைக்கப்பட்டு ரஷிய  ராக்கெட் மூலம் ஏப்ரல் 19 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.இவை விண்வெளியில் ஒரு மாத காலம் தங்கி விட்டு மே  18 ஆம் தேதி பூமிக்குத் திரும்பும்.
பிராணிகளுடன் ரஷிய சோயூஸ் ராக்கெட் உயரே கிளம்புகிறது. Credit :Roscosmos
விண்வெளியில் உள்ள எடையற்ற நிலைமை இவற்றின் உடலில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள், நீண்ட நாள் விண்வெளியில் இருந்தால் உறுப்புகள, திசுக்கள் ஆகிய்வற்றில் உள்ள செல்களில் ஏற்படும் மாற்றங்கள், கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்பு முதலியவற்றை ஆராய்வது இதன் நோக்கம்.

விசேஷ விண்கலத்துக்குள் 45 சுண்டெலி 15 பல்லிகள், எட்டு மூஞ்சூறுகள் பல நத்தைகள் ம்ற்றும் நுண்ணுயிர்கள், தாவரங்கள். மீன் தொட்டியில வைக்கப்பட்ட மீன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன..
ம்ங்கோலிய மூஞ்சூறு Credit :IBMP
விண்வெளிக்கு பிராணிகள் அனுப்பப்ப்டுவது இது முதல் தடவை அல்ல.உலகின் முதலாவது செயற்கைக்கோளை ( ஸ்புட்னிக் 1) அக்டோபர் 4 1957ல் செலுத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய ரஷியா ( அப்போதைய சோவியத் யூனியன்) மறு மாதம் 3 ஆம் தேதி ஸ்புட்னிக் 2 செயற்கைக்கோளில் ஒரு நாயை வைத்து அனுப்பியது.

விண்வெளியில் உள்ள நிலைமைகளால் உயிரினத்துக்கு ஏற்படுகின்ற விளைவுகள் ஆராயப்படுவதும் இது முதல் தடவை அல்ல. கடந்த காலத்தில் பல விண்வெளி வீரர்கள் உயரே சென்று வந்துள்ளன்ர்.
 நடுவே இருப்பது தான் பிராணிகளை ஏற்றிச்சென்றுள்ள விண்கலம்.  Credit:Roscosmos
மனிதன் விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்தால் கால் சூம்பும். தோள் பகுதி பெருத்துவிடும். முகம் உப்பும். உய்ரம் சற்றே அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பிய பின்னர் இந்த பாதிப்புகள் மறைந்து விடும்..இவையெல்லாம் ஏற்கெனவே  தெரிந்தது தான்.

எனினும் பிராணிகள் விஷயத்தில் ஏற்படும் விளைவுகள் வேறு விதமாக இருக்க வாய்ப்பு உண்டு.Bion M 1  என்று அழைக்கப்படும் ரஷியாவின் இத்திட்டத்தில் அமெரிக்காவின் நாஸா அமைப்பும் பங்கு பெற்றுள்ளது.ஜெர்மனி, போலந்து கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளும் பங்கு கொண்டுள்ளன.
ப்யணிகளில் ஒன்றான பல்லி. Credit Roscosmos
இந்தப் பிராணிகளின் ரத்த நாளம், முதுகுத் தண்டு, முழங்கால் பகுதி. மூட்டுப்பகுதி முதலியவற்றில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் குறிப்பாக ஆராயப்படும்.

பூமியிலிருந்து சுமார் 576 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்று வருகின்ற இந்த விண்கலத்தில் வெவ்வேறு பிராணிகளும் தனித்தனி கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 45 சுண்டெலிகளும் ஒரு கூண்டுக்கு மூன்று என தனிக் கூண்டுகளில் உள்ளன.

பிராணிகளுக்கு பசை வடிவில் உணவு வைக்கப்பட்டுள்ளது. வைட்டமின்கள் அடங்கிய தானியங்களும் உள்ளன. குடிப்பதற்குத் தண்ணீர் உண்டு.உடலுக்கு இதமான வெப்ப நிலை பராமரிக்கப்படுகிறது.விண்கலத்தில் அடங்கிய காற்றில் தகுந்த ஈரப்பதம் உண்டு.

பிராணிகளின் உடல்  நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிக்க விடியோ காமிராக்கள் உள்ளன. தவிர, தகவல் அனுப்பும் கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

பிராணிகள் அனைத்தும் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் பாணியில் பாரசூட் மூலம் கீழே வந்து இறங்கும். பின்னர் விஞ்ஞானிகள் இப்பிராணிகளின் உடல் நிலையை விரிவாக ஆராய்வர்.பிறகு இவை கருணை அடிப்படையில் மரிக்கும்படி செய்யப்படும். பின்னர்  இப்பிராணிகளின் உடல்கள் பாதுகாக்கப்படும்.
விண்கலத்தில் சுண்டெலிகளின் இருப்பிடம்.Credit IBMP
உயரே சென்றுள்ள பிராணிகள் குறிப்பான சில அடிப்படைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டவை. உதாரணமாக மூஞ்சூறுகள் மங்கோலிய மூஞ்சூறு வகையைச் சேர்ந்தவை.

ரஷியா முன்னர் 1973 முதல்  நான்கு ஆண்டுக்காலம் பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனைகளை நடத்தியுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் ந்டந்த சோதனைகளின் போது பிராணிகள் ஓரிரு வாரங்களில் பூமிக்குத் திரும்பின. உய்ரே செல்லும் பிராணிகள் ஒரு மாத காலம் தங்குவது என்பது இதுவே முதல் தடவை. தவிர, பிராணிகள் விண்வெளியில் தங்கியிருக்கும் போது அவற்றைப் பராமரிக்கவும் கண்காணிக்கவும் இப்போது மிக  நவீன முறைகள் பின்ப்ற்றப்படுகின்றன.