Showing posts with label விஞ்ஞானிகள். Show all posts
Showing posts with label விஞ்ஞானிகள். Show all posts

Mar 15, 2018

மூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்

Share Subscribe
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழ்ந்தால் அதிகம்” என்று டாக்டர்கள் 22 வயதில் சொல்லக்கேட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தமது மன உறுதியால் 76 வயது வரை வாழ்ந்து இங்கிலாந்தில் மார்ச் 14 ஆம் தேதி காலனாமானார்.

ஸ்டீபன் ஹாக்கிங்
By NASA - Original. Source (StarChild Learning Center)

பேச முடியாது. நடமாட முடியாது, என்ற நிலையிலும் அவர் செயற்கைக் குரல் மூலம் பேசினார். முக அசைவுகள் மூலம் தனது மின் சக்கர நாற்காலியை இயக்கினார். சக்கர நாற்காலியிலும் நேராக உட்கார முடியாது. ஒரு புறமாக சாய்ந்து தான் அமர்ந்திருப்பார். பெரிய தலை. அகன்ற காதுகள்.

உறுப்புகள் வேலை செய்யவில்லையே தவிர, அவருடைய மூளை மிக நன்றாகவே செயல்பட்டது. நடமாட முடியாத நிலையில் மின்சார நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார் என்றாலும் அவரது சிந்தனை பிரபஞ்ச வெளியில் உலாவியது. பிரபஞ்சவியல் பற்றி முக்கிய கொள்கைகளை உருவாக்கினார்.

மூளைத் திறனில் அவர் சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton), ஐன்ஸ்டைன் (Einstein), ஆகியோருக்கு நிகராகக் கருதப்பட்டவர். இளம் வயதில் பள்ளியில் ஹாக்கிங்குக்கு "ஐன்ஸ்டைன்" என்ற பட்டப் பெயர் உண்டு.

ஹாக்கிங்குக்கு இருந்த நோய் லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்குகிறது. உடலில் உள்ள தசைகள் படிப்படியாக செயலிழந்து விடும். இந்த தசை செயலிழப்பு நோய் ஒவ்வொரு உறுப்பாகப் பரவும். மருந்தே கிடையாது.

நல்ல வேளையாக ஹாக்கிங் விஷயத்தில் இந்த நோய் மெதுவாகப் பரவியது. அதற்குள்ளாக அவர் முடிந்த அனைத்தையும் சாதித்துக் காட்டினார்.

பட்ட மேற்படிப்பின் போது தான் அவருக்குள்ள நோய் கண்டுபிடிக்கப்பட்ட்து. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தது என்றாலும் அவர் சமாளித்துக் கொண்டு முன்னேறினார். அப்போது இங்கிலாந்தில் பிரெட் ஹாயில் (Fred Hoyle) பிரபல விஞ்ஞானி. அவரது மேற்பார்வையில் ஹாக்கிங் பட்ட மேற்படிப்பை முடிக்க விரும்பினார். ஆனால் அது சாத்தியப்படவில்லை. வேறு ஒரு விஞ்ஞானியின் கீழ் ஹாக்கிங் செயல்பட்டார்.



ஸ்டீபன் ஹாக்கிங்
By woodleywonderworks
https://www.flickr.com/photos/wwworks/3728608454/

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பது குறித்து அக்கால கட்டத்தில் இருவிதக் கொள்கைகள் நிலவின. பிரெட் ஹாயிலும் இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) என்ற விஞ்ஞானியும் பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்ற கொள்கையைக் கூறிவந்தனர். இதற்கு நேர் மாறான கொள்கை பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஜனித்தது என்று கூறியது. ஹாக்கிங் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு என்ற கொள்கையை ஆதரித்து நின்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல பல்கலைக் கழகங்களில் பணி புரிந்தார். பேராசிரியராகப் பணி புரிந்தார் அவரது வழிகாட்டுதலில் பலர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

பிரபஞ்சவியல், நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி, அண்டைப்புற நட்சத்திரங்களை விழுங்கும் பிளாக் ஹோல் (Black Hole) எனப்படும் பகாசுர நட்சத்திரம் ஆகியவை பற்றி எழுதியும் பேசியும் வந்த ஹாக்கிங் உயர் இயற்பியலிலிருந்து கீழே இறங்கி வந்து பொது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதவும் பேசவும் திறன் படைத்தவராகவும் திகழ்ந்தார்.

ஹாக்கிங் உரையாற்றுகிறார் - 2015
By Alexandar Vujadinovic - Own work
https://commons.wikimedia.org/w/index.php?curid=44259942

 அந்த வகையில் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அவர் எழுதிய நூல்களில் “காலத்தின் சுருக்க வரலாறு: (A Brief History of Time) என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த நூலின் விற்பனை ஒரு கோடி பிரதிகளை எட்டியது. வாசகர்கள் "முழுவதுமாக படித்து முடிக்காத பிரபல நூல்" என்ற பெயரும் அந்த நூலுக்கு உண்டு.

பிளாக் ஹோல் எனப்படும் நட்சத்திரங்கள் பற்றிய கொள்கையை உருவாக்கியதற்காக ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் கிடைக்கவில்லை.

பிளாக் ஹோல் நட்சத்திரம் நிரந்தரமானது அல்ல. காலப் போக்கில் அது கதிர் வீச்சாக வெளிப்பட்டு அழிந்து விடும் என்று ஹாக்கிங் கூறினார். ஆனால் அக்கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்த வழியே கிடையாது. உறுதிப்படுத்தப்படாத, உறுதிப்படுத்த முடியாத கொள்கைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. அப்படியும் அவர் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

ஏதாவது ஒரு வகையில் பூமியில் மனித குலத்துக்குப் பேரழிவு ஏற்படலாம் என்பது ஹாக்கிங்கின் கொள்கை. ஆகவே மனிதன் பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு குடிபெயர ஆயத்தமாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். அந்த வகையில் அவர் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்து வந்தார்

ஒரு சமயம் அவர் ஜெட் விமான மூலம் உயரே சென்று அந்தரத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெற்றார். விண்கலம் மூலம் உயரே செல்வதற்காக டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு அவ்வளவு ஆர்வம்.

அந்தரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்
By Jim Campbell/Aero-News Network
https://www.flickr.com/photos/39735679@N00/475109138

பிரபஞ்ச வெளியில் பூமி மாதிரியில் வேறு கிரகம் இருக்கலாம் அப்படியான கிரகத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கலாம் என்ற கருத்தை ஹாக்கிங் ஆதரித்தார். அப்படியான வேற்றுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நாம் ரேடியோ அலைகள் மூலம் செய்தி அனுப்ப முற்படலாகாது என்றும் அவர் கூறினார். வேற்றுலக மனிதர்களை நம்ப முடியாது என்றார்.

பூமி இருக்கின்ற இடத்தை வெளி உலகினருக்குத் தெரியப்படுத்தலாகாது. இதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஹாக்கிங் கருதினார்.

ஹாக்கிங்குக்கு உடல் பிரச்சினை இருந்த போதிலும் அவர் தமது 22 வது வயதில் ஜேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஹாக்கிங்குக்கு ஜேன் பேருதவியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஹாக்கிங்கின் உடல் நிலை மேலும் மோசமான நிலையை எட்டிய போது அவரை 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள மூன்று வேளைகளுக்கு மூன்று நர்சுகளை நியமிக்க வேண்டி நேர்ந்தது. இந்த நேரத்தில் ஹாக்கிங்குக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஹாக்கிங்குக்கு அந்த மூன்று நர்சுகளில் ஒருவரான எலைன் மேசன் மீது ஈர்ப்பு ஏற்பட்ட்து. ஹாக்கிங் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 1995 ஆம் ஆண்டில் அந்த நர்ஸைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது. ஹாக்கிங்குக்கு முதல் மனைவி மூலம் மூன்று குழந்தைகள். இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இல்லை.

Oct 19, 2011

விண்வெளியில் சந்திரா

Share Subscribe
இன்றைய தினம் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பிறந்த தினம். 1910 ஆண்டு அக்டோப்ர் 19 ந் தேதி பிறந்த அவரது நூற்றாண்டு விழா கடந்த ஆண்டில் கொண்டாடப்பட்டது. அவர் காலமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.  இன்று அவரது பெயரைத் தாங்கிய செயற்கைக்கோள் - சந்திரா - அவரைப் போலவே அயராது உழைத்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நாஸா (NASA) விண்வெளி அமைப்பு விண்வெளியில் எக்ஸ் கதிர்களை வெளியிடும் நட்சத்திரங்களை ஆராய  விரும்பியது. காமா கதிர், எக்ஸ் கதிர் ஆகியவற்றைப் பூமியைப் போர்த்துள்ள காற்று மண்டலம் தடுத்து விடுவதால் அவற்றை வழக்கமான டெலஸ்கோப் மூலம் தரையிலிருந்தபடி ஆராய முடியாது. ஆகவே இக்கதிர்களை ஆராய காற்று மண்டலத்துக்கு மேலாக அமைந்தபடி பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள் ஒன்றை மேலே அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்த செயற்கைக்கோளுக்கு ஏதாவது ஒரு பெயர் வைக்க நாஸா விரும்பியது. உலகில் யார் வேண்டுமானாலும் தகுந்த்தொரு பெயரைக் கூறலாம் என்று நாஸா அறிவித்தது. பல ஆயிரம் பேர் இதில் பங்கு கொண்டு பெயர்களைக் கூறினர். அவர்களில் பெரும்பாலோர் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரை வைக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவரது பெயரைச் சுருக்கி அந்த செயற்கைகோளுக்கு சந்திரா எக்ஸ்ரே ஆய்வுக்கூடம் என்று பெயர் வைத்தனர்.

எக்ஸ் கதிர்களை சாதாரண முறையில் படம் பிடிக்க இயலாது என்பதால் விசேஷ கருவிகள் உருவாக்கப்பட்டு செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டன.சந்திரா செயற்கைக்கோள் 1999 ஆம் ஆண்டு கொலம்பியா ஷட்டில்(Columbia Shuttle) மூலம் உயரே செலுத்தப்பட்டது. ’சந்திரா’ 5 ஆண்டுகள் செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

பூமியை இந்த செயற்கைக்கோள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே ஒரு சமயம் அது பூமியிலிருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. வேறு சமயம் 16 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதுவரை சந்திரா செயற்கைக்கோள் எண்ணற்ற அரிய தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது.
சந்திரா டெலஸ்கோப்
எடுத்து அனுப்பிய ஒரு படம்

விஞ்ஞானி சந்திரசேகர் நட்சத்திரங்களின் பரிமாண வளர்ச்சி தொட்ர்பாக 1930 ஆம் ஆண்டு வாக்கில் தமது இளம் வயதில் கண்டுபிடித்துக் கூறிய ஒரு கொள்கை விஞ்ஞான உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அதை ஏற்க முன்வரவில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னது தான் சரி என்பது நிரூபணமாகியது. அது சந்திரசேகர் வரம்பு ( Chandrasehkar Limit)  என்று குறிப்பிடப்படுகிறது. இக் கண்டுபிடிப்புக்காக சந்திரசேகருக்கு 1983 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சந்திரசேகர் 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறி கடைசி வரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.