Sep 28, 2014

வால் நட்சத்திரத்தில் ஆய்வுக் கலம் இறங்க தேதி நிர்ணயம்

Share Subscribe
ஐரோப்பிய  விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள ரோசட்டா (Rosetta) என்னும் விண்கலம் இப்போது ஒரு வால் நட்சத்திரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அந்த விண்கலத்திலிருந்து ஆய்வுக்கலம் ஒன்று வெளிப்பட்டு 67P சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்று பெயரிடப்பட்ட அந்த வால் நட்சத்திரத்தில்  நவம்பர் 12 ஆம் தேதி இறங்கப் போகிறது.  நான்கு கிலோ மீட்டர்  நீளமும் மூன்றை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த வால் நட்சத்திரத்துக்கு பெரிதாக ஈர்ப்பு சக்தி கிடையாது.

ரோசட்டா சுற்றி வருகின்ற வால் நட்சத்திரம் இது தான்
ஆகவே அதில் போய் இறங்கும் பிலே ( Philae) என்னும் ஆய்வுக் கலம் ஒரு வேளை எகிறி மேலே வந்து  விடலாம். ஆகவே ஆய்வுக் கலம் வால் நட்சத்திரத்தில் இறங்கியதும் தரையை இறுக கவ்விக் கொள்ளும். பின்னர் பல வகைகளிலும் வால் நட்சத்திரத்தை ஆராயும் (விடியோ காண்க)

ரோசட்டாவிலிருந்து ஆய்வுக்கலம் இறங்கும் காட்சியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

வால் நட்சத்திரத்தில் போய் இறங்கி இப்படியான ஆய்வு  நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டில் டெம்பிள்-1 (Temple-1) என்னும் வால் நட்சத்திரத்தை நோக்கி நாஸா Deep Impact என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்திலிருந்து பெரிய சம்மட்டி போன்ற  370  கிலோ எடை கொண்ட கருவி வெளிப்பட்டு அந்த வால் நட்சத்திரத்தின் மீது வேகமாகத் தாக்கியது. இதன் விளைவாக வால் நட்சத்திரத்தில் 100 மீட்டர் அகலமும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.

அப்போது வால்  நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய தூசு மற்றும் துகள்களை விண்கலத்தில் இருந்த கருவிகள் ஆராய்ந்து நாஸாவுக்குத் தகவல் அனுப்பியது.

டெம்பிள் 1 வால் நட்சத்திரம் தாக்கப்பட்ட இடம்
கடந்த காலத்தில் வேறு பல விண்கலங்களும் வால் நட்சத்திரங்களை மிகவும் நெருங்கி படம் பிடித்து அனுப்பியுள்ளன.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தின் கிரகங்கள் தோன்றிய போதே வால் நட்சத்திரங்கள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அவை ஒதுங்கிப் போன மிச்ச மீதிகளாகக் கருதப்படுகின்றன.

சூரியனின் விளவாக கிரகங்களில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வால் நட்சத்திரங்கள் மீது அப்படியான பெரிய விளைவுகள் இல்லை. அவற்றில் இன்னும் ஆரம்ப காலத்து நிலைமைகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஆகவே தான் வால் நட்சத்திரங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.

வால் நட்சத்திரங்களை ஆராய்வதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் தோற்றம் பற்றி மேலும் நன்கு அறிய உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Sep 26, 2014

மங்கள்யான் வெற்றி: இந்தியா சாதித்தது எப்படி?

Share Subscribe

உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன் படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும் மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இது சாத்தியமாகியது.

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மிக நம்பகமானது என்பது 25 தடவைகளுக்கு மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம் உருவாக்கி வரும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் நம்பகத்தன்மை இனி தான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால் பொதுவில் ஒரு விண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு செவ்வாய் நோக்கி செல்ல வேண்டுமானால் அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும்.


ஆகவே மங்கள்யான் திட்டம் பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்ட போது ஜி.எஸ்.எல்வி. ராக்கெட்டை மேலும் சில தடவை செலுத்தி அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு மங்கள்யானை செலுத்தலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருந்தது.

செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த நேரத்தில் விண்கலத்தை செலுத்த இயலாது. பூமியும் செவ்வாயும் இருக்கின்ற நிலைகளைப் பொருத்து 26 மாதங்களுக்கு ஒரு முறைதான் வாய்ப்பான சமயம் கிட்டும். 2013 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலம் வாய்ப்பான காலமாகும். அதை விட்டால் 2016 ஜனவரி வரை காத்திருந்தாக வேண்டும். இஸ்ரோ அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி ராக்கெட்டையே பயன்படுத்த முடிவு செய்தது. அது உண்மையில் துணிச்சலான முடிவாகும்.
செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்பட்டுள்ள
மங்கள்யான் விண்கலம்

மங்கள்யானை செவ்வாயை நோக்கி செலுத்துவதற்கான வேகத்தைப் பெறுவதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தியையே பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. அந்த உத்திக்கு கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று பெயர். இது ஒன்றும் புதுமையானது அல்ல. 2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியாவின் சந்திரயான் அனுப்பப்பட்ட போது இதே உத்தி பயன்படுத்தப்பட்ட்து
  
இந்தப் பின்னணியில் தான் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 2013 நவம்பர் 5 ஆம் தேதி மங்கள்யான் உயரே செலுத்தப்பட்டது. அத்தோடு அந்த ராக்கெட்டின் வேலை முடிந்து விட்ட்து

மங்கள்யான் பூமியைச் சுற்றி வர ஆரம்பித்தது. எல்லா விண்கலங்களிலும் அவசியமான போது அவற்றின் வேகத்தை அதிகரிக்க LAM எனப்படும் எஞ்சின் இடம் பெறுவது உண்டு. மங்கள்யானில் அவ்வித எஞ்சின் இடம் பெற்றிருந்தது. மங்கள்யான் 2013 நவம்பர் கடைசி வரை பூமியை ஆறு தடவை சுற்றியது. அந்த ஆறு தடவைகளிலும் மங்கள்யானில் இருந்த எஞ்சின் அவ்வப்போது சிறிது நேரம் இயக்கப்பட்டது. ஆகவே ஒவ்வொரு தடவையும் பூமியை நெருங்கும் போதும் மங்கள்யானின் வேகம் அதிகரித்துக் கொண்டே போயிற்று.

மங்கள்யான் ஏழாவது தடவை சுற்ற முற்பட்ட போது அதன் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்துவிட்டிருந்தது. ஏழாம் தடவையில் எஞ்சினை இயக்கிய போது வேகம் மணிக்கு 42 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்து மங்கள்யான் டிசம்பர் முதல் தேதி செவ்வாயை நோக்கிப் பயணித்தது.

சூரியனை பூமி சுற்றுவது போல மங்கள்யான் அதன் பின்னர் எஞ்சின் உதவியின்றி விண்வெளியில் சூரியனை சுற்ற ஆரம்பித்தது. சூரியனை பூமியானது மூன்றாவது வட்டத்தில் சுற்றுகிறது. செவ்வாய் கிரகம் நான்காவது வட்டத்தில் சுற்றுகிறது. ஆகவே மங்கள்யான் நான்காவது வட்டத்துக்கு மாற வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் நெடுஞ்சாலையில் ஒரு லேனிலிருந்து அடுத்த லேனுக்கு மாற மெல்ல ஓரம் கட்டுவது போல மங்கள்யானின் பயணப்பாதையை அவ்வப்போது ஓரம் கட்ட வேண்டியிருந்தது. இறுதியில் செவ்வாயை நெருங்கிய கட்டத்தில் மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டு அது கடந்த 24 ஆம் தேதி செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயை சுற்ற ஆரம்பித்தது.

செவ்வாய் கிரகத்துக்கு  விண்கலத்தை வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியுள்ள ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் செவ்வாய்க்கு கிராவிடி அசிஸ்ட் உத்தியைப் ப்யன்படுத்தி விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரே  நாடு இந்தியாவாகும்.
இடது கோடியில் உள்ளது பி.எஸ்.எல்.வி ராக்கெட். நடுவே உள்ளது
ஜி.எஸ்.எல்.வி. -2  வலது கோடியில் உள்ளது ஜி.எஸ்.எல்.வி -3 ஆகும்
சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப சீனா, அமெரிக்கா ஆகியவை கடந்த காலத்தில் கிராவிடி அசிஸ்ட் முறையைப் பயன்படுத்தியுள்ளன.வேறு கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பவும் பிற நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தியது உண்டு. ஆனால் எந்த நாடும் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப இந்த உத்தியைப் பயன்படுத்த முற்படவில்லை.

அதற்குக் காரணம் உண்டு. செவ்வாய்க்கு நேரடியாக விண்கலத்தை அனுப்புகிற அளவுக்கு அந்த நாடுகளிடம் சக்தி மிக்க ராக்கெட்டுகள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நாஸாவினால் 2013 நவம்பர் 18ஆம் தேதி செவ்வாய் நோக்கி செலுத்தப்பட்ட மாவென் விண்கலம் பூமியை ஒரு தடவை சுற்றி விட்டு நேரே செவ்வாய்க்குக் கிளம்பியது.

இனி இந்த நாடுகள் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியைப் பின்பற்ற முற்படலாம்.

ரஷியா,அமெரிக்கா,ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஓரளவில் சிறிய ராக்கெட் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல அந்த சிறிய ராக்கெட்டைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு இந்தியா ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது என்பது மிகப் பெரிய சாதனையே. ஆகவே தான் இந்தியாவினால் எப்படி இதை சாதிக்க முடிந்த்து என்று உலக நாடுகள் விய்ந்து நிற்கின்றன.

இதற்கிடையே இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி-2 வகை ராக்கெட் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்ட போது சுமார் 2 டன் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்தியது. அது தொடர்ந்து மேலும் சில தடவை சோதிக்கப்பட இருக்கிறது

அடுத்தபடியாக நாம் புதிதாக உருவாக்கி வரும் ஜி.எஸ்.எல்.வி.-3 வகை ராக்கெட் அனேகமாக அடுத்த மாதக் கடைசியில் முதல் தடவையாக உயரே செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது. அது  நான்கு டன் எடையை சுமந்து செல்லக்கூடியதாகும். அது வெற்றி பெற்று விட்டால் ராக்கெட் விஷயத்தில் இந்தியா சுயசார்பு நிலையை எட்டிப் பிடித்து விடும்

அப்படியான நிலை தற்போது இல்லை என்பதால் தான் இந்தியா தயாரிக்கும் எடை மிக்க செயற்கைக்கோள்களை தென் அமெரிக்காவில் உள்ள கூரூ ராக்கெட் தளத்துக்கு எடுத்துச் சென்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்த வேண்டியுள்ளது.


அடுத்து 2018 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தை செலுத்தத் திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் அனுப்புவதானால் மேலும் பெரிய அத்துடன் நிறைய ஆராய்ச்சிக்கருவிகளுடன் கூடிய விண்கலத்தை அனுப்ப முடியலாம்.
(இக்கட்டுரை தமிழ் ஹிந்து செப்டம்பர் 26 ஆம் தேதி இதழில் வெளியானதாகும். அது இங்கே சிறு மாறுதல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது)