Nov 30, 2013

மங்கள்யான்: பூமி கைகொடுக்கிறது

Share Subscribe

   இக்கட்டுரை மீண்டும் மங்கள்யான் பற்றியதே. எனினும் இது மங்கள்யான் திட்டத்துக்கு அடிப்படையான அறிவியல் அம்சங்களை விளக்குவதாகும். இது தினமணி 30 ஆம் தேதி இதழில் வெளியானதாகும்.


இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் 30 ஆம் தேதி நள்ளிரவு வாக்கில் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்பட இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் மங்கள்யான் மணிக்கு சுமார் 42 ஆயிரம் வேகத்தில் செவ்வாய் கிரக்த்தை நோக்கிப் பயணிக்கும்.

மங்கள்யான் இந்த மாதம் 5 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அது இத்தனை நாட்களாகப் பூமியைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.

மங்கள்யான் இவ்விதம் பூமியை வட்டமிட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நவம்பர் 18 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு செவ்வாய் கிரகத்தை நோக்கி மாவென் என்ற விண்கலத்தைச் செலுத்தியது. அந்த விண்கலம் உயரே சென்ற சுமார் 27  நிமிஷத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கிக் கிளம்பியது. இப்போது அது செவ்வாயை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மாவென் விண்கலம் உடனே செவ்வாயை நோக்கிக் கிளம்ப, இந்தியாவின் மங்கள்யான் மட்டும் இதுவரை பூமியை சுற்றிக் கொண்டிருந்ததற்குக் காரணம் உண்டு. அமெரிக்க விண்கலத்தை உயரே தூக்கிச் சென்ற அட்லஸ் ராக்கெட் சக்திமிக்கது. ஆகவே மாவென் உயரே சென்றதும் செவ்வாயை நோக்கி  உகந்த வேகத்தில் செலுத்தப்பட்டு விட்டது..

அமெரிக்க ராக்கெட்டுடன் ஒப்பிட்டால் மங்கள்யானை உயரே செலுத்திய  நமது பி.எஸ்.எல்.வி ராக்கெட் திறன் குறைந்தது. அந்தக் காரணத்தால் மங்கள்யானை அதனால் அதி வேகத்தில் செலுத்த இயலவில்லை. மங்கள்யான் உயரே சென்றடைந்த போது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர்.

ஆனால் ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு  செவ்வாய்க்கு செல்ல வேண்டுமானால் குறைந்த பட்சம் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். பொதுவில் விண்கலத்திலேயே எஞ்சின் உண்டு. எரிபொருள் உண்டு. மங்கள்யானுடன் இணைந்த எஞ்சினை இயக்கினாலும் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர்  வேகம் கிடைக்காது.

இந்தியாவிடம் மட்டும் சக்திமிக்க ராக்கெட் இருந்திருக்குமானால் பிரச்சினை இருந்திராது உள்ளபடி இந்தியா சக்திமிக்க இரு ராக்கெட்டுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று செம்மையாக்கப்பட்டு வருகிறது. மற்றொன்று இனிமேல் தான் சோதிக்கப்பட இருக்கிறது.

அதுவரை காத்திருக்க இந்தியா விரும்பவில்லை. செவவாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வாய்ப்பான காலம் என்பது உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வாய்ப்பான கட்டம் வரும். அதாவது இப்போது விட்டால் 2016 ஜனவரியில் தான் செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப முடியும். அது வரை காத்திருக்க இந்திய விண்வெளி அமைப்பு விரும்பவில்லை.

ஆகவே இஸ்ரோ விஞ்ஞானிகள் ஓர் உத்தியைப் பின்பற்ற முடிவு செய்தார்கள். அதாவது மங்கள்யானை உயரே செலுத்திய பின்னர் அதன் வேகத்தை அதிகரிக்க பூமியைப் பயன்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்தனர். பூமிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை நாம் அறிவோம். மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க இந்த ஈர்ப்பு சக்தி உதவியது.
 பூமியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதை மிக நீள் வட்டப் பாதையில் செலுத்தினால் வேகத்தை அதிகரிக்க முடியும்..
மங்கள்யான் எவ்விதம் அண்மை நிலையிலிருந்து (perigee) செவவாயை நோக்கிக்
கிளம்பும் என்பதை இப்படம் விளக்குகிறது
 அதன்படி மங்கள்யான் நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பித்த போது ஒரு கட்டத்தில் அது பூமியிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது. இதை அண்மை நிலை (perigee) என்று கூறுவார்கள்.  நீள் வட்டப் பாதை என்பதால் விண்கலம் மேலும் மேலும் விலகிச் சென்று  மறுகோடிக்குச் செல்லும். மறு கோடி முனையைத் தொலைவு நிலை     (apogee) என்று கூறுவார்கள்.

மங்கள்யான் பூமிக்கு மிக அருகில் வரும் சமயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்க்லத்தில் உள்ள எஞ்சினை இயக்கினர். அதன் விளைவாக அது அதிக தூரத்துக்குச் சென்றது. பின்னர் தொலைவு நிலைவிலிருந்து அது பூமியை மேலும் மேலும் நெருங்கிய போது அதன் வேகம் இயல்பாக அதிகரித்தது. இது இயற்கை நியதி. இவ்விதம் பல தடவை செய்யப்பட்டது

பூமியானது சூரியனை சுற்றுவதை நாம் அறிவோம்.
 பூமி தனது பாதையில் எப்போதும் ஒரே வேகத்தில் செல்வதில்லை. ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால் ஜனவரி மாதத்தில் பூமியானது சூரியனுக்கு சற்று அருகில் இருக்கும். ஆகவே ஜனவரியில் பூமி அதிக வேகத்தில் பயணிக்கிறது.

சிறுவர்கள் ஓடிப் பிடித்து விளையாடுகையில் பிடிப்பவரின் அருகே உள்ளவர்கள் பிடிபடாமல் இருக்க அதிக வேகத்தில் ஓடுவார்கள். சற்றே தொலைவில் உள்ள சிறுவர்க்ள் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மெதுவாக ஓடுவார்கள். இது கிரகங்களுக்கும் பொருந்தும். பூமி போன்ற கிரகத்தைச் சுற்றுகிற விண்கலங்களுக்கும் பொருந்தும். ஜோகான்னஸ் கெப்ளர்  என்ற ஜெர்மன் விஞ்ஞானி (1571—1630) இந்த இயற்கை விதியைக் கண்டுபிடித்துக் கூறினார்
.
 நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்றும் மங்கள்யான் பூமியை நெருங்குகையில் அதிக வேகத்துடன் வர முற்பட்டதற்கு இந்த இயற்கை விதியே காரணம். தொலைவு நிலையை மேலும் மேலும் அதிகரித்தால் மங்கள்யான் பூமியை  நோக்கி அதிக வேகத்துடன் வரும். இந்த விதமாக மங்கள்யானின் வேகத்தை அதிகரிப்பது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்து அதன்படியே செய்தனர்.

பூமியை ஆறாவது தடவை சுற்றி முடித்த கட்டத்தில் மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. அது தொலைவு நிலையில் பூமியிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர் தொலவில் இருந்தது. அண்மை நிலையில் அது ஆரமபத்தில் இருந்தது போல்வே சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது.

இங்கு ஒன்றை விளக்கியாக வேண்டும். மங்கள்யான் சுமார 250 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது தான் அதன் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டர். விண்கலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது வேகம் சில ஆயிரம் கிலோ மீட்டரே. கெப்ளர் விதிப்படி தொலைவில் இருந்தால் இயல்பாக வேகம் குறையும்.
 மங்கள்யான் 27 ஆம் தேதி புதன்கிழமையன்று பூமிக்கு மிக அருகாமையில் வந்து விட்டுப் பிறகு தொலைவு நிலைக்குச் சென்று விட்டது.

 மறுபடி  அது 30 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு வாக்கில் பூமியை நெருங்கும். மங்கள்யான் சுமார் 280 கிலோ மீட்டர் உயரத்தில்  இருக்கின்ற  நேரத்தில்   மங்கள்யானில் உள்ள எஞ்சினை 29 நிமிஷ நேரம் இயக்குவர். இதனால் மங்கள்யான் கூடுதல் வேகம் பெறும். அதாவது   மங்கள்யானின் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டரிலிருந்து 42 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கும். இதன் பலனாக அது செவ்வாயை நோக்கிப் பாயும்.

இவ்விதம் ( பூமி உட்பட) ஒரு கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் உத்திக்கு ஆங்கிலத்தில் கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று பெயர்
.  .
   நாஸா கடந்த காலத்தில் பயனீர் விண்கலங்கள், வாயேஜர் விண்கலங்கள் ஆகியவற்றை அனுப்பிய போது இந்த உத்தியைப் பயன்படுத்தியது. அதாவது இந்த விண்கலங்கள் வியாழனை நெருங்கிய போது வியாழனின் ஈர்ப்பு சக்தியால் அதிக வேகத்தைப் பெற்றன. அதன் பலனாகவே அவை வியாழனுக்கு அப்பால் உள்ள சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களுக்கு அருகாமையில் சென்று அவற்றை ஆராய முடிந்தது.

   செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப பூமியின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்துவது என்பது இதுவே முதல் தடவை. அந்த அளவில் உலகில் பல நாடுகளில் விண்வெளித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தை மிக ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.

மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாயை நோக்கிக் கிளம்பிய பிறகு அது இயற்கை விதிகளின்படி விண்வெளியில் மிதந்து செல்லும் 

செவ்வாயை. நெருங்கும் வரையில் மங்கள்யானில் உள்ள எஞ்சினை இயக்கத் தேவையில்லை. சூரியனைச் சுற்றி வருவதற்கு பூமியில் எந்த எஞ்சினும் இல்லை எனபது போல மங்கள்யான் விண்வெளியில் இயல்பாக மிதந்து செல்லும். அக்கட்டத்தில் மங்கள்யானுக்கு எஞ்சினின் உதவி தேவையில்லை. மங்கள்யானை அப்படியே விட்டால் அது சூரியனை சுற்ற முற்படும். ஆகவே செவ்வாயை நோக்கிச் செல்லும் வகையில் மங்கள்யானின் பாதையில் சிறு திருத்தங்களைச் செய்ய தீபாவளி ராக்கெட் சைஸில் சிறு உந்திகள் இருக்கும்

. விண்வெளியானது கும்மிருட்டாக இருக்கும். கரிய வானில் சூரியன் எப்போதும். தெரியும்.. இதே போல எல்லாப் புறங்களிலும் நட்சத்திரங்கள் எப்போதும் தென்பட்டிருக்கும்.. அகத்திய நட்சத்திரம் உட்பட குறிபிட்ட சில நட்சத்திரங்களின் ஒளியானது மங்கள்யானில் உள்ள குறிப்பிட்ட கருவியில் எப்போதும் வந்து விழும்படி ஏற்பாடு இருக்கும். அதாவது இப்படியாக நட்சத்திரங்களை வைத்து மங்கள்யான் வழியறிந்து செல்லும்.
  
மங்கள்யான் வளைந்த பாதையில் சுமார் பத்து மாத காலம் பயணிக்கும். இதற்கிடையே செவ்வாயும் தனது வளைந்த பாதையில் மணிக்கு 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்துக்கு மங்கள்யான் போய்ச் சேரும் வகையில் கணக்கிட்டு அதன் பாதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் சில மணி நேரம் முன்கூட்டியோ  அல்லது தாமதமாகவோ போய்ச் சேர்ந்தால் செவ்வாயை அடைய முடியாது.

இதில் வேறு ஒரு பிரச்சினையும் உள்ளது. செவ்வாயை நெருங்கிய பின்னர் மங்கள்யானின் வேகம் கணிசமாகக் குறைக்கப்பட்டாக வேண்டும்.அப்படி வேகத்தைக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும். எனவே மங்கள்யானில் உள்ள எஞ்சினை இயக்கி அதன் வேகத்தைத் தக்கபடி குறைப்பார்கள். அதைத் தொடர்ந்து மங்கள்யான் செவ்வாயைச் சுற்றி வர ஆரம்பிக்கும்
_________________________________________________________________________________


 

  

Nov 24, 2013

அடுத்த மாதம் மங்கள்யானுக்கு அக்னிப் பரீட்சை

Share Subscribe
" செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது " என்று நவமபர் மாதம் 6 ஆம் தேதி காலைப் பத்திரிகைகளின் தலைப்புகள் கூறின.

 ஒரு வகையில்அத்தலைப்பு பொருத்தமற்றது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மங்கள்யான் இன்னமும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.  அது இனிமேல் தான் செவ்வாயை நோக்கி செலுத்தப்பட உள்ளது.. கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை  நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.
மங்கள்யான் விண்கலம்
கடந்த பல நாட்களில் அதன் சுற்றுப்பாதை பல தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது மங்கள்யான் பூமியிலிருந்து மேலும் மேலும் அதிகத் தொலைவில் இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி  எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அதிகபட்சத் தொலைவு  1,92,874 கிலோ மீட்டர் ஆக இருக்கும்படி செய்யப்பட்டது.

அடுத்தபடியாக டிசம்பர் முதல் தேதியன்று மங்கள்யான் பூமியைச் சுற்றுவதற்கு மாறாக செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும். அப்போது அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அதி வேகப் பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிக் கிளம்பும். இத்துடன் ஒப்பிட்டால் மங்கள்யானை சுமந்து சென்ற ராக்கெட் பூமியிலிருந்து உயரே கிளம்பிய போது அதன் அதிக பட்ச வேகம் சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டராகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விண்கலம் ( அதைச் சுமந்து செல்கின்ற ராக்கெட்) பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு ஒரு கிரகத்தை நோக்கிச் செல்வதானால் அது மேலே குறிப்பிட்டபடி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாக வேண்டும்,

 அவ்வளவு வேகத்தில் ஒரு விண்கலத்தை செலுத்துவதற்கான  சக்திமிக்க ராக்கெட் இந்தியாவிடம் இப்போது கிடையாது. ஆகவே தான் பூமியைப் பல தடவை சுற்றிவிட்டுப் பிறகு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டியபின் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும்படி செய்யும் ஏற்பாட்டை இந்திய விண்வெளி அமைப்பு ( இஸ்ரோ) பின்பற்றுகிறது.

மங்கள்யான் ஒவ்வொரு தடவையும் பூமியைச் சுற்றி வந்த போது பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக மங்கள்யானின் வேகம் அதிகரித்தது. இது நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இல்லாமல் போன குறையைப் பூர்த்தி செய்தது. அதாவது மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டே அது பூமியைப் பல தடவை சுற்றும்படி செய்தனர்.

மங்கள்யான் விண்கலத்தின்  உயரம் எவ்விதம் படிப்படியாக
அதிகரிக்கப்பட்டது என்பதை இப்படம் காட்டுகிறது.
கடந்த காலத்தில் ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பிய போது அவற்றைச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் பூமியிலிருந்து நேரடியாக செவ்வாயை நோக்கிச் சென்றன.அந்த ராக்கெட்டுகள் சக்தி மிக்கவை என்பதே அதற்குக் காரணம்.

 நாம் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் நுட்பமான, திறன் மிக்க செயற்கைக்கோள்கள்களையும் விண்கலங்களையும் தயாரிப்பதில் வேகமான முன்னேற்றத்தைக் கண்டோம்.  ஆனால் ராக்கெட் தயாரிப்பில் அந்த அளவுக்கு முன்னேறவில்லை.

இந்தியா இப்போது   சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சியில் இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே தான் குறைந்த திறன் கொண்ட பி.எஸ்.எல்.வி என்னும் சிறிய ராக்கெட்டைப் ப்யன்படுத்தி மங்கள்யானை உயரே செலுத்தியது.

இந்த விஷயத்தில் இரண்டு விதமாக வாதிக்கலாம்.சக்திமிக்க பெரிய ராக்கெட்டுகளை உருவாக்கும் வரையில் காத்திருக்கலாமே?.வெறும் 15 கிலோ எடை கொண்ட ஆராய்ச்சிக் கருவிகளை சுமந்து செல்கிற மங்கள்யானை இப்போது அனுப்புவானேன்? செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் சீனாவை மிஞ்சிவிட்டோம் என்ற பெருமைக்காக இவ்வளவு அவசரமா  என்று கேட்கலாம்.
மங்கள்யானின் வைக்கப்பட்டுள்ள கலர் கேமரா பூமியைப் படம் எடுத்து
அனுப்பியுள்ளது. இதே கேமரா பின்னர் செவ்வாயைப் படம்  எடுத்து எனுப்பும்
வேறு விதமாகவும் வாதிக்கலாம். இதே பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்திதான் சந்திரயான் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பினோம்.அது போல இந்த ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இயலும் என்னும்போது அதில் ஈடுபடுவதில் தவறு கிடையாது என்று கூற முடியும்.தவிர, மற்றவர் பின்பற்றிய வழியில் தான் சென்றாக வேண்டும் என்பது கிடையாது என்றும் கூறலாம்

.இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்  உகந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 2016 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே தான் டிசம்பர் முதல் தேதியன்று  நள்ளிரவு மங்கள்யான் செவ்வாயை நோக்கிப் பாய இருக்கிறது. மங்கள்யான் விண்கலத்திலேயே இதற்கான எஞ்சின் உள்ளது.அது சில நிமிஷ நேரம் இயக்கப்படும். அப்போது விண்கலம் தேவையான வேகத்தைப் பெறும்.அந்த எஞ்சின் வெற்றிகரமாகச் செயல்படுவதானது அக்னிப் பரீட்சையாக இருக்கும்.

மங்கள்யான் அந்த அக்னிப் பரீட்சையில் ஜெயித்து விட்டால் அது உறுதியாக செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று அர்த்தமல்ல. அதற்குப் பிறகு மங்கள்யான் பல சிறிய பரீட்சைகளிலும் வென்றாக வேண்டும்.

விண்வெளி என்பது காரிருள் நிறைந்தது. பகல் இரவு என்பது கிடையாது. நிரந்தர இருள் தான். ஆனால் சூரியனும் தெரியும்.அதே நேரத்தில் எங்கு திரும்பினாலும் நட்சத்திரங்களும் தெரியும்.” செவ்வாய்க்குச் செல்லும் வழி “ என போர்டு எல்லாம் விண்வெளியில் கிடையாது.  இந்த நட்சத்திரங்கள் தான் வழிகாட்டிகள்.

மங்கள்யான் விண்கலத்தில் நட்சத்திர ஒளி உணர்வுக் கருவி (Star Sensor)  உண்டு. கனோபஸ் ( அகத்திய நட்சத்திரம்) உட்பட குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ஒளி இக் கருவிக்குள்   எப்போதும் வந்து விழும்படி ஏற்பாடு இருக்கும்.மங்கள்யான் தனது பாதையிலிருந்து விலகாமல் இருக்க இக்கருவி உதவுகிறது.இதை மங்களயானின் லகான் என்றும் சொல்லலாம். இது மாதிரியில் மங்கள்யானில் பல கருவிகள் உண்டு.

மங்கள்யான் டிசம்பர் முதல் தேதியன்று செவ்வாயை  நோக்கிக் கிளம்பும் போது வானில் செவ்வாய் கிரகம் ஓரிடத்தில் இருக்கும்.(கீழே படம் காண்க) ஆனால் மங்கள்யான் அந்த இடத்தை நோக்கிச் செல்லாமல் வேறு இடத்தை நோக்கிக் கிளம்பும். இதற்குக் காரணம் உண்டு. சூரியனை சுற்றி வருகிற செவ்வாய் கிரகம் தனது பாதையில் மணிக்கு சுமார் 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ( வினாடிக்கு 24 கிலோ மீட்டர்) சென்று கொண்டிருக்கிறது.
டிசம்பர் முதல் தேதி பூமியின் பிடியிலிருந்து  விடுபட்டுக் கிளம்பும் மங்கள்யான்
வளைந்த பாதையில் 300 நாள் பயணம் செய்து செவ்வாயை அடையும்..செவ்வாய் கிரகம் இப்போது எங்கு உள்ளது என்பதையும் அடுத்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி எங்கு இருக்கும் என்பதையும் இப்படத்தில் காணலாம்.
மங்கள்யான் ஐந்தே வினாடிகளில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதற்குள்ளாக செவ்வாய் கிரகம் இப்போது இருக்கின்ற இடத்திலிருந்து 120 கிலோ மீட்டர் நகர்ந்து விட்டிருக்கும்.ஆகவே செவ்வாய் கிரகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்தை நோக்கி மங்கள்யான் பயணிக்கும்.

 விண்கலம் ஓர் அலாதியான வாகனம். ஆளில்லாப் படகு ஒன்றை ஆற்றில் தள்ளி விட்டால் படகு மிதந்து போய்க் கொண்டே இருக்கும். விண்கலம் அப்படிப்பட்டதே. பூமியின் பிடியிலிருந்து மங்கள்யான் விடுபட்ட பின் இயற்கை சக்திகளின்படி தொடர்ந்து அது பறந்து கொண்டிருக்கும்.

சூரிய்னை பூமி   சுற்றுகிறது. அதற்கான வகையில் பூமியில் எஞ்சின் எதுவும் கிடையாது. பூமியானது இயற்கை சக்திகளின்படி சூரியனை சுற்றி வருகிற்து. எல்லா கிரகங்களும் இப்படித்தான் சூரியனை சுற்றுகின்றன. மங்கள்யான் விண்வெளிக்குச் சென்ற பின் அது இயற்கை சக்திகளுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்து ராக்கெட் அல்லது எஞ்சின் உதவியின்றி பறக்க ஆரம்பிக்கிற்து.

ஆனால் மங்கள்யானை அப்படியே விட்டுவிட்டால் அது சூரியனை சுற்றத் தொடங்கும். பல லட்சம் ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் அது செவ்வாய்க்குச் செல்ல வேண்டிய வாகனம். ஆகவே சூரியனை சுற்ற விடாமல் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்ய வேண்டும்.

 இதற்கென மங்கள்யானின் எல்லாப் புறங்களிலும் தீபாவளி ராக்கெட் சைஸில் சிறிய ராக்கெட்டுகள பொருத்தப்பட்டிருக்கும். இவற்றை ராக்கெட் என்று வருணிப்பதில்லை. உந்திகள் (Thrusters ) என்று வருணீக்கிறார்கள். இவற்றைத் தக்கபடி சில வினாடிகள் இயக்குவதன் மூலம் மங்கள்யான் செல்லும் பாதையில் சிறு திருத்தங்கள் செய்ய முடியும்.

மங்கள்யான் செவ்வாய்க்க்குப் போய்ச் சேர 300 நாட்கள் ஆகும். இதற்குக் காரணம் உண்டு. முதலாவதாக செவ்வாய் கிரகம் இப்போது பூமியிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறது. ஆகவே மங்கள்யான் பல கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும். இரண்டாவதாக மங்கள்யான் வளைந்த பாதையில் செல்வதால் பயண தூரம் அதிகம்.

மங்கள்யான் செவ்வாய்க்கு சென்று கொண்டிருக்கையில் சிக்னல்கள் வடிவில் அதனுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டாக வேண்டும்.  இதில் ஒரு பிரச்சினை உண்டு. சிக்னல்கள் என்னதான் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் பூமியிலிருந்து சிக்னல்கள் மங்கள்யானுக்குப் போய்ச் சேர மங்கள்யான் இருக்கின்ற தூரத்தைப் பொருத்து 6 நிமிஷம் முதல் 20 நிமிஷம் வரை ஆகலாம்

ஆகவே குறிப்பிட்ட சமயத்தில் மங்கள்யான் எவ்வளவு தொலைவில் இருக்கும் எனபதைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி முன்கூட்டியே மங்கள்யானுக்கு ஆணைகளைப் பிறப்பித்தாக வேண்டும். சில நிமிஷ தாமதம் ஏற்பட்டாலும் அது பிரச்சினையாகிவிடும். இவ்விதப் பிரச்சினை ஏற்ப்டாமல் இருக்க மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டர்களே தக்க சமயங்களில் அந்த விண்கலத்தில் உள்ள கருவிகளுக்கு தகுந்த ஆணைகளைப் பிறப்பிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ள்து.
செவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் மங்கள்யான்
அக்கிரகத்தை எவ்விதம்  நீள் வட்டப்பாதையில்
சுற்றும் என்பதை இப்படம்  ( வலது மூலை) காட்டுகிறது 
செவ்வாயை மங்கள்யான் நெருங்கும் கட்டத்தில் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. அதாவது பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மங்கள்யானின் வேகத்தைக் கணிசமான அளவுக்குக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும்.

 இல்லாவிடில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைக் கடந்து சென்று விடும். மங்கள்யானில் மிச்சமிருக்கின்ற எரிபொருளைப் பயன்படுத்தி அதன் வேகத்தைக் குறைப்பார்கள். அத்ன் பிறகு மங்கள்யான் செவ்வாயின் பிடியில் சிக்கி அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பிக்கும்.

இப்படியாக மங்கள்யான் திட்டத்தில் 1.மங்கள்யானை உயரே செலுத்தும் கட்டம். 2. பூமியைச் சுற்றச் செய்யும் கட்டம். 3.செவ்வாய் நோக்கி செலுத்தும் கட்டம். 4 செவ்வாயை நோக்கி சுமார் 300 நாட்கள் பயணம் செய்யும் கட்டம். 5 செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்யும் க்ட்டம். 6. இறுதியாக செவ்வாயை சுற்ற ஆரம்பிக்கும் கட்டம் என ஆறு கட்டங்கள் உள்ளன.

இப்போது முதல் இரு கட்டங்களில் வெற்றி காணப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமும் ஐந்தாவது கட்டமும் தான் மிக முக்கியமானவை. இவற்றில் வெற்றி கிட்டலாம், கிட்டாமலும் போகலாம். ஆனால் ஒன்று. மங்கள்யான் திட்டம் தோற்றாலும் சரி, இத்திட்டம் மூலம் நாம் உருவாக்கிய தொழில் நுட்பம், உருவாக்கிய உத்திகள், பெற்ற அனுபவம் ஆகியவை என்றைக்கும்  வீண் போகாது.

( குறிப்பு: வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரிட்டதன் விளைவாகக் கடந்த சுமார் ஒரு மாதமாகக் கட்டுரைகளை அளிக்க இயலாமல் போய் விட்டது )