Sep 28, 2012

ஐயோ,வேண்டாமே, ஹீலியம் பலூன்

Share Subscribe
இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால் ஹீலியம் வாயு நிரபப்பட்ட பலூன்களை வாங்கி ஆங்காங்கு கட்டி விடுகிறார்கள். சென்னை உட்பட பெரிய நகரங்களில் இவ்வகை பலூன்களை விற்பதற்கென ஏஜன்சிகள் உள்ளன். இவை பார்ட்டி பலூன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள்
மேலை நாடுகளில் கேட்கவே வேண்டாம். விதவிதமான ஹீலியம் பலூன்கள்.விலங்குகள் உருவத்தில் பெரிய பெரிய பலூன்கள், உலோகப் பூச்சு கொண்ட பல வித வர்ணம் தீட்டப்பட்ட பலூன்களும் உண்டு.

ஹீலியம் என்பது  ஒரு வகை வாயு. அது தீப்பிடிக்காதது. அந்த வாயு நிரப்பப்பட்ட பலூனின் நூலை விட்டால் அது  உயரே போய்விடும். ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது. ஆகவே தான் ஹீலியம் பலூனும் ஹைட்ரஜன் பலூனைப் போலவே  நூலை விட்டால் மேலே போய் விடும்.ஆகவே பார்ட்டிகளில் ஹீலியம் பலூன்களைக் கொத்து கொத்தாகக் கட்டி வைப்பார்கள்.
உலோகப் பூச்சு கொண்ட விலங்கு வடைவிலான பலூன்கள்
ஹீலியம் என்ற வாயு  உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலஸ் ஜான்சன்  என்ற வானவியல் விஞ்ஞானி பூரண சூரிய கிரகணத்தை ஆராய்வதற்காக சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்திருந்தார். ஆந்திர மானிலத்தில் குண்டூரில்  1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி
அவர் சூரிய ஒளியின் நிறமாலையை ஆராய்ந்த போது மஞ்சள் நிற வரியைக் கண்டார்.

 பின்னர் அதே ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி  நார்மன் லாக்கியர் இந்த விஷயத்தை மேலும் ஆராய்ந்து அதுவரை அறியப்படாத தனிமத்தை (Element)  அது காட்டுகிறது என்றார். இந்த இருவரும் ஹீலியத்தைக் கண்டுபிடித்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஜூலஸ் ஜான்சன்
அந்த தனிமத்துக்கு ஹீலியம் என்று பெயர் வைக்கப்பட்டது. கிரேக்க மொழியில் ஹீலியம் என்றால் சூரியன். முதலில் சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பிறகே பூமியில்  கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் உண்டென்றால் அது ஹீலியம் ஆகும்.

உலகில் மிக நீண்ட காலமாக  ஹீலியம் உற்பத்தியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திவகிற்து. அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில்  காணப்படும் எரிவாயுப் படிவுகளிலிருந்து ஹீலியம் எடுக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளில் பல நூறு கோடி லீட்டர் அளவுக்கு ஹீலியம் வாயுவை சேமித்து வைத்து வந்தது.

 இந்த சேமிப்புகளில் கணிசமான பகுதியை காலி செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்தத்தைத் தொடர்ந்தே ஹீலியம் நிறைய அளவில் மார்க்கெட்டுக்கு வந்தது. அதன் முக்கிய விளைவுகளில் ஒன்றுதான் ஹீலியம் பலூன்கள். எதுவும் தாராள்மாக, எளிதில் கிடைக்கிறது என்றால் அப்பொருள் அர்த்தமில்லாமல் வீணடிக்கப்படும். ஹீலியம் வாயு விஷயத்தில் இது பொருந்தும்.

ஹீலியம் வாயு இயற்கை வளங்களில் ஒன்று. ஆனால் இது ஒன்றும் எல்லா இடங்களிலும் கிடைப்பது அல்ல. அண்மைக்காலமாக அல்ஜீரியாவிலும் ரஷியாவிலும் கிடைக்கிறது. ஹீலியம் வற்றாமல் கிடைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் உலகில் பல நிபுணர்களும் ஹீலியத்தை வீணடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஹீலியம் பற்றிய விசேஷ ஆராய்ச்சிக்காக 1996 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ரிச்சர்ட்சன் கூறுகையில்.  ஹீலியம் பலூன்கள் மூலம் ஹீலியம் வீணடிக்கப்படுவதைக் கண்டித்துள்ளார்.

பார்ட்டி பலூன்கள் மூலம் ஹீலியம் வீணாக்கப்படுவதை பிரிட்டனில் உள்ள ரூதர்போர்ட் ஆப்பிள்டன் ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி ஓலெக் கிரிசெக் கண்டித்துள்ளார். மற்றும் பல நிபுணர்களும் ஹீலியம் பார்ட்டி பலூன் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 MRI ஸ்கேன் எடுக்கின்ற பெரிய கருவிகளில் காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பயன்படுத்தப்ப்டுகிறது.அண்மையில் ஹிக்ஸ் போசான் துகளைக் கண்டுபிடித்த CERN ஆராய்ச்சிக்கூடத்தின் சுமார் 1600 காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பய்ன்படுத்தப்படுகிறது.மற்றும் பல ஆராய்ச்சிக்கூடங்களுக்கு ஹீலியம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
இன்று ஹீலியத்தை வீணாக்கினால் எதிர்கால்த்தில் ஹீலியம் கிடைப்பது திண்டாட்டமாகி விடலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றிலும் ஆங்காங்கு கட்டப்பட்ட ஹீலியம் பலூன்களின் நடுவே மது மயக்கத்தில் உரத்த குரலில் கூச்சலிட்டபடி பார்ட்டியைக் கொண்டாடுவோரின் காதில் இதெல்லாம் விழுமா?

Sep 26, 2012

தென் அமெரிக்காவுக்குப் பயணித்த இந்திய செயற்கைக்கோள்

Share Subscribe
அண்மையில் (செப் 9 ) பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-6 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டு இந்தியாவின் PSLV  ராக்கெட் மூலம் வெற்றிகரமாக உயரே செலுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இந்தியாவின் GSat -10 செயறகைக்கோள் ஏரியான் (Ariane) ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் தென் அமெரிக்காவில் பிரான்ஸுக்கு சொந்தமான கூரு தீவில் உள்ள ராக்கெட் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரெஞ்சு செயறகைக்கோள் ( எடை சுமார் 700 கிலோ) ஸ்ரீஹ்ரிகோட்டாவுக்கு வருவானேன்? இந்திய செயற்கைக்கோள் கூருவில் உள்ள ராக்கெட் தளத்துக்குச் செல்வானேன்? இரண்டுக்குமே காரணங்கள் உண்டு.

இந்தியாவின் PSLV  ராக்கெட்
இதற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட் -5 செயற்கைக்கோள் 2002 ஆம் ஆண்டில்  ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான்- 4  ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. ஏரியான் -4 ராக்கெட்டைத் தொடர்ந்து மேலுன் திறன் கொண்ட  ஏரியான் 5  ராக்கெட் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட் உண்மையில் ராட்சத ராக்கெட் ஆகும். அனாயாசமாக 10 டன் எடையைத் தூக்கிக் கொண்டு விண்வெளியில் பறக்கும்.

ஏரியான்- 5 மூலம் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்த காசு ஜாஸ்தி. அது மட்டுமல்ல. உலகின் பல்வேறு நாடுகளும் ( இந்தியா உட்பட) ஏரியான் மூலம் தங்களது செயறகைக்கோள்களை செலுத்த முன்கூட்டி  இடம் பதிவு செய்து கொண்டு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். தவிர, இப்போதெல்லாம் சிறிய செயற்கைக்கோள்களை   செலுத்த ஏரியான்  முன்வருவதில்லை. அவர்கள் இப்போது பெரிய கை.

இத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவின் PSLV ராக்கெட் மூலம் உயரே செலுத்த காசு குறைவு. காத்திருக்க வேண்டாம். தவிர தொடர்ந்து 21 தடவை வெற்றி கண்டுள்ள  PSLV  நம்பகமான ராக்கெட். இதனால் தான் பிரான்ஸ் இந்திய விண்வெளி அமைப்பை நாடியது. பிரான்ஸ் எதிர்பார்த்தது போலவே ஸ்பாட் -6 வெற்றிகரமாக உயரே செலுத்தப்பட்டது.


சரி, இந்தியாவில் ராக்கெட் தளம் (ஸ்ரீஹரிகோட்டா) உள்ளது. இந்தியாவிடம்  PSLV  ராக்கெட்டும் உள்ளது. அப்படி இருக்க, ஜிசாட்- 10 செயற்கைக்கோள் எதற்கு ஏரியான் -5 மூலம் செலுத்தப்பட கூரூ ராக்கெட் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.?

ஏரியான் -5 ராக்கெட்
இந்தியாவின் PSLV ராக்கெட் மூலம் அதிகபட்சம் 1.5 டன் எடை கொண்ட செயறகைக்கோளைத் தான் சுமந்து செல்ல முடியும். ஜிசாட்- 10 செயற்கைக்கோளின் எடையோ 3400 கிலோ அதாவ்து சுமார் மூன்ற்ரை டன். இந்த அளவிலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ராக்கெட் இந்தியாவிடம் இப்போது இல்லை.  GSLV Mark -3 ராக்கெட்டை உருவாக்குவதில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். அது வெற்றி பெற்றால் இவ்விதமான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை நாம் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த முடியும்.

இந்த விஷயத்தில் கடந்த கால வரலாற்றை கொஞ்சம்  கவனிக்க வேண்டும். தகுந்த ராக்கெட்டுகளை உருவாக்கி அதன் பின்னரே அவற்றில் வைத்து செலுத்துவதற்கான செயற்கைக்கோள்களை உருவாக்குவது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றவில்லை. அது புத்திசாலித்தனமான முடிவு.

அதாவது  ராக்கெட் துறையில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்னரே வகை வகையான செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் வேகமாக முன்னேறினோம்.அவற்றைச் செலுத்த நம்மிடம் ராக்கெட் இருக்கிறதா என்பது பற்றி நாம் கவலைப்படவில்லை. நம்மிடம் ராக்கெட இல்லாவிட்டால் என்ன? வெளி  நாடுகளுக்கு கொண்டு சென்று அவற்றின் மூலம் செலுத்தலாமே?. இதுவே ஆரம்பத்தில் இந்தியாவின் உத்தியாக் இருந்தது.

இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆர்யபட்டா ( எடை 360 கிலோ) 1975 ஆம் ஆண்டில் ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு ரஷிய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. இப்படி இந்தியாவின் பல செயற்கைக்கோள்கள் வெளி நாட்டின் ராக்கெட் மூலம் உய்ரே செலுத்தப்பட்டன. அக்கால கட்டத்தில் நாம் ராக்கெட் தயாரிப்புக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருந்தோம்.

நாம் ஒரு வழியாக SLV என்னும் சிறிய ராக்கெட்டை உருவாக்குவதில் 1980 களின்  தொடக்கத்தில் வெற்றி கண்டோம். அதில் வைத்துச் செலுத்தப்பட்ட ரோகிணி செயற்கைகோளின் எடை வெறும் 30 கிலோ. SLV ராக்கெட்டைத் தொடர்ந்து PSLV ராக்கெட் உருவாக்கப்பட்டது.

இப்படியாக நாம் தொடர்ந்து மேலும் மேலும் எடைமிக்க அத்துடன் மிக நுட்பமான செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் நல்ல முன்னேற்றம் கண்டோம். ஆனால் ராக்கெட் துறையில் முன்னேறுவது ஆமை வேகத்தில் இருந்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில்  நமக்கு ஏற்பட்ட சிக்கல்கள் ஒரு முக்கிய காரணம்..

நாம் ஆரம்பத்திலிருந்து இரண்டு வகையான செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் ஈடுபட்டோம்.  சுமார் 800 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச்   ( பெரும்பாலும் வடக்கு தெற்காக) சுற்றுவதற்கான செயற்கைக்கோள்களை உருவாக்கி அவற்றை PSLV ராக்கெட் மூலம் வெற்றிகரமாகச் செலுத்தி வந்துள்ளோம்.

 இவை அனைத்தும் 800 கிலோ அல்லது ஒரு டன் எடை கொண்டவை. இவற்றில் பெரும்பாலானவை வானிலிருந்து படம் பிடிப்பவை. இத்துறையில் நாம் இப்போது அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை வகிப்பதாகக் கூறலாம். செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் இந்தியா அந்த அளவுக்கு முன்னேறியுள்ளது.
பூமியை வடக்கு தெற்காகச் சுற்றும்
இந்தியாவின் ரைசாட் - 1 செயற்கைக்கோள்
இரண்டாவது வகை செயற்கைக்கோள்கள் டிவி ஒளிபரப்பு, வானிலை, தகவல் தொடர்பு, கல்வி ஒளிபரப்பு உட்பட பலவகையான பணிகளுக்கான் எடைமிக்க (சுமார் 3 டன்) செயறகைக்கோள்கள். இவை பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவை. அனேகமாக இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாக ஏரியான் செயற்கைக்கோள்கள் மூலமே செலுத்தப்பட்டு வந்துள்ளன.

அண்மையில் இந்திய விண்வெளி அமைப்பு (ISRO) தனது 100 வது மிஷன் தொடர்பாக விழா கொண்டாடியது என்றாலும் எடை மிக்க செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான திறன் மிக்க ராக்கெட்டை நாம் இனிமேல் தான் உருவாக்க வேண்டியுள்ளது. அது தான் உண்மை நிலை. ஆகவே தான் ஜிசாட்-10 செயற்கைக்கோளை கூரூவுக்குக் கொண்ட செல்ல நேரிட்டது.

இந்தியாவின் ஜிசாட் -10 செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்களை உய்ரே செலுத்துவதற்கான ராக்கெட்டுகளைப் பெற்றுள்ள நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியா . அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது.

ஏரியான் 5  ராக்கெட் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உருவாக்கியதாகும். இந்த விண்வெளி அமைப்பின் ராக்கெட் தளம் கூரூ தீவில் அமைந்துள்ளது. செப்டம்பர் 29 ஆம் தேதியன்று ஏரியான் 5 ராக்கெட்டானது ஜிசாட் -10 ( 3400 கிலோ) அஸ்ட்ராப் 2 F ( 6000 கிலோ ) ஆகிய இரண்டையும் ஒரே மூச்சில் விண்ணில் செலுத்த உள்ளது.

Sep 21, 2012

கூடங்குளத்தில் அணு உடைப்பு

Share Subscribe
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் எரிபொருளை நிரப்பும் பணி தொடங்கி விட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதைத் தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் கூடங்குளத்தில் ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி அணுக்கள் உடைபட இருக்கின்றன.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலை( Nuclear Reactor) செயல்பட ஆரம்பித்ததும் இது நிகழும்.

அணுக்களை உடைக்கப்போவது அணு மின் நிலைய விஞ்ஞானிகள் அல்லது எஞ்சினியர்கள் அல்ல. அவர்கள் தொடக்கி வைத்த பின்னர் அணு உலையில் அணுக்கள் தாமாகவே இந்த உடைப்பு வேலையை மேற்கொள்ளும்.இது ஓயாது நடைபெறும்.  விஞ்ஞானிகள் இதைத் தொடர் அணுப்பிளப்பு (Nuclear Chain Reaction)  என்று கூறுவர்.அணு சக்தி மூலமான மின்சார உற்பத்திக்கு இதுவே அடிப்படை.
கூடங்குளம் அணு மின்சார நிலையம்
அணுக்கள் தொடர்ந்து பிளவுபடும் போது வெப்ப வடிவில் ஆற்றல் வெளிப்படும். இந்த வெப்பம் தண்ணீரை ஆவியாக்கி நீராவியை உண்டாக்கும். இந்த நீராவி ட்ர்பைன்களை இயக்கும். அதன் பலனாக ஜெனரேட்டர்கள் இயங்கும். ஜெனரேட்டர்கள் இயங்கும் போது மின்சாரம் உற்பத்தி ஆகும்.

தங்க அணு, தாமிர அணு, இரும்பு அணு என எவ்வளவோ வகையான அணுக்கள் உள்ளன. அவற்றை இப்படிப் பிளக்க முடியுமா? அவற்றின் மூலம் மின்சார உற்பத்தி சாத்தியமா?

நிச்சயம் இல்லை.பொதுவில் இதற்கு யுரேனிய அணுக்கள் மட்டுமே லாயக்கு.ஆகவே தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. உலகில் உள்ள மற்ற எல்லா அணுமின் நிலையங்களிலும் தான்.

யுரேனியம் விஷயத்திலும் ஒரு பிரச்சினை உள்ளது. எந்த ஒரு யுரேனியக் கட்டியிலும் யுரேனியம்- 235 என்ற வகை அணுக்கள் உள்ளன. அவை தான் தொடர்ந்து பிளவுபடக்கூடியவை.  இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யுரேனியம்-235 அணுக்கள் 0.71 சத விகித அளவுக்கே உள்ளன. அதாவது மிக அற்ப அளவில் தான் உள்ளன. ஆனாலும் அது போதும். எனினும் கூடங்குளத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் இந்த வகை அணுக்கள் சத விகித அளவில் கூடுதலாக்வே இருக்கும்.

யுரேனியம்-235 அணுக்கள் எப்படி தாமாக பிளவுப்டுகின்றன? எந்த அணுவிலும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருப்பது நமக்குத் தெரியும். இவற்றில் நியூட்ரான் என்பது. துப்பாக்கித் தோட்டா மாதிரி. யுரேனியம்-235 அணு ஒன்றை ஒரு நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடைந்து போய்விடும். அதை அப்படி உடைப்பதற்கு . நியூட்ரான் எங்கிருந்து வரும்? அதே போன்ற இன்னொரு யுரேனியம் அணுவிலிருந்து வரும்.
தொடர் அணுப் பிளப்பு
பழக்கடை ஒன்றில் பெரிய கூடையில் ஆப்பிள்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இலந்தைப் பழம் ஒன்றை அந்த ஆப்பிள்களை நோக்கி வீசுகிறீர்கள். அது மெதுவாகச் சென்று லேசாக ஓர் ஆப்பிளைத் தாக்குகிறது. அந்த ஆப்பிள் கீழே விழுந்ததும் அது திராட்சைப் பழங்களாகவும் அத்திப் பழங்களாகவும் மாறுகிறது.

யுரேனியம்-235 அணுவை ஒரு நியூட்ரான் மெதுவாகத் தாக்கினால் இப்படித் தான் நிகழ்கிறது. யுரேனியம்-235 அணு உடைந்து பல்வேறு வகை அணுக்களாக மாறுகிறது. அப்போது ஒவ்வோர் அணுவிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் தோன்றுகின்றன.

அந்த ஒவ்வொன்றும் மேலும் யுரேனியம்-235 அணுக்களைத் தாக்க வல்லவை. அப்போது மேலும் நியூட்ரான்கள் தோன்றும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நொடியில் எண்ணற்ற யுரேனியம்- 235 அணுக்கள் பிளவு படும். எனினும் நமது தேவை அனைத்தும் ஒரே கணத்தில் பிளவு பட வேண்டும் என்பது அல்ல.

நாம் மேலே கூறிய ஆப்பிள் கூடை உதாரணத்தில் இலந்தைப் பழம் தான் நியூட்ரான். இலந்தைப் பழம் தாக்கிய பிறகு தோன்றும் திராட்சைப் பழங்களையும் அத்திப் பழங்களையும் சேர்த்து எடை போடுங்கள். அவற்றின் மொத்த எடை உடைபட்ட ஆப்பிள் ஒன்றின் எடைக்கு சமமாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றின் மொத்த எடை உடைபட்ட ஆப்பிளின் எடையை விடக் குறைவாகவே இருக்கும்..காணாமல் போன எடையானது ஆற்றலாக மாறிவிடுகிறது. அணுசக்தியின் ரகசியமே இது தான்.

பொருளானது அப்படியே ஆற்றலாக மாறும் போது மிகுந்த ஆற்றல் தோன்றும் என்று ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார். அதைத் தான் அவர் சுருக்கமாக E = mc2
 என்று கூறினார். யுரேனியம்-235 அணு உடையும் போது இவ்விதமாகப் பொருளானது ஆற்றலாக மாறுகிறது. அணுவே சிறியது. நியூட்ரான் அதையும் விடச் சிறியது. அதையும் விட சிறிய துணுக்கு தான் ஆற்றலாக மாறுகிறது.

ஆனால் தொடர்ந்து எண்ணற்ற யுரேனியம்-235 அணுக்கள் பிளவு படும் போது மொத்தத்தில் நிறைய ஆற்றல் தோன்றும். யுரேனியம்-235 அணுக்கள் மட்டுமே அடங்கிய ஒரு கிராம் யுரேனியத்தில் கோடானு கோடி அணுக்கள் உள்ளன. இதைப் பார்க்கும் போது நிறையவே ஆற்றல் உறபத்தியாகும். ( 26 என்று எழுதி விட்டு 19 பூஜ்யங்களைப் போடுங்கள்.ஒரு கிராமில் அவ்வளவு யுரேனியம்-235 அணுக்கள் இருக்கும்)

ஐம்பது காசு எனபது பெரிய பணம் அல்ல. பிச்சைக்காரருக்கு ஐம்பது காசு போட்டால் உங்களைக் கேவலமாகவே கருதுவார். ஆனால் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே சமயத்தில் ஒருவரிடம் தலா  ஐம்பது காசு கொடுத்தால் அது பெரும் தொகையாகி விடும். அப்படியாகத்தான் கோடானுகோடி அணுக்கள் உடைபடும் போது பிரும்மாண்டமான ஆற்றல் வெளிப்படுகிறது.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையில் அடங்கிய யுரேனியத்தில் அனைத்து அணுக்களும் யுரேனியம்- 235 அணுக்களாக இராது. சுமார் 4 சதவிகித அணுக்கள் இவ்விதமாக இருக்கும்.

சாதாரண யுரேனியக் கட்டியில் 0.71 சதவிகித அணுக்களே யுரேனியம்- 235 அணுக்களாக இருக்கும் என்று கூறினோம். பெரும் செலவு பிடிக்கிற, மிக சங்க்டமான, மிக நுட்பமான முறைகள் மூலம் விசேஷ ஆலைகளில் இதை 4 சதவிகித அளவுக்கு உயர்த்த முடியும். இதை செறிவேற்றப்பட்ட யுரேனிய்ம் (Enriched Uranium)  என்று கூறுவர்.(காண்க. செறிவேற்றப்பட்ட யுரேனிய்ம்)

செறிவேற்ற்பபட்ட யுரேனியத்தை அணு உலைக்குள் அப்படியே கட்டி கட்டியாக வைப்பது கிடையாது. பொதுவில் அணு உலைக்குள் வைக்க வேண்டிய் யுரேனியத்தை சந்தன வில்லைகள் போல வில்லைகளாக்குவர். பின்னர் சுமார் 3 மீட்டர் நீளமுள்ள் குழல்களில் அவற்றை நிரப்புவர். ஒரு குழலில் சுமார் 350 வில்லைகள் இருக்கலாம்.
எரிபொருள் தண்டுகள்
பிறகு பல நூறு குழல்களை குறிப்பிட்ட பாணியில் பக்கம் பக்கமாக அடுக்கி வைப்பர். இதற்கெல்லாம் கணக்கு உள்ளது. இவற்றை எரிபொருள் தண்டுகள் (Fuel Rods) என்று குறிப்பிடலாம். கூடங்குளத்தில் மொத்தம் 311 எரிபொருள் தண்டுகள் ( 163 கட்டுகள்)  இருக்கும். இந்த தண்டுகளைச் சுற்றிலும் தண்ணீர் இருக்கும். இது தான் அணு உலை. 

இக்குழல்களை இப்படி அடுக்கி வைத்ததைத் தொடர்ந்து நியூட்ரான்கள் யுரேனியம்-235 அணுக்களைத் தாக்க ஆரம்பிக்கும். அப்படி இல்லை எனில் விஞ்ஞானிகளே . நியூட்ரான்களை வெளிப்படுத்தும் பொருளை சிறிது நேரம் வைத்து விட்டு தொடர் அணுப்பிளப்பைத் தொடக்கி வைப்பர். ஓர் அணு உலை முதன் முதலாக, தொடர் அணுப்பிளப்பு நிலையை எட்டுவதை கிரிடிகாலிடி (Criticality) என்று குறிப்பிடுவர்.  எரிபொருள் தண்டுகளை அடுக்கி வைத்து முடித்த பின்னர் இக்கட்டம் எட்டப்படும்.

தொடர் அணுப்பிளப்பு ஆரம்பித்த உடனேயே வெப்பம் வெளிப்பட ஆரம்பிக்கும். இதை அப்படியே விட்டால் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து விடும். ஆகவே அந்த வெப்பத்தை வாங்கிக் கொள்வதற்காகத்தான் எரிபொருள் தண்டுகளைச் சுற்றிலும்  தண்ணீர் இருக்கிறது..

வீடுகளில் காஸ் அடுப்பில் எவர்சில்வர் பாத்திரத்தை . வைத்தால் அதில் தண்ணீர் இருக்கும்..அப்படியின்றி வெறும் பாத்திரத்தை வைத்து விட்டு மற்தியாக அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்? பாத்திரம் பயங்கரமாகச் சூடேறி த்க தக என்று அனல் பிழம்பாகக் காட்சி அளிக்கும். அப்படி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அடுப்பில் த்ண்ணீருடன் தான் பாத்திரத்தை வைப்பார்கள்.
அணு மின்சார நிலையத்தின் செயல்பாட்டை விளக்கும் வரைபடம்
அது மாதிரியில் அணு உலையில் எரிபொருள் தண்டுகளைச் சுற்றித் தண்ணீர் இருக்கும். தண்ணீரானது பயங்கரமாகச் சூடேறும். எனினும் தண்ணீர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் என்பதால் ஆவியாகாமல் கடும் வெப்பத்தில் இருக்கும். ஒரு புறத்திலிருந்து அணு உலைக்குத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். சூடேறிய தண்ணீர் அணு உலையிலிருந்து வேறு பகுதிக்குச் சென்று கொண்டே இருக்கும்..அணு உலை ஒன்றுக்கு மிக ஏராளமான அளவுக்குத் த்ண்ணீர் தேவை.

கடுமையாகச் சூடேறிய தண்ணீர் வேறு பகுதிக்கு குழாய் மூலம் செல்லும். அணு உலையிலிருந்து வருவதால் அது ஆபத்தான கதிரியக்கம் கொண்டதாக இருக்கும். ஆகவே அத் தண்ணீரானது வேறு பகுதியில் வேறு குழாயின் ஊடே செல்லும். அப்போது வேறு குழாயில் அடங்கிய தண்ணீர் சூடேறிப் பின்னர் ஆவியாகி டர்பைன்களை இயக்கும்.கதிரியக்கம் கொண்ட தண்ணீர் வேறு குழாயில் உள்ள தண்ணீருடன் கலக்காமல் மறுபடி அணு உலைக்கே திரும்பிவிடும்.

எரிபொருள் தண்டுகளைச் சுற்றியுள்ள தண்ணீர் இருவகைப் பணிகளைப் புரிகிறது. இத்தண்ணீர் எரிபொருள் தண்டுகளின் வெப்பத்தை வாங்கிக் கொள்கிறது.அந்த அள்வில் அது எரிபொருள் தண்டுகள் அளவுக்கு மீறி சூடேறி விடாதபடி தடுக்கிறது. அதே சமயத்தில் யுரேனியம்=235 அணுக்கள் பிளவு படும் போது வெளிப்படும் நியூட்ரான்களின் வேகத்தை அத்தண்ணீர் குறைக்கிறது.ஏனெனில் மெதுவாகச் செல்கின்ற நியூட்ரான்கள் தான் பிற யுரேனியம் அணுக்களை நன்கு தாக்கும்.

 நியூட்ரான்கள் விஷய்த்தில் ஜாக்கிரதை தேவை. காஸ் அடுப்பில் காஸ் கட்டுப்பட்ட அளவில் சிலிண்டரிலிருந்து வெளியே வருவதால் சமையல் சாத்தியமாகிறது. காஸ் சிலிண்டரில் உள்ள காஸ் அனைத்தும் ஒரே சமயத்தில் தீப்பிடித்தால் ஆபத்து தான்.அது மாதிரி ஏற்படாமல் அணு உலையில் நியூட்ரான்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி வைத்தாக வேண்டும்.
யுரேனிய அணு
யுரேனியம்-235 அணு ஒன்றை ஒரு நியூட்ரான் தாக்கினால் சராசரியாக மூன்று நியூட்ரான்கள் .கூட வெளிப்படலாம். அவ்வளவு நியூட்ரான்கள் தேவையில்லை. அந்த மூன்றில் ஒரு நியூட்ரான் போதும். அதாவது யுரேனியம்-235 அணுவை ஒரு நியூட்ரான் தாக்க,  அதிலிருந்து . வெளிப்படும் மூன்று நியூட்ரான்களில் நமக்கு ஒன்று இருந்தால் போதும். ஆனால் மீதி நியூட்ரான்களை வெளியே போ என்று உத்தரவிட முடியாது. அவை செயல்படாதபடி தடுக்க வழி இருக்கிறது.

நியூட்ரான்களை நேசிக்கும் தனிமங்கள் . உண்டு. காட்மியம், ஹாப்னியம், போரான் ஆகியவை நியூட்ரான்களை விழுங்குபவை. ஆகவே இவற்றால் ஆன தண்டுகளை அணு உலைக்குள் தொங்க விட்டிருப்பார்கள்.   இரவில் டியூப் லைட் அருகே வருகின்ற பூச்சிகளை விழுங்கும் பல்லி போல இத்தண்டுகள் கூடுதல் நியூட்ரான்களை விழுங்கிக் கொண்டிருக்கும்.இவற்றுக்குக் கட்டுப்பாட்டு தண்டுகள் (Control Rods) என்று பெயர்

கட்டுப்பாட்டு தண்டுகளை அணு உலைக்குள் மேலும் ஆழமாக இறக்கினால் நிறைய நியூட்ரான்கள் விழுங்கப்படும். மேலே அதிகம் இழுத்தால் நியூட்ரான்கள் விழுங்கப்படுவது குறையும்.ஆகவே இத்தண்டுகளை அணு உலைக்குள் தகுந்தபடி இற்க்குவர் அல்லது மேலே தூக்குவர்.இதன் மூலம்  தொடர் அணுப்பிளப்பு நிர்ணய அளவில் நடைபெறும்.

தொடர் அணுப்பிளப்பை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அதாவது அணு உலை செயல்படாமல் நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அத்தனை கட்டுப்பாட்டு தண்டுகளையும் உள்ளே இறக்கினால் போதும். அணு உலை செயல்படுவது நின்று விடும். எரிபொருள் தண்டுகளில் பலவற்றை அவ்வப்போது வெளியே எடுத்து விட்டு புதிதாக எரிபொருள் தண்டுகளை உள்ளே இறக்குவர். அப்படிப்பட்ட சமயங்களில் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த வேண்டி வரும்.

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யுரேனியம்-235 அணுக்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கும் என்பதை மேலே குறிப்பிட்டோம். அத்துடன் ஒப்பிட்டால் இயற்கை யுரேனியத்தில் 99.27 சதவிகித அளவுக்கு யுரேனியம்-238 என்ற வேறு வகை அணுக்களும் இருக்கும்.

கூடங்குளம் அணு உலையின் எரிபொருள் தண்டுகளில் மொத்தத்தில் 4 சதவிகித அணுக்கள் யுரேனியம்- 235 அணுக்களாக இருக்க மீதி அணுக்களில் பெரும்பாலானவை யுரேனியம்-238 அணுக்களாக இருக்கும்.

ஆனால் யுரேனியம்-238 அணு ஒன்றை நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடையாது.  அது அந்த நியூட்ரானை விழுங்கி ஏப்பம் விடும். அப்படி விழுங்கிய பின்னர் அது புளூட்டோனியம்-239 என்ற அணுவாக மாறிவிடும். அது நல்லது தான். ஏனெனில் புளூட்டோனியம் அணுவானது யுரேனியம்- 235 அணு போலவே நியூட்ரான்களால் பிளவு படத்தக்கது.

ஆகவே அணு உலை ஒன்றில் தொடர்ந்து அணுபிளப்பு ஏற்படும் போது யுரேனியம்-235 அணுக்களும் உடையும். புதிதாகத் தோன்றும் புளூட்டோனியம்- 239 அணுக்களும் உடையும்.அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு புளூட்டோனியம்-239 பிளவு மூலம் கிடைக்கிறது.

இதுவரை நாம் யுரேனியம் அணுக்களுக்கும், அத்துடன் புளூட்டோனியத்துக்கும் நம்பர் கொடுத்து வந்தோம். அந்த நம்பரானது ஒரு வீட்டில் ஆண் பெண் மொத்தம் எவ்வளவு பேர் என வாசற் கதவில் எழுதி வைப்பது போன்றதாகும்.

எந்த ஓர் அணுவாக இருந்தாலும் அதன் மையக் கருவில் (Nucleus) புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து இருக்கும். யுரேனியக் கட்டி ஒன்றில் இருக்கக்கூடிய கோடானு கோடி யுரேனிய அணுக்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சரியாக 92 புரோட்டான்கள் இருக்கும். அப்ப்டி 92 புரோட்டான் இருப்பதால் தான் அது யுரேனியம் அணுவாக உள்ளது.

ஆனால் யுரேனியம் அணு ஒன்றின் மையக் கருவில் 143 நியூட்ரான்கள் இருக்கலாம். வேறு யுரேனிய அணுவில் 146  நியூட்ரான்கள் இருக்கலாம். 143 நியூட்ரான்கள் இருந்தால் அத்துடன் 92 ஐயும் சேர்த்துக் கூட்டி யுரேனியம்-235 என்று சொல்வார்கள். 146 நியூட்ரான்கள் இருந்தால் 92 புரோட்டான்களையும் சேர்த்து அது யுரேனியம்-238

அதே போலவே புளூட்டோனியம் அணுவின் 94 புரோட்டான்களையும் 145 நியூட்ரான்களையும் சேர்த்தால் அது புளூட்டோனியம்-239. யுரேனியம் போல புளூட்டோனியமும் ஓர் உலோகமே. 

கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணு உலையானது VVER- 1000  மாடல் என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காலும் மற்றும் பிற நாடுகளிலும் இதே மாதிரியான அணு உலைகள் PWR மாடல் என்று குறிப்பிடப்படுகின்றன.

இந்தியாவில் தாராப்பூர் நீங்கலாக மற்ற இடங்களில் செயல்படும் அணுமின் நிலையங்களின் அணு உலைகள் PHWR  மாடல் என்று குறிப்பிடப்படுகின்றன.
கல்பாக்கத்தில் உள்ள அணுமின்சார நிலையத்தின் அணு உலைகளும் இதே மாடல்களே.

PWR  மாடல்களில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படும்.சாதாரண நீரானது வெப்பவாங்கியாகவும் நியூட்ரான்களின் வேகத் தணிப்பனாகவும் பயன்படுத்தப்படும்

PWHR  மாடல்களில் இயற்கை யுரேனியம் பயன்படுத்தப்படும். சாதாரண நீருக்குப் பதில் கன நீர் பயன்படுத்தப்படும்.(காண்க பச்ச்த் தண்ணீரும் லகு நீரும்)

கூடங்குளம் அணுமின் நிலையம் தனிச் சிறப்பு கொண்டதாகும்.இனி இதுவே இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக விளங்கும். இப்போதைக்கு கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரு யூனிட்டுகள் நிறுவப்படுகின்றன.

முதல் யூனிட் விரைவில் இயங்க இருக்கிறது.இரண்டாவது யூனிட் சில மாதங்களில் செயல்பட ஆரம்பிக்கும். இவை அல்லாமல் மேலும் இரு யூனிட்டுகளை அமைக்க அண்மையில் உடனபாடு கையெழுத்தாகியுள்ளது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி இங்கு மொத்தம் 6 யூனிட்டுகள் அமைக்கப்படுமானால்  மொத்தம் 6680 மெகாவாட் மின்சாரம் இங்கு உறபத்தியாகும்.

இத்துடன் ஒப்பிட்டால் உலகிலேயே மிகப் பெரிய அணுமின் நிலையம் ஜப்பானில் உள்ளது. காஷிவாசாகி-கரிவா என்னும் அந்த அணுமின் நிலையத்தில் உள்ள ஏழு யூனிட்டுகள் மொத்தம் சுமார் 8000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
  

Sep 18, 2012

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம். உற்றுப்பார்த்தால் சூரியனின் இடது புறத்தில் சிறிய பகுதி சற்றே மறைக்கப்பட்டுள்ளதைக் காண்லாம்,  (Credit: NASA/JPL-Caltech/Malin Space Science Systems )
பூமியில் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழ்வது. அது பெரிய அதிசயம் இல்லைதான். ஆனால் செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம் என்பது விசேஷமானது.

சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே சந்திரன் வந்து நிற்குமானால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதாவது சூரியனை சந்திரன் மறைக்கிறது. அமாவாசை நாட்களில் தான் சந்திரன் இவ்விதம் பூமிக்கும் சூரியனுக்கும்  நடுவே வந்து நிற்கும். ஆனால்  பூமியை சந்திரன் சுற்றுகின்ற  பாதை மேலாக அல்லது கீழாக் அமையும் போது அது சூரியனை மறைப்பதில்லை. அதனால் தான் எல்லா அமாவாசைகளிலும் சூரிய கிரகணம் நிகழ்வதில்லை.

போபாஸ்
செவ்வாய் கிரகத்துக்கு ஒன்றல்ல, இரண்டு சந்திரன்கள் உண்டு.ஒன்றின் பெயர் டைமோஸ், மற்றொன்றின் பெயர் போபாஸ். இரண்டுமே ‘சுண்டைக்காய்கள்’ என்று சொல்லுமளவுக்குச் சிறியவை. போபாஸ் குறுக்களவு 11 கிலோ மீட்டர். இது செவ்வாயிலிருந்து சுமார் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தபடி செவ்வாயை மேற்கிலிருந்து கிழக்காகச்  சுற்றுகிறது.

டைமாஸ் மேலும் சிறியது. குறுக்களவு 6 கிலோ மீட்டர். சுமார் 23 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தபடி செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது
டைமாஸ்
செவ்வாய் கிரகத்தின் இரு சந்திரன்களும்   ஒழுங்கற்ற உருவம் கொண்டவை. கிட்டட்தட்ட உருளைக்கிழங்கு போன்ற வடிவைக் கொண்டவை.  இப்போது போபாஸ் குறுக்கே வந்ததால் சூரிய கிரகணம் ஏற்பட்டது. டைமாஸ் சிறியது என்பதாலும் தொலைவில் இருப்பதாலும் அது குறுக்கே வந்தால் கிரகணம் போன்ற விளைவு ஏற்படுவதில்லை.

ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கிய கியூரியாசிடி ஆய்வுக் கலம்  மேற்படி சூரிய கிரகணப் ப்டத்தை எடுத்து அனுப்பியுள்ளது. கியூரியாசிடியில் உள்ள் கேமிராக்கள் பொதுவில்  வானை நோக்க வேண்டிய அவசியமே கிடையாது.

ஆனால் செவ்வாயில் சூரிய கிரகணம் ஏற்படப் போகிறது என்பதை முன்கூட்டி அறிந்த நாஸா விஞ்ஞானிகள் கியூரியாசிடியின் கேமிராக்களை  வானில் குறிப்பிட்ட இடத்தை நோக்கித் திருப்பி படம் எடுக்கும்படி செய்தனர் என்பது தான் பெரிய சாதனை.

Sep 16, 2012

புது முகம் மிஸ்டர் லசூலா

Share Subscribe

சலூனில் மெஷின் கட்டிங் செய்து கொண்டது போல தலையிலும் கன்னங்களிலும்  சீரான முடி. நெற்றி என்பதே இல்லை.வாய் மனித வாய் போலவே உள்ளது. எடுப்பான மூக்கு. அகன்ற விழிகள்.. சொல்லப் போனால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு உள்ளது போன்ற கண்கள் (அவரது பெயரைச் சொன்னால் அடிக்க வருவார்). அகன்ற தாடையில் வெண்ணிற்த் தாடி. இது அபூர்வ வகையைச் சேர்ந்த ஒரு  குரங்கு.

ஆப்பிரிககாவில் காங்கோ நாட்டில் உள்ள  காடுகளில் இப்படி ஒரு குரங்கு உள்ளது என்பது உள்ளூர்வாசிகளுக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆனால் அறிவியலாளர்களுக்கு இது புது முகம். லசூலா ( Lesula)  என்பது இந்த வகைக் குரங்கின் பெயர். Cercopithecus lomamiensis  என்பது இதற்கு இடப்பட்டுள்ள அறிவியல் பெயர்.

 பல நாடுகளைச் சேர்ந்த குழுவினர்  காங்கோவின் காடுகளில்  ஆறு ஆண்டுக் காலம் பாடுபட்டு ஆராய்ச்சி நடத்தி இது புது வகையான குரங்கு இனம் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வகைக் குரங்கு ஆப்பிரிக்காவின் மையப் பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு எனப்படும் நாட்டின் அடர்ந்த காடுகளில் வாழ்கிற்து. இது பழங்கள் காய் ஆகியவற்றை உண்டு வாழ்வதாகும். இந்த இனக் குரங்கில் ஆண் குரங்கின் எடை சுமார் 7 கிலோ அளவில் தான் உள்ளது. இந்த வகைக் குரங்கின் ஒரு விசேஷம் இதன் முதுக்குப் புறம் நல்ல நீல நிறத்தில் உள்ளது என்பதாகும்.

காங்கோ காடுகளில் ஆராய்ச்சி நடத்துபவரும் அமெரிக்காவில் ஒகையோ நகரில் அமைந்த வ்னவிலங்கு ஆராய்ச்சிக் கட்டளையின் அறிவியல் டைரக்டருமான் ஜான் ஹார்ட் 2007 ஆம் ஆண்டில் முதன் முதலில் இக் குரங்கைக் கண்ட போது வியப்பில் ஆழ்ந்தார்.இது புது இனமாக இருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. லசூலாவின் ரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு ஆராய்ச்சி நடத்தப்ப்ட்டது. மேலும் பல ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
லசூலாவின் இன்னொரு தோற்றம். படம் நன்றி E.Emetshu PLOs one. 
எல்லா வகைகளிலும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே சில நாட்களுக்கு முன்னர் லுசூலா பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கோவில் இந்த இனக் குரங்குகள் வாழும் பகுதியில் காட்டு விலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை விற்கும் பழக்கம் உண்டு.

லுசூலா இனக் குரங்குகள் உலகில் வேறு பகுதியில் காணப்படுவதில்லை. ஆகவே காங்கோ காடுகளில் இந்த இனக் குரங்குகள் அழிந்து விடாமல் தடுக்க வட்டார மக்களின் ஒத்துழைப்புடன் ஒரு திட்டத்தை மேற்கொள்ள நிபுணர்கள் உத்தேசித்துள்ளனர். 

அமெரிக்க யேல் பல்கழகத்துடன் இணைந்த இயற்கை வரலாற்று மியூசியத்தைச் சேர்ந்த நிபுணர்கள் தான் முன்னின்று லசூலா பற்றிய ஆராய்ச்சியை நடத்தினர். அவர்களின் இக்கண்டுபிடிப்பு பற்றிய விவரம் PLOs One இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Sep 13, 2012

கரப்பான் பூச்சிகளைக் கட்டி மேய்க்க விஞ்ஞானிகள் திட்டம்

Share Subscribe
கரப்பான் பூச்சிகளைக் கண்டால் யாருக்குமே ஆகாது. ஆனால் விஞ்ஞானிகள் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட முக்கிய பணிகளுக்கு கரப்பான் பூச்சிகளைப் பயன்ப்டுத்த விரும்புகின்றனர். ஆகவே கரப்பான் பூச்சிகளை வைத்து சில ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

 இரவில் நீங்கள் கரப்பான் பூச்சியைக் காண நேரிட்டு அதை அடித்துக் கொல்ல முயன்றால் அது மிக வேகமாக ஓடி எங்கேனும் இடுக்கில் ஒளிந்து கொள்ளும். எந்த சிறிய இடுக்கானாலும் அது புகுந்து கொள்ளும். கரப்பான் பூச்சியின் இத் திறன் விஞ்ஞானிகளுக்குத் தேவையில்லை. தாஙகள் விரும்புகின்ற இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் செல்லும்படி செய்வதே விஞ்ஞானிகளின் நோக்கம்.
கரப்பான் பூச்சியின் முதுகில் ஒரு ’மூட்டை’கரப்பான் பூச்சியின் சைஸ் தெரிவதற்காக அருகே ஒரு காசு வைக்கப்பட்டுள்ளது.
ரிமோட் க்ண்ட்ரோல் மூலம் பொம்மை காரை இயக்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது மாதிரியில் கரப்பான் பூச்சிகளை இயக்குவதற்கு அவர்கள் வழி செய்துள்ளனர். இதற்கென நிஜ கரப்பான் பூச்சிகளின் முதுகில் அவர்கள் நுண்ணிய கருவிகளைப் பொருத்தினர். இவை வயர்லஸ் மின்னணுக் கருவிகளாகும்.

கரப்பான் பூச்சிக்கு இரு ’ மீசைகள்’ இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை உணர் உறுப்புகள் (Antennae)   முன்புறத்தில் தடை ஏதேனும் உள்ளதா என்பதை கரப்பான் பூச்சி இந்த  உணர் உறுப்புகள் மூலம் அறிந்து கொள்ளும்.

இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன. பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும். நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்க முயலும் போது அது இந்த உணர் உறுப்புகளை வைத்துத் தான் கண்டு கொள்கிறது
இறக்கை இல்லாத மடகாஸ்கர் கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியின் முதுகில் பொருத்தியுள்ள மின்னணுக் கருவிகள் விஞ்ஞானிகள் விரும்புகின்ற வகையில் இந்த உணர் இரு உண்ர் உறுப்புகளும் செயல்படும்படி செய்கின்றன.

விஞ்ஞானிகள் கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் உள்ள உணர் கருவியைத் தூண்டி விட்ட போது கரப்பான் பூச்சியானது பின்புறத்திலிருந்து நிஜமாக ஏதோ தன்னைத் துரத்துவது போல நினைத்து முன்னே வேகமாக ஓடியது.விஞ்ஞானிகள் கரப்பான் பூச்சியின் முகப் பகுதியில் உள்ள உணர் கருவிகளைத் தூண்டி விட்ட போது அது வேறு புறம் திரும்பி விஞ்ஞானிகள் திட்ட்மிட்ட திசை நோக்கி ஓட முற்பட்டது.
க்ரப்பான் பூச்சியின் பின்புறமுள்ள் உனர் உறுப்புகள்
இவ்விதமாக விஞ்ஞானிகள் விரும்பிய பாதையில் கரப்பான் பூச்சி ஓடும்படி செய்ய முடிந்தது. கரப்பான் பூச்சிகளை இப்படி ஆட்டுவிக்கும் திட்டத்தின் நோக்கம் என்ன?

பூகம்பம் அல்லது ஏதோ விபத்து காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழும் போது இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கிக் கொள்கின்றனர். கனத்த கான்கிரீட் பாளங்களுக்கு அடியில் சிக்குகின்ற அவர்களால் வெளியே வர முடிவதில்லை. மீட்புப் ப்டையினரால் நெருங்க முடியாத இடங்களை எதிர்ப்பட நேரிடுகிறது.

இவ்விதமான நிலையில் முதுகில் கருவிகள் பொருத்தப்பட்ட கரப்பான் பூச்சிகள் உதவும் என்று கருதப்படுகிறது. இடிபாடுகளுக்கு அடியில் ஏதோ ஒரு மூலையில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்டால் அந்த இடங்களை நோக்கி க்ரப்பான் பூச்சிகள் செல்லும்படி செய்யலாம். கரப்பான் பூச்சி எந்த இடுக்கிலும் நுழைந்து செல்லும் என்பதால் இந்த வேலைக்கு அவை உகந்தவை.

 கரப்பான் பூச்சிகளின் முதுகில் உள்ள கருவிகளில் நுண்ணிய கேமராவும் உண்டு என்பதால் குறிப்பிட்ட இடத்தில்  யாரேனும் சிக்கிக் கொண்டிருக்கிருக்கிறார்களா என்று கணடறிய முடியும் ஏனெனில் இக்கேமரா அனுப்பும் ப்டங்களை மீட்புக் குழுவினர் வைததுள்ள கருவிகளில் காண முடியும்.. இடிபாடுகளுக்கு இடையே உள்ள இடுக்குகளில் நுழைந்து செல்லும் கரப்பான் பூச்சிகள் மூலம் கிடைக்கின்ற தகவலை வைத்து எந்த இடத்தில் மீட்பு வேலையை மேற்கொள்ள வேண்டும் என்று எளிதில் தீர்மானிக்க முடியும்.

கரப்பான் பூச்சிகளில் எவ்வளவோ வகைகள் உள்ளன. விஞ்ஞானிகள் தங்கள் திட்டத்துக்கு Madagascar Hissing cockroach எனப்படும் வகையான கரப்பான் பூச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்குப் பறக்கும் திறன் கிடையாது என்பது அதற்குக் காரணம். ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இவற்றுக்கு அப்பெயர். இவை சுவாச உறுப்புகள் வழியே காற்றை வெளியேற்றி புஸ் என்று சத்தம் எழுப்ப்க்கூடியவை.

இந்த வகை கரப்பான் பூச்சிகளை வைத்து நடத்தப்பட்ட பூர்வாங்க சோதனைகளில் இவற்றை வளைந்த பாதையில் செல்லும்படி செய்வதில் வெற்றி கிட்டியுள்ளது. கரப்பான் பூச்சி எப்படிச் செல்கிறது என்பதைக் காண கீழே கிளிக் செய்யவும்.
கரப்பான் பூச்சியின் முதுகில் உள்ள கருவிகளின் எடையை சற்று குறைத்தாக வேண்டும் என்று இச்சோதனைகளுக்குப் பிறகு விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.


அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாகாண பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளன. இடிபாடுகளின் அடியில் ஒருவர் சிக்கியுள்ளது போன்ற நிலைமையை உண்டாக்கி அவர் இருக்குமிட்த்துக்கு கரப்பான் பூச்சிகளை வெற்றிகரமாக அனுப்ப முடிகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டியுள்ளது.  இப்படியான சோதனைகளின் பிறகே ‘கரப்பான்பூச்சி படை ‘யை ஏற்படுத்த முடியும்.

விஞ்ஞானிகள்  நினைத்தால் மிக நுண்ணிய கருவிகளைக் கொண்டு செயற்கைக் கரப்பான் பூச்சிகளை உணடாக்கி விட முடியும். ஆனால் அதில் நிறைய சிக்கலை எதிர்ப்பட வேண்டியிருக்கும். செலவும் அதிகம். ஆகவே நிஜ கரப்பான் பூச்சிகளையே பயன்படுத்த முற்பட்டுள்ளனர்.


Sep 9, 2012

குட்டிக் கோளுக்குத் தாவும் அமெரிக்க விண்கலம்

Share Subscribe
சூரியனை பூமி உட்பட ஒன்ப்து கிரகங்கள் சுற்றுவது நமக்குத் தெரியும். கிரகங்கள் மட்டுமன்றி  பல லட்சம் குட்டிக் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன  கிரிப் பிரதட்சிணம் செய்கின்ற கூட்டம் போல  இவை ஒரே கும்பலாகச் செல்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை சைஸில் சிறியவை. மலை அளவுள்ள குட்டிக் கோள்கள் உண்டு. பறக்கும் பாறாங்கல் என்று சொல்லத் தக்கவையும் உள்ளன. வெறும் 7 மீட்டர் குறுக்களவு கொண்ட ’குட்டிக் கோளும்’  உண்டு.
சூரியனை அஸ்டிராய்டுகள் சுற்றும் பாதை 
எனினும் சில  பெரும் தலைகளும் உள்ளன. சீரீஸ் (Ceres), பல்லாஸ் (Pallas), வெஸ்டா (Vesta), யுரோப்பா (Europa) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சீரீஸ் குறுக்களவு 950 கிலோ மீட்டர். வெஸ்டா குறுக்களவு 525 கிலோ மீட்டர். (இவற்றுடன் ஒப்பிட்டால் பூமியின் குறுக்களவு 12,756 கிலோ மீட்டர். சந்திரனின் குறுக்களவு சுமார் 3500 கிலோ மீட்டர்). இந்த அஸ்டிராய்டுகளில் வெஸ்டா சூரியனிலிருந்து சுமார் 37 கோடி மீட்டர் தொலைவிலும் சீரீஸ் 43 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.
அஸ்டிராய்ட் வெஸ்டா. இது டான்  எடுத்த ப்டம்
குட்டிக் கோள்கள் அனைத்தையும் அஸ்டிராய்ட்ஸ் (Asteroids)  என்ற பொதுப் பெயரில் குறிப்பிடுகின்றனர். அஸ்டிராய்டுகளில் வெஸ்டா, சீரீஸ், பல்லாஸ் போன்றவற்றைக் குட்டிக் கோள்கள் என்று வருணித்தால் அது பொருத்தமே. ஆனால் பெரும்பாலானவை  மிகவும் சிறியவை என்பதால் அவற்றை அஸ்டிராய்ட் என்று வருணிப்பதே பொருத்தமாக இருக்கும்
வலமிருந்து: பூமி, சந்திரன், சீரீஸ், வெஸ்டா
சூரியனை பூமி தனிப் பாதை அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது. மற்ற கிரகங்களும் அப்படியே. இது போலவே அஸ்டிராய்டுகள் அனைத்துக்கும் சூரிய மண்டலத்தில் தனிப் பாதை உண்டு. இது Asteroid Belt  என்று அழைக்கப்படுகிறது. இப்பாதை செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே அமைந்துள்ளது.

விஞ்ஞானிகளுக்கு அஸ்டிராய்டுகள் மீது தனி ஆர்வம் உண்டு. இவை அனைத்தும் சூரிய மண்டலம் தோன்றிய போது அதாவது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உண்டானவை. அவை அன்று இருந்தது போல இன்றும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆகவே அஸ்டிராய்டுகளை ஆராய்ந்தால் பூமி மற்றும் கிரகங்களின் தோற்றம் பற்றி மேலும் அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அஸ்டிரார்ய்ட் வெஸ்டாவில் உள்ள ஒரு மலை. டான் எடுத்த படம்
கடந்த பல ஆண்டுகளில் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி பல அஸ்டிராய்டுகள் ஆராயப்பட்டுள்ளன. அமெரிக்க விண்கலம் ஒன்று  ஈராஸ் என்ற அஸ்டிராய்டில் போய் மெல்ல இறங்கி சாதனை படைத்தது. ஜப்பான் அனுப்பிய ஹயாபுசா என்ற விண்கலம் ஓர் அஸ்டிராடை நெருங்கி லேசாக சுரண்டி சில நூறு நுண்ணிய துணுக்குகளை சேகரித்துக் கொண்டு  வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.

அமெரிக்காவின் நாஸா அமைப்பு  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற ஏற்பாடாக  வெஸ்டா, சீரீஸ் ஆகிய இரு அஸ்டிராய்டுகளை ஆராய 2007 ஆம் ஆண்டில் ‘டான்’(DAWN) என்னும் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்பியது. டான் 2011 ஜூலை 15 ந் தேதி வாக்கில் வெஸ்டாவுக்குப் போய்ச் சேர்ந்தது.

அந்த அஸ்டிராய்டை டான் ஓராண்டுக் காலம் சுற்றிச் சுற்றி வந்து ஆராய்ந்து பல தகவல்களை சேகரித்து அனுப்பியது.வெஸ்டாவிலிருந்து டான்  இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கிளம்புவதாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.ஆனால் டான் தனது   ஆய்வை முடித்துக் கொண்டு  இம்மாதம் 5 ஆம் தேதி தான்  அங்கிருந்து சீரீஸ் நோக்கிக் கிள்ம்பியது.டான் அடுத்து சீரீஸ் அஸ்டிராய்டை 2015 பிப்ரவரி வாக்கில் அடைந்து அதனை ஆராய்த் தொடங்கும். ஒரே விண்கலத்தைக் கொண்டு இரு அஸ்டிராய்டுகள் ஆராயப்படுவது இதுவே முதல் தடவை.
அஸ்டிராய்ட் சீரீஸ். ஹ்ப்புள் தொலை நோக்கி எடுத்த படம் 
சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெஸ்டா மீது இரண்டு த்டவை ஏதோ மோதியதாகக் கருதப்படுகிறது. அதன் விளைவாக அப்போது தூக்கி எறியப்பட்ட துண்டுகள் பலவும் காலப் போக்கில் பூமியில் விண்கற்களாக வந்து விழுந்துள்ளன.பூமியில் வந்து விழுந்துள்ள விண்கற்களில் ஐந்து சதவிகிதம் வெஸ்டாவிலிருந்து வந்தவையாக இருக்கலாம் என்ற் கருத்தும் உள்ளது.

அஸ்டிராய்ட் வெஸ்டாவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் விண்கல்
அஸ்டிராய்ட் ஒன்றுக்கு விண்கலத்தை அனுப்பி செயற்கைக்கோள் போல சுற்ற்ச் செய்வது என்பது மிகவும் கடினமானது. விண்கலம் அஸ்டிராய்டின் பிடியில் சிக்கினால் தான் விண்கலம் அஸ்டிராய்டை சுற்ற ஆரம்பிக்கும். அஸ்டிராய்ட்  என்பது வடிவில் சிறியது என்பதால் அதன் ஈர்ப்பு சக்தி ஒப்பு நோக்குகையில் மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே விண்கலத்தின் வேகத்தை மிகவும் குறைத்தால் தான் அது அஸ்டிராய்டின் பிடியில் சிக்கும்.

பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள விண்கலத்துக்குத் தக்க நேரத்தில் ஆணைகளைப் பிறப்பித்தால் தான் அது அஸ்டிராய்டின் பிடியிலிருந்து விடுபடும். இதை அடுத்து அதை வேறு ஓர் அஸ்டிராய்டை நோக்கி தகுந்த பாதையில் செல்லும்படி செய்ய வேண்டும். இதுவும் கடினமான பணியே. வெஸ்டாவின் பிடியிலிருந்து விடுபட்ட டான் விண்கலம் இப்போது சீரீஸ் குட்டிக் கோளை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.


டான் விண்கலம் தானாக வேகத்தைப் பெற முடியாது. ஆகவே அதில் இருந்த அயனி  பீச்சு கருவிகள் (Ion Propulsion Thruster) செய்லபட ஆரம்பித்ததும் டான் அங்கிருந்து கிளம்பியது.
டான் விண்கலம் பின்பற்றிய பாதை. வெஸ்டாவிலிருந்து டான் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கிளம்பும் என எதிர்பார்த்து இப் படம் வரையப்பட்டது. ஆனால் டான் செப்டம்பர் 5 ஆம் தேதி தான் கிளம்பியது
நாஸா விஞ்ஞானிகள் வெஸ்டா, சீரீஸ் ஆகிய இரு அஸ்டிராய்டுகளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் உண்டு. வெஸ்டா வெறும் பாறை. ஆனால் சீரீஸ் அஸ்டிராய்டின் மேற்புறம் தூசு படிந்துள்ளது.. மெல்லிய அளவில் ஐஸ் கட்டியும் படிந்துள்ளது. அதற்கு அடியில் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

டான் விண்கலம் வெஸ்டாவுக்குப் போய்ச் சேர 150 கோடி கிலோ மீட்டர் பயணம் செயதது. இப்போது அது வெஸ்டாவிலிருந்து சீரீஸ் போய்ச் சேர வளைந்த பாதையில் 273 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும். மிக நீண்ட பயணம் தான்.


Sep 4, 2012

ஒரு நதி பின்னோக்கி ஓடுமா?

Share Subscribe
ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி  நதியானது  சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம்.

மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.
ஐசக் புயலினால் ஏற்பட்ட வெள்ளம்
இதன் விளைவாக கடல் நீர் பெரும் பிரவாகமென நதிக்குள் புகுந்தது. இதன் விளைவாக நதி நீரும் கடல் நீரும் சேர்ந்து பின்னோக்கிச் சென்றன.இது நதியின் போக்கையே மாற்றியது. சாதாரண நாட்களில் மிஸ்ஸிஸிபி நதியில் கடலை நோக்கி வினாடிக்கு1,25,00 கன அடி வீதம் நீர் பாயந்து கொண்டிருக்கும்.ஆனால் புயல் தாக்கிய போது கடலிலிருந்து நதிக்குள் வினாடிக்கு 1,82,000 கன அடி வீதம் வெள்ள நீர் பாய்ந்தது. இது நதியை பின்னோக்கி ஓடும் விளைவை ஏற்படுத்தியது.
கடல் நீர் வெள்ள்மென உள்ளே பாய்கிறது
புயல் வெள்ளம்  நதிக்குள் பாய்ந்ததன் விளைவாக நதியின் நீர் மட்டம் வழக்கத்தை விட 10 அடிக்கும் அதிகமாக  உயர்ந்தது.  நதியில் பெல்லி சாஸே என்னுமிடத்தில் உள்ள அளவுமானிகள் இவை அனைத்தையும் பதிவு செய்து  காட்டின.
புயலினால் மிஸ்ஸிஸிபி நதியின் நீர் மட்டம் ஆக்ஸ்ட் 28 ஆம் தேதி எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதைக் காட்டும் வரிவடிவப் படம். நன்றி :USGS
பொதுவில் நதி முகத்துவாரப் பகுதியில் புயல் தாக்கினால் தற்காலிக அளவில் நதி பின்னோக்கி ஓடுவது சகஜமே

.கடந்த 2005 ஆம் ஆண்டில் இதே வட்டாரத்தை கட்ரினா என்னும் பெயர் கொண்ட பயங்க்ரப் புயல் தாக்கிய போது இதே போல மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது. அப்போது நதி நீர் மட்டம் வழக்கத்தை விட 14 அடி அதிகமாக இருந்தது.

மிஸ்ஸிஸிபி நதி கடலில் கடக்கும் இடத்தில் அமைந்த நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களுக்கு புயல் என்றாலே பெரும் பீதி தான். காரணம் இந்த நகரமும் சுற்று வட்டாரப் பகுதிகளும் கடல் மட்டத்தை விடத் தாழ்வாக உள்ளன. கடல் பொங்கினால் கடல் நீர் நகருக்குள் புகுந்து விடாமல் தடுக்க மிக விரிவான அள்வில் ஏரிக்க்ரை போல நெடுக நல்ல உயரமான தடுப்புக் கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கி கடல் நீர் வெள்ளமெனப் பாயும் போது இந்த தடுப்புக் கரைகளையும் தாண்டி நகருக்குள் வெள்ளம் புகுந்தால் பெரும் பிரச்சினை தான். கட்ரினா  புயல் தாக்கிய போது நகரம் வெள்ள்க்காடாகி பல வார காலம் தண்ணீரில் மிதந்தது..

நதி ஒன்று பின்னோக்கி ஓடுவதற்கு புயல் ஒன்று தான் காரணம் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்த மிசவுரி மாகாணத்தில்  மிஸ்ஸிஸிபி  நதிக் கரையில் நியூ மாட்ரிட் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரம் அமைந்த வட்டாரத்தில் 1812 ஆம் ஆண்டில் கடும் பூகம்பம் நிகழ்ந்தது. அப்போதும் மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது.


Sep 2, 2012

வானத்தில் இரட்டை சூரியன்

Share Subscribe
வானில் ஒரு சூரியன் இருக்கும் போதே பிரச்சினையாக இருக்கிறது. கோடை வந்தால் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் தாங்க முடிவதில்லை. வானில் இரட்டை சூரியன்  சூரியன் இருந்தால் கேட்கவே வேண்டாம்.

சரி, எங்கே இப்படி இரட்டை சூரியன்? முதலில் சூரியனைப் பற்றி சில வார்த்தைகள் கூறியாக வேண்டும்.  இரவில் வானைப் பாருங்கள். எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரியும். இவற்றில் ஏதோ ஒரு நட்சத்திரம் இருக்கின்ற இடத்துக்கு  நம்மால் போக முடிவதாக வைத்துக் கொள்வோம். அங்கிருந்து திரும்பிப் பார்த்தால் சூரியனும் இப்படி ஒரு நட்சத்திரமாக -= அனேகமாக மங்கலான சிறிய நட்ச்த்திரமாக-- தெரியும். அதாவது சூரியனும் ஒரு நட்சத்திரமே.

சூரியன் என்கிற நட்சத்திரம் நமக்கு அருகில் இருப்பதால் அது பெரிதாகத் தெரிகிறது. நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறது. சூரியன் என்கிற இந்த நட்சத்திரத்தை பூமி உட்பட பல கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவையெல்லாம் தெரிந்த விஷயம்.
வானில் இரட்டை சூரியன் கற்பனையாகத் தீட்டப்பட்ட ஓவியம்
வானவியல் (Astronomy)  விஞ்ஞானிகள் கடந்த பல காலமாக ஆராய்ந்து வந்ததில் ஒரு விஷய்ம் தெரிய வந்தது. விண்வெளியில் -- நமது அண்டத்தில் (Milky Way Galaxy) உள்ள நடசத்திரங்களில் பெரும்பாலானவை ஜோடி சேர்ந்து இரட்டை நட்சத்திரங்களாக உள்ளன. இரண்டுக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் சேர்ந்து  இருப்பதும் உண்டு.

 சூரியனோ ஒண்டிக்கட்டை நட்சத்திரம். அதாவது சூரியனுக்கு ஜோடி இல்லை. சூரியன் போன்ற ஒண்டிக்கட்டை  நட்சத்திரங்களுக்கு மட்டுமே கிரகங்கள் இருக்க முடியும்.. இரட்டை நட்சத்திரங்களுக்கு கிரகங்கள் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகக் கருதி வந்தனர்.

இரட்டை நட்சத்திரங்கள் ஒரு  பொது மையத்தை  சுற்றி வருபவை..   அவற்றுக்கு கிரகம் அல்லது கிரகங்கள் இருக்குமானால் அவற்றினால் அந்த இரு நட்சத்திரங்களின் ஈர்ப்பு  சக்திக்கு ஈடு கொடுத்து சுற்றி வர முடியாது என்று கருதப்பட்டது. இதன் விளைவாக இந்த கிரகங்கள் ஒன்று, அதன் பாதையிலிருந்து தூக்கி எறியப்படும். அல்லது அந்த கிரகம் விரைவிலேயே  ஏதாவது  ஒரு நட்சத்திரத்தில் போய் விழுந்து அழிந்து விடும் என்பதாகக் கருதப்பட்டு வந்தது. ஒரு வீட்டில் இரண்டு எஜ்மானர்கள் இருக்க முடியாதே.

இப்போதே இரட்டை நடசத்திரங்கள் ஒன்றல்ல இரண்டு கிரகங்களைப் பெற்றிருக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒரே ஒரு கிரகத்தைப் பெற்றுள்ள இரட்டை நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

 இப்போது இரண்டு கிரகங்களைக் கொண்ட இரட்டை நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரு கிரகங்களும் இரு நட்சத்திரங்களை சுற்றி வரும் என்பதால் இவற்றின் வானில் இரட்டை சூரியன்கள் பிரகாசிக்கும். இந்த நட்சத்திர ஜோடிக்கு Kepler 47 என்று பெயரிடப்பட்டுள்ளது.

 இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சூரியன்களில்                                ( நட்சத்திரங்களில்)  ஒன்று சூரியன் சைஸில் உள்ளது. மற்றொன்று சூரியன் சைஸில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இந்த இரண்டும் பொதுமையத்தைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டையும் இரு கிரகங்கள் சுற்றுகின்றன. ஒரு கிரகம் இந்த இரு சூரியன்களையும் ஒரு தடவை சுற்றி முடிக்க 50 நாட்கள் ஆகின்றன. வெளி வட்டத்தில் உள்ள கிரகம் இதே போல ஒரு தடவை சுற்றி முடிக்க 303 நாட்கள் ஆகின்றன.
கெப்ளர் டெலஸ்கோப். ஓவியர் வரைந்தது
அமெரிக்க நாஸா அமைப்பு 2009 ஆம் ஆண்டில் கெப்ளர் (Kepler ) டெலஸ்கோப் என்னும் பெயர் கொண்ட ஒரு செயற்கைக்கோளை உயரே செலுத்தியது. இது விண்வெளியில் எங்கெல்லாமோ இருக்கின்ற நட்சத்திரங்களுக்கு  கிரகங்கள் உள்ளனவா என்று விசேஷ முறை மூலம் ஆராய்கிறது.குறிப்பாக, எங்காவது ஒரு நட்சத்திரத்தில் பூமி போல ஒரு கிரகம் இருக்குமா என்பதை ஆராய்கிறது.

இந்த டெலஸ்கோப் இதுவரை பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அந்த டெலஸ்கோப் தான் இப்போது இரட்டைச் சூரியன்களையும் இரட்டை கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது.

சீனாவில் பெய்ஜிங்கில் நடந்த சர்வதேச வானவியல் சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேராசிரியர் வில்லியம் வெல்ஷ், கெப்ளர் குழுவின் சார்பில் மேற்படி கண்டுபிடிப்பைத் தெரிவித்தார். அவர் அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ மானில பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.

சரி, இரட்டை சூரியன்களைக் கொண்ட கிரகங்கள் எங்கே உள்ளன? இவை 4900 ஒளியாண்டு தொலைவில் உள்ளன. இது கற்பனை செய்து பார்க்க முடியாத தூரம்.

ஒளியானது ஒரு வினாடியில் சுமார் 3 லட்ச கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியது. ஓராண்டு என்பதில் 31,536,00  வினாடிகள் உள்ளன. இதை 3 லட்சத்தால் பெருக்க வேண்டும். ( இந்தத் தொகை தான் ஒளியாண்டு தூரம்) அதன் மூலம் கிடைக்கும் தொகையை 4900 என்ற எண்ணால் பெருக்கினால் வரக்கூடிய தொகை தான் அந்த இரட்டை சூரியன்களைப் பெற்றுள்ள கிரகங்கள் இருக்கின்ற தூரம்.

இரு சூரியன்களைப் பெற்றுள்ள இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள்து பற்றி சாண்டா குரூஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வான் இயற்பியல் பேராசிரியர் கிரெக் காக்லின் கூறுகையில் இது மிக அதிச்யமானது என்றார். இரட்டை சூரியன்,  இரட்டை கிரகங்கள் இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை. விஞ்ஞானிகளாகிய நாங்கள் இதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.