Jan 24, 2021

ஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி

Share Subscribe
திரு.ஐராவதம் மகாதேவனைப் பற்றிய புத்தகத்தை varalaaru.com 2008-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் ராமதுரை எழுதிய கட்டுரை இது.

கட்டுரையின் முதல் பகுதி முன்னர் வெளியானது. இது இரண்டாவது/இறுதிப் பகுதி. (ராமதுரை, ஐராவதம் மகாதேவன் - இருவரும் 2018-ல் காலமானார்கள்.)

***

நாளிதழ் வேறு அறிவியல் இதழ் வேறு


நாளிதழ்களில் எழுத்துப் பிழை அல்லது வேறு பிழைகள் இடம் பெறாதபடி கவனம் செலுத்தப்படுகிறது என்பது உண்மையே. ஆனாலும் ஒரு நாளிதழானது மிகுந்த வேகத்தில் மிகுந்த அவசரத்தில் தயாரிக்கப்படுவதாகும். நாளிதழ்களை "அவசர இலக்கியம்" என்றும் சொல்வதுண்டு. அந்த அளவில் எந்த மொழியிலான நாளிதழானாலும் அதில் ஓரிரு எழுத்துப் பிழைகள் இடம் பெற்றுவிடலாம். ஆனால் நாளிதழ் வேறு, அறிவியல் வார இதழ் வேறு.

நாளிதழ்களை மாதக் கடைசியில் பழைய பேப்பர் கடையில் விலைக்குப் போட்டு விடுவார்கள். "ஒரு நாளிதழின் ஆயுள் ஒரே நாள் தான்" என்று சொல்வதுண்டு. சில மணி நேரம் தான் என்றும் சொல்லலாம். யாரும் மாதக் கணக்கில், ஆண்டுக்கணக்கில் நாளிதழ்களை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக்கொள்வது கிடையாது.

ஆனால் அறிவியல் இதழ்கள் அவற்றில் இடம் பெறுகின்ற கட்டுரைகளுக்காகப் பத்திரமாகப் பாதுகாக்கப்படுபவை. பல வாசகர்கள் சுடர் இதழ்களை இவ்விதம் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர். ஒரு இதழ் விட்டுப் போனால் அந்த குறிப்பிட்ட இதழ் கிடைக்குமா என்று தினமணிக்கு எழுதிக் கேட்டு அவ்விதம் பெற்றுச் சென்றவர்கள் உண்டு.

இதை உணர்ந்து தான் சுடரில் எழுத்து பிழையோ கருத்துப் பிழையோ இடம் பெற்று விடக்கூடாது என்பதில் திரு ஐராவதம் அவர்கள் மிகக் குறிப்பாக இருந்தார். ஒவ்வொரு வாரமும் கட்டுரைகளை நான் படித்துப் பிழைகள் அகற்றப்பட்ட பிறகு திரு.ஐராவதம் கடைசியாக இதழில் இடம் பெறுகின்ற அனைத்துக் கட்டுரைகளையும் தவறாமல் உன்னிப்பாகப் படிப்பார். கட்டுரைகளைப் படிப்பது ஆசிரியரின் பணி அல்ல என்றாலும் கடைசி வரை அவர் இந்த ஏற்பாட்டைப் பின்பற்றி வந்தார். இது அவர் சுடர் தயாரிப்பில் கொண்டிருந்த மிகுந்த அக்கறையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

எங்களையும் மீறி எப்போதாவது சிறு தவறு இடம் பெற்றிருக்குமானால் அடுத்த இதழில் முக்கிய இடத்தில் அனைவரின் கண்களிலும் படும் வகையில் திருத்தம் வெளியிடும் வழக்கம் பின்பற்றப்பட்டது. இப்படியான திருத்தங்கள் மிக அபூர்வமாகவே இடம் பெற்றன.

வாசகர்கள் சுடர் இதழ்களை சேமித்து வைக்கின்றனர் என்பது தெரிந்ததும் அவர்கள் இந்த இதழ்களை தக்கபடி சேமித்து வைப்பதற்கு உதவியாக Folder கள் எனப்படும் அட்டைகளை வாசகர்களுக்குக் குறைந்த விலையில் தினமணி நிர்வாகமே அளிக்கச் செய்வது பற்றி ஆசிரியர் ஒரு திட்டம் தயாரித்து வைத்திருந்தார். ஏதோ காரணத்தால் அது ஈடேறாமல் போயிற்று.

வாசகர்கள் இதழ்களை "பைண்டு"
செய்து வைத்துக்கொண்டனர்.

வானவியலில் ஆர்வம்


பண்டைக் காலத்தில் கிராம மக்கள் இரவு நேரங்களில் வானத்துக் காட்சிகளைப் பார்த்தே - வானில் எந்த நட்சத்திரம் எங்கு தெரிகிறது என்பதை வைத்தே - நேரத்தைக் கூறும் அறிவைப் பெற்றிருந்தனர். ஆனால் இப்போது பெரும்பாலான மக்களுக்கு இரவு நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் முன்பாக அமர்ந்து சினிமா அல்லது சீரியல்களில் வருகின்ற "நட்சத்திரங்களை"க் காண்பதற்கே நேரம் போதவில்லை.

இப்பின்னணியில் மாதாமாதம் முதல் வார சுடரில் வான் காட்சிகளை விவரிக்கும் வரைபடங்களைப் போட்டு ஓரளவில் மக்களிடையே வானவியல் பற்றிய அறிவை வளர்க்கலாம் என்று முடிவு செய்து திரு.ஐராவதம் அவர்களே இப்பணியை மேற்கொண்டார். இதற்கென கொல்கத்தாவில் உள்ள அமைப்புடன் தொடர்பு கொண்டு வான் காட்சிப் படங்களை மாதமாதம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.மேலே உள்ளது போன்ற வான் காட்சிப் படம் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அந்த மாதத்தில் வானில் எங்கெங்கே தென்படும் என்பதைக் காட்டும். படத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படங்களை ஆங்கிலப் பெயர்களுடன் வெளியிடுவதில் அர்த்தமில்லை. அவற்றைத் தமிழில் தரவேண்டும்.

கிரகங்களின் பெயரைப் பொருத்த வரையில் பிரச்சினை இல்லை. நட்சத்திரங்களைப் பொருத்தவரையில் அவற்றின் பெயர்களுக்கு ஈடான தமிழ்ப் பெயர்கள் வேண்டுமே. வானவியல் பற்றி ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பதால் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அவரே எழுதிக் கொடுப்பார். கம்போஸ் செய்யப்பட்ட பின் தமிழ்ப் பெயர்களைப் மூலப்படத்தில் உள்ள ஆங்கிலப் பெயர்கள் மீது ஒட்டும் வேலையையும் அவரே செய்தார். இப்படியாக சுடரில் மாதாமாதம் முதல் வாரம் வான் காட்சிப் படம் "மாத வானவியல்"என்ற தலைப்பில் வெளியாகலாயிற்று. கடைசி வரை இந்தப் பணியை அவரேதான் செய்து வந்தார்.

இத்துடன் நில்லாமல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் அப்போது வேதியியல் பேராசிரியராக இருந்த திரு.சுந்தரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வானவியல் பற்றிய தொடர் கட்டுரை வெளியாக ஏற்பாடு செய்தார். திரு சுந்தரத்தின் தொடர் கட்டுரைகள் மிகச் சிறப்பாக அமைந்தன. நட்சத்திரங்களின் அமைப்பை விளக்கி அவரே போட்ட படங்கள் அக்கட்டுரைகளில் இடம் பெற்றன. திரு.சுந்தரத்தின் கட்டுரைகள் பின்னர் நூலாக வந்தனவா என்பது தெரியவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் அந்த நூலை நட்சத்திர வானவியல் பற்றிய ஒரு பொக்கிஷம் எனலாம்.

திரு.ஐராவதம் அவர்களுக்கு வானவியல் மீது இருந்த ஆர்வத்தை விளக்க ஓரு தகவலை இங்கு குறிப்பிடலாம். அவர் ஐ. ஏ. எஸ் அதிகாரியாக மத்திய அரசில் பணியாற்றிய போது, அரசுப் பணி தொடர்பாக ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்டில் தங்கியிருந்த போது ஓட்டலின் மொட்டை மாடிக்குச் சென்று நீண்ட நேரம் ஆசை தீர வான்காட்சிகளைத் தாம் கண்டதாக என்னிடம் ஒரு சமயம் கூறினார். சென்னையில் இருந்தால் தெளிவாகப் பார்க்க முடியாத நட்சத்திரங்களை ஆஸ்திரேலியாவில் பார்க்க முடிந்ததில் ஐராவதம் மகிழ்ச்சி அடைந்தார். அவர் ஆனந்தப்பட்டதற்குக் காரணம் உண்டு.

ஆஸ்திரேலியாவில் வானில் தலைக்கு மேலே தென்படுகின்ற அத்தனை நட்சத்திரங்களையும் நீங்கள் சென்னையிலிருந்து - ஏன் இந்தியாவிலிருந்து கூட - பார்க்க இயலாது. மிஞ்சிப் போனால் அவை தென் திசையில் அடிவானத்தில், அதுவும் தெளிவில்லாமல், தென்படும். அதே போல சென்னையில் தலைக்கு மேலே தெரிகின்ற நட்சத்திரங்கள் ஆஸ்திரேலியாவில் வடக்குத் திசையில் அடிவானில் தெளிவில்லாமல் மங்கலாகத் தெரியும். சொல்லப் போனால் சப்தரிஷி மண்டலத்தை ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களால் ஒருபோதும் காண முடியாது. பூமியின் வளைவே இதற்குக் காரணம்.

வானவியலில் அவருக்கு உள்ள ஈடுபாட்டை தெரிந்து கொண்ட நான் 1989-ல் அமெரிக்கா சென்றபோது நட்சத்திரங்கள் பற்றிய ஒரு நல்ல நூலை வாங்கி வந்து பரிசாக அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

வண்ணத்தில் சுடர்


நான் அமெரிக்கா சென்று விட்டுத் திரும்பி ஓரிரு நாட்களாகியிருக்கும். திரு.ஐராவதம் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பி, "ஒரு சந்தோஷ சமாச்சாரம், சுடர் இனி முற்றிலும் வண்ணப் படங்களுடன் வெளிவரும்" என்றார்.

எனக்கு மகிழ்ச்சி ஒரு புறம், திகைப்பு ஒரு புறம். எட்டு பக்களிலும் போடுவதற்கான அளவுக்கு வண்ணப் படங்களுக்கு எங்கே போவது? பிறகு எப்படியோ சமாளித்து வாரா வாரம் வண்ணப் படங்களாகப் போட்டோம். இங்கு நான் குறிப்பிட விரும்புவது திரு.ஐராவதம் அவர்கள் புதிது புதிதாகச் செய்து சுடர் இதழை மேம்படுத்துவதில் கொண்டிருந்த ஆர்வத்தை.
சுடர் இதழை நடத்துவதில் ஒரு கட்டத்துக்குப் பிறகு முழுப் பொறுப்பையும் திரு.ஐராவதம் என்னிடமே விட்டுவிட்டார். கட்டுரையாளர்களிடமிருந்து சுடருக்கு வருகின்ற அனைத்துக் கட்டுரைகளும் முதலில் அவருக்குத்தான் போகும். அத்தனை கட்டுரைகளையும் அவர் பொறுமையாக வாசிப்பார். அவை சில சமயம் சிறு குறிப்புகளுடன் எனக்கு வந்து சேரும். ஆனாலும் பிரசுரத்துக்குக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் ஒருபோதும் தலையிட்டது கிடையாது.

ஒரு சமயம் எழுத்தாளர் ஒருவர் திரு.ஐராவதத்திடம் ஒரு கட்டுரையை நேரில் கொடுத்து அதை தினமணி சுடரில் வெளியிடும்படி கோரினார். சுடரில் வெளியிடுகின்ற அளவுக்கு அது தகுதியானதா என்று தீர்மானிப்பதை அவர் என்னிடமே விட்டிருந்தார். அது சுடருக்கு ஏற்றது அல்ல என்று நான் கூறிய போது அவர் என் முடிவில் தலையிடவில்லை.

மருத்துவப் பகுதி
பயனுள்ள பல நல்ல மருத்துவ கட்டுரைகள் சுடரில் வெளிவந்தன. பல மருத்துவர்கள் சுடரில் எழுதினர். ஒரு இதழில் மருத்துவக் கட்டுரை அதிகபட்சம் ஒன்று இருந்தால் போதும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னிடம் கூறுவார். அதே போல கேள்வி-பதில் பகுதியிலும் மருத்துவத்துக்கு குறைவான இடம் இருந்தால் போதும் என்பது அவரது கருத்து.

மருத்துவர்களிடம் செல்லாமல் குறுக்கு வழியில் தங்களது உடல் கோளாறுகளுக்கு நிவாரணம் காண முயல்வது என்பது இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிற போக்காகும். ஆகவே மருத்துவக் கட்டுரைகளை அதிகம் வெளியிட முற்பட்டால் அது இந்த குறுக்குவழி மனப்பான்மையை ஊக்குவிப்பதாக அமையும் என்பது அவரது கருத்து.

பெரிய மனப்பான்மை


நான் ஏற்கனவே இரு அறிவியல் நூல்களையும், அத்துடன் நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதியிருந்த காரணத்தாலும், சுடர் இதழுக்கு பொறுப்பாசிரியராக இருந்த காரணத்தாலும், அறிவியல் பத்திரிகையாளர் என்று அறியப் பெற்றிருந்தேன். அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்கா கண்டுள்ள முன்னேற்றம் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசு 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்கு அறிவியல் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவுக்கு ஒரு மாதப் பயணமாக வருமாறு அழைப்பு விடுத்தது.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் நானும் ஒருவன். இது தனிப்பட்ட முறையில் விடுக்கப்பட்ட அழைப்பாகும். அமெரிக்கத் தூதரிடமிருந்து எனக்கு இதற்கான அழைப்பு வந்ததும் இச்செய்தியை முறைப்படி ஆசிரியர் திரு. ஐராவதம் அவர்களிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னைப் பாராட்டினார். இந்த அழைப்பை அவர் சுடருக்குக்கும் கிடைத்த ஒரு பெருமையாகக் கருதினார். பல தடவை அமெரிக்கா சென்று வந்தவர் என்ற முறையில் எனக்கு குறிப்புகளை அளித்தார்.

அமெரிக்க அரசிடமிருந்து மட்டுமன்றி பிரிட்டிஷ் அரசிடமிருந்தும் எனக்கு இவ்விதம் அழைப்பு வந்தது. இரு நாடுகளுக்கும் சென்று வர எனக்கு தினமணி நிர்வாகத்தின் அனுமதியும் சுமார் ஒன்றரை மாத கால விடுப்பும் தேவைப்பட்டது. திரு ஐராவதம் இதற்கு ஏற்பாடு செய்து உதவினார். அவரது இச்செயல் என் மனதைத் தொட்டது. அவர் நினைத்திருந்தால் வேலை பாதிக்கப்படும் என்று கூறி எனக்கு அனுமதி மறுத்திருக்கலாம். நேர்மாறாக அவர் உற்சாகத்துடன் எனக்கு ஆசி அளித்து அனுப்பி வைத்தார். அதை என்னால் என்றும் மறக்கவே முடியாது.

சுடரை ஆரம்பித்த போது தொடக்க காலத்தில் தமிழில் அவ்வளவாகக் கட்டுரைகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. விரைவிலேயே பலரும் கட்டுரைகளை எழுதி அனுப்ப ஆரம்பித்தனர். இவர்களில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோரும் அடங்குவர். நாங்கள் விதித்திருந்த நிபந்தனை காரணமாக அனைவரும் தமிழிலேயே எழுதி அனுப்பினர். தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படாத காலம் அது.

சுடருக்கு எழுத ஆரம்பித்தவர்களில் பலரும் பின்னர் பெயர்பெற்ற அறிவியல் எழுத்தாளர்களாகி அறிவியல் நூல்களையும் வெளியிட்டனர். சுடர் இதழும், திரு.ஐராவதமும், பல அறிவியல் எழுத்தாளர்களை உருவாக்கியதாக, மக்களிடம் அறிமுகப்படுத்தியதாகக் கூறலாம். அறிவியல் இதழ் என்றால் அது எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கு திரு ஐராவதம் அவர்கள் இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் என்று கூறினால் அது மிகையாகாது.திரு.ஐராவதம் அவர்கள் தினமணி ஆசிரியர் பதவியிலிருந்து விலகிய பிறகு சில காலம் சுடர் எனது முழுப் பொறுப்பில் இருந்தது. ஆனால் அதே தரத்தில் நடத்த இயலாத அளவுக்கு சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதால் பின்னர் நானும் விலகிக் கொண்டேன். பின்னர் சுடரும் நின்று போயிற்று. தினமணி சுடருக்கு முன்னர் தமிழ்ப் பத்திரிகை உலகில் அறிவியலுக்கென்று உயர்ந்த தரத்தில் இப்படி ஒரு வார இதழ் வெளிவந்தது கிடையாது.

தமிழகத்தில் நல்ல பொருளாதார அடிப்படை கொண்ட, வசதிகள் பலவற்றைக் கொண்ட, ஊடகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ் வளம் பெற வேண்டும் என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் தமிழுக்கு, தமிழ் பேசும் மக்களுக்கு, தாம் செய்கின்ற சேவையாகக் கருதி தமிழில் உயர்தர அறிவியல் இதழ்களை நடத்த முற்படவேண்டும்.