Showing posts with label எரிமலை. Show all posts
Showing posts with label எரிமலை. Show all posts

Sep 10, 2014

எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்தவர்

Share Subscribe
அவர் பெயர் ஜார்ஜ் கூரூனிஸ் (George Kourounis). யாரும் செல்லத் துணியாத இடங்களுக்குச் சென்று சாதனை புரிவது தான் அவருடைய தொழில். சில நாட்களுக்கு முன்பு அவர்  எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார்.

குனிந்து பார்த்தால் சுமார் 370 மீட்டர் ஆழமான கிடுகிடு பள்ளம். அதன் அடியில் தள தள என்று கொதிக்கும் நெருப்புக் குழம்பு. அந்த எரிமலைக் குழம்பின் வெப்பம் 1200 டிகிரி செண்டிகிரேட். எனவே கடும் அனல். நடு நடுவே எரிமலைக் குழம்பு சீறுகிறது. நெருப்பு உருண்டைகள் தூக்கியடிக்கப்படுகின்றன.

எரிமலை வாய்க்குள் இருந்து சாம்பல் புகை
வெளிப்படுவதைக் காண்க
நெருப்புக் குழம்பிலிருந்து ஆபத்தான குளோரின் வாயு, கந்தக வாயு ஆகியன வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளேயிருந்து எரிமலைச் சாம்பலும் மெல்லிய புகை போல மேல் நோக்கி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொதிக்கும் நெருப்புக் குழம்பின் விளிம்பில்
சிறிய உருவமாக ஜார்ஜ் தெரிவதைக் கவனிக்கவும்.
கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் எரிமலை வாய்க்குள் இறங்குவது என்பது மிக ஆபத்தான செயல்.

பசிபிக் கடலின் தென் பகுதியில் வனூவாடு (Vanuatu) என்ற தீவு நாடு உள்ளது. சின்னச் சின்னதாக மொத்தம் 80 தீவுகள். அவற்றில் 20 தீவுகளில் ஆளே கிடையாது. வனூவாடு நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டரை லட்சம்.

இந்தத் தீவுகளில் ஒன்றான அம்ரிம் தீவில் தான் பெரிய எரிமலை உள்ளது. 12 மீட்டர் அகலம் கொண்ட அந்த எரிமலை வாய்க்கு மாரும் என்று தனிப் பெயர் உண்டு.

கிடு கிடு பள்ளத்தின் அடியில் நெருப்புக் குழம்பு
ஜார்ஜ் கூரூனிஸ் இந்த எரிமலை  வாய்க்குள் தான் இறங்கினார். முதலில் கரடு முரடான் எரிமலைச் சரிவு வழியே மேலே ஏற வேண்டும். அதன் பிறகு தான் உள்ளே இறங்க வேண்டும்.

விசேஷ பாதுகாப்பு உடையில் ஜார்ஜ்
ஜார்ஜ் கூரூனிஸ் எரிமலைக் குழம்பின் வெப்பம் தாக்காதபடி இருக்க விசேஷ காப்பு உடை அணிந்திருந்தார். சுவாசிப்பதற்கு காற்றை அளிப்பதற்கான சுவாசக் கருவியையும் அணிந்திருந்தார். கால் தவறினால் ஆபத்து என்பதற்காக இடுப்பில் கம்பி இணைப்பு இருந்தது.

எரிமலைக் குழம்பைக் கண்டு பயம் இல்லையா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. எனக்கு மழையைக் கண்டுதான் பயம் என்றார் அவர்.

அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம் உண்டு. எரிமலை வட்டாரத்தில் மழை பெய்யுமானால் எரிமலையிலிருந்து கிளம்பும் ஆபத்தான வாயுக்கள் மழை நீருடன் கலந்து அதன் விளைவாகக் கடும் அமில மழை பெய்ய ஆரம்பிக்கும். அமில மழையானது அவர் அணிந்த காப்பு உடைகளை அரித்து விடும். அமில மழையானது உலோகங்களையும் அரித்து விடக்கூடியவை. வெறும் தூறல் இருந்தாலும் ஆபத்து தான்.

ஜார்ஜ் புரிந்த சாதனை மெச்சத்தக்கது என்பது ஒரு புறம் இருக்க, அவர் உள்ளே இறங்கிய போது எடுக்கப்பட்ட படங்கள் எரிமலையின் உட்புறத்தை நாம் காண்பதற்கு அரிய வாய்ப்பை அளித்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஜார்ஜ் கூரூனிஸுடன்  சென்ற காஸ்மான் என்ற போட்டாகிராபர் தான் அப்படங்களை எடுத்தவர்.

கனடாவைச் சேர்ந்த 44 வயதான ஜார்ஜ் ஏற்கெனவே மூன்று ஆபத்தான எரிமலைகளின் வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார். புயல்களும் அவருக்குப் பிடிக்கும். பல கடும் புயல்களின் நடுவே இருந்து படம் எடுத்துள்ளார்

அவரது இப்படியான சாகசங்கள் ஒரு பிரபல மேற்கத்திய டிவி சேனலில் சீரியலாகக் காட்டப்படுகின்றன. கீழே விடியோ காண்க.


Aug 22, 2014

ஓர் எரிமலை மிரட்டுகிறது

Share Subscribe
அட்லஸ் புத்தகத்தில் ஐஸ்லாந்து நாட்டைத் தேடிக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். அட்லாண்டிக் கடலின் வட கோடியில் அதாவது ஐரோப்பாவுக்கு வட மேற்கே  உள்ள சிறிய தீவு நாடு தான் ஐஸ்லாந்து.

பெயருக்கு ஏற்றபடி ஐஸ்லாந்தில்  நிறைய ஐஸ் உண்டு. எங்கு பார்த்தாலும் உறைபனிக்கட்டி தென்படும். அந்த ஐஸ்கட்டி நாட்டில் தான் நிறைய நெருப்பும் இருக்கிறது. அது தான் எரிமலைகள். அந்த சின்ன நாட்டில் 20 எரிமலைகள் உள்ளன.
படத்தில் மேலே வலது மூலையில் ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ளது தான் ஐஸ்லாந்து
இப்போது ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை மிரட்டி வருகிறது. அதாவது அந்த எரிமலை வட்டாரத்தில் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அந்த எரிமலை நெருப்பையும் எரிமலைச் சாம்பலையும் கக்க ஆரம்பிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது  ஐரோப்பிய நாடுகளில் விமான சர்வீசுகளை நடத்தும் நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் பல நாட்களுக்கு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நாடுகள் (சிவப்பு நிறத்தில்) ஓரளவு பாதிக்கப்பட்ட நாடுகள் ( ஆரஞ்சு நிறத்தில்)
ஐஸ்லாந்து (பச்சை நிறத்தில்)
ஏனெனில் எரிமலையிலிருந்து வெளிப்படும் எரிமலைச் சாம்பல் வானில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புக்குப் பரவும். இது வானில் பறக்கும் விமானங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும்.

இப்போது மிரட்டி வரும்  எரிமலையின் பெயர் பர்டார்புங்கா. எரிமலைப் பிராந்தியத்தில் பொதுவில்  நில நடுக்கங்களும் உண்டு. கடந்த 16 ஆம் தேதி சனிக்கிழமையிலிருந்து திங்கள் காலை வரை 2600 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. திங்கள் காலையில் கடும் பூகம்பம் நிகழ்ந்தது.

பர்டார்புங்கா எரிமலை ஐஸ்லாந்தின் வடமேற்குப் புறத்தில் உறைபனி படிந்த இடத்தில் உள்ளது.1910 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் அது  மிரட்டுகிறது.
பர்டார்புங்கா எரிமலை வாய் இந்த உறைபனிக்கு அடியில் உள்ளது.
எரிமலை வாயின் அகலம் 10 கிலோ மீட்டர்.
வானில் எரிமலைப் புகையின் ஊடே விமானத்தைச் செலுத்திச் செல்வது ஆபத்து. முதலாவதாக விமானத்தை ஓட்டிச் செல்பவருக்கு எதிரே என்ன இருக்கிறது என்பது தெரியாது. விமானியின் முன்புறமுள்ள கண்ணாடி மீது சாம்பல் படிந்து விடும். இதனால் விமான நிலையத்தில் இறங்குவதிலும் பிரச்சினை ஏற்படும். இரண்டாவதாக எரிமலைப் புகையில் அடங்கிய சாம்பல் விமானத்தின் மற்ற வெளிப்புறப் பகுதிகளில் படிந்து பிரச்சினையை உண்டாக்கும்.

மூன்றாவது பிரச்சினைதான் ஆபத்தானது. எரிமலைச் சாம்பலில் அடங்கிய துகள்கள் விமான எஞ்சினுக்குள் புகுந்த பின் உருகி விமான எஞ்சின் பகுதிகள் மீது படியும். இது கண்ணாடியை உருக்கி எஞ்சின் பகுதிகள் மீது ஊற்றியது போன்ற விளைவை உண்டாக்கும். இதன் விளைவாக  விமான எஞ்சின்கள் சிறிது நேரம்  தற்காலிகமாக செயல்படாமல் போகும்.

 1982 ஆம் ஆண்டில் கோலாலம்பூரிலிருந்து நியூசீலந்து சென்று கொண்டிருந்த ஒரு விமானம் எரிமலைப் புகையில் சிக்கிக் கொண்ட போது  நான்கு எஞ்சின்களும் சிறிது  நேரம் செயல்படாமல் போயின. நல்ல வேளையாக அவை மீண்டும் செயல்படத் தொடங்கி அது பத்திரமாக இந்தோனேசியாவின் ஜாகர்த்தா விமான நிலையத்தில் இறங்கியது. எனினும் விமானத்தை பழுது பார்க்கப் பெரும் செலவு ஏற்பட்டது.

1989 டிசம்பரில் டோக்கியோவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு விமானத்தில் நான்கு எஞ்சின்களும் எரிமலைச் சாம்பலின் விளைவாக சிறிது நேரம் செயல்படாது போயின

இந்த மாதிரி சம்பவங்களுக்குப் பிறகு உலகில் ஏதாவது ஒரு பகுதிக்கு மேலே வானில் எரிமலை சாம்பல்  இருக்குமானால் அது பற்றி எல்லா விமானங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஏற்பாடு அமலுக்கு வந்தது.
2010  ஆண்டில் விமானப் போக்குவரத்துக்குப் பெரும் பிரச்சினையை
ஏற்படுத்திய எரிமலை
ஐஸ்லாந்தில் 2010 ஆம் ஆண்டில் Eyjafjallajokull என்னும் வாயில் நுழையாத பெயரைக் கொண்ட எரிமலை பெரும் புகையைக் கக்கிய போது  ஐரோப்பிய நாடுகள் இடையே இயங்குகிற மற்றும் அவ்வழியே இயங்குகிற பல ஆயிரம் விமான சர்வீசுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது என்பதுடன்  விமான நிறுவனங்களுக்குப் பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது.

இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஐரோப்பிய வட்டார விமானப் போக்குவரத்துக்குப் பொறுப்பான யூரோகண்ட்ரோல் நிறுவன அதிகாரி கூறுகையில் எரிமலைச் சாம்பல் பிரச்சினையை எதிர்கொள்ள தாங்கள் முன்னைவிட ஆயத்த நிலையில் இருப்பதாகச் சொன்னார். புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆண்டு தோறும் எரிமலைச் சாம்பல் சமாளிப்பு ஒத்திகைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பர்டார்புங்கா எரிமலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஐஸ்லாந்தில் பல எரிமலைகள் இருப்பது ஏன்? அது தனிக் கதை.