Dec 31, 2014

ஜனவரி 4 ஆம் தேதி பூமியின் ஈர்ப்பு சக்தி குறையுமா?

Share Subscribe
2015 ஜனவரி 4 ஆம் தேதியன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் ஐந்து நிமிஷம் பூமி முழுவதிலும் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்படுமாம். அப்போது உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, உயரே எம்பிக் குதித்தால் சற்று நேரம் அந்தரத்தில் மிதக்கின்ற உணர்வு இருக்குமாம். இப்படியான கட்டுக்கதை இப்போது உலகெங்கிலும் உலவி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அது எந்த நேரம் என்று அறிந்து கொள்ளப் பலரும் விரும்புவர். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற மேற்குக் கரைப் பகுதியிலான நேரப்படி காலை சரியாக 9-47 மணிக்கு இவ்வித எடையற்ற நிலை அதாவது அந்தரத்தில் மிதக்கும் நிலை இருக்குமாம். அது இந்திய நேரப்படி ஜனவரி 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11-15 மணி ஆகும். வதந்தியைக் கிளப்பியவர்களின் கூற்றுப்படி இந்தியாவில் அந்த நேரத்தில் இவ்விதமான நிலை இருக்க வேண்டும்.

இது நிஜம் தானா? அல்லது பொய் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள  இந்தியாவில் உள்ளவர்கள் விரும்பினால் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்து குதித்துப் பார்க்கலாம். நீங்கள் வசிப்பது மாடியாக இருந்தால் கீழ் தளத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொண்டு ’யார் இந்தப் பைத்தியம், நடு ராத்திரியில் இப்படிக் குதிக்கிறது ’ என்று திட்டுவார்கள். சரி, கீழே இறங்கி வந்து வீட்டருகே குதித்தால் நடு ராத்திரியில்  ஏதோ சுவர் ஏறிக் குதிக்கிற திருடனோ என்று சந்தேகித்து  போலீசார் மடக்கலாம்.

யாரும் சோதித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. பூமியின் ஈர்ப்பு சக்தி அன்றைய தினம் அன்றைய சமயத்தில் சிறிதும் மாறாது.

இது ஒரு புறம் இருக்க,பூமியின் மேற்புறத்தில் ஈர்ப்பு சக்தி அளவு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லைதான். இடத்துக்கு இடம் சிறு அளவில் வித்தியாசப்படுகிறது.  உலகிலேயே கன்னியாகுமரி  மற்றும் அதற்குத் தெற்கே உள்ள கடல் பகுதியிலும் ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இலங்கையில் உள்ள கண்டி நகரில் தான் இது உலகிலேயே மிகக் குறைவான அளவில் உள்ளது.

கீழே உள்ள படங்களில் நீல நிறமானது ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ள இடங்களையும், சிவப்பு நிறமானது ஈர்ப்பு சக்தி ஒப்பு நோக்குகையில் அதிகமாக உள்ள இடங்களையும் குறிக்கிறது.

இதே போல கனடாவின் ஹட்சன் வளைகுடாப் பகுதியிலும் ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. எனவே ஒருவரின் எடை அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஒரு விதமாகவும் ( மில்லிகிராம் சுத்தமாகக் கணக்கிட்டால்) ஹட்சன் வளைகுடாவில் ஒருவிதமாகவும் இருக்கும். அதே போல ஒருவரின் எடை டில்லியில் ஒருவிதமாகவும் கன்னியாகுமரியில் வேறு விதமாகவும் இருக்கும். ஆகவே ஒருவரைப் பார்த்து டில்லியில் உங்கள் எடை என்ன என்று கேட்டால் அது அசட்டுத்தனமான கேள்வியாக இராது.

பூமியில் வெவ்வேறு இடங்களிலும் உள்ள ஈர்ப்பு சக்தியை அளவிட்டறிவதற்காக அமெரிக்காவின் நாஸாவும் ஜெர்மன் விண்வெளி அமைப்பும் சேர்ந்து GRACE  என்னும் பெயர் கொண்ட இரு செயற்கைக்கோள்களை  உயரே செலுத்தியது. அவை பல தகவல்களை அனுப்பின..
செயற்கைக்கோள் அளித்த தகவலின்படியான உலகப் படம்.
இந்தோனேசியா பகுதியில் ஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதைக் கவனிக்கவும்.
பின்னர் இதே நோக்கத்தில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 2009 ஆம் ஆண்டில் GOCE  என்னும் பெயர் கொண்ட செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த செயற்கைக்கோளும் ஏராளமான தகவல்களை அனுப்பியது.

பூமியின் ஈர்ப்பு சக்தி இடத்துக்கு இடம் மாறுபடுவதானது மேலே பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற  செயற்கைக்கோள்களைப் பாதிக்கிறது .

பூமி  ஈர்ப்பு சக்தி விஷயத்தில் பூமியின் மேற்புறத்தில் உள்ள வேறுபாடுகளை வைத்து பூமிக்கு நாமாக ஒரு உருவம் கொடுப்பதென்றால் பூமியானது கீழே உள்ளது மாதிரியில் இருக்கும்


இது ஒரு புறம் இருக்க மேலே சொல்லபட்ட கட்டுகதைக்கு மறுபடி வருவோம். பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு போதும் ஒரேயடியாகக் குறைவது கிடையாது.

ஆகவே யாரோ கிளப்பி விட்ட கதையை நம்புவது அசட்டுத்தனம். சிலர் வேண்டுமென்றே இப்படியான வதந்திகள் அவ்வப்போது கிளப்பி விடுகின்றனர்.

பூமியின் ஈர்ப்பு சக்தி குறிப்பிட்ட ஐந்து நிமிஷ நேரம் ஒரேயடியாகக் குறைந்து விடும் என்ற வதந்தியானது ஒரு வகையில் சர் ஐசக் நியூட்டனை அவமதிப்பதாகும். பூமியின் ஈர்ப்பு சக்தி பற்றிய கொள்கையை அவர் தான் எடுத்துரைத்தார்.  நியூட்டனின் பிறந்த நாள் ஜனவரி 4 ஆம் தேதியாகும் (ஆண்டு 1643)

சூரியனுக்கு அருகே பூமி

ஜனவரி 4 ஆம் தேதி இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் தான் பூமியானது சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். அதாவது  அன்று சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 14 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

ஜூலை 6 ஆம் தேதியன்று இந்த தூரம் மிக அதிகபட்சமாக 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

ஜனவரி 4 ஆம் தேதி பூமியானது ஒப்புனோக்குகையில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்று கூறுகிறீர்களே, கடும் குளிர் வீசுகிறதே, அது எப்படி என்று கேட்கலாம். ( பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் தான் குளிர். நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இப்போது நல்ல கோடைக்காலம்)

பூமியில் குளிர்காலமும் கோடைக்காலமும் ஏற்படுவதற்கும் சூரியன் - பூமி இடையிலான தூரத்துக்கும் தொடர்பு கிடையாது. பூமி தனது அச்சில் சுமார் 23 டிகிரி சாய்வாக இருப்பதால் தான் குளிர்காலமும் கோடைக்காலமும் ஏற்படுகின்றன.

Dec 28, 2014

வெள்ளி கிரகத்துக்குப் போகலாம் வாங்க

Share Subscribe
பூமியில் கடல்களுக்கு அடியில் வசிக்க இயலாது. எவ்வளவோ பிரச்சினைகள். பூமிக்கு மேலே ஆகாயத்திலும் வசிக்க இயலாது. அதிலும் பல பிரச்சினைகள். ஆனால் வெள்ளி கிரகத்தில்  ஆகாயத்தில் மேகங்களுக்கு நடுவே வசிக்க முடியும் என்று நாஸா கூறுகிறது.

நாஸா ஒரு படி மேலே போய் வெள்ளி (Venus) கிரகத்தில் மனிதர்கள் வாழும் ஆகாயக் காலனிகளை உண்டாக்க முடியும் என்றும் கூறுகிறது. செவ்வாய் (Mars)  கிரகத்தில் போய் குடியேறுவதில் உள்ள பிரச்சினைகளுடன் ஒப்பிட்டால் வெள்ளி கிரகத்துக்குப் போய் ஆகாயக் காலனிகளில் குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் குறைவு.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இப்போதைக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு வெள்ளி கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதில் கவனம் செலுத்தலாம் என்றும் நாஸா விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

வெள்ளி கிரகம் அப்படி என்ன மனிதர்கள் வாழ உகந்த நிலைமைகளைக் கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் வெள்ளி கிரகம் ஒரு நரகம். வெள்ளியில் தரை வெப்ப நிலை சுமார்  470 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.  வெள்ளியில் வானிலிருந்து அமில மழை பெய்யும் . அது போதாதென வெள்ளியில் காற்றழுத்தமானது பூமியில் உள்ளதை விட 92 மடங்கு அதிகம்.
எப்போதும் மேகங்களால் மூடப்பட்ட வெள்ளி கிரகம்
வெள்ளியின் காற்றழுத்தம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தும் என்பதால் வெள்ளியில் இறங்கும் விண்கலமானது யானையின் காலடியில் சிக்கிய பிளாஸ்டிக் பொம்மை போல நொறுங்கி விடும்.

கடந்த காலத்தில் அமெரிக்காவும் ரஷியாவும் வெள்ளி கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்பத்தான் செய்தன. அமெரிக்க விண்கலத்தில் எதுவுமே செயல்படாது போயின. ஒரு சில ரஷிய விண்கலங்கள் சிறிது நேரம் செயல்பட்டு தகவல்களை அனுப்பின. 1981 ஆம் ஆண்டில் ரஷியா அனுப்பிய வெனிரா-13 என்னும் பெயர் கொண்ட ஆளில்லா விண்கலம் வெள்ளியில் இறங்கி 127 நிமிஷங்கள் செயல்பட்டது.  இவ்விதக் காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக ரஷியாவோ அமெரிக்காவோ வெள்ளி கிரகத்தின் பக்கம் திரும்பவில்லை.

வெள்ளிக்கு இப்போது சுக்கிரதசை போலும். ஆகவே தான் வெள்ளி பக்கம்  நாஸா திரும்பியுள்ளது. (வெள்ளி கிரகத்துக்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு.ஜோசியர்கள் வெள்ளி கிரகத்தை சுக்கிரன் என்றே குறிப்பிடுகின்றனர்).

வெள்ளியில் தரை மட்டத்தில் தான் நிலைமைகள் பயங்கரமாக உள்ளன. ஆனால் வெள்ளியின் தரை மட்டத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தம் பூமியில் உள்ளதைப் போலவே உள்ளது. அந்த உயரத்தில் வெப்பம் 70 டிகிரி செல்சியஸ் அளவுக்குத் தான் உள்ளது. ஒரு விதமாக சமாளிக்கலாம்.

அந்த அளவில் வெள்ளியின் மேகங்களின் ஊடே பாதுகாப்பாக பறந்தபடி வாழ இயலும். இவையெல்லாம் முன்பே அறியப்பட்டவை. ஏட்டளவில் இருந்தவை. நாஸா இப்போது இதற்கு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளது என்பது தான் புதியது.
ஹிண்டன்பர்க் என்னும் பெயர் கொண்ட ஆகாயக்கப்பல் (1936)
இதில் சுமார் 90 பேர் பயணம் செய்தனர்.
ராக்கெட் மூலம் வெள்ளி கிரகத்தை அடைய வேண்டும். பின்னர் அதற்குள்ளிருந்து  ஹீலியம் வாயு  நிரப்பப்பட்டதாக ஆகாயக் கப்பல் (Airship) வெளிப்படும். அது பலூன் போல நடுவானில் நிலையாகப் பறக்கக்கூடிய ஒன்றாகும். அதன் அடிப்புறத்தில் புரோப்பல்லர்களைப் பொருத்தினால் மெதுவான வேகத்தில் முன் நோக்கிச் செல்லும்.

ஆகாயக் கப்பலின் அடிப்புறத்தில் விண்வெளி வீரர்கள் பாதுக்காப்பாகத் தங்கியிருப்பதற்கான கூடுகள் பொருத்தப்பட்டிருக்கும். விண்வெளி வீரர்கள் இதற்குள்ளாக இருந்து பணி புரியலாம்.
ஹிண்டன்பர்க் ஆகாயக்கப்பலில் அமைந்த உணவுக்கூடம்
வெள்ளி கிரகத்துக்கு முதலில் ஆளில்லாத விண்கலத்தை அனுப்புவது திட்டமாகும். பின்னர் விண்வெளி வீரர்கள் அடங்கிய விண்கலம் செல்லும். அந்த விண்கலம் சில நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி வெள்ளியை சுமார் ஒரு மாத காலம் சுற்றும்.அதன் பின்னர் அவர்கள் பூமிக்குத் திரும்புவர்.  அடுத்த கட்டமாக விண்வெளி வீரர்கள் வெள்ளியின் மேகங்களுக்கு ஊடே சுமார் 50 கிலோ மீட்டர் உயரத்தில்  ஆகாயக்கப்பலில் இருந்தபடி 30 நாட்கள் தங்கியிருப்பர். ஆகாயக் காலனிகளை அமைப்பது அடுத்த திட்டமாக இருக்கும்.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதுடன் ஒப்பிட்டால் வெள்ளிக்கு மனிதனை அனுப்புவது ஒப்பு நோக்குகையில் சுலபம். செவ்வாயில் கனமான விண்கலங்களை இறக்குவதில் பிரச்சினை உண்டு.செவ்வாய் கிரகத்தில் விண்வெளியிலிருந்து ஆபத்தான கதிர்கள் தாக்கும் பிரச்சினை உண்டு என்பதால் நிலத்துக்குள்ளாகத்தான் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும். எல்லாவற்றையும் விட செவ்வாயின் தரையிலிருந்து கிளம்பி மேலே வருவதில் உள்ள பிரச்சினைக்கு இன்னும் நம்பகமான ஏற்பாடு உருவாக்கப்படவில்லை.

வெள்ளி விஷயத்தில் தரையில் இறங்கும் பேச்சுக்கே இடமில்லை. ஆகவே மேலே வருகின்ற பிரச்சினையும் இல்லை. வெள்ளிக்கு விண்வெளி வீரர்கள ஏற்றிச் செல்லும் அதே விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப முடியும்.

வெள்ளி கிரகத்தை கனத்த மேகங்கள் போர்த்தியுள்ளதால் விண்வெளியிலிருந்தும் சூரியனிலிருந்தும் வருகிற ஆபத்தான கதிர்களை அந்த மேகங்கள் தடுத்து விடும்.

தவிர, செவ்வாய் அல்லது பூமியுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிரகமானது சூரியனுக்கு அருகாமையில் உள்ளது. ஆகவே சூரியனின் ஒளிக் கதிர்கள் மூலம் நிறைய மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.(சூரியனிலிருந்து வெள்ளி 10 கோடி கிலோ மீட்டர். பூமி 15 கோடி கி.மீ.செவ்வாய் 22 கோடி கி.மீ)

எனினும் வெள்ளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் இப்போதைக்கு ஏட்டளவில் தான் உள்ளது. உறுதியாக நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே எதுவும் சாத்தியமாகும்.

ஆகாயக்கப்பல் பற்றிய குறிப்பு: ஆகாயக்கப்பல் (Airship)  இப்போதைய விமானங்களிலிருந்து மாறுபட்டது. ஹைட்ரஜன் வாயு அல்லது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஆகாயக்கப்பல் வானில் பலூன் போன்று மிதக்கக்கூடியது. சுழலிகள் (Propeller)  உதவியுடன் முன்னே செல்லக்கூடியது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பா- அமெரிக்கா இடையே ஆகாயக்கப்பல்கள் இயங்கின. ஆகாயக்கப்பலின் அடிப்புறத்தில் இணைந்த கூட்டில் விமானிகளும் பயணிகளும் இருந்தனர். ஆகாயக்கப்பலில் படுக்கை அறைகள் உணவுக்கூடம் முதலிய பல வசதிகள் இருந்தன.   ஆனால் ஆகாயக்கப்பலின் வேகம் குறைவு. பாரிஸிலிருந்து நியூயார்க் செல்ல சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் பிடிக்கும். இப்படியான பல காரணங்களால் ஆகாயக்கப்பல்கள் இடமிழந்தன.


Dec 22, 2014

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவு

Share Subscribe
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிலிருந்து திடீர் திடீரென மீத்தேன் வாயு கசிவதாக அமெரிக்காவின் கியூரியாசிடி நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் கண்டறிந்துள்ளது. ஆளில்லாத இந்த ஆராய்ச்சிக்கூடம் தானாக இயங்கி ஆங்காங்கு ஆராய்ந்து வருகிறது.

ஒரு வேன் சைஸிலான கியூரியாசிடி 2012 ஆகஸ்டில் போய் இறங்கியதிலிருந்து  செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இதில் பல நுட்பமான கருவிகள் உள்ளன.
அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிடி ஆராய்ச்சிக்கூடம்
செவ்வாயின் நிலப்பரப்பிலிருந்து  திடீர் திடீரென மீத்தேன் வாயு வெளிப்படுவதை கியூரியாசிடி கண்டுபிடித்து பூமிக்குத் தகவல் அனுப்பியுள்ளது. இது முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

ஏனெனில்  உயிரினத்துக்கும் மீதேன் வாயுவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. பூமியில் உயிரினம் காரணமாக நிறையவே மீத்தேன் வாயு வெளிப்படுகிறது.கால்நடைகளின் வயிற்றிலிருந்து மீத்தேன் வாயு வெளிப்படுகிறது. நெல் வயல்களிலிருந்து கணிசமான அளவில் மீத்தேன் வெளிப்படுகிறது. சதுப்பு நிலங்களிலும் இயற்கையாக மீதேன் வாயு உற்பத்தியாகிறது. மீத்தேன் தீப்பற்றும் தன்மை கொண்டது.

சதுப்பு நிலங்களில் வெளிப்படும் மீத்தேன்  இரவு நேரங்களில் சில சமயங்களில் தற்செயலாகத் தீப்பிடிப்பது உண்டு.  ஒரு காலத்தில் இதைக் கண்டவர்கள் கொள்ளி வாய்ப் பிசாசு என்றும் கருதினர். உண்மையில் இது கொள்ளி வாயு  அதாவது மீத்தேன் வாயு என்பது பின்னர் தான் கண்டறியப்பட்டது.

 ஓரிடத்தில் நீண்ட நாள் குப்பையைப் போட்டு வைத்தால் இயல்பாக அதில் மீத்தேன் உற்பத்தியாகும். சில நாடுகளில் பெரிய அளவிலான குப்பை மேடுகளிலிருந்து மீத்தேன் வாயுவை சேகரித்துப் பயன்படுத்துகின்றனர். சாண வாயு என்பதும் பெரிதும் மீத்தேன் வாயு தான். கரையான்கள் மூலமும் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.

கடல் பகுதியிலும் நிலப் பகுதியிலும் மிக ஆழத்திலிருந்து எரிவாயு எடுக்கப்படுவது பற்றி அறிந்திருக்கலாம். எரிவாயுவில் பெரும் பகுதி மீத்தேன் வாயு ஆகும். ஏதோ ஒரு காலத்தில் இருந்த தாவரங்களும் விலங்குகளும் மிக ஆழத்தில் புதையுண்டு கடும் வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் உள்ளான போது தோன்றியதே எரிவாயு ஆகும். பூமியில் உள்ள மீதேனில் 95 சதவிகிதம் நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்படுவதாகும்.ஆனால் புவியியல் காரணங்களாலும் மீத்தேன் வாயு தோன்றுவது உண்டு. அதாவது சில வகைப் பாறைகளும் நீரும் சேரும்போது மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

 கியூரியாசிடி செவ்வாயில் இறங்கி காற்று மண்டலத்தை ஆராய்ந்த போது மீத்தேன் வாயு 0.7 ppbv ( parts per billion by volume) அளவுக்கே   இருப்பதாகக் கண்டறிந்தது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியின் காற்று மண்டலத்தில் இந்த வாயு 1800 ppbv  அளவுக்கு உள்ளது.

எனினும் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நான்கு தடவைகளில் கியூரியாசிடியின் கருவிகளில் வழக்கத்தை விட பத்து மடங்கு மீத்தேன் வாயு பதிவாகியது. இவ்விதம் திடீர் திடீரென மீத்தேன் வாயு அளவு அதிகரிப்பதற்கு அந்த வாயு செவ்வாயின் நிலத்துக்குள்ளிருந்து   கசிவதே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனினும் செவ்வாயில் காணப்படும் மீத்தேன் வாயு இப்போது அல்லது கடந்த காலத்தில் இருந்திருக்கக்கூடிய நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்பட்டதா அல்லது புவியியல் காரணங்களால் தோற்றுவிக்கப்பட்டதா என்பதை கியூரியாசியினால் கண்டறிய இயலவில்லை. செவ்வாயின் மீத்தேன் நுண்ணுயிர்கள் காரணமாகத் தோன்றுவதே என்று தெரிய வந்தால் அக்கிரகத்தில் இப்போது அல்லது கடந்த காலத்தில் நுண்ணுயிர்கள் இருந்தன என்று சொல்ல முடியும்.

அப்படியில்லாத நிலையில் செவ்வாயில்  மீத்தேன் வாயு அவ்வப்போது வெளிப்படுவதை வைத்து எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி அமைப்பு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நினைவிருக்கலாம். 2014  ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து செவ்வாயைச் சுற்றி வர ஆரம்பித்த மங்கள்யான் அங்கிருந்து படங்களை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை மங்கள்யான் கண்டறியும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் செவ்வாயில் மங்கள்யான் எதையாவது கண்டுபிடித்ததா என்பது பற்றி கடந்த சில மாதங்களில் இஸ்ரோவிடமிருந்து எந்த செய்தியும் கசியவில்லை.

Dec 20, 2014

பூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது?

Share Subscribe
வால் நட்சத்திரங்கள் அடிப்படையில் பனிக்கட்டி உருண்டைகள். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு காலத்தில் பூமியை எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் தாக்கின. அவற்றின் மூலம் தான் பூமியின் கடல்களில் இந்த அளவுக்கு நிறையத் தண்ணீர் இருக்கிறது. இப்படித்தான் விஞ்ஞானிகள் நீண்டகாலமாகக் கருதி வந்தனர்.

ஆனால் பூமியின் கடல்களில் உள்ள தண்ணீர் வால் நட்சத்திரங்கள் மூலம் வந்திருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்கும் வகையில்  இப்போது புதிய தகவல் கிடைத்துள்ளது.

பூமியில் உள்ள தண்ணீர் ஒரு விதமாகவும் வால் நட்சத்திரங்களில் (பனிக்கட்டி வடிவில் உள்ள) தண்ணீர் வேறு விதமாகவும் உள்ளதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

 ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரோசட்டா  விண்கலம்  67 P  என்னும் வால் நட்சத்திரத்தை  அண்மையில் துரத்திப் பிடித்தது. அந்த விண்கலத்திலிருந்து  நவம்பர் மாத மத்தியில் பிலே என்னும் ஆய்வுக் கலம் அந்த வால் நட்சத்திரத்தில் இறங்கியது.  பிலே ஆய்வுக் கலத்தில் வைக்கப்பட்ட பல நுட்பமான கருவிகளில் ஒன்று  மேற்படி வால் நட்சத்திரத்தின் பனிக்கட்டிகளிலிருந்து வெளிப்பட்ட ஆவி வடிவிலான நீரை ஆராய்ந்தது.

 ஆவி வடிவிலான தண்ணீர் ஆராயப்பட்ட போது வால் நட்சத்திரத்தில் அடங்கிய பனிக்கட்டியும் தண்ணீரும் ஆராயப்பட்டதாகவும் சொல்லலாம். அவ்விதம் ஆராய்ந்தபோது வால் நட்சத்திரத்தின் தண்ணீர் வேறுபட்டதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

 எந்த வகையில் வேறுபட்டது?
ஹைட்ரஜன் அணுவின் மையக் கருவில் ஒரு நியூட்ரானும் இருந்தால்
அதுவே டியூட்ரியம் ஆகும்
தண்ணீரை வேதியியல் நிபுணர்கள் H2O  என்று வருணிப்பார்கள். இரு பங்கு ஹைட்ரஜன்  வாயு, ஒரு பங்கு ஆக்சிஜன் வாயு ஆகிய இரண்டும் வேதியியல் முறையில் பிணைந்ததால் உண்டானதே தண்ணீர்.

இதில் ஹைட்ரஜன் அணுவைக் கவனிப்போம். பொதுவில் ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். மிக அபூர்வமாக ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் சேர்ந்து இருக்கும். இவ்வித ஹைட்ரஜன் அணுவுக்கு டியூட்ரியம் (Deuterium) என்று பெயர்.  (மிக மிக அபூர்வமாக ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் இரு நியூட்ரான்கள் இருப்பது உண்டு.)

டியூட்ரியமும் ஆக்சிஜன் அணுக்களுடன் சேர முடியும். ஆகவே தண்ணீர் மூலக்கூறுகளை (Molecules)  நுட்பமாக ஆராய்ந்தால் அவற்றில் டியூட்ரியமும் ஆக்சிஜனும் சேர்ந்த நீர் மூலக்கூறுகளும் இருக்க முடியும். சாதாரண                    ( நியூட்ரான் இல்லாத) ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த தண்ணீர் சாதாரணத் தண்ணீர். டியூட்ரியமும் ஆக்சிஜனும் சேர்ந்தது கன நீர் (Heavy water),

நாம் பயன்படுத்தும் தண்ணீரில் மிக அற்ப அளவுக்கு கன நீரும் கலந்துள்ளது. பூமியில் உள்ள தண்ணீரை ஆராய்ந்ததில் பத்தாயிரம் நீர் மூலக்கூறுகளில் மூன்று மட்டுமே கன நீராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் பிலே ஆராய்ந்த வால் நட்சத்திரத்தில் இது மூன்று மடங்காக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஆகவே பூமியில் உள்ள தண்ணீரில் பெரும் பகுதி வால் நட்சத்திரங்களிலிருந்து  கிடைத்திருக்கலாம் என்ற கொள்கை அடிபட்டுப் போகிறது.

வால் நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்ட் (Asteroid) எனப்படும் பறக்கும் விண்கற்களிலும் ஓரளவு பனிக்கட்டிகள் உண்டு. அஸ்டிராய்டுகளில் உள்ள பனிக்கட்டிகளில் ( தண்ணீரில்)  அடங்கிய கன நீரின் அளவு  பூமியில் உள்ள தண்ணீரில் அடங்கிய கன நீருடன் ஒத்திருக்கிறது.

 எனவே ஏதோ ஒரு காலத்தில் எண்ணற்ற அஸ்டிராய்டுகள் பூமியின் மீது வந்து விழுந்ததன் விளைவாக பூமியில் இந்த அளவுக்கு ஏராளமான தண்ணீர் உள்ளதாகக் கருத இடமிருக்கிறது.

 எனினும் பூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய கருத்துகள் எல்லாமே வெறும் ஊகத்தின் அடிப்படையில் தான் உள்ளன.


Dec 17, 2014

இந்தியாவின் சக்திமிக்க புதிய ராக்கெட்

Share Subscribe
இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு ராக்கெட்டை இந்தியா உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இது விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீர்ர்களை ஏற்றிச் செல்வதாக இருக்கலாம். இந்த ராக்கெட் இன்னும் முழுதாக உருப்பெறவில்லை என்றாலும் இந்த மாதம் 18 ஆம் தேதியன் விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது.

இது கிட்டத்தட்ட 14 மாடிக் கட்டடம் அளவுக்கு உயரமாக இருக்கும். எடை 630 டன். இப்போது நம்மிடம் உள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் போல இரண்டு மடங்கு பெரியது. புதிய ராக்கெட்டின் பெயர் ஜி..எஸ்.எல்.விமார்க் 3 (GSLV Mark-3) என்பதாகும்.

இதை ஒருமையில் ராக்கெட் என்று சொன்னாலும் உண்மையில் இது (Core) நான்கு ராக்கெட்டுகளின் தொகுப்பு ஆகும்பெரிய வடிவிலான மூல ராக்கெட். அதன் பக்கவாட்டில் இணைந்த இரு துணை ராக்கெட்டுகள்.(Boosters) மூல ராக்கெட்டின் மேற்புறத்தில் இணைந்த ஒரு ராக்கெட் அதை முகப்பு ராக்கெட் என்றும் கூறலாம்.

 தொகுப்பு ராக்கெட்டில் அடங்கிய ராக்கெட்டுகள் அடுத்தடுத்து எரிந்து தனியே கழன்று விழும் போது தொடர்ந்து எடை குறைந்து வரும் என்பதால் கடைசியில் முகப்பு ராக்கெட் அதி வேகத்தில் பாயும். அமெரிக்கா, ரஷியா, சீனா முதலான நாடுகளும் இவ்விதமான தொகுப்பு ராக்கெட்டுகளையே பயன்படுத்துகின்றன.

ராக்கெட் என்பது  ஒரு வாகனமே. அந்த வகையில் ராக்கெட்டானது செயற்கைக்கோளை தேவையான உயரத்துக்குக் கொண்டு செல்கிறது. ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் மற்றும் எரிபொருளைப் பொருத்து ஒரு ராக்கெட்டானது குறிப்பிட்ட எடையைச் சுமந்து செல்லும். அந்த வகையில் ராக்கெட்டெல்லாம் ஒரே திறன் கொண்டவையல்ல.

இந்தியா 1994 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தி வரும் பி.எஸ்.எல்.வி (PSLV) ராக்கெட் சுமாரான திறன் கொண்டதே. இது ஒரே ஒரு தடவை மிக அதிகபட்சமாக 1860 கிலோ எடையைச் சுமந்து சென்றது.  . மற்றபடி இது சுமார் ஒன்றரை டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியதே.
மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி ராக்கெட்
ஆனால் நமக்கு இது போதாது. சுமார் 4 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய சக்தி மிக்க ராக்கெட் தேவை. இப்படியான ராக்கெட்டை உருவாக்க நாம் பல ஆண்டுகளாகப் பெரும் பாடுபட்டு வருகிறோம். அப்படியான ராக்கெட் ஏன் தேவை என்பதற்குக் காரணம் உண்டு.

நாம் தயாரிக்கின்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் எடை மூன்று டன்னுக்கும் அதிகம். இவற்றைச் செலுத்த நம்மிடம் தகுந்த ராக்கெட் இல்லாததால் ஒவ்வொரு தடவையும் அந்த செயற்கைக்கோளை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று ஐரோப்பாவின் ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்தச் செய்கிறோம்

இப்போது ஜி.எஸ்..ல்.வி- மார்க் 3 ராக்கெட் வெற்றி பெற்றால் இவ்வித செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீர்ர்களையும் உயரே அனுப்ப முடியும்.

இங்கு இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். எந்த ஒரு ராக்கெட்டுக்கும் எடை சுமக்கும் விஷயத்தில் இரண்டு விதமான திறன் உண்டு. இதை சற்று விளக்க வேண்டும். சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்வதானால் ஒரு லாரியில் 10 டன் ஏற்றிச் செல்ல முடியும். ஆனால் அது  நாகர்கோவில் வரை செல்வதானால் 4 டன் தான் ஏற்றிச் செல்ல முடியும் என்ற நிலைமை கிடையாது. ஆனால் ராக்கெட் விஷயத்தில் இப்படியான நிலைமை உண்டு.

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக்கோளைச் செலுத்த வேண்டும். அல்லது அந்த உயரத்துக்கு ஒரு விண்கலத்தைச் சுமந்து செல்ல வேண்டும் என்றால் அந்த ராக்கெட்டினால் 10 டன் வரை சுமந்து செல்ல இயலும். ஆனால் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை செலுத்த வேண்டுமானால் அந்த ராக்கெட்டினால் சுமார் நான்கு முதல் ஐந்து டன் எடையைத் தான் சுமந்து செல்ல முடியும். எனினும் கிரையோஜெனிக் (Cryogenic) எஞ்சின் இருந்தால் தான் இது சாத்தியம்

நமக்கு ஹைட்ரஜன் வாயு தெரியும். ஆக்சிஜன் வாயு தெரியும். ராக்கெட்டின் பின்புறத்தில் உள்ள எஞ்சினில் இந்த இரண்டு வாயுக்களும் சேர்ந்து எரியும்படி செய்தால் மிக அதிகபட்ச உந்து திறன் கிடைக்கும். எடை மிக்க செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தை உயரே செலுத்த இவ்வித எஞ்சின் அவசியம் தேவை. பொதுவில் முகப்பில் உள்ள ராக்கெட்டில் இந்த எஞ்சின் பொருத்தப்படும்.
புதிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மார்க் 3
இந்த இரண்டு வாயுக்களும் ஏராளமான அளவில் தேவை என்பதால் ராக்கெட்டில் பெரிய சிலிண்டர்களில் வைத்து எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. ஆனால் இந்த இரண்டு வாயுக்களையும் தனித்தனியே கடுமையான அளவுக்கு குளிர்வித்தால் திரவமாகி விடும். ராக்கெட் எஞ்சினில் ஒன்று சேர்ந்து எரிகின்ற வரையில் இவை தனித்தனி தொட்டிகளில் அதே குளிர் நிலையில் திரவ வடிவில் இருந்தாக வேண்டும்.

இப்படி கடுமையாகக் குளிர்விக்கப்பட்ட திரவ ஆக்சிஜன் திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பயன்படுத்தும் எஞ்சினே கிரையோஜெனிக் எஞ்சின் எனப்படுகிறது. (கிரையோ என்றால் கடும் குளிர்விப்பு என்று பொருள்)

இவ்வித எஞ்சினை உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலானது. உலகில் முதன் முதலில் (1957) செயற்கைக்கோளைச் செலுத்திய அத்துடன் முதல் முதலில் (1961) மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய ரஷியா 1987 ஆம் ஆண்டில் தான் கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்குவதில் வெற்றி கண்டது. இந்தியா சொந்தமாக இந்த வகை எஞ்சினை உருவாக்குவதற்கு நீண்ட காலம் பிடித்ததில் வியப்பில்லை.

எனினும் இந்த மாத பிற்பகுதியில் உயரே செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் முகப்பில் கிரையோஜெனிக் எஞ்சின் இடம் பெறாது. இந்த எஞ்சின் இன்னும் சோதிக்கப்படும் கட்டத்தில் உள்ளது. எனவே  டம்மி தான் பொருத்தப்படும்.  புதிய ராக்கெட்டின் ஸ்திரத்தன்மை, வானில் பாயும் திறன், எடை சுமந்து செல்லும் திறன் ஆகியவற்றை சோதிப்பதே இப்போதைய நோக்கமாகும். ஆகவே இது எந்த செயற்கைக்கோளையும்  உயரே செலுத்தாது.

எனினும் அது சுமார் 4 டன் எடையை சுமந்து செல்கிறதா என்பதை சோதித்தாக வேண்டுமே. முதல் பயணம் என்பதால் பெரும் செலவில் உருவாக்கப்படும் செயற்கைக்கோளை அந்த ராக்கெட்டின் முகப்பில் வைப்பது உசிதமல்ல. அதற்குப் பதில் சுமார் மூன்றரை டன் எடை கொண்ட ஒரு கூடு (Module) வைக்கப்பட இருக்கிறது.இது 2.6 மீட்டர் உயரமும் 3.1 மீட்டர் அகலமும் கொண்டது
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் வைத்து செலுத்தப்ப்ட இருக்கும் கூடு
இந்தக் கூடு எதிர்காலத்தில் இந்திய விண்வெளி வீர்ர்கள் இருவர் ஏறிச் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தின் மாடல் போன்றது. இதில் அவசியமான சில கருவிகள் மட்டுமே இருக்கும். ராக்கெட் குறிப்பிட்ட உயரம் வெற்றிகரமாகப் பறந்து சென்ற பின் இந்த கூடு மட்டும் தனியே பிரிந்து வங்கக்கடலில் பாரசூட் மூலம் இறங்கும். கீழே இறங்கும் போது அந்த கூடு தீப்பிடிக்காமல் தடுக்க அதன் வெளிப்புறத்தில் வெப்பத் தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாடு நன்கு செயல்படுகிறதா என்பதும் இப்போது சோதிக்கப்படும்
.

எனினும் இதை வைத்து இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கட்டத்தை நெருங்கி விட்டதாக  நினைத்தால் தவறு. ராக்கெட்டின் முகப்பில் மூன்றரை டன் எடை கொண்ட எதையாவது வைத்து அனுப்பியாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த கூடு வைக்கப்படுகிறது. மற்றபடி இந்திய விண்வெளி வீர்ரை உயரே அனுப்புவதற்கு நாம் பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். அதற்குக் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகலாம்.

( என்னுடைய இக்கட்டுரை தி ஹிந்து தமிழ் பதிப்பில் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானதாகும்)

UPDATE: 19th Dec. 
GSLV Mark 3  என்று அழைக்க்ப்பட்டு பின்னர் LVM 3  என்று பெயர் மாற்றப்பட்ட இந்தியாவின் சக்தி மிக்க ராக்கெட் வியாழக்கிழமை காலை விண்வெளியில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. அதன் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் கூடு பின்னர் திட்டமிட்டபடி தனியே பிரிந்து வங்கக் கடலில் விழுந்தது. அது பின்னர் மீட்கப்பட்டது.