Nov 28, 2011

கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்

Share Subscribe
சீனா அண்மையில் இந்துமாக் கடலின் ஒரு பகுதியில் கடலடித் தரையில் கிடக்கும் உலோக உருண்டைகளை எடுப்பதற்கு உரிமை பெற்றது. இந்தியா இதை இந்துமாக் கடலில் காலுன்ற சீனா மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியாகக் கருதுகிறது. சீனாவின் நோக்கம் குறித்து இந்தியா அவநம்பிக்கை கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வித உலோக உருண்டைகள் சீனாவுக்குக் கிழக்கே உள்ள பசிபிக் கடலுக்கு அடியிலும் உள்ளன என்றாலும் சீனா மெனக்கெட்டு இந்துமாக் கடலைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துமாக் கடலில் சீனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையை ஒட்டி அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமாக் கடலில் உலோக உருண்டைகளை அள்ளி எடுப்பதற்கு உரிமை பெற்றுவிட்டது. சாம்பிளுக்கு ஓரளவு உலோக உருண்டைகளையும் எடுத்துள்ளது. இந்துமாக் கடலில் இந்தியா உரிமை பெற்றுள்ள கடல் பகுதியானது கன்னியாகுமரிக்குத் தெற்கே 2500 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது (படத்தில் வட்டமிட்ட பகுதி).

இவை ஒருபுறம் இருக்க, கடலடித் தரையில் எவ்விதம் உலோக உருண்டைகள் தோன்றின? அவை எந்த அளவுக்கு இருக்கின்றன? யாருக்குச் சொந்தம்? அள்ளி எடுப்பதற்கு யார் உரிமை வழங்குகிறார்கள்? என்ற விஷயங்களைக் கவனிப்போம்.

தாமிரம்(Copper), நிக்கல்(Nickel), மாங்கனீஸ் (Manganese), கோபால்ட்(Cobalt) போன்ற உலோகங்கள் அடங்கிய தாதுக்களை வெட்டி எடுக்கப் பல சமயங்களிலும் சிரமப்பட்டு ஆழமான சுரங்கங்களைத் தோண்ட வேண்டியிருக்கிறது. அப்படியின்றி இந்த உலோகத் தாதுக்கள் அடங்கிய உருண்டைகள், பல லட்சம் உருளைக் கிழங்கு மூட்டைகளைத் தரையில் கொட்டி வைத்தது போன்று கடலுக்கு அடியில் கிடக்கின்றன என்றால் அது மிக வியப்பான விஷயமே. ஆனால் இவை இதுவரை பெரிய அளவில் கடலிலிருந்து மேலே கொண்டு வரப்படவில்லை. மிக ஆழத்தில் இவை கிடக்கின்றன என்பது இதற்கு ஒரு காரணம்.

 கடலடித் தரையில் கிடக்கும்
உலோக உருண்டைகள்
ரஷியாவுக்கு வடக்கே உள்ள காரா கடலில் தான் 1868 ஆம் ஆண்டில் முதன் முதலில் கடலடி உலோக உருண்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த சேலஞ்சர் ஆராய்ச்சிக் கப்பல் 1872 முதல் 1876 வரை உலகின் பல கடல்களுக்கும் சென்று ஆராய்ந்த போது பல கடல்களிலும் இவ்விதம் உலோக உருண்டைகள் கிடப்பது தெரிய வந்தது.

கடலடி உலோக உருண்டைகள் பல கோடி ஆண்டுகளில் மெல்ல மெல்ல உருவானவை. கடல் நீரில் அடங்கிய மிக நுண்ணிய துணுக்குகள் நாளா வட்டத்தில் ஒன்று சேர்ந்து முதலில் சிறிய உருண்டையாக உருப் பெறுகின்றன. பின்னர் இதன் மீது மேலும் மேலும் படலங்கள் தோன்றுகின்றன.ஒரு மில்லி மீட்டர் குறுக்களவிலான படலம் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

உலோக் உருண்டையின்
குறுக்கு வெட்டுத்
தோற்றம்
கடலடி உலோக உருண்டை ஒன்றை எடுத்துக் குறுக்காக வெட்டினால் அது வெங்காயத்தைக் குறுக்காக வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியில் காணப்படுகிறது.

உலோக உருண்டைகள் எல்லாமே ஒரே சைஸில் இருப்பது கிடையாது. இவை வெவ்வேறு சைஸில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன். தவிர, கடலடியில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் இவை அதிகம் கிடைக்கின்றன. ஆனால் இவற்றில் உலோகச் செறிவு குறைவு. கடலடி சமவெளியில் உள்ளவை அதிக செறிவு கொண்டவை (கடலுக்கு அடியில் மலைகள், பள்ளத்தாக்கு, சமவெளி, எரிமலை என எல்லாமே உண்டு).

பல்வேறான தொழில் நுட்பப் பிரச்சினைகள் காரணமாக் 1960 களில் தான் இவற்றைக் கடலுக்கு அடியிலிருந்து எடுப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சோதனை அடிப்படையில் இந்த உலோக உருண்டைகளை எடுத்து ஆராய்ந்தன.

இந்திய ஆராய்ச்சிக் கப்பல் சேகரித்த உலோக உருண்டைகள்
உலோக உருண்டைகளில் மாங்கனீஸ் 15 முதல் 30 சதவிகிதம், நிக்கல் 1 முதல் 2 சதவிகிதம், தாமிரம் 1 சதவிகிதம் கோபால்ட் 0.3 சதவிகிதம் அடங்கியுள்ளதாகத் தெரிய வந்தது. இதற்கிடையே இந்தியாவும் இதில் அக்கறை காட்டலாயிற்று. இந்தியாவின் கவேஷனி(Gaveshani) என்னும் பெயர் கொண்ட ஆராய்ச்சிக் கப்பல் 1981 ஆம் ஆண்டிலேயே இவ்விதம் கடலடி உலோக உருண்டைகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியது.

கவேஷினி கப்பல்
கரையோரப் பகுதிகள் நீங்கலாக, மற்றபடி கடல்கள அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை. ஆகவே கடலடி வளங்களை பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்துக்கு விடலாகாது என இந்தியாவும் மற்ற வளரும் நாடுகளும் உரத்த குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து ஐ.நா. ஆதரவில் சர்வதேச் கடலடி அதிகார ஆணையம் நிறுவப்பட்டது. கடலடி உலோக உருண்டைகளை எடுப்பதில் பல ஆண்டுகள் முனைப்பு காட்டி வந்த நாடுகள் முன்னோடி நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்டன. இப்படியான நாடுகளுக்கு உலகின் கடல்களில் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலான கடல் பகுதி ஒதுக்கப்படும். இந்த ஏற்பாட்டின் கீழ் இந்தியாவுக்கு கன்னியாகுமரிக்குத் தெற்கே 2500 கிலோ மீட்டர் தொலைவில் இந்துமாக் கடலில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.

 சாகர் நிதி கப்பல்
இந்தியாவின் பல கப்பல்கள் இந்துமாக் கடலிலிருந்து நிறையவே கடலடி உலோக உருண்டைகளை சேகரித்துள்ளன. இதற்கென விசேஷ கடலடி யந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் அமைந்துள்ள இந்திய தேசிய கடலாராய்ச்சி தொழில் நுட்பக் கழகம் (National Institute of Ocean Technology) உருவாக்கியுள்ள ROSUB 6000 என்னும் ஆழ்கடல் யந்திரக் கருவியானது கடந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் இந்துமாக் கடலில் 5289 மீட்டர் ஆழத்துக்கு இறங்கி கடலடி உலோக உருண்டைகளை சேகரித்தது. இது 6000 மீட்டர் ஆழத்திலும் செயல்படும் திறன் கொண்டதாகும்.

சாகர் நிதி(Sagar Nidhi) என்னும் கடலாராய்ச்சிக் கப்பலிலிருந்து ROSUB 6000 கடலுக்குள் இறக்கப்பட்டது. மேலிருந்தபடியே ஆழ்கடல் யந்திரக் கருவியை இயக்க முடியும்.

ROSUB 6000
மனிதனால் கடலுக்குள் குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே செல்ல முடியாது. கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரித்துக் கொண்டே போகும். நாம் நிலத்தில் இருக்கும் போது நம்மைக் காற்று அழுத்துகிறது. பழகிப் போனதால் நாம் இதை உணருவதில்லை. கடலுக்குள் இறங்கும் போது நீரின் எடையும் சேர்த்து அழுத்தும். கடலுக்குள் இயங்கும் சப்மரீன் கப்பல்கள் 6000 மீட்ட்ர் ஆழத்துக்குப் போக முடியாது. அப்படிப் போக நேர்ந்தால் அப்பளம் போல நொறுங்கித் தூள் தூளாகி விடும்.

இது ஒருபுறம் இருக்க, மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் கடலடி உலோக உருண்டைகளை எடுப்பது குறித்து நீண்ட காலமாக அக்கறை காட்டவில்லை. சர்வதேச சந்தையில் நிக்கல், தாமிரம் ஆகியவற்றின் விலை குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்ந்தால் தான் கடலடி உலோக உருண்டைகளை எடுப்பது கட்டுபடியாகும் என்று அவை கருதியதே இதற்குக் காரணம்.

ஆனால் கடந்த ஆண்டில் சீனா மேற்கொண்ட ஒரு நடவடிக்கையானது கடலடி உலோக உருண்டைகள் மீது கட்டாயமாக கவனத்தைத் திருப்பியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Nov 25, 2011

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

Share Subscribe
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பலருக்கும் செவ்வாய் கிரகத்தைக் கண்டால் ஆகாது. செவ்வாய் தீங்கு விளைவிக்கின்ற கிரகம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். செவ்வாய் கிரகத்தைப் பிடிக்காது என்பதால் செவவாய்க் கிழமையைக் கூட ஒதுக்கிவிடுவார்கள். அக்கிழமையில் புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்ப மாட்டாகள். ஆனால் வானவியல் நிபுணர்களுக்கும் விண்வெளித் துறையினருக்கும் செவ்வாய் மிகவும் வேண்டப்பட்ட கிரகமாகும்.

 நீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை.
சிவந்த நிறம் செவ்வாயின் சுற்றுப்பாதை.
டெலஸ்கோப் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதிகம் ஆராயப்பட்ட கிரகம் செவ்வாய் தான். வாய்ப்பான சமயத்தில் செவ்வாய் கிரகத்தை விடிய விடியத் தொடந்து ஆராய்ந்து கொண்டே இருக்கலாம். மனிதன் வேறு ஒரு கிரகத்துக்கு போக விரும்பினால செவ்வாய் கிரகம் ஒன்றுக்குத் தான் செல்ல முடியும். ஆகவே தான் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய்க்குத் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டன. இப்போது கியூரியாசிடி விண்கலம் அனுப்பப்படுகிறது.

மற்ற கிரகங்களை விட செவ்வாயைப் பற்றித் தான் நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும் செவ்வாயைப் பின்புலனாக வைத்து நிறைய திரைப்படங்களை எடுத்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியும் செவ்வாயும் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளில் அமைந்துள்ளன. இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாயும் ஒன்று. வானவியலின்படி செவ்வாய் இப்போது சிம்ம ராசியில் உள்ளது. நீங்கள் அதிகாலை நான்கு மணி வாக்கில் எழுந்து வானைப் பார்த்தால் செவ்வாய் கிரகம் தலைக்கு மேலே தெரியும். சிவந்த நிறத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரியும். அதன் நிறத்தை வைத்துத் தான் அக்கிரகத்துக்கு செவ்வாய் என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.

வடிவத்தில் செவ்வாய் கிரகம் பூமியை விடச் சிறியது. செவ்வாய் கிரகத்தில் மலைகள் உள்ளன. வட்ட வடிவப் பள்ளங்கள் நிறைய உள்ளன. நதிகள் ஓடிய தடங்கள் உண்டு. ஆனால் நதிகள் இல்லை. செவ்வாய் கிரகம் வெறும் பொட்டல். உயிரினம் ஏதுமில்லை.

இடது புறம் பூமி.
வலது புறம் உள்ளது செவ்வாய்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள அவிந்து போன எரிமலை எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானது. சூரிய மண்டலத்திலேயே இது தான் மிக உயரமான சிகரமாகும்.

பல்வேறு காரணங்களால் மனிதன் புதன் கிரகத்தில் அல்லது வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தில் போய்க் குடியேற முடியாது. சந்திரனும் ஒத்து வராது. சந்திரனில் பகல் என்பது இரண்டு வாரம். இரவும் அப்படித்தான். இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகத்தில் பகல் என்பது 12 மணி நேரமே. இரவும் அதே போலத்தான். தவிர,செவ்வாய் கிரகத்தில் காற்று மண்டலம் உள்ளது. சந்திரனில் இல்லை.

 செவ்வாயில் சூரிய அஸ்தமனம்.
ஸ்பிரிட் ஆய்வுக்க்லம் எடுத்த படம்.
பூமியின் காற்று மண்டலத்தில் நாம் சுவாசிப்பதற்கு மிக அவசியமான ஆக்சிஜன் வாயு 21 சதவிகித அளவுக்கு உள்ளது. செவ்வாயில் ஆக்சிஜன் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு. கார்பன் டையாக்சைட் 95 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நவீன தொழில் நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி செவ்வாயின் கார்பன் டையாக்சைடிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துப் பயன்படுத்தலாம். தவிர, பெரிய பசுமைக் குடில்களை அமைத்து அவற்றுக்குள் செடி கொடிகளை வளர்த்தால் ஆக்சிஜன் கிடைக்கும்.

 செவ்வாயின் நிலப்பரப்பு.
தரை சிவப்பாக உள்ளதைக் கவனிக்கவும்.
செவ்வாய் கிரகத்தில் என்றோ பெரிய நதிகள் ஓடியதற்கான அடையாளங்கள் உள்ளன என்றாலும் இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை. எனினும் செவ்வாயின் வட துருவப் பகுதியில் நிலத்துக்கு அடியில் உறைந்த நிலையில் - பனிக்கட்டி வடிவில் - நீர் உள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற முடியும். எனினும் வெளிக்காற்று நுழைய முடியாத, அத்துடன் வலுவான கூரை கொண்ட, கூட்டுக்குள் தான் வாழ இயலும். செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தியானது அல்ல என்பதால் சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரக்கூடிய ஆபத்தான கதிர்களிலிருந்து பாதுகாப்பு தேவை. ஆகவே தான் இப்படி கூட்டுக்குள் வாழ்ந்தாக வேண்டும்.

 செவ்வாயில் இப்படியாக நிறுத்தப்பட்டுள்ள
கூட்டுக்குள் தான் வாழ வேண்டும் . படம் : நாஸா
பூமி நல்ல அடர்த்தியான காற்று மண்டலத்தைப் பெற்றுள்ளது என்பதால் அக்காற்று மண்டலம் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. அத்துடன் விண்வெளியிலிருந்து வந்து விழும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் உராய்வு காரணமாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இப்படியான பாதுக்காப்பை செவ்வாயின் காற்று மண்டலம் அளிக்காது.

செவ்வாயில் காற்று மண்டலத்தின் அடர்த்தியைத் திட்டமிட்ட முறையில் செயற்கையாக அதிகரிக்க முடியும் என்றும் காற்று மண்டல ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்க முடியும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.  இதற்கு Terraforming என்று பெயர். இதற்கான பல வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிவியல் ரீதியில் சாத்தியமே. செவ்வாயின் வட துருவப் பகுதியிலிருந்து தண்ணீரைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமே என்று கூறப்படுகிறது.

 செவவாய் கிரகம் இப்போது
செவ்வாய் கிரகத்தில் மேலும் இரு பிரச்சினைகள் உள்ளன். பூமியில் உள்ளது மாதிரியில் அங்கு வெயில் கிடையாது. குளிர், கடும் குளிர் என இந்த இரண்டைத்தான் காண முடியும். சில சமயங்களில் செவ்வாயில் புழுதிப் புயல் தோன்றும். வானமே தெரியாது. கிரகம் முழுவதையும் சூழ்ந்து வீசுகின்ற இப்புயல பல வாரங்களுக்கு நீடிக்கும்.

செவ்வாயின் காற்று மண்டலத்தை
மாற்றியமைத்தால் இப்படி காட்சி அளிக்குமாம்
இவை அனைத்தையும் சமாளித்து செவ்வாயில் வாழ முடியலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர் .எவ்விதமான கூடாரங்கள் தேவை, ஆக்சிஜனை எப்படி உற்பத்தி செய்து கொள்வது, செடி கொடிகளை எவ்விதம் வளர்ப்பது என பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான திட்டங்கள் ஏட்டளவில் தயாரிக்கப்பட்டுத் தயாராக உள்ளன. தனியார் துறை நிபுணர்களும் பல திட்டங்களை தீட்டியிருக்கிறார்கள்.

செவ்வாயில் திட்டமிட்ட ரீதியில் மககளைக் குடியமர்த்த வேண்டும் என்று கூறும் தனியார் அமைப்புகள் பல உள்ளன. Mars Society, Red Colony போன்றவை அவற்றில் அடங்கும். செவ்வாயில் மனிதன் குடியேறுவதானால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறி கடந்த காலத்தில் எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நிபுணாகள் எழுதிய பல நூல்களும் வெளியாகியுள்ளன். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நோக்கில் தான் செவ்வாய் கிரகம் மேலும் மேலும் விரிவாக ஆராயப்படுகிறது.

செவ்வாய்க்குச் செல்வதற்கான ராக்கெட்டுகளையும் விண்கலங்களை உருவாக்கி மற்ற ஏற்பாடுகளையும் செய்வதானால் பல லட்சம் கோடி ரூபாய் தேவை. இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவால் மட்டுமே செவ்வாய்ப் பயணத் திட்டத்தை மேற்கொள்ள இயலும். அமெரிக்காவுக்கு பல நிதிப் பிரச்சினைகள் இருக்கும் போது செவ்வாய்ப் பயணத் திட்டத்துக்கு இப்போது அவசரம் ஏதுமில்லை தான்.

ஆனால் நாட்டின் கௌரவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று நினைத்தால் செலவு அம்சம் பெரிதாகத் தெரியாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (இப்போதைய ரஷியாவையும் மற்றும் பல நாடுகளையும் உள்ளடக்கிய பெரிய நாடு) இடையே கடும் போட்டியும் விரோதமும் நீடித்து வந்தது. அப்போது சோவியத் யூனியன் விண்வெளியில் மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்தி உலகை அதிசயிக்க வைத்தது. அவ்வித நிலையில் அமெரிக்கா மீதான மதிப்பு குறையலாயிற்று.

அக்காலகட்டத்தில் தான் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சாதனை நிகழ்த்துவோம் என அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1961 ஆம் ஆண்டில் சபதம் ஏற்றார். சோவியத் யூனியனை மிஞ்ச வேண்டும் என்ற வேகத்தில் அமெரிக்க அரசு பெரும் பணத்தை ஒதுக்கிய போது அமெரிக்க சட்டமன்றம் உற்சாகத்துடன் அனுமதி அளித்தது. நாட்டு கௌரவமே முக்கியம் என்று கருதி மக்களும் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு பெரும் பணம் செலவிடப்படுவதை ஆட்சேபிக்கவில்லை.

ஆனால் இப்போதுள்ள நிலையில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்குப் பெரும் பணம் ஒதுக்குவதை அமெரிக்க சட்டமன்றமோ, அமெரிக்க மக்களோ ஆதரிக்க மாட்டார்கள். அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

சீனா இப்போது விண்வெளித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. வருகிற ஆண்டுகளில் சீனா செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பப்போவதாக அறிவித்தால் உடனே அமெரிக்கா வீறு கொண்டு எழுந்து சீனாவை முந்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செவ்வாய்ப் பயணத் திட்டத்தை அவசர அடிப்ப்டையில் மேற்கொள்ள முற்படலாம்.

செவ்வாய் கிரகம் பற்றிய தொடரின் மற்ற பதிவுகள்:

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி?
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?

Nov 24, 2011

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?

Share Subscribe
செவ்வாய் கிரகத்தில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதலாவது வாரத்தில் இறங்கி ஆராயப் போகும் கியூரியாசிடி உண்மையில் நடமாடும ஆராய்ச்சிக்கூடம் (Mars Science Laboratory). அதை ராட்சத ரோபாட் என்றும் வருணிக்கலாம். மனிதனுக்கு உறுப்புகள் உள்ளது மாதிரி அதற்கும் பல உறுப்புகள் உண்டு. எவரும் மலைக்கத்தக்க அளவில் அதன் உயரம் சுமார் 10 அடி. 6 சக்கரங்கள் வடிவில் உறுதியான கால்கள் உள்ளன.

கியூரியாசிடி - ஓவியர் தீட்டிய படம்

மேல் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கும் தண்டின் உச்சியில் ஒரு நெற்றிக் கண். அதற்கு சற்று கீழே காமிரா வடிவில் இரு கண்கள்.. சுற்று வட்டாரத்தை நோட்டம் விடுவதற்கான வகையில் தண்டின் உச்சிப் பகுதி எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பக்கூடியது.

மூன்று கண்கள் போதாதென அந்த ரோபாட்டின் வெவேறு பகுதிகளில் மேலும் பல காமிராக்கள். முன் சக்கரங்களுக்கு சற்று மேலே இரு காமிராக்கள். பின்புறத்தில் இதே போல இரு புறங்களிலும் இரு காமிராக்கள். வழியறிந்து செல்ல இவை உதவும், வழியில் தடங்கல் இருந்தால் முன் சக்கர காமிராக்கள் உஷார் படுத்தும்.

குனிந்து கல்லையும் மண்ணையும் அள்ளுவதற்கு கிரேன் வடிவில் ஒரு வலுவான கரம். இக்கரத்தின் நுனிப் பகுதியிலும் ஒரு காமிரா உண்டு. கரத்தின் நுனிப் பகுதியில் ஆல்பா கதிர்களையும், எக்ஸ் கதிர்களையும் வெளிப்படுத்தும் கருவி உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கல் மீது இக்கருவி இந்தக் கதிர்களைப் பாய்ச்சும் போது அக்கல்லின் தன்மை, அதில் அடங்கிய மூலகங்கள் ஆகியன தெரிய வரும்.

குறிப்பிட்ட கல்லைத் தேர்ந்தெடுத்து ஆராய வேண்டுமா என்று விஞ்ஞானிகள் முடிவு செய்ய இக்கருவி உதவும். நீண்ட கரத்தின் நுனியில் துளையிடும் கருவியும் உண்டு. பாறை அல்லது நிலத்தில் துளையிட்டு பொடி வடிவில் சாம்பிள்கள் சேகரிக்கப்ப்டும். அவை ஆராய்ச்சிகூடத்தில் மேலும் பரிசோதிப்பதற்கான பகுதிக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அப்பொடி சலிக்கப்பட்டு அடுப்புக்குள் போடப்படும். சாம்பிள்கள் 1000 டிகிரி அளவுக்கு சூடேற்றப்பட்டு ஆராயப்படும்.

செவ்வாய் கிரக மண்ணையும் கல்லையும் ஆராய்ந்து தகவல் சேகரிப்பதில் நெற்றிக் கண்ணுக்கு முக்கிய பங்கு உண்டு. அதிலிருந்து கிளம்பும் லேசர் ஒளிக் கற்றையானது சுமார் 7 மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கற்களைத் தாக்கி சுட்டெரித்து விடும். கல் தீப்பற்றி எரியும் போது எழும் நெருப்பையும் வெளிப்படும் வாயுக்களையும் நெற்றிக் கண் அருகில் உள்ள ஆய்வுக் கருவிகள் பகுத்து ஆராய்ந்து அக்கல்லில் அடங்கிய வேதியல் பொருட்கள் யாவை என்று கண்டறிந்து கொள்ளும்.

 செவ்வாயின் காற்று மண்டலம் என்பது பெரிதும் கார்பன் டையாக்சைட் வாயுவினால் ஆனது. இதில் எந்த அளவுக்கு ஆக்சிஜன் அடங்கியுள்ளது, காற்று மண்டலத்தில் மீதேன் வாயு உள்ளதா என்று ஆராயும் கருவிகளும் இந்த நடமாடும் ஆராய்ச்சிக்கூட்த்தில் உள்ளன. ஹைட்ரஜன் வாயு, ஐஸ், தண்ணீர் ஆகியன உள்ளனவா என்று ஒரு தனி கருவி ஆராயும்.

நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் மெதுவாகத் தான் நகர்ந்து செல்லும். இதன் நடமாட்டத்துக்கும் மற்றும் கருவிகள் இயங்குவதற்கும் மின்சாரம் தேவை. ஆகவே கியூரியாசிடியில் ஐந்து கிலோ புளூட்டோனியம்-238 என்ற அணுசக்திப் பொருள் வைக்கப்பட்டுள்ளது. இது ஓயாது வெப்ப வடிவில் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த வெப்பம் மின்சாரமாக மாற்றப்படும். செவ்வாயில் இரவு நேரத்தில் கடும் குளிர் இருக்கும். அக்குளிர் கியூரியாசிடியில் உள்ள கருவிகளைப் பாதிக்காமல் இருக்க அணுசக்திப் பொருள் வெளிப்படுத்தும் வெப்பத்தில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.

 பாத் ஃபைண்டர் மற்றும் ஆப்பர்சூனிடி மாடல்கள்
விண்வெளி யுகம் பிறந்ததிலிருந்து எந்த ஒரு கிரகத்துக்கும் இவ்வளவு நுட்பமான, இவ்வளவு வசதி கொண்ட, இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கூடம் அனுப்பப்ப்ட்டது கிடையாது.

சந்திரனுக்கு 1969 ல் தொடங்கி பல விண்வெளி வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. அவர்கள் சேகரித்து வந்த கல்லும் மண்ணும் பின்னர் ஆராய்ச்சிக்கூடங்களில் வைத்து ஆராயப்பட்டன. இத்துடன் ஒப்பிட்டால் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக் கலமானது நிபுணர்கள் செய்ய வேண்டிய பல பணிகளைத் தானே செய்து அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை பூமிக்கு அனுப்பப்போகிறது.

கியூரியாசிடி மேற்கொள்ள இருக்கும் அத்தனை ஆராய்ச்சிகளும் செவ்வாயில் Gale Crater எனப்படும் வட்ட வடிவப் பள்ளம் அமைந்த பகுதியில் நடைபெறும். கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய விண்கல் செவ்வாயைத் தாக்கிய போது இந்த வட்ட வடிவப் பள்ளம் தோன்றியது. 154 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட இந்த வட்ட வடிவப் பள்ளத்தின் நடுவே ஐந்து கிலோ மீட்டர் உயரம் கொண்ட மலையும் உள்ளது. 100 விஞ்ஞானிகள் கூடி ஆராய்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். இங்கு தான் நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் போய் இறங்கும்.

Gale Crater எனப்படும் வட்ட வடிவப் பள்ளம்.
கருப்புக் கோட்டினால் வட்டமிடப்பட்ட
இடத்தில் தான் கியூரியாசிடி போய் இறங்கும்.
செவ்வாய் கிரகத்தில் ஏதோ ஒரு காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாகத் தோன்றுகிறது. இந்த வட்ட வடிவப் பள்ளத்தில் என்றேனும் தண்ணீர் தேங்கியிருந்திருக்குமானால் அங்குள்ள நிலப் பகுதியில் நுண்ணியிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆகவே தான் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கியூரியாசிடி 23 மாத காலம் இப்பகுதியில் அங்குமிங்கும் 20 கிலோ மீட்டர் நடமாடும்.

செவவாய் கிரகத்தை சுற்றிக்கொண்டிருக்கும்
ஒடிசி விண்கலம்
கியூரியாசிடியின் மூளை என்று சொல்லத்தக்க வகையில் அதனுள் இரண்டு கம்ப்யூட்டர்கள் உண்டு. இவை எல்லாத் தகவல்களையும் சேகரித்து செவ்வாய் கிரகத்தை ஏற்கெனவே தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோளுக்கு அனுப்பும். செயற்கைக்கோளிலிருந்து அவை பூமியில் ஆங்காங்கு நாஸா அமைத்துள்ள கேந்திரங்களுக்கு வந்து சேரும். சிக்னல்கள் நேர் கோட்டில் செல்பவை. செவ்வாய் கிரகம் தனது அச்சில் சுழல்கிறது.  பூமியும் தனது அச்சில் சுழல்கிறது. ஆகவே கியூரியாசிடி இருக்கின்ற இடம் அமெரிக்காவுக்கு நேர் எதிரே இல்லாமல் போகலாம். ஆகவே தான் செயற்கைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளும் ஏற்பாடு பின்பற்றப்படும்.

கியூரியாசிடியை செவ்வாய்க்கு அனுப்பி பரிசோதனைகளை நடத்துவதில் நான்கு பிரதான நோக்கங்கள் உள்ளன. செவ்வாயில் என்றேனும் நுண்ணுயிர்கள் தோன்ற வாய்ப்பு இருந்திருக்குமா? செவ்வாயில் நிலவும் பருவ நிலைமைகள் எத்தன்மை கொண்டவை? செவவாயின் கல், மண், நில அமைப்பு ஆகியவை எப்படிப்பட்டவை? செவ்வாய்க்கு எதிர்காலத்தில் மனிதன் செல்வதற்கு எந்த அளவில் உகந்த நிலைமைகள் உள்ளன? நடமாடும் ஆராய்ச்சிக் கூடம் அனுப்பும் தகவல்கள் மூலம் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளில் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய் கிரகத்துக்குத்தான் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டுள்ளன. 1960 களில் அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் செவ்வாய் பக்கமும் திரும்பியது.

முதல் கட்டமாக செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் இறங்க முயலவில்லை. நெடுஞ்சாலையில் காரில் வேகமாகச் செல்லும் போது சாலை ஓரமாக உள்ள குக்கிராமத்தின் குடிசைகளை போட்டோ எடுப்பது மாதிரியில் செவ்வாயைக் கடந்து சென்ற விண்கலங்கள் தொலைவில் இருந்தபடி செவ்வாய் கிரகத்தைப் படம் பிடித்து அனுப்பின. 1965 ஆம் ஆண்டில அமெரிக்காவின் மாரினர்-4 விண்கலம் இவ்விதம் படங்களைப் பிடித்து அனுப்பிய போது அது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. காரணம் செவ்வாயை ‘அருகே’ சென்று படம் பிடித்த முதல் விண்கலம் அதுவேயாகும்.

மாரினர்-4 விண்கலம்
அடுத்த கட்டமாக விண்கலங்கள் செவ்வாயை நெருங்கி அதன் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயின் செயற்கைக்கோளாகின.வானிலிருந்து அவை செவ்வாயின் நிலப்பரப்பைப் படம் பிடித்து அனுப்பின.

மூன்றாவது கட்டத்தில் பூமியிலிருந்து சென்ற விண்கலம் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்த பின்னர் அதிலிருந்து சிறிய ஆய்வுக் கலம் செவ்வாயில் இறங்கிப் படங்களை அனுப்பியது.

நான்காவது கட்டத்தில் இவ்விதம் இறங்கிய சிறிய ஆய்வுக் கலங்கள் செவ்வாயின் நிலப்பரப்பில் மெதுவாக நகர்ந்து படங்களைப் பிடித்தன. சில ஆய்வுகளையும் மேற்கொண்டன. 1996 ஆம் ஆண்டில் பாத்ஃபைண்டர் (PathFinder) ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டது., 2004 ஆம் ஆண்டில் ஸ்பிரிட் (Spirit), ஆப்பர்சூனிடி (Opportunity) ஆகிய இரண்டு ஆய்வுக் கலங்கள் அனுப்பப்பட்டன. இவை வடிவில் சிறியவை. பாத்ஃபைண்டரின் உயரம் 30 செண்டிமீட்டர். எடை 10 கிலோ. ஸ்பிரிட் மற்றும் ஆப்பர்சூனிடியின் உயரம் 1.5 மீட்டர். இரண்டுமே தலா 180 கிலோ எடை கொண்டவை. கியூரியாசிடியின் எடையோ 800 கிலோ.

மாணவி கிளாரா மா
முன்னர் அனுப்பப்பட்ட நடமாடும் ஆய்வுக் கலங்கள் மூலம் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தான் இப்போதைய நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் உருவாக்கப்பட்டது. இதற்குப் பெயர் வைப்பதற்காக நாஸா ஒரு போட்டியை நடத்தியது.  ஆறாவது வகுப்பு படிக்கும் கிளாரா மா என்னும் 12 வயது அமெரிக்க மாணவி இப்போட்டியில் பங்கு கொண்டார். அவர் கூறிய பெயர் ஏற்கப்பட்டு கியூரியாசிடி என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாணவியை கவுரவிக்கும் வகையில் கியூரியாசிடி விண்கலம் மீது அவர் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டார்.

கியூரியாசிடியை சுமந்தபடி அமெரிக்க அட்லஸ் (Atlas) ராக்கெட் வருகிற 26 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும். சுமார் எட்டரை மாதப் பயணத்துக்குப் பிறகு அது செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேரும்.

மேலும் படிக்க:

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி?
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

Nov 22, 2011

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி?

Share Subscribe
அமெரிக்க நாஸா (NASA) விண்வெளி அமைப்பு வருகிற 26 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி கியூரியாசிடி(Curiosity) என்னும் பெயர் கொண்ட ஆளில்லா விண்கலம் ஒன்றைச் செலுத்த இருக்கிறது. ஒரு கார் சைஸிலான இந்த விண்கலம் செவ்வாயின் நிலப்பரப்பில் மண்ணைத் தோண்டி ஆராய்ச்சி நடத்த இருக்கிறது. இது பற்றி நாம் அடுத்த பதிவில் கவனிப்போம். முதலில் நாம் செவ்வாய் கிரகத்துக்கு (ஆளில்லா விண்கலமாக இருந்தாலும் சரி) எப்படிச் செல்வது என்பதைக் கவனிப்போம்.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகம் நமக்குப் பக்கத்து வீடு மாதிரி என்றாலும் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. சந்திரனுக்கு 36 மணி நேரத்தில் கூடப் போய்ச் சேர்ந்து விட முடியும். ஆனால் செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேர பல மாதங்கள் ஆகும். அமெரிக்கா அனுப்புகின்ற கியூரியாசிடி விண்கலம் செவ்வாய்க்குப் போய்ச் சேர எட்டரை மாதங்கள் பிடிக்கும்.

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் நாம் அனுப்புகின்ற விண்கலம் நேர்கோட்டுப் பாதையில் செல்வது கிடையாது. விண்வெளியில் நேர்கோட்டுப் பயணம் என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.


மேலே உள்ள வரை படத்தைக் கவனிக்கவும்.இப்படத்தில் பூமி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சுற்றுப்பாதைகளும் காட்டப்பட்டுள்ளன. உள்வட்டம் பூமியின் சுற்றுப்பாதை. வெளி வட்டம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதை. நாஸாவின் அட்லஸ் (Atlas) ராக்கெட் கியூரியாசிடி விண்கலத்தை சுமந்தபடி நவம்பர் 26 ஆம் தேதி உயரே கிளம்பும் போது பூமியானது E-1 என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இருக்கும். செவ்வாய் கிரகம் தனது சுற்றுப்பாதையில் அத்தேதியில் M 1 என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இருக்கும்.T எனப்து விண்கலம் செல்ல இருக்கும் பாதையாகும். இது உடைந்த கோடு மூலம் காட்டப்பட்டுள்ளது.

மேற்படி தேதியில் பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் சுமார் 20 கோடி கிலோ மீட்டர். எனினும் விண்கலம் நேர்கோட்டுப் பாதையில் செவ்வாயை நோக்கிச் செல்ல முற்படாது. அது வளைந்த பாதையில் செல்வதாக இருக்கும்.   இப்படியாக வளைந்த பாதையில் விண்கலம் செல்வதால் அது பயணம் செய்கின்ற தூரம் 57 கோடி கிலோ மீட்டராகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வளைந்த பாதையில் செல்வதில் தான் ஆதாயம் உள்ளது. செவ்வாய்க்கு நேர் கோட்டுப் பாதையில் செல்ல முயன்றால் அது சூரியனுக்கு எதிர் திசையில் செல்வதாக இருக்கும். இதனால் ராக்கெட்டுக்கு அதிக எரிபொருள் தேவைப்படும். அதிக எரிபொருள் கொண்ட ராக்கெட்டை உருவாக்க முற்பட்டால் அது சுமந்து செல்லக்கூடிய விண்கலத்தின் எடையைக் குறைத்தாக வேண்டும். வளைந்த பாதையில் செல்லும் போது அதிக எரிபொருள் தேவையில்லை. அதிக எடை கொண்ட விண்கலத்தை அனுப்ப இயலும்.

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதை ஒரு பரிசல் மூலம் ஆற்றைக் கடப்பதுடன் ஒப்பிடலாம். பரிசல் மூலம் ஓர் ஆற்றைக் கடக்க படகோட்டி நீரின் ஓட்டத்துடன் துடுப்புப் போட்டுச் சென்றால் அதிகம் சிரமப்படாமல் மறு கரையை அடையலாம். மூன்று பயணிகளை ஏற்றிச் செல்லலாம்.

ஆனால் அப்படிச் செல்லும் போது புறப்பட்ட இடத்திலிருந்து நேர் எதிரே உள்ள இடத்துக்குப் போக முடியாது. மறு கரையில் நேர் எதிரே உள்ள இடத்துக்குத் தான் சென்றாக வேண்டும் என்று படகு ஓட்டுவதானால் ஆற்று நீரின் இழுப்பைச் சமாளிக்க மூவர் வேக வேகமாகத் துடுப்புப் போட்டாக வேண்டும். ஒரு பயணியைத் தான் ஏற்றிச் செல்ல முடியும்.

ஆற்றின் ஓட்டத்தோடு துடுப்புப் போடுவது போன்ற முறை தான் விண்வெளிப் பயணத்தில் பின்பற்றப்படுகிறது.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். விண்கலத்துடன் உயரே கிளம்புகின்ற ராக்கெட் முதலில் பூமியைச் சுற்றி வரும். நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தவுடன் அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும். பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்ல இந்த அளவு வேகம் தேவை. பூமியின் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு ராக்கெட் (எஞ்சின்) தொடர்ந்து செயல்படத் தேவையில்லை. ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு போல விண்கலம் விண்வெளியில் 'மிதந்து' செல்ல முற்படுகிறது.

செவ்வாய்க்கு 2001 ல் ஒடிசி விண்கலம்
பின்பற்றிய பாதை (வெள்ளை நிறக் கோடு)
அப்படியே விட்டால் அது செவ்வாய்க்குப் போய்ச் சேராது.அது இயற்கையின் விதிகளின்படி பூமி மாதிரியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்து விடும். ஆகவே அந்த விண்கலத்தின் பயணத்தின் போது விண்கலத்தில் உள்ள சிறு பீச்சு கருவிகளைக் (Thrustors) குறைந்தது ஐந்து தடவை இயக்கி அதன் பாதையில் சிறு மாற்றங்களைச் செய்வர். வடிவில் மிகச் சிறிய இந்த பீச்சு கருவிகளை அவ்வப்போது சில வினாடி இயக்கினாலே விண்கலத்தின் பாதையில் மாற்றங்களைச் செய்ய இயலும். இப்படியாக் விண்கலம் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்யப்படும்.

கியூரியாசிடி விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேரும். அன்றைய தினத்தில் பூமியானது E-2 என்ற இடத்தில் இருக்கும். செவ்வாய் கிரகம் தனது சுற்றுப்பாதையில் M-2 என்ற இடத்தில் இருக்கும். பூமி, செவ்வாய் இரண்டுமே ஓயாது சூரியனை சுற்றிக்கொண்டு இருக்கின்றன என்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் அவை இடம் மாறியிருக்கும்.

 செவ்வாய்க்குச் செல்கின்ற விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையை எட்டும் போது செவ்வாய் அந்த இடத்தில் இருக்கும் வகையில் ஒரு விண்கலத்தின் பாதை திட்டமிடப்படுகிறது. சொல்லப்போனால் அந்த விண்கலம் செவ்வாயை நெருங்கி விட்ட பின் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப்பிடியில் சிக்கி செவ்வாயில் இறங்க முடியும்.

விண்கல்த்தின் வேகத்தை எப்போது எந்தக் கட்டத்தில் குறைக்க வேண்டும் என்பதெல்லாம் மிக சிக்கலான விஷயம்.செவ்வாயின் ஈர்ப்புப்பிடியில் சிக்கிய பின் ஒரு விண்கலம் வேகமாக கீழ் நோக்கி இழுக்கப்படும். விண்கலம் ஒரு விமானம் போன்று தரை இறங்க முடியாது. ஒரு கட்டத்தில் இறங்குகலம் மட்டும் பிரிந்து பாரசூட் மூலம் கீழே இறங்க ஆரம்பிக்கும். அப்போதும் கூட இறங்குக்கலம் தரையில் வேகமாக மோத வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே எதிர் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். இவை கீழ் நோக்கி நெருப்பைப் பீச்சும் போது இறங்கு கலத்தின் வேகம் குறையும். இதுவும் ஒரு சிக்கலான ஏற்பாடே. முன்னர் பல தடவை செவ்வாய்க்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பி வெற்றிகரமாகத் தரை இறங்கச் செய்துள்ள அனுபவம் நாஸாவுக்கு இருப்பதால் இது விஷயத்தில் தக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன். செவ்வாய்க்குச் செல்லும் கியூரியாசிடி விண்கலம் எவ்விதம் த்ரையில் இறங்கும் என்பதைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.

எதிர்காலத்தில் மனிதன் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்குவதானாலும் இப்படி பாரசூட் மூலம் இறங்க வேண்டியிருக்கலாம். அவ்வளவு போவானேன்? ரஷிய சோயுஸ் (Soyuz) விண்கலம் மூலம் பூமிக்கு உயரே இருக்கின்ற சர்வதேச் விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பும் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புகையில் ஒரு கூட்டுக்குள் அமர்ந்தபடி பாரசூட் மூலம் தான் தரையில் வந்து இறங்குகின்றன்ர்.

செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த போதெல்லாம் விண்கலத்தை அனுப்ப முடியாது. விண்கலம் செவ்வாயில் இறங்குகின்ற கால கட்டத்தில் செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையே சூரியன் அமைந்திருக்கலாகாது. பூமியிலிருந்து செவ்வாயில் உள்ள விண்கல்த்துக்கு சிக்னல்கள் வடிவில் ஆணைகள் பிறப்பிப்பதிலும் செவ்வாயிலிருந்து சிக்னல்களைப் பெறுவதிலும் நடுவில் உள்ள சூரியன் காரணமாக இடையூறுகள் ஏற்படும். சூரியன் காரணமா சிகனல்களின் தரம் பாதிக்கப்படும்.

இதை மனதில் கொண்டு தான் விண்கலத்தைச் செலுத்தும் தேதி தீர்மானிக்கப்படுகிறது. விண்கலம் செவ்வாயில் செயல்பட ஆரம்பித்த சில காலத்துக்குப் பிறகு சூரியன் நடுவே அமைந்திருந்தால் அவ்வளவாகப் பிரச்சினை இல்லை.

செவ்வாய் பயணத்தில் இன்னொரு பிரச்சினையும் உண்டு. செவ்வாய் கிரகத்தில் ஒரு நண்பர் இருப்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அவருடன் டெலிபோனில் பேச முடியும். நீங்கள் ஹலோ சொல்லி 21 நிமிஷத்துக்குப் பிறகுதான் அவருக்கு உங்கள் குரல் காதில் விழும். அவர் பதிலுக்கு ஹலோ சொன்னால் அது உங்கள் காதுக்கு வந்து சேர மேலும் 21 நிமிஷம் ஆகும்.

சிக்னல்கள் ஒளி வேகத்தில் சென்றாலும் செவ்வாய் வெகு தொலைவில் இருப்பதால் இப்படியான பிரச்சினையைத் தவிர்க்க முடியாது. செவ்வாய் பூமிக்கு அருகே இருக்கும் போது உங்கள் குரல் 4 நிமிஷத்தில் போய்ச் சேரும்.அவரது குரல் உங்களுக்குக் கேட்க இதே போல 4 நிமிஷம் ஆகும்.    இருபது நிமிஷமா, நான்கு நிமிஷமா என்பது அந்தந்த சமயத்தில் செவ்வாய் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொருத்தது.

செவ்வாய்க்கு விண்கலத்தில் போய் இறங்குகின்ற கட்டத்தில் விண்வெளி வீரர் வேகத்தை குறைப்பதற்கான பொத்தானை அமுக்குகிறார். அது வேலை செய்யவில்லை.’ ரொம்ப அர்ஜெண்ட் இப்போது என்ன செய்ய?’ என்று பெரும் பீதியுடன் கேட்கிறார். ‘ அருகே உள்ள சின்னப் பொத்தானை இரண்டு தடவை அமுக்குங்கள் ‘ என்று பதில் செய்தி அனுப்பலாம். எட்டு அல்லது பனிரெண்டு நிமிஷங்களுக்குப் பிறகு போய்ச் சேருகின்ற பதில் செய்தியால் பலன் இருக்குமா? சந்திரனைத் தாண்டி மனிதன் எங்காவது செல்வதென்றால் ஒன்றல்ல எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு.

மேலும் படிக்க:
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

Update:
கியூரியாசிடி விண்கலம் நவம்பர் 26 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அது செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

Nov 20, 2011

சந்திரன் பற்றிய 40 ஆண்டுக் கால மர்மத்துக்கு விடை

Share Subscribe
 நீங்கள் ரேடியோ கேட்பவராக இருந்தால் உங்கள் ரேடியோவில் எப்போதாவது வாய்ஸ் ஆப் அமெரிக்கா, பீகிங் ரேடியோ, பி.பி.சி போன்றவை கிடைத்திருக்கலாம். இவை சிற்றலை வரிசையில் ஒலிபரப்பப்படுகின்றன. அந்த அலைகள் உயரே அயனி மண்டலத்துக்குச் சென்று அங்கிருந்து கீழ் நோக்கித் திருப்பப்படுகின்றன.

வீட்டுக்குள் இருப்பவர் கூரையை நோக்கிப் பந்தை வீசினால் அது கூரையில் பட்டுக் கீழ் நோக்கித் திரும்புவது போல அந்த அலைகள் கீழ் நோக்கி வருகின்றன. அதன் காரணமாகவே அந்த ஒலிபரப்புகளைக் கேட்க முடிகிற்து. அந்த வகையில் சிற்றலை ஒலிபரப்புக்கு அயனி மண்டலம் உதவுகிற்து.
 நீண்ட தூர தகவல் தொடர்புக்கு அயனி மண்டலம் உதவுகிறது

பூமியில் காற்று ம்ண்டலத்தின் மேற்புறத்தை சூரியனிலிருந்து வரும் ஒளி மற்றும் பலவேறான கதிர்கள் தாக்குகின்றன. இவற்றில் புற ஊதாக் க்திர்கள் (Ultraviolet) காற்றின் அணுக்களை சிதைக்கின்றன. இதன் விளைவாக அயனியாக்கப்பட்ட வாயு தோன்றுகிறது. இதுவே அயனி மண்டலமாகும்.

ஆகவே பூமிக்குக் காற்று மண்டலம் இருப்பதால் தான் அயனி மண்டலம் உள்ளது. அப்படிப் பார்க்கும் போது காற்றே இல்லாத சந்திரனில் அயனி மண்டலம் இருக்கக்கூடாது. ஆனால் சந்திரனுக்கு மெல்லிய அயனி மண்டலம் இருப்பது 1970களில் கண்டுபிடிக்கப்பட்டது. சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா) சந்திரனுக்கு அனுப்பிய லூனா-19 (Luna-19), லூனா-22 ஆகிய விண்கலங்கள் இதைக் கண்டுபிடித்தன. ரேடியோ டெலஸ்கோப் மூலம் விண்வெளியை ஆராயும் விஞ்ஞானிகளும் இதை உறுதிப்படுத்தினர்

அமெரிக்காவில் கொடார்ட் விண்வெளிப் பயண நிலையத்தில் (Goddard Space Flight Center) பணியாற்றும் டிம் ஸ்டப்ஸ் (Tim Stubbs) நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சந்திரனி்ன் அயனி மண்டலம் பற்றி ஆராய முற்பட்டார். 1971 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்போலோ-15 (Apollo-15) விண்கலம் மூலம் சந்திரனுக்குச் சென்ற போது சந்திரனுக்கு மேலே ஒளிர்வைக் கண்டனர் என்பது பற்றிய விவரத்தை வைத்து ஸ்டப்ஸ் மற்றும் அவரது சகாக்கள் இப்பிரச்சினையை ஆராய முற்பட்டனர்.


சந்திரனுக்கு மேலே விண்வெளி வீரர்கள் கண்ட ஒளிர்வுக்கு சந்திரனின் தூசு காரணமாக இருக்கலாம் என அப்போதிலிருந்து பல விஞ்ஞானிகளும் கருதி வந்தனர். உண்மையில் சந்திரனில் நுண்ணிய தூசு மிக அதிகம். சந்திரனில் முதல் முதலில் காலடி வைப்பவரின் கால்கள் ஒரு வேளை சந்திரனின் தூசுக்குள் புதைந்து விடுமோ என்றும் ஒரு சமயம் அஞ்சப்பட்டது.

ஸ்டப்ஸ் குழுவினர் சந்திரனின் நிலப்பரப்புக்கு மேலே மிதக்கின்ற தூசு சந்திரனின் வானில் அயனி மண்டலம் ஏற்படுவதற்குக் காரணமாக் இருக்கலாம் என்று கருதினர். நுண்ணிய தூசு மீது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் படும் போது அவற்றை அயனிகளாக்கலாம் என்பது அவர்களின் முடிவாகும்.

வாயுக்கள் அயனிகளாவதற்கு மாற்றாக நுண்ணிய தூசும் அயனிகளாகலாம் என்பது கிரகங்கள் பற்றிய ஆய்வுத் துறையில் புதிய விஷயமாகும். சந்திரனின் அயனி மண்டலம் பூமியின் அயனி மண்டலம் போன்று செயல்படுமா என்பது கேள்விக் குறியாகும். பூமியில் மிகத் தொலைவில் உள்ள இரு இடங்கள் இடையே சிற்றலை மூலம் தொடர்பு கொள்ள அயனி மண்டல்ம் உதவுவது போல சந்திரனில் எதிர்காலத்தில் இப்படியான தகவல் தொடர்புக்கு சந்திரனின் அயனி மண்டலம் உதவுமா என்பது தெரியவில்லை.

அமெரிக்க நாஸா அமைப்பின் செயற்கைகோள் ஒன்று இப்போது சந்திரனை சுற்றிச் சுற்றி ஆராய்ந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் இன்னொரு செயற்கைக்கோள் சந்திரனுக்கு அனுப்பப்பட இருக்கிறது. இவற்றின் மூலம் மேற்படி கேள்விகளுக்கு விடை தெரிய வரலாம்.

ஸ்டப்ஸ் குழுவினரின் ஆய்வு முடிவுகள் Planetary Space Science ஏட்டின் அக்டோபர் இதழில் வெளியிடப்பட்டது.

Nov 18, 2011

நியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று விட்டாரா?

Share Subscribe
ஜெனிவாவில் உள்ள் ஆராய்ச்சிக்கூடப் பிரிவு
 நியூட்ரினோ (Neutrino) எனப்படும் மிக மிக நுண்ணிய துகள் உண்மையிலேயே ஒளியைக் காட்டிலும் வேகமாகச் செல்கிறதா என்று கண்டறிய ஜெனீவா விஞ்ஞானிகள் மீண்டும் நடத்திய பரிசோதனைகளில் முந்தைய அதே முடிவுகள் தான் தெரிய வந்துள்ளன.(காண்க நியூட்ரினோவின் ஓட்டப் பந்தயம்). அதாவது அத்துகள் ஒளியை விட வேகமாகச் செல்கின்றது என்பதாகவே புதிய பரிசோதனைகள் காட்டுகின்றன. இதை விஞ்ஞானிகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவித்தனர். அப்படியானால் ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நியூட்ரினோ துகள் ஒளியைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகக் கடந்த செப்டம்பரில் ஜெனீவாவில் விஞ்ஞானிகள் அறிவித்த போது உலகில் பலரும் அதை நம்ப மறுத்தனர். ஏனெனில் ஒளியின் வேகத்தை எதனாலும் மிஞ்ச முடியாது என்று 1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைன் அடித்துக் கூறியிருந்தார். அவரது கொள்கை பின்னர் பரிசோதனைகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. ஐன்ஸ்டைன் கூறியது தவறு என்று நிரூபிக்கப்படுமானால் அது இயற்பியலின் அடிப்படையை உலுக்குவதாக ஆகிவிடும்.
ஐன்ஸ்டைன்

ஆகவே தான் ஜெனீவா விஞ்ஞானிகள் செப்டம்பரில் செய்த அறிவிப்பை அப்போது யாரும் ஏற்க மறுத்தனர். ஒருவேளை பரிசோதனையில் பிசகு இருக்கலாம் என்று கருதி ஜெனீவா விஞ்ஞானிகள் தங்களது பரிசோதனை முறையில் சற்றே மாற்றம் செய்து அக்டோபர் கடைசியிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதி வரை திரும்பத் திரும்ப சோதனை நடத்திப் பார்த்தனர். இப்போதைய பரிசோதனைகளிலும் நியூட்ரினோ ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகவே தெரிய வந்துள்ளது.

ஜெனீவா விஞ்ஞானிகள் நடத்திய சோதனைகளின் போது CERN எனப்படும் (The European Organisation for Nuclear Research) ஜெனீவாவில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து நியூட்ரினோக்கள் நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே 732 கிலோ மீட்டர் தொலைவில் இத்தாலியில் Gran Sasso என்னுமிடத்தில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன.

பாதாளம் வழியே பாயும் நியூட்ரினோ
உலகில் இவ்விதமான வேறு ஆராய்ச்சிக்கூடங்களில் இதே மாதிரி பரிசோதனைகளை நடத்திப் பார்த்த பிறகே நியூட்ரினோ துகள் ஒளி வேகத்தை மிஞ்சுகிறதா என்று சொல்ல முடியும் என்று ஜெனீவா விஞ்ஞானிகள் இப்போதைய பரிசோதனைகளுக்குப் பிறகு கூறினர். உலகில் இரண்டே இடங்களில் தான் இவ்விதமான பரிசோதனைகளை நடத்த முடியும். அவற்றில் ஒன்று ஜப்பானில் உள்ளது.

ஜப்பானின் கிழக்குக் கரையில் உள்ள டோகாய் (Tokai) பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து மேற்குக் கரையில் உள்ள காமியோகாண்டே (Kamiokande) நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்துக்கு (தொலைவு 295 கிலோ மீட்டர்) நியூட்ரினோக்களை அனுப்பி சோதனை நடத்த இயலும்.

கடந்த மார்ச் மாதத்தில் புகுஷிமா (Fukushima) அணுமின் நிலைய விபத்துக்குக் காரணமான கடலடி பூகம்பத்தின் போது மேறபடி நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே அங்கு நியூட்ரினோ தொடர்பாக நடந்துவந்த வேறு வித சோதனைகள் நிறுத்தப்பட்டன. அந்த ஆராய்ச்சிக்கூடம் மறுபடி இந்த ஆண்டுக் கடைசியில் தான் செயல்படத் தொடங்கும். இன்னொரு ஆராய்ச்சிக்கூடம் அமெரிக்காவில் உள்ளது.

அமெரிக்காவில் மின்னிசோட்டா (Minnesota) நகருக்கு அருகே ஒரு சுரங்கத்தின் அடியில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலும் நியூட்ரினோவின் வேகம் பற்றி சோதனை நடத்த இயலும். இங்கு அடுத்த ஆண்டில் தான் சோதனை நடத்த முடியும். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து நிலத்தடிப் பாறை வழியே 724 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னிசோட்டா ஆராய்ச்சிக்கூடத்துக்கு நியூட்ரினோக்களை அனுப்ப முடியும்.

 இந்த இரு இடங்களிலும் நடத்தப்பட இருக்கும் சோதனைகளுக்குப் பிறகுதான் நியூட்ரினோ உண்மையில் ஒளியை விட வேகமாகச் செல்கின்றதா என்று கூற முடியும். ஐன்ஸ்டைன் கூறியது சரியா, தவறா என்பது அப்போது தான் தெரிய வரும். அதுவரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Nov 16, 2011

சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் தூக்கி எறியப்பட்டதா?

Share Subscribe
சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கால கட்டத்தில் பெரிய கிரகம் ஒன்று தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க வானவியல் நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். சூரியனும் கிரகங்களும் தோன்றி 60 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் இது நிகழ்ந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்வெஸ்ட் ஆராய்ச்சிக் கழகத்தைச் (Southwest Research Institute) சேர்ந்த நிபுணர் டேவிட் நெஸ்வொமி (David Nesvomy) இவ்வாறு சொல்கிறார்.

சூரிய மண்டலத்தில் ஆரம்பத்தில் எவ்வளவு கிரகங்கள் இருந்திருக்கலாம்?இப்படி இருந்திருக்குமா அல்லது அப்படி இருந்திருக்குமா என்று கம்ப்யூட்டரில் கற்பனையான நிலைமைகளை (simulations) உண்டாக்கி அவற்றின் விளைவுகளை ஆராய்வது உண்டு. அப்படியாகப் பல ஆயிரம் நிலைமைகளைத் தோற்றுவித்து ஆராயந்து அதன் முடிவில் அவர் தமது மேற்கூறிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 சூரிய மணலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கிரகம்
இப்படியாக இருந்திருக்கலாம்.
சூரிய மண்டலத்தில் சூரியனை 9 கிரகங்கள் சுற்றுவதாகவே மிக நீண்டகாலம் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச வானவியல் நிபுணர்கள் மாநாட்டில் புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று முடிவு எடுத்து அதனுடைய கிரக அந்தஸ்தை ரத்து செய்தனர். புளூட்டோவை விலக்கி விட்டுப் பார்த்தால் சூரிய மண்டலத்தில் இப்போது நான்கு ராட்சத கிரகங்களும் நான்கு சிறிய கிரகங்களும் உள்ளன.

 வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ராட்சத கிரகங்கள்.  ராட்சதக் கிரகங்களை காலிப் பானையாக கற்பனை செய்து கொண்டால் வியாழனுக்குள் 1300 பூமிகளையும் சனி கிரகத்துக்குள் 700 பூமிகளையும் யுரேனஸில் 63 பூமிகளையும் நெப்டியூனில் 57 பூமிகளையும் போட்டு அடைத்து விடலாம்.

இவற்றுடன் ஒப்பிட்டால் பூமி, சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியவை சிறியவை. நான்கு சிறிய கிரகங்களில் பூமி தான் பெரியது.

 சூரிய மண்டலம்
சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கிரகம் இப்போதுள்ள ராட்சத கிரகங்களைப் போல வடிவில் பெரியதாக இருந்திருக்க வேண்டும் என்பது நெஸ்வோமியின் கருத்தாகும்.

சூரிய மண்டலம் தோன்றிய காலத்தில் நிலையற்ற தன்மை இருந்திருக்க வேண்டும். பூமியானது செவ்வாய், அல்லது வெள்ளி கிரகத்துடன் மோதுகின்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம். வியாழன் சூரியனுக்கு நெருக்கமாக வர முயன்றிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நிகழ்ந்து விடாதபடி ஏதோ ஒரு பெரிய கிரகம் வியாழனை இழுத்துப் பிடித்திருக்க வேண்டும். கடைசியில் அந்த கிரகத்தை விடப் பெரியதான் வியாழன் அந்த கிரகத்தை சூரிய மண்டலத்திலிருந்தே வெளியே தூக்கியெறிவதில் போய் முடிந்திருக்கலாம் என்று நெஸ்வொமி கூறுகிறார்.

நெஸ்வோமி தமது இந்தக் கருத்துக்கு வேறு ஓர் ஆதாரத்தையும் குறிப்பிடுகிறார். கிரகங்கள் தாமாகத் தோன்றுவதில்லை. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றித் தான் உண்டாகின்றன (சூரியனும் ஒரு நட்சத்திரமே). ஆனால் இப்போது எந்த நட்சத்திரத்தையும் சார்ந்திராமல் --வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளை மாதிரியில் -- அண்ட வெளியில் ஏராளமான கிரகங்கள் காணப்படுகின்றன. ஆகவே சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் நெஸ்வோமியின் கட்டுரை The Astrophysical Journal Letters இதழில் வெளியாகியுள்ளது.

 நெஸ்வோமியின இக்க்ருத்து சரிதானா என்பது வேறு பல விஞ்ஞானிகளும் இது போன்று ஆய்வுகளை நடத்தி உறுதிப்படுத்தினால் தான் ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கும்.

சீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை

Share Subscribe
ஒரு சமயம் இந்தியா தனது நீண்ட தூர ஏவுகணையை (Long Range Missile) வானில் செலுத்திப் பரிசோதித்த போது பாகிஸ்தான், இது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று கூறியது. "எங்கள் தலைக்கு மேலே பறந்தபடி எங்கோ செல்லக்கூடிய ஏவுகணை பற்றி நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்" என்று பாகிஸ்தான் குறிப்பிட்டது. அந்த அளவில் இந்தியா நவம்பர் 15 ஆம் தேதி வானில் செலுத்தி சோதித்த அக்னி-4  ஏவுகணை பற்றி பாகிஸ்தான் கவலைப்படாது. ஆனால் நிச்சயம் சீனா கவலைப்படும்.

அக்னி-4 ஏவுகணை நன்றி:DRDO
அக்னி-4 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளை இந்த ஏவுகணை கொண்டு தாக்க இயலும். இதன் முகப்பில் அணுகுண்டை வைத்து அனுப்ப முடியும். ஆகவே தகுந்த பதிலடி கிடைக்கும் என்பதால் சீனா தனது ஏவுகணைகளைக் கொண்டு இந்தியாவை மிரட்டத் துணியாது. அணுகுண்டு அல்லது அணுகுண்டுகளைச் சுமந்து நீண்ட தொலைவு பறந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஒரு நாட்டுக்கு சிறந்த தற்காப்புக் கேடயமாகும்.

போர் ஆயுதமான நீண்ட தூர ஏவுகணைக்கும் ஆக்கப் பணிகளுக்கான செயறகைக்கோள்களைச் செலுத்தும் ராக்கெட்டுக்கும் உயரே பாய்கின்ற விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. மற்றபடி இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்ப்தற்காகவே பல சமயங்களிலும் செயற்கைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுகளை செயற்கைக்கோள் செலுத்து சாதனம் (Satellite Launch Vehicle) என்று குறிப்பிடுவர்.

ஒரு செயற்கைக்கோளை உயரே கொண்டு செலுத்திய பிறகு ராக்கெட்டின் வேலை முடிந்து விடுகிறது. ஆனால் ஏவுகணையானது மிக உயரே சென்று விட்டு நீண்ட தூரம் பயணம் செய்து, மறுபடி காற்று மண்டலத்துக்குள் நுழைந்து கீழ நோக்கி இறங்கி, ஏற்கெனவே திட்டமிட்டபடி எதிரி நாட்டின் இலக்கைக் குறி தவறாமல் தாக்கியாக வேண்டும்.

ஏவுகணை இவ்விதம் காற்று மண்டலம் வழியே அதி வேகத்தில் இறங்கும் போது அதன் முகப்பு சுமார் 3000 டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு சூடேறும். ஆகவே முகப்பில் வைக்கப்பட்டுள்ள அணுகுண்டை அந்த வெப்பம் தாக்காதபடி தக்க பாதுகாப்புக் கவசம்இருக்க வேண்டும். தவிர, கீழே உள்ள இலக்கை அடைகின்ற வகையில் வழியறிவு ஏற்பாடு இருக்க வேண்டும். அந்த ஏவுகணை உயரே கிளம்பியதிலிருந்து கீழே இறங்கும் வரையிலான நேரத்தில் பூமி தனது அச்சில் சற்று சுழன்று விட்டிருக்கும். இதையும் கணக்கில் கொண்டால் தான் ஏவுகணை குறி தவறாமல் தாக்க முடியும்.

அக்னி -2  ஏவுகணை
தவிர, எதிரி நாட்டின் முக்கிய இலக்குகளைப் பற்றி துல்லியமான அட்சரேகை தீர்க்கரேகை விவரங்களுடன் நம்பகமான மேப்புகள் தேவை. ஏவுகணையின் அணுகுண்டு அடங்கிய முகப்பு கீழ் நோக்கி இறங்கும் போது குறிப்பிட்ட அட்சரேகையும் குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் சந்திக்கிற இடத்தைத் தான் தேடிச் செல்கிறது. ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டரில் இந்த விவரங்கள் இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கொசாவோ (Kosovo) போரின் போது அமெரிக்காவின் சாதாரண ஏவுகணை ஒன்று சீனத் தூதரகத்தைத் தவறுதலாகத் தாக்கியது. அந்த ஏவுகணையில் துல்லியமற்ற பழைய மேப் இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் என்று பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

செயற்கைக்கோளை செலுத்துகின்ற ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் போன்ற எரிபொருளைப் பயன்படுத்த இயலும். கடைசி நேரத்தில் தான் இவற்றை நிரப்புவர். இதற்கு நிறைய நேரம் பிடிக்கும். ஆனால் ஏவுகணைகளில் இம்மாதிரியான எரிபொருளைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ஏவுகணை எந்த வினாடியிலும் உயரே கிளம்ப ஆயத்த நிலையில் இருந்தாக வேண்டும். பொதுவில் ஏவுகணைகளில் திட எரிபொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கென நிரந்தர ராக்கெட் தளம் இருக்கும். ஆனால் ஏவுகணைகள் எங்கே உள்ளன என்பது யாருக்கும் தெரியக்கூடாத விஷயம். பொதுவில் ஏவுகணைகளை எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்த முடியும். சில ஏவுகணைகளை விசேஷ டிரக்கிலிருந்து செலுத்த முடியும். வேறு சில ஏவுகணைகளை தண்டவாளத்திலிருந்து தான் செலுத்த இயலும்.

 இந்தியாவின் அக்னி வகை ஏவுகணைகள்
எவ்வளவு தூரம் வரை சென்று தாக்கும்
 என்பதை இப்படம் காட்டுகிறது.
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் அக்னி-1 (தொலைவுத் திறன் 700 கி.மீ முதல் 900 கி.மீ)  அக்னி-2 ( 2000 கி.மீ முதல் 2500 கி.மீ.) அக்னி-3 (3500 கி.மீ) ஆகிய ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. அக்னி-2 ஏவுகணைக்கும் அக்னி-3 ஏவுகணைக்கும் இடைப்பட்ட திறன் கொண்டதாக அக்னி-4 உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல புதிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதை உருவாக்கும் திட்டத்தின் டைரக்டர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பெண் விஞ்ஞானியின் பெயர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ். இந்த விஞ்ஞானியை அக்னி புத்திரி என்றும் குறிப்பிடுவதுண்டு.
விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்
அக்னி-4  ஏவுகணைக்கு முதலில் அக்னி-2 பிரைம் என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்போது அதற்கு அக்னி-4 என்று புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 2010 டிசம்பரில் முதல் தடவையாக சோதித்த போது வெற்றி கிட்டவில்லை. இந்தத் தடவை வெற்றி கிட்டியுள்ளது. அடுத்ததாக இந்தியா அக்னி-5 ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இந்த ஏவுகணை முதல் தடவையாக 2012 பிப்ரவரி மாதம் வானில் செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது.
 இந்த ஏவுகணை 5000 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஏவுகணையை விசேஷ உருக்கினால் ஆன உறைக்குள் வைத்து சாலை வழியே எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும். இதுவும் அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

அக்னி-5 ஏவுகணையை அஸ்ஸாம் போன்ற வட கிழக்கு மாநிலத்திலிருந்து செலுத்தினால் சீனாவின் வட எல்லையில் உள்ள நகரங்களையும் எட்ட முடியும். தவிர, வருகிற ஆண்டுகளில் அக்னி-5 ஏவுகணையில் மூன்று முதல் பத்து அணுகுண்டுகளை வைத்துச் செலுத்தும் வகையில் அது மேம்படுத்தப்படும். அக்னி-5 ஏவுகணை உயரே சென்று விட்டு கீழே இறங்குகையில் இந்த அணுகுண்டுகள் ஒவ்வொன்றும் தனித்தனியே பிரிந்து எதிரி நாட்டின் வெவேறு இலக்குகளைத் தாக்கும்.

இந்தியாவின் ஏவுகணைகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள சோதனைத் தளத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றன. அது சோதனைத் தளமே தவிர, ஏவுகணைத் தளம் அல்ல. வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.

அக்னி வரிசையிலான ஏவுகணைகள் முக்கியமாக சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய ஆபத்தை சமாளிப்பதற்கானவையே. பாகிஸ்தானைப் பொருத்தவரையில் இந்தியாவின் பிருத்வி-1 ஏவுகணை, பிருத்வி-2 ஏவுகணை ஆகியவை போதும்.
பிருத்வி ஏவுகணை

மேலே வருணிக்கப்பட்ட ஏவுகணைகள் அனைத்தும் தரையிலிருந்து கிளம்பி எதிரி நாட்டின் தரை இலக்குகளைத் தாக்குவதற்கானவை. கப்பலிலிருந்து அல்லது விமானத்திலிருந்து செலுத்துவதற்கான ஏவுகணைகள் வேறு வகையானவை. இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இடம் பெறுவதற்கான ஏவுகணையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது அணுகுண்டைச் சுமந்து செல்லும் திறன் படைத்ததாகும்.

இந்தியா நவீன ஏவுகணைகளை உருவாக்கி விடக்கூடாது என்பதற்கான் இந்தியாவுக்கு எந்த நாடும் ஏவுக்ணை தொடர்பான எந்தப் பொருளையும் எந்தக் கருவியையும் விற்கலாகாது என்று அமெரிக்கா தலைமையில் வல்லரசு நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதித்தன. அதைச் சமாளித்து இந்தியா சொந்தமாகத் தொழில் நுட்பங்களையும் பொருட்களையும் தயாரித்து நவீன ஏவுகணைகளை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது.

Nov 14, 2011

GIS தினம் பற்றித் தெரியுமா?

Share Subscribe
நிறையப் பேருக்கு காதலர் தினம் தெரியும். அட்சய திரிதியை பற்றியும் தெரிந்திருக்கலாம். இந்தத் தினங்களைப் பிரபலப்படுத்தியவர்கள் வர்த்தக ஆதாய நோக்கு கொண்ட வியாபாரிகளே. பத்திரிகைகள், டிவி ஆகியவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆகவே பூகோள சமாச்சாரம் பற்றிய GIS தினம் பற்றிப் பலருக்கும் தெரியாது என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம்.

அண்மையில் தமிழ் சேனல் ஒன்றில் ஒரு நிகழ்ச்சியைக் காண நேர்ந்த்து. பேட்டி காண்பவர் கையில் மைக்குடன் ஆங்காங்கு சென்று யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டார். அவர் இவ்விதம் பலரிடம் அதே கேள்வியைக் கேட்டார். கேள்வி இது தான் - இந்தியாவின் நான்கு எல்லைகளிலும் என்ன இருக்கிறது? ப்த்துக்கும் மேற்பட்டவர்களிடம் அவர் இக்கேள்வியைக் கேட்டதில் தலை நரைத்த மூதாட்டி ஒருவர் தான் சரியான விடை அளித்தார். கிழக்கே அரபுக் கடல் உள்ளது, வடக்கே அமெரிக்கா உள்ளது என்பதாகப் பதிலளித்தவர்கள் உண்டு.

எனினும் இந்த நிகழ்ச்சியை வைத்து பொதுவில் மக்களிடையே பூகோளம் பற்றிய அறிவு குறைவு என்று முடிவு கட்டி விட முடியாது. பேட்டி கண்டவர் ஒரு பிரபல பள்ளியின் வாசலில் நின்று கொண்டு வெளியே வருகின்ற மாணவர்களிடம் இக்கேள்வியைக் கேட்டிருந்தால் ஒருவேளை அவர்கள்  அனைவரும் சரியான பதிலை அளித்திருக்கலாம்.

பூகோளம் என்பது மிக் முக்கியமான அறிவுத் துறை. ஒரு நாட்டின் வரலாற்றை நிர்ணயிப்பதில் பூகோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கைபர், போலன் கணவாய்கள் இல்லாதிருந்தால் இந்தியாவின் வரலாறே வேறு விதமாக இருந்திருக்கும். வளங்கள் விஷய்த்தில் பூகோளம் ஒரு நாட்டின் வலிமை அல்லது வலிமை இன்மையை நிர்ணயிக்கிறது. பூகோளம் ஒரு நாட்டு மக்களின் நடை, உடை, பாவனை ஆகியவற்றையும் நிர்ணயிப்பதாகக் கூறலாம்.

வானிலிருந்து படம் எடுக்கும் செயற்கைக்கோள்கள், நவீன கம்ப்யூட்டர்கள், ஜி.பி.எஸ் தகவல் தொடர்பு வசதி முதலியன பூகோளத்தின் பரிமாணத்தை பல மடங்கு பெரிதாக்கியுள்ளன.

 இந்திய பூகோளத் தகவல் திரட்டின் அடையாளம்
Geographic Information System (GIS) எனப்படும் பூகோளத் தகவல் திரட்டு இப்போது வேகமாக வளர்ந்து வருகின்ற துறையாகும். இதை ஒரு தகவல் பொக்கிஷம் என்றும் கூறலாம்.

ஒரு பெரிய நகரில் எங்கோ ஒரு கட்டடத்தில் தீப்பிடிக்கிறது. அந்த இடத்துக்கு எந்தப் பாதை வழியே சென்றால் சீக்கிரம் செல்லலாம்?  நகரில் எந்தெந்த இடங்களில் பாதாள சாக்கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன? நகரில் எந்தெந்த திறந்த வெளிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாட்டில் காடுகளின் பரப்பு குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா, விவசாய நிலங்களின் பரப்பு எவ்வளவு, நாட்டில் எந்தெந்தப் பகுதியில் எந்தவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன என்பன போனற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை பெற கம்ப்யூட்டரில் பொத்தானைத் தட்டினால் கண் முன்பாகத் தெரியும் மேப்புகள் வடிவில் விடை பெறலாம். முப்பரிமாண வடிவில் காட்டும் மேப்புகளையும் பெற முடியும்.

தனியார் துறையினருக்கும் GIS மூலமான தகவலகள் பலவகைகளிலும் உதவுகிறது. எங்கு கிடங்கு அமைத்தால் சரக்குகளை எளிதில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லலாம்? மார்க்கெட்டிங் சர்வே எங்கெல்லாம் இனி நடத்த வேண்டும் என்பன போன்ற தகவலகளை GiS  மூலம் பெற முடியும்.

கம்ப்யூட்டர்களில் பூகோள ரீதியிலான எண்ணற்ற தகவல்களையும் சேகரித்து வைத்துப் பயன்படுத்த முடிகிறது. இத்தகவல்களை மேப்புகள், சார்ட்டுகள், வரிவடிவப் படங்கள் என பல்வேறு வடிவங்களில் பெற இயலும்.

விஞ்ஞானிகள், பல்வேறு அமைப்புகள், நகர நிர்வாகிகள், தனியார் துறையினர், ராணுவத் துறையினர் என ப்ல்வேறு துறைகளும் இத்தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.

கார்ட்டோசாட் செய்ற்கோளிலிருந்து எடுக்கப்பட்ட படம்:  நன்றி இஸ்ரோ
பூகோளத் தகவல் திரட்டுக்கு மூலாதாரம் வானிலிருந்து செயறகைக்கோள்கள் மூலம் எடுத்த படங்களே. இந்தியா கடந்த பல ஆண்டுகளில் வடக்கிலிருந்து தெற்காகப் பறக்கும் தனது பல செயற்கைக்கோள்கள் மூலம் எண்ணற்ற படங்களை எடுத்துள்ளது. துல்லியமான மேப்புகளைத் தயாரிப்பதற்கான கார்ட்டோசாட்(CARTOSAT) செயற்கைக்கோள்களும் இவற்றில் அடங்கும்.

GIS பற்றிய பயன்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கென இந்த ஆண்டில் 64 நாடுகளில் நவம்பர் 16 ஆம் தேதி GIS தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இது நவம்பர் 17 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்காவில் மக்களிடையே பூகோள விழிப்புணர்வை ஏற்படுத்த பூகோள வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாத மூன்றாவது வாரம் பின்பற்றப்படுகிறது. இந்த வாரத்தின் போது வருகின்ற புதன்கிழமை GIS  தினமாகப் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு பூகோள விழிப்புணர்வு வாரத்தின் போது புதன்கிழமை 16 ஆம் தேதி வருகிறது. கடந்த ஆண்டில் நவம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமையாக இருந்தது.

Nov 12, 2011

யந்திர ஆடை போர்த்திய மனிதன்

Share Subscribe
ரோபாட் சூட் அணிந்தவர் கையில் மூட்டைகள்
ஜப்பானில் புகுஷிமா(Fukushima) அணு உலையில் உள்ள ஆபத்தான அணுசக்திக் கழிவுப் பொருட்களை அகற்ற இப்போது வழி பிறந்துள்ளது. சைபர்டைன் என்னும் ஜப்பானிய நிறுவனம் விசேஷ ரோபாட் சூட்டுகளைத் (Robot Suit) தயாரித்து அளிக்க முன்வந்துள்ளது. இந்த ரோபாட் சூட்டையும் அதற்கு மேலாக விசேஷ உலோக ஷீட்டையும் அணிந்து உள்ளே சென்றால் பாதுகாப்பாகப் பணியாற்ற இயலும் என்று கூறப்படுகிறது. இந்த ரோபாட் சூட்டை அணிந்தால் ஐந்து மடங்கு எடையை சுமக்க முடியும் என்பது கூடுதல் அம்சம். அது என்ன ரோபாட் சூட்?

தொழிலாளி ஒருவரால் ஒரு மூட்டை அரிசியை முதுகில் தூக்க முடியும். ஆனால் அதே தொழிலாளியிடம் இரு கைகளையும் நன்கு நீட்டச் சொல்லி  அரிசி மூட்டையை அவரது கைகள் மீது வைத்தால் எடை தாங்க முடியாமல்  கீழே போட்டு விடுவார். ஆனால் அவர் ரோபாட் சூட் எனப்படும் யந்திர ஆடையைப் அணிந்து கொண்டால் கைகளில் ஒரு அரிசி மூட்டையை வைத்தால் மூட்டை கீழே விழாது. அந்த எடையை சுமக்க யந்திர ஆடை உதவுகிறது. இப்படியான யந்திர ஆடையைத்தான் Robot Suit என்று குறிப்பிடுகிறார்கள்.

ரோபாட்டுகள் நமக்குத் தெரியும். இப்போது உலகெங்கிலும் பல நாடுகளில் ஆலைகளில் பலவகையான ப்ணிகளைச் செய்வதற்கு ரோபாட்டுகள் உதவுகின்றன. பல்வகையான ரோபாட்டுகளை உருவாக்குவதில் ஜப்பான் முன்னணியில் நிற்கிறது. ரோபாட் என்றவுடன் மனிதன் வடிவிலான யந்திரம் நம் கண் முன் தோன்றும். ஆனால் எல்லா ரோபாட்டுகளும் மனித வடிவில் இருக்க வேண்டும் என்பதில்லை. வெறும் கை வடிவிலான ரோபாட்டும் உண்டு.

ரோபாட்டுகளுக்கு மனிதன் போன்ற மூளை கிடையாது. செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) துறையில் என்னதான் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும் ரோபாட்டுக்கு மனித மூளைக்கு இணையான அறிவாற்றலை அதற்கு அளிக்க இயலாது.

ஆனால் மனித மூளையுடன் ரோபாட் இணைந்து செயல்படச் செய்ய முடியும், அது தான் ரோபாட் சூட். இதைச் சாதித்துள்ளவர் யோஷியூகி சன்காய் (Yoshiyuki Sankai). ஜப்பானின் பிரபல சுகுபா பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியர் (Tsukuba University). சிறு வயதிலிருந்தே அவருக்கு ரோபாட் மீது மிகுந்த ஆர்வம். மனிதனும் யந்திரமும் சேர்ந்து இயங்குகின்ற ஒன்றை உருவாக்குவதில் அவர் முனைந்தார்.

சுமார் 14 ஆண்டுக்காலம் அவர் பாடுபட்டு உருவாக்கியது தான் ரோபாட் சூட். நம் உடலில் தசைகள் முக்கிய பங்காற்றுகின்றன்.  நாம் கையைத் தூக்கினால் அதற்கான ஆணை நுண்ணிய மின் துடிப்புகள் வடிவில் மூளையிலிருந்து தசைக்கு வந்து சேருகிறது. அங்க அசைவுகள் அனைத்தும் மூளையிலிருந்து வரும் இப்படியான மின் துடிப்புகளின் மூலம் நடைபெறுகின்றன. ரோபாட் சூட்டை அணியும் போது தசைகளின் மீது அதாவது தோல் மீது உணர் கருவிகள் பதிக்கப்படுகின்றன.ரோபாட் சூட்டானது தோலுக்கு வந்து சேரும் இந்த மின் துடிப்புகளை அறிந்து கொள்கிறது. அப்போது ரோபாட் சூட்டில் உள்ள பல்வேறு பகுதிகளும் அத்ற்கேற்ப செயல்படுகின்றன. த்சைகளுக்குப் பதில் ரோபாட் சூட்டின் பகுதிகள் இயங்குகின்றன. இதற்கான வகையில் ரோபாட் சூட்டுக்குள் கம்ப்யூட்டரும் மற்றும் மோட்டார்களும் இதர கருவிகளும் உள்ளன. பாட்டரிகளும் உள்ளன.

ஆகவே உள்ளே மனிதன் இருக்க, அவன் அணிந்துள்ள ரோபாட் சூட் செயல்படும் போது ஐந்து ம்டங்கு ஆற்றலுடன் செயல்பட முடிகிறது. காலூன்றி நிற்பதும் யந்திர மனிதன் தான் என்பதால் ரோபாட் சூட்டின் எடை அவனை அழுத்துவதில்லை. கையை நீட்டச் சொல்லி 40 கிலோ எடையை வைத்தால் தாங்கிக் கொள்ள முடிவதற்கும் இதுவே காரணம். இந்த ரோபாட் சூட்டை உருவாக்கும் போது எண்ணற்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது.
ரோபாட் சூட் மாடல்

ரோபாட் சூட் 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் தான் பெரிய அளவில் அவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆரம்ப கட்டத்தில் இடுப்பிலிருந்து பாதம் வரையில் அணிவதற்கான ரோபாட் சூட் தான் தயாரிக்கப்பட்டன. மிக வயதானவர்களால் நடக்க முடியாமல் போகிறது. அவர்களுக்கு இது உதவுகிறது.

 ஜப்பானில் 100 மருத்துவ மனைகளில் இப்போது ரோபாட் சூட் பயன்படுத்தப்படுகிறது. பக்கவாதத்தால் கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும் வகையில் இது மேலும் செம்மையாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் இந்த ரோபாட் சூட் Hybrid Assistive Limb என்று அழைக்கப்படுகிறது.இது சுருக்கமாக HAL என்று குறிக்கப்படுகிறது.

பின்னர் தான் முழு உடலுக்கும் பொருத்தமான ரோபாட் சூட் உருவாக்கப்பட்டது. இதன் விலை சுமார் ரூ 6 லட்சம். கடந்த ஆண்டு வரை இந்த ரோபாட் சூட்டுகள் ஜப்பானுக்குள்ளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பை ராணுவ காரியங்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் சில நாடுகள் பேராசிரியர் சன்காயை அணுகின. ஆனால் அவர் அதற்கு இணங்க மறுத்து விட்டார். மனித நலனே முக்கியம் என்று அவர் கூறினார்.

ஆனால் இப்போது அமெரிக்காவில் சில நிறுவனங்கள் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான் ரோபாட் சூட்டுகளை உருவாக்குவதில் முனைந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் பெரும் விபத்து நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அணு உலைக்குச் சென்று அங்குள்ள கழிவுகளை அகற்றலாம் என்றால் உயிருக்கு ஆபத்தான கடும் கதிர்வீச்சு தாக்கும். சாதாரண ரோபாட்டுகளை அனுப்பிப் பயனில்லை. இப்போது இப்பணிக்கென பேராசிரியர் சன்காயின் சைபர்டைன் நிறுவனம் விசேஷ ரோபாட் சூட்டுகளைத் தயாரித்து அளிக்க முன்வந்துள்ளது.

ரோபாட் சூட்டுக்கு மேலே டங்க்ஸ்டன் ஷீட் .
இந்த ரோபாட் சூட்டை அணியும் ஊழியர்கள் கடும் கதிர்வீச்சு தாக்காமல் இருக்க இந்த சூட்டுக்கும் மேல் 15 கிலோ எடை கொண்ட டங்க்ஸ்டன் (Tungsten) உலோக ஷீட்டை அணிந்திருப்பர்.  ரோபாட் சூட்டில் உள்ள பாட்டரிகள் சுமார் இரண்டரை மணி நேரம் தாங்கும். ரோபாட் சூட் அணிந்தவர்களை அடுத்தடுத்து அனுப்பும் போது அணுசக்திப் பொருட்களை அகற்றும் பணியை விரைவாக முடிக்க இயலும் என்று கருதப்படுகிறது.

Nov 10, 2011

ரஷியாவைப் பிடித்துள்ள செவ்வாய் ‘தோஷம்’

Share Subscribe
ரஷியாவை செவ்வாய் ‘தோஷம்’ பிடித்துள்ளதோ என்று தோன்றுகிறது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ரஷியா நவம்பர் 9 ஆம் தேதி செவ்வாயை நோக்கி ஒரு விண்லத்தைச் செலுத்தியது. அது விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக உயரே கிளம்பியது. அந்த விண்கலம் பூமியை ரவுண்டு அடித்து விட்டு செவ்வாயை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அந்த விண்கலத்துடன் இணைந்த ராக்கெட் செயல்படாமல் போகவே அது தொட்ர்ந்து பூமியைச் சுற்றலாயிற்று.

அந்த ஆளில்லா விண்கலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய இரண்டு வார அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக அதை சரி செய்து செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும்படி செய்து விடலாம் என்று ரஷிய நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரஷியா (அப்போதைய சோவியத் யூனியன்) முதல் தடவையாக 1962 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது விண்கலத்தை செலுத்த முயன்றது. அதில் வெற்றி கிட்டவில்லை.அப்போது தொடங்கி ரஷியா 16 தடவை செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பியது. அவற்றில் இரண்டு மட்டுமே முழு வெற்றி கண்டன. சில விண்கலங்கள் ஓரளவுக்கு வெற்றி என்று சொல்லலாம். மற்றவை தோல்வியைத் தழுவின.

 ரஷியாவின் போபாஸ்-கிரண்ட் விண்கலம்
செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் போபாஸ்(Phobos) எனப்படும் சந்திரனை நோக்கி ரஷியா 1988 ஆம் ஆண்டில் இரு விண்கலங்களை அனுப்பியது. இரண்டுமே தோல்வி கண்டன. செவ்வாய்க்கு அல்லது அக்கிரகத்தைச் சுற்றுகிற சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப ரஷியா மேற்கொண்ட முயற்சிகளில் பலவும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ரஷியாவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் ராசி இல்லை என்பதாகப் பேச்சுகள் கிளம்பின. அதற்கு ஏற்ப இப்போது ரஷியா செலுத்தியுள்ள விண்கலத்துக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ரஷியா இப்போது செலுத்திய போபாஸ்-கிரண்ட் என்னும் விண்கலம் செவ்வாயைச் சுற்றுகிற மேற்கூறிய  போபாஸ் என்னும் சந்திரனில் 2013 ஆம் ஆண்டில் போய் இறங்கி மண்ணையும் கல்லையும் சேகரித்து அங்கிருந்து கிளம்பி 2014 ஆம் ஆண்டு ஏபரலில் பூமிக்குத் திரும்ப வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரஷிய விண்கலத்துடன் ஒரு சீன விண்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.  செவ்வாயை அடைந்து அக்கிரகத்தைச் சுற்றுவது சீன விண்கலத்தின் நோக்கமாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த காலத்தில் செவ்வாய்க்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலங்களில் அனேகமாக அனைத்தும் வெற்றி கண்டுள்ளன. ஆனால் வெள்ளி கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலங்கள் தோல்வி கண்டன. வெள்ளி கிரகத்துக்கு ரஷியா அனுப்பிய விண்கலங்கள் வெற்றி கண்டன.

காற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்பாசனம்

Share Subscribe

ஆஸ்திரேலிய இளைஞர் உருவாக்கியுள்ள ஏற்பாட்டில் வேர்களுக்கே நேரடியாக நீர் கிடைக்கிற்து
பாலைவனத்திலும் இனி செடிகளை வளர்ப்பது சாத்தியமாகலாம். ஆஸ்திரேலிய இளைஞர் செய்துள்ள கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் காற்றில் அடங்கிய நீர்ப்பசையை நீராக மாற்றி தாவரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு ரூ 7,30,000 பரிசு கிடைத்துள்ளது.  அந்த மாண்வரின் பெயர் எட்வர்ட் லினாக்ரே.

ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற நாட்டில் பெரிய பாலைவனம் உள்ளது. அப்பாலைவனத்தில் காணப்படும் ஒரு வண்டு (Stenocara gracilipes ) மூலம் லினாக்ரே தமது கண்டுபிடிப்புக்கு ஐடியா பெற்றார்.இந்த வண்டின் முதுகு விசேஷ அமைப்பைப் பெற்றுள்ளது. அட்லாண்டிக் கடலிலிருந்து  ஈரபபசை கொண்ட காற்று பாலைவனத்தை நோக்கி வீசும்

இந்த வண்டின் முதுகு மீது அமைந்த நுண்ணிய பகுதிகள் காற்றில் அடங்கிய ஈரப்பசையை ஈர்த்து அதை நுண்ணிய நீர்த்துணுக்குகளாக மாற்றும். அந்த நீர் துணுக்குகள் பின்னர் நுண்ணிய வரிப் பள்ளங்கள் வழியே வண்டின் வாய்ப் பகுதிக்குச் செல்லும். வண்டு இவ்விதமாகக் கிடைக்கும் நீரை அருந்தும். சுருங்க்ச் சொன்னால் காற்றில் அடங்கிய ஈரப் பசையை நீராக மாற்றும் திறன் அந்த வண்டுக்கு இருக்கிறது.
 நமீபியா பாலைவனத்து வண்டு
உங்களாலும் காற்றில் உள்ள ஈரப்பசையை நீராக மாற்றிக் காட்ட முடியும். ஒரு கண்ணாடித் தம்ளரை எடுத்து சற்றும் ஈரப் பசை இல்லாமல் நன்கு துடைக்கவும். அதை ஒரு மேஜையில் வைத்து விட்டு அதனுள் சில ஐஸ் கட்டிகளைப் போடவும்.

சற்று நேரம் கழித்துப் பார்த்தால் தம்ளரின் வெளிப்புறத்தில் நீர்த் துணுக்குகள் காணப்படும். அத்துணுக்குகள் சேர்ந்து நீராக மாறி தம்ளரைச் சுற்றி நீர் காணப்படும். ஐஸ் கட்டி காரணமாக தம்ளரின் வெளிப்புறம் குளிர்ச்சி அடையும் போது தம்ளரின் வெளிப்புறத்தில் படும் காற்றில் உள்ள ஈரப்பசை நீராக மாறுகிறது.

காற்றில் உள்ள ஈரப் பசையை நீராக மாற்றும் தொழில் நுட்பம் புதிது அல்ல. இந்தியாவிலும் சரி, அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் வழங்கும் யூனிட்டுகளைக் காணலாம். நமிபியப் பாலைவன வண்டு செயல்படும் பாணியில் ஈரப்பசையை நீராக மாற்ற அமெரிக்காவிலும் ஒரு ஆராய்ச்சி நடைபெற்று வந்துள்ளது என்றாலும் அது மிக சிக்கலானது. அந்த முறையில அவ்வளவாக வெற்றி கிட்டவில்லை.
எட்வர்ட் லினாக்ரே
ஆனால் லினாக்ரே உருவாக்கியுள்ள தொழில் நுட்பம் செலவு குறைந்தது. கிராமப்புற மக்கள் பயன்படுத்தக்கூடியது. செடி, கொடிகளுக்குப் பாசன வசதியை அளிப்பது. இயற்கையை ஒட்டி அமைந்தது.

ஆஸ்திரேலியாவில் மர்ரே டார்லிங் எனப்படும் பகுதியில் தொடர்ந்து 12 ஆண்டுகளாகக் கடும் வறட்சி நிலவி விவசாயம் படுத்தது. கடன் சுமை தாங்காமல் விவசாயிகள் தற்கொலையில் ஈடுபட்டனர். வாரம் ஒரு விவசாயி தற்கொலை என்ற பரிதாப் நிலை தோன்றியது. இப்படியான நிலைமைக்குத் தீர்வு காண ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு  லினாக்ரே தமது இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய ஏற்பாட்டில் ஒரு யந்திரம் (டர்பைன்) காற்றை உறிஞ்சி அதைக் குழாய்கள் வழியே நிலத்துக்கு அடியில் கொண்டு செல்கிறது. நிலத்துக்கு அடியில் பல குழாய்கள் இருக்கும். அங்கு காற்று குளிர்ந்து காற்றில் உள்ள ஈரப்பசை நீராக மாறும். இந்த நீர் நிலத்துக்கு அடியில் உள்ள தொட்டியில் போய்ச் சேரும். தொட்டிக்குள் அமைந்த மோட்டார் இயங்கும் போது அந்த் நீர் சிறு சிறு குழாய்கள் மூலம் செடிகளின் வேர்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

காற்றை உறிஞ்சும் டர்பைன் இயங்குவதற்கு வெளி மின்சார இணைப்பு தேவையில்லை.சூரிய ஒளிப் பலகைகள் வெயிலை மின்சாரமாக மாற்றித் தருகின்றன. இந்த டர்பைன் கடும் காற்றிலும் செயல்படக்கூடியது. காற்று மெல்ல வீசினால் பாட்டரிகள் மூலமும் மின்சாரத்தைப் பெற முடியும். நிலத்துக்கு அடியில் தொட்டிக்குள் சிறு மிதவை உண்டு.தொட்டியில் தண்ணீர் மட்டம் குறைந்தால் பம்பு தானாக செயல்படாமல் நின்று விட இந்த மிதவை உதவுகிறது.
லினாக்ரே விவசாயிகளுக்கான கருவிகளை உருவாக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருடன் அந்தந்தக் கட்டத்தில் கலந்தாலோசித்து தான் தமது கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். வீட்டைச் சுற்றி தமது தாய் போட்டிருந்த தோட்டத்தில் இதைப் பயன்படுத்தி சோதித்தார். ஆகவே இது நடைமுறையில் பயன்படுத்தத்தக்க ஒன்றாக உள்ளது. அவர் தமது இந்த்க் கண்டுபிடிப்பை Airdrop Irrigation system என்று குறிப்பிடுகிறார். இந்த ஏறபாடானது சொட்டு நீர்ப் பாசனத்தை விட ஒரு படி மேலானது. அதாவ்து இது நேரடியாக வேர்களுக்கே நீரை அளிக்கிறது.

இந்தியாவில் பாசன வசதியில்லாத் நிலங்கள் எவ்வளவோ உள்ளன. இக்கருவியின் விலை கட்டுபடியாகக் கூடியதாக இருக்குமானால் இந்திய விவசாயிகளும் காய்கறி சாகுபடி போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்த இயலும். ஆனால் இக்கருவி வர்த்தக ரீதியில் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செயயப்படுவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.

லினாக்ரே ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற மாணவர். இப்பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவின் பிரபல பல்கலைக் கழகமாகும். இதில் இந்திய மாணவர்கள் பலரும் படிக்கிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீசுவரர் ஜேம்ஸ் டைசன் டிசைன் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அறக்கட்டளை ஒன்றை 2002 ஆம் ஆண்டில் நிறுவினார். அந்த அறக்கட்டளை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யும் டிசைன் எஞ்சினியரிங் மாணவர்களுக்கு பரிசுகளை அளிக்கிறது. லினாக்ரேவுக்கான பரிசு ந்வம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அவர் படிக்கும் பல்கலையின் டிசைன் எஞ்சினியரிங் துறைக்கும் அதே அளவிலான தொகை பரிசாகக் கிடைக்கும்.

லினாக்ரேக்கு பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளன.