Nov 5, 2011

யார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம்

Share Subscribe

தாய் விமானத்தின் நடுவே இருப்பது தான்
விண்வெளி செல்லும் விமானமாகும்.
சுமார் 80 லட்ச ரூபாய் செலவிடத் தயார் என்றால் யார் வேண்டுமானாலும் விண்வெளிக்கு செல்ல முடியும். 100 கிலோ மீட்டர் உயரே சென்று அங்கிருந்து பூமியைப் பார்க்கலாம். விண்வெளி விமானத்துக்குள் அந்தரத்தில் மிதக்கும் அபூர்வ அனுபவத்தைப் பெறலாம்.

விண்வெளி விமானத்துக்குள் இப்படி மிதக்கலாம்
வர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic) என்னும் அமெரிக்கத் தனியார் நிறுவனம் இவ்விதம் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கான விசேஷ விமானங்கள் த்யார். அண்மையில் அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் விண்வெளி நிலையத் திறப்பு விழா நடைபெற்றது. ஏற்கெனவே 450க்கும் மேற்பட்டவர்கள அட்வான்ஸ் கொடுத்து டிக்கெட் புக் செய்துள்ளனர். அனேகமாக 2013 ஆம் ஆண்டில் விண்வெளிப் பயண சேவை தொடங்கும் என்று வர்ஜின் கேலக்டிக் அறிவித்துள்ளது.

1960 களில் தொடங்கி ரஷியா, அமெரிக்கா, ஆகிய இரு நாடுகள் மட்டுமே விண்வெளி வீரர்களை உயரே அனுப்பி வந்தன. அப்படி அனுப்பப்பட்டவர்கள் விமானப் படையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்ன்ர சீனாவும் விண்வெளி வீரர்களை உயரே அனுப்ப ஆரம்பித்தது.  எல்லோருமே ராக்கெட் மூலமே உயரே சென்றுள்ளனர் (அல்லது ராக்கெட் பாணியில் இயங்கிய அமெரிக்க ஷட்டில் வாகனம் மூலம்). அப்படிச் செல்பவர்கள் விண்வெளியில் குறைந்தது ஓரிரு நாட்கள் தங்குவர். அவர்களது விண்கலம் பூமியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும்.

இதற்கு மாறாக வர்ஜின் கேலக்டிக் திட்டமிட்ட விண்வெளிப் பயணம் அலாதியானது. இதில் இரண்டு விமானம் சம்பந்தப்பட்டுள்ளன. தாய் விமானம் பெரியதாக நீண்ட இறக்கைகளுடன் இருக்கும். விண்வெளி செல்லும் சிறிய விமானம் தாய் விமானத்தின் நடுப்பகுதியில் இணைந்திருக்கும்.

விண்வெளி விமானத்தை சுமந்தபடி தாய் விமானம் தரையிலிருந்து சாதாரண விமானம் போலவே ஓடுபாதையில் ஓடிய் பிறகு மேலே கிளம்பும். ஆனால் அதில் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகிற எரிபொருட்கள் இருக்கும். தாய் விமானம் சுமார் 15 கிலோ மீட்டர் உயரம் சென்றதும் விண்வெளி விமானம் தனியே பிரிந்து மணிக்கு சுமார் 3600 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து 100 கிலோ மீட்டர் உயரத்துக்கு சற்று மேலே செல்லும். விண்வெளி விமானத்தில் ஆறு விண்வெளிச் சுற்றுலாப் பய்ணிகளும் இரு பைலட்டுகளும் இருப்பர்.

100 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து
பார்த்தால் பூமி இப்ப்டித் தெரியும்
விண்வெளி விமானம் 100 கிலோ மீட்டர் உயரத்தில் அதிக நேரம் இராது. எனினும் அதில் உள்ள பயணிகள் சுமார் 6 நிமிட நேரம் விமானத்துக்குள்ளாக அந்தரத்தில் மிதப்பார்கள்.

அவ்வளவு உயரத்தில் இருக்கின்ற நேரத்தில் பக்கவாட்டில் உள்ள ஜன்னல்கள் வழியே பூமியைக் காணலாம். தலைக்கு மேலே உள்ள ஜன்னல் வழியே கரிய வானத்தையும் நட்சத்திரங்களையும் காணலாம். இந்த அனுபவத்துக்காகத் தான காசு. அதென்ன 100 கிலோ மீட்டர் கணக்கு? அந்த அளவு உயரத்துக்கு மேலே இருப்பது தான் விண்வெளி என வகைப்ப்டுத்தப்ப்ட்டுள்ளது. இது Karman Line என அழைக்கப்படுகிறது.

விண்வெளி விமானம் தரை இறங்குகையில் கிளைடர் விமானம் போலச் செயல்படும். இறங்க ஆரம்பிக்கும் போது இறக்கைகள் மடியும். கீழே இறங்கும் வேகத்தை மட்டுப்படுத்த இந்த ஏற்பாடு.

விண்வெளி விமானம் எங்கிருந்து கிளம்பியதோ அதே இடத்தில் தான் வந்திறங்கியாக வேண்டும் - அதாவது நியூ மெக்சிகோ விண்வெளித் தளத்தில்.   எல்லாமே சுமார் மூன்றரை மணி நேரத்துக்குள் முடிந்து விடும். உயரே செல்வதற்கு முன்னர் விண்வெளி சுற்றுலாப் பயணிகளுக்கு சிறு பயிற்சி அளிக்கப்படும்.

வர்ஜின் கேலக்டிக் அபு தாபியில் (Abu Dhabi) இதே போல விண்வெளித் தளத்தை நிறுவி இங்கிருந்தும் பயணிகளை உயரே அழைத்துச் செல்லத் திட்டம் போட்டுள்ளது. அரபு ஷேக்குகளையும், அத்துடன் இந்தியாவின் கோடீசுவரர்களையும் கவருவது இதன் நோக்கமாக இருக்கலாம்.

வர்ஜின் கேலக்டிக் போலவே பல தனியார் நிறுவனங்கள் இவ்விதம் சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்குக் கூட்டிச் செல்ல திட்டம் வகுத்து அதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளன. மற்ற நிறுவனங்களை விட வர்ஜின் கேலக்டிக் முன்னணியில் இருக்கிறது.

காசு கொடுத்து விண்வெளிக்குச் செல்வது என்பது இது முதல் தடவை அல்ல. ரஷிய விண்வெளி அமைப்புக்குப் பணம் தேவைப்பட்ட காரணத்தால் ரஷியா 2001 முதல் 2009 வரை தனது சோயுஸ் (Soyuz) விண்கலம் மூலம் விண்வெளிக்கு ‘சுற்றுலா’வாக கோடீஸ்வரர்களை அழைத்துச் சென்றது. பின்னர் இது கைவிடப்பட்டது.  மொத்தம் 7 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் சரவதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவுக்கான ப்குதியில் 7 நாட்கள் முதல 15 நாட்கள் வரை தங்கினர். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ 80 கோடி!

No comments:

Post a Comment