Showing posts with label விண்வெளி. Show all posts
Showing posts with label விண்வெளி. Show all posts

Nov 12, 2015

ராக்கெட்டின் பகுதி இலங்கை அருகே கடலில் விழும்

Share Subscribe
எப்போதோ உயரே செலுத்தப்பட்ட ஒரு  ராக்கெட்டின் பகுதி வெள்ளிக்கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே கடலில் விழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  ஒரு வேளை இது விண்கலம் ஒன்றின் பகுதியாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடலில் விழப்போகும் அப்பகுதி    இரண்டு மீட்டர் நீளம் (சுமார் 7 அடி) கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் எடை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.  இரண்டு டன் அளவுக்கும் இருக்கலாம்.
ராக்கெட் துண்டின் சுற்றுப்பாதை.(சிவந்த நிறம்) Credits: Data - Bill Gray/Project Pluto, Image - Celestia
இது எந்த நாடு செலுத்திய ராக்கெட்டின் பகுதி என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. சந்திரனை நோக்கி செலுத்தப்பட்ட ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம். ஏனெனில் இது பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்துள்ளது. அதன் பாதை சந்திரனின் சுற்றுப்பாதையையும் தாண்டி அமைந்துள்ளது.

 கடந்த 5 ஆம் தேதி இது பூமியிலிருந்து சுமார் 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அங்கிருந்து பூமியை நோக்கி வருகின்ற அது 13 ஆம் தேதி பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும்.

பின்னர் அது கீழ் நோக்கி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும். அப்போது அது  மிகுந்த சூடேறி தீப்பற்றும்.  அதன் விளைவாக அது வானிலேயே எரிந்து அழிந்து விடலாம்.  அப்படி அது  நடுவானிலேயே அழிந்து விட்டால் சாம்பல் தான் கீழே வந்து விழும்.
ராக்கெட் துண்டு  நடுவானில் அழியாமல் போனால் கடலில் எங்கு விழும் என்பது
 பச்சை வட்டம் வடிவில் காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் இலங்கை அரசு முன்னெச்சரிக்கையாக அந்த கடல் பகுதியில் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது.  அப்பகுதியில் வானில் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் செலுத்தப்படும் பல வகையான செயற்கைக்கோள்கள் செயலிழந்த பிறகு கடைசியில் மெல்ல கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். காற்று மண்டலத்தில் நுழையும் போது மிகுந்த சூடேறி தீப்பிடித்து அனேகமாக முற்றிலுமாக எரிந்து போகும். செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ராக்கெட்டுகள் ஒவ்வொரு கட்டத்திலும் கழன்று கீழ் நோக்கி இறங்கும். அவையும் இப்படி தீப்பிடித்து அழிகின்றன.

ஆனாலும் விண்வெளியில் ராக்கெட்டுகளின் துண்டுப் பகுதிகள், செயலிழந்த செயற்கைக்கோள்களின் ப்குதிகள் என  லட்சக் கணக்கில்   இருக்கின்றன. அவை பூமியைத் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

 பூமிக்கு மேலே கால்பந்தை விட பெரிய சைஸில் உள்ள துண்டுகள் சுமார் 20 ஆயிரம் இருக்கலாம். கோலிக்குண்டு சைஸில் சுமார் 5 லட்சம் துண்டுகள் இருக்கலாம். அதை விடச் சிறியவை சுமார் 10 கோடி இருக்கலாம். இவை அனைத்துமே பூமியைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளன.

இப்போது பூமியை நோக்கி இறங்க இருக்கும் துண்டுக்கு WT 1190F என்று பெயர்  வைக்கப்பட்டுள்ள்து. உயரே இருக்கும் போதே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து கவனிக்கப்பட்டு, இந்தத் தேதியில் இந்த நேரத்தில் இந்த இடத்தில் கீழே விழும் என்று முதல் முறையாகக் கணிக்கப்ப ராக்கெட் துண்டு இதுவேயாகும்.

இலங்கைக்குத் தெற்கே கடல் பகுதியில் நாளை காலை 11-50  மணிக்கு இது விழ்லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச வானவியல் சங்கமும் ஐக்கிய அரபு குடியரசின் விண்வெளி அமைப்பும் சேர்ந்து ஒரு விமானத்தை அமர்த்திக் கொண்டு அந்த ராக்கெட் துண்டு கீழே விழுவதைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளன.

Latest Update

எதிர்பார்த்தபடி அந்த ராக்கெட்  துண்டு இன்று முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே காற்று மண்டலத்தில் நுழைந்த போது தீப்பிடித்து அழிந்தது. கீழே படம்
தீப்பிடித்து எரிந்தபடி கீழே பாயும் ராக்கெட் துண்டு


Aug 11, 2015

தாங்கள் பயிரிட்ட கீரையை ருசித்த விண்வெளி வீரர்கள்

Share Subscribe
பூமிக்கு மேலே 350 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) வசித்து வரும் விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் தாங்கள் வளர்த்த கீரையை திங்களன்று புசித்தனர்.

விண்வெளி நிலையத்தில் தானியங்கள், கீரை வகைகள் முதலியன தனிக் கூண்டுகளில் வளர்க்கப்படுவது இது முதல் தடவை அல்ல. இது நீண்டகாலமாக நடந்து வருவதாகும். ஆனால் விண்வெளி வீரர்கள் தாங்கள் பயிரிட்ட கீரையை அவர்களே சாப்பிடுவது என்பது இதுவே முதல் தடவை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரையை பச்சையாக
சுவைக்கும் விண்வெளி வீரர்கள்
.விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்டது red romaine lettuce  வகைக் கீரையாகும்

லெட்டூஸ் கீரையை வெறுமனே கூட சாப்பிடலாம். விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் வெறுமனே அப்படியே சாப்பிட்டனர். தவிர,கீரையுடன் ஆலிவ் எண்ணெய்,  இனிப்பும் புளிப்பும் கலந்த basalmic vinegar  ஆகியவற்றைச் சேர்த்தும் சாப்பிட்டனர்.

"சாப்பாட்டுக்கு உட்கார்ந்ததும் "அவர்கள் சியர்ஸ் என்று சொல்லி விட்டுத் தான் லெட்டூஸ் கீரையை ருசி பார்த்தனர். " நல்லாத் தான் இருக்கு" என்று 51 வயதான அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி கூறினார்."பிரமாதம்” என்றார் மற்றொரு அமெரிக்கரான லிண்ட்கிரென். “பிடிச்சிருக்கு” என்றார் ஜப்பானிய விண்வெளி வீரர்.
விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட லெட்டூஸ் கீரை
மூன்று ரஷிய விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பங்காக ஒரு பகுதி கீரை தனியே வைக்கப்பட்டது.

லெட்டூஸ் கீரை எனப்படும் வகைக் கீரை தான் அவர்கள் வளர்த்த கீரையாகும். சூரிய வெளிச்சத்துக்குப் பதில் கூண்டுக்குள் இது சிவப்பு, நீல, பச்சை நிற LED பல்புகளின் வெளிச்சத்தில் வளர்க்கப்பட்டது.  நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட குஷன்கள் மீது தான் விதைப்பு செய்யப்பட்டது.

பூமியில் செய்வது போன்று தண்ணீர் ஊற்ற முடியாது. கிட்டத்தட்ட ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதால் தண்ணீரை ஊற்றினால் அது கீழே விழுவதற்குப் பதில் விண்வெளி நிலையத்துக்குள்  உருண்டைகளாக நாலாபுறமும் மிதக்கும். எனவே விசேஷ முறையில் குஷன்களுக்குள் செலுத்தப்பட்டது.


பூமியில் வளர்க்கப்பட்ட அதே வகைக் கீரை
கடந்த மாதம் 8 ஆம் தேதி விசேஷ கண்ணாடிக் கூண்டுக்குள்  விதைப்பு நடந்தது. 33 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்டது.

விண்வெளி வீரர்கள் அறுவடை செய்த கீரையில் பாதி தனியாக பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பப்படும். அங்கு அது பல வகைகளிலும் சோதிக்கப்படும்.

கடந்த ஆண்டில் அவர்கள் இதேபோல கீரை வளர்த்தனர். ஆனால் அந்த கீரை முழுவதும் கீழே விண்வெளி க்ட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விண்வெளி நிலையத்தில் அதிகபட்சம் ஆறு விண்வெளி வீரர்கள் இருக்க முடியும்..இவர்களுக்குத் தேவையான உணவு கீழே இருந்து அவ்வப்போது மேலே அனுப்பப்படுகின்றன.  அந்த உணவைத் தான் அவர்கள் சாப்பிடுகிறார்கள். சில சமயங்களில் அமெரிக்க ரஷிய விண்வெளி வீரர்கள் அல்லாமல் ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓரிருவரும் இருப்பது உண்டு.
2002 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில்
தாம் வளர்த்த செடியை ஆராய்கிறார் ரஷிய விண்வெளி வீரர்
எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரவர் விருப்பத்துக்கும் ருசிக்கும் ஏற்ற்வாறு உணவுகள் உயரே அனுப்பப்படுகின்றன.

விண்வெளி நிலையங்களில் விதைப்பு செய்து பயிர்களை வளர்த்து சோதிக்கும் பரிசோதனைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவு. தவிர பூமியில் தரையில் பயிரிடப்படும் பயிர்கள் மேல் நோக்கி -- சூரியனை நோக்கி - வளருகின்றன. ஆனால் விண்வெளியில் ஈர்ப்பு சக்தி குறைவு என்பதுடன் மேல் கீழ் என்பது கிடையாது. விண்வெளியில் இருந்தபடி பூமியை சுற்றுகின்ற விண்வெளி நிலையம் ஒரு நாளில் 16 தடவை பூமியை சுற்றுகிறது. இதனால் முளைத்து வெளியே வரும் செடிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

ஒரு சமயம்  விண்கலம் ஒன்றில்  நெல் விதைகளும் விதைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
எதிர்காலத்தில் செவ்வாயில் செடி கொடிகளை  இவ்விதமாக
வளர்க்க வேண்டியிருக்கலாம்
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டால் போய்ச் சேர எட்டு மாத காலம் ஆகும். உணவுத் தேவையை ஓரளவில்  பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் விண்கலத்துக்குள்ளாக கீரை, முள்ளங்கி, தக்காளி போன்றவற்றை விளைவித்துக் கொண்டாக வேண்டும்.

இவை தேவையான சத்துக்களை அளிக்கும் என்பதுடன், பயிர்களைப் பார்க்கும் போது விண்வெளி வீரர்களுக்கு மனதுக்கு தெம்பை அளிப்பதாகவும் விளங்கும்

செவ்வாயில் போய் இறங்கிய விண்வெளி வீரர்களுக்கு பூமியிலிருந்து அவ்வப்போது உணவு அனுப்பப்படும் என்றாலும் அங்கு அவர்கள் காய்கறி பழங்களை விளைவித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இதற்கான வகையில் செடி வளர்ப்புக் கூண்டுகள் தயாரிக்கப்படும்.