Sep 20, 2013

சந்திரனின் புழுதியை ஆராய்வதற்கு ஒரு விண்கலம்

Share Subscribe

 நமக்குப் புதை மணல் தெரியும். காலை வைத்தால் ஒருவர் உள்ளே போய்க் கொண்டே இருப்பார்.  இறுதியில் மணல் சமாதிதான். மனிதனை சந்திரனுக்கு அனுப்ப 1960 களில் அமெரிக்கா அப்போலோ திட்டத்தில் முனைந்திருந்த போது சந்திரனில் போய் இறங்குகின்ற அமெரிக்க விண்கலம் இப்படி சந்திரனின் புழுதியில் சிக்குண்டு புதைந்து போய்விடுமோ என்ற ஒரு சந்தேகம் மேலோங்கி இருந்தது. எனினும் அது அப்படியில்லை என்பது விரைவிலேயே தெளிவாகியது.

  சந்திரனில் பெரும் புழுதி இருப்பது என்னவோ உண்மைதான். அந்த்ப் புழுதி பற்றி ஆராய்வதற்கு இப்போது அமெரிக்கா ‘லாடிஎன்ற பெயரில் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. லாடி என்பது நீண்ட ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்த ஆளில்லா விண்கலம் செப்டம்பர் 6 ஆம் தேதி விண்வெளியில் செலுத்தப்பட்டது.
சந்திரனில் பெரும் புழுதி இருப்பதற்குக் காரணம் உண்டு
சந்திரனில் வந்து விழும் விண்கற்களால் ஏற்பட்ட பள்ளங்கள்
. விண்வெளியிலிருந்து சந்திரனின் நிலப் பரப்பில் ஓயாது சிறியதும் பெரியதுமாகக் கற்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. மணிக்கு 60 ஆயிரம் அல்லது 70 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து விழும் கற்கள் சந்திரனின் தரையில் மோதி பல துண்டுகளாக உடைகின்றன.

 ஏற்கெனவே சந்திரனில் வந்து விழுந்த கற்களை மேலும் புதிதாக வந்து விழும் கற்கள் தாக்குகின்றன. அப்போது புழுதி தோன்றுகிறது. இப்படி பல நூறு கோடி ஆண்டுகளாக நடந்து வருவதால் சந்திரனில் புழுதி நிறையவே உள்ளது.
 .
சந்திரனுடன் பூமியை ஒப்பிட்டால் விண்வெளியிலிருந்து வரும் கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்து மிக வேகமாகக் கீழ் நோக்கி இறங்கும் போது கடுமையாகச் சூடேறி  நடுவானில் தீப்பற்றி எரிந்து விடுகின்றன. இறுதியாக மிஞ்சும் பொடி தான் கீழே வந்து விழுகிறது. இது பெரும்பாலும் கடலில் விழுந்து கரைந்து விடுகிறது. சந்திரனில் காற்று மண்டலம் இலலை எனபதால் விண்கற்கள் ந்டுவானில் தீப்ப்ற்றி எரிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

பூமியில் புழுதியானது காற்று காரணமாக இடம் பெயருகிறது. மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது. சந்திரனில் காற்று இல்லை. மழை இல்லை. கடுகு சைஸிலான ஒரு துணுக்கு ஓரிடத்தில் கிடந்தால் பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அது அதே இடத்தில் தான் கிடக்கும்.

பூமியில் உள்ள புழுதிக்கும் சந்திரனில் உள்ள புழுதிக்கும் வித்தியாசம் உண்டு. பூமியில் உள்ள புழுதி நைஸாக இருக்கும். சந்திரனில் உள்ள புழுதி நற நற என்று இருக்கும். ஒரு கண்ணாடி பாட்டிலைப் பொடி செய்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியில் இருக்கும். தவிர, கரிய நிறம் கொண்ட அது எதன் மீதும் ஒட்டிக் கொள்ளும். உதறினாலும் லேசில் அகலாது. எனவே தான் சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் விசேஷ பிரஷ் எடுத்துச் சென்ற்னர்.
சந்திரனில் கற்களை சேகரிக்க
அமெரிக்க் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய சந்திர வண்டி
அமெரிக்கா 1972ல் அப்போலோ 17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு இரு விண்வெளி வீரர்களை அனுப்பிய போது  அந்த இருவரும் கூரை இல்லாமல் வெறும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சந்திர வண்டி மூலம் ( இந்த வாகனம் மடிக்கப்பட்ட நிலையில் அப்போலோ விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது) சந்திரனில் ஆங்காங்கு சென்று சந்திரனில் உள்ள கற்களை சேகரித்தனர்.

 அப்போது சந்திரனின் புழுதி அவர்களுக்குப் பெரிய  பிரச்சினையாகியது. விண்வெளி வீரர் செர்னான் வண்டியின் பின்பக்கமாக நடந்து வந்த போது அவரது பாக்கெட்டில் செருகி வைத்திருந்த ஒரு சுத்தியல் சந்திர வண்டியின் பின் சக்கர மட்கார்டில் மோதியது. இதனால் மட்கார்ட் பிய்ந்து போயிற்று. சரி, பரவாயில்லை என்று வண்டியை ஓட்டிய போது சந்திரனின் கரிய புழுதியானது   மழைபோல இவர்கள் மீது பொழிந்தது. அதை அப்படியே விட முடியாது.
சந்திர வண்டியின் பின்புற மட்கார்ட்
சேதமடைந்து டேப் போட்டு ஒட்டப்பட்டுள்ள காட்சி
 அவர்கள் இருவரும் அணிந்திருந்த காப்பு உடை மீது மேலும் நிறைய கரிப்பொடி அப்பிக் கொண்டால் அது சூரிய வெப்பத்தை நிறையக் கவரும். (கரிய நிறமானது வெப்பத்தை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டது) இதனால் காப்பு உடைக்குள் வெப்பம் அதிகரித்து விண்வெளி வீரர்களைத் தாக்கும். இதனால் வேறு பிரச்சினைகள் தோன்றும்.

 தவிர, கரிய பொடியானது விண்வெளி வீரர்களின் தலைக்கவசத்தில்  பார்வைக்காக உள்ள கண்ணாடிகள் மீது படியும். அவற்றைத் துடைக்க முயன்றால் கண்ணாடியில் கீறல்கள் விழும். அதனால் எதிரே உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்படும். ஆகவே ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. செர்னான் கீழே இறங்கி சாதாரண  பசை டேப்பைப் பயன்படுத்தி மட்கார்டை ஒட்ட வைக்க முயன்றார். முதல் முயற்சியில் டேப்புடன் கரிய பொடி ஒட்டிக் கொண்டது தான் மிச்சம்.   மட்கார்டடை ஒட்ட வைக்க முடியவில்லை.

 இரண்டாவது முயற்சியில் மட்கார்ட் சரி செய்யப்பட்டது. வண்டியை மேலும் ஓட்டிச் சென்ற போது மட்கார்ட் மறுபடி கழன்று விழுந்தது. கடைசியில் விண்வெளி வீரர்கள் தங்களிடமிருந்த பிளாஸ்டிக் பூச்சு கொண்ட மேப்புகளை மடித்து டேப் போட்டு ஒட்டி மட்கார்ட் போலப் பொருத்திக் கொண்டனர். இந்த ஏற்பாடு பலனளித்தத்து.
இல்லாவிடில் அவர்கள் கற்களை சேகரிக்கும் பணியைக் கைவிட நேரிட்டிருக்கும்.

சந்திரனில் உள்ள புழுதி சுவாசத்தின் போது உள்ளே சென்றால் நுரையீரல் பாதிக்கப்படும். கண்ணில் பட்டால் எரிச்சல் ஏற்படும். சந்திரனில் காற்று இல்லை என்பதால் விண்வெளி வீரர்கள் வெளியே நடமாடும் போது சுவாசிப்பதற்கான காற்றை அளிக்கும் காப்பு உடையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சந்திரனில் போய் இறங்கிய விண்கலத்துக்குள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் வசதி உண்டு. வேலையை முடித்துக் கொண்டு திரும்பியதும்  கதவைச் சாத்திய பின் காப்பு உடையைக் கழற்றி விட்டு ஓய்வு எடுப்பர்.
விண்வெளி வீரர் ஷ்மிட் நெற்றியில்
 கரி அப்பியது போல சந்திர மண்டலப் புழுதி
அந்த மாதிரியான் ஒரு சமயத்தில் காப்பு உடையிலும் காலணிகளிலும் ஒட்டிக்கொண்டிருந்த சந்திரப் புழுதி விண்கலத்துக்குள் பரவியது. இதன் விளைவாக செர்னானும் அவரது சகா ஷ்மிட்டும் சில கணம் அதை சுவாசிக்க  நேர்ந்தது. இருவருமே வெடிமருந்து நெடி அடித்ததாகக் கூறினர். ஷ்மிட்டுக்கு லேசாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மறு நாள் சரியாகியது

இவ்விதமாக சந்திரனின் புழுதி பற்றி ஏற்கெனவே நாஸா விஞ்ஞானிகளுக்கு பல விஷயங்கள் தெரியும் என்றாலும் இப்போது அது பற்றி  மேற்கொண்டு ஆராய்வதற்காகவே லாடி விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தவிர, சந்திரனில் சூரிய உதயத்துக்கு முன்பாக அடிவானில் ஒளிர்வு காணப்படுவது ஏன் என்பதையும் லாடி விண்கலம் ஆராயும்.

சந்திரனை நோக்கி செலுத்தப்பட்டுள்ள லாடி விண்கலத்தின் படம்
சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்று குறிப்பிட்டோம். எனினும் மிக மிக லேசான அளவுக்கு சந்திரனில் காற்று மண்டலம் உள்ளது. இது பற்றியும் லாடி விண்கலம் ஆராயும்.

  சந்திரனுக்கு இதுவரை அமெரிக்கா 40 க்கும் மேற்பட்ட விண்கலங்களை செலுத்தியுள்ளது. அனேகமாக இவை அனைத்துமே கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து ஏவப்பட்டன. ஆனால் லாடி விண்கலம் வர்ஜீனியா மாகாணத்தின் கரையோரமாக  வாலாப்ஸ் தீவில் அமைந்த ராக்கெட் தளத்திலிருந்து செலுத்தப்பட்டது.  

இதை சுமந்து சென்ற ராக்கெட்  நெருப்பைக் கக்கியபடி இரவு வானைக் கிழித்துக் கொண்டு உயரே பாயந்த போது அதன் ஒளிக்கீற்றை வாஷிங்டன், நியூயார்க் முதலான பல நகரங்களில் உள்ளவர்களும் காண முடிந்தது. அவர்களுக்கு இது அரிய அனுபவம்.
 நாஸாவின் லாடி விண்கலம் செப்டம்பர் 6 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டாலும் அது அக்டோபர் 6 ஆம் தேதி வாக்கில் தான் சந்திரனை அடைந்து சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். அதாவது அது சந்திரனை  எட்டிப்பிடிக்க சுமார் ஒரு மாத காலம் ஆகும்.

2008 ஆம் ஆண்டில் இந்தியா செலுத்திய சந்திரயான் சந்திரனை அடைய 18 நாட்கள் ஆகின. இத்துடன் ஒப்பிட்டால் 1959 ஆம் ஆண்டு செப்டம்பரில் சோவியத் யூனியன் (ரஷியா) அனுப்பிய லூனா -1 விண்கலம் 33 மணி நேரத்தில் சந்திரனை அடைந்தது. அதே கால கட்டத்தில் அமெரிக்கா அனுப்பிய பல விண்கலங்களும் இதே போல விரைவாக சந்திரனை அடைந்தன.
படத்தில் கீழ்ப்புறம் உள்ள புள்ளி தான் பூமி. லாடி விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் இரு முறை ( நீல நிறம் ) சுற்றி விட்டு மூன்றாவது முறையில் (சிவந்த நிறம்)  சந்திரனை நெருங்கி சந்திரனின் பிடியில் சிக்கும். படத்தில் மேற்புறம் உள்ள புள்ளி தான் சந்திரன்.. இப்படத்தில் பூமியை சந்திரன் சுற்றும் பாதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம் 18 நாள் எடுத்துக் கொண்டதற்கும் இப்போது  லாடி விண்கலம் ஒரு மாதம் எடுத்துக் கொள்வதற்கும் காரணம் உண்டு. நிறைய செலவு பிடிக்கிற சக்தி மிக்க ராக்கெட்டுகளைப் பயன்படுத்தினால் விண்கலம் விரைவாக சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்து விடும். அப்படியின்றி மெதுவாகப் போய்ச் சேர்ந்தால் பாதகமில்லை என்ற அளவில் செலவு குறைவான நடுத்தர திறன் கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தினால் இவ்விதம் பல நாட்கள் ஆகும்.

  சந்திரனுக்கும் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கும் குறைந்த செலவில் விண்கலங்களைச் செலுத்த அமெரிக்க கணித நிபுணரான பெல் புரூனோ 1990 ஆம் ஆண்டில் புதிய பாதையை வகுத்துக் கொடுத்தார். சந்திரனை நோக்கி செலுத்தப்படும் ராக்கெட் இதன்படி நேரடியாக சந்திரனை நோக்கிக் கிளம்பாது. அது பூமியை நீள் வடடப் பாதையில் சுற்ற முற்படும்.

 ஒவ்வொரு தடவையும் அத்ன் மறு முனை மேலும் மேலும் அதிகத் தொலைவில் அமையும். கடைசி சுற்றில் அதன் மறு முனை சந்திரனை நெருங்கி விடும். அப்போது அதன் பாதை சற்று மாற்றப்படும். அதைத் தொடர்ந்து அது சந்திரனின் பிடியில் சிக்கி சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். இக்காரணத்தால் தான் லாடி விண்கலம் சந்திரனை அடைய ஒரு மாத காலம் ஆகும். ஆளில்லா விண்கலங்களை அனுப்ப இது பொருத்தமான ஏற்பாடே.

வருகிற நவம்பரில் செவ்வாய்க்கு இந்தியா செலுத்த இருக்கும் ஆளில்லா விண்கலமும் இவ்விதம் பெல் புரூனோ வகுத்த பாதையைப் பின்பற்றுவதாக இருக்கும்.

 இப்போது அமெரிக்கா செலுத்தியுள்ள லாடி விண்கலத்தில் சந்திரனின் நிலப்பரப்பை – புழுதியை ஆராயவதற்கும் மற்றும் மெல்லிய காற்று மண்டலத்தை ஆராய்வதற்கும் நுட்பமான கருவிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் லாடி விண்கலம் சந்திரனிலிருந்து சுமார் 25 முதல் 50 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபடி சந்திரனைச் சுற்றி வந்து ஆராயும்.

(  எனது இக் கட்டுரை தினமணி செப்டம்பர் 19 ஆம் தேதி நாளிதழில் வெளியாகியது. இப்போது எனது வலைப் பதிவில் பிரசுரமாகிறது)