Oct 31, 2012

நிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வருமா?

Share Subscribe
பொதுவில் கூறுவதானால் அப்படி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடத்தில் நிலத்தடி நீர் அளவுக்கு மீறி எடுக்கப்படுமானால் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஐரோப்பாவில் தென் பகுதியில் அமைந்த ஸ்பெயின் நாட்டில் லார்கா (Lorca) என்னுடத்தில் 2011 மே மாதம் 12 ஆம் தேதி  பூகம்பம் ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர்.130 பேர் காயமடைந்தனர்.20 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த பூக்மபம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்தனர்

நிலத்துக்கு அடியிலிருந்து அளவுக்கு மீறி தண்ணீர் எடுத்ததே அந்த பூகம்பத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன்ர். அந்த இடம் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடம்.

விஞ்ஞானிகள் விசேஷ ராடார் பொருத்தப்ப்ட்ட செயற்கைக்கோள்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை விரிவாக ஆராய்ந்தனர். பூகம்பம் நிகழ்ந்த போது நிலத்தடிப் பாறைகள் எவ்விதம் எங்கு நோக்கி நகர்ந்தன என்பது இந்த ஆய்வுகளில் தெரிய வந்தது.. இப்படி நிலத்தடிப் பாறைகள் நகர்ந்த இடம் தான் அளவுக்கு மீறி நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட இடங்களாகும்.
இந்த ஆய்வுகள் மனித நடவடிக்கைகளால் நில நடுக்கம், பூகம்பம் போன்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் காட்டுவதாக உள்ளன என்று கனடாவில் உள்ள மேற்கு அண்டாரியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பாபியோ கொன்சால்ஸ் கூறியுள்ளார். அவரது தலைமையில் தான் இந்த ஆய்வுகள் நடைபெற்றன.

லார்கா நகருக்கு அருகே நிலத்தடியில் இயற்கையில் நிறையவே நீர் இருந்து வந்துள்ளது.  பாசனத்துக்காக இஷடத்துக்கு நீர் எடுக்கப்பட்டு வந்துள்ளதால் கடந்த 50 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் 250 மீட்டர் இறங்கி விட்டது. இவ்வித நிலையில் அதன் அருகே நிலத்துக்கு அடியில் பாறை விரிசல் இருந்த இடத்தில் பாறைகள் உட்தளர்ந்து கீழே இறங்கின.. இதுவே பூகம்பத்துக்கு வழி வகுத்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ரிக்டர் அளவில் 5.1 என்பது கடும் பூகம்பம் அல்ல. ஆனால் நிலத்துக்கு அடியில் பாறைகளின் சரிவு மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்பதால் தான் பூகம்பத்தின் விளைவு கடுமையாகியது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.


Oct 18, 2012

39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். . . . .

Share Subscribe
பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரியர் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் கீழே குதித்த காட்சி உலகம் முழுவதிலும் டிவியில் காட்டப்பட்டது.

அவர் வானில் அவ்வளவு உயரத்திலிருந்து  கீழே குதித்தது சாதனை தான். ஆனால் அதை விட  அந்த அளவு உயரத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தார் என்பதே பெரிய  சாதனை   விசேஷமாகத்  தயாரிக்கப்பட்ட விண்வெளி உடையை அவர் அணிந்திருந்தார் என்பதால் பிழைத்தார்.
உயரே கிளம்ப பலூன் ஆயத்தமாகிறது
அப்படியின்றி பலூனுக்கு அடியில் இணைக்கப்பட்ட  பெரிய பிரம்புக் கூடையில் உட்கார்ந்தபடி சென்றிருந்தால் 39 கிலோ மீட்டர் உயரத்தை எட்டுவதற்கு முன்னரே அவர்  ‘ மேல் லோகத்துக்கு ‘ போய்ச் சேர்ந்திருப்பார். அது ஏன்?

1862 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளைஷர், ஹென்றி காக்ஸ்வெல் ஆகிய இருவரும்  ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் இணைக்கப்பட்ட வாய் திறந்த பெரிய பிரம்புக் கூடைக்குள் அமர்ந்தபடி  உயரே கிளம்பினர்.அப்போதெல்லாம் உயரே செல்வதற்கு இந்த முறையே  பின்பற்றப்பட்டது. 11 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும் இருவரும் கடும் குளிரால் நடுங்கினர். அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 11 டிகிரி.

அந்த இருவருக்கும் கைகால்கள் உணர்விழந்தன. கண் இருண்டது. நினைவு தடுமாற ஆரம்பித்தது. கிளைஷர் நினைவிழந்து விட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக உணர்ந்த காக்ஸ்வெல் கைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் பற்களால் ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார்.
39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க  ரெடி
உடனே பலூன் தொடர்ந்து  மேலே செல்வதற்குப் பதில் கீழே இறங்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக இருவரும் உயிர் பிழைத்தனர. அவர்கள் சென்ற உயரம் 11,887 மீட்டர்  காற்று மண்டல நிலைமைகள் பற்றி அவ்வளவாக அறியப்படாத காலத்தில் அவர்கள் இவ்வாறு உயரே சென்றனர்.

வானில் உயரே செல்லச் செல்ல காற்று அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். என்னதான் சுவாசித்தாலும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

ஒரு ஸ்பூன் மருந்தை அரைத் தம்ளர் தண்ணீருடன் சேர்த்து அருந்தினால் மருந்து உடலில் சேரும். அப்படியின்றி ஒரு ஸ்பூன் மருந்தை அண்டா தண்ணீரில் சேர்த்து அதிலிருந்து அரைத் தம்ளர் தண்ணீரை எடுத்து அருந்தினால் உடலில் மருந்து சேர வாய்ப்பே இல்லை.

அது மாதிரியில் அடர்த்தி குறைந்த காற்றை என்னதான் முழுக்க உள்ளே இழுத்து சுவாசித்தாலும் உடலுக்குக் கிடைக்கின்ற ஆக்சிஜன் மிக அற்ப அளவில் தான் இருக்கும்.  இதல்லாமல உயரே செல்லச் செல்ல பல ஆபத்துகள் உண்டு.
பலூனிலிருந்து கீழே குதிக்கிறார்
ஆகவே தான் நகரங்களுக்கு இடையில்,--- கண்டங்களுக்கு இடையில்   சுமார் 40,00 ஆயிரம் அடி (சுமார் 12 கிலோ மீட்டர் ) உயரத்தில் பறக்கின்ற பயணி விமானங்களில் பயணிகள் பிரச்சினையின்றி சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்..

தவிர, ஏதோ அவசர நிலைமை ஏற்பட்டால் பயணிகள் சுவாசிப்பதற்கென விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஆக்சிஜன் அளிக்கும் கருவி உள்ளது.  இந்த விமானங்கள் ஒரு வகையில் காற்று அடைத்த ’பலூன்களே ’ ’விமானத்தின் வெளிப்புற சுவர்களில் ஓட்டை விழுந்தால் விமானத்தில் உள்ள அனைவரும் வெளியே தூக்கி எறியப்படுவர்.

சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத நிலையில் சுமார் 9100 மீட்டர் உயரத்தில் ஒருவர் ஒரு நிமிஷ நேரம் இருந்தால்  நினைவு போய் விடும். 15 ஆயிரம் மீட்டர் உயரத்தில 15 வினாடியில் நினைவு இழப்பார்.
கீழ் நோக்கிப் பயணம்
வானில் 19.2 கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலே சென்றால் உடலில் உள்ள திரவங்கள் ஆவியாக ஆரம்பிக்கும். உடலில் உள்ள ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும். உடல் பயங்கரமாக வீங்கும். மொததத்தில் மரணம் நிச்சய்ம்.

ஆகவே தான் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு  அடுக்குகளாக அமைந்த விண்வெளிக் காப்பு உடையை (Space suit) அணிந்திருந்தவராக உயரே சென்றார்.

 அடுக்கடுக்கான இந்த ஆடைகள் அவருக்குத் தகுந்த காற்றழுத்தத்தை அளித்தன. வெளியே நிலவிய குளிர் தாக்காமல் தடுத்தன. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பு அளித்தன. இவ்விதமாக இந்த உடை அவரைப் பல வகைகளிலும் பாதுகாத்தது.

அவர் பலூன் மூலம் உயரே செல்லும் போதும்  பின்னர் கீழே குதிக்கும் போதும் அவரது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க அவரது உடலில் பல உணர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவரது உடையில் கம்ப்யூட்டர் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன.காமிராவும் பொருத்தப்பட்டிருந்தது.
பாராசூட் தரையைத் தொடுவதற்கு முன்
அவர் இவ்வித விசேஷ உடையை அணிந்திருந்தாலும் பலூன் உயரே சென்ற போது அவர்  பலூனின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கூட்டுக்குள் தான் இருந்தார். பலூன் உயரே கிளம்புவதற்கு முன்னர் ஒரு நிபுணர் கூறுகையில் பெலிக்ஸ் 16 வித ஆபத்துகளை எதிர்ப்படுபவராக உயரே செல்கிறார் என்றார்.

பெலிக்ஸ் பாம்கார்ட்னர்  பலூனில் உயரே கிளம்பு முன்னர்  விசேஷ உணவை அருந்த வேண்டியிருந்தது. வயிறு, குடல் என உடலில் எங்கும் வாயுவே இருக்கக்கூடாது என்பதற்காக விசேஷ உணவு. உயரே கிளம்பும் நேரம் வரை சுமார் 2 மணி நேரம் அவர் சுத்த ஆக்சிஜனை சுவாசிக்கும்படி செய்யப்பட்டார்.

ரத்தத்தில் சிறிது கூட நைடரஜன் வாயு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ( நாம் சாதாரணமாக சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் 78 சதவிகிதம் உள்ளது. ஆக்சிஜன் 21 சதவிகிதம் உள்ள்து)

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 9-30 மணிக்கு பெலிக்ஸ் பாம்கார்ட்னரை சுமந்தபடி ஹீலியம் வாயு நிரப்பப்ப்டட பலூன் உயரே கிளம்பியது.  ஹீலியம் வாயு காற்றை விட லேசானது என்பதால் அது மேலே செல்லத் தொடங்கியது.

பலூன் 1,28,000 அடி உயரத்தை ( 39 கிலோ மீட்டர் ) எட்டுவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. அந்த உய்ரத்தை எட்டியதும் பெலிக்ஸ் தனது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கீழ் நோக்கிக் குதித்தார்.
அப்பாடி, வந்தாச்சு
மிக உயரத்திலிருந்து குதிப்பதிலும் ஆபத்துகள் உண்டு. தொடர்ந்து கரணம் அடித்தப்டி விழக்கூடாது. அப்படி ஏற்பட்டால் நினைவு போய் விடும். கண்கள், மூளை, இதயம் ஆகியவை பாதிக்கப்படும்.

 சில வினாடிகள் கரணம் அடித்தபடி விழுந்து கொண்டிருந்த பெலிக்ஸ் நல்ல வேளையாக சுதாரித்துக் கொண்டார். முறைப்படி அதாவது தலை கீழ் நோக்கி இருக்க, கைகள் உடலோடு ஒட்டியிருக்க -- ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் குளத்தில் குதிக்கின்ற  நீச்சல் வீரர்களின்  பாணியில்--- கீழ் நோக்கி இறங்கலானார். அவர் நான்கு நிமிஷம் 20 வினாடி நேரம் வான் வழியே தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் கீழ் நோக்கி மணிக்கு 1340 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தார். இது ஒலி வேகத்தைக் காட்டிலும் அதிகம். இவ்வளவு வேகத்தை மனித உடல் தாங்குமா என்ற கேள்வி இருந்தது. நல்லவேளையாக பெலிக்ஸுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வானில் இந்த அளவு வேகத்தில் ’ப்யணம்’ செய்த முதல் நபர் அவர் தான்.

தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட் திட்டமிட்டபடி  விரிந்தது. பின்னர் அவர் பொத்தென்று தரையில் வந்து குதித்தார்.உயரே இருந்து கீழே வந்து சேர 10 நிமிஷங்களே ஆகின.

உலகில் வானில் மிக உயரத்திலிருந்து குதித்த சாதனை, அதி வேகமாகப் பாய்ந்த சாதனை. பலூன் மூலம் மிக உயரத்துக்குச் சென்ற சாதனை என அவர் மூன்று சாதனைகளைப் படைத்தவரானார்.

பெலிக்ஸ் 16 வயதிலேயே பாராசூட்டிலிருந்து குதிப்பதில் பயிற்சி பெற ஆரம்பித்தவர். மிக உயர்ந்த கட்டடங்கள் மிக உயர்ந்த பாலங்கள் ஆகியவற்றிலிருந்து குதித்து சாதனை படைத்தவர். அவருக்கு அதே வேலை.

.எனினும் மிக உயரத்திலிருந்து குதிக்க விசேஷ விண்வெளிக் காப்பு உடை அணிய வேண்டும் என்ற நிலைமை வந்த போது அதை அணிவதற்கு  பெலிக்ஸ் தயங்கினார். சிறு இடத்துக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அவரிடம் பயம் தோன்றியது. இதை Claustrophobia  என்று கூறுவர். மனோதத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்ற பிறகே அவருக்கு இந்த பயம் நீங்கியது.

அதன் பிறகு தான் அவர் வானில் 21 கிலோ மீட்டர், 29 கிலோ மீட்டர்  என  மிக உய்ரத்திலிருந்து குதிப்பதில் அனுபவம் பெற்றார். அதன் முத்தாய்ப்பாகவே இப்போது 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து குதித்துள்ளார்.

 ஒருவர் ஒரு சாதனை படைத்தால் அதை மிஞ்ச மற்றவர்கள்  முனைவது உண்டு. ஆனால் பெலிக்ஸின் சாதனையை மற்றவர் பின்பற்றுவது எளிதல்ல. ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனுக்கு ஆன செலவே இரண்டரை லட்சம் டாலர்.அவர் அணிந்திருந்த விசேஷ உடைக்கு ஆன செல்வும் மிக அதிகம். மொத்தத்தில் பல கோடி டாலர் செலவாகியிருக்கும். செலவு கணக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
சாதித்து விட்டேன், வெற்றி, வெற்றி
பெலிக்ஸ் ப்த்திரமாக உயரே சென்று விட்டுத் திரும்புவதற்கு அவருக்கு பக்கபலமாக 100  பேர் அடங்கிய குழு செயல்பட்டது. அதில் எஞ்சினியர்கள், மருத்துவ் நிபுணர்கள் முத்லானோர் அடங்குவர்.

இது பெலிக்ஸின் தனிப்பட்ட முயற்சி அல்ல.இது உலகின் பல நாடுகளிலும்  Red Bull  எனப்படும்  எனர்ஜி பானத்தை விற்கும் பிரும்மாண்டமான ஆஸ்திரிய  நிறுவனம் தனது பானத்துக்கு விளம்பரம் செய்வதற்காகக் கையாண்ட  ஏற்பாடே.

ஆனாலும் நாஸா விஞ்ஞானிகள் இதில் அக்கறை காட்டினர். உடலியல் தொடர்பான ஆராய்ச்சி நிபுணர்கள் பெலிக்ஸ் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களில் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.

பெலிக்ஸின் அனுப்வம் எதிர்காலத்தில் தகுந்த விண்வெளி உடையை உருவாக்கவும் அவசர நிலைமைகளில் விண்வெளி வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவற்கும் மேலும் சிறப்பான பலூன்களை உருவாக்கவும்  உதவும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது முற்றிலும் விளம்பர ஸ்டண்ட அல்ல.

காற்று மண்டல நிலைமைகளும் பெலிக்ஸ் போன்றோரின் அனுபவ்மும் காட்டுவது இது தான். அடிப்படையில் மனிதன் ஒரு நில வாழ் உயிரினம்.


Oct 14, 2012

இரவு வானின் நிறம் என்ன?

Share Subscribe
” புற நகர் வானத்தை விட கிராமத்து வானம் எவ்வளவோ ப்ரவாயில்லை” என்கிறார் ஒருவர்.

“ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான்
.
ஆனால் இப்படிப் பேசக்கூடிய   இருவரும்  சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை  ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம்.

சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா?  நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.
சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள்ளவை அமெரிக்க நகரங்கள். நகரங்களின் வெளிச்சத்தைக் கவனியுங்கள் படம் நாஸா
 ஒருபெரு நகரின் வானத்தின் நிறம் ஆரஞ்சு கலந்த சிவபபாக இருக்கலாம். இதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.. நீங்கள் ஒரு பெரு நகரின் புற நகர்ப் பகுதியில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம்.

 நிலவற்ற நாளன்று இரவு 9 மணி வாக்கில் உங்கள் வட்டாரத்தில் நான்கு மாடிக் கட்டடம் இருந்தால் மொட்டை மாடிக்குச் சென்று பெரு நகரின் மையப் பகுதி அமைந்த இடத்தை நோக்கிப் பாருங்கள். மையப் பகுதிக்கு மேலே இருக்கின்ற வானம் சிவந்த நிறத்தில் காணப்படும்.

இன்னொரு வழி இருக்கிறது. நீங்கள் இரவு நேர ரயிலில் சென்னையிலிருந்து திருச்சி அல்லது மதுரைக்குச் செல்கிறீர்கள். ரயில் அந்த நகரை நெருங்க இருக்கும் நேரத்தில் அதாவது காலை 4 அல்லது 5 மணி வாக்கில் ரயிலின் ஜன்னல் வழியே  (ரயில் பெட்டிக்குள் விளக்கு எரியக்கூடாது)  நகரம இருக்கின்ற திசையை நோக்குங்கள்
அதே விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவும் ஒளிர ஆரம்பித்துள்ளது. ப்டம் நாஸா
நகருக்கு மேலே வானம் சிவந்த நிறத்தில் தெரியும். சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானம் சிவந்திருப்பது போன்று காட்சி அளிக்கும். இரவு வானத்துக்கு நிறம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

அமெரிக்க வானவியல் நிபுணர் ஜான் இ போர்ட்டில் (John E Bortle)  நிலவற்ற இரவு வானை ஒன்பது வகைகளாகப் பிரித்திருக்கிறார். இப் பட்டியலில் கிராமப்புற வானம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெரு நகர மையப் பகுதிக்கு மேலே உள்ள வானம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. முதல் இரு இடங்களும் கிராமத்துக்கு வெளியே  கும்மிருட்டாக இருக்கக்கூடிய இடங்களுக்கு மேலே இருக்கின்ற வானம் ஆகும்.இவை  வானத்து நட்சத்திரங்கள் நன்கு தெரியக்கூடிய இடங்களாகும்.

ஜான் போர்ட்டில் வானத்தின் நிற்த்தை வகை பிரித்ததுடன் நில்லாமல் எந்த வகையான வானத்தில் எவற்றையெல்லாம் காணலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய உதயமல்ல. அமெரிக்காவில் ஓர்  வான் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அருகே உள்ள நகரங்களிலிருந்து வானில் கிளம்பும் ஒளியே தான்
பெரு நகரின் மையப் பகுதியில் உள்ளவர்களுக்கு வானில் சந்திரன் தெரியலாம். கிரகங்கள் தெரியலாம்.ஒரு சில பிரகாசமான நட்சத்திரங்கள் தெரியலாம். இரவு வானின் அழகை ரசிக்கப் பெரு நகரம் லாயக்கிலை என்பது அவரது கருத்து. பெரு நகரில் வாழ்பவர்களுக்கு வான் அழகைப் பார்க்க நேரமோ ஆர்வமோ கிடையாது என்கிறீர்களா? அது சரிதான்.

வானம் ஏன் இப்படி வெளிச்சம் போடுகிறது?  பெரு நகரத்து வானம் ஏன் வண்ணத்தைப் பூசி நிற்கிற்து?  நகரங்களில் எண்ணற்ற வாகனங்கள். இவை பெரும் புழுதியைக் கிளப்புகின்றன. வாகனங்களிலிருந்து ஏராளமான அளவுக்குப் புகை. இவை தவிர,இயற்கையாகக் கிளம்புகின்ற நுண்ணிய துகள்கள். இவை எல்லாம் சேர்ந்து வானில் மிதக்கின்றன்
அமெரிக்காவில் ஒரு பெரிய நகரிலிருந்து இரவு நேரத்தில் வெளிப்படும் ஒளியால் வானமே சிவந்து காணப்படுகிறது.
இரவில் நகரங்களில் எண்ணற்ற கட்டடங்களில் பிரகாசமான விளக்குகள். விளம்பரப் பலகைகளில் மேல் நோக்கிஒளி வீசும் வகையில் பொருத்தப்பட்டுள்ள  விளக்குகள் .வாகனங்களின் விளக்குகள்.விளையாட்டு மைதானத்தில் உள்ள பிரகாசமான விளக்குகள்.

இவை அனைத்தின் ஒளி மேலே செல்கிறது. வானில் உள்ள நுண்ணிய தூசு மீது இந்த ஒளி படும் போது ஒளி சிதறடிக்கப்படுகிறது. பெரு நகரை வானத்து ஒளி இவ்விதமாகப் போர்த்துக் கொள்கிறது. இதனால்  இயற்கையான வானம் நம் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு வானம் சிவந்து விடுகிறது..

இரவு வானில் தெரியும் நட்சத்திரங்கள். பெரிய ந்கரங்களிலிருந்து இவற்றைக் காண்பது கடினமே.
இரவு வானத்தின் இயற்கை அழகை நீங்கள் காண விரும்பினால் அமாவாசை சமயத்தில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் வானில் மேகங்களே இல்லாத நாளாகப் பார்த்து  நன்கு இருட்டிய பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து ஒரு வாகனத்தில்--காரில்-- ஊருக்கு வெளியே சில கிலோ மீட்டர் செல்ல வேண்டும். நெடுஞ்சாலை விளக்குகள் கூட இல்லாத -- குக்கிராமத்துக்குச் செல்கின்ற மண் ரோடில் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் .உங்களைச் சுற்றி எந்த விளக்கும் தெரியக்கூடாது. அந்த கும்மிருட்டில் உங்களுடன் எடுத்துச் சென்ற மடக்கு சேர்களைப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இருட்டுக்கு உங்கள் கண்கள்  நன்கு பழகிக் கொண்ட பின்னர் வானை அண்ணாந்து பார்க்க வேண்டும்.

 கரு நீல வெல்வெட் துணியில் வாரி இரைக்கப்பட்ட வைரங்கள் போல வானத்து நட்சத்திரங்கள் அற்புதமாகக் காட்சி அளிக்கும். சற்றே வெளிறிய நிறத்தில் அகன்ற பட்டையாக ஆகாய கங்கை (Milky Way Galaxy) தெரியும். உயரே தெரிகின்ற அக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும்.

உங்கள் கண்ணில் படுகின்ற ஒரு நட்சத்திரம் சூரியனை விடப் ப்ல மடங்கு பெரியதாக, உங்கள் பூமியை விட பல ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கலாம். மங்கலாகத் தெரிகின்ற சிறிய திட்டுகள்  கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட அண்டமாக இருக்கலாம்.

 நீங்கள் தலைக்கு மேலே காண்பது வானம் தான். ஆனால் அதுவே விண்வெளி. அதுவே அண்டவெளி. அதுவே எல்லையற்ற பிரபஞ்ச வெளி.

திரை உலகில் ஜொலிக்கும் உங்கள் அபிமான நட்சத்திரங்களை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சினிமாத் திரையில், டிவி திரையில் பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. இயற்கையில் தெரியும் வானத்து நட்சத்திரங்களை --வானம் அளிக்கும் அற்புதக் காட்சியை ஒரு தடவையாவ்து பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை எனக்கு எழுதுங்கள்


Oct 13, 2012

வருகுது, ராட்சத வால் நட்சத்திரம்

Share Subscribe

1680 ஆம் ஆண்டில் தோன்றி மக்களைப் பயமுறுத்திய வால் நட்சத்திரம். இது ஓர் ஓவியம்
அடுத்த ஆண்டு  டிசம்பர் மாதக் கடைசி வாக்கில் வானில் ராட்சத வால் நட்சத்திரம் தெரியப் போவதாக வானவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இருட்டிய பின்னர் மேற்கு வானில் இந்த வால் நட்சத்திரம் iமிகுந்த பிரகாசத்துடன் தெரியும் என்கிறார்கள். இதன் ஒளி பௌர்ணமி நிலவை விட 10 மடங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது பகலிலும் மங்கலாகத் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்த வால நட்சத்திரம் இப்போது மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் உள்ள்து. .ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக்  ஆகிய இருவரும்  செப்டம்பர் மாதம் இதை சக்திமிக்க தொலைனோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
அடுத்த ஆண்டில் வரப்போகும் ISON  வால் நட்சத்திரம் .சிறிய கோடுகள் அதை சிறிய ஒளிப்புள்ளியகக் குறிப்பிடுகின்றன. தொலைனோக்கி மூலம் எடுத்த ப்டம்
பொதுவில் வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் ஊர்ட் முகில் எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. இவை கிரகங்களைப் போலவே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை. கிரகங்கள் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்றன. வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ISON என்ற பெயரும் உண்டு. மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே இது சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.

இது மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது  அடுத்த ஆண்டு நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது அதற்கும் சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே -- 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது  இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .

அடிப்படையில் பார்த்தால் வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரமே அல்ல. அதற்கு சுய ஒளி கிடையாது. அதே போல அதற்கு நிரந்தர  வால் கிடையாது. சூரியனை நெருங்கும் போது வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தள்ளப்படும் தூசு, வாயுக்கள் ஆகியவை நீண்ட வால் போல அமையும். அவற்றின் மீது சூரிய ஒளி படும் போது அது வால் போல் தோற்றம் அளிக்கும்.

வால் நடசத்திரத்தின் தலைப் பகுதி பொதுவில் பாறைகள், கற்கள், உறைந்த வாயுக்கள், உறைந்த பனிக்கட்டி, தூசு முதலியவற்றால் ஆனது. இதன் குறுக்களவு 20 கிலோ மீட்டர் இருக்கலாம். அபூர்வமாக 300 கிலோ மீட்டராக இருப்பதும் உண்டு.

விண்வெளியில் மிகத் தொலைவில் இருக்கும் போது வால் நட்சத்திரம் ஒழுங்கற்ற உருண்டையாகத் தான் இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க சூரியனின் வெப்பம் காரணமாகவும் சூரியனிலிருந்து வெளிப்படும ஆற்றல் மிக்க துகள்கள் காரணமாகவும் வால் நட்சத்திரத்திலிருந்து மேலே கூறிய வகையில் நுண்ணிய பொருட்கள் வெளிப்பட்டு வால் தோன்றும்.

 அதே நேரத்தில் வால் நட்சத்திரத்தின் தலை பெருத்து சிகை (Coma) தோன்றும். அதாவது அதன் தலையைச் சுற்றி புகை மண்டலம் தோன்றும் அப்போது.அது 80 ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கலாம். வால் நீளம் 10 லட்சம் கிலோ மீட்டராக இருக்கலாம்.
வால் நட்சத்திரத்தின் இரட்டை வால்கள்
வால் நட்சத்திரத்துக்கு இருவித வாலகள் இருக்கும். ஒன்று தூசு முதலியவற்றால் தோன்றும் வால். இன்னொன்று அயனிகளால் ஏற்படும் வால். சில சமயங்களில் இந்த இரண்டு வால்களும் தனித்த்னியே தென்படும்.

வால் நட்சத்திரத்தின் வால் விஷய்த்தில் ஒரு விசித்திர அம்சம் உண்டு. சூரியனை  நோக்கி வரும் போது வால் நட்சத்திரன் தலை முன்னே இருக்க வால் பின்னே இருக்கும். சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின் தொடர்ந்து செல்லும்.

வால் விஷய்த்தில் இப்படி ஏற்படுவதற்குக் காரணம் உண்டு. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்கள் த்ள்ளுவதால் தான் வால் ஏற்படுவதாகச் சொன்னோம். அந்த அளவில் சூரிய்னின் துகள்கள் வாலை முன்னே தள்ளி விடுவதால் வால் முன்னே செல்ல தலை பின் தொடர்கிறது.
சூரினை நோக்கி வருகையில் வால் பின்புறமும் பின்னர் வால் எதிர்ப்புறமும் அமைந்துள்ளதைக் கவனிக்கவும் 
வால் நட்சத்திரம் தெரிந்தால் தீமை ஏற்படும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. ஒரு சமயம் பூமியானது ஹாலி வால் நட்சத்திரத்தின் நீண்ட வால் வழியே சென்ற்து. இதனால் பூமிக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடவில்லை.

இதற்கு முன்னர் 1680 ஆம் ஆண்டில் நீளமான வால் கொண்ட பெரிய வால் நட்சத்திரம் தோன்றியது. அப்போதெல்லாம் வால் நட்சத்திரம் குறித்து நிறைய மூட நம்பிக்கைகள் நிலவின. செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோராதவர்களை தண்டிக்க தேவன் வால் நட்சத்திரத்தை அனுப்பியிருக்கிறான் என்று மக்கள் நம்பி வால் நட்சத்திரத்தைக் கண்டு பீதியில் ஆழ்ந்தனர்

எந்த ஒரு வால நட்சத்திரமும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தலை காட்டும். 1680 ஆண்டு வால் நட்சத்திரத்தின் பாதையை நிபுணர்கள் கணக்கிட்ட போது அது 575 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைகாட்டலாம் என்று கருதப்பட்டது.

அடுத்த ஆண்டு தலைகாட்ட இருக்கும் வால் நட்சத்திரம் பற்றி வால நட்சத்திர நிபுணர் ஹான் போர்ட்டில் கூறுகையில் ஒரு வேளை இது 1680  ஆம் ஆண்டில் தலைகாட்டிய அதே வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.
1910 ஆம் ஆண்டு தலைகாட்டிய  போது ஹாலி வால் நட்சத்திரம் 
வேறு சில நிபுணர்கள் அடுத்த ஆண்டு வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு  ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன
1986 ஆம் ஆண்டில் ஹாலி வால் நட்சத்திரம் 
.ஹாலி வால் நட்சத்திரம் மிகப் பிரபலமானது. அது 1910 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஆனால் அது மறுபடி 1986 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது முந்தைய அளவுக்குப் பெரிதாக இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.


ஓராண்டு  நிறைவு

கடந்த ஆண்டு செப்டம்பர் கடைசி வாக்கில்  நண்பர் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களை ஏதோ ஒரு வேலையாகச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் தான் ஒரு வலைப்பதிவைத் தொடங்குவது பற்றி எனக்கு ஐடியா கொடுத்து உடனேயே அதைத் தொடக்கியும் கொடுத்தார். இவ்விதமாகத் தான் இந்த வலைப்பதிவு தோன்றியது. முதல் பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் வெளியாகியது. நாட்கள் ஓட, இப்போது ஓராண்டு பூர்த்தியாகி விட்டது.

ஓராண்டு நிறைவு என்பது பெரிய சாதனை அல்ல. ஆனால் அது ஒரு மைல்கல். அந்த அளவில் அது முக்கியத்துவம் கொண்டதே. முற்றிலும் அறிவியல் தொடர்பான வலைப்பதிவாயிற்றே, எந்த அளவுக்கு ஆதரவு இருக்குமோ என ஆரம்பத்தில் எனக்கு சற்றே ஐயம் இருந்தது. ஆனால் முதல் இரு மாதங்களிலேயே  எனது அச்சம் நீங்கியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்களின் அமோக ஆதரவு என்னை வியக்க வைத்தது
.
 எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற எனது நம்பிக்கை உறுதியாகியது. தொடர்ந்து வாசக அன்பர்களின் ஆதரவைக் கோருகிறேன்.

ராமதுரை


Oct 6, 2012

அமெரிக்காவில் பார்த்த நிலா

Share Subscribe
’அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா” என கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான பாடல் ஒன்று உண்டு. அது “பெரிய இடத்துப் பெண் “ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.

கவிஞர் முழு நிலவை மனதில் கொண்டு தான் அப்படிப் பாடினார்.. பிறைச் சந்திரனை அல்ல. பிறைச் சந்திரன் அதுவும் நான்காம் பிறைச் சந்திரன் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லை..உலகில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகத் தெரியும். அது எப்படி?

 நான் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அறிவியல் எழுத்தாளர் என்ற முறையில் அமெரிக்கா சென்றிருந்த   போது மின்னியாபோலிஸ் நகரில் அமெரிக்க நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு விருந்து. அது முடிந்து வெளியே வந்தபோது தற்செயலாக இரவு வானில் நான்காம் பிறை நிலவைக் கண்டேன். வியப்பூட்டும் வகையில் அந்த நிலவு வேறு விதமாக இருந்தது.அதைப் பார்த்த போது ‘ இன்று  கண்டது வேறு நிலா’ என்று பாட வேண்டும் போலத் தோன்றியது.
மின்னியாபொலிஸ் நகரில் பிறைச் சந்திரன்.
 படம்:டேவ் பீட்டர்ஸ்
காரணம் இது தான். சென்னையில் நான் வீட்டின் பால்கனியிலிருந்து எவ்வளவோ தடவை நான்காம் பிறை நிலவை  பார்த்திருக்கிறேன்.( எப்போதும் நான்காம் பிறை தான் கண்ணில் படும்.)  அது தண்ணீரில் மிதக்கிற படகு போல காட்சி அளிக்கும். ஆனால் அன்று அமெரிக்காவில் பார்த்த நான்காம் பிறை நிலவு அனேகமாக செங்குத்தாக நின்று கொண்டிருந்தது.ஆங்கில எழுத்து D  மாதிரியில் இருந்தது.
தென் கோளார்த்தத்தில் மிகவும் தெற்கே தள்ளி 50 டிகிரி தெற்கு அட்ச ரேகையில் இருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்

வட கோளார்த்தத்தில் 50 டிகிரி வட அட்ச ரேகையிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்


33 டிகிரி தெற்கு அட்சரேகையிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன

சென்னை நகரில்  பிறைச் ச்ந்திரன் இப்படித்தான் தெரியும்

50 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்

மேலே உள்ள படங்களை நீங்கள் கவனித்தால் அமாவாசைக்குப் பிற்கு ,மேற்கு வானில் காணப்படும் பிறைச் சந்திரன் பூமியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு  விதமாகத் தென்படும்  என்பதை அறியலாம். இதற்குக் காரணம் உண்டு

அடுக்கு மாடிக் கட்ட்டம் ஒன்றின்  நுழைவு வாயிலில் உருண்டை வடிவிலான டோம் லைட்டுகள்  இருக்கின்றன.வெளிச்சம் மேலே போகவேண்டாம் என்று கருதி அந்த விளக்குகளின் மேற்பாதியில் கருப்பு பெயிண்ட அடித்திருக்கிறார்கள். இரவு வேளையில் இந்த டோம் லைட்டுகளை தரையில் இருந்து பார்த்தால் ஒரு விதமாக்த் தெரியும். இரண்டாவது மாடியிலிருந்து பார்த்தால் வேறு விதமாகவும் ஐந்தாவது மாடியிலிருந்து பார்த்தால் இன்னொரு விதமாகவும் தெரியும். பிறைச் சந்திரன் தெரிவதும் இது மாதிரித் தான். 

சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளி சந்திரன் விழுவதன் விளைவாகவே அது வளர் பிறைச் சந்திரனாக--பௌர்ணமியாக--, தேய் பிறைச் சந்திர்னாக நமக்கு காட்சி அளிக்கிறது.

பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே வளர் பிறைச் சந்திரன் ஒரு விதமாகத் தெரியும்.மேலும் மேலும் வடக்கே போகும் போது-- உதாரணமாக சுமார் 50 டிகிரி வடக்கு அட்சரேகையிலிருந்து பார்த்தால் செங்குத்தாக நிற்பது போலக் காட்சி அளிக்கும். அத்துடன் அது ஆங்கில எழுத்தான D  போன்று தென்படும்.

பூமியின் நடுக்கோட்டிலிருந்து தெற்கே போகப் போக அது நேர் மாறாக -- ஆங்கில எழுத்தான C  வடிவில் தெரியும்.  எல்லாமே அதே பிறைச் சந்திரன் தான் என்றாலும் நாம் பூமியில் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்து அது விதவிதமாகத் தெரிகிறது.

மேலும் விளக்கமாகச் சொல்லலாம். சந்திரன் பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றும் போது அமாவாசையன்று   சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் ( நேர் குறுக்காக அல்ல) அமைகிறது. அப்போது சந்திரனின் மறுபுறத்தில் சூரிய ஒளி படும். சந்திரனின் முதுகுப் புறத்தில் ஒளி படாது. ஆகவே அது நமக்கு அமாவாசை சந்திரனாக அமைகிறது. பிறகு சந்திரன் தனது பாதையில் வழக்கம் போல நகர ஆரம்பிக்கிறது. சந்திரனின் ஒரு பாதியில் சூரிய ஒளி விழுந்தாலும் அவ்விதம் ஒளி விழும் பகுதியில் சிறு பகுதி --அதாவது சந்திரனின் விளிம்பு மட்டும் நமக்குத் தெரிகிறது. அதுவே பிறைச் சந்திரனாக நமக்குத் தென்படுகிறது.

அந்த பிறைச் சந்திரனை நாம் பூமியில் எங்கிருந்து வேண்டுமானாலும் காண இயலும். நாம் எங்கிருந்து காண்கிறோம் என்பதைப் பொருத்து அது வெவ்வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது.

 
மேலே உள்ள படத்தைக் கவனிக்கவும்  ( இது நான் வரைந்தது. சுமாராகத் தான் இருக்கும். பொறுத்தருள்க )  இப்படத்தில் A  என்பது பூயியில்  50 அல்லது 60 டிகிரி வடக்கு அட்சரேகைகளில் உள்ள இடங்களாகும். அவர்கள் பிறைச் சந்திர்னை மேலிருந்து காண்பவர்கள்.. ஆகவே அவர்களுக்கு பிறைச் சந்திரன் ஆங்கில D வடிவில் தெரியும். B  என்பது பூமியின் நடுக்கோட்டுப் பகுதியாகும். நடுக்கோட்டுக்கு  அருகே உள்ள அட்சரேகைகளில் உள்ளவர்களுக்கு பிறைச் சந்திரன் படகு போன்று காட்சி அளிக்கும். A முதல் B  வரையிலான அட்சரேகைகளில் உள்ளவர்களுக்கு இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் சாய்வான D வடிவில் தெரியும்

படத்தில் C என்ப்து தென் துருவத்துக்கு அருகே 50 அல்லது 60 டிகிரி தெற்கு அட்சரேகைகளில் உள்ள இடங்களாகும். அங்கு உள்ளவர்களுக்கு பிறைச் சந்திரன் ஆங்கில C  வடிவில் தெரியும். B முதல் C  வரையில உள்ள அட்சரேகைகளில் இருப்பவர்களுக்கு சாய்வான C வடிவில் தெரியும்.

மேலே காணும் வரை படத்தைக் கீழ்க்கண்ட மாதிரியிலும் வரையலாம். இப்படத்தில் A என்பது 50 டிகிரி வடக்கு அட்சரேகைப் பகுதி. அங்கிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன் D மாதிரியாகத் தான் தெரியும். B என்பது பூமியின் நடுக்கோட்டுப் பகுதி. அங்கு பிறைச் சந்திரன் படகு வடிவில் தெரியும். C என்பது 50 டிகிரி தெற்கு அட்சரேகைப் பகுதி. அங்கிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன் C  வடிவில் தெரியும்.இது ஏன் என்பது படத்தப் பார்த்தாலே புரியும்.


ஆக, பிறைச் சந்திரன் ஒன்று தான். வெவ்வேறு இடங்களிலிருந்து பார்ப்பதால் வெவ்வேறு வடிவில் தெரிகிறது.