Nov 10, 2011

காற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்பாசனம்

Share Subscribe

ஆஸ்திரேலிய இளைஞர் உருவாக்கியுள்ள ஏற்பாட்டில் வேர்களுக்கே நேரடியாக நீர் கிடைக்கிற்து
பாலைவனத்திலும் இனி செடிகளை வளர்ப்பது சாத்தியமாகலாம். ஆஸ்திரேலிய இளைஞர் செய்துள்ள கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் காற்றில் அடங்கிய நீர்ப்பசையை நீராக மாற்றி தாவரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு ரூ 7,30,000 பரிசு கிடைத்துள்ளது.  அந்த மாண்வரின் பெயர் எட்வர்ட் லினாக்ரே.

ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற நாட்டில் பெரிய பாலைவனம் உள்ளது. அப்பாலைவனத்தில் காணப்படும் ஒரு வண்டு (Stenocara gracilipes ) மூலம் லினாக்ரே தமது கண்டுபிடிப்புக்கு ஐடியா பெற்றார்.இந்த வண்டின் முதுகு விசேஷ அமைப்பைப் பெற்றுள்ளது. அட்லாண்டிக் கடலிலிருந்து  ஈரபபசை கொண்ட காற்று பாலைவனத்தை நோக்கி வீசும்

இந்த வண்டின் முதுகு மீது அமைந்த நுண்ணிய பகுதிகள் காற்றில் அடங்கிய ஈரப்பசையை ஈர்த்து அதை நுண்ணிய நீர்த்துணுக்குகளாக மாற்றும். அந்த நீர் துணுக்குகள் பின்னர் நுண்ணிய வரிப் பள்ளங்கள் வழியே வண்டின் வாய்ப் பகுதிக்குச் செல்லும். வண்டு இவ்விதமாகக் கிடைக்கும் நீரை அருந்தும். சுருங்க்ச் சொன்னால் காற்றில் அடங்கிய ஈரப் பசையை நீராக மாற்றும் திறன் அந்த வண்டுக்கு இருக்கிறது.
 நமீபியா பாலைவனத்து வண்டு
உங்களாலும் காற்றில் உள்ள ஈரப்பசையை நீராக மாற்றிக் காட்ட முடியும். ஒரு கண்ணாடித் தம்ளரை எடுத்து சற்றும் ஈரப் பசை இல்லாமல் நன்கு துடைக்கவும். அதை ஒரு மேஜையில் வைத்து விட்டு அதனுள் சில ஐஸ் கட்டிகளைப் போடவும்.

சற்று நேரம் கழித்துப் பார்த்தால் தம்ளரின் வெளிப்புறத்தில் நீர்த் துணுக்குகள் காணப்படும். அத்துணுக்குகள் சேர்ந்து நீராக மாறி தம்ளரைச் சுற்றி நீர் காணப்படும். ஐஸ் கட்டி காரணமாக தம்ளரின் வெளிப்புறம் குளிர்ச்சி அடையும் போது தம்ளரின் வெளிப்புறத்தில் படும் காற்றில் உள்ள ஈரப்பசை நீராக மாறுகிறது.

காற்றில் உள்ள ஈரப் பசையை நீராக மாற்றும் தொழில் நுட்பம் புதிது அல்ல. இந்தியாவிலும் சரி, அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் வழங்கும் யூனிட்டுகளைக் காணலாம். நமிபியப் பாலைவன வண்டு செயல்படும் பாணியில் ஈரப்பசையை நீராக மாற்ற அமெரிக்காவிலும் ஒரு ஆராய்ச்சி நடைபெற்று வந்துள்ளது என்றாலும் அது மிக சிக்கலானது. அந்த முறையில அவ்வளவாக வெற்றி கிட்டவில்லை.
எட்வர்ட் லினாக்ரே
ஆனால் லினாக்ரே உருவாக்கியுள்ள தொழில் நுட்பம் செலவு குறைந்தது. கிராமப்புற மக்கள் பயன்படுத்தக்கூடியது. செடி, கொடிகளுக்குப் பாசன வசதியை அளிப்பது. இயற்கையை ஒட்டி அமைந்தது.

ஆஸ்திரேலியாவில் மர்ரே டார்லிங் எனப்படும் பகுதியில் தொடர்ந்து 12 ஆண்டுகளாகக் கடும் வறட்சி நிலவி விவசாயம் படுத்தது. கடன் சுமை தாங்காமல் விவசாயிகள் தற்கொலையில் ஈடுபட்டனர். வாரம் ஒரு விவசாயி தற்கொலை என்ற பரிதாப் நிலை தோன்றியது. இப்படியான நிலைமைக்குத் தீர்வு காண ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு  லினாக்ரே தமது இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய ஏற்பாட்டில் ஒரு யந்திரம் (டர்பைன்) காற்றை உறிஞ்சி அதைக் குழாய்கள் வழியே நிலத்துக்கு அடியில் கொண்டு செல்கிறது. நிலத்துக்கு அடியில் பல குழாய்கள் இருக்கும். அங்கு காற்று குளிர்ந்து காற்றில் உள்ள ஈரப்பசை நீராக மாறும். இந்த நீர் நிலத்துக்கு அடியில் உள்ள தொட்டியில் போய்ச் சேரும். தொட்டிக்குள் அமைந்த மோட்டார் இயங்கும் போது அந்த் நீர் சிறு சிறு குழாய்கள் மூலம் செடிகளின் வேர்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

காற்றை உறிஞ்சும் டர்பைன் இயங்குவதற்கு வெளி மின்சார இணைப்பு தேவையில்லை.சூரிய ஒளிப் பலகைகள் வெயிலை மின்சாரமாக மாற்றித் தருகின்றன. இந்த டர்பைன் கடும் காற்றிலும் செயல்படக்கூடியது. காற்று மெல்ல வீசினால் பாட்டரிகள் மூலமும் மின்சாரத்தைப் பெற முடியும். நிலத்துக்கு அடியில் தொட்டிக்குள் சிறு மிதவை உண்டு.தொட்டியில் தண்ணீர் மட்டம் குறைந்தால் பம்பு தானாக செயல்படாமல் நின்று விட இந்த மிதவை உதவுகிறது.
லினாக்ரே விவசாயிகளுக்கான கருவிகளை உருவாக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருடன் அந்தந்தக் கட்டத்தில் கலந்தாலோசித்து தான் தமது கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். வீட்டைச் சுற்றி தமது தாய் போட்டிருந்த தோட்டத்தில் இதைப் பயன்படுத்தி சோதித்தார். ஆகவே இது நடைமுறையில் பயன்படுத்தத்தக்க ஒன்றாக உள்ளது. அவர் தமது இந்த்க் கண்டுபிடிப்பை Airdrop Irrigation system என்று குறிப்பிடுகிறார். இந்த ஏறபாடானது சொட்டு நீர்ப் பாசனத்தை விட ஒரு படி மேலானது. அதாவ்து இது நேரடியாக வேர்களுக்கே நீரை அளிக்கிறது.

இந்தியாவில் பாசன வசதியில்லாத் நிலங்கள் எவ்வளவோ உள்ளன. இக்கருவியின் விலை கட்டுபடியாகக் கூடியதாக இருக்குமானால் இந்திய விவசாயிகளும் காய்கறி சாகுபடி போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்த இயலும். ஆனால் இக்கருவி வர்த்தக ரீதியில் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செயயப்படுவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.

லினாக்ரே ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற மாணவர். இப்பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவின் பிரபல பல்கலைக் கழகமாகும். இதில் இந்திய மாணவர்கள் பலரும் படிக்கிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீசுவரர் ஜேம்ஸ் டைசன் டிசைன் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அறக்கட்டளை ஒன்றை 2002 ஆம் ஆண்டில் நிறுவினார். அந்த அறக்கட்டளை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யும் டிசைன் எஞ்சினியரிங் மாணவர்களுக்கு பரிசுகளை அளிக்கிறது. லினாக்ரேவுக்கான பரிசு ந்வம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அவர் படிக்கும் பல்கலையின் டிசைன் எஞ்சினியரிங் துறைக்கும் அதே அளவிலான தொகை பரிசாகக் கிடைக்கும்.

லினாக்ரேக்கு பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளன.


9 comments:

ராஜா said...

சிறப்பான தகவல்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான அரிய தகவல்
விரிவாக தெளிவாக பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 1

Mugunth/முகுந்த் said...

Good article - its always better to give the source(reference) links. I could find this reference for this article above here: http://www.swinburne.edu.au/chancellery/mediacentre/media-centre/news/2011/11/unique-irrigation-system-wins-dyson-award

ப.கந்தசாமி said...

இந்த மாதிரி தொழில் நுட்பங்கள் ஆராய்ச்சி ஆளவில் வெற்றி பயக்கலாம். நடைமுறைக்கு சாத்தியமா என்பதை காலம்தான் சொல்லும்.

chandrasekaran said...

காற்றில் ஈரப்பதம் குறைஞ்சா மற்ற ஜீவராசிகளுக்கு என்ன பாதிப்பு வரும்? இப்படியே போனா ஆக்சிஜனை உறிஞ்சி கார் ஓட்டறேனு கிளம்பினா என்ன ஆகும்?

என்.ராமதுரை / N.Ramadurai said...

முகுந்த்
தங்கள் யோசனை கருத்தில் கொள்ளப்படும்.

டாக்டர் பி.கந்தசாமி
தாங்கள் கூறுவது சரியே. பல கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும் போது பலனளிக்காமல் போவது உண்டு.இப்போதைய கண்டுபிடிப்பில் அப்படி நேராது என நம்புவோம்.

கே.எம்.சந்திரசேகரன்
காற்று மண்டலம் என்பது மிகப் பெரியது. காற்றில் ஈரப்பதம் எந்த ஒரு இடத்திலும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. நேரத்துக்கு நேரம் நாளுக்கு நாள் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.

இப்போது உலகில் இயங்கும் விமானம்,டீசலினால் இயங்கும் ரயில் வண்டி,லாரி, கார், ஸ்கூட்டர் என எல்லா வாகனங்களுமே ஆக்சிஜனை உறிஞ்சித் தான் இயங்குகின்றன.ஆலைகளும் தான். இவற்றில் பயன்படுத்தப்படும் டீசல்,பெட்ரோல், நிலக்கரி,பழுப்பு நிலக்கரி,உலை எண்ணெய், எரிவாயு என எல்லாவித எரிபொருட்களும் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை.அவை வெளிவிடும் கார்பன் டையாக்சைட் ஏராள்மான அளவுக்கு காற்றில் சேர்ந்து இன்று பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.அது தனி விஷ்யம்.

bandhu said...

நிறைய நல்ல தகவல்கள். மிக்க நன்றி.

வவ்வால் said...

ராம்துரை ,

காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் எந்திரம் வணிக ரீதியகவே பயன்பாட்டில் இருக்க 15; , இப்போ தான் மாணவ திட்டம், பரிசுனு புதுசா கண்டுபிடிக்கிறாங்களா? எப்படி?

2007 ல நான் அது ப்ப்சத்தி போட்ட பதிவு இங்கே,

http://vovalpaarvai.blogspot.com/2007/09/blog-post_17.html

என்.ராமதுரை / N.Ramadurai said...

வ்வ்வால்
நீங்கள் மேலே உள்ள கட்டுரையை சரியாகப் படிக்கவில்லை.”அலுவலகங்கள்,ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில்.. ” என்ற வாக்கியத்தை மீண்டும் படிக்கவும்.அதாவது காற்றிலுள்ள ஈரப்பசையை நீராக்கும் தொழில் நுட்பம் ஏற்கெனவே உள்ளது என்பது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இத் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலானவை எல்லாமே சிறிய யூனிட்டுகள்

லினாக்ரே உருவாக்கியுள்ளது நீர்ப்பாசன வசதிக்கானது.தவிர, இது மின்சார இணைப்பின்றி செயல்படுவது. இக் காரணங்களால் அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லலாம்.

Post a Comment