Showing posts with label Curiosity. Show all posts
Showing posts with label Curiosity. Show all posts

Nov 24, 2011

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?

Share Subscribe
செவ்வாய் கிரகத்தில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதலாவது வாரத்தில் இறங்கி ஆராயப் போகும் கியூரியாசிடி உண்மையில் நடமாடும ஆராய்ச்சிக்கூடம் (Mars Science Laboratory). அதை ராட்சத ரோபாட் என்றும் வருணிக்கலாம். மனிதனுக்கு உறுப்புகள் உள்ளது மாதிரி அதற்கும் பல உறுப்புகள் உண்டு. எவரும் மலைக்கத்தக்க அளவில் அதன் உயரம் சுமார் 10 அடி. 6 சக்கரங்கள் வடிவில் உறுதியான கால்கள் உள்ளன.

கியூரியாசிடி - ஓவியர் தீட்டிய படம்

மேல் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கும் தண்டின் உச்சியில் ஒரு நெற்றிக் கண். அதற்கு சற்று கீழே காமிரா வடிவில் இரு கண்கள்.. சுற்று வட்டாரத்தை நோட்டம் விடுவதற்கான வகையில் தண்டின் உச்சிப் பகுதி எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பக்கூடியது.

மூன்று கண்கள் போதாதென அந்த ரோபாட்டின் வெவேறு பகுதிகளில் மேலும் பல காமிராக்கள். முன் சக்கரங்களுக்கு சற்று மேலே இரு காமிராக்கள். பின்புறத்தில் இதே போல இரு புறங்களிலும் இரு காமிராக்கள். வழியறிந்து செல்ல இவை உதவும், வழியில் தடங்கல் இருந்தால் முன் சக்கர காமிராக்கள் உஷார் படுத்தும்.

குனிந்து கல்லையும் மண்ணையும் அள்ளுவதற்கு கிரேன் வடிவில் ஒரு வலுவான கரம். இக்கரத்தின் நுனிப் பகுதியிலும் ஒரு காமிரா உண்டு. கரத்தின் நுனிப் பகுதியில் ஆல்பா கதிர்களையும், எக்ஸ் கதிர்களையும் வெளிப்படுத்தும் கருவி உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கல் மீது இக்கருவி இந்தக் கதிர்களைப் பாய்ச்சும் போது அக்கல்லின் தன்மை, அதில் அடங்கிய மூலகங்கள் ஆகியன தெரிய வரும்.

குறிப்பிட்ட கல்லைத் தேர்ந்தெடுத்து ஆராய வேண்டுமா என்று விஞ்ஞானிகள் முடிவு செய்ய இக்கருவி உதவும். நீண்ட கரத்தின் நுனியில் துளையிடும் கருவியும் உண்டு. பாறை அல்லது நிலத்தில் துளையிட்டு பொடி வடிவில் சாம்பிள்கள் சேகரிக்கப்ப்டும். அவை ஆராய்ச்சிகூடத்தில் மேலும் பரிசோதிப்பதற்கான பகுதிக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அப்பொடி சலிக்கப்பட்டு அடுப்புக்குள் போடப்படும். சாம்பிள்கள் 1000 டிகிரி அளவுக்கு சூடேற்றப்பட்டு ஆராயப்படும்.

செவ்வாய் கிரக மண்ணையும் கல்லையும் ஆராய்ந்து தகவல் சேகரிப்பதில் நெற்றிக் கண்ணுக்கு முக்கிய பங்கு உண்டு. அதிலிருந்து கிளம்பும் லேசர் ஒளிக் கற்றையானது சுமார் 7 மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கற்களைத் தாக்கி சுட்டெரித்து விடும். கல் தீப்பற்றி எரியும் போது எழும் நெருப்பையும் வெளிப்படும் வாயுக்களையும் நெற்றிக் கண் அருகில் உள்ள ஆய்வுக் கருவிகள் பகுத்து ஆராய்ந்து அக்கல்லில் அடங்கிய வேதியல் பொருட்கள் யாவை என்று கண்டறிந்து கொள்ளும்.

 செவ்வாயின் காற்று மண்டலம் என்பது பெரிதும் கார்பன் டையாக்சைட் வாயுவினால் ஆனது. இதில் எந்த அளவுக்கு ஆக்சிஜன் அடங்கியுள்ளது, காற்று மண்டலத்தில் மீதேன் வாயு உள்ளதா என்று ஆராயும் கருவிகளும் இந்த நடமாடும் ஆராய்ச்சிக்கூட்த்தில் உள்ளன. ஹைட்ரஜன் வாயு, ஐஸ், தண்ணீர் ஆகியன உள்ளனவா என்று ஒரு தனி கருவி ஆராயும்.

நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் மெதுவாகத் தான் நகர்ந்து செல்லும். இதன் நடமாட்டத்துக்கும் மற்றும் கருவிகள் இயங்குவதற்கும் மின்சாரம் தேவை. ஆகவே கியூரியாசிடியில் ஐந்து கிலோ புளூட்டோனியம்-238 என்ற அணுசக்திப் பொருள் வைக்கப்பட்டுள்ளது. இது ஓயாது வெப்ப வடிவில் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த வெப்பம் மின்சாரமாக மாற்றப்படும். செவ்வாயில் இரவு நேரத்தில் கடும் குளிர் இருக்கும். அக்குளிர் கியூரியாசிடியில் உள்ள கருவிகளைப் பாதிக்காமல் இருக்க அணுசக்திப் பொருள் வெளிப்படுத்தும் வெப்பத்தில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.

 பாத் ஃபைண்டர் மற்றும் ஆப்பர்சூனிடி மாடல்கள்
விண்வெளி யுகம் பிறந்ததிலிருந்து எந்த ஒரு கிரகத்துக்கும் இவ்வளவு நுட்பமான, இவ்வளவு வசதி கொண்ட, இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கூடம் அனுப்பப்ப்ட்டது கிடையாது.

சந்திரனுக்கு 1969 ல் தொடங்கி பல விண்வெளி வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. அவர்கள் சேகரித்து வந்த கல்லும் மண்ணும் பின்னர் ஆராய்ச்சிக்கூடங்களில் வைத்து ஆராயப்பட்டன. இத்துடன் ஒப்பிட்டால் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக் கலமானது நிபுணர்கள் செய்ய வேண்டிய பல பணிகளைத் தானே செய்து அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை பூமிக்கு அனுப்பப்போகிறது.

கியூரியாசிடி மேற்கொள்ள இருக்கும் அத்தனை ஆராய்ச்சிகளும் செவ்வாயில் Gale Crater எனப்படும் வட்ட வடிவப் பள்ளம் அமைந்த பகுதியில் நடைபெறும். கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய விண்கல் செவ்வாயைத் தாக்கிய போது இந்த வட்ட வடிவப் பள்ளம் தோன்றியது. 154 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட இந்த வட்ட வடிவப் பள்ளத்தின் நடுவே ஐந்து கிலோ மீட்டர் உயரம் கொண்ட மலையும் உள்ளது. 100 விஞ்ஞானிகள் கூடி ஆராய்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். இங்கு தான் நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் போய் இறங்கும்.

Gale Crater எனப்படும் வட்ட வடிவப் பள்ளம்.
கருப்புக் கோட்டினால் வட்டமிடப்பட்ட
இடத்தில் தான் கியூரியாசிடி போய் இறங்கும்.
செவ்வாய் கிரகத்தில் ஏதோ ஒரு காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாகத் தோன்றுகிறது. இந்த வட்ட வடிவப் பள்ளத்தில் என்றேனும் தண்ணீர் தேங்கியிருந்திருக்குமானால் அங்குள்ள நிலப் பகுதியில் நுண்ணியிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆகவே தான் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கியூரியாசிடி 23 மாத காலம் இப்பகுதியில் அங்குமிங்கும் 20 கிலோ மீட்டர் நடமாடும்.

செவவாய் கிரகத்தை சுற்றிக்கொண்டிருக்கும்
ஒடிசி விண்கலம்
கியூரியாசிடியின் மூளை என்று சொல்லத்தக்க வகையில் அதனுள் இரண்டு கம்ப்யூட்டர்கள் உண்டு. இவை எல்லாத் தகவல்களையும் சேகரித்து செவ்வாய் கிரகத்தை ஏற்கெனவே தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோளுக்கு அனுப்பும். செயற்கைக்கோளிலிருந்து அவை பூமியில் ஆங்காங்கு நாஸா அமைத்துள்ள கேந்திரங்களுக்கு வந்து சேரும். சிக்னல்கள் நேர் கோட்டில் செல்பவை. செவ்வாய் கிரகம் தனது அச்சில் சுழல்கிறது.  பூமியும் தனது அச்சில் சுழல்கிறது. ஆகவே கியூரியாசிடி இருக்கின்ற இடம் அமெரிக்காவுக்கு நேர் எதிரே இல்லாமல் போகலாம். ஆகவே தான் செயற்கைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளும் ஏற்பாடு பின்பற்றப்படும்.

கியூரியாசிடியை செவ்வாய்க்கு அனுப்பி பரிசோதனைகளை நடத்துவதில் நான்கு பிரதான நோக்கங்கள் உள்ளன. செவ்வாயில் என்றேனும் நுண்ணுயிர்கள் தோன்ற வாய்ப்பு இருந்திருக்குமா? செவ்வாயில் நிலவும் பருவ நிலைமைகள் எத்தன்மை கொண்டவை? செவவாயின் கல், மண், நில அமைப்பு ஆகியவை எப்படிப்பட்டவை? செவ்வாய்க்கு எதிர்காலத்தில் மனிதன் செல்வதற்கு எந்த அளவில் உகந்த நிலைமைகள் உள்ளன? நடமாடும் ஆராய்ச்சிக் கூடம் அனுப்பும் தகவல்கள் மூலம் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளில் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய் கிரகத்துக்குத்தான் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டுள்ளன. 1960 களில் அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் செவ்வாய் பக்கமும் திரும்பியது.

முதல் கட்டமாக செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் இறங்க முயலவில்லை. நெடுஞ்சாலையில் காரில் வேகமாகச் செல்லும் போது சாலை ஓரமாக உள்ள குக்கிராமத்தின் குடிசைகளை போட்டோ எடுப்பது மாதிரியில் செவ்வாயைக் கடந்து சென்ற விண்கலங்கள் தொலைவில் இருந்தபடி செவ்வாய் கிரகத்தைப் படம் பிடித்து அனுப்பின. 1965 ஆம் ஆண்டில அமெரிக்காவின் மாரினர்-4 விண்கலம் இவ்விதம் படங்களைப் பிடித்து அனுப்பிய போது அது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. காரணம் செவ்வாயை ‘அருகே’ சென்று படம் பிடித்த முதல் விண்கலம் அதுவேயாகும்.

மாரினர்-4 விண்கலம்
அடுத்த கட்டமாக விண்கலங்கள் செவ்வாயை நெருங்கி அதன் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயின் செயற்கைக்கோளாகின.வானிலிருந்து அவை செவ்வாயின் நிலப்பரப்பைப் படம் பிடித்து அனுப்பின.

மூன்றாவது கட்டத்தில் பூமியிலிருந்து சென்ற விண்கலம் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்த பின்னர் அதிலிருந்து சிறிய ஆய்வுக் கலம் செவ்வாயில் இறங்கிப் படங்களை அனுப்பியது.

நான்காவது கட்டத்தில் இவ்விதம் இறங்கிய சிறிய ஆய்வுக் கலங்கள் செவ்வாயின் நிலப்பரப்பில் மெதுவாக நகர்ந்து படங்களைப் பிடித்தன. சில ஆய்வுகளையும் மேற்கொண்டன. 1996 ஆம் ஆண்டில் பாத்ஃபைண்டர் (PathFinder) ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டது., 2004 ஆம் ஆண்டில் ஸ்பிரிட் (Spirit), ஆப்பர்சூனிடி (Opportunity) ஆகிய இரண்டு ஆய்வுக் கலங்கள் அனுப்பப்பட்டன. இவை வடிவில் சிறியவை. பாத்ஃபைண்டரின் உயரம் 30 செண்டிமீட்டர். எடை 10 கிலோ. ஸ்பிரிட் மற்றும் ஆப்பர்சூனிடியின் உயரம் 1.5 மீட்டர். இரண்டுமே தலா 180 கிலோ எடை கொண்டவை. கியூரியாசிடியின் எடையோ 800 கிலோ.

மாணவி கிளாரா மா
முன்னர் அனுப்பப்பட்ட நடமாடும் ஆய்வுக் கலங்கள் மூலம் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தான் இப்போதைய நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் உருவாக்கப்பட்டது. இதற்குப் பெயர் வைப்பதற்காக நாஸா ஒரு போட்டியை நடத்தியது.  ஆறாவது வகுப்பு படிக்கும் கிளாரா மா என்னும் 12 வயது அமெரிக்க மாணவி இப்போட்டியில் பங்கு கொண்டார். அவர் கூறிய பெயர் ஏற்கப்பட்டு கியூரியாசிடி என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாணவியை கவுரவிக்கும் வகையில் கியூரியாசிடி விண்கலம் மீது அவர் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டார்.

கியூரியாசிடியை சுமந்தபடி அமெரிக்க அட்லஸ் (Atlas) ராக்கெட் வருகிற 26 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும். சுமார் எட்டரை மாதப் பயணத்துக்குப் பிறகு அது செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேரும்.

மேலும் படிக்க:

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி?
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

Nov 22, 2011

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி?

Share Subscribe
அமெரிக்க நாஸா (NASA) விண்வெளி அமைப்பு வருகிற 26 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி கியூரியாசிடி(Curiosity) என்னும் பெயர் கொண்ட ஆளில்லா விண்கலம் ஒன்றைச் செலுத்த இருக்கிறது. ஒரு கார் சைஸிலான இந்த விண்கலம் செவ்வாயின் நிலப்பரப்பில் மண்ணைத் தோண்டி ஆராய்ச்சி நடத்த இருக்கிறது. இது பற்றி நாம் அடுத்த பதிவில் கவனிப்போம். முதலில் நாம் செவ்வாய் கிரகத்துக்கு (ஆளில்லா விண்கலமாக இருந்தாலும் சரி) எப்படிச் செல்வது என்பதைக் கவனிப்போம்.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகம் நமக்குப் பக்கத்து வீடு மாதிரி என்றாலும் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. சந்திரனுக்கு 36 மணி நேரத்தில் கூடப் போய்ச் சேர்ந்து விட முடியும். ஆனால் செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேர பல மாதங்கள் ஆகும். அமெரிக்கா அனுப்புகின்ற கியூரியாசிடி விண்கலம் செவ்வாய்க்குப் போய்ச் சேர எட்டரை மாதங்கள் பிடிக்கும்.

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் நாம் அனுப்புகின்ற விண்கலம் நேர்கோட்டுப் பாதையில் செல்வது கிடையாது. விண்வெளியில் நேர்கோட்டுப் பயணம் என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.


மேலே உள்ள வரை படத்தைக் கவனிக்கவும்.இப்படத்தில் பூமி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சுற்றுப்பாதைகளும் காட்டப்பட்டுள்ளன. உள்வட்டம் பூமியின் சுற்றுப்பாதை. வெளி வட்டம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதை. நாஸாவின் அட்லஸ் (Atlas) ராக்கெட் கியூரியாசிடி விண்கலத்தை சுமந்தபடி நவம்பர் 26 ஆம் தேதி உயரே கிளம்பும் போது பூமியானது E-1 என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இருக்கும். செவ்வாய் கிரகம் தனது சுற்றுப்பாதையில் அத்தேதியில் M 1 என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இருக்கும்.T எனப்து விண்கலம் செல்ல இருக்கும் பாதையாகும். இது உடைந்த கோடு மூலம் காட்டப்பட்டுள்ளது.

மேற்படி தேதியில் பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் சுமார் 20 கோடி கிலோ மீட்டர். எனினும் விண்கலம் நேர்கோட்டுப் பாதையில் செவ்வாயை நோக்கிச் செல்ல முற்படாது. அது வளைந்த பாதையில் செல்வதாக இருக்கும்.   இப்படியாக வளைந்த பாதையில் விண்கலம் செல்வதால் அது பயணம் செய்கின்ற தூரம் 57 கோடி கிலோ மீட்டராகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வளைந்த பாதையில் செல்வதில் தான் ஆதாயம் உள்ளது. செவ்வாய்க்கு நேர் கோட்டுப் பாதையில் செல்ல முயன்றால் அது சூரியனுக்கு எதிர் திசையில் செல்வதாக இருக்கும். இதனால் ராக்கெட்டுக்கு அதிக எரிபொருள் தேவைப்படும். அதிக எரிபொருள் கொண்ட ராக்கெட்டை உருவாக்க முற்பட்டால் அது சுமந்து செல்லக்கூடிய விண்கலத்தின் எடையைக் குறைத்தாக வேண்டும். வளைந்த பாதையில் செல்லும் போது அதிக எரிபொருள் தேவையில்லை. அதிக எடை கொண்ட விண்கலத்தை அனுப்ப இயலும்.

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதை ஒரு பரிசல் மூலம் ஆற்றைக் கடப்பதுடன் ஒப்பிடலாம். பரிசல் மூலம் ஓர் ஆற்றைக் கடக்க படகோட்டி நீரின் ஓட்டத்துடன் துடுப்புப் போட்டுச் சென்றால் அதிகம் சிரமப்படாமல் மறு கரையை அடையலாம். மூன்று பயணிகளை ஏற்றிச் செல்லலாம்.

ஆனால் அப்படிச் செல்லும் போது புறப்பட்ட இடத்திலிருந்து நேர் எதிரே உள்ள இடத்துக்குப் போக முடியாது. மறு கரையில் நேர் எதிரே உள்ள இடத்துக்குத் தான் சென்றாக வேண்டும் என்று படகு ஓட்டுவதானால் ஆற்று நீரின் இழுப்பைச் சமாளிக்க மூவர் வேக வேகமாகத் துடுப்புப் போட்டாக வேண்டும். ஒரு பயணியைத் தான் ஏற்றிச் செல்ல முடியும்.

ஆற்றின் ஓட்டத்தோடு துடுப்புப் போடுவது போன்ற முறை தான் விண்வெளிப் பயணத்தில் பின்பற்றப்படுகிறது.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். விண்கலத்துடன் உயரே கிளம்புகின்ற ராக்கெட் முதலில் பூமியைச் சுற்றி வரும். நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தவுடன் அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும். பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்ல இந்த அளவு வேகம் தேவை. பூமியின் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு ராக்கெட் (எஞ்சின்) தொடர்ந்து செயல்படத் தேவையில்லை. ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு போல விண்கலம் விண்வெளியில் 'மிதந்து' செல்ல முற்படுகிறது.

செவ்வாய்க்கு 2001 ல் ஒடிசி விண்கலம்
பின்பற்றிய பாதை (வெள்ளை நிறக் கோடு)
அப்படியே விட்டால் அது செவ்வாய்க்குப் போய்ச் சேராது.அது இயற்கையின் விதிகளின்படி பூமி மாதிரியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்து விடும். ஆகவே அந்த விண்கலத்தின் பயணத்தின் போது விண்கலத்தில் உள்ள சிறு பீச்சு கருவிகளைக் (Thrustors) குறைந்தது ஐந்து தடவை இயக்கி அதன் பாதையில் சிறு மாற்றங்களைச் செய்வர். வடிவில் மிகச் சிறிய இந்த பீச்சு கருவிகளை அவ்வப்போது சில வினாடி இயக்கினாலே விண்கலத்தின் பாதையில் மாற்றங்களைச் செய்ய இயலும். இப்படியாக் விண்கலம் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்யப்படும்.

கியூரியாசிடி விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேரும். அன்றைய தினத்தில் பூமியானது E-2 என்ற இடத்தில் இருக்கும். செவ்வாய் கிரகம் தனது சுற்றுப்பாதையில் M-2 என்ற இடத்தில் இருக்கும். பூமி, செவ்வாய் இரண்டுமே ஓயாது சூரியனை சுற்றிக்கொண்டு இருக்கின்றன என்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் அவை இடம் மாறியிருக்கும்.

 செவ்வாய்க்குச் செல்கின்ற விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையை எட்டும் போது செவ்வாய் அந்த இடத்தில் இருக்கும் வகையில் ஒரு விண்கலத்தின் பாதை திட்டமிடப்படுகிறது. சொல்லப்போனால் அந்த விண்கலம் செவ்வாயை நெருங்கி விட்ட பின் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப்பிடியில் சிக்கி செவ்வாயில் இறங்க முடியும்.

விண்கல்த்தின் வேகத்தை எப்போது எந்தக் கட்டத்தில் குறைக்க வேண்டும் என்பதெல்லாம் மிக சிக்கலான விஷயம்.செவ்வாயின் ஈர்ப்புப்பிடியில் சிக்கிய பின் ஒரு விண்கலம் வேகமாக கீழ் நோக்கி இழுக்கப்படும். விண்கலம் ஒரு விமானம் போன்று தரை இறங்க முடியாது. ஒரு கட்டத்தில் இறங்குகலம் மட்டும் பிரிந்து பாரசூட் மூலம் கீழே இறங்க ஆரம்பிக்கும். அப்போதும் கூட இறங்குக்கலம் தரையில் வேகமாக மோத வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே எதிர் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். இவை கீழ் நோக்கி நெருப்பைப் பீச்சும் போது இறங்கு கலத்தின் வேகம் குறையும். இதுவும் ஒரு சிக்கலான ஏற்பாடே. முன்னர் பல தடவை செவ்வாய்க்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பி வெற்றிகரமாகத் தரை இறங்கச் செய்துள்ள அனுபவம் நாஸாவுக்கு இருப்பதால் இது விஷயத்தில் தக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன். செவ்வாய்க்குச் செல்லும் கியூரியாசிடி விண்கலம் எவ்விதம் த்ரையில் இறங்கும் என்பதைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.

எதிர்காலத்தில் மனிதன் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்குவதானாலும் இப்படி பாரசூட் மூலம் இறங்க வேண்டியிருக்கலாம். அவ்வளவு போவானேன்? ரஷிய சோயுஸ் (Soyuz) விண்கலம் மூலம் பூமிக்கு உயரே இருக்கின்ற சர்வதேச் விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பும் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புகையில் ஒரு கூட்டுக்குள் அமர்ந்தபடி பாரசூட் மூலம் தான் தரையில் வந்து இறங்குகின்றன்ர்.

செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த போதெல்லாம் விண்கலத்தை அனுப்ப முடியாது. விண்கலம் செவ்வாயில் இறங்குகின்ற கால கட்டத்தில் செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையே சூரியன் அமைந்திருக்கலாகாது. பூமியிலிருந்து செவ்வாயில் உள்ள விண்கல்த்துக்கு சிக்னல்கள் வடிவில் ஆணைகள் பிறப்பிப்பதிலும் செவ்வாயிலிருந்து சிக்னல்களைப் பெறுவதிலும் நடுவில் உள்ள சூரியன் காரணமாக இடையூறுகள் ஏற்படும். சூரியன் காரணமா சிகனல்களின் தரம் பாதிக்கப்படும்.

இதை மனதில் கொண்டு தான் விண்கலத்தைச் செலுத்தும் தேதி தீர்மானிக்கப்படுகிறது. விண்கலம் செவ்வாயில் செயல்பட ஆரம்பித்த சில காலத்துக்குப் பிறகு சூரியன் நடுவே அமைந்திருந்தால் அவ்வளவாகப் பிரச்சினை இல்லை.

செவ்வாய் பயணத்தில் இன்னொரு பிரச்சினையும் உண்டு. செவ்வாய் கிரகத்தில் ஒரு நண்பர் இருப்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அவருடன் டெலிபோனில் பேச முடியும். நீங்கள் ஹலோ சொல்லி 21 நிமிஷத்துக்குப் பிறகுதான் அவருக்கு உங்கள் குரல் காதில் விழும். அவர் பதிலுக்கு ஹலோ சொன்னால் அது உங்கள் காதுக்கு வந்து சேர மேலும் 21 நிமிஷம் ஆகும்.

சிக்னல்கள் ஒளி வேகத்தில் சென்றாலும் செவ்வாய் வெகு தொலைவில் இருப்பதால் இப்படியான பிரச்சினையைத் தவிர்க்க முடியாது. செவ்வாய் பூமிக்கு அருகே இருக்கும் போது உங்கள் குரல் 4 நிமிஷத்தில் போய்ச் சேரும்.அவரது குரல் உங்களுக்குக் கேட்க இதே போல 4 நிமிஷம் ஆகும்.    இருபது நிமிஷமா, நான்கு நிமிஷமா என்பது அந்தந்த சமயத்தில் செவ்வாய் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொருத்தது.

செவ்வாய்க்கு விண்கலத்தில் போய் இறங்குகின்ற கட்டத்தில் விண்வெளி வீரர் வேகத்தை குறைப்பதற்கான பொத்தானை அமுக்குகிறார். அது வேலை செய்யவில்லை.’ ரொம்ப அர்ஜெண்ட் இப்போது என்ன செய்ய?’ என்று பெரும் பீதியுடன் கேட்கிறார். ‘ அருகே உள்ள சின்னப் பொத்தானை இரண்டு தடவை அமுக்குங்கள் ‘ என்று பதில் செய்தி அனுப்பலாம். எட்டு அல்லது பனிரெண்டு நிமிஷங்களுக்குப் பிறகு போய்ச் சேருகின்ற பதில் செய்தியால் பலன் இருக்குமா? சந்திரனைத் தாண்டி மனிதன் எங்காவது செல்வதென்றால் ஒன்றல்ல எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு.

மேலும் படிக்க:
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

Update:
கியூரியாசிடி விண்கலம் நவம்பர் 26 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அது செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.