Sep 9, 2012

குட்டிக் கோளுக்குத் தாவும் அமெரிக்க விண்கலம்

Share Subscribe
சூரியனை பூமி உட்பட ஒன்ப்து கிரகங்கள் சுற்றுவது நமக்குத் தெரியும். கிரகங்கள் மட்டுமன்றி  பல லட்சம் குட்டிக் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன  கிரிப் பிரதட்சிணம் செய்கின்ற கூட்டம் போல  இவை ஒரே கும்பலாகச் செல்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை சைஸில் சிறியவை. மலை அளவுள்ள குட்டிக் கோள்கள் உண்டு. பறக்கும் பாறாங்கல் என்று சொல்லத் தக்கவையும் உள்ளன. வெறும் 7 மீட்டர் குறுக்களவு கொண்ட ’குட்டிக் கோளும்’  உண்டு.
சூரியனை அஸ்டிராய்டுகள் சுற்றும் பாதை 
எனினும் சில  பெரும் தலைகளும் உள்ளன. சீரீஸ் (Ceres), பல்லாஸ் (Pallas), வெஸ்டா (Vesta), யுரோப்பா (Europa) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சீரீஸ் குறுக்களவு 950 கிலோ மீட்டர். வெஸ்டா குறுக்களவு 525 கிலோ மீட்டர். (இவற்றுடன் ஒப்பிட்டால் பூமியின் குறுக்களவு 12,756 கிலோ மீட்டர். சந்திரனின் குறுக்களவு சுமார் 3500 கிலோ மீட்டர்). இந்த அஸ்டிராய்டுகளில் வெஸ்டா சூரியனிலிருந்து சுமார் 37 கோடி மீட்டர் தொலைவிலும் சீரீஸ் 43 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.
அஸ்டிராய்ட் வெஸ்டா. இது டான்  எடுத்த ப்டம்
குட்டிக் கோள்கள் அனைத்தையும் அஸ்டிராய்ட்ஸ் (Asteroids)  என்ற பொதுப் பெயரில் குறிப்பிடுகின்றனர். அஸ்டிராய்டுகளில் வெஸ்டா, சீரீஸ், பல்லாஸ் போன்றவற்றைக் குட்டிக் கோள்கள் என்று வருணித்தால் அது பொருத்தமே. ஆனால் பெரும்பாலானவை  மிகவும் சிறியவை என்பதால் அவற்றை அஸ்டிராய்ட் என்று வருணிப்பதே பொருத்தமாக இருக்கும்
வலமிருந்து: பூமி, சந்திரன், சீரீஸ், வெஸ்டா
சூரியனை பூமி தனிப் பாதை அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது. மற்ற கிரகங்களும் அப்படியே. இது போலவே அஸ்டிராய்டுகள் அனைத்துக்கும் சூரிய மண்டலத்தில் தனிப் பாதை உண்டு. இது Asteroid Belt  என்று அழைக்கப்படுகிறது. இப்பாதை செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே அமைந்துள்ளது.

விஞ்ஞானிகளுக்கு அஸ்டிராய்டுகள் மீது தனி ஆர்வம் உண்டு. இவை அனைத்தும் சூரிய மண்டலம் தோன்றிய போது அதாவது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உண்டானவை. அவை அன்று இருந்தது போல இன்றும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆகவே அஸ்டிராய்டுகளை ஆராய்ந்தால் பூமி மற்றும் கிரகங்களின் தோற்றம் பற்றி மேலும் அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அஸ்டிரார்ய்ட் வெஸ்டாவில் உள்ள ஒரு மலை. டான் எடுத்த படம்
கடந்த பல ஆண்டுகளில் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி பல அஸ்டிராய்டுகள் ஆராயப்பட்டுள்ளன. அமெரிக்க விண்கலம் ஒன்று  ஈராஸ் என்ற அஸ்டிராய்டில் போய் மெல்ல இறங்கி சாதனை படைத்தது. ஜப்பான் அனுப்பிய ஹயாபுசா என்ற விண்கலம் ஓர் அஸ்டிராடை நெருங்கி லேசாக சுரண்டி சில நூறு நுண்ணிய துணுக்குகளை சேகரித்துக் கொண்டு  வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.

அமெரிக்காவின் நாஸா அமைப்பு  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற ஏற்பாடாக  வெஸ்டா, சீரீஸ் ஆகிய இரு அஸ்டிராய்டுகளை ஆராய 2007 ஆம் ஆண்டில் ‘டான்’(DAWN) என்னும் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்பியது. டான் 2011 ஜூலை 15 ந் தேதி வாக்கில் வெஸ்டாவுக்குப் போய்ச் சேர்ந்தது.

அந்த அஸ்டிராய்டை டான் ஓராண்டுக் காலம் சுற்றிச் சுற்றி வந்து ஆராய்ந்து பல தகவல்களை சேகரித்து அனுப்பியது.வெஸ்டாவிலிருந்து டான்  இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கிளம்புவதாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.ஆனால் டான் தனது   ஆய்வை முடித்துக் கொண்டு  இம்மாதம் 5 ஆம் தேதி தான்  அங்கிருந்து சீரீஸ் நோக்கிக் கிள்ம்பியது.டான் அடுத்து சீரீஸ் அஸ்டிராய்டை 2015 பிப்ரவரி வாக்கில் அடைந்து அதனை ஆராய்த் தொடங்கும். ஒரே விண்கலத்தைக் கொண்டு இரு அஸ்டிராய்டுகள் ஆராயப்படுவது இதுவே முதல் தடவை.
அஸ்டிராய்ட் சீரீஸ். ஹ்ப்புள் தொலை நோக்கி எடுத்த படம் 
சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெஸ்டா மீது இரண்டு த்டவை ஏதோ மோதியதாகக் கருதப்படுகிறது. அதன் விளைவாக அப்போது தூக்கி எறியப்பட்ட துண்டுகள் பலவும் காலப் போக்கில் பூமியில் விண்கற்களாக வந்து விழுந்துள்ளன.பூமியில் வந்து விழுந்துள்ள விண்கற்களில் ஐந்து சதவிகிதம் வெஸ்டாவிலிருந்து வந்தவையாக இருக்கலாம் என்ற் கருத்தும் உள்ளது.

அஸ்டிராய்ட் வெஸ்டாவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் விண்கல்
அஸ்டிராய்ட் ஒன்றுக்கு விண்கலத்தை அனுப்பி செயற்கைக்கோள் போல சுற்ற்ச் செய்வது என்பது மிகவும் கடினமானது. விண்கலம் அஸ்டிராய்டின் பிடியில் சிக்கினால் தான் விண்கலம் அஸ்டிராய்டை சுற்ற ஆரம்பிக்கும். அஸ்டிராய்ட்  என்பது வடிவில் சிறியது என்பதால் அதன் ஈர்ப்பு சக்தி ஒப்பு நோக்குகையில் மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே விண்கலத்தின் வேகத்தை மிகவும் குறைத்தால் தான் அது அஸ்டிராய்டின் பிடியில் சிக்கும்.

பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள விண்கலத்துக்குத் தக்க நேரத்தில் ஆணைகளைப் பிறப்பித்தால் தான் அது அஸ்டிராய்டின் பிடியிலிருந்து விடுபடும். இதை அடுத்து அதை வேறு ஓர் அஸ்டிராய்டை நோக்கி தகுந்த பாதையில் செல்லும்படி செய்ய வேண்டும். இதுவும் கடினமான பணியே. வெஸ்டாவின் பிடியிலிருந்து விடுபட்ட டான் விண்கலம் இப்போது சீரீஸ் குட்டிக் கோளை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.


டான் விண்கலம் தானாக வேகத்தைப் பெற முடியாது. ஆகவே அதில் இருந்த அயனி  பீச்சு கருவிகள் (Ion Propulsion Thruster) செய்லபட ஆரம்பித்ததும் டான் அங்கிருந்து கிளம்பியது.
டான் விண்கலம் பின்பற்றிய பாதை. வெஸ்டாவிலிருந்து டான் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கிளம்பும் என எதிர்பார்த்து இப் படம் வரையப்பட்டது. ஆனால் டான் செப்டம்பர் 5 ஆம் தேதி தான் கிளம்பியது
நாஸா விஞ்ஞானிகள் வெஸ்டா, சீரீஸ் ஆகிய இரு அஸ்டிராய்டுகளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் உண்டு. வெஸ்டா வெறும் பாறை. ஆனால் சீரீஸ் அஸ்டிராய்டின் மேற்புறம் தூசு படிந்துள்ளது.. மெல்லிய அளவில் ஐஸ் கட்டியும் படிந்துள்ளது. அதற்கு அடியில் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

டான் விண்கலம் வெஸ்டாவுக்குப் போய்ச் சேர 150 கோடி கிலோ மீட்டர் பயணம் செயதது. இப்போது அது வெஸ்டாவிலிருந்து சீரீஸ் போய்ச் சேர வளைந்த பாதையில் 273 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும். மிக நீண்ட பயணம் தான்.


4 comments:

Unknown said...

பிரமிப்பாக இருக்கிறது sir.ஆய்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது.

srinivasan said...

இப்படி செயற்கை கோள்கள் விண்ணில் உலவும் பொது அதை விண்கற்கள் அதன் மீது மோதாதா..? எதன் மீதும் மோதாமல் எப்படி இந்த செயற்கை கோள்கள் விண்ணில் பயணம் செய்கின்றன ? அவற்றை எப்படி கட்டுபடுத்துகிறார்கள்..?

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பான தகவல்கள்... நன்றி சார்...

என்.ராமதுரை / N.Ramadurai said...

srinivasan
அஸ்டிராய்டுகள் கும்பலாகச் சென்றாலும் அவற்றின் மீது விண்கலம் மோத வாய்ப்பில்லை.ஓர் அஸ்டிராய்டுக்கும் இன்னொரு அஸ்டிராய்டுக்கும் இடையில் பல லட்சம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். எந்த விண்கலமும் வடிவில் சிறியது ஆகவே அஸ்டிராய்ட் மீது மோத வாய்ப்பில்லை

Post a Comment