Sep 28, 2014

வால் நட்சத்திரத்தில் ஆய்வுக் கலம் இறங்க தேதி நிர்ணயம்

Share Subscribe
ஐரோப்பிய  விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள ரோசட்டா (Rosetta) என்னும் விண்கலம் இப்போது ஒரு வால் நட்சத்திரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அந்த விண்கலத்திலிருந்து ஆய்வுக்கலம் ஒன்று வெளிப்பட்டு 67P சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்று பெயரிடப்பட்ட அந்த வால் நட்சத்திரத்தில்  நவம்பர் 12 ஆம் தேதி இறங்கப் போகிறது.  நான்கு கிலோ மீட்டர்  நீளமும் மூன்றை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த வால் நட்சத்திரத்துக்கு பெரிதாக ஈர்ப்பு சக்தி கிடையாது.

ரோசட்டா சுற்றி வருகின்ற வால் நட்சத்திரம் இது தான்
ஆகவே அதில் போய் இறங்கும் பிலே ( Philae) என்னும் ஆய்வுக் கலம் ஒரு வேளை எகிறி மேலே வந்து  விடலாம். ஆகவே ஆய்வுக் கலம் வால் நட்சத்திரத்தில் இறங்கியதும் தரையை இறுக கவ்விக் கொள்ளும். பின்னர் பல வகைகளிலும் வால் நட்சத்திரத்தை ஆராயும் (விடியோ காண்க)

ரோசட்டாவிலிருந்து ஆய்வுக்கலம் இறங்கும் காட்சியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

வால் நட்சத்திரத்தில் போய் இறங்கி இப்படியான ஆய்வு  நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டில் டெம்பிள்-1 (Temple-1) என்னும் வால் நட்சத்திரத்தை நோக்கி நாஸா Deep Impact என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்திலிருந்து பெரிய சம்மட்டி போன்ற  370  கிலோ எடை கொண்ட கருவி வெளிப்பட்டு அந்த வால் நட்சத்திரத்தின் மீது வேகமாகத் தாக்கியது. இதன் விளைவாக வால் நட்சத்திரத்தில் 100 மீட்டர் அகலமும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.

அப்போது வால்  நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய தூசு மற்றும் துகள்களை விண்கலத்தில் இருந்த கருவிகள் ஆராய்ந்து நாஸாவுக்குத் தகவல் அனுப்பியது.

டெம்பிள் 1 வால் நட்சத்திரம் தாக்கப்பட்ட இடம்
கடந்த காலத்தில் வேறு பல விண்கலங்களும் வால் நட்சத்திரங்களை மிகவும் நெருங்கி படம் பிடித்து அனுப்பியுள்ளன.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தின் கிரகங்கள் தோன்றிய போதே வால் நட்சத்திரங்கள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அவை ஒதுங்கிப் போன மிச்ச மீதிகளாகக் கருதப்படுகின்றன.

சூரியனின் விளவாக கிரகங்களில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வால் நட்சத்திரங்கள் மீது அப்படியான பெரிய விளைவுகள் இல்லை. அவற்றில் இன்னும் ஆரம்ப காலத்து நிலைமைகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஆகவே தான் வால் நட்சத்திரங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.

வால் நட்சத்திரங்களை ஆராய்வதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் தோற்றம் பற்றி மேலும் நன்கு அறிய உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

5 comments:

Unknown said...

pls update more information about universe sir, is there any website that your articles contain? If yes means, kindly provide any website link that contains universe information in tamil language , so it is easy to understood.
thank you sir.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Parthiban CB
நீங்கள் பிரபஞ்சம் (Universe) பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. நீங்கள் Google search க்குப் போய் universe பற்றி எது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். நான் பிரபஞ்சம் பற்றி எழுதுவதானால் அது நீண்ட தொடர் கட்டுரையாக இருக்கும். தவிர, அது புத்தகமாக எழுதப்பட வேண்டிய விஷய்ம். தனி ஒரு கட்டுரையில் சொல்லி முடிக்கிற விஷயமல்ல. தொடர் கட்டுரை எழுதுவதை நான் விரும்புவதில்லை.

Anonymous said...

Hellow Sir, I am following you online for a while and I must say your blogs are awesome and interesting. I managed to get your book 'Anu' and read it in a day which is a my personal record. I have been tring to get your another book 'Vinveli' for more than 3 months in both online and libraries but no luck. I recently came to know from Kilaku pathipagam officials that publications of that book is stopped long time back which is so unfortunate for me. Is there anyway I can get a copy of that book? Please advice me sir. Thanks a lot for your service.

Praveen
praveendotcom@gmail.com

Unknown said...

video error வருகிறது

என்.ராமதுரை / N.Ramadurai said...

ரமேஷ் பரமசிவம்:

வீடியோ-வில்/இணைப்பில் பிரச்சனை ஏதும் இல்லை. வெவ்வேறு தினங்களில் சரிபார்த்துவிட்டேன்.

Post a Comment