Mar 15, 2018

மூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்

Share Subscribe
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழ்ந்தால் ஜாஸ்தி” என்று டாக்டர்களால் 22 வயதில் அறிவிக்கப்பட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தமது மன உறுதியால் 76 வயது வரை வாழ்ந்து இங்கிலாந்தில் மார்ச் 14 ஆம் தேதி காலனாமானார்.

பேச முடியாது. நடமாட முடியாது என நிலையிலும் அவர் செயற்கைக் குரல் மூலம் பேசினார். முக அசைவுகள் மூலம் தனது மின்சார சக்கர நாற்காலியை இயக்கினார். சக்கர நாற்காலியிலும் நேராக உட்கார முடியாது. ஒரு புறமாக சாய்ந்து தான் அமர்ந்திருப்பார். பெரிய தலை. அகன்ற காதுகள்.

உறுப்புகள் வேலை செய்யவில்லையே தவிர, மூளை மிக நன்றாகவே செயல்பட்டது. நடமாட முடியாத நிலையில் மின்சார நாற்காலியில் அமர்ந்தபடி காலம் தள்ளினார் என்றாலும் அவரது சிந்தனை பிரபஞ்ச வெளியில் உலாவியது. பிரபஞ்சவியல் பற்றி முக்கிய கொள்கைகளை உருவாக்கினார்.

மூளைத் திறனில் அவர் சர் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன், ஆகியோருக்கு நிகராகக் கருதப்பட்டவர். இளம் வயதில் பள்ளியில் ஹாக்கிங்குக்கு “ஐன்ஸ்டைன்’ என்ற பட்டப் பெயர் உண்டு.

ஹாக்கிங்குக்கு இருந்த நோய் லட்சத்தில் ஒருவருக்குத் தான் ஏற்படும் என்று சொல்லத் தக்கதாகும். உடலில் உள்ள தசைகள் படிப்படியாக செயலிழந்து விடும் என்பது தான் அந்த நோய். இந்த தசை செயலிழப்பு நோய் ஒவ்வொரு உறுப்பாகப் பரவி வருவதாகும். இதற்கு மருந்தே கிடையாது.

நல்ல வேளையாக ஹாக்கிங் விஷயத்தில் இந்த நோய் பரவுதல் மெதுவாக நிகழ்ந்தது. அதற்குள்ளாக அவர் முடிந்த அனைத்தையும் சாதித்துக் காட்டினார்.

பட்ட மேற்படிப்பின் போது தான் அவருக்குள்ள நோய் கண்டுபிடிக்கப்பட்ட்து. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தது என்றாலும் அவர் சமாளித்துக் கொண்டு முன்னேறலானார். அப்போது இங்கிலாந்தில் பிரெட் ஹாயில் பிரபல விஞ்ஞானி. அவரது மேற்பார்வையில் ஹாக்கிங் பட்ட மேற்படிப்பை முடிக்க விரும்பினார். ஆனால் அது சாத்தியப்படவில்லை. வேறு ஒரு விஞ்ஞானியின் கீழ் ஹாக்கிங் செயல்பட்டார்.

ஸ்டீபன் ஹாக்கிங் 
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பது குறித்து அக்கால கட்டத்தில் இருவிதக் கொள்கைகள் நிலவின. பிரெட் ஹாயிலும் இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த் நார்லிகார் என்ற விஞ்ஞானியும் பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்ற கொள்கையைக் கூறி வந்தனர். இதற்கு நேர் மாறான கொள்கையானது பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஜனித்தது என்று கூறியது. ஹாக்கிங் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு என்ற கொள்கையை ஆதரித்து நின்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல பல்கலைக் கழகங்களில் பணி புரிந்தார். பேராசிரியராகப் பணி புரிந்தார் அவரது வழிகாட்டுதலில் பலர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

பிரபஞ்சவியல், நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி, அண்டைப்புற நட்சத்திரங்களை விழுங்கும் பிளாக் ஹோல் எனப்படும் பகாசுர நட்சத்திரம் ஆகியவை பற்றி எழுதியும் பேசியும் வந்த ஹாக்கிங் உயர் இயற்பியலிலிருந்து கீழே இறங்கி வந்து மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதவும் பேசவும் திறன் படைத்தவராகவும் திகழ்ந்தார்.

அந்த வகையில் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அவர் எழுதிய நூல்களில் “காலத்தின் சுருக்க வரலாறு: (A Brief History of Time) என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த நூலின் விற்பனை ஒரு கோடி பிரதிகளை எட்டியது. முழுவதுமாக படித்து முடிக்கப்படாத பிரபல நூல் என்ற பெயரும் அந்த நூலுக்கு உண்டு.

பிளாக் ஹோல் எனப்படும் நட்சத்திரங்கள் பற்றிய கொள்கையை உருவாக்கியதற்காக ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

பிளாக் ஹோல் நட்சத்திரமானது நிரந்தரமானது அல்ல. காலப் போக்கில் அது கதிர் வீச்சாக வெளிப்பட்டு அழிந்து விடும் என்று ஹாக்கிங் கூறினார். ஆனால் அக்கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்த வழியே கிடையாது. உறுதிப்படுத்தப்படாத உறுதிப்படுத்த முடியாத கொள்கைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனால் அவர் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

ஏதாவது ஒரு வகையில் பூமியில் மனித குலத்துக்குப் பேரழிவு ஏற்படலாம் என்பது ஹாக்கிங்கின் கொள்கையாகும். ஆகவே மனிதன் பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு குடிபெயர ஆயத்தமாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். அந்த வகையில் அவர் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்து வந்தார்

ஒரு சமயம் அவர் ஜெட் விமான மூலம் உயரே சென்று அந்தரத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெற்றார். விண்கலம் மூலம் உயரே செல்வதற்காக டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு அவ்வளவு ஆர்வம்

பிரபஞ்ச வெளியில் பூமி மாதிரியில் வேறு கிரகம் இருக்கலாம் அப்படியான கிரகத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கலாம் என்ற கருத்தை ஹாக்கிங் ஆதரித்தார். அப்படியான வேற்றுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நாம் ரேடியோ அலைகள் மூலம் செய்தி அனுப்ப முற்படலாகாது என்றும் அவர் கூறினார். வேற்றுலக மனிதர்களை நம்ப முடியாது என்றார்.

பூமி இருக்கின்ற இடத்தை வெளி உலகினருக்குத் தெரியப்படுத்தலாகாது. இதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஹாக்கிங் கருதினார்.

ஹாக்கிங்குக்கு உடல் பிரச்சினை இருந்த போதிலும் அவர் தமது 22 வது வயதில் ஜேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஹாக்கிங்குக்கு ஜேன் பேருதவியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஹாக்கிங்கின் உடல் நிலை மேலும் மோசமான நிலையை எட்டிய போது அவரை 24 மணி நேரமும் கூட இருந்து கவனித்துக் கொள்ள மூன்று ஷிப்டுகளில் மூன்று நர்சுகளை நியமிக்க வேண்டி நேர்ந்தது. இதற்குள்ளாக ஹாக்கிங்குக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. இந்த நிலையில் ஹாக்கிங்குக்கு அந்த மூன்று நர்சுகளில் ஒருவரான எலைன் மேசன் மீது ஈர்ப்பு ஏற்பட்ட்து. ஹாக்கிங் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு1995 ஆம் ஆண்டில் அந்த நர்ஸைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்தில் போய் முடிந்தது. ஹாக்கிங்குக்கு முதல் மனைவி மூலம் மூன்று குழந்தைகள். இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இல்லை.

No comments:

Post a Comment