Aug 10, 2014

வானிலிருந்து கரியமிலவாயுக் கணக்கெடுப்பு

Share Subscribe
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் கார்பன் டையாக்சைட் வாயு (கரியமில வாயு, carbon dioxide) காற்று மண்டலத்தில் கலந்து வருகிறது. உலகிலுள்ள சுமார் 700 கோடிப் பேரும் ஓயாத துருத்தி போல சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர். விலங்குகளும் சுவாசிக்கின்றன. தாவரங்களும் தான்

எதை எரித்தாலும் கார்பன் டையாக்சைட் வாயு காற்றில் கலக்கிறது. கார், லாரி, ரயில் எஞ்சின், விமானம், கப்பல் என எண்ணற்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல், விசேஷ வகை கெரசின், எரிவாயு என ஏதாவது ஒரு வகை எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் வாயு தேவை. ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு எரியும் போது கார்பன் டையாக்சைட் தோன்றுகிறது.

வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும் மின்சாரம் தேவை. நிலக்கரியை எரித்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். நிலக்கரியை (அல்லது பழுப்பு நிலக்கரியை) எரிக்கும் போதும் கார்பன் டையாக்சைட் உற்பத்தியாகிறது.

கார்பன் டையாக்சைட் பற்றிய எந்த சமாச்சாரமாக இருந்தாலும் பத்திரிகைகளிலும் டிவிக்களிலும் கரிய புகையைக் கக்கும் ஆலைகளின் புகைப்போக்கிகளின் படத்தைப் போடுவார்கள். புகை வேறு. கார்பன் டையாக்சைட் வேறு. புகை கண்ணுக்குத் தெரியும். கார்பன் டையாக்சைட் கண்ணுக்குத் தெரியாது. அதற்கு நிறம் கிடையாது. சிறிது கூட புகை இல்லாமல் ஏராளமான கார்பன் டையாக்சைட் வாயுவை கக்கும் ஆலைகள் நிறையவே உண்டு.
அமெரிக்கா செலுத்தியுள்ள செயற்கைக்கோள்
காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகரித்துக் கொண்டே போனால் பல விபரீதங்கள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பூமியின் சராசரி வெப்பம் உயரும். அதனால் தென், வட துருவப் பகுதிகளில் உள்ள ஏராளமான பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்து கடல் மட்டம் உயரும். இதனால் கடலோரமாக உள்ள நகரங்களுக்கு ஆபத்து ஏற்படும். உலகில் பருவ நிலை மாறும். பயிர் விளைச்சல் பாதிக்கப்படும். இப்படியாக அவர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்

இந்த நிலையில் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் வாயுவை அதிகம் கலக்க விடுவது யார் என்பது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. உள்ளபடி சீனா தான் அதிக அளவில் கார்பன் டையாக்சைட் வாயுவை  கலக்க விடுகிறது. அமெரிக்கா அடுத்த இடத்தை வகிக்கிறது. ஐரோப்பிய யூனியன் முன்றாவது இடத்தையும் இந்தியா நான்காவது இடத்தையும் வகிக்கின்றன.

இப்பின்னணியில் உலகின் எந்தப் பகுதியிலிருந்து காற்று மண்டலத்தில் அதிக அளவில் கார்பன் டையாக்சைட் கலக்கிறது என்று துல்லியமாகக் கண்டறிவதற்காக அமெரிக்கா ஒரு செயற்கைக்கோளை உயரே செலுத்தியுள்ளது.
ஜப்பான் செலுத்தியுள்ள செயற்கைக்கோள்
ஜூலை முதல் வாரத்தில் உயரே செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளானது பூமியை வடக்கு தெற்காகச் சுற்றியபடி பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் எங்கெங்கு கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகமாக உள்ளது என்பதை அளவிட்டறியும். எங்கு கார்பன் டையாக்சைட் வாயு  நிறைய கிரகிக்கப்படுகிறது என்பதையும் அளவிடும். ஜப்பான் இதற்கு முன்னரே இப்படியான ஆய்வுக்கென வானில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்தியது. ஆனால் அமெரிக்க செயற்கைக்கோள் அதை விடத் துல்லியமாகக் கணக்கெடுக்கும் திறன் கொண்டது.

காற்று மண்டலத்தில் சேரும் கார்பன் டையாக்சைட் அனைத்தும் நிரந்தரமாகக் காற்று மண்டலத்தில் தங்கி விடுவதில்லை. பாதி அளவு தான் காற்று மண்டலத்தில் தங்குகிறது. மீதிப் பாதியில் பாதி கடலில் கலந்து விடுகிறது. மீதிப் பாதி தாவரங்களால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது.

பகல் நேரங்களில் தாவரங்கள் காற்றில் அடங்கிய கார்பன் டையாக்சைடை கிரகித்துக் கொள்கின்றன. தாவரங்கள் என்பதில் காடுகள் இதர நிலப் பகுதியில் உள்ள மரம் செடி கொடிகள், புற்கள் ஆகியனவும் அடங்கும்
.
தாவரங்களால் கிரகித்துக் கொள்ளப்படும் கார்பன் டையாக்சைட் வாயுவின் அளவு ஆண்டுக்கு ஆண்டு வித்தியாசப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? தாவரங்கள் கார்பன் டையாக்சைட் வாயுவைக் கிரகித்துக் கொள்வதற்கு வரம்பு ஏதேனும் இருக்குமா என்று அறிவது அமெரிக்க செயற்கைக்கோள் மூலமான ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.

காற்று மண்டலத்தில் சேரும் கார்பன் டையாக்சைட் வாயுவில் பாதி காற்று மண்டலத்தில் தங்குவதாகக் குறிப்பிட்டோம். கி.பி 1750 ஆம் ஆண்டு வாக்கில் உலகில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகரிக்கத் தொடங்கியது.

பின்னர் உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம், வாகனப் பெருக்கம், பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் விளைவாக கார்பன் டையாக்சைட் சேர்மானம் அதிகரிக்கலாயிற்று. இப்போது இது ஆண்டுக்கு 4,000 கோடி டன்னாக உள்ளது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக நாடுகளின் தலைவர்கள் பல தடவை கூடிப் பேசியுள்ளனர். சில திட்டங்களும் வகுக்கப்பட்டன. சர்வதேச ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியது. ஆனால் அவற்றின் அமல் திருப்திகரமான அளவில் இல்லை. இதற்குக் காரணம் உண்டு. அமெரிக்காவிலிருந்து வெளிப்படும் கார்பன் டையாக்சைட் சேர்மானத்தைக் குறைப்பது என்றால் அமெரிக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டும். இது அமெரிக்க மக்களின் பல ஆடம்பர மற்றும் சொகுசு வசதிகளைப் பாதிப்பதாக அமையும். ஆகவே அமெரிக்க அரசு மேற்படி சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்கத்  தயாராக இல்லை.

சொல்லப்போனால் கார்பன் டையாக்சைட் சேர்மானத்தால் பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதாகச் சொல்வதை அமெரிக்காவில் ஒரு சில தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர். இக்கருத்துக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாகச் சொல்ல முடியாது என்று வாதிக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கார்பன் டையாக்சைட் வாயு என்பது நச்சு வாயு அல்ல. நாம் வெளிவிடும் மூச்சில் கார்பன் டையாக்சைட் உள்ளது. நாம் சோடா குடிக்கும் போது நம் வயிற்றுக்குள் கார்பன் டையாக்சைட் வாயு செல்கிறது. சோடாவை உடைத்தால் அதிலிருந்து பொங்கி வருவது கார்பன் டையாக்சைட் வாயுவே. சோடா உட்பட பல குளிர் பானங்களிலும் மெனக்கெட்டு கார்பன் டையாக்சைட் வாயுவைக் கலக்கிறார்கள். சூடான காப்பி அல்லது டீயை மேலும் கீழுமாக நன்கு ஆற்றும் போதும் சிறிதளவு காற்று (கார்பன் டையாக்சைட்) கலக்கிறது.

 கார்பன் டையாக்சைட் வாயு பன்னெடுங் காலமாக நன்மை செய்து வருகிறது. சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் முழுவதும் அப்படியே விண்வெளிக்குப் போய் விடுவதாக வைத்துக் கொண்டால் விரைவில் பூமியானது ஒரேயடியாகக் குளிர்ந்து சுமார் 50 ஆண்டுகளில் உயிரினம் அனைத்தும் செத்து மடிந்து பூமி முழுவதும் உறைபனி மூடியதாகி விடும்

காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயுவும் இன்னும் சில வாயுக்களும் உயரே ஒரு படலம் போல செயல்பட்டு பூமியின் வெப்பம் அனைத்தும் விண்வெளிக்குச் சென்று விடாதபடி தடுத்து பூமியில் உயிரின வாழ்க்கையை சாத்தியமாக்கியுள்ளன.

ஆனால் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் வாயு மேலும் மேலும்  சேருவதன் விளைவாக பூமியின் சராசரி வெப்பம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  நாம் ஏற்கெனவே ஆபத்து அளவை எட்டிவிட்டோமா என்பதை அறிய நாஸாவின் செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவல்கள் உதவும்.

No comments:

Post a Comment