Nov 14, 2012

கடுகு எண்ணெயில் பறந்த விமானம்

Share Subscribe
” விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று  விமான  நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம்.

விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன.
 நூற்றுக்கு நூறு தாவர எண்ணெய் மூலம் பறக்கும் விமானம் முன்னே ( வலது புறம்) செல்ல மற்றொரு விமானம் பின் தொடர்ந்து செல்கிறது
அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது.  தாவர எண்ணெய் மூலம் விமானத்தை இயக்க முடியும் என்ப்தை அது நிரூபித்தது. உண்மையில் அது சமையல் எண்ணெயே. ஆப்பிரிக்க நாடுகளில் அந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

உலகில் நாடுகளிடையே பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்கின்ற பயணி விமானங்கள் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டவை. இந்த விமானங்கள் ஒரு வகையான் உயர் ரக கெரசினைப் பயன்படுத்தி இயங்குகின்றன.இதில் ஜெட்-A, ஜெட் A 1  என இரு வகைகள் உண்டு ( ஆனால் முன்புறம் சுழலிகளைக் கொண்ட விமானங்கள் ஒரு வகை பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன).

காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் புவியின் ச்ராசரி வெப்ப நிலை அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பின்னணியில் காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானத்தைக் குறைப்பதில் தங்களது பங்காக விமான நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின்                   ( இவற்றில் பெட்ரோல், டீசல், கெரசின் முதலானவை அடங்கும்)  உபயோகத்தைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
எதியோப்பிய கடுகு வகைச் செடி பூத்த நிலையில்
இந்த நோக்கில் வழக்கமான விமான எரிபொருளுடன் தாவர எண்ணெயை ஓரளவு கலப்புச் செய்து விமானங்களில் பயன்படுத்தும் நடவடிக்கை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

தேங்காய் எண்ணெய், காட்டாமணக்கு எண்ணெய், பயன்படுத்தப்பட்ட கழிவு சமையல் எண்ணெய்  போன்றவற்றைத் தக்கபடி பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து தாவர எரிபொருளை  (bio-fuel) எடுத்து அந்த எரிபொருள் கெரசினுடன் சேர்த்து விமானங்களில் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்பட்டது.ஒரு வகைப் பாசியிலிருந்து பெறப்பட்ட தாவர எரிபொருளும் இவற்றில் அடங்கும்.

ஏர்பஸ், போயிங் ஆகிய விமானங்களிலும் இவ்விதம் வழக்கமான விமான எரிபொருளுடன் ஓரளவு தாவர எரிபொருட்கள் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணத்துக்கும் இவ்விதம் பயன்படுத்தப்பட்டது உண்டு.

இப்போது முதல் தடவையாக முற்றிலும் தாவர எரிபொருளைப் பயன்படுத்தி விமானம் ஓட்டப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த விமான நிறுவனம் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியன்று  சுமார் 15 பயணிகள் ஏறிச் செல்லக்கூடிய பயணி விமானத்தில் இந்த தாவர எரிபொருளைப் பயன்படுத்தியது. அந்த விமானம் வானில் பறந்து சென்ற போது அதிலிருந்து வெளிப்படும் சூடான வாயுக்களில் தீங்கான பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டா என்று அறிவதற்காக இன்னொரு விமானம் ‘மோப்பம்” பிடித்தபடி பின்னால் பறந்து சென்றது. அதாவது வாயு சாம்பிள்களை சேகரித்தது.(மேலே  படம் காண்க)
எதியோப்பிய கடுகுச் செடி. இதைக் கீரையாகவும் உண்கின்றன
கனடா விமானம் பயன்படுத்திய இந்த தாவர எரிபொருள் Brassica Carinata எனப்ப்படும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாகும். இத்தாவரத்துக்கு எதியோப்பிய கடுகு என்ற பெயரும் உண்டு. அதாவது இது கடுகு வகையைச் சேர்ந்தது. ( இந்தியாவில் வட மானிலங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் Brassica Nigra வகையைச் சேர்ந்தது) தமிழகத்தில் சமையலுக்கு கடுகு பயன்படுத்தப்பட்டாலும் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை.

எதியோப்பியாவில் விளையும் கடுகு வகையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.எதியோப்பிய மக்கள் இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். தவிர, இச்செடிகளை கீரை போல ச்மைத்து உண்கின்றனர்

இக்கட்டுரையில் தொடக்கத்தில் விமானத்தின் எரிபொருள் டாங்கியில் கடுகு எண்ணெய அப்படியே ஊற்றப்படுவது போல வேடிக்கையாகக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் அது அப்படி அல்ல. எதியோப்பிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது ஆலைகளில்  பல வகைகளில் பக்குவப்படுத்தப்பட்டு அதன் பின்னரே விமானத்தில் தாவர எரிபொருளாகத் தயாரிக்கப்படுகிறது.

விமானத்துக்கான தாவர எரிபொருளாக மாற்றப்பட்ட நிலையில் அதற்கும் வழக்கமான விமான எரிபொருளுக்கும் ( விசேஷ கெரசின்) பார்வைக்கு வித்தியாசமே கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது

கனடாவின் தென் பகுதியிலும் அமெரிக்காவின் வட ப்குதியிலும் உள்ள வறண்ட நிலங்கள் எதியோப்பிய வகை சாகுபடிக்கு ஏற்றது என வருணிக்கப்பட்டுள்ளது.

 நூற்றுக்கு நூறு தாவர எரிபொருளைப் பயன்படுத்தும் கட்டம் விரைவில் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆண்டு 2500 ஹெக்டேர் நிலத்தில் எதியோப்பிய க்டுகு பயிரை சாகுபடி செய்ய விவசாயிகளிடம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் விமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்கள் பக்கம் திரும்புவது நல்லதாகத் தோன்றவில்லை என்று சில வட்டாரங்களில் கருதப்படுகிறது..இவற்றை அடுத்து பெரும் பண பலம் கொண்ட பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களும் தங்களது பாரவையைத் திருப்பலாம்.அவ்வித நிலையில் விவசாய நிலங்கள் கபளீகரம் ஆகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.






http://library.thinkquest.org/C0126543/thesun.htm

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிறைகுறைகளை விளக்கமாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

poornam said...

அசோக மித்ரனின் பதினெட்டாவது அட்சக் கோடு நாவலில் படித்த ஒரு தகவல் நினைவுக்கு வருகிறது. சுதந்திரத்தை ஒட்டி ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணய மறுத்த போது இந்திய ராணுவம் முற்றுகையிட்ட சமயம் பெட்ரோல் தட்டுப்பாடாக இருந்ததால் பேருந்துகள் கடலை எண்ணையில் இயக்கப்பட்டனவாம். பேருந்துகள் வரும் போதெல்லாம் ஹைதராபாத் தெருக்களில் கடலை எண்ணை மணக்குமாம்!
சாமானியக் குடிமகனின் அடுத்த கவலை: விமானத்தில் கடுகு எண்ணை பயன் படுத்தப்பட்டால் கடுகு எண்ணை விலை விமானத்தை விட உயரமாகப் பறக்கத் துவங்கி விடுமோ?

என்.ராமதுரை / N.Ramadurai said...

poornam
இப்படியும் நடக்கலாம். கடுகுக்கு நல்ல விலை கிடைக்கிறது என விவசாயிகள் கடுகு சாகுபடியில் தீவிரம் காட்டினால், வேர்க்கடலை, எள்ளு சாகுபடி ப்ரப்பு குறைந்து கடலை எண்ணெய, நல்லெண்ணய் விலைகள் மேலும் உயரத் தொடங்கலாம்.
பெட்ரோலுக்கும், டீசலுக்கும் வேதியல் முறையில் மாற்றுப் பொருட்களை கண்டுபிடிப்பதே சிறந்த ஏற்பாடாக இருக்கும்.விளைபொருட்கள் வடிவில் மாற்று கண்டுபிடிப்பது பாதகமான விளைவுகளைத் தான் உண்டாக்கும்

வவ்வால் said...


பயனுள்ள தகவல்,கடுகு எண்னை , மற்றும் அனைத்து தாவர எண்னை, எத்தனால், போன்ற மாற்று எரி பொருளை பெருமளவில் தயாரிக்கவும் ,பயன்ப்படுத்தவும் பல நாடுகள் முயன்று வருகின்றன, அதில் ஒரு நிலை தான் இப்போது விமானம் வரையில் வந்துள்ளது.ஏன் எனில் இன்னும் 70-120 ஆண்டுகளில் உலகில் பெட்ரோலிய மூலம் முழுவதும் தீர்ந்துவிடும்,அதற்குள் ஒரு மாற்று எரிபொருளை கண்டுப்பிடித்து மாஸ் புரொடெக்‌ஷன் செய்தாக வேண்டும்.

கேனொலா எனப்படும் எண்ணையும் ஒரு வகையான கடுகு எண்ணையே ராப்சீட் ஆயில் அது , ரிபைண்ட் செய்து விற்கிறார்கள்.

தாவர எண்ணையை மாற்று எரி பொருளாக மாற்றுவதையும், குப்பையில் இருந்து எத்தனால் தயாரிப்பது பற்றியும் முன்னர் நான் இட்ட சில இடுகைகள்.

http://vovalpaarvai.blogspot.in/2012/05/bio-diesel.html

http://vovalpaarvai.blogspot.in/2012/06/2-pongamia-pinnatta-oil.html

http://vovalpaarvai.blogspot.in/2012/06/cellulose-ethanol.html

Post a Comment