Nov 7, 2014

பூமி இருளில் முழ்கப் போவதாகப் புரளி

Share Subscribe
பூமியானது அடுத்த மாதம் (டிசம்பர் 2014) மூன்று முதல் ஆறு நாட்கள் இருளில் மூழ்கப் போவதாக ஒரு புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது. பேஸ்புக் மூலம் இது உலகில் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.

இப்புரளியைக் கிளப்பியவர்கள், நாஸா தான் இப்படி பூமி முழுவதும் இருளில் மூழ்கப் போவதாக அறிவித்துள்ளது என்று கூறுகின்றனர். நாஸாவோ தாங்கள் அப்படியான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உலகில் இப்படிப்பட்ட புரளிகள் அவ்வப்போது கிளம்புவது வழக்கம். நாஸா இதைக் குறிப்பிட்டு “ வீண் புரளிகளுக்குப் பொதுவில் நாங்கள் மறுப்பு தெரிவிப்பது கிடையாது. ஆனாலும் ஏராளமான பேர் எங்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்த காரணத்தால் விளக்கம் தெரிவிக்க வேண்டியதாகியது” என்று   அறிவித்துள்ளது.
பூமியில் பகலும் இரவும் வழக்கமாக இருப்பது தான். இப்படத்தில் இரவாக உள்ள பாதியைக் காண்கிறீர்கள். சவூதி அரேபியா தெரிகிறது. அதன் வலப் புறத்தில் இந்தியாவைக் காணலாம். படம்: நன்றி NASA/NOAA
" சூரியனில் புயல் ஏற்பட உள்ளது. இதன் விளைவாக எழும் புழுதியும் தூசும் சூரியனிலிருந்து கிடைக்கிற ஒளியை 90 சதவிகித அளவுக்கு மறைத்து விடும். ஆகவே டிசம்பரில் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான காலத்தில் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காது. ஆகவே பூமி இருளில் மூழ்கும்” என்பது தான் புரளி கிளப்பியவர்கள் கூறிய காரணமாகும்.

சூரியனில் அவ்வப்போது புயல் ஏற்படுகிறது என்பது வாஸ்தவமே. ஆனால் சூரியனில் புழுதி நிறைந்த சாலைகள் எதுவும் இல்லை. ஆகவே புழுதி கிளம்பி சூரியனை மறைப்பதற்கான வாய்ப்பே கிடையாது. சூரியனில் ஏற்படும் புயலால் மிஞ்சிப் போனால் ஆற்றல் மிக்க துகள்கள் விண்வெளியில் வீசப்படும். இவை பூமியை சுற்றுகின்ற செயற்கைக்கோள்களை ஓரளவில் பாதிக்கலாம். குறிப்பிட்ட வகையிலான தகவல் தொடர்பை பாதிக்கலாம். அவ்வளவு தான்.

கடந்த காலத்தில் சூரியனில் எவ்வளவோ தடவை சீற்றங்களும் புயல்களும் ஏற்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் கூட சூரியனில் புயல் ஏற்பட்டது. ஆனால் அதனால் சூரியன் மறைக்கப்பட்டு விடவில்லை.

அவ்வப்போது புரளி கிளப்புவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. 2012 டிசம்பரில் உலகமே அழியப் போவதாக ஒரு பெரிய புரளி கிளப்பி விடப்பட்டது.என்ன ஆச்சு? ஒன்றும் நேரவில்லை. பூமி இருளில் மூழ்கப் போகிறது என்ற புரளியும் அப்படிப்பட்டதே.

 ஒரு விஷயம். பூமி உருண்டை என்பதாலும் அது தனது அச்சில் சுழல்வதாலும் எப்போதும் பூமியில் ஒரு பாதியில் இரவும் மற்றொரு பாதியில் பகலும் ஏற்படுகிறது. ஆகவே டிசம்பரில் மேற்படி தேதிகளில் வழக்கம் போல பகலும் இரவும் இருக்கும்.

4 comments:

காரிகன் said...

போன வருடமும் இதே போல ஒரு புரளி புறப்பட்டது.

Anonymous said...

Thanks for Info

MANI AYYAKKANNU said...

டிசம்பர் 2012 ல் உலகம் அழிந்துவிடும் என்று புரளியை கிளப்பிவிட்டு அது நடவாமல் போனது, இப்போது இது புதிய ரூபத்தில்.

Mr.Salem said...

Thank your information.

Post a Comment