Apr 30, 2015

நேபாள பூகம்பம் சொல்லும் சேதி

Share Subscribe
 நேபாளத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஏற்பட்ட கடும் பூகம்பத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் பூகம்பம் நிகழ்ந்துள்ளது.

 அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும்.
நேபாளத்தின் இடிபாடுகளில் ஒரு காட்சி
நாடுகளைக் காட்டும் அட்லஸ் படத்தை நீங்கள் கவனித்தால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா எங்கோ தொலைவில் இருப்பது புலப்படும். ஆப்பிரிக்காவும் அப்படித்தான். பனி மூடிய அண்டார்க்டிகா கண்டமோ இன்னும் தொலைவில் இருப்பதை அறிய முடியும். 

ஆனால், சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கக் கண்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் புறத்தில் இணைந்திருந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் புறத்தில் இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகியவை இணைந்திருந்தன. இவை அனைத்தும் சேர்ந்து ஒரே கண்டமாக விளங்கின. விஞ்ஞானிகள் இதற்கு கோண்டுவானாலாந்து என்று பெயர் வைத்துள்ளனர்.
கோண்டுவானாலாந்து
கோண்டுவானாலாந்துக்கு வடக்கே லௌராசியா என்ற கண்டம் இருந்தது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா முதலியவை ஒன்றிணைந்து இவ்விதம் ஒரே கண்டமாக விளங்கின. அப்போது உலகில் மனித இனம் கிடையாது. சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானாலாந்து உடைய ஆரம்பித்தது. கண்டங்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தன. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது

.இதற்குள் லௌராசியாவும் உடைய ஆரம்பித்தது. இந்தியத் துணைக் கண்டமானது சுமார் 4 கோடி ஆண்டு களுக்கு முன்னர் ஐரோப்பா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய யுரேசியாவுடன் தென்பகுதியில் வந்து ஒட்டிக்கொண்டது. மோதியது என்றும் சொல்லலாம். இந்த மோதலின்போது விளிம்புகள் மேல் நோக்கிப் புடைத்துக்கொண்டன. இப்படியாக இமயமலை உண்டாயிற்று. 

இந்தியத் துணைக் கண்டம் தொடர்ந்து நெருக்குவதால் இமயமலை இன்னமும் உயர்ந்து வருகிறது.
கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அல்ல கண்டங்கள். அவை எப்படி இடம் மாறும் என்று கேட்கலாம். சிதறு காய் போடுவதுபோல ஒரு தேங்காயை ஓங்கித் தரையில் அடிக்கிறீர்கள். அது பல துண்டுகளாகச் சிதறும். இவ்விதம் சிதறிய சில்லுகள் அனைத்தையும் பொறுக்கி ஒன்றோடு ஒன்று பொருத்தி மறுபடியும் அதை முழுத் தேங்காயாக ஆக்குகிறீர்கள். இப்போது அந்தத் தேங்காய் பல சில்லுகளால் ஆனதாக இருக்கும். 

பூமியின் மேற்புறமானது இவ்விதம் பல சில்லுகளால் ஆனதே. மொத்தம் ஏழு எட்டுச் சில்லுகள் உள்ளன. சிறிய சில்லுகள் பல உள்ளன. பூமியின் மீதான இந்தச் சில்லுகள் மீதுதான் கண்டங்களும் கடல்களும் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகள்தான் நகர்கின்றன. ஆங்கிலத்தில் இவை பிளேட்ஸ் எனப்படுகின்றன. சில்லுகள் இடம்பெயர்வதை பிளேட் டெக்டானிக்ஸ் என்கிறார்கள். பூமியின் உட்புறத்தில் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்கின்றன. பொதுவில் சில்லுகள் சந்திக்கும் இடங்களில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
பூமியைப் போர்த்துள்ள சில்லுகள்
இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா இந்து மாக்கடல் ஆகிய அனைத்தையும் சேர்த்து இந்திய - ஆஸ்திரேலிய சில்லு என்று குறிப்பிடுகின்றனர். இந்தியச் சில்லு பல கோடி ஆண்டுகளாக யுரேசிய சில்லுக்கு அடியில் அதாவது, நேபாளத்துக்கு அடியில் செருகிக்கொண்டு வடக்கே நகருகிறது. ஆகவேதான் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடி வரை இமயமலை அடிவாரம் நெடுக அவ்வப்போது பூகம்பங்கள் நிகழ்கின்றன. இந்தியச் சில்லு நெருக்குகிறது என்றால் வாரா வாரம், தினம் தினம் ஏன் நிலநடுக்கம் நிகழ்வதில்லை என்று கேட்கலாம்.

 ரயில் வண்டியில் செல்லும்போது இரவு இரண்டு மணி வாக்கில் பார்த்தால் எதிர் பெஞ்சில் பச்சை சட்டை போட்டவர் தமக்கு அருகே அமர்ந்துள்ள மஞ்சள் சட்டைக்காரர் மீது மெல்லச் சாய்வார். தொடர்ந்து மேலும் மேலும் சாய்வார். ஒரு கட்டத்தில் ‘விலுக்’ என்று இருவருமே விழித்துக்கொள்வர்.

 அதுபோல இந்தியத் துணைக் கண்டத்தின் நெருக்குதல் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போகும்போது ஒருகட்டத்தில் ‘விலுக்’ ஏற்பட்டுக் கடும் பூகம்பம் நிகழும். ஏப்ரல் 25-ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.9 என்று அளவிடப்பட்டுள்ளது.

 இந்த ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உண்டு. ரிக்டர் அளவில் 6 என்று சொல்லப்படுகிற நிலநடுக்கத்தைவிட, ரிக்டர் அளவில் 7 என்ற நிலநடுக்கமானது 30 மடங்கு கடுமையானது. ரிக்டர் அளவில் 8 என்பது அதைவிட 30 மடங்கு கடுமையானது.

ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படுமா என்று முன்கூட்டி அறிந்துகொள்ள இதுவரை வழி கண்டுபிடிக்கப்பட வில்லை. எனினும், பிராணிகள் முன்கூட்டி அறிந்து கொள்கின்றன. ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்றால் ஏராளமான தவளைகள், பாம்புகள் ஆகியவை பல மணி நேரத்துக்கு முன்பே வெளியேறிவிடுகின்றன. இதன் ரகசியத்தை நம்மால் அறிய முடியும் என்றால், ஏராளமான உயிர்களைக் காக்க இயலும். ஆனால் ஒன்று, பூகம்பங்கள் மனிதர்களைச் சாகடிப்பதில்லை. கட்டிடங்கள்தான் மனித உயிர்களைப் பலி கொள்கின்றன என்று சொல்வதுண்டு. அது பெருமளவுக்கு உண்மை.

பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு அடிப்படையில் இந்தியா ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலங்கள் உட்பட அசாம், பிஹார், இமாசலப் பிரதேசம் முதலியன ஐந்தாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது, கடும் நிலநடுக்க வாய்ப்பு உள்ள இடங்கள் என்று பொருள். முதல் மண்டலம் என்பது நிலநடுக்க வாய்ப்பு அனேகமாக இல்லாதது. அடுத்து, இரண்டாவது மண்டலம். தமிழகம் முன்பு இரண்டாவது மண்டலத்தில் இருந்தது.

 ஆனால், இப்போது சென்னை மற்றும் கோவையை அடுத்த பகுதி ஆகியன மூன்றாவது மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஓரளவு நிலநடுக்க வாய்ப்பு உள்ளது என்பது இதன் பொருள். 

கட்டிடங்களைக் கட்டும் விஷயத்தில் எந்தெந்த மண்டலத்தில் எவ்விதமான வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிமுறைகள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளன. ஆகவேதான், நிலநடுக்கம் ஏற்படாமலேயே அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுகின்ற நிலைமை உள்ளது.

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் அடுக்கு மாடிக் கட்டடங்கள்
இந்தியாவில் வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள், தங்களது விளம்பரங்களில் இந்த வசதி உண்டு, அந்த வசதி உண்டு எனப் பிரமாதமாக வர்ணித்துக்கொள்கின்ற அதே நேரத்தில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டவை என்ற வாசகத்தைச் சேர்ப்பதே கிடையாது. ஏன்?

 உண்மையில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் 50 மாடிக் கட்டிடங்களையும்கூடக் கட்ட முடியும். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இப்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சர்வ சாதாரணமாகக் கட்டிவருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் இவ்விதக் கட்டிடங்கள் முன்னும் பின்னுமாக லேசாக அசைகின்றன. ஆனால், கட்டிடத்தில் விரிசல் கிடையாது. தகர்ந்து விழுவதும் கிடையாது. 

உலகில் பெரும் ஜனநெருக்கடி மிக்க நாடுகளில் ஒன்றான இந்தியா, கட்டிடக் கட்டுமான விஷயத்தில் கண்டிப்புடனும் தொலைநோக்குடனும் புது விதிமுறைகளை வகுத்து அமல்படுத்துவது அவசியம். ஒருவகையில், இதுபோன்ற சம்பவங்கள் நம்க்கான எச்சரிக்கை விளக்குகள்!

( என்னுடைய இக்கட்டுரையானது தி ஹிந்து தமிழ் இதழில் ஏப்ரல் 30 ஆம் தேதி   வெளியானதாகும்)
-  

Apr 14, 2015

நியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் ஏன்?

Share Subscribe
 உலகில் உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள், சுரங்கங்களுக்கு அடியில் அமைந்துள்ளன அல்லது மலையில் சுரங்கப்பாதை அமைத்து அதற்குள்ளாக அமைந்துள்ளன. இதற்குக் காரணம் உண்டு.

காற்று மண்டலத்தில் பலவகையான துகள்கள் உள்ளன. ஆகவே நியூட்ரினோ விளைவுகளைப் பதிவதற்கான கருவிகளில் நியூட்ரினோ துகள்கள் மட்டுமே வந்து சேர வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் குறியாக இருக்கிறார்கள். வேறு துகள்கள் பதிவானால் ஆய்வின் நோக்கமே கெட்டு விடும். சுரங்கத்துக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைத்தால் பிற துகள்கள் பாறை அடுக்குகளால் தடுக்கப்பட்டு விடும். அதாவது வடிகட்டப்பட்டு விடும்.

நியூட்ரினோ துகள்கள் எதையும் துளைத்துச் செல்பவை என்பதால் அவை மட்டும் பாறைகளைத் துளைத்துக் கொண்டு பிரச்சினையின்றி வந்து சேரும்.

தேனி அருகே உள்ள மலை தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் உண்டு. இந்தியாவில் இமயமலை வட்டாரத்திலும் பிறவிடங்களிலும் பாறைகள் உருமாறிய அல்லது படிவுப்பாறைகளாக உள்ளன.

 ஆனால் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க, இரும்பை உருக்கி வார்த்த கட்டி போல ஒரே வகைப் பாறையிலான குன்றாக இருக்க வேண்டும். உறுதியான கடினமான, பாறையாக இருக்க வேண்டும். அருகே பெரிய நகரம் இருக்க வேண்டும். அதிக மழை கூடாது. பூகம்ப வாய்ப்பு இருத்தல் கூடாது. கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். இப்படியான பல அம்சங்களை வைத்து இடம் தேடப்பட்டது

நாட்டின் பிற இடங்களில் உள்ள பாறைகளுடன் ஒப்பிட்டால் தென் இந்தியாவில் உள்ள பாறைகள் மிகப் பழமையானவை. தரமானவை.

 முதலில் நீலகிரியில் அருகே ஓரிடம் தேர்வு செய்யப்பட்டது. அது வனவிலங்குகள் நடமாடும் இடமாக இருந்ததால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது. ஆகவே அந்த இடம் கைவிடப்பட்டது. தேனி அருகே அமைந்துள்ள மலை மேற்படியான எல்லா அம்சங்களையும் பூர்த்தி செய்ததால் அது தேர்ந்தெடுக்கப்பட்டது. 

எவ்வளவு வகை நியூட்ரினோக்கள் உள்ளன?

சூரியனிலிருந்து மட்டுமன்றி நட்சத்திரங்கள், சூப்பர் நோவா என்ற வெடித்த நட்சத்திரங்கள் ஆகியவற்றிலிருந்தும் நியூட்ரினோக்கள் வருகின்றன. விண்வெளியில் எங்கிருந்தோ வரும் காஸ்மிக் கதிர்கள் பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள அணுக்களைத் தாக்கும் போதும் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. இவை காற்றுமண்டல நியூட்ரினோக்கள் எனப்படுகின்றன

கோலார் தங்கச் சுரங்கத்தில் 1965 ஆம் ஆண்டில் நடந்த ஆராய்ச்சியின் போது தான் இவ்வித நியூட்ரினோக்கள் இருப்பது முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 பூமிக்குள் யுரேனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்கள் உள்ளன. இவை இயற்கையாக சிதையும் போது சிறு அளவில் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன.

அணுமின்சார நிலையங்களில் உள்ள அணு உலைகளிலிருந்தும் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன.

தவிர, அமெரிக்காவில் சிகாகோ அருகேயும் ஐரோப்பாவில் ஜெனிவா அருகேயும் பாதாளத்தில் அமைந்த ஆராய்ச்சிக்கூடங்களில் அடிப்படைத் துகள்களை அதி வேகத்தில் பாயச் செய்யும் ராட்சத துகள் முடுக்கிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி புரோட்டான்களிலிருந்து நியூட்ரினோக்களை  உண்டாக்க  முடியும். அதாவது நியூட்ரினோக்களை உற்பத்தி செய்ய முடியும்.

தேனியில் அமையும் ஆய்வுக்கூடம் முதலில் காற்றுமண்டல நியூட்ரினோக்களை ஆராயும். பின்னர் இதர நியூட்ரினோக்களையும் ஆராயும்.
  
பூமி வழியே நியூட்ரினோ பார்சல்


ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஜெனிவா அருகே நிலத்துக்கு அடியில் பிரும்மாண்டமான துகள் முடுக்கி இயந்திரம் உள்ளது. இங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில்  இத்தாலியில்  கிரான் சாஸோ  மலைக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் உள்ளது. ஜெனீவாவில் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அவற்றை இத்தாலியில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு நிலத்தடிப் பாறைகள் வழியே பார்சல்அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே நியூட்ரினோக்கள் செல்லக்கூடியவை என்பதால் இதற்கென தனி சுரங்கப்பாதை தேவையில்லை.
ஜெனீவாவிலிருந்து இத்தாலியில் கிரான் சாஸோ மலைக்கு
அடியில் உள்ள ஆய்வகத்துக்கு நியூட்ரினோக்கள் அனுப்பப்படுகின்றன

அமெரிக்காவில் சிகாகோ அருகே உள்ள பெர்மிலாப் (Fermilab எனப்படும் ஆய்வுக்கூடத்திலிருந்து இதே போல சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் கனடா நாட்டின் எல்லை அருகே   மின்னிசோட்டா நகரில் இருக்கும் பாதாள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு நிலத்தடிப் பாறைகள் வழியே நியூட்ரினோக்களை அனுப்பி வருகின்றனர். ஜப்பானிலும் இதே போல நிலத்துக்கு அடியில் பாறைகள் வழியே நியூட்ரினோக்களை அனுப்பி ஆராய்கின்றனர். இவ்விதம் பாதாளம் வழியே நியூட்ரினோக்களை அனுப்புவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை.

அமெரிக்காவில் உள்ள பெர்மிலாப், ஜெனீவாவில் உள்ள CERN எனப்படும் ஆராய்ச்சிக்கூடம், இத்தாலியில் உள்ள ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றில் இந்திய விஞ்ஞானிகள் உள்பட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்.

ஜெனீவா பரிசோதனைகளின் போது 2011 ஆம் ஆண்டில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஜெனீவாவிலிருந்து இத்தாலிக்கு வந்து சேரும் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சும் வேகத்தில் செல்வதாகக் கருவிகள் காட்டின.

எதுவுமே ஒளி வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்ல முடியாது என்று மேதை ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டில் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். நியூட்ரினோக்கள் அதைப் பொய்ப்பித்து விட்டனவோ  என்று சில விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் ஏற்பட்ட்து.

கடைசியில் நியூட்ரினோக்களின் வேகத்தைப் பதிவு செய்யும் கருவிகளில் தான் கோளாறு என்பது மறு ஆண்டில் தெரிய வந்தது. ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை சரியானதே என்பது நிரூபிக்கப்பட்டது.

மனிதன் உற்பத்தி செய்யும் நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை விட அதிக சக்தி கொண்டவைதான்.. ஆனால்  நம் தலைக்கு மேலே காற்று மண்டலத்தில் காஸ்மிக் கதிர்களின் விளைவாகத் தோன்றும் நியூட்ரினோக்கள் தான் அதிக சக்தி கொண்டவை. ஆகவே மனிதன் தோற்றுவிக்கும் நியூட்ரினோக்களால் மனிதனுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு கிடையாது.

 “சட்டை மாற்றும்நியூட்ரினோக்கள்
சூரியனில் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு சோலார்  (எலக்ட்ரான்) நியூட்ரினோக்கள் உற்பத்தியாகின்றன என்று விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர். அங்கிருந்து. எவ்வளவு சோலார்  நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்து சேருகின்றன என்று 1968 ஆம் ஆண்டில் பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்த போது மூன்றில் ஒரு பங்கு நியூட்ரினோக்களே வந்து சேருவதாகக் கருவிகள் காட்டின.

உலகில் பல இடங்களில் நடத்திய பரிசோதனைகளிலும் இதே விடைகள் தான் கிடைத்தன. சூரியனில் நிகழும் அணுச்சேர்க்கை பற்றித் தாங்கள் போட்ட கணக்கு தவறோ என்று என்று விஞ்ஞானிகள் சிந்திக்க முற்பட்டனர். “ காணாமல் போன நியூட்ரினோக்கள் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தின.

ரயில் ஏறும் பயணிகள் நடுவழியில் சட்டை மாற்றிக் கொள்வது போல சூரியனிலிருந்து கிளம்பும் சோலார் நியூட்ரினோக்களில் பலவும் நடுவழியில்  டாவ் நியூட்ரினோ அல்லது மியுவான் நியூட்ரினோக்களாக மாறுகின்றன என்பது 2002 ஆம் வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நியூட்ரினோக்களையும் சேர்த்து எண்ணிய போது கணக்கு சரியாக வந்தது.
தேனியில் அமையும் ஆய்வுக்கூடத்தில் நியூட்ரினோக்கள் இப்படி மாறுவது குறித்தும் ஆராயப்படும்.


பூமிக்கு ஒரு எக்ஸ்ரே
எதிர்காலத்தில் ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடங்களிலிருந்து தேனி நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு பூமியின் வழியே நியூட்ரினோக்கள் அனுப்பப்படலாம்.

அவை தேனி ஆய்வுக்கூடத்தில் பதிவாகும்இப்படி அனுப்பும் போது நியூட்ரினோக்கள் பூமியின் மையப் பகுதியைக் கடந்து வந்தாக வேண்டும். இதன் மூலம் பூமியின் மையப் பகுதி எவ்விதமாக உள்ளது என்பது பற்றி  அறிய முடியலாம் என்று கருதப்படுகிறது. இது பூமியை எக்ஸ்ரே எடுப்பது போன்றதே.

( இக்கட்டுரையானது ஏப்ரல் 12 ஆம் தேதி தி ஹிந்து தமிழ் இதழில் வெளியான நீண்ட கட்டுரையின் மீதிப் பாதியாகும். முதல் பாதியானது " நியூட்ரினோ என்னும் புதிரான துகள் " என்னும் தலைப்பில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது)