Showing posts with label செவ்வாய் கிரகம். Show all posts
Showing posts with label செவ்வாய் கிரகம். Show all posts

Jun 9, 2015

மங்கள்யானின் இரண்டு வார மவுனம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலத்துடன் இந்த மாதம் 8 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை தொடர்பு கொள்ள இயலாது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அது ஏன்?

பூமியிலிருந்து பார்க்கும் போது மங்கள்யான் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும்.
1. சூரியன். 2. பூமி. 3 செவ்வாய் ( இப்படத்தில் புதன்,
வெள்ளி ஆகிய கிரகங்களின் சுற்றுப்பாதைகள் காட்டப்படவில்லை)
அதாவது செவ்வாய், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் உள்ளன. செவ்வாயைச் சுற்றுகின்ற மங்கள்யானிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் வருவதாக இருந்தாலும் சரி, பூமியிலிருந்து நாம் மங்கள்யானுக்கு சிக்னல்களை அனுப்புவதாக இருந்தாலும் சரி, அவை  நேர்கோட்டில் தான் செல்லும்.

சிக்னல்கள் அவ்விதம் செல்லும் போது  பிரும்மாண்டமான சைஸில் உள்ள சூரியன் அந்த சிக்னல்களைத் தடுத்து விடும். அல்லது சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து சென்றாக வேண்டும். எப்படியாக இருந்தாலும் பிரச்சினைதான். சிக்னல்களோ பலவீனமானவை.சூரியனோ பயங்கர சக்தி கொண்டது.

 சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து செல்லும் போது அவை சிதைக்கப்பட்டு விடும். அந்த அளவில் மங்கள்யானுக்கு இஸ்ரோ அனுப்பும் சிக்னல்கள் உருப்படியாக மங்கள்யானுக்குப் போய்ச் சேராது. மங்கள்யானிலிருந்து வரும் சிக்னல்களின் கதியும் அதே தான். ஆகவே மங்கள்யானுடன் தொடர்பு கொள்ள மேற்படி கால கட்டத்தில் இஸ்ரோ முயற்சி மேற்கொள்ளாது.

 எனினும் மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டரில் ஏற்கெனவே ஆணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பூமியிலிருந்து ஆணைகள் பிறப்பிக்க வேண்டிய அவசியமின்றி மங்கள்யான் பிரச்சினையின்றித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மங்கள்யான் விண்கலம்
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பூமி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களுமே சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டில் பூமியானது செவ்வாயை விட அதிக வேகத்தில் செல்வதாகும்.

ஆகவே ஜூன் 22 ஆம் தேதிக்குப் பின்னர் சிக்னல்கள் சூரியனை மிக அருகில் கடந்து செல்கின்ற நிலைமை இராது. ஆகவே அப்போது சிக்னல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் பிரச்சினைகள் ஏற்படாது.

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் 2013 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. அது 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பித்தது.

செவ்வாய் கிரகத்தை இப்போது மங்கள்யான் மட்டுமன்றி, நாஸாவின் மார்ஸ் ஒடிசி விண்கலம் மார்ஸ் ரிக்கன்னைசன்ஸ்  ஆர்பிட்டர் விண்கலம், மாவென் விண்கலம் ஆகிய மூன்று விண்கலங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமும் சுற்றி வருகின்றன. இதல்லாமல் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் நாஸாவின் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்துடனும் தொடர்பு கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சரி, செவ்வாய்க்கு ஆறு விண்வெளி வீரர்களை --ரஷியாவோ அமெரிக்காவோ--அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் போது இப்படி செவ்வாய் கிரகம் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? அந்த 15 நாட்களில் அவர்களுக்குப் பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் 15 நாட்களுக்குப் பிறகுதான் தெரிய வரும்.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஏட்டளவில் ஒரு தீர்வு உள்ளது. வெள்ளி கிரகத்துக்கு அமெரிக்காவோ ரஷியாவோ விண்வெளி வீரர்களுடன் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். எனவே அவ்வித நிலையில் செவ்வாயிலிருந்து வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். செவ்வாயில் உள்ளவர்கள் பற்றிய தகவலை வெள்ளியைச் சுற்றுகின்ற விண்கலம் பெற்றுக் கொண்டு அதை பூமிக்கு அனுப்பி வைக்கும். இதெல்லாம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

செவ்வாய் கிரகம் 26 மாதங்களுக்கு ஒரு முறை இவ்விதம் சூரியனுக்கு நேர் பின்னால் அமைந்திருக்கும். ஆகவே சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விதப் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

செவ்வாய் கிரகம் இப்போது சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் போது பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் சுமார் 37 கோடி கிலோ மீட்டர்.(பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிஞ்சிப் போனால் 4 லட்சம் கிலோ மீட்டர்)

Dec 22, 2014

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவு

Share Subscribe
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிலிருந்து திடீர் திடீரென மீத்தேன் வாயு கசிவதாக அமெரிக்காவின் கியூரியாசிடி நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் கண்டறிந்துள்ளது. ஆளில்லாத இந்த ஆராய்ச்சிக்கூடம் தானாக இயங்கி ஆங்காங்கு ஆராய்ந்து வருகிறது.

ஒரு வேன் சைஸிலான கியூரியாசிடி 2012 ஆகஸ்டில் போய் இறங்கியதிலிருந்து  செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இதில் பல நுட்பமான கருவிகள் உள்ளன.
அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிடி ஆராய்ச்சிக்கூடம்
செவ்வாயின் நிலப்பரப்பிலிருந்து  திடீர் திடீரென மீத்தேன் வாயு வெளிப்படுவதை கியூரியாசிடி கண்டுபிடித்து பூமிக்குத் தகவல் அனுப்பியுள்ளது. இது முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

ஏனெனில்  உயிரினத்துக்கும் மீதேன் வாயுவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. பூமியில் உயிரினம் காரணமாக நிறையவே மீத்தேன் வாயு வெளிப்படுகிறது.கால்நடைகளின் வயிற்றிலிருந்து மீத்தேன் வாயு வெளிப்படுகிறது. நெல் வயல்களிலிருந்து கணிசமான அளவில் மீத்தேன் வெளிப்படுகிறது. சதுப்பு நிலங்களிலும் இயற்கையாக மீதேன் வாயு உற்பத்தியாகிறது. மீத்தேன் தீப்பற்றும் தன்மை கொண்டது.

சதுப்பு நிலங்களில் வெளிப்படும் மீத்தேன்  இரவு நேரங்களில் சில சமயங்களில் தற்செயலாகத் தீப்பிடிப்பது உண்டு.  ஒரு காலத்தில் இதைக் கண்டவர்கள் கொள்ளி வாய்ப் பிசாசு என்றும் கருதினர். உண்மையில் இது கொள்ளி வாயு  அதாவது மீத்தேன் வாயு என்பது பின்னர் தான் கண்டறியப்பட்டது.

 ஓரிடத்தில் நீண்ட நாள் குப்பையைப் போட்டு வைத்தால் இயல்பாக அதில் மீத்தேன் உற்பத்தியாகும். சில நாடுகளில் பெரிய அளவிலான குப்பை மேடுகளிலிருந்து மீத்தேன் வாயுவை சேகரித்துப் பயன்படுத்துகின்றனர். சாண வாயு என்பதும் பெரிதும் மீத்தேன் வாயு தான். கரையான்கள் மூலமும் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.

கடல் பகுதியிலும் நிலப் பகுதியிலும் மிக ஆழத்திலிருந்து எரிவாயு எடுக்கப்படுவது பற்றி அறிந்திருக்கலாம். எரிவாயுவில் பெரும் பகுதி மீத்தேன் வாயு ஆகும். ஏதோ ஒரு காலத்தில் இருந்த தாவரங்களும் விலங்குகளும் மிக ஆழத்தில் புதையுண்டு கடும் வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் உள்ளான போது தோன்றியதே எரிவாயு ஆகும். பூமியில் உள்ள மீதேனில் 95 சதவிகிதம் நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்படுவதாகும்.ஆனால் புவியியல் காரணங்களாலும் மீத்தேன் வாயு தோன்றுவது உண்டு. அதாவது சில வகைப் பாறைகளும் நீரும் சேரும்போது மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

 கியூரியாசிடி செவ்வாயில் இறங்கி காற்று மண்டலத்தை ஆராய்ந்த போது மீத்தேன் வாயு 0.7 ppbv ( parts per billion by volume) அளவுக்கே   இருப்பதாகக் கண்டறிந்தது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியின் காற்று மண்டலத்தில் இந்த வாயு 1800 ppbv  அளவுக்கு உள்ளது.

எனினும் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நான்கு தடவைகளில் கியூரியாசிடியின் கருவிகளில் வழக்கத்தை விட பத்து மடங்கு மீத்தேன் வாயு பதிவாகியது. இவ்விதம் திடீர் திடீரென மீத்தேன் வாயு அளவு அதிகரிப்பதற்கு அந்த வாயு செவ்வாயின் நிலத்துக்குள்ளிருந்து   கசிவதே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனினும் செவ்வாயில் காணப்படும் மீத்தேன் வாயு இப்போது அல்லது கடந்த காலத்தில் இருந்திருக்கக்கூடிய நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்பட்டதா அல்லது புவியியல் காரணங்களால் தோற்றுவிக்கப்பட்டதா என்பதை கியூரியாசியினால் கண்டறிய இயலவில்லை. செவ்வாயின் மீத்தேன் நுண்ணுயிர்கள் காரணமாகத் தோன்றுவதே என்று தெரிய வந்தால் அக்கிரகத்தில் இப்போது அல்லது கடந்த காலத்தில் நுண்ணுயிர்கள் இருந்தன என்று சொல்ல முடியும்.

அப்படியில்லாத நிலையில் செவ்வாயில்  மீத்தேன் வாயு அவ்வப்போது வெளிப்படுவதை வைத்து எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி அமைப்பு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நினைவிருக்கலாம். 2014  ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து செவ்வாயைச் சுற்றி வர ஆரம்பித்த மங்கள்யான் அங்கிருந்து படங்களை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை மங்கள்யான் கண்டறியும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் செவ்வாயில் மங்கள்யான் எதையாவது கண்டுபிடித்ததா என்பது பற்றி கடந்த சில மாதங்களில் இஸ்ரோவிடமிருந்து எந்த செய்தியும் கசியவில்லை.

Oct 18, 2014

செவ்வாயை நோக்கிப் பாய்ந்து வரும் வால் நட்சத்திரம்

Share Subscribe
வால் நட்சத்திரம் ஒன்று செவ்வாய் கிரகத்தை நோக்கி மணிக்கு 2 லட்சத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது செவ்வாய் கிரகத்தின் மீது மோதாது. அக்டோபர் 19 ஆம் தேதி இரவு வாக்கில் அது செவ்வாய் கிரகத்தை “மிக அருகில்” கடந்து செல்லும்.
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம். அதை சுற்றிப்
புள்ளிகளாகக் காணப்படுபவை நட்சத்திரங்கள் 
செவ்வாய் கிரகத்தை இப்போது சுற்றிக்கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் உட்பட ஐந்து விண்கலங்களுக்கும்  வால் நட்சத்திரத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வால் நட்சத்திரத்தின் பெயர்  சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில்  சைடிங் ஸ்பிரிங் என்னுமிடத்தில்  உள்ள வான் ஆராய்ச்சிக்கூடம் கடந்த ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டல எல்லையில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 15 லட்சம் கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சூரிய மண்டலத்தைச் சுற்றி  வட்ட வடிவில் ஊர்ட் முகில் ( Oort Cloud) என்ற பகுதி உள்ளது. அங்கு எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் உள்ளன. இப்போதைய வால் நட்சத்திரம் அந்த ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று வருவது மிக அபூர்வமானதாகும். சைடிங் ஸ்பிரிங் வால்  நட்சத்திரம் அங்கிருந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் அதன் வேகம் மிகக் குறைவாக இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரிக்கும்.

அந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி இப்போது வந்து கொண்டிருக்கிறது.  அது வருகின்ற பாதையில் செவ்வாய் கிரகம் இருக்க நேரிட்டதால் அது செவ்வாயைக் கடக்கிறது. அது செவ்வாய் கிரகத்தைக் கடக்கும் போது  செவ்வாய் கிரகத்துக்கும் வால் நட்சத்திரத்துக்கும் இடையே  ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும்.
அம்புக் குறி கொண்டது தான் வால் நட்சத்திரத்தின் பாதை
ஆரஞ்சு நிறத்தில் உள்ள புள்ளி தான் செவ்வாய் கிரகம்.
விஞ்ஞானிகளின் கணக்கில் இது “ மிக அருகாமை” ஆகும்.  இதுவரை எந்த ஒரு வால் நட்சத்திரமும்  பூமிக்கு இவ்வளவு அருகில் கடந்து சென்றது கிடையாது.

இந்த வால் நட்சத்திரத்தின் வருகை காரணமாக மங்கள்யான் உட்பட செவ்வாயை சுற்றும் ஐந்து விண்கலங்களும் பத்திரமாக “ஒண்டிக் கொண்டுள்ளன”. வால் நட்சத்திரம் இவற்றின் மீது நேரடியாக மோதுகின்ற வாய்ப்பே இல்லை.

ஆனால் சாலையில் ஒரு குப்பை லாரி வேகமாகச் சென்றால் பெரும் புழுதி கிளம்புவது போல ஒரு வால் நட்சத்திரம் சென்றால் அதிலிருந்து நுண்ணிய துகள்களும் தூசும் வெளிப்படும்.  இதுவே வால்  நட்சத்திரத்தின் வால் ஆகும்.

வால் நட்சத்திரம் பயங்கர வேகத்தில் செல்வதால் நுண்ணிய துகள்களும் கிட்டத்தட்ட அதே வேகத்தைப் பெற்றிருக்கும். எனவே இவை தாக்கினால் விண்கலங்களில் உள்ள நுட்பமான கருவிகள் சேதமடைய வாய்ப்பு உண்டு.

வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது சுமார் 20 நிமிஷ நேரத்துக்கு மட்டுமே விண்கலங்களுக்கு ஆபத்து வாய்ப்பு உண்டு. ஆகவே அந்த 20 நிமிஷ நேரம் இந்த விண்கலங்கள் செவ்வாயின் மறுபுறத்தில்-- துகள்கள் தாக்கும் வாய்ப்பு இராது என்பதால்-- இருக்கும்படி   மூன்று விண்கலங்களுக்குப் பொறுப்பான நாஸா, நான்காவது விண்கலத்துக்குப் பொறுப்பான ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஐந்தாவதான மங்கள்யானுக்குப் பொறுப்பான இஸ்ரோ ஆகியவை தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

அதே நேரத்தில் பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி இந்த விண்கலங்கள் சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.

இந்த வால் நட்சத்திரம் இன்னும் சில தினங்களில் சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பிச் செல்லும்.

விஞ்ஞானிகள் வால் நட்சத்திரத்தை ஆராய்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம் உண்டு. சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டல்ம் தோன்றிய போது தான் பூமி உட்பட கிரகங்கள் தோன்றின. அப்போது மிச்ச மீதியான பொருட்கள் ஓரத்தில் ஒதுங்கின.  அவை தான் வால் நட்சத்திரங்கள்.

கடந்த பல கோடி ஆண்டுகளில் வால் நட்சத்திரங்கள் பெரும் மாறுதலுக்கு உட்படாதவை.  ஆகவே அவற்றை ஆராய்ந்தால் சூரிய மண்டலத் தோற்றம் பற்றிப் புதிதாகப் பல தகவல்களை அறிந்து கொள்ள் இயலும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அப்படி ஒன்றும் வடிவில் பெரியது அல்ல.  அதன் குறுக்களவு சுமார் 800 மீட்டர். ஆனால் அதைச் சுற்றி அமைந்த வாயுப் மூட்டம்  மிகப் பெரியது. அதன் வால் என்பது அதை விடவும் பெரியது என்பதுடன் மிக நீண்டது.

Update: வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து சென்ற பின்னர் இந்தியாவின் மங்கள்யான், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ், அமெரிக்க  நாஸாவின் மூன்று விண்கலங்கள் ஆகியவை எந்த பாதிப்புக்கும் உட்படாமல் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் நட்சத்திரம் பற்றி இவை சேகரித்த தகவல்கள் சில நாட்களுக்குப் பிறகு தெரிய வரும்.

Sep 26, 2014

மங்கள்யான் வெற்றி: இந்தியா சாதித்தது எப்படி?

Share Subscribe

உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன் படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும் மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இது சாத்தியமாகியது.

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மிக நம்பகமானது என்பது 25 தடவைகளுக்கு மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம் உருவாக்கி வரும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் நம்பகத்தன்மை இனி தான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால் பொதுவில் ஒரு விண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு செவ்வாய் நோக்கி செல்ல வேண்டுமானால் அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும்.


ஆகவே மங்கள்யான் திட்டம் பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்ட போது ஜி.எஸ்.எல்வி. ராக்கெட்டை மேலும் சில தடவை செலுத்தி அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு மங்கள்யானை செலுத்தலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருந்தது.

செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த நேரத்தில் விண்கலத்தை செலுத்த இயலாது. பூமியும் செவ்வாயும் இருக்கின்ற நிலைகளைப் பொருத்து 26 மாதங்களுக்கு ஒரு முறைதான் வாய்ப்பான சமயம் கிட்டும். 2013 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலம் வாய்ப்பான காலமாகும். அதை விட்டால் 2016 ஜனவரி வரை காத்திருந்தாக வேண்டும். இஸ்ரோ அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி ராக்கெட்டையே பயன்படுத்த முடிவு செய்தது. அது உண்மையில் துணிச்சலான முடிவாகும்.
செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்பட்டுள்ள
மங்கள்யான் விண்கலம்

மங்கள்யானை செவ்வாயை நோக்கி செலுத்துவதற்கான வேகத்தைப் பெறுவதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தியையே பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. அந்த உத்திக்கு கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று பெயர். இது ஒன்றும் புதுமையானது அல்ல. 2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியாவின் சந்திரயான் அனுப்பப்பட்ட போது இதே உத்தி பயன்படுத்தப்பட்ட்து
  
இந்தப் பின்னணியில் தான் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 2013 நவம்பர் 5 ஆம் தேதி மங்கள்யான் உயரே செலுத்தப்பட்டது. அத்தோடு அந்த ராக்கெட்டின் வேலை முடிந்து விட்ட்து

மங்கள்யான் பூமியைச் சுற்றி வர ஆரம்பித்தது. எல்லா விண்கலங்களிலும் அவசியமான போது அவற்றின் வேகத்தை அதிகரிக்க LAM எனப்படும் எஞ்சின் இடம் பெறுவது உண்டு. மங்கள்யானில் அவ்வித எஞ்சின் இடம் பெற்றிருந்தது. மங்கள்யான் 2013 நவம்பர் கடைசி வரை பூமியை ஆறு தடவை சுற்றியது. அந்த ஆறு தடவைகளிலும் மங்கள்யானில் இருந்த எஞ்சின் அவ்வப்போது சிறிது நேரம் இயக்கப்பட்டது. ஆகவே ஒவ்வொரு தடவையும் பூமியை நெருங்கும் போதும் மங்கள்யானின் வேகம் அதிகரித்துக் கொண்டே போயிற்று.

மங்கள்யான் ஏழாவது தடவை சுற்ற முற்பட்ட போது அதன் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்துவிட்டிருந்தது. ஏழாம் தடவையில் எஞ்சினை இயக்கிய போது வேகம் மணிக்கு 42 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்து மங்கள்யான் டிசம்பர் முதல் தேதி செவ்வாயை நோக்கிப் பயணித்தது.

சூரியனை பூமி சுற்றுவது போல மங்கள்யான் அதன் பின்னர் எஞ்சின் உதவியின்றி விண்வெளியில் சூரியனை சுற்ற ஆரம்பித்தது. சூரியனை பூமியானது மூன்றாவது வட்டத்தில் சுற்றுகிறது. செவ்வாய் கிரகம் நான்காவது வட்டத்தில் சுற்றுகிறது. ஆகவே மங்கள்யான் நான்காவது வட்டத்துக்கு மாற வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் நெடுஞ்சாலையில் ஒரு லேனிலிருந்து அடுத்த லேனுக்கு மாற மெல்ல ஓரம் கட்டுவது போல மங்கள்யானின் பயணப்பாதையை அவ்வப்போது ஓரம் கட்ட வேண்டியிருந்தது. இறுதியில் செவ்வாயை நெருங்கிய கட்டத்தில் மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டு அது கடந்த 24 ஆம் தேதி செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயை சுற்ற ஆரம்பித்தது.

செவ்வாய் கிரகத்துக்கு  விண்கலத்தை வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியுள்ள ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் செவ்வாய்க்கு கிராவிடி அசிஸ்ட் உத்தியைப் ப்யன்படுத்தி விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரே  நாடு இந்தியாவாகும்.
இடது கோடியில் உள்ளது பி.எஸ்.எல்.வி ராக்கெட். நடுவே உள்ளது
ஜி.எஸ்.எல்.வி. -2  வலது கோடியில் உள்ளது ஜி.எஸ்.எல்.வி -3 ஆகும்
சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப சீனா, அமெரிக்கா ஆகியவை கடந்த காலத்தில் கிராவிடி அசிஸ்ட் முறையைப் பயன்படுத்தியுள்ளன.வேறு கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பவும் பிற நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தியது உண்டு. ஆனால் எந்த நாடும் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப இந்த உத்தியைப் பயன்படுத்த முற்படவில்லை.

அதற்குக் காரணம் உண்டு. செவ்வாய்க்கு நேரடியாக விண்கலத்தை அனுப்புகிற அளவுக்கு அந்த நாடுகளிடம் சக்தி மிக்க ராக்கெட்டுகள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நாஸாவினால் 2013 நவம்பர் 18ஆம் தேதி செவ்வாய் நோக்கி செலுத்தப்பட்ட மாவென் விண்கலம் பூமியை ஒரு தடவை சுற்றி விட்டு நேரே செவ்வாய்க்குக் கிளம்பியது.

இனி இந்த நாடுகள் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியைப் பின்பற்ற முற்படலாம்.

ரஷியா,அமெரிக்கா,ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஓரளவில் சிறிய ராக்கெட் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல அந்த சிறிய ராக்கெட்டைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு இந்தியா ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது என்பது மிகப் பெரிய சாதனையே. ஆகவே தான் இந்தியாவினால் எப்படி இதை சாதிக்க முடிந்த்து என்று உலக நாடுகள் விய்ந்து நிற்கின்றன.

இதற்கிடையே இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி-2 வகை ராக்கெட் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்ட போது சுமார் 2 டன் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்தியது. அது தொடர்ந்து மேலும் சில தடவை சோதிக்கப்பட இருக்கிறது

அடுத்தபடியாக நாம் புதிதாக உருவாக்கி வரும் ஜி.எஸ்.எல்.வி.-3 வகை ராக்கெட் அனேகமாக அடுத்த மாதக் கடைசியில் முதல் தடவையாக உயரே செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது. அது  நான்கு டன் எடையை சுமந்து செல்லக்கூடியதாகும். அது வெற்றி பெற்று விட்டால் ராக்கெட் விஷயத்தில் இந்தியா சுயசார்பு நிலையை எட்டிப் பிடித்து விடும்

அப்படியான நிலை தற்போது இல்லை என்பதால் தான் இந்தியா தயாரிக்கும் எடை மிக்க செயற்கைக்கோள்களை தென் அமெரிக்காவில் உள்ள கூரூ ராக்கெட் தளத்துக்கு எடுத்துச் சென்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்த வேண்டியுள்ளது.


அடுத்து 2018 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தை செலுத்தத் திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் அனுப்புவதானால் மேலும் பெரிய அத்துடன் நிறைய ஆராய்ச்சிக்கருவிகளுடன் கூடிய விண்கலத்தை அனுப்ப முடியலாம்.
(இக்கட்டுரை தமிழ் ஹிந்து செப்டம்பர் 26 ஆம் தேதி இதழில் வெளியானதாகும். அது இங்கே சிறு மாறுதல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது)